திருமூலர் அருளிய அட்டாங்க யோகம்
அட்டாங்க யோகம் – யோகப்பயிற்சி
கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும்.
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் யோகப் பயிற்சி முறைகளை எட்டுப் படிமுறைகளாக வகுத்து அதனை அட்டாங்க யோகம் எனப் பெயரிட்டுள்ளார்.
அட்டாங்க யோகம் (மூன்றாம் தந்திரம் )
“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.” – திருமந்திரம்.
விளக்கம்: அட்டாங்க யோகம் பின்வரும் எட்டு படிநிலைகளாக வகுக்கப்படுகிறது. அவையாவன இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் அதாவது எட்டுப் படிமுறைகள் ஆகும்.
இயமம்: தீயனவற்றைச் செய்யாது இருத்தல்.
நியமம்: நல்லனவற்றைச் செய்தல்.
ஆதனம் (ஆசனங்கள்): ஆசனங்கள் செய்தல்.
பிராணாயாமம்: மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துதல்.
பிரத்தியாகாரம்: மனதைக் கட்டுப்படுத்துதல்.
தாரணை: ஆதாரங்களில் (சக்கரங்களில்) மனத்தை ஒருமுகப்படுத்துதல்.
தியானம்: மனதை உள்முகமாகச் செலுத்துதல்.
சமாதி: பரம்பொருளுடன் ஒன்றாதல். சிவனுடன் (ஜோதியுடன்) ஐக்கியமாதல்.
அட்டாங்க யோகத்தில் கூறப்பட்ட எட்டுப் படிமுறைகளையும் வெளிமுகப் படிமுறை மற்றும் உள்முகப் படிமுறை என இரு பகுதிகளாகப் பார்க்கப்படுகிறது
அட்டாங்க யோகமானது இராஜயோகம் என பொதுவாக அழைக்கப்பட்டாலும் முதல் நான்கும் கிரியாயோகம் எனவும், அடுத்த நான்கும் இராஜயோகம் எனவும் அழைக்கப்படுகிறது.
கிரியாயோகம்: வெளிமுகமான நான்கு படிமுறைகளாக இயமம், நியமம், ஆதனம், பிராணயாமம் எனப்படும். இந்த நான்கினையும் கிரியாயோகம் எனவும் அழைப்பர்.
இராஜயோகம்: உள்முகமான நான்கு படிமுறைகளாக பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனப்படும். இந்த நான்கினையும் இராஜயோகம் எனவும் அழைப்பர்.
முதல் நான்கும் (கிரியா யோகம்) உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். மிகுதி நான்கும் (ராஜயோகம்) மனதை உள்முகத் தேடலுக்கான பயிற்சியாகும்.
அட்டாங்க யோகத்தினில் கூறப்பட்ட எட்டுப் படிமுறைகளையும் ஆரம்பத்திலிருந்து முறைப்படி ஒவ்வொன்றாக கடைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே அடுத்த படிநிலை பயனளிக்கும் என்பது பொருளாகும்.
1. இயமம் (விலக்கியன ஒழித்தல்)
மூன்றாம் தந்திரம் – 2. இயமம்
“கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே.” – திருமந்திரம்.
விளக்கம்: எந்த உயிரையும் கொல்லாதவன், புலால் உண்ணாதவன். புலன் அடக்கம் உள்ளவன், நீதியான தீர்ப்பு செய்ய வல்லவன், பொய் சொல்லாதவன், திருடாதவன், நற்குணம் உடையவன், கிடைத்த உணவை பகிர்ந்து உண்பவன், குற்றமில்லாதவன், மது அருந்தாதவன் , காம இச்சை இல்லாதவன், ஆகிய தகுதிகளை உடையவனே இயமத்தை கைக்கொள்பவனாவான். கொலை செய்யாமல் இருந்தாலும் புலால் உண்பவன் கொலை செய்பவனுக்குச் சமனாவான்.
இயமத்தினில் அறிவுறுத்தப்பட்டுள்ள தவிர்க்கப்பட வேண்டிய பத்து செயல்களாவன.
- கொல்லாமை – உணவுக்காகவோ அல்லது வேறு எதாவது காரணத்துக்காகவோ எந்த உயிரையும் கொல்லக்கூடாது. பக்தர் ஒருவர் வினவிய கேள்விக்கு குரு இவ்வாறு பதிலளிக்கிறார். புலி சிங்கம் போன்றன தம் பசியைப் போக்க ஏனைய விலங்குகளைக் கொன்று தின்னும் அது இறைவனது படைப்பு. அவ் விலங்குகள் மாமிசம் மட்டுமே உண்பவையாகப் படைக்கப்பட்டுள்ளன. அது இயற்கையின் படைப்பு. மனிதன் அப்படிப்பட்ட படைப்பல்ல. அவனது பிரதான உணவு சைவ உணவாகும். அவனது உடலமைப்பும் அவ்வாறே அமைந்துள்ளது. ஆனல் மனிதன் தன் ஆசையினால் தன் விருப்பங்களையும் மாற்றிக் கொண்டான். அதே போல மனிதரில் வேதம் படிக்காதவன், கொலை ஒரு பாவம் என்று அறியாதவன் விலங்குகளைக் கொலை செய்தால்கூட ஒருவேளை மன்னிப்பு இருக்கலாம் ஆனால் வேதம் படித்தவன், ஞான நூல்களை கற்று அறிந்தவன் கொலை செய்வது பாவம் என்று அறிந்தும் விலங்குகளை கொலை செய்பவன், மாமிசத்தை உண்பவன் பாவம் செய்தவனாகிறான்.
- புலாலுண்ணாமை – புலால் அதாவது மாமிசம் உண்ணக்கூடாது. மாமிசம் (கறி, மீன்) உண்பவர்களது குணம் ராஜஸ்தமாக இருக்கும்.. சைவ உணவு ஒருவரின் குணத்தினை சாத்வீகத்தில் அதாவது அமைதியாக வைத்திருக்க உதவும். சாத்வீகம் இறையருள் பெற உதவும்.
குணங்கள் ஒருவருக்கு பிறவியில் இருந்து இருந்தாலும் அவரது உணவுப் பழக்க வழக்கமும் வாழும் சூழ்நிலையும் குணத்தினை மாற்றுகின்றன.
ஒரு உயிரை நேரடியாகக் கொல்லாதபோதிலும் புலால் அதாவது மாமிசம் உண்பது என்பது அந்த உயிரை மறைமுகமாகக் கொல்லத் தூண்டியதற்குச் சமனாகும்.
இதனையே திருவள்ளுவர் துறவறவியலில் “புலால் மறுத்தல்” என்னும் பகுதியில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
“தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்“
விளக்கம்: யாவரும் மாமிசம் உண்பதனை நிறுத்தினால் அதற்காக பிற உயிர்களை கொல்லாதிருந்தால், யாருமே பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதாவது விற்பனை செய்யும் நோக்கில் உயிர்களைக் கொல்லமாட்டார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ புலால் உண்பதற்காக உயிர்கள் கொல்லப்படுவதற்கு அந்த மாமிசத்தினை உண்பவர்கள் உடந்தையாகிறார்கள். நேரடியாக கொலை செய்யாதிருந்தாலும் அப்பாவத்திற்கு அதனை உண்பவர்கள் ஆளாகிறார்கள்.
- பொய்யாமை – எக்காரணம் கொண்டும் எச்சந்தர்ப்பத்திலும் பொய் சொல்லக்கூடாது. பொய் பிறரைத் துன்புறுத்தும் செயலாகும். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லவேண்டி வரும். பொய் சொல்பவரின் அதாவது இன்னொருவரை ஏமாற்றுபவரின் நெஞ்சம் எப்போதும் நிம்மதியற்று குற்ற உணர்ச்சியுடனேயே இருக்கும்.
- விருப்பு வெறுப்புக்கள் இன்மை – எக்காரியம் ஆற்றினாலும் அக்காரியத்தில் அக்கடமையில் கண்ணாக இருக்க வேண்டுமே தவிர அதன் விளைவில் கருத்தாக இருக்கக்கூடாது. எம்முடிவாகினும் அதனை ஏறுக்கொள்ளும் மனநிலையில் இருக்கவேண்டும். மனதை ஐம்புலன்களின் பால் செலுத்தாது எதிலும் பற்ரற்ர நிலையில் செயல்புரிய வேண்டும். இதுவே மனதை வெளிக்காரியங்களில் இருந்து ஒடுக்கும் செயலாகும்.
- கரவாமை – சந்தேகம் கொள்ளாமை. எவரையும் நம்பாது எப்பொழுதும் பிறர்மீது, அவர்களது செயல்மீது சந்தேகம் கொள்ளக்கூடாது. எதனையும் தீரவிசாரித்து அறிந்து கொள்ளவேண்டும் என்று பொருளாகும்.
- பொறாமை – அடுத்தவர் மீறு பொறாமை கொள்ளுதல் கூடாது. பொறாமை கொள்ளுதல் தனக்கு மன அமைதியின்மையையே கொடுக்கும். பொறாமை பகையை வளர்க்கும். தன் நிம்மதியைக் கெடுக்கும்.
- மாசின்மை – (சுத்தகமின்மை ) இதனை அகச்சுத்தம் மற்றும் புறச்சுத்தம் என இரு வகையாகப் பிரிக்கலாம்.
அகச்சுத்தம் (மனச் சுத்தம்): மனதில் களங்கமின்மை. தேவையற்ற சிந்தனைகள் மற்றும் மௌனம் மனத்தைத் தூய்மைப் படுத்தும். எப்போதும் இறை சிந்தனையுடன் இருத்தல் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க உதவும்.
புறச்சுத்தம் – உடல் மற்றும் வாழும் இடம் சுத்தமாக வைத்திருக்கப்படல் வேண்டும். வெளிச்சுத்தம் உடலையும் உள்ளத்தையும் சாந்தமாக வைத்திருக்க உதவும்.
- துன்புறுத்தாமை – பிற உயிர்களை அவை மனிதர்களோ அன்றி மிருகங்களோ உளரீதியாகவோ அன்றி உடல் ரீதியாகவோ அவற்றைத் துன்புறுத்தி அதில் இன்பம் அல்லது சுயலாபம் காண்பது முற்றிலுமாக தவிர்க்கப்படல் வேண்டும்.
- காமம் இன்மை – காமம் ஒரு உணர்ச்சி. திருமணமான ஆணும் பெண்ணும் தம்மிடையே வைத்திருக்கும் பண்பான உடலுறவு காமமாகாது. அளவுக்கதிகமான காமம் மற்றும் முறையற்ற காமம் யோகத்திற்கு மிகப்பெரும் தடையாகும். இங்கு முறையற்ற காமம் என்பது உடல், உள ரீதியாக அடுத்தவர் அனுமதியின்றி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது. பிறர்மனை புகுதல் அதாவது இன்னொருவரது கணவன் அல்லது மனைவிமீது ஆசைப்படுவதும் முறையற்ற காமமே. காமத்தை அன்றாட உணவுப் பழக்க வழக்கங்கள், நாம் காணும் காட்சிகள், நம் சிந்தனைகள் என்பவையே தூண்டுகின்றன.
- கள்ளுண்ணாமை: இது இரு வகையாகப் பார்க்கப்படுகிறது. இதனை “மருந்து” மற்றும் “மது” என வகுக்கலாம்.
மருந்து என்பது “மருந்தும் விருந்தும் மூன்று வேளை” என்ற பழமொழிக்கு ஏற்ப நோயின்றி, தேவை இன்றி அவசியமற்ற மருந்துகள் உட்க்கொள்ளக்கூடாது.
கள்ளு என்பது மது என்றும் கொள்ளப்படுகிறது. மதுப் பழக்கமானது மேற்கூறப்பட்ட அத்தனை குணங்களையும் தூண்டும். அதனாலேயே மதுவுண்ணாமை இறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
யோக மார்க்கம் கடைப்பிடிப்பவர்கள் யோகப் பயிற்சி மேற்கொள்பவர்கள் முதலில், இங்கு கூறப்பட்ட அத்தனையையும் விலக்கிவிடல் வேண்டும். இவர்களே “இயம யோகம்” கைவரப் பெற்றவர்களாவார்கள்.
2. நியமம் (விரும்புவன செய்தல்).
திருமந்திரம் – நியமம் விளக்கம்
“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.” – திருமந்திரம்
விளக்கம்: பொறிபுலன்களை அடக்கி, இறை சிந்தனையோடு இருப்பது, தவம் செய்தல். தெய்வ நம்பிக்கையோடு எப்பொழுதும் ஆனந்தமாய் இருப்பது, தான தருமம் செய்தல். சிவபூசை, சிவ விரதங்களை மேற்கொள்ளுதல். ஆன்மீக அறிவோடு இருத்தல் நியமமாகும்.
மனிதர்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளை இந்து மதத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கிறது. இவை நாற்பாதங்கள் அல்லது நன்னெறிகள் என அழைக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதல் இரண்டு படிமுறைகளான சரியையும் கிரியையும் நியமத்தில் அடங்கும்.
சரியை: தூய தெய்வ பக்தியோடு உடலால் செய்யப்படும் தொண்டுகள், இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.
ஆலயங்களில் இறைவனை வழிபடல், திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூப் பறித்தல், பூமாலை தொடுத்தல், சிவனடியார்களுக்குச் சேவை செய்தல், சுவாமி காவுதல்ஆகியவை சரியையில் அடங்கும்.
கிரியை: தூய தெய்வ பக்தியோடு சதா காலமும் இறை சிந்தனையோடு இருந்து பஜனை, தேவாரம் பாடுவது, மந்திரங்களை ஓதி இறைவனை வழிபடுவது, பிரசங்கம் மூலமாக மக்களுக்கு இறை உணர்வை ஏற்படுத்துவது போன்ற இறை தொண்டுகளாகும்.
3. ஆதனம் (ஆசனம்)
உடலைப் பக்குவப்படுத்தி, சக்கரங்களைத் தூண்டி அதன்மூலமாக உள்ளே பிராண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம்
“பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.” – திருமந்திரம்.
விளக்கம்: பத்மாசனம் முதலாக ஆசனங்கள் பல உண்டு, அவற்றுள் சிறப்பாக சொல்லத்தக்கவை எட்டு. அவற்றுள் அனைத்து யோகத்தையும் செய்யச் சிறந்த ஆசனம் சுவத்திகாசனம். சுவத்திகாசனத்திலிருந்து யோகம் செய்தால் சிறந்த தலைவனாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. பின்வரும் பத்து ஆசனங்களும் யோகத்திற்கு ஏற்ற ஆசனங்களாகும். அவையாவன பத்திராசனம், குக்குட ஆசனம், சிம்மாதனம், பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சோத்திரம், வீர, சுகாதனம் ஆகும்.
4. பிராணாயாமம்:
பிராணாயாமம் என்பது பிராணனை அதாவது மூச்சு அல்லது சுவாசத்தினைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாகும். பிராணாயாமக் கலையை வாசிக்கலை என்றும், மூச்சுக்கலை என்றும் அழைப்பர். உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலையாதலால் சித்தர்கள் இதனை “சரகலை” எனவும் கூறுவர்.
நாம் சுவாசிக்கும் சுவாசக் காற்றினை உள்ளே எடுக்கும் வாயுவின் அளவை வைத்து அதாவது அவ்வாயு சுவாசப் பையினை நிரப்பும் அளவை வைத்து பின்வரும் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவையாவன:
- உயர் சுவாசம்.
- மத்திம சுவாசம்.
- கீழ் சுவாசம்.
- முழுமையான சுவாசம்.
உயர் சுவாசம்: என்பதனை கழுத்தெலும்பு சுவாசம் எனவும் அழைக்கப்படும். கழுத்தெலும்பு போன்றவைகளை மேலே உயர்த்துவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றினை உள்ளே இழுக்கும் முறையாகும் நுரையீரலின் மேற்பகுதியில் மட்டுமே காற்று நிரம்புகிறது. குறைந்த அளவு வாயுவே நுரையீரலுக்கு கிடைக்கிறது.
மத்திம சுவாசம்: என்பது விலா எலும்புகளை உயர்த்தி இயக்குவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்வதாகும். இந்த முறையில் காற்று நுரையீரலின் மேல் மற்றும் மத்திய பகுதியில் மட்டுமே நிரம்பும். இம்முறையிலும் குறைந்த அளவு வாயுவே நுரையீரலுக்குக் கிடைக்கிறது
கீழ் சுவாசம்: இதனை ஆழ்ந்த சுவாசம் எனவும் அழைக்கப்படும். மேற் குறிப்பிடட இரு சுவாச முறைகளை விடவும் மேலானது. இந்த முறையில் நுரையீரலின் மேல், மத்திய மற்றும் கீழ் பகுதிகளில் காற்று நிரம்புகிறது. இதில் மார்புக் கூடு, உதரவிதானம், விலா எலும்புகள் ஆகியவை இயங்குவதால் நிகழ்கிறது. சுவாச பயிற்சியின் ஆரம்ப நிலையில் இவ்வாறான சுவாசம் நடைபெறும்.
முழுமையான சுவாசம்: என்பது யோகிகளின் சுவாசம் எனவும் அழைக்கப்படும். இது சுவாசப் பயிற்சியின் அதாவது பிராணாயாமப் பயிற்சியின் மூலம் பெறப்படும் உயர்நிலை சுவாசமாகும். இந்த முறையில் நுரையீரலை முழுமையாக விரிவடையச் செய்வதன் மூலம் அதன் முழுப்பகுதியிலும் காற்றை நிரப்புவதாகும், இதன் மூலம் உடலுக்கு முழுமையான பிராணசக்தி கிடைக்கிறது. இது முறையான தொடர் பிராணாயாமப் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்
“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.” – திருமந்திரம்.
விளக்கம்: ஆன்மா ஐம் பொறிகளின் தலைவன். ஆன்மா உடலுக்கும் தலைவன். அந்த ஆன்மா உய்வதற்கு (கடையேறுவதற்கு) உதவிடவும் மனம் என்னும் குதிரையைக் கட்டுப்படுத்தவும் பிராணன் என்ற ஒன்று உள்ளது. உடலைப் பற்றாமல் பிராணனைப் பற்றி நிற்பவர்களுக்கு (மூச்சினைக் கவனிப்பவர்களுக்கு) அவை (பிராணன் – மூச்சு)) வயப்படும். உடலைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை அகப்படா.
திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – பிராணாயாமம்:
“ஆரியன் நல்ல குதிரை இரண்டு உள
வீசிப் பிடிக்கும் விரகுஅறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே”
விளக்கம்: மனம் என்னும் ஆரியனுக்கு இரு குதிரைகள் உள்ளன அதாவது இரு முக்கிய வாயுக்கள் உள்ளன. அவையாவன பிராணன், அபானன் என்பவை ஆகும். அவற்றைக் கட்டுப்படுத்தும் உபாயத்தை அறிவது மிகவும் கடினம். பிராண ஜெயம் பெற்றுள்ள குருநாதரின் அருள் கிடைத்தால் அவ்விரு வாயுக்களையும் சேர்த்துப் பிடித்து பிராணனைக் கட்டுப்படுத்த மனம் கட்டுப்படும்.
அதாவது வாசியை கட்டுப்படுத்தி மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து துரியத்தை நோக்கிக் கொண்டுவரும் பயிற்சியே பிராணாயாமம் எனப்படும். குண்டலினி சக்தி துரியத்தை எட்டும்போது சகலவித சித்திகளும் கிட்டும்.
பத்து வாயுக்கள்.
மனித உடலில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்துவாயுக்கள் உள்ளன. இவை தசவாயுக்கள் எனவும் அழைக்கப்படும்.
பிராணன்: எனப்படுவது உடலுக்கு ஆதாரமான உயிர்காற்று, இது ரத்த ஓட்டத்திற்கும், சுவாசத்திற்கும் பயன்படுகிறது.
அபானன்: எனப்படுவது குடலில் தங்கும் மலக்காற்று, இது மலத்தினை கீழ்நோக்கிச் செலுத்த உதவுகிறது.
வியானன்: எனப்படுவது மண்ணீரலில் இருந்து நரம்புகளையும், மூளையையும் பலப்படுத்துவது. இதனை தொழிற்காற்று என்றும் கூறுவர்.
உதானன்: எனப்படுவது குரல்வளையில் தொழிற்படுகிறது. இது குரலை, பேச்சை உருவாக்குகிறது. இதனை ஒலிக்காற்று எனவும் அழைப்பர்.
சமானன்: எனப்படுவது உண்ட உணவை சீரணமாக்கி உடலில் செரிக்க செய்கிறது. இதனை நிரவுகாற்று எனவும் அழைப்பர்.
நாகன்: எனப்படுவது நாசியிலிருந்து வெளிப்படும் வேகமான தும்மல் காற்றாகும்.
கூர்மன்: எனப்படுவது விழி காற்றாகும். விழிகளின் அசைவுக்கு உதவும் காற்றாகும்.
கிருகரன்: எனப்படுவது கொட்டாவி வரவழைக்கும் காற்றாகும். தூக்கம் வருவதற்கான அறிகுறியையும், உடலில் பிராணசக்தி குறைதலையும் (களைப்பு) தெரியவைக்கும் காற்றாகும்.
தேவதத்தன்: இதனை இமைக்காற்று எனவும் அழைப்பர். இமைகள் இமைக்க இவ்வாயு உதவுகிறது. இவ்வாயுவை நிமி எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
தனஞ்செயன்: இதை வீங்கல் காற்று எனவும் அழைப்பர். மரணத்தின்போது உடலை விட்டு ஒன்பது வாயுக்களும் வெளியேறிய பின்னர் இறுதியாக வெளியேறும் காற்றாகும். நுண் கிருமிகளால் உடல் வீங்கி வெடிக்கும்போது கடைசியில் வெளியேறும் காற்றாகும்.
5. பிரத்தியாகாரம்
புலன்கள் வாயிலாக வெளிநோக்கிச் செல்லும் மனதை அடக்கி உள்ளேயே நிறுத்துவது பிரத்தியாகாரம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை பண்படுத்தும்.
திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – பிரத்தியாகாரம்.
“கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலு மாமே”.
விளக்கம்: வெளியே அலைந்து பழக்கப்பட்டுவிட்ட மனதை உடலின் உள்ளேயே பொருந்தும்படி செய்தால் சிறிதுசிறிதாக அகஇருள் விலகும். தேடப்படும் பரம்பொருளை நம் உடலின் உள்ளேயே நம்மால் உணரமுடியும்.
“கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.” – திருமந்திரம்.
விளக்கம்: மூலாதாரத்தினை இறுக்கி மனதை அங்கே நிறுத்தி அபான வாயுவை கும்மித்து வெளிப்படாமல் அடக்க, நீர்நிலையில் பெரிய மீனை எதிர்பார்த்து நிற்கும் கொக்கு போல குணடலினி சக்தியானது இடைவாசல் வழியாக அதாவது இடகலை பிங்கலை நாடிகளுக்கு இடையில் இருக்கும் சுழுமுனை வழியாக ஒவ்வொரு ஆதாரங்களையும் கடந்து மேலெழுந்துவந்து ஜோதியுடன் கலக்கும். இதனால் ஊழிக்காலம் வரை உடலை அழியாமல் வைத்துக்கொள்ள முடியும்.
“பிராணசக்தி” அல்லது “பிராணன்”:
இதுவே “வாசி” என அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஆக்ஸிஜன் வாயு எனக் கருதக்கூடாது. பிரபஞ்ச சக்தியே பிராணசக்தி என அழைக்கப்படுகிறது. நாம் உட்சுவாசிக்கும் மூச்சுக் காற்றுடன் பிராணசக்தியும் உட்புகுகிறது. சக்கரங்கள் (ஏழு ஆதாரங்கள்) மூலமாக பிராணசக்தி உள்வாங்கப்படுகிறது. பிராணனைக் கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப் பயிற்சியாகிய பிராணாயாமம் ஆகும்,
இந்த பிராண சக்தியானது, எமது சூட்சும சரீரத்தினால் ஈர்க்கப்பட்டு, ஆதாரங்களில் சேமிக்கப்படுகிறது. இது “நாத சங்கமம்” என அழைக்கப்படுகிறது. பின்னர் எழுபத்துநாலாயிரம் நாடிகளின் வழியாக தச வாயுக்களுடன் இணைந்து தூலஉடல் முழுவதும் பரவுகிறது. இது “பிராண சங்கமம்” என அழைக்கப்படுகிறது. இந்த பிராண ஓட்டம், வெவ்வேறு நாடிகளில் மாறி மாறி ஓடும். அந்த ஓட்டத்தின்படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன செயற்படுகின்றன என்பது சித்தர்களது விளக்கமாகும்.
6. தாரணை
தாரணை – உந்தி, இதயம், உச்சி என்னும் மூன்றிடத்தும் மனதை நிலைநிறுத்தல்.அதாவது கட்டுப்படுத்தப்பட்டு எங்கும் அலைபாயாது அசைவற்றிருக்கும் சித்தமே “தாரணை” எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலை கொள்ளச் செய்யும் செயல் முறைதான் “தாரணை” எனப்படும். சித்தத்தில் இருந்துதான் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன, இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும். இதுவே பொதுவாக தாரணாசக்தி என அழைக்கப்படுகிறது. 12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.
“அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.” – திருமந்திரம்.
விளக்கம்: ஐம்பொறிகளால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஆளப்படும் உடலை ஐம்பூதங்களில் (மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம்) ஒடுக்கவேண்டும். அந்த ஐம்பூதங்களையும் ஐந்து தன்மாத்திரைகளில் (சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம்) அடக்க வேண்டும். ஐந்து தன்மாத்திரைகளையும் நான்கு அந்தக் கரணங்களில் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) ஒடுக்க வேண்டும். நான்கு அந்தக்கரணங்களையும் மாயையில் அடக்க வேண்டும். மாயையை ஆன்மாவில் அடக்கி ஆன்மாவைச் சிவத்தில் ஒடுக்க வேண்டும். ஆன்மா சிவத்துடன் பொருந்தி இருப்பதே தாரணை ஆகும்.
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே – திருமந்திரம்
விளக்கம்: யாவரிடத்திலும் உள்ள மூலாதாரத்தில் ஒரு பெருஞ் செல்வம் உள்ளது. இருந்தும் அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் (திறக்கும் உபாயம் அறியாதவர்) அச்செல்வத்தை அடையமுடியாது. அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராணவாயுவை, அங்கு கும்பகம் செய்து கும்பித்த அவ்வாயுவின் மூலம் குண்டலினி சக்தியினை சுழுமுனை நாடி வழியாக மேலே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய அச் செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக் கருவூலத்தின் வெளியே (புறத்தே) செலுத்தி மூடர் போல அல்லற்படுவர்.
மனிதமனம்
மனித மனமானது மேல்மனம் (வெளிமனம்), ஆழ்மனம் (உள்மனம்), மறைமனம் (செயல்மனம்) என மூன்று அடுக்குகளை உடையது. மேல் மனம் தூல உடலுடனும் ஆழ்மனம் சூக்கும உடலுடனும் தொடர்பில் இருக்கும். மேல் மனத்தையும் ஆழ்மனத்தையும் இணைப்பது இடை மனமாகும். அன்றாட வாழ்வில் மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் இருக்கும், கேள்விகேட்டு விடயங்களை அறிந்துகொள்ளல் மேல் மனதின் செயல்முறை, சிந்திக்கும் வேளைகளில் ஆழ்மனம் செயல்பாட்டில் இருக்கும், உள்மனம் அபார சக்திவாய்ந்தது. பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையது. வெளிமனம் இலகுவில் மறந்துவிடும் தன்மையுடையது. ஆழ்மனதில் எதை ஒருவன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது. மேல்மனம் அனுப்பும் தகவல்கள் அப்படியே ஆழ்மனம் பதிவுசெய்து கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஆழ்மனதின் பதிவுகள் சூல உடலுடன் அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படும். இதனாலேயே சில வேளைகளில் சிலருக்கு முற்பிறப்பு ஞாபகங்கள் வெளிவருகின்றன.
7. தியானம்
உணர்வற்று, உடலற்று, சிந்தனையற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று, பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும். இடையறாது சிவ சிந்தனையோடு இருக்கவேண்டும். அதுவே தியானமாகும்.
வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போக மேவல்;
உருவாய சத்தி பரத்தியானம்; உன்னும்
குரு ஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே– திருமந்திரம்.
விளக்கம்: தாரணையில் குறிப்பிடடவாறு, பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று, புருடன் ஒன்று`ஆகிய பத்து இச்சைகளிலும் இருந்து மனமானது விடுபட்டு தியானத்தில் நிலைக்கும்போது. அதாவது பொறி புலன்கள் நீங்கி இருப்பது தியானம். உச்சியில் ஒளி வடிவாக இறைவனை தியானிப்பின், அது சக்தி தியானமாகும். இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இவை இரண்டும் யோகத்தின் இரு கூறுகளே.
ரமணமகரிஷியின் உபதேசங்களிலிருந்து.
ஒவ்வொரு மனிதரும் தனது பூர்வஜென்ம குண இயல்புகளோடு பிறவி எடுக்கிறார். அவரவர்கள் பக்குவத்திற்கு ஏதுவாக தோன்றும் ஏதோவொரு லட்சியத்தில் மனதை நிலைநிறுத்தத் தொடங்கினால் , அதை எதிர்த்து உள்ளே அடங்கியுள்ள “வாசனைகள்” (எண்ணங்கள்) வெளிக்கிளம்பிப் போர்புரியத் தொடங்கும். ஆனால் அவற்றிற்கு அஞ்சாமல், விடாப்பிடியாக தேர்ந்தெடுத்த லட்சியத்திலோ, தன்னிடத்திலோ மனதை விடாமுயற்சியுடன் நிறுத்தி பழகிவந்தால் எதிர்ப்பின் சக்தி வரவரக் குறைந்து முடிவில் அறவே நீங்கிவிடும். அப்போது ‘சுய அனுபவம்’ தடையின்றி துலங்கும். ‘தியானத்தில்’ இந்தப் போராட்டமே எப்போதும் நிகழ்கிறது. அகந்தை அடங்கும் வரை அதன்போக்கில் செல்லும். ஆன்ம சொரூபம் தடையின்றி விளங்கும் வரை’ விடாமுயற்சி அவசியம். முயற்சி முற்றுப்பெற்ற நிலையே பூரண சகஜானந்த நிலை.
முதன் முதலில் யோகம் கற்று பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு ரமண மகரிஷி கூறும் அறிவுரை.
ஒரு சிறு குழந்தையை முதன்முதலாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது ‘நான் போகமாட்டேன்’ என்று முரண்டுபிடிக்கும். முதலில் குழந்தை பள்ளியில் அழுது அழுது தூங்கிவிடும். பின்னர் பள்ளியை விரும்பத் தொடங்கிவிடும். அதுபோலத்தான் முதன்முதலில் தியானத்தில் அமர்ந்ததும் மனமும் ‘வேண்டாம்’ என்று முரண்டுபிடிக்கும். இருந்தாலும் ஒருநாள்கூட தவறாமல் தியானம் செய்ய வேண்டும். தியானத்தில் மனம்கூட அதுபோலத்தான், தியானத்தில் அமர்ந்ததும் மனமானது சிந்தனைகளுடன் போராடி, போராடி அதிலிருந்து மீண்டுவிடும்.
முரண்டுபடும் ஆடுகளுக்குக் குழையைக் காட்டி அவற்றை எமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் உபாயம்போல மனத்தினையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐயா எமக்கு எப்போதும் வலியுறுத்துவார்.
முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்யும் யாருக்கும் எந்த தேவையற்ற சந்தேகங்களும் தோன்றாது. அப்படி வந்தாலும் தியானத்திலேயே அதற்கான பதில் கிடைத்துவிடும்.
8. சமாதி (முக்தி)
ஆன்மா சிவனுடன் ஒன்றுதல் சமாதியாகும்.
“சமாதிய மாதியில் தான் சொல்லக் கேட்கின்
சமாதிய மாதியில் தான் எட்டும் சித்திக்கும்
சமாதிய மாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதிய மாதி தலைப்படும் தானே”– திருமந்திரம்.
விளக்கம்: அட்டாங்க யோகத்தில் குறிப்பிட்டுள்ள இயமம் முதல் சமாதி வரை கூறப்பட்ட முறையைக் கடைப்பிடியுங்கள். இயமம் முதல் சமாதி வரை உள்ள படிமுறைகளை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கே அட்டாங்க யோகத்தின் கடைசிப் படியாகிய சமாதியும் தானே அமையும். யோகம் முற்றுப் பெறும்.
குரு அவ்வப்போது எமக்கு எடுத்துரைக்கும் ரமண மகரிஷி, திருமூலரது திருமந்திரம் போன்றவற்றிலிருந்து பல யோக விளக்கங்களையும் பெறக்கூடியதாக இருந்தது. அதில் நான் அறிந்து கொண்டவரையும், விளங்கிக்கொண்டவற்றின் சாராம்சத்தினையும் இங்கே பகிர்ந்துள்ளேன்,
யோகத்தில் அதாவது ஆன்மீகத்தில் போதியளவு அறிவும் விளக்கமும் இல்லாதபோது அதில் எமக்கு பூரண நம்பிக்கை வராதபோது, நாம் மேற்கொள்ளும் யோக பயிற்சியில், செய்யும் காரியத்தில் எம்மால் பூரணமக ஈடுபடமுடியாது. அதன் பூரண பலனும் எமக்குக்கிட்டாது.
ஐயா எமக்கு எப்போதும் அறிவுறுத்துவார் யோகத்தில் பயிற்சியின் பூரண அறிவும் விளக்கமும் தேவை. அதனை சிறந்த குருவிடமிருந்து முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும். யோகப்பயிற்சி செய்பவன் குரு சொற்படி ஒழுக்கமானவனாகவும் சீராக பாடங்களை பயிற்சி செய்பவனாகவும் இருக்கவேண்டும்.அப்போதுதான் அவன் யோகத்தில் முன்னேறமுடியும்.
எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் சீடர்களுக்கு எழும் சந்தேகங்களை நேரடியாக கேள்வி பதில் மூலமாக அவ்வப்போது தீர்த்து வைக்கிறார். அதன்போது பல யோக விளக்கங்களையும் வழங்குகிறார். சீடர்களை பக்குவப்படுத்திய பின்னரே அவர்களுக்கு யோக உபதேசம் கொடுக்கிறார்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம்.—