ஆன்மா
வேதங்கள் உபநிடதங்கள் என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள ஆதியான நூல்களில் சிலவாகும். சில வேதங்கள் எழுதப்பட்ட காலங்களும் யாரால் எழுதப்பட்டவை என்ற விபரங்களும் அறிய முயாமலுள்ளது. அப்படியான ஒரு உபநிடதத்தில் இருந்து மரணம் வரை சென்று யமனுடன் உரையாடி ஆன்மாவின் தத்துவத்தினை விளக்குவதாக அமைந்துள்ளது இந்த கடோபநிஷதம். அதில்க் கூறப்பட்ட தத்துவ உண்மைகள் ஞானப் பாதையில் செல்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். என்பது எனது எண்ணமாகும்.
எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது போதனைகளில் இருந்து நான் விளங்கிக்கொண்ட கருத்துக்களையும் ஏனைய தேடல்களில் இருந்து நான் அறிந்து கொண்ட கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துள்ளேன்.
ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்களுக்கு ஆன்மா என்றால் என்ன இறை சக்தி என்றால் என்ன முக்தி அல்லது ஞானம் என்றால் என்ன என்ற விளக்கங்கள் மேலோங்கும்போது பயணம் இலகுவாகின்றது.
நாம் ஒரு காரியத்தில் இறங்கும்போது, ஒரு தேடலின்போது ஊக்கமுடைமையும், இலக்கில் இருந்து குறி தவறாமையும், ஊக்கம் குறையாமல் உழைக்கும் தன்மையுமே எம்மை அந்த இலக்கினை எட்ட வைக்கும்.
ஓம் சாந்தி என்று மூன்று முறை சொல்லும்போது மனம், வாக்கு, காயம் அதாவது எமது எண்ணத்தில், செயலில், உடலில் அமைதி வேண்டப்படுகிறது. அமைதி கிடைக்கிறது. இம் மூன்றிலும் அமைதியானவனே ஒரு செயலில் இறங்கத் தகுதியானவன். எந்தச் செயலிலும் எம்மை முழுமையாக ஈடுபடுத்த அதில் வெற்றிபெற இந்த அமைதி மிக மிக முக்கியமானது.
இவ்வுலகில் சிலருக்கு பொருளில் ஆசை இருக்கும், சிலருக்குப் பலனில் ஆசை இருக்கும். பொருளில் ஆசை இருப்பவர் பொருட்களை சேர்ப்பவராகவும், கருமியாகவும் இருப்பர். பலனில் ஆசை இருப்பவர் பிறருக்குத் தான தருமங்கள் செய்து அதில் வரும் பலனில் மகிழ்சியாக இருப்பர்.
எதனை நாம் பிறருக்குக் கொடுக்கிறோமோ அதனையே நாம் திரும்பவும் பெற்றுக் கொள்கிறோம் என்பது இந்து மத தத்துவமாகும். இதுவே நியூட்டனின் மூன்றாவது விதியாகும். அதாவது எந்த ஒரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான ஒரு மறுதாக்கம் உண்டு என்பது அந்த விதியாகும்.
அதனால்த்தான் எல்லாவற்றையும் துறந்தவர்களை நாம் துறவி அல்லது சாமி அதாவது எல்லாவற்றிற்கும் தலைவன் என்று அழைக்கிறோம். எல்லாவற்றையும் ஆழ வேண்டுமானால் நாம் எல்லாவற்றையும் துறந்து விடவேண்டும் என்று அர்த்தமாகும். முனிவர்கள், ரிஷிகள், சந்நியாசிகள், துறவிகள் எல்லாவற்றையும் துறந்து இறைவனிடம் இருந்து ஞானம் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஞானம் என்பது ஒன்றை அடைவது என்று அர்த்தமல்ல. ஞானம் என்பது இறைவனுடன் அந்தப் பிரபஞ்சத்துடன் கலப்பது என்று அர்த்தமாகும். ஞானம் அடைதல் என்பது இறைவனாகவே ஆகுதல் என்று அர்த்தமாகும். அதானல் ஞானம் அடையும் போது அவர்கள் சகல வல்லமை பெற்றவர்கள் ஆகிறார்கள்.
சிரத்தை அல்லது சிரத்தை எடுத்தல் என்றால் அசையாத நம்பிக்கையோடு கூடிய தேடல் என்று பொருளாகும். பொதுவாக அனைவருக்கும் எந்த ஒரு நிகழ்வும் பல கேவிகளை எழுப்பும். ஆனால் அத்தகைய கேள்விகள் எழுந்த வேகத்திலேயே மறைந்துவிடும். ஆனால் ஒரு சிலரே அதில் சிரத்தை எடுப்பார்கள். சிந்திப்பார்கள். அதற்கான விடையைத் தேடுவதற்காக அவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்களே காரியத்தில் தெளிவு பெறுவார்கள். வெற்றி பெறுவார்கள்.
பலனில் ஆசை வைத்துச் செய்யும் எந்தக் காரியமும் எமக்கு சிறந்த பலனைக் கொடுக்காது.
மரணம் அஞ்சி ஓடுபவனுக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். அஞ்சாமல் அதனை எதிர் கொள்பவருக்கு வரத்தையும், ஞானத்தினையும் அளிக்கும். ஆன்மீகம் மரணத்தினை அஞ்சாமல் எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது.
இறைவனை வெளியே தேடுவது பக்தி. இறைவனை உள்ளே (அகத்தே) தேடுவது ஆன்மீகம்.
இறைவன் இருக்கிறான் என்று நம்புவது பக்தி.
இறைவனை உணர்வது யோகம் (யோகப் பயிற்சி)
இறைவனாக ஆகுவது இறை சக்தியுடன் ஒன்டறக் கலப்பது ஞானம்.
ஆன்மீகப் பாதையில் ஒரு குருவின் வழிகாட்டல் தேவைப்படுகிறது.
விருந்தினர் வரும்போது முதலில் அவர்களுக்குத் தண்ணீர் தரப்படுகிறது. அதாவது அவர்கள் தாகம், களைப்பு நீங்கி நன்றாக உணவருந்தட்டும் என்ற நோக்கிலேயே அவ்வாறு செய்யப்படுகிறது.
நல்லதொரு குருவானவர் முதலில் சீடனின் அனைத்து சந்தேகங்களையும் அறியாமையையும் அறவே நீக்குகிறார்.
சிறந்த குரு சீடனின் கேள்விகளுக்கல்ல அவனது எண்ணங்களுக்கே பதிலளிக்கிறார். அதாவது சீடனின் மனநிலையினைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு அவனைப் பக்குவப்படுத்துவார்.
சீடனுக்கு உயர்ந்த உண்மைகளை உபதேசிப்பதற்கு முன்னர் சீடனின் தகுதியைச் சோதிப்பது குருமார்களின் வழக்கம்.
நல்லதொரு குரு எப்போதும் கிடைப்பார். நீங்கள் சிறந்த சீடனாக இருந்தால் ஒவ்வொரு நொடியும் உங்களுக்குப் பாடம் கிடைத்துக் கொண்டே இருக்கும். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் உங்களுக்குக் குருவாக அமையும்.
மனிதனின் மனம் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் மற்றும் கற்பனைகளிலேயே அதிகளவில் மூழ்கி இருக்கும். அதனால் அந்த மனம் செல்லும் புலன்கள் வலுவிழக்கின்றன. அதனால் நிகழ்காலத்தைத் தவற விடுவதோடு செயல்புரியும் ஆற்றலும் வீணாகிறது என்பதே உண்மையாகும். அதானால் வாழ்க்கை வீணடிக்கப் படுகிறது இதுவே பயனற்ற வாழ்க்கை எனப்படுகிறது.
புகழ், துதிகள் உண்மை நிலையை அதாவது இறை சக்தியை அறிய முடியாது இருக்கும் தடையாகும். ஆடல் பாடல் போன்ற கேளிக்கைகளும் நிகழ்கால உண்மைகளை அறிய விடாது தடுப்பவைகளே.
எனவே குறுகிய ஆயுளைக் கொண்டதும் புலன்களின் ஆற்றலை மழுங்கடிப்பதுமான வாழ்க்கை முறை ஒரு சீரற்ற வாழ்க்கை முறையாகும்.
மூப்பும் மரணமும் எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்க அவை இல்லாத நிலையை அடைய முடியும் என்று அறிந்த ஒருவன் சிற்றின்பங்களில் தனது வாழ்க்கையை வீணாக்க மாட்டான்.
மேலானது தவிர சிற்றின்பம் தரக்கூடிய பாதைகள் பல உள்ளன. மனிதன் அவ்வப்போது இரண்டையும் அறிகிறான். இரண்டையும் பின்பற்றுகிறான். இருந்தும் அந்த இரண்டிலும் மேலானதைத் தேர்ந்தெடுக்கும் மனிதன் சுகம் பெறுகிறான். பிறவிப் பிணியில் இருந்து விடுபடுகிறான். அதனை விடுத்து சிற்றின்பம் தரும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் மனிதன் துக்கம், துன்பம், மரணம் என வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
மேலான பாதை அதாவது இறை பாதையில் செல்பவனுக்கு துன்பமே முதலில் வரும். அதாவது இறைபாதையில் அவனது பாவக்கணக்குகள் முதலில் அனுபவித்து அழிக்கப்படும். அதனாலேயே இறைபாதை முதலில் துன்பமாக அமைகிறது. அவன் செய்த பாவக்கணக்குகள் அழியும்போது முக்தி நிலை கிடைக்கிறது. பேரானந்தம் கிடைக்கிறது. இங்கு பேரானந்தம் என்று குறிப்பிடப்படுவது சாதாரண மகிழ்ச்சி நிலை அல்ல. அது ஒரு மகிழ்சியோ, துக்கமோ அற்ற சமநிலைய பேரானந்தம் எனப்படும்.
அற்ப சுகம்தரும் சிற்றின்பப் பாதையைப் பின்பற்றுபவன் உலகியல் சுகங்களை அனுபவிக்கிறான். ஆனால் அவன் மரணமற்ற நிலையை அடைய முடியாது. மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பிறவிப் பிணியில்ச் சிக்கித் தவிக்கிறான்.
இறை பாதையும் மற்றும் சிற்றின்பம் தரக்கூடிய பாதையும் இவ்வுலகில் மனிதன் முன்னே உள்ளது. இறை நாட்டம் உள்ளவன் சிற்றின்ப வாழ்வை விடுத்து இறைவனைத் தேடுகிறான். மந்தபுத்தி உள்ளவன் வாழ்க்கைச் சுகம் எண்ணி சிற்றின்பம் தரும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். இது ஒரு அறியாமையே.
இறை ஞானத்துக்கான பாதையும் உலகியல் பாதையும் முற்றாக வேறுபட்டவை. நேர் எதிரான பாதையாகும். எந்தப் பாதையையும் விரும்பி ஏற்றுக் கொள்பவனுக்கு அவை இன்பமாக அமைகிறது. ஆனால் இறை பாதையில்க் கிடைக்கும் இன்பம் மகத்தானது. சுயநலம் இல்லாதது. விருப்பு வெறுப்பற்ற பேரின்ப நிலையாகும். அதுவே இறுதியில் முக்தி நிலையாகும். ஆனால் சிற்றின்பத்தினால்க் கிடைக்கும் இன்பம் நீடிக்காது. அதன் முடிபு நோய், துன்பம் ஆகியவற்றில்க் கொண்டு சேர்க்கும்.
உலகியல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தன்னைத் தானே விழிப்புற்றவன், அறிவாளி, ஞானி என்று கூறிக்கொண்டு ஞானம் அடைய குறுக்கு வழிகளை கடைப்பிடிப்பவர்கள் மூடர்களே. அவர்களை பின்பற்றி குறுக்கு வழியில் இலகுவில் ஞானம் அடைந்து விட முடியும் என்று எண்ணுபவர்களும் மூடர்களே.
தனது அறியாமையால் இந்த உலகத்தினைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நம்புபவர்கள், இந்தப் பிறவிப் பிணியில் இருந்து அதாவது பிறப்பு இறப்புச் சுழலில் இருந்து விடுபடுவதில்லை.
ஆன்மாவைப் பற்றிப் பலர் புரிந்து கொள்வதில்லை. அறிய விரும்புவதும் இல்லை. அவ்வாறு அறிய விரும்பினாலும் சரியான விளக்கங்கள் இல்லாத போது அதனை அறிய முடியாமல்ப் போகின்றது. ஆன்மா என்பது இறையே என்பதும் அந்த ஆன்ம தரிசனத்தனைப் பற்றி கூறக்கூடியவர்களும் அரிதாகவே உள்ளனர். அதாவது ஒரு ஆன்ம தரிசனத்தை அடைந்தவனாலேயே இன்னொருவனுக்கு அந்த ஆன்மா பற்றிய உண்மைகளைக் கூற முடியும். அந்த ஆன்ம தரிசனத்துக்கு வழிகாட்ட முடியும். அது மட்டுமல்லாது அந்த ஆன்ம தரிசனத்தை அடைய முயல்பவர்களும் அரிதாகவே உள்ளனர்.
அதுமட்டுமல்ல ஆன்மா பற்றிய உண்மைகளை உபதேசிக்கப்படும் விடயங்களில் அலட்சியம் இருந்தாலோ அல்லது உபதேசிப்பரிடம் மரியாதை இல்லாது இருந்தாலோ அந்த உபதேசத்தினை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. விடயங்களை புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது போய்விடும்.
நாம் தேடும் ஒரு காரியத்தினை முழுதாக அறிந்து கொள்ள வேண்டுமானால், எமது முழுக் கவனத்தினையும் உபதேசிக்கப்படும் விடயத்தின் மீதும் உபதேசத்தினை அறிந்து கொள்ளும் நம் மீதும் செலுத்த வேண்டும். அதுவே ஒரு காரியத்தில் எம்மை முழுமை பெற வைக்கும்.
அதுவே கவனித்தல் (கவனம் செலுத்துதல்) எனப்படுகிறது.
ஒரு காரியத்தில் நாம் இறங்கும்போது அதில் கவனமும் தேவைப்படுகிறது. அங்கு விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.
இங்கு கவனம் வேறு விழிப்புணர்வு என்பது வேறாகும்.
“கவனித்தல்” என்பதன் அர்த்தம் ஒரே ஒரு விடயத்திற்குத் தனிப்பட்டுக் கவனம் செலுத்துவது.
“விழிப்புணர்வு” என்பது அப்படி அல்ல. ஒரு காரியம் ஆற்றிக் கொண்டிருக்கும் போது இன்னொரு விடயத்திலும் கவனத்தினைச் செலுத்துவது. செய்யும் காரியத்தில் உணர்வோடு இருப்பது மாத்திரமே.
உதாரணமாக ஒரு மாணவன் வகுப்பறையில் வேறு எதனையும் சிந்திக்காமல் ஆசிரியர் கூறும் விடயத்தில் மட்டும் கவனமாக இருத்தல் கவனித்தல் எனப்படும்.
அந்த மாணவன் பாடசாலை முடிந்து வாகனத்தில் வீடு திரும்பும் போது வாகனத்தினையும் செலுத்திக் கொண்டு அன்றைய ஆசிரியர் கற்பித்த பாடங்களிலும் எண்ணங்களை செலுத்துவது விழிப்புணர்வு எனப்படும். பயணம் செய்யும் போது நாம் கண்டு கொள்ளும் காட்சிகள் எல்லாம் தெரிந்து கொண்டு இருக்கும். அதாவது பல விடயங்களில் கவனத்தினைச் செலுத்துவது விழிப்புணர்வு எனப்படும்.
ஆன்ம அறிவு என்பது தர்க்கத்தினால் (அதாவது வாக்குவாதம்; விவாதம்) அறியப்படுவது அல்ல. அது ஒரு சிறந்த குருவின் உபதேசத்தினால் மட்டுமே அறிய முடியும். அதுவே எமக்கு ஞானத்தினைக் கொடுக்கும்.
எந்த விடயமும் தர்க்கத்தினாலோ அல்லது வார்த்தைகளினாலோ பெறப்படும்போது அது ஏட்டறிவாகவே அதாவது புத்தகக் கல்வியாகவே இருக்கும்.
ஆன்ம அறிவு ஒரு குருவிடமிருந்து உபதேசிக்கப்படும் போதே அது குருவின் வார்த்தைகளோடு அவரது அனுபவமும் சீடனுக்கு அனுபவமாக மாற்றப்படும். அது அவனுள் ஞானமாக ஒளிரும். இதுவே குரு சீட உபதேசமாகும்.
உலகியல்ப் பாதை இறைவழிப் பாதையில் இருந்து வேறு பட்டது. அதாவது உலகியல் இன்பமான பெண், பொன், பொருள் மேல் அதாவது உலக இன்பம் மீது ஆசை வைத்து வாழ்வது உலகியல்ப் பாதை. அது நிலையற்ற இன்பங்களினால் ஆன பாதை. அந்த நிலையற்ற பாதையினால் நிலையான இறை இன்பத்தினைப் அடைய முடியாது.
இருந்தாலும் அத்தகைய நிலையற்ற இன்பங்களைக் கொண்டு அதாவது பொன் பொருளைத் தானம், தருமம் செய்தல் போன்ற உயர்ந்த செயல்களை செய்யும்போது அது எம்மை இறைவழிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
எனவே உலகியல் வாழ்க்கையும் வாழத் தகுந்ததே.
சொர்க்கம் நரகம் என்பது ஒரு கற்பனையே. சாதாரண மனிதர்களினால் மனதில் எழுப்பப்படும் கற்பனை உலகமே சொர்க்கம், நரகம் ஆகிய உலகங்கள். இவ்வுலகில் மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனை உலகங்கள் அவை. இருந்தும் சொர்க்க வாழ்க்கையும் நரக வாழ்க்கையும் இவ்வுலகிலேயே அவன் வாழும் காலத்திலேயே அனுபவிக்கிறான் என்பதனை அவன் புரிந்து கொள்வதில்லை.
இறை பாதையை நம்பி பின்பற்றுபவன் இந்த சொர்க்க நரக கற்பனைகளில் இருந்து விடுபடுகிறான். அவன் நிலையான இன்பத்தினை அடைகிறான்.
இங்கு ஆன்மா என்பது இறைவனே. அதாவது ஒரு பெரிய தீப் பந்தத்தில் இருந்து ஒரு தீப் பிழம்பு, ஒரு தீப்பொறி பறக்கும் போது அது தனியாக இருந்தாலும் அதுவும் அந்த நெருப்பே. அதுபோல அந்த இறை சக்தியில் இருந்து உதித்த ஆன்மாவும் அந்த இறையே.
அந்த ஆன்மாவைப்பற்றி யாரும் பெரிதாக சிந்திப்பதில்லை. அறிந்து கொள்வதில்லை. அதனை அறிந்தவனாலேயே அந்த அறிவை ஏனையோருக்குப் புகட்ட முடியும் என்பதும் உண்மையே.
எல்லா வேதங்களும் எந்தச் செயலைப் போற்றுகின்றனவோ, எல்லாத் தவத்திலும் எது கூறப்படுகின்றதோ அதுவே ஓங்கார ரூபமாகிய, ஒலி ரூபமாகிய ஓம் எனும் பிரணவ மந்திரமாகும்.
ஓம்காரம் வெறும் வார்த்தை அல்ல. அதுவே பிரம்மத்தின் ஆரம்ப அதிர்வு. அந்த அதிர்வில் இருந்தே இந்த சடம் மற்றும் சடமற்ற பொருட்கள் தோன்றின. ஓங்காரத்தினை உணர்ந்தவன் அறிந்தவன் அந்த இறையை உணர்ந்தவனாகிறான்.
இறை சக்தியாகிய ஆன்மா மிகவும் அமைதியானது. அதிலிருந்து பிரிந்து வரும் மனமே இந்த உடலை வழிநடாத்துகிறது. மனமே ஐம்புலன்கள் வழியாக இந்த உலக இன்பங்களில் நாட்டம் கொள்கிறது. ஒருவன் தன்னை அறிய முடியாமல் தடுப்பது இந்த மனதின் செயலே.
அடிப்பவன் அடிப்பதாக எண்ணினாலும் அடிபடுபவன் தான் அடி வாங்குவதாக எண்ணினாலும் அது இந்த உடலின் உலக இன்பத்திலேயே சேர்க்கப்படுகிறது. அது அவர்களது அறியாமையே. உண்மையில் இந்த ஆன்மாவானது அடிப்பதும் இல்லை அடி படுவதும் இல்லை.
எனவே அடிப்பது அடி படுவது எல்லாமே உடலைச் சார்ந்தது. ஆன்மா உடலில் உறைந்திருந்தாலும் அது அடிப்பதும் இல்லை அடி படுவதும் இல்லை. ஆனால் உடல் சார்ந்த நிகழ்வுகளால் இந்த ஆன்மாவானது அந்த மேலான இறை சக்தியுடன் இணைய முடியாமல் தடுக்கப்படுகிறது.
நடைமுறையில் உடலில் உயிர் இருக்கும்வரை, உடல் இருக்கும் வரை ஆன்மா அதனுள் உறைந்திருக்கும். நாம் நம்மை உணர்ந்து கொள்ளாமல், நாம் எம்மை எமது உடலாக மட்டுமே பார்க்கும் போது உடல் வலி மட்டுமல்ல வேதனையும் அதனுடன் சேர்ந்து கொள்ளும். வலி சிறிது நேரத்தில், காலப்போக்கில் மறைந்து போகும். ஆனால் அடைந்த வேதனை எம்முள் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் வேதனை மறையாது விட்டால் அது ஆழ்மனதில் பதிந்து கொள்ளும். அது வினைப் பதிவுகளாக பிறவிகள் தோறும் ஆன்மாவுடன், சூக்கும உடலுடன் பயணம் செய்து நம் உணர்ச்சிகள் எல்லாவற்றினையும் ஆட்டிப் படைக்கும். அதுவே மேலும் பல பிறவிகள் எடுப்பதற்கும் வழி வகுக்கும்.
உடலாகத் தன்னைக் காணாமல் ஆன்மாவாகக் காணும் ஒருவனுக்கு இந்த வலிகள் இருக்காது. அதனால் அவனது ஆழ் மனதிலும் பதிவுகள் வராது. அது மட்டுமல்லாது ஏற்கனவே ஆழ்மனதில் இருந்து வந்த பதிவுகளும் அழிந்து போகும்.
அதாவது அந்த ஆன்மாவை அறிந்து கொள்பவன் இவ்வுலக இன்பங்களைக் கடக்கிறான் கவலைகளைக் கடக்கிறான்.
ஆன்மாவானது எங்கும் செல்கிறது. ஆன்மாவானது விழிப்பு நிலையில் தான் பார்த்ததும் பார்க்காததுமான செயல்களை தூக்க நிலையில் அனுபவிக்கிறது. அதாவது கனவு நிலையில் அதனை அனுபவித்து மகிழ்கிறது. அல்லது அஞ்சுகிறது. தூக்க நிலையில் ஆன்மாவானது வெளி உலகில் அதாவது பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறது. பிரபஞ்சம் எனப்படுவது எமது உடலுக்கு வெளியில் உள்ள பகுதி பிரபஞ்சமே. தூக்கம் எனப்படுவது மரணத்தின் ஒத்திகையே என்று ஞானிகள் விளக்குகிறார்கள்.
அதாவது மரணத்தின்போது மனம் அழிந்து போகின்றது என்பதனை மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது மரணத்தின்போது ஆன்மாவானது தெளிவாக தன்னால் உணரப்படுகிறது. மரணத்தின்போது புலன்களோ புத்தியோ மனமோ எதுவுமே இயங்குவதில்லை. மனம் தொழிப்பட உடலும் புலன்களும் தேவைப்படுகிறது. உடல் செயல்படாத போது மனமானது ஆன்மாவில் மீண்டும் ஒடுங்குகின்றது. இவ்வாறு சகலதும் ஒடுங்கிய நிலையிலேயே ஆன்மா வெளிப்படும்.
ஞானிகள் தியான நிலையில் மனதினை ஒடுக்கி ஆன்மாவை அறிகிறார்கள்.
சூல உடல் அல்லது தூல உடல் எனப்படுவது எமது கைகள், கால்கள், மூளை, இதயம் எனப் பல பகுதிகளைக் கொண்டிருப்பது போல சூக்கும உடலானது நாடிகள் (இடகலை, பிங்கலை, சுழுமுனை), ஆதாரச் சக்கரங்கள், ஆன்மா (குண்டலினி), ஆழ்மனப் பதிவுகள் எனப் பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
நமது கண்ணுக்குத் தெரியும் உடல் தூல உடல் என அழைக்கப்படும். அதனுடன் பிறப்பின் போது சூக்கும உடல் இணைந்து கொள்கிறது. அந்த சூக்கும உடலில் அமைந்துள்ள ஆன்மாவில் இருந்து மனம் எழுந்து வந்து அந்த ஆழ்மனதில் அமைந்துள்ள பதிவுகளுக்கு ஏற்றவாறு தனது செயலினை ஆரம்பிக்கின்றது. அதனாலேயே ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு குணம், ஒவ்வொரு ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மீண்டும் அந்த தூல உடல் மரணிக்கும்போது அந்த உடலில் இருந்த சூக்கும உடல் வெளியேறி இன்னொரு உடலுக்காகக் காத்திருக்கும். இவ்வாறு இறப்பும் பிறப்பும் நடைபெறும்.
சூக்கும உடலானது மனித உடலில் (தூல உடலில்) சஞ்சரிக்கும் போதே இறைவனை அறிந்து தேடி கலந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கிறது. அதாவது ஒரு சூக்கும உடலில் அமைந்துள்ள ஆன்மா தொழில்பட ஒரு தூல உடல் தேவைப்படுகிறது.
இவ்வாறு மனித உடலில் ஆன்மா சஞ்சரிக்கும் போது இறைவனை அறிந்து, இணைந்து அதனுடன் கலந்து கொள்ளும் நிலையே முக்தி எனப்படும். முக்தி நிலையின் போது சூக்கும உடல் அழிந்து அதனுள் உறைந்து இருக்கும் ஆன்மா இறை சக்தியுடன் கலந்து கொள்ளும்.
இன்னும் விளக்கமாகச் கூறினால் ஆன்மா நிலையானது. எங்கும் நிறைந்தது. விருப்பு, வெறுப்பு, மகிழ்வு, துக்கம் போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லாதது. ஆன்மாவில் இருந்து வந்த மனமே (எண்ணமே) விருப்பு, வெறுப்பு, மகிழ்வு, துக்கம் போன்ற இந்த உணர்ச்சிகளுக்குக் காரணமாகிறது. உடல் அழியும் போது மனம் அழிந்து உணர்வுகளும் அற்றுப் போகின்றது.
ஒரு எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றும் போது அது ஒரு உணர்வாக எமக்குத் தோன்றுகிறது. உதாரணமாகக் கவலை என்பது ஒரு உணர்வு.
ஆன்மாவை அறிந்து கொள்ளவது அவ்வளவு சுலபமானதல்ல. கல்வி அறிவு, போதனைகள், அனுபவத்தால் ஆன்மாவை அறிய முடியாது. எவர் அந்த ஆன்மாவை அறிய தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறானோ அவனுக்கே ஆன்மா வெளிப்படுகிறது.
முழுமையாக அர்ப்பணித்தல் என்பது உண்மையில் ஒரு குருவின் வழிகாட்டலில், அவரின் உபதேசங்களில் தன்னை எவ்விதமான சந்தேகமும் இன்றி ஈடுபடுத்தி தான் எதனை இறை என்று எண்ணிக்கொண்டிருக்கிறானோ (மனதில் இறை பற்றிய தான் வைத்திருக்கும் கற்பனைகள்) அந்தக் கற்பனைகளை விடுத்து, மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினால் தேடும்போது ஆன்மா அவனுக்கு வெளிப்படும்.
வைராக்கியம் இல்லாதவன், தீய பழக்கங்கள் உள்ளவன், அமைதியற்றவன், மனச் சலனங்கள் உள்ளவனால் ஆன்மாவை அறிய முடியாது.
பலமில்லாதது எப்போதும் பலமானதால் ஆளப்படுகிறது. ஒரு மனிதனின் புலன்களை விட உலகப் பொருட்கள் (சிற்றின்பம்) வலிமையானவை. அதனால் புலன்களை உலகம் ஆளுகின்றது. ஆனால் உலகப் பொருட்களை விட மனம் வலிமையானது. மனத்தைக் கட்டுப்படுத்த புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட சித்தம் தெளியும். சித்தம் தெளிய ஆன்மா வெளிப்படும்.
அடங்காத ஒன்றை அடக்க வேண்டுமானால் அதனிலும் வலிமையானதை நாம் நாட வேண்டும் என்ற உண்மை இங்கு வேண்டப்படுகிறது.
சாதாரண நிலையிலுள்ள ஒரு மனிதன் இறைவனை இறை அருளை நாட அதாவது அறிய முற்படுவதே ஆன்மீகம் எனப்படுகிறது. இறைவனை அறிய முற்படுபவன் பேச்சினைக் குறைக்க வேண்டும். மனதினை உள்முகமாகச் செயல்ப்படுத்த வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை நிறுத்த வேண்டும். தனது எண்ணங்களை சிந்தனைகளை ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். அப்போது அந்த ஆன்மா வெளிப்படும் ஆன்மா இறை சக்தியை உணரும், அறியும் அதனுடன் கலக்கும்.
இங்கு பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது பேச்சினையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவதாகும். வாயசையாமல் நா அசையாமல் இருக்கும் போது பேச்சு எழாது. ஆனால் மனதில் எழும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்பது சிறிது கடினமானது.
எண்ணங்களைக் கட்டுப்படுத்த தனிமையும் அவசியமாகின்றது. தனிமையின் போது தேவையற்ற சிந்தனைகள் குறைகின்றது.
பார்வையை ஓரிடத்தில்க் குவித்து மூச்சினை அவதானித்து வர எண்ணங்கள் கட்டுப்படும். எண்ணங்கள் கட்டுப்படும் போது விழிகள் அசைவது நின்றுவிடும். அப்போது எழும் எண்ணங்களை நாம் சாட்சியாக இருந்து அவதானிக்கும் போது எண்ணம் அடங்க ஆரம்பிக்கும்.
சாட்சியாகப் பார்த்தல் என்பதன் பொருள், உதாரணமாக ஒரு மலரை நாம் பார்க்கும் போது அந்த மலரைப் பற்றிய எந்த விதமான ஆராய்ச்சியும் இல்லாமல் (அதாவது அதன் வர்ணம் அதன் வாசம் அது எவ்வாறு அத்தனை அழகாக இருக்கிறது என்ற எந்த ஆராய்ச்சியும் இன்றி) ஒரு மலாகப் பார்த்தல் சாட்சியாகப் பார்த்தல் என்று அறியப்படுகிறது. அதுபோல மனதில் இருந்து எழும் ஒரு சிந்தனையை சாட்சியாய் பார்க்கும் போது அந்த எண்ணம் வளராது சீக்கிரமே அடங்கிவிடும்.
அதுபோல சிந்தையில் எழும் எண்ணங்களில் மனம் நாட்டம் செலுத்தாத போது சிந்தனைகள் ஒடுங்க ஆரம்பிக்கும். எழும் எண்ணங்களை நாம் ஆராயும்போதே அது வலுப்பெறுகிறது எம்முள் உணர்ச்சிகளை தூண்டுகிறது.
புலன்கள் வெளிப்புறமாக உலகத்தினை நோக்குகின்றன, அறிகின்றன. அதன்மீது நாட்டம் கொள்கின்றன. இறை சக்தியை உணர, அறிய முற்படுபவன் மனதினை புலன்கள் வழியாகச் வெளியே செலுத்தாமல், தனக்குள்ளே பார்க்கிறான். தன்னுள்ளே தேட ஆரம்பிக்கின்றான்.
கண்களை மூடிக் கொள்ளும் போது வெளிக் காட்சிகள் மறைந்து விடும். மூடிய கண்களுக்குள் கருவிழிகள் அசைந்து கொண்டிருக்கும். அந்த கருவிழிகளை ஓரிடத்தில்க் குவித்து அசைவினை நிறுத்த மனதில் எண்ணங்கள் எழுவது குறையும். அப்போது சலனமற்ற நிலை உருவாகும். உள்ளே பேரமைதி உருவாகும். அப்போது உள்ளிருக்கும் ஆன்மா வெளிப்படும்.
கண் எதிரில் உள்ள பொருட்களை எப்படி ஒருவன் வெளிப்படையாகப் பார்க்கிறானோ அதுபோல தனது ஆன்மாவைக் காணும் ஒருவன் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற கால எல்லைகளைக் கடக்கிறான். அதுவே விருப்பு வெறுப்பற்ற பேரானந்த நிலையாகும்.
இறந்த கால அனுபவங்களும் சிந்தனைகளும். எதிர்கால எண்ணங்களும் பயங்களுமே ஒருவனுக்கு விருப்பு வெறுப்புக்குக் காரணமாக அமைகின்றன. காலத்தினைக் கடந்தவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லாமல் போகின்றது.
பெரும் தீயில் இருந்து தீப்பொறி பறக்கும் போது அது தனியாக தீயாக எரிகிறது. ஆனால் அதுவும் தீயே. பெரும் தீக்கும் அதில் இருந்து பறந்து வந்து எரியும் தீக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.
அதுபோலவே இறை சக்தியில் இருந்து பொறியாகப் பறந்து வந்த ஆன்மாவுக்கும், இறை சக்திக்கும் இடையில் எவ்விதமான வேறுபாடும் இல்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேன்டும்.
ஆன்மாவை நாம் உணரும்போது அந்த ஆன்மா அந்த இறை சக்தியுடன் கலக்கும். இதுவே ஞான நிலை அல்லது மோட்ச நிலையாகும்.
எமது ஆன்மாவை நாம் அறிய முடியாமல் இருப்பதற்கு எமது மனமே காரணமாக அமைகின்றது. மனமானது ஐம்புலன்கள் வழியாக உலக நாட்டத்தில் கவனம் செலுத்தும்போது உலக சிற்றின்பங்களில் சிக்கித் தவிக்கும்போது எம்மால் எமது ஆன்மாவை அறிய முடியாமல் போகிறது.
வெளி உலக நாட்டத்தில் சிக்கித் தவிக்கும் மனதை அந்த வெளியுலக நாட்டங்களில் இருந்து விடுபட வைத்து உள்முகமாக ஆன்மாவை அறிய முற்படும் போது எமக்கு ஒரு குருவின் வழிகாட்டல் அவசியமாகின்றது. அந்தக் குருமூலமாக அறியும் பயிற்சிகளே யோகப் பயிற்சிகள் என அழைக்கப்படுகிறது. இங்கு குரு எமக்கு வழிகாட்டியாகவே அமைக்கிறார். முயற்ச்சிகள் நாமே மேற்கொள்ள வேண்டும்.
யோகப் பயிற்சிகள் செய்து ஒருவன் சிறிது சிறிதாக தன்னை அறிய ஆரம்பிக்கிறான். அந்தப் பாதை மிகவும் கடினமான பாதை என்பதனையும் புரிந்து கொள்கிறான். இருந்தும் அந்த யோகப் பாதையில் முன்னேறவே அவன் விரும்புவான்.
யோகப் பாதையில் ஒருவன் பயிற்சிகள் செய்து வரும்போது அவனது முன்வினைகள் சிறிது சிறிதாக வெளிக் கொணரப்பட்டு அனுபவிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது என்பதே உண்மையாகும்.
யோகப் பயிற்சியில் பிராணனே அதாவது சுவாசக் காற்றே முதலில் ஒழுங்கு படுத்தப் படுகிறது. அதாவது சுவாசக் காற்றினை சரியான முறையில் உள்ளிழுத்து வெளியேற்றும் போது அந்தக் காற்றானது எமது சூக்கும உடலில் பதிந்துள்ள அதாவது ஆழ்மனதில்ப் பதிந்துள்ள பல பிறவிகளில் இருந்து எம்முடனேயே பயணித்துக் கொண்டிருக்கும் பழைய பதிவுகள் வெளிக் கொணரப் படுகிறது. சில பதிவுகள் கனவாக அமைந்து அழிக்கப்படுகிறது. சில பதிவுகள் நாம் அனுபவித்தே கழிக்க வேண்டி இருக்கிறது. இதனாலேயே யோகப் பயிற்சிகள் செய்து வரும்போது அதாவது ஆன்மீக வழியில்ப் பயணிக்கும் போது சில வேளைகளில் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
ஆன்மீகப் பாதை என்பது துன்பம் கலந்த அனுபவங்களையே ஆரம்பத்தில் கொடுக்கும்.
இந்தப் பிரபஞ்சம் ஆகிய இறைசக்தியின் அந்த சிவனின் தவத்தின் பயனாக அவனில் இருந்து தோன்றிய ஓசையும் ஒளியும் (சிவனும் சக்தியும்) இணைந்து பஞ்ச பூதங்கள் (நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம்) தோன்றியது. அந்தப் பஞ்ச பூதங்களில் இருந்து பிரபஞ்சப் பொருட்கள் உருவாக்கப் பட்டது. அந்தப் பிரபஞ்சப் பொருட்களினுள் சிவன் தான் புகுந்து அவற்றினை இயக்க எண்ணி அவற்றினுள் தான் ஆன்மாவாகப் புகுந்து அவற்றிக்கு சக்தி அளித்தார். இதுவே ஆன்மாவின் தத்துவமமாகும்.
அந்த ஆன்மாவானது சூக்கும உடலில் பயணம் செய்கிறது. ஆன்மா இயங்குவதற்கு அதாவது செயலாற்றுவதற்கு ஒரு உடல் தேவைப்படுகிது. ஒரு சூக்கும உடல் ஒரு தூல உடலினுள் இணையும் போது (புல்லோ, மரமோ, புழுவோ, பறவையோ, மனிதனோ) அந்த உடலின் ஆற்றலுக்கு அமைய செயல்ப் படுகிறது. அந்த செயலின் விளைவாக பாவ புண்ணிய நினைவுகளை அந்த சூக்கும உடலில் (ஆழ்மனதில்) பதித்துக் கொள்கிறது. அந்த தூல உடல் அழியும்போது சூக்கும உடல் அங்கிருந்து வெளியேறி இன்னொரு உடலுக்காகக் காத்திருக்கிறது. புதிய உடல் கிடைத்ததும், புதிய உடலின் (புல்லா மரமோ புழுவோ பறவையோ மனிதனோ) தன்மைக்கு ஏற்றவாறு தனது ஆழ்மன பதிவுகளையும் பிரயோகித்து அவ்வுடலுடன் வாழ்கிறது.
ஆன்மாவானது சூக்கும உடலில் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி எனும் பெயரில் ஒரு அக்கினி கோளமாக அமைந்திருக்கிறது. குண்டலினி சக்தி ஒரு கோள (குண்டு) வடிவில் அமைந்துள்ளதால் அதனை குண்டம் + அக்கினி = குண்டலினி எனச் சித்தர்களால் வர்ணிக்கப்படுகிறது.
அந்தக் குண்ண்டலினி சக்தியை பிராணனால் (மூச்சுக் காற்றினால்) சூடேற்றி கிளந்தெழச் செய்து சுழுமுனை நாடி வழியாக துரியம் வரை உயர்த்தி, குண்டலி சக்தி அந்த பிரபஞ்சத்துடன் கலக்கும்போது இந்த சூக்கும உடல் அழிந்து விடுகிறது அதுவே மீண்டும் பிறப்பற்ற முக்தி அல்லது மோட்சம் ஆகும்.
அதாவது தூல உடலின் அழிவு மரணம் எனப்படும். சூக்கும உடலின் அழிவு ஞானம் அல்லது முக்தி எனப்படும்.
சித்தர்களும் ஞானிகளும் அக்கினியை இறைவனாகவே இறைவனின் பிரதிபலிப்பாகவே கண்டு வழிபடுகிறார்கள். அதனாலேயே இந்து வைபவங்களில் அக்கினிக்கு (தீப ஆராதனைகள், யாகங்கள்) முக்கிய இடம் கொடுக்கப் படுகிறது.
அக்கினியை ஆன்மாவாகப் பார்ப்பதுவும் ஒரு சிறந்த யோகப் பயிற்சி முறையாகும். அதாவது ஒரு தீபத்தினை (வீடுகளில் சுவாமிக்கு ஏற்றும் சிறிய எண்ணெய் தீபம் அல்லது ஒரு மெழுகுதிரி தீபத்தினை) கண்வெட்டாமல் பார்த்து அந்த அக்கினியை உள்வாங்கி பின் கண்களை மூடும்போது புறக் கண்களால்ப் பார்த்த அந்த விம்பம் அகக் கண்களில் தெரியும். தினமும் அகக் கண்களில் இருந்து அந்த விம்பம் மறையும் வரை வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் அதனை உற்று நோக்கியவாறு அமர்ந்திருக்க வேண்டும் இவ்வாறு பயற்சி செய்து வரும்போது அந்த ஒளியானது ஆழ்மனதில் ஊடுருவி நிலைபெறும் போது அந்த ஆன்மா (அக ஒளி) வெளிப்படும். நாளடைவில் அந்த அக ஒளியானது எமது கை பெருவிரல் அளவில் நெற்றியில் புருவ மத்தியில் ஒரு செஞ்சுடர்போல (சிகப்பு நிறமான தீபம் போல) தோன்றும். இதுவே ஆன்ம தரிசனமாகும். இதுவும் ஒரு சிறந்த பயிற்சியே.
உலக இன்பங்களில் ஆழ்ந்து இருப்பவனுக்கும் விரக்தி மனப்பான்மையில் வாழ்பவனுக்கும் ஆன்ம தரிசனம் கிடைப்பதில்லை. இரண்டும் கடந்த (அற்ற) மனநிலையில் வாழும் ஞானிக்கே இந்த ஆன்ம தரிசனம் கிட்டும் என்று விளக்கப்படுகிறது.
ஆன்ம தரிசனம் கிட்டும்போது ஆன்மாவானது பரிசுத்தமடைகிறது. பரிசுத்தம் அடைந்த ஆன்மா இறை சக்தியாகவே ஆகின்றது. அதாவது ஒரு சுத்தமான நீருடன் நீரைக் கலக்கும்போது எவ்வாறு பிரித்தறிய முடியாதவாறு ஆகின்றதோ, ஒரு நெருப்புடன் இன்னொரு நெருப்பு இணையும் போது எவ்வாறு பிரித்தறிய முடியாதவாறு ஆகின்றதோ அவ்வாறு ஆன்மா சுத்தமடைந்து புனிதமடையும் போது அந்த இறை சக்தியுடன் ஒன்றரக் கலக்கிறது. அப்போது அந்த ஞானி பிறப்பு இறப்பு என்ற பிறவிப் பிணியில் இருந்து விடுபடுகிறான். உலக எண்ணங்களில் சுக துக்கங்களில் இருந்து விடுபடுகிறான். முற்றும் துறந்தவன் ஞானி என்று அழைத்தாலும் ஞானிக்கும் பசி, முதுமை, உடல் நோய், உடல் உபாதைகள் போன்ற துன்பங்கள் உண்டு.
ஆன்மாவின் சக்தியினாலேயே சூல உடலோ சூக்கும உடலோ இயங்குகின்றது. உதாரணமாக சூக்கும உடலில் அமைந்துள்ள சக்கரங்கள் எண்ணப் பதிவுகள், மனம், சிந்தனை யாவும் ஆன்மாவின் (குண்டலினியின்) சக்தியினாலேயே இயங்குகிறது. அதுபோல தூல உடலில் அமைந்துள்ள இதய இயக்கமோ சுவாச இயக்கமோ அல்லது உடல் சூடோ அந்த குண்டலினியின் சக்தியினாலேயே இயங்குகின்றது.
உதாரணமாக ஒரு உடல் இயங்க மூச்சுக் காற்று முக்கியமானது. சுவாசிக்க மூக்குத் தேவைப்படுகிறது. சுவாசம் நடைபெறுகிறது. மரணத்தின்போது சூக்கும உடலுடன் ஆன்மாவும் வெளியேறுகிறது. அப்போது அந்த தூல உடல் செயலற்றுப் போகின்றது. இறந்த பின்னரும் காற்று இருக்கிறது மூக்கு இருக்கிறது ஆனால் சுவாசம் நடைபெறுவதில்லை. காரணம் அவ்வுடலில் இருந்து அந்த சூக்கும உடல் அந்த ஆன்மா வெளியேறியதே ஆகும்.
ஒரு உடலில் இருந்து வெளியேறிய சூக்கும உடலுடன் ஒட்டியிருக்கும் ஆன்மாவானது தான் முற்ப பிறவிகளில் மேலும் இப்பிறவிகளில் செய்த சேர்த்த பாவ புண்ணியங்களுக்கு, அந்த வினைப் பயன்களுக்கு ஏற்றவாறு மீண்டும் ஒரு உடல் எடுக்கிறது. ஒரு ஆன்மாவின் வினைப் பலன்களே அடுத்து எடுக்கும் பிறப்பு உடல் இடம் என்பனவற்றினைத் தீமானிக்கின்றது.
இங்கு பிறப்பு என்பது எவ்வளவு காலத்தில் மீண்டும் பிறப்பது என்று பொருள். உடல் என்பது தாவரமோ அன்றில் எதோ ஒரு நீர் வாழ்வனவோ அன்றில் ஊர்வனவரோ அன்றில் பறப்பனவோ, மிருகமோ என்று பொருளாகும். இடம் என்பது இந்த உலகின் எந்தப் பகுதி என்று அர்த்தமாகும். ஆனால் ஆன்மாவானது (எல்லா உயிரினங்களும்) இந்த உலகிலேயே மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து ஏதோ ஒரு மனிதப் பிறப்பில் அந்த இறைவனை அறிந்து உணர்ந்து இணைந்து தனது பாவ புண்ணியங்களைப் போக்கி இவ்வுலக சம்சாரத்தினை முடித்துக் கொள்கிறது.
ஒரு மரத்தில் வெளிப்படையாக கிளைகளும் இலைகளும் இருந்தாலும் மரம் நிலையாக நிற்க உதவும் வேர்கள் எமது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அதுபோல வேதங்களும் உபநிடதங்களும் ஒரு குருவும் எமது ஆன்மாவை அறிய நேரிடையாகவும் மறைமுகமாகவும் உதவுகின்றர்கள்.
ஆன்ம தரிசனம் கிட்டும்போது மரணமற்ற பெருவாழ்வு கிடைக்கிறது.
அதே வேளை மரணத்தினைக் கண்டும் யாரும் அஞ்ச வேண்டியதில்லை. மரணம் என்பது தூக்கம் போன்றதே. மரணம் என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குடிபெயர்தல் போன்றதே. குடிபெயரும் போது எப்படியாக சொந்த பந்தங்களை உற்றார் உறவினர்களை விட்டு புதிய இடத்துக்கு இடம் பெயர்கிறோமோ, மரணமும் அப்படியே தான் அமைகின்றது. அவ்வளவே. அதிலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் போது புதிய சூழல் புதிய சுவாத்தியம் பழக்கவேண்டி இருக்கிறது. ஆனால் மரணம் அப்படி அல்ல புதிய சூழலில் அங்கிருந்தே அறியாமல் பிறந்து அந்தச் சூழலை அறிந்து கொள்வது இலகுவாக அமைகிறது. எனவே மரணத்தினை உணர்ந்தவர்கள் மரணத்தினைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
உடலும் உயிரும் ஒட்டி இருக்கும் மனித வாழ்க்கையில்த்தான் ஞானம் அடைய முடியும். ஆன்ம தரிசனம் பெற முடியும். இருந்தும் அறியாமையினால் மனிதர்கள் உலக இன்பங்களில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள்.
மனம் எண்ணங்கள் அற்றுப் போவதே மனதை வெல்லுதல் என்று அழைக்கப்படுகிறது. மனதில் எண்ணங்கள் அற்றுப் போகும்போது செயலில் பயமோ பதற்றமோ இருக்காது. பற்றுப் பயம் இல்லாத செயல்கள் வினைப் பதிவுகளை (பாவம் புண்ணியம் எனும்) ஆழ்மனப் பதிவுகளை உருவாக்கு வதில்லை. புதிய பதிவுகள் இல்லாதபோது பழைய பதிவுகளும் வலுவிழந்து அழிந்துபோகும். புலன்கள் வசப்பட்டு செயலற்று நிற்கும் நிலை யோகநிலை என அழைக்கப்படுகிறது.
யோகம் என்றால் இணைத்தல் என்று பொருள். ஆன்மாவையும் இறை சக்தியையும் இணைப்பதே யோகநிலை ஆகும்.
ஆன்மா அல்லது பிரம்மம் இருக்கிறது அல்லது இல்லை என்ற இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன.
சாதகன் முதலில் ஆன்மா அல்லது பிரம்மம் இருக்கிறது என்று உறுதியாக ஏற்க வேண்டும். அவ்வாறு நம்பி உறுதியாக ஏற்றுக் கொள்பவன் அந்த உறுதியினாலேயே அமைதியைப் பெறுகிறான். அதாவது எது நடந்தாலும் எல்லாம் அந்த இறைசக்தி காக்கும் என்று நம்பும்போது மனதில் பயமற்றுப் போகிறது. மனம் அமைதி அடைகிறது.
எப்பொழுது மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகு கின்றனவே அப்பொழுதே மனிதன் மரணமற்றவன் ஆகின்றான். அந்த நிலையிலேயே ஆன்ம தரிசனம் கிடைக்கும்.
சுபம்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —