திருமூலர் திருமந்திரம் – பகுதி 1

0 0
Read Time:133 Minute, 35 Second

திருமூலர் திருமந்திரம்

முன்னுரை

திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ் ஆராய்ச்சியாளர்களால் அறியப்படுகிறது. எனினும் இவரால் அருளப்பட்ட திருமந்திரமாலை (திருமந்திரம்) கி . பி 700 ஆம் ஆண்டளவில் திருஞானசம்பந்தரால் காவேரிக்கரையில் அமைந்துள்ள திருவாவடுதுறையில், கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் கொடித்தம்பத்துக்கு கீழே இருந்து எடுக்கப்பட்டு உலகிற்கு வழங்கப்பட்டது. அதனால் சில தற்கால அறிஞர்கள் இவர் வாழ்ந்த காலம் கி.பி 700 எனக் கூறுகின்றனர். திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாகத் தொகுத்துள்ளனர்.

பொதுவாக ஒரு ஆதியான நூல் எந்தக் காலகட்டத்தினைச் சேர்ந்தது என ஆராய்பவர்கள், அந்த நூலைப்பற்றி, அல்லது அந்த நூலில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் எந்தக் காலகட்டத்தில் எந்த எந்த நூல்களில் அல்லது குறிப்புகளில் காணப்படுகிறது என்பதனை ஆராய்ந்து அதன்மூலமாக அந்த நூல் எந்தக் காலகட்டத்தில் எழுதியதாக இருக்கும் என்ற ஒரு முடிபுக்கு வருவார்கள்.

திருமூலரது திருமந்திரம் கி பி 500 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதனை நாம் பிவரும் முறைகளில் கூட ஆராயமுடியும்.

1. திருமந்திரத்தில் சிவன் பார்வதி ஆகிய தெய்வங்கள் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் கி பி 500 ஆம் ஆண்டுகளில் முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு இருந்ததனை அறியக்கூடிதாக உள்ளது.

2. திருமந்திர மூலப்பிரதி மிகவும் தொன்மையான தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கி பி 500 ஆம் ஆண்டுகளின் பின்னர் வாழ்ந்த மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்திநாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகிய சமயப் பெரியோர் மிகவும் இலகுவாக எம்மால் படித்து விளங்கக்கூடிய தமிழில் பாடல்கள் (தேவார திருவாசகங்கள்) எழுதியுள்ளார்கள்.

3. திருமந்திரத்தில் அகத்திய மாமுனிவரைத் தவிர வேறு எந்த முனிவர்களையோ நாயன்மார்களையோ குறிப்பிடப்படவில்லை

திருமூலர் பின்வரும் நூல்களை எழுதியதாக குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அதேவேளை சில தமிழ் ஆராய்ச்சியாளர்கள் திருமூலர் எழுதியது திருமந்திரம் மாத்திரமே ஏனையவை அவரது பெயரில் வாழ்ந்தவர்களால் எழுதப்பட்டவை எனவும் குறிப்பிடுகிறார்கள்.

  • திருமூலர் காவியம் 8000 பாடல்கள்
  • சிற்பநூல் 1000 பாடல்கள்
  • சோதிடம் 300 பாடல்கள்
  • மாந்திரீகம் 600 பாடல்கள்
  • வைத்தியச் சுருக்கம் 200 பாடல்கள்
  • சூக்கும ஞானம் 100 பாடல்கள்
  • சல்லியம் 1000 பாடல்கள்
  • பெருங்காவியம் 1500 பாடல்கள்
  • யோக ஞானம் 16 பாடல்கள்
  • காவியம் 1000 பாடல்கள்
  • தீட்சை விதி 100 பாடல்கள்
  • ஆறாதாரம் 64 பாடல்கள்
  • கருங்கிடை 600 பாடல்கள்
  • கோர்வை விதி 16 பாடல்கள்
  • பச்சை நூல் 24 பாடல்கள்
  • விதி நூல் 24 பாடல்கள்
  • தீட்சை விதி 18 பாடல்கள்

திருமந்திரம், திருமந்திரமாலை எனவும், தமிழ் மூவாயிரம் எனவும், மூவாயிரம் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது.

திருமூலர் எழுதிய திருமந்திரம் இன்றும் எமக்கு ஒரு ஆன்மீக வழிகாட்டியாக இருந்து வாழ்வியல் தத்துவங்களை மிகவும் எளிய முறையில் விளக்குகின்றது. திருமந்திரம் வாழ்வியல் கோட்பாடுகளையும், ஒரு மனிதன் ஞானம் அடையப் பின்பற்ற வேண்டிய படிமுறைகளையும் மிகவும் தெளிவாக விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதல் சாத்திர நூல் அல்லது ஞான நூல் திருமந்திரமாகும். இந்நாளில் பின்பற்றப்படும் யோகப் பயிற்சிகள் யாவும் திருமந்திரத்தில் அடங்கியுள்ள அட்டாங்க யோகம் எனும் பகுதியில் விளக்கப்பட்டுள்ள முறைகளையே பின்பற்றுகின்றன.

திருமந்திரமானது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் தத்துவங்களைப் புரியவைத்து அப்படியே ஞான மார்க்கத்தினைக் கடைப்பிடித்து சிவனுடன் கலக்கும், முக்தியடையும் வழிமுறைகளை விளக்கும் நூலாகும்.

அதாவது மருத்துவம், வாழ்வியல் ஒழுக்கம், தியானம், குண்டலினி யோகம் போன்றவற்றை மிகவும் எளிய முறையில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் விளக்கும் வகையில் பாடல்கள் வடிவில் எழுதப்பட்ட ஞான நூலாகும்.

பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறையை நாடும் வழிமுறைகளைப் புகட்டுவதாகும்.

தற்போது நாம் படிக்கக்கூடியதாக இருக்கும் பல சித்தர் நூல்கள் திருமந்திரத்தின் மூலக்கருத்தினை உள்ளடக்கியனவாக இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கும்.

திருமூலருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் (கி . மு 7000 வருடங்கள்) வாழ்ந்த இன்றும் சூக்கும உடலில் எம்முடன் இவ்வுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அகத்தியரது அகத்தியமும், ஒரு ஆதியான ஞானநூலாகும். திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் அகத்தியம் எனும் பகுதியில் அகத்திய மாமுனிவர் பற்றிய இரு பாடல்கள் எழுதப் பட்டுள்ளது.

அகத்திய மாமுனிவர்: அகத்தியர், ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் மகன் என அறியப்படுகிறது. இவர் சித்த மருத்துவத்தின் தந்தை எனவும், தமிழ் இலக்கியத்தின் தந்தையாகவும், முதல் தமிழ் இலக்கணமாகிய “அகத்தியம்” எனும் நூலை உருவாக்கியவராகவும் போற்றப்படுகிறார். அகத்தியர் பொதிகை மலையில் தங்கி இருந்து தவம் செய்ததாகவும் பல சீடர்களை உருவாக்கியதாகவும், பல நூல்களை தமிழ் மொழியில் எழுதியதாகவும் அறியப்படுகிறது. அகஸ்தியர் வாழ்ந்த காலம் கி.மு 7000 வருடங்கள் என அறியப்படுகிறது.

குறிப்பு:- ஒரு ஞானி அல்லது சித்தர் 100 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தார் எனக் கூறும்பொழுது, அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால் ஆன்மீகவாதிகளால், பல ஞானிகள் பல காலங்கள் வாழ்கிறார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆன்மீகவாதிகள் தனக்குள்ளே தன்னைத் தேடிக் கண்டுகொண்டு, தனது பௌதீக உடலுக்கும் சூக்கும உடலுக்கும் இடையில் உள்ள பந்தத்தினை அறுத்து வைத்திருப்பவர்கள். அதனால் தனது இவ்வுடலை விட்டு சூக்கும உடலுடன் வெளியே சென்று பிரபஞ்சத்தில் சஞ்சரித்து வரும் ஆற்றல் படைத்தவர்கள். அதனாலேயே சில வேளைகளில் சில சித்தர்கள் வானத்தில் பறந்து சென்றதனைப் பார்த்ததாக சில ஆன்மீக வாதிகள் குறிப்பிடுவார்கள்.

இந்தக் கருத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு ஞானி தனது சூக்கும உடல் மூலமாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்று வரலாமே தவிர தனது, இந்த கண்ணுக்குத் தெரியும் சூல உடல் (பௌதீக உடல்) மூலமாக பறக்கவோ அன்றி மிதக்கவோ முடியாது. அது சாத்தியமற்றது.

ஆன்மீகத் தேடலில் மேன்மை நிலையை அடைந்தவர்களுக்கு அவர்களது நெற்றிக்கண் (மூன்றாவது கண்) திறந்துவிடும். நெற்றிக்கண் மூலமாக ஒருவருடைய சூக்கும உடலைப் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்பதுவே அதன் அர்த்தமாகும். ஆனால் இந்நிகழ்வு சாதாரண மனிதர்களது கண்களுக்குப் புலப்படாது.

ஆன்மீகவாதிகள் அதாவது சித்தர்கள், முனிவர்கள் தவ நிலையில் இருக்கும்போது தன்னை மறந்த நிலையில் பல காட்சிகள் தென்படும். பல ஒலிகளை உணருவார்கள். அப்படியான காட்சிகளில் இருந்து உருவமைக்கப்பட்டதே பல தெய்வ வடிவங்களும் அதன் தத்துவங்களும் ஆகும். இப்படியாக விசுவாமித்திரர் என்ற முனிவர் தவநிலையில் இருந்து அறிந்த மந்திரமே காயத்திரி மந்திரமாகும்.

தியானம் தவம் என்பதன் விளக்கம்

வெளிப்புறமாக கடவுளை ஆலயங்களை சென்று தரிசிப்பவர்கள் பக்தர்கள் என அழைக்கப் படுவார்கள். இவர்கள் தனக்குள் இறைவனைத் தேட ஆரம்பித்து ஒரு குருவிடம் இருந்து ஆன்மீகம் கற்று பயிற்சிகள் செய்து வரும்போது ஆன்மீகவாதிகள் என அழைக்கப்படுவார்கள். ஆன்மீகப் பயிற்சியின்போது தன்னை மறந்த நிலையில் இருப்பது தியானம் எனப்படும். அதாவது ஆன்மீகப் பயிற்சியின் போது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் தன்னை மறந்த நிலையில் இருப்பது தியானம் எனப்படும். படிப்படியாக முன்னேறி, தொடர்ந்து பல மணி நேரங்கள், பல நாட்கள், மாதங்கள், வருடங்கள், எனத் தன்னை மறந்த நிலையில் இருப்பது தவம் எனப்படும். தியானம்தான் தவம் ஆகிறது.

இடைவெளி இல்லாத, தியானத்தின் நீண்ட நிலைதான் தவம் எனப்படும்.

தவ நிலையில் சில வேளைகளில் சந்திரன், பிறைச் சந்திரன், சூரியன் போன்ற காட்சிகள் தென்படும். இதிலிருந்தே சிவனின் தலையில் சந்திரன் அல்லது பிறைச்சந்திரன் இருப்பதாக சிவன் வர்ணிக்கப் படுகிறார். அதுமட்டுமல்ல இஸ்லாமியர்கள் பிறைச் சந்திரனை வணங்குவதற்கும் இப்படியான ஆன்மீகத் தத்துவங்களே காரணமாகும். ஒருமனிதன் புறவழிபாட்டில் அதாவது பக்தி மார்க்கத்தில் பயணம் செய்யும்போது பல மதங்கள் சார்ந்ததாக வாழ்வான். ஆனால் அவன் அகவழிபாட்டில் அதாவது ஆன்மீக வழியைப் பின்பற்றும்போது மதங்கள் மறந்துபோய் தெய்வம் என்பது ஒரு வடிவமற்றது, மதமற்றது, ஜோதிவடிவானது என்ற உண்மை நிலை புரியவரும்.

சாதாரண மனிதர்களுக்கு இப்படியான கருத்துக்கள் நம்பகத் தன்மை அற்றதாகவே ஒரு முட்டாள் தனமானதாகவே தோன்றும். அதிலொன்றும் தவறில்லை.

விஞ்ஞானம் வளர முன்னரே பல சித்தர்கள் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டறிந்து, அவை இந்த மானுட உடலுக்கு எவ்வாறு நன்மை, தீமை செய்கின்றன எனக் கண்டறிந்து சாஸ்திரங்களை எழுதியுள்ளனர். ஒரு சிலரால் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப் படாவிட்டாலும், பலரால் சாஸ்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்ற பழமொழி போல, நூல்களைப் படிப்பதனால் மட்டும் ஒரு கருத்து உண்மையா அல்லது இல்லையா என்று ஒரு முடிவுக்கு வரமுடியாது, ஆனால் ஆன்மீகத்தினுள் சென்று பயிற்சிகள் செய்து முன்னேறும்போது மாத்திரமே இக்கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும்.

தமிழகத்திலே இன்றும் பல சித்தர்களது ஜீவ சமாதிகள் இருக்கின்றன. ஜீவ சமாதி என்பது ஒரு ஆன்மீகவாதி உயிருடன் ஒரு குழியினுள் அல்லது குகையினுள் அல்லது மரங்களுள் புகுந்து இருந்து தவம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்ட உடலானது மிக மிகக் குறைந்த செயற்பாட்டுடன் பலகாலம் அழியாமல் இருக்கும். இதுவே ஜீவ சமாதி எனப்படும். அச் சமாதிகளுக்குச் செல்பவர்களுக்கு அவர்களிடம் இருந்து நிவாரணம் (பதில்) கிடைக்கும்.

இவ்வாறே அகத்தியர் இன்றும் வாழ்கிறார் என்பதும், திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும், ஒளவையார் திருவள்ளுவரது சகோதரியாக கி மு 700 ஆம் ஆண்டளவில் ஆதி பகவானுக்கு இரண்டாவது மகளாகப் பிறந்து, வாழ்ந்து அவரது இளைய சகோதரனான கடையேழு வள்ளல்களில் ஒருவனாகக் கருதப்படும் அதியமான் நெடுமானஞ்சி – தகடூரை ஆண்ட குறுநில மன்னன் – கொடுத்த நெல்லிக்கனியை உண்டு பல காலம் அதாவது கி பி 700 ஆம் ஆண்டுவரை சுந்தர மூர்த்திநாயனார் வாழ்ந்த காலம் வரை வாழ்ந்தார் என்பதும் புராணங்கள், ஆராய்ச்சிகள் கூறும் வரலாறு.

ஆன்மீகத்தினை முழுமையாகப் புரிந்து கொள்ளாத தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வின் முடிவில் “அவ்வப்போது அதாவது பல காலகட்டங்களில் பல புலவர்கள் ஒளவையார் எனும் பெயரில் வாழ்ந்தார்கள்” எனக் குறிப்பிடுகிறார்கள்.

திருமூலர் திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரம் – கேசரி யோகம் எனும் பகுதியில் பின்வரும் பாடலில் ஒருவர் முக்தி நிலை அடையும் பொழுது அவரது உடல் இளமைத் தோற்றம் அடைகிறது எனவும் மற்றும் அவரது வாழ்நாள் பல காலங்களுக்கு நீடிக்கப் படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – கேசரி யோகம் – பாடல் 805

விளக்கம்: வாயின் உட்புறத்தே அமைந்துள்ள அண்ணாக்கின் (உள்நாக்கு, குட்டி நாக்கு) பகுதிக்கு பிராணனை (பிராணன் என்பது பொதுவாக மூச்சுக்காற்று எனக் குறிப்பிட்டாலும் உண்மையில் மூச்சுக் காற்றில் கலந்துள்ள பிரபஞ்ச சக்தியே பிராணன் எனப்படும்) வேகமாகச் செலுத்தி பயிற்சி செய்து வந்தால், இந்த உடலையும் பிரபஞ்சத்தினையும் இணைக்கும் துரிய சக்கர வாசல் (மேலுலகத்து வாசலும்) திறந்திடும். அதாவது முக்தி நிலை கிடைக்கும். அப்போது யம பயம் (மரண பயம்) அற்றுப் போகும். மூப்பு நிலை அடையும் உடலும் நரை, திரை நீங்கி, உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணம் உறுதியான, நீண்டகாலம் வாழும் இளமைத் தோற்றத்தை அடையும். இது எனது குருவான நந்தி தேவர் மீது ஆணையாகும் (சத்தியமாகும்)

இன்னும் விளக்கமாகக் கூறப்போனால் திருக்குறளை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியதில் திருவள்ளுவரின் சகோதரியாகிய ஒளவையாருக்குப் பெரும் பங்கு உண்டு என்பதும், ஞானக்குறளை எழுதியவர் ஒளவையார் என்பதும், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒளவையார் சுந்தரருடன் கைலாசம் செல்ல விரும்பி விநாயகருக்கு அவசரத்தில் பூசைசெய்ய, விநாயகர் அவரிடம் “பூசையை வளமை போலச் செய், நான் உனக்கு முக்தி அடையும் வழியினைக் கூறுகிறேன்” என்று கூறி அவரைப் பூசை செய்யவைத்து முக்தி அடையும் வழியைக் கூறியதாகவும், அதுவே ஒளவையார் எழுதிய “விநாயர் அகவல்” என்பதும் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிபுகளாகும்.

இன்றைக்குப் பல வருடங்களுக்கு முந்திய அதாவது 5000, 10000 ஆண்டுகளுக்கு முந்திய நூல்களது வரலாற்றினை துல்லியமாக வரையறுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

பொருளாதார வசதியின்மையும் பலர் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும்.

அது மட்டுமன்றி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மொழி (தமிழ், சமஸ்கிருதம்), மதம் (சைவம், வைஷ்ணவம்), சாதி வேறுபாடுகளையும் தமது கருத்தில் கொள்வதும் ஆராய்ச்சிகள் தெளிவான முடிபுகள் இன்றி பலம் இல்லாமல் போவதற்கு ஒரு காரணமாகும்.

உதாரணமாக திருமூலர் திருமந்திரத்தில் பின்வரும் பாடலில் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று கூறியிருக்கிறார்.

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – இதோபதேசம் – பாடல் 2104

விளக்கம்: ஒன்றே குலம். அதாவது உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற எந்த வேறுபாடும் இல்லை. மனித குலம் என்று ஒன்றே உள்ளது. எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். பல கடவுள்கள், பல மதப் பிரிவுகள் என்று எதுவுமே இல்லை. ஒரே கடவுள் தேவன் (சிவன்) மட்டுமே. அவனையே நம்பி வணங்குங்கள். எப்போதும் நல்லதையே நினைத்திருங்கள். நல்லதையே செய்யுங்கள். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும். எப்போதும் உங்களுடைய சித்தத்தில் நல்லதை நினைப்பதை தவிர வேறு எண்ணங்கள் வேண்டாம். அப்படியே வாழ்ந்து முத்தியை அடையுங்கள்.

ஆனால் திருமூலரது வரலாற்றினை ஆராய்ந்த, ஆராயும் சில ஆராய்ச்சியாளர்கள் திருமூலர் இந்தக் குலத்தினைச் சேர்ந்தவர் எனவும், சுந்தரநாதர், இடையர் குலத்தினைச் சேர்ந்த மூலன் என்பவனின் உடலில் புகுந்து வாழ்ந்தார் போன்ற குலங்களையும், சைவமதம், இந்துமதம்போன்ற மதப்பிரிவுகளையும் அதாவது திருமூலர் கூறாத சில கருத்துக்களை ஆராய்ச்சியாளர்கள் இணைத்தே எழுதுகிறார்கள். இப்படியான காரணங்களும் இந்த தமிழ் ஆராய்ச்சிகள் சரியான முறையில் முடிபுகள் தெளிவான வரலாற்றுக் காலகட்டங்கள் வெளிவராமல் இருப்பதற்கு உரிய மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஒருவன் தனக்குத் தெரிந்த ஒரு கலையை பிறருக்குத் தெரியாதவாறு தனது சந்ததிக்கு மட்டுமே அவன் கற்பித்தபோது (சுயநலம்) சாதி உருவானது. ஒருவன் தனது வழிகாட்டியாக ஒரு அறிஞனை அவன் ஏற்றுக் கொண்டபோது மதங்கள் உருவானது.

திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை எனவும், 19 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. வேறு வேறு ஆசிரியர்களால் மொழிபெயர்ப்பு, உரையாக்கம் போன்றன வேறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

குறிப்பு: நானும் பல தமிழ் பண்டிதர்கள், தமிழ் மேலோர்களுடன் பல கருத்துக்களைப் பலமுறை விவாதித்திருக்கிறேன். இருந்தும் ஒவ்வொருவரும் தத்தமது மதம் சார்ந்த குலம் சார்ந்த கருத்துக்களில் இருந்து விடுபடுவதாக இல்லாத சந்தற்பங்களாகவே அமைந்தது. இப்படிப்பட்ட மனப்பான்மைகளினாலேயே தமிழர்களது பண்டைய நாகரீகங்கள், ஆராய்ச்சிகள் (சித்தர்களது, முனிவர்களது கருத்துக்கள் ஆக்கங்கள்) உலக அளவில் வெளிவராமல் போய்விட்டதுதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.)

உதாரணமாக அணுவைப் பற்றிய கருத்துக்களை திருமூலர், ஒளவையார் போன்ற பல தமிழ் சித்தர்கள் அந்தக் காலத்திலேயே விளக்கி இருக்கிறார்கள்.

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – பிராணன் பாடல் 2008

விளக்கம்: அணுவுக்குள் அணுவாக இருக்கும் அதாவது அணுவை உடைத்து அதில் ஒரு துகளை ஆயிரம் துண்டுகளாக வெட்டி அதில் ஒரு துகளை (இன்றய நவீன விஞ்ஞானத்தில் முழுமையாகச் சாத்தியமற்றது) அச்சிறிய துகளினை அறியும் ஆற்றல் கொண்டவர்களுக்கே அந்தப் பரம்பொருளை (சிவனை) அடையும் தகமை கிட்டும். (ஆன்மீகத்திலேயே இது சாத்தியம்) எனக் குறிப்பிடுகிறார்.

ஒளவையார் எழுதிய விநாயகர் அகவலில் “அணுவுக்கு அணுவாகி அப்பாலுக்கு அப்பாலாய்” என்றொரு வரி வருகிறது. அதாவது அணுவுக்குள் அணு உள்ளது என்று பொருளாகும்.

ஒளவையார் திருக்குறளைப் பற்றிக் கூறும்பொழுது “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” எனக் குறிப்பிடுகிறார். அதாவது மிகச் சிறிய துகளான அணுவைத் துளைக்கும் போது அதனில் இருந்து எழும் மாபெரும் சக்தியினுள் ஏழு கடல்களைச் செலுத்தும் ஆற்றல், திறன் ஏற்படும், அதுபோல திருக்குறளும் இரு வரியில் மிகப்பெரிய தத்துவத்தைப் விளக்குகிறது என்று அர்த்தமாகும். எனக் குறிப்பிடுகிறார்.

இதிலிருந்து ஒளவையார் அணு என்ற சொல்லையும், அணுவைப் பிளக்கும் போது ஏற்படும் அணுவின் ஆற்றலையும் கி பி 600 ஆம் ஆண்டுகளிலேயே துல்லியமாக விளக்கியிருக்கிறார்.

ஆனால் அணுவைப் பிரிக்க முடியும் எனும் தத்துவத்தை மேற்கத்திய விஞ்ஞானிகள் கி. பி 1700 ஆம் ஆண்டுகளின் பின்னரேயே எடுத்துரைத்தார்கள்.

இப்படியான தமிழர்களது முயற்சியின்மை, ஆர்வமின்மை, மத, சாதி கலாச்சாரத்தினுள் மூழ்கி இருப்பது போன்ற காரணங்களும், இந்த உலகில் முதலில் தோன்றிய தமிழ் மொழியும், பல நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய தமிழ் ஆதி நூல்களும் மங்கிப் போனதற்கு ஒரு காரணமாகும்.

மிகவும் தொன்மையான சிதம்பரம் கோவிலையும் அத அதன் சிறப்பம்சங்களையும் ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் பல வியத்தகு உண்மைகளை இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக

  • சிதம்பரம் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியாக அமைந்துள்ளது.
  • நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் பிரபஞ்ச அசைவு எனக் கருதப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதனை பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர்.
  • சிதம்பரம் நடராசர் கோயில் அமைப்பு மனித உடலை ஒத்ததாக அமைக்கப் பட்டுள்ளது.
  • கோவிலின் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக்கூடிய ஒன்பது (நவ) துவாரங்களைக் குறிக்கின்றது.
  • மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இருந்து சற்று இடதுபுறமாக நகர்ந்து இருக்கிறது.
  • கருவறைக்கு (நடராசர் சன்னிதி) ஐந்து படிகள் ஏற வேண்டும், இந்தப் படிகள் ‘பஞ்சாட்சர படி’ என்று அழைக்கப்படுகின்றது, அதாவது ‘சி,வ,ய,ந,ம’ என்ற ஐந்தெழுத்து மந்திரமே அவையாகும் என்பதனை உணர்த்துவதாக இது உள்ளது
  • கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் (விமானத்தின்) மேலிருக்கும் கூரை 21,600 தங்கத் தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது ஒரு மனிதன் ஒரு நாளைக்கு (24 மணித்தியாலம்) சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறார் என்பதனைக் குறிக்கின்றது.
  • மேற்படி 21,600 பொற்தகடுகளை இணைக்க, 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 72,000 என்ற இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த சூக்கும நாடிகளைக் குறிக்கின்றது.
  • இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.

அக்காலத்தில் எமது சித்தர்கள் ஞானிகள் துல்லியமாகக் கூறியிருக்கும் பல விடயங்களை இன்றைய அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் நாம் அறிந்து கொண்டிருக்கிறோம், இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்

“படைத்தவனை ஆராய்வது ஆன்மிகம், அவனது படைப்புக்களை ஆராய்வது விஞ்ஞானம்.”

திருமூலர் எழுதிய திருமந்திரம் மிகவும் ஆதியான தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது. அத் தமிழினை எல்லோராலும் இலகுவாக வாசித்து அறிந்து கொள்ள முடியாது. பல தமிழ் அறிஞர்கள் தற்காலத்துத் தமிழ் இலக்கியத்துக்கு அமைய மொழி பெயர்த்துள்ளார்கள். (அக்காலத் தமிழில் இருந்து தற்காலத் தமிழ்). எனவே நாம் தற்போது படிக்கும் திருமந்திரப் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்ட பாடல்களே. தற்காலத்துத் தமிழ் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு அச் செய்யுளுக்கு உரை (கருத்து) வழங்கும்போது அந்தந்தத் தமிழ் அறிஞர்களது ஆன்மிக அறிவுக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் ஏற்றவாறு உரைநடை (மொழி பெயர்ப்பு) அமைந்துள்ளதாகவும் சில கருத்துக்கள் உண்டு.

ஆதியான நூல்களை பற்றிய ஆய்வைச் செய்யும்போது அதில் குல, மொழி, இன, மத, அரசியல், தாழ்வுணர்ச்சிகளை கலந்திடாது வெளிப்படையாக உரை எழுதவேண்டும். அதுவே உண்மையான கருத்துக்களை, தத்துவங்களை வெளிக்கொணரும். அதுவே பலருக்கும் பயன் தரும், பல தலைமுறைகளுக்கும் சென்றடையும்.

இவ்விடத்தில் நாம் இன்னொரு உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆகம நூல்களை ஆராய்ச்சி செய்து உரை எழுதும் தமிழ் அறிஞர்களுக்கு போதிய ஆன்மீக அறிவு இல்லாதிருக்குமானால், அவர்களால் அந்த ஆராயும் நூல்களுக்கு துல்லியமாக உரை எழுத முடியாமல் போய்விடும் என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.

உதாரணமாக பலர் தமிழர்கள், இந்துக்கள் தினமும் “கந்தசஷ்ட்டி கவசம் படிப்பார்கள்.

கந்தசஷ்டி கவசத்தில்

“குண்டலியாம் சிவ குகன் தினம் வருக” என்றொரு வரி வருகிறது. இதன் பொருள் “மூலாதாரம் என்னும் சக்கரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியின் வடிவமாகிய சிவனின் மகனாகிய குகனே (முருகா) தினந்தோறும் வருக” என்பதாகும். மூலாதாரச் சக்கரம், குண்டலினி சக்தி என்றால் என்னவென்றே பொருள் தெரியாமல் பலர் தினமும் பாராயணம் பண்ணுகிறார்கள். எல்லோரிடமும் பக்தி உள்ளது கந்தசஷ்டி கவசத்தில் நம்பிக்கை உள்ளது ஆனால் போதிய அளவு ஆன்மீக அறிவு இல்லாமல் இருப்பதே அதன் பொருள் தெரியால் போனதற்குக் காரணமாகும். அதில் எந்தத் தப்பும் இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட நூல்களுக்கு உரையெழுத்தும் ஆன்மீக அறிவு இல்லாத தமிழ் அறிஞர்களால் துல்லியமான முறையில் அதன் பொருளை வெளிக்கொணர முடியாமல்ப் போய்விடும் என்பதே நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்.

ஆன்மீகமும் தமிழும் இணையும் போதுதான் சித்தர்களின் தத்துவம் முழுமை பெறுகிறது. பொதுவாக மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் (மதம், கலாச்சாரம், பாரம்பரியம்) இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உலகில் தமிழ் மொழியைத் தெய்வ (பக்தி) மொழி என அழைப்பர். புராதன ஆகமங்கள் இதிகாசங்கள் எனப் பல பக்தி இலக்கியங்கள் தமிழ் மொழியில் தமிழ் சித்தர்களால் கூறப்பட்டவை. ஆன்மீகத்தினை முழுமையாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் தமிழ் அறிவு மிகவும் இன்றியமையாதது. இன்று உலகமெல்லாம் பரவி இருக்கும் ஆன்மீகம், ஆன்மீகப் பயிற்சிகள் யாவும் திருமந்திரத்தில் கூறப்பட்ட பயிற்சி முறைகளையே சிறு சிறு திரிபுகளுடன் பின்பற்றப் படுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இயேசுநாதர் அவரது காலத்தில் இந்தியா வந்து ஆன்மீகம் பயின்றார் என்றொரு கருத்தும் உள்ளது.

நக்கீரர் எழுதிய “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்களாக தொடர்து நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

தமிழின் முதற் சங்கம் “முதற் சங்கம்” என அழைக்கப் படுகிறது இந்தக் காலகட்டம் கடலடியில் உள்ள தென்மதுரையில் கி.மு 6000 ஆம் ஆண்டளவில் நடைமுறையில் இருந்ததாகவும் அகஸ்தியர், வேறும் சில புலவர்கள் மூலமாக “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்கள் எழுதப்பட்டதாகவும் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அந்த நூல்கள் எமக்கு கிடைக்கப் பெறவில்லை.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் “இடைச் சங்கம்” என அழைக்கப்படுகிறது. இச் சங்கம் லெமூரியாக் கண்டத்தில் “கபாடபுரம்” எனும் நகரத்தில் கி.மு 3700 ஆண்டளவில் இயங்கியதாகவும் ” அகத்தியம், தொல்காப்பியம், தபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இதில் “அகத்தியம், தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் “கடைச்சங்கம்” என அழைக்கப்படுகிறது. இன்றைய மதுரையில் கி.மு 1850 ஆம் ஆண்டளவில் இயங்கியதாக வரலாறு. “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இக்காலகட்டத்தில் அரங்கேற்றப்பட்டன.

முதற் சங்கம் கி மு 6000 ஆண்டளவில் இயங்கி இருந்தால், அக் காலகட்டத்தில் தமிழ், இலக்கிய வடிவமாக இருந்ததனை அறியக் கூடியதாக உள்ளது. அப்படிப் பார்க்கும் போது ஒரு மொழி இலக்கிய வடிவம் பெற அதாவது பேச்சு மொழியாக இருந்து எழுத்து மொழியாகப் பரிணமித்துப் பின்னர் இலக்கிய வடிவம்பெற எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும். அப்போ தமிழ் மொழியின் தொன்மை எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது எமக்குப் புரிகிறதல்லவா.

வரலாற்றுக் குறிப்புக்களின்படி கி மு 9000 ஆண்டளவில் முருகர் என்ற சித்தர் வாழ்ந்ததாகவும் இவரே முருகக்கடவுள் எனவும் ஒரு குறிப்பு உள்ளது. கி மு 7000 ஆண்டளவில் அகத்தியார் வாழ்ந்த காலகட்டம் எனவும், கி மு 5000 வருடங்கள் திருமூலர் வாழ்ந்த காலம் எனவும், கி மு 1000 ஆண்டுகள் திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோர் வாழ்ந்த காலகட்டம் எனவும் அறியப்படுகிறது.

சைவம் சமயம் / இந்து மதம் (சமயம்):

சைவம் சமயம்: மனிதர்கள் (தமிழர்கள்) கடவுளை நம்பிய ஆரம்ப காலத்தில் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட பொதுப்படையான (மந்திரங்கள் அற்ற) ஒரு சமய வழிபாடு ஆகும்.

இந்துமதம் (சமயம்): இந்து மதம் என்பது வேதங்களை (மந்திரங்களை) தமது அடிப்படை நூலாக ஏற்றுக் கொண்ட, தனித்தனிக் கடவுளை முழுமுதலாகக் கொண்ட மத வழிபாடாகும். பாரம்பரிய நம்பிக்கைகள், வழிபாடுகள், ஆகமங்கள், இதிகாசங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கடவுள் வழிபாடே இந்துமதம் ஆகும்.

இந்து மதத்தில் பிறந்து முக்திநிலை அடைந்து, பின்னர் அவர்களை வழிபாட்டுத் தலைவர்களாகக் கொண்ட அவர்களது கொள்கைகளை பின்பற்றிய பல மதங்கள் உள்ளன. உதாரணமாக பௌத்த சமயம், சமண சமயம் ஆகும்.

கௌதம புத்தர் இந்து மதத்தில் பிறந்து பின்னர் ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றி முத்திநிலை அடைந்து, ஆன்மீகப் போதனைகள் கொடுக்கும் போது அவரது வழியைப் பின்பற்றியவர்கள் பௌத்தர்கள் என அழைக்கப் படுகிறார்கள்.

அதுபோல மகாவீரர் இந்து மதத்தில் பிறந்து பின்னர் முத்திநிலை அடைந்து ஆன்மீகப் போதனைகள் கொடுக்கும்போது அவரது வழியைப் பின்பற்றியவர்கள் சமணர்கள் என அழைக்கப் படுகிறார்கள்.

இப்படியாக இந்து மதத்தில் பல உட்ப்பிரிவுகள் அல்லது அதிலிருந்து பிரிந்த பல மதப் பிரிவுகள் உண்டு

இந்து சமயப் பிரிவுகள்

  • சைவம் – சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
  • வைணவம் – விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
  • சாக்தம் – சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
  • கௌமாரம் – முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு
  • காணாதிபத்தியம் (கணாபத்தியம்) – விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
  • சௌரம் – சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
  • சுமார்த்தம் – சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு. மேலுள்ளவற்றில் முதல் ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது சுமார்த்தம்.

இவ்வுலகில் உயிரினத் தோற்றம், ஆதிமனிதன், தமிழர்கள் மற்றும் தமிழ் வரலாற்றினை ஆராயும்போது நாம் லெமூரியாக் கண்டத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

லெமுரியா கண்டம்

இவ்வுலகத்தில் முதலில் தோன்றிய கண்டம் லெமுரியா கண்டம் எனவும் அது பின்னாளில் சுனாமி, நிலஅதிர்வு போன்ற பல காரணிகளால் உடைந்து, பிரிந்து தற்போதுள்ள ஐந்து கண்டங்களாக மாறியதாகவும் உலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன் தற்போது உள்ள அனைத்துக் கண்டங்களும் ஒரே நிலப்பரப்பாக (லெமுரியா கண்டம்) இருந்தன என்றும், அதன்பின்பு, சுனாமி, நிலஅதிர்வு, பூகம்பம் காரணமாக வெவ்வேறு கண்டங்கள் உருவானது என்பதுவும் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் நிரூபிக்க முடியாத ஒரு கோட்பாடாகும்.

குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. இக்கண்டமானது குமரிக்கண்டம், குமரிநாடு என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

குமரிக்கண்டமானது பாண்டியன் இராச்சியம், மேருமலை, ஒல்லிநாடு, பெருவளநாடு, தென்மதுரை, முத்தூர், பெருஆறு, குமரிஆறு ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்ததாக குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

குமரிக்கண்டமானது உயிரினம் வாழக்கூடிய தட்ப வெப்ப காலநிலைகளைக் கொண்டிருந்ததனால், இந்த நிலப்பரப்பிலேயே உயிரினங்கள் ஆரம்பத்தில் தோன்றியதாகவும், அவ்வாறே மனித இனம் தோன்றியதாகவும், அங்கேயே முதல் மொழி தமிழ், சிவனை முழுமுதலாகக் கொண்ட முதல் மதம் சைவ சமயம் தோன்றியதாகவும் அறியப்படுகிறது.

தமிழ் விரும்பிகள், அறிஞர்களிடம் இந்தக் கேள்விகளை விட்டுவிடுவோம்.

திருமந்திரம்

கி மு 5000 ஆம் ஆண்டளவில் திருமூலரால் “திருமந்திரமாலை” எனும் பெயரில் ஏடுகளில் எழுதப்பட்டு தமிழகத்தின் காவேரி ஆற்றின் தென் பகுதியில் திருவாவடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ள கோமுக்தீசுவரர் எனும் திருக்கோவிலில் கொடித் தம்பத்துக்குக் கீழாகப் புதைத்து வைக்கப் பட்டதாகவும் பின்னர் கி.பி 700 ஆம் ஆண்டளவில் அங்கு சென்ற திருஞானசம்பந்த நாயனாரினால் வெளிக்கொணரப்பப்பட்டு “திருமந்திரம்” எனப் பெயரிடப்பட்டு இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்தப் பட்டதாகவும் வரலாறு. திருமந்திரமே சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு தமிழில் படைக்கப்பட்ட சைவ சித்தாந்தத்தின் முதல் ஆகம நூலாகக் கருதப்படுகிறது. இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும் அழைக்கப் படுகிறது.

10 ஆம் நூற்றாண்டளவில் ஒழுங்கற்று இருந்த சைவ சமய நூல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டது. திருமந்திரம் சைவத் திருமறைகளுள் பத்தாந்திருமுறையாக இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: ஆகமம் என்றால் முனிவர்கள், சித்தர்களால், தவமிருந்து ஆராய்ந்து, அறிந்து எழுதிய இந்தப் பிரபஞ்சக் கோட்பாடுகளை விளக்கும் நூல்களாகும். அதாவது ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் கலாச்சாரம், மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, வழிபாட்டு முறைகள், மந்திரங்கள் ஆகியவை அடங்கிய நூல்களாகும். பண்டைய மரபையும், அதன் சடங்குகள் சார்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியது. உலகம் தோன்றியதில் இருந்து ஆன்மா, உயிரினம் பிறப்பெடுத்த தத்துவத்தினையும், இவ்வுலகில் எப்படி வாழவேண்டும், மீண்டும் அந்த ஆன்மா எப்படி அந்த மூலத்துடன் இணைந்து கொள்ளும் போன்ற தத்துவங்களையும் விளக்கும் நூல்களாகும். இவை வாய்மொழியாகவும், நூல்களாகவும் (ஏடுகளாக) நம்மை வந்தடைந்துள்ளன.

குறிப்பு: இவ்விடத்தில் நாம் இன்னொரு கருத்தினையும் கவனத்தில்க் கொள்ள வேண்டும். திருமூலர் எழுதிய பாடல்கள் ஏடுகள் வாயிலாக சாதாரண பொதுமக்களுக்கு திருஞான சம்பந்தர் மூலமாகக் கிடைத்தது. ஆனால் திருமூலர் தமது நேரடியான சீடர்கள் (மாலாங்கன் உட்டபட 8 சீடர்கள்) மூலமாக, குரு சிஷ்ய முறைப்படி அவரது உபதேசங்கள் வழிவழியாக சித்தர்கள் மூலமாக பின்பற்றப்பட்டுக் கொண்டே வந்தது. திருமூலரது வழிவந்தவர்களுள் 18 சித்தர்களும் அடங்குகிறார்கள்.

குரு சிஷ்ய பரம்பரை மூலமாக ஒரு குரு தனது சீடனை பக்குவப்படுத்திய பின்னரே பல சூக்குமமான ஆன்மீக விடயங்களை சீடனுக்கு உபேதேசிப்பார். அந்தச் சீடன் மூலமாக பொதுமக்களுக்கு கருத்துக்கள், நன்மைகள் சென்றடையும். ஆனால் ஒருவன் பக்குவப்படாத மனநிலையில் இருக்கும்போது அவனது கைகளில் பல சூக்கும விடயங்கள் சென்றடையும்போது அவன், தான் அறிந்துகொண்ட விடயங்களை பிறரைத் துன்புறுத்துவதற்குக் கூடப் பயன்படுத்த முடியும். இப்படியான மனிதர்களால் கைக்கொள்ளப் படுவதே பில்லி சூனியம், வசியம், ஏவல் போன்ற மாந்திரீக முறைகளாகும். இப்படியான காரணங்களாலேயே ஒரு குரு, பல ஆன்மீக, சூக்கும விடயங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. திருமூலர் தனது ஏடுகளை கொடித் தம்பத்துக்குக் கீழாகப் புதைத்து வைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

திருஞான சம்பந்தரால் இவ்வுலகுக்கு வெளிக்கொணரப்பட்ட திருமந்திரம் பத்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு முதல் அத்தியாயம் “பாயிரம்” எனவும் மிகுதி அத்தியாயங்கள் “தந்திரம்” எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது.

ஒவ்வொரு தந்திரங்களும் உப பிரிவுகளாக வகுக்கப்பட்டு அவை அதிகாரங்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளன. அதாவது ஒன்பது தந்திரங்கள், அதனுள் 232 அதிகாரங்கள், அதனுள் எல்லாமாக 3100 செய்யுள்கள் (பாடல்கள்) அடங்கியுள்ளன.

பாயிரத்தில் முதலாவது பாடலாக விநாயகர் துதி அமைந்துள்ளது. அதாவது திருமந்திரத்தில் இந்த விநாயகர் துதி எழுதப் பட்டிருக்கவில்லை எனவும் பின்னாளில் ஆகம மரபுப்படி உரை எழுதுபவர்களால் (மொழி பெயர்த்தவர்களால்) இங்கு விநாயர் துதி இணைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி திருமந்திரத்தில் விநாயகர் மற்றும் முருகக்கடவுள் பற்றிய பாடல்கள் எதுவும் எழுதப்படவில்லை என்பதுவும் கருத்திற் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல திருமூலர் தனது பாடலில் தான் 3000 பாடல்கள் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே மேலதிகமாக 100 பாடல்கள் உரை எழுதியவர்களால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சான்றோர் கருத்தாகும்.

பாயிரம்

முதல் செய்யுள் காப்பு என அழைக்கப்படும். ஒன்பது தலைப்புகளில் (அதிகாரங்கள்) பாடல்கள் அடங்குகின்றன.

  • காப்பு
    • கடவுள் வாழ்த்து
    • வேதச் சிறப்பு
    • ஆகமச் சிறப்பு
    • குரு பாரம்பரியம்
    • திருமூலர் வரலாறு
    • அவை அடக்கம்
    • திருமந்திரத் தொகைச் சிறப்பு
    • குருமட வரலாறு
    • மும்மூர்த்திகளின் முறைமை

 முதல் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 24 அதிகாரங்களில் அடங்குகின்றன.

  1. உபதேசம்
  2. யாக்கை நிலையாமை
  3. செல்வம் நிலையாமை
  4. இளமை நிலையாமை
  5. உயிர் நிலையாமை
  6. கொல்லாமை
  7. புலால் மறுத்தல்
  8. பிறன்மனை நயவாமை
  9. மகளிர் இழிபு
  10. நல்குரவு
  11. அக்கினி காரியம்
  12. அந்தணர் ஒழுக்கம்
  13. அரசாட்சி முறை
  14. வான் சிறப்பு
  15. தானச் சிறப்பு
  16. அறம் செய்வான் திறம்
  17. அறம் செய்யான் திறம்
  18. அன்பு உடைமை
  19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
  20. கல்வி
  21. கேள்வி கேட்டு அமைதல்
  22. கல்லாமை
  23. நடுவு நிலைமை
  24. கள்ளுண்ணாமை

 இரண்டாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 25 அதிகாரங்களில் அடங்குகின்றன.

  1. அகத்தியம்
  2. பதிவலியில் வீரட்டம் எட்டு
  3. இலிங்க புராணம்
  4. தக்கன் வேள்வி
  5. பிரளயம்
  6. சக்கரப் பேறு
  7. எலும்பும் கபாலமும்
  8. அடிமுடி தேடல்
  9. படைத்தல்
  10. காத்தல்
  11. அழித்தல்
  12. மறைத்தல்
  13. அருளல்
  14. கரு உற்பத்தி
  15. மூவகைச் சீவ வர்க்கம்
  16. பாத்திரம்
  17. அபாத்திரம்
  18. தீர்த்தம்
  19. திருக்கோயில்
  20. அதோமுகத் தெரிசனம்
  21. சிவ நிந்தை
  22. குரு நிந்தை
  23. மயேசுர நிந்தை
  24. பொறையுடைமை
  25. பெரியாரைத் துணைக்கோடல்

 மூன்றாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 21 அதிகாரங்களில் அடங்குகின்றன.

  1. அட்டாங்க யோகம்
  2. இயமம்
  3. நியமம்
  4. ஆதனம்
  5. பிரணாயாமம்
  6. பிரத்தியாகாரம்
  7. தாரணை
  8. தியானம்
  9. சமாதி
  10. அட்டாங்க யோகப் பேறு
  11. அட்டமா சித்தி
  12. கலை நிலை
  13. காயசித்தி உபாயம்
  14. கால சக்கரம்
  15. ஆயுள் பரிட்சை
  16. வாரசரம்
  17. வார சூலம்
  18. கேசரி யோகம்
  19. பரியங்க யோகம்
  20. அமுரி தாரணை
  21. சந்திர யோகம்

 நான்காம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 13 அதிகாரங்களில் அடங்குகின்றன

  1. அசபை
  2. திருவம்பலச் சக்கரம்
  3. அருச்சனை
  4. நவகுண்டம்
  5. சந்தி பேதம் – திரிபுரை சக்கரம்
  6. வயிரவி மந்திரம்
  7. பூரண சத்தி
  8. ஆதாரவாதேயம்
  9. ஏரொளிச் சக்கரம்
  10. வயிரவச் சக்கரம்
  11. சாம்பவி மண்டலச் சக்கரம்
  12. புவனாபதி சக்கரம்
  13. நவாக்கரி சக்கரம்

 ஐந்தாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 20 அதிகாரங்களில் அடங்குகின்றன

  1. சுத்த சைவம்
  2. அசுத்த சைவம்
  3. மார்க்க சைவம்
  4. கடுஞ்சுத்த சைவம்
  5. சரியை
  6. கிரியை
  7. யோகம்
  8. ஞானம்
  9. சன்மார்க்கம்
  10. சகமார்க்கம்
  11. சர்புத்திர மார்க்கம்
  12. தாச மார்க்கம்
  13. சாலோகம்
  14. சாமீபம்
  15. சாரூபம்
  16. சாயுச்சயம்
  17. சத்தி நிபாதம்
  18. புறச் சமய தூடணம்
  19. நிராசாரம்
  20. உட்சமயம்

 ஆறாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 14 அதிகாரங்களில் அடங்குகின்றன

  1. சிவகுரு தரிசனம்
  2. திருவடிப் பேறு
  3. ஞாதுரு ஞான ஞேயம்
  4. துறவு
  5. தவம்
  6. தவ நிந்தை
  7. அருளுடைமையின் ஞானம் வருதல்
  8. அவ வேடம்
  9. தவ வேடம்
  10. திருநீறு
  11. ஞான வேடம்
  12. சிவ வேடம்
  13. அபக்குவன்
  14. பக்குவன்

 ஏழாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 39 அதிகாரங்களில் அடங்குகின்றன

  1. ஆறு ஆதாரம்
  2. அண்ட லிங்கம்
  3. பிண்ட லிங்கம்
  4. சதாசிவ லிங்கம்
  5. ஆத்ம லிங்கம்
  6. ஞான லிங்கம்
  7. சிவ லிங்கம்
  8. சம்பிரதாயம்
  9. திருவருள் வைப்பு
  10. அருள் ஒளி
  11. சிவ பூசை
  12. குரு பூசை
  13. மகேசிவர பூசை
  14. அடியார் பெருமை
  15. போசன விதி
  16. பிட்சா விதி
  17. முத்திரை பேதம்
  18. பூரணக் குகை
  19. நெறிச் சமாதி
  20. சமாதிக் கிரியை
  21. விந்துற்பனம்
  22. விந்துச்சயம் – போகசரவோட்டம்
  23. ஆதித்த நிலை – அண்டாதித்தன்
  24. மிண்டாதித்தன்
  25. மனவாதித்தன்
  26. ஞானாதித்தன்
  27. சிவாதித்தன்
  28. பசுவிலக்கணம் – பிராணன்
  29. புருடன்
  30. சீவன்
  31. பசு
  32. போதன்
  33. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
  34. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
  35. அசற்குரு நெறி
  36. சற்குரு நெறி
  37. கூடாவொழுக்கம்
  38. கேடு கண்டு இரங்கல்
  39. இதோபதேசம்

 எட்டாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 43 அதிகாரங்களில் அடங்குகின்றன

  1. உடலில் பஞ்சபேதம்
  2. உடல் விடல்
  3. அவத்தை பேதம் – கீழாலவத்தை
  4. மத்திய சாக்கிராவத்தை
  5. அத்துவாக்க்கள்
  6. சுத்த நனவாதி பருவம்
  7. கேவல சகல சுத்தம்
  8. பராவத்தை
  9. முக்குண நிர்க்குணம்
  10. அண்டாதி பேதம்
  11. பதினொரானந்தமும் அவத்தை எனக் காணல்
  12. கலவு செலவு
  13. நின்மலாவத்தை
  14. அறிவுதயம்
  15. ஆறந்தம்
  16. பதிபசுபாசம் வேறின்மை
  17. அடித்தலை அறியும் திறம் கூறல்
  18. முக்குற்றம்
  19. முப்பதம்
  20. முப்புரம்
  21. பரலட்சணம்
  22. முத்துரியம்
  23. மும்முத்தி
  24. முச்சொரூபம்
  25. முக்கரணம்
  26. முச்சூனிய தொந்தத்தசி
  27. முப்பாழ்
  28. காரண காரிய உபாதி
  29. உபசாந்தம்
  30. புறங்கூறாமை
  31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
  32. ஒன்பான் அவத்தை – ஒன்பான் அபிமானி
  33. சுத்தாசுத்தம்
  34. முத்தி நிந்தை
  35. இலக்கணாத் திரையம்
  36. தத்துவமசி வாக்கியம்
  37. விசுவக் கிராசம்
  38. வாய்மை
  39. ஞானி செயல்
  40. அவா அறுத்தல்
  41. பத்தி உடைமை
  42. முத்தி உடைமை
  43. சோதனை

 ஒன்பதாம் தந்திரம்

இதில் உள்ள பாடல்கள் பின்வரும் 23 அதிகாரங்களில் அடங்குகின்றன

  1. குருமட தரிசனம்
  2. ஞானகுரு தரிசனம்
  3. பிரணவ சமாதி
  4. ஒளி
  5. தூல பஞ்சாக்கரம்
  6. சூக்கும பஞ்சாக்கரம்
  7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
  8. திருக்கூத்துத் தரிசனம்
  9. ஆகாசப் பேறு
  10. ஞானோதயம்
  11. சத்திய ஞானானந்தம்
  12. சொரூப உதயம்
  13. ஊழ்
  14. சிவ தரிசனம்
  15. சிவ சொரூப தரிசனம்
  16. முத்தி பேதம், கரும நிருவாணம்
  17. சூனிய சம்பாஷனை
  18. மோன சமாதி
  19. வரையுரை மாட்சி
  20. அணைந்தோர் தன்மை
  21. தோத்திரம்
  22. சர்வ வியாபி
  23. வாழ்த்து

திருமூலர் வரலாறு

திருமூலர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார்.

திருமூலர் திருமந்திரத்தில் முதற் பகுதியாகிய பாயிரத்தில் “திருமூலர் வரலாறு” எனும் தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றினை 22 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

கையிலாயத்தில் சிவபெருமானது முதல் சீடன் திருநந்திதேவர் ஆவார். சிவனிடமிருந்து வேத ஆகமங்களை அறிந்து அவற்றைத் தமது மாணாக்கர்களுக்கு திருநந்திதேவர் அருளினார். திருநந்தி தேவரது முதல் எட்டு மாணாக்கருள் ஒருவராக “சுந்தரநாதர்” எனும் பெயருடைய ஒரு சிவயோகியார் இருந்தார். சுந்தரனார் சிவனது திருவடியில் பலகாலங்களாகத் தவமிருந்த ஒரு சிவயோகியர் ஆவார்.

காளை மாட்டின் தலையும் மனித உடலும் கொண்ட உருவமாக நந்திதேவர் புராணங்களில் வருணிக்கப்படுகிறார். நந்தி தேவரையே நாம் சிவாலயங்களில் நந்தியாக வழிபடுகிறோம். நந்தி (காளைமாடு) என்பவர், சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கைலாயத்தில் சிவனுக்கு வாயிற் காவலனாக விளங்குகிறார் என்பது புராணம். சைவ புராணங்களின்படி சிவனின் முதன் மாணாக்கராகவும் அதனால் முதற் தலைமைக் குருவாகவும் கருதப்படுகிறார் நந்திதேவர். நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது. சிவாலயங்களில் நந்தி உருவம் பதித்த கொடி (கொடித் தம்பம்) இருக்கும்.

“நந்தி” என்றால் – நம் + தீ = நமது + தீ= நந்தீ. அதாவது எமக்குள்   மூலாதாரச் சக்கரத்தில் தீப்பந்தம்போல இருக்கும் குண்டலினி சக்தி என்றும் பொருள் கொள்ளலாம். குண்டலினி சக்தியே அந்த இறைவன். அந்த ஜோதி வடிவானவன் என்றும் சில ஆன்மீக வாதிகள் பொருள் கொள்வர்.

எமது கண்களால் பார்க்கும் கைலாசத்தினை, பூக்கைலாயம் (பூலோக கைலாசம்) எனவும் எமது கண்களுக்குத் தெரியாத கைலாசத்தினைத் திருக்கைலாசம் எனவும் குறிப்பிடுகின்றனர் சித்தர்கள்.

குறிப்பு: இவ்விடத்தில் நாம் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது சாதாரண கண்களுக்குத் தெரியும் எமது உடல் தூல உடல் எனவும் கண்களுக்குத் தெரியாத உடல் சூக்கும உடல் எனவும் அழைப்பது போலவே எமது கண்களுக்குத் தெரியும் கைலாசமலைச் சிகரம் பூக்கைலாசம் (பூலோக கைலாசம்) எனவும் எமது கண்களுக்குத் தெரியாத சித்தர்கள் ஞானிகளால் மட்டுமே அகக்கண்களால் கண்டு வணங்கப்படும் அந்தக் கைலாசமலைச் சிகரம் திருக்கைலாசம் எனவும் அழைக்கப்படுகிறது.

கைலாய மலை என்பது இமயமலையில் உள்ள கைலாய மலைதொடரில் உள்ள ஒரு பகுதி ஆகும். கைலாய மலை சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. இதனருகே மானசரோவர் எனும் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன.

கைலாசத்தில் நந்திதேவரிடமிருந்து இவருடன் பாடங் கற்றவர்களான சனகர், சனந்தனர், சானாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய எண்மரும் நந்திதேவரின் முதன்மைச் சீடர்கள் ஆவார்கள்.

திருமந்திரத்தில் குரு பரம்பரை எனும் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

திருமந்திரம் – பாயிரம் – குரு பாரம்பரியம் – பாடல் 67

விளக்கம்: நந்திதேவரிடமிருந்து உபதேசம் பெற்ற சீடர்கள் எண்மராவர் (எட்டுப் பேராகும்). அதில் ஒத்த பெயருடைய நால்வரும் அதாவது 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் ஆகியோருடன் 5. சிவயோக முனிவர், 6. பதஞ்சலி முனிவர் 7. வியாக்ரமர் ஆகியோருடன் நானும் சேர எண்மருமாவர் என்பதாகும்.

திருமந்திரம் – பாயிரம் – குரு பாரம்பரியம் – பாடல் 70

விளக்கம்: நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், ஒத்த பெயருடைய நால்வர் அதாவது சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் (பூலோகம் வராமல்) கைலாசத்தில் இருந்து நான்கு திசைக்கும், திசைக்கு ஒருவராய்ச் அனைத்து உலகங்களுக்கும் சென்று தாம் பெற்ற அனுபவங்களைப் பிறர்க்கு உணர்த்தி மேன்மையுடைய குருநாதர்கள் ஆனார்கள். அவர்கள் அறம் முதலாக சிவ உண்மை அனைத்தையும் உணர்த்தி, நான் பெற்ற பேற்றினை அனைவரும் பெற்றுக் கொள்ளட்டும் என்னும் நோக்குடன் திசைக்கு ஒரு தேவர்கள் ஆனார்கள். என்று குறிப்பிடுகிறார்.

குறிப்பு: நந்திதேவரிடமிருந்து சிவாகமங்களைக் கற்றவர்களுள் நான்குபேர் கைலாசத்தில் இருந்து திசைக்கு ஒருவராக அண்ட சாகரங்கள் (அனைத்து உலகங்களுக்கும்) அனைத்துக்கும் சிவ ஆகமங்களைப் பரப்பச் சென்றார்கள் எனக் குறிப்பிடுகிறார். இதிலிருந்து இப்பூவுலகம் தவிர வேறு பல உலகங்களிலும் உயிர்கள் வாழ்கின்றன (சூக்கும உடல் அல்லது வேறு எதாவது ஒரு உடல்) என ஊகித்துக் கொள்ளலாம்.

மிகுதி நால்வரும் பூலோகம் வந்து சிவாகமங்களை மானுடர்க்குப் பரப்பினார்கள். அதில் திருமூலர் இந்தியாவின் தென்பகுதிக்கு வந்து தமிழ்நாட்டில்த் தங்கி இருந்து திருமந்திரத்தை எமக்கு அருளினார்.

பதஞ்சலி மாமுனிவர் வட இந்தியாவில் சிவ யோகத்தினைப் பரப்பியதாக வரலாறுகள் கூறுகின்றன. இவர் எழுதிய யோகநூல் “பதஞ்சலி யோக சூத்திரம்” என அழைக்கப்படுகிறது.

சிவயோக முனிவர் மற்றும் வியாக்ரம முனிவர் (வியாக்கிரபாதர்) ஆகியோரது வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக இல்லாமலுள்ளது.

இதில் சுந்தரநாதர் மட்டுமே ஞான உடலுடன் பூலோகம் வந்து மூலன் உடலில்ப் புகுந்து வாழ்ந்து “திருமூலர்” ஆனார். ஏனையோர் மானுடர்கள் போலவே தாய்க்குச் சேயாகப் பிறந்து பின்னர் முனிவர்கள் ஆனார்கள் எனவும் அறியப்படுகிறது.

திருமந்திரம் – பாயிரம் – குரு பாரம்பரியம் – பாடல் 71

பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய நந்திபெருமான் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அவனது சிறப்பையும், அவனை அடைய, முக்தி அடையும் முறையையும் தனது சீடர்களாகிய சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரோடு, சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவர்க்குமேயாம்.

அதாவது இறைவன் நால்வருக்கு உபதேசித்தது துறவுநெறி ஆகும். சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவருக்கும் உபதேசம் செய்தது உலகுடன் இருந்து உலகுக்கு அருளும் சிவாகம நெறி ஆகும். இரு நெறிகளிலும் பிறவிப்பிணி தீர்த்து முத்தி அடையும் முறையே விளக்கப்படுகிறது. இவ் இரு நெறிகளையும் திருமூலர் சிவனிடம் இருந்து கற்றுக் கொண்டார்.

குறிப்பு: திருமூலர், நந்திதேவர் என நந்தியையும், நந்தியெம் பெருமான் (நந்திபெருமான்) என சிவனையும் குறிப்பிடுகிறார்.

திருமந்திரம் – பாயிரம் – குரு பாரம்பரியம் – பாடல் 72

விளக்கம்: மேகங்கள் திரண்டு எட்டுத்‌ திசையும்‌ நடுங்கப்‌ பெருமழை பெய்து உலகம்‌ அழிகின்ற காலம் வந்தாலும், தன்னைவிட்டு இமையளவும்‌ பிரிய விரும்பாத, சிவலோகத்திலேயே தங்கிவிட்ட நால்வர்க்கும்‌ (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) நியமங்களாகிய பூசைகளில்‌ தவறுதல்‌ கூடாது, நற்காரியங்களை, செய்கருமங்களை விடாது தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் எப்போதும் நம்மை வழிபட்டிருப்பீராக என்று இறைவன் அருள்புரிந்தான்.

இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். எமக்கு என்ன துன்பம் வந்தாலும், சிவனை வழிபடுவதனையோ சிவபூசை செய்வதனையோ ஒருபோதும் கைவிடக்கூடாது என்று சிவனே (இறைவனே) ஆகமங்கள் மூலமாக எமக்கு உணர்த்துகிறான்.

இவ்வாறு சுந்தரநாதர் ஆகமங்களைக் கற்றுத் தெளிவடைந்தபோது அவரது சிந்தையில், தான் கற்ற வித்தையைச் செயற்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அது மட்டுமன்றி சினருளாலே அவரது சிந்தையில் “நீ கற்ற இந்த ஆகமங்களை பூவுலகம் சென்று மானுடர்களுக்கு எடுத்துரைத்து மானுட வர்க்கம் பிறவிப்பிணியில் இருந்து ஈடேற உதவுவாயாக” எனும் எண்ணமும் உதிக்கிறது. அதுமட்டுமன்றி அகத்திய முனிவரின் மேலுள்ள பக்தியினால் அவரைச் சென்று தரிசித்து அவருடன் சிறிதுகாலம் தங்கி இருந்து ஆகமங்களை ஆராயவேண்டும் எனும் எண்ணமும் கூடிவர, திருக்கைலாசத்தில் இருந்து பூக்கைலாசத்துக்கு (பூமி, பூலோகம்) சூக்கும வழியாக வந்துதித்தார்.

இதனைப் பின்வருமாறு தனது பாடலில்க் குறிப்பிடுகிறார்,

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 83

விளக்கம்: நன்னெறியில் ஒழுகும் ஒழுக்கத்தால் முக்தி கிடைக்கும். இவ்வாறு நன்னெறிகளை பின்பற்றி சிவனை எண்ணித் தவமிருந்து முக்தியடையும் முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் அனைவரும் சிவனின் திருவடியை அடைய இப்பூவுலகத்தினில் இருந்து சூக்கும வழியாக கைலாசம் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும் அந்தச் சூக்கும வழியாகவே திருக்கைலாயத்திலிருந்து நான் இப்பூமிக்கு வந்தேன் எனக் குறிப்பிடுகிறார்.

அதாவது சுந்தரநாதர் சூக்கும வழியாக திருக்கைலாயத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தபோது ஞான உடல் அல்லது பிரணவ உடல் எடுத்துக் கொண்டார்.

“ஞான உடல்” அல்லது “பிரணவ உடல்” எனப்படுவது யாதெனச் சுருக்கமாகக் கூறப்போனால், ஒரு சூக்கும உடலானது (ஆன்மாவானது) இவ்வுலகில் சஞ்சரிக்கும் போது ஒரு தூல உடலில் சஞ்சரிக்கும் அல்லது ஒரு ஞான (பிரணவ) உடலில் சஞ்சரிக்கும் எனப் புராணங்கள், ஆகமங்கள் விளக்குகின்றன.

“சூக்கும உடல்”, “தூல உடல்”, “ஞான உடல்”.

இப்புவியில் வாழ்வதற்கு சூக்கும உடலுக்கு (ஆன்மாவிற்கு) ஒரு போர்வை தேவைப்படுகிறது.

ஒரு ஆன்மா இப்பூவுலகில் ஒரு உயிரினமாகப் பிறக்கும்போது எடுக்கும் உடல், எமது கண்களுக்குத் தெரியும் உடல் “தூல” உடல் என அழைக்கப்படும்.

மரணம் நிகழும் பொழுது ஒரு தூல உடலில் இருந்து வெளியேறும் ஆன்மா உடனே ஒரு “ஞான உடலுள் (பிரணவ உடலில்)” புகுந்து கொள்கிறது. இப்புவியில் இன்னொரு பிறப்பு எடுக்கும்வரை அந்த ஆன்மா ஞான உடலிலேயே சஞ்சாரம் செய்கின்றது எனப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

சூக்கும உடல் (ஒளியுடல் – astral body, invisible body)” -சூக்கும உடல் எனப்படுவது ஆன்மா (குண்டலினி), சூக்கும நாடிகள், சூக்கும சக்கரங்கள் (ஆதாரங்கள்), ஆழ்மன எண்ணங்கள், பாவங்கள், புண்ணியங்கள், பழைய நினவுகள் கொண்ட எமது சாதாரண கண்களுக்குப் புலப்படாத ஒரு உடலாகும்.

“தூல உடல் அல்லது சூல உடல்” – எமது கண்களுக்குத் தெரியும் உடலாகும். ஒரு தாயில் இருந்தே ஒரு தூல உடல் கருவாகி, பிறந்து உருவாக முடியும். (மரமோ, நீர் வாழ்வனவோ, பறவையோ, பாலூட்டிகளோ, மனிதர்களோ).

“ஞான உடல்” – சிவ சக்தியில் இருந்து பொறியாகத் தோன்றும் ஒரு சூக்கும உடல் இப் பூவுலகில் சஞ்சரிக்க எடுக்கும் உடல் “ஞான உடல்” எனப்படும். இறப்பின் முன்னர் அல்லது பின்னர் ஆன்மா எமது கண்களுக்குப் புலப்படாத ஞான உடலிலேயே சஞ்சரிக்கும்.

குறிப்பு: இவற்றின் விளக்கங்களை திருமந்திர பாடல்களில் விளக்கமாகப் பார்க்கலாம்.

அது மட்டுமன்றி “முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் சிவனின் திருவடியை அடைய பூலோகத்தில் இருந்து கைலாசத்துக்குச் செல்லும் சூக்கும வழி” எனும் பதத்தில் இருந்து நாம் பின்வரும் தத்துவங்களையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது பூலோகத்திலே மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் சஞ்சரிக்கிறார்கள். இருந்தும் மனிதர்களின் சாதாரண கண்களுக்கு முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் புலப்படுவதில்லை. எனவே இந்தப் பூலோகத்திதிலேயே சூக்குமமான முறையில் பல சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்பதனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு பூமியில் வந்துதித்த சுந்தரநாதர், அகத்திய மாமுனிவர் வாழும் மலையான தென்னாட்டிலுள்ள பொதிகைமலை நோக்கிப் புறப்பட்டார். கைலாசத்தில் இருந்து (வடநாட்டில் இருந்து) தென்னகம் செல்லும் வழியில் பசுபதிநாத் (நேபாளம்), திருக்கேதாரம் (கேதாரிநாத்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்), திருக்காளத்தி (காளகத்தீஸ்வரர் கோயில்), திருவாலங்காடு (வடாரண்யேஸ்வரர் கோயில்) ஆகிய சிவ திருத் தலங்களைத் தரிசித்தவாறு காஞ்சி நகரை அடைந்தார். அங்கு ஏகாம்பரநாதர் கோயில் (பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப் படுகிறது) வணங்கிக் கொண்டு அங்கிருந்து சிதம்பரம் சென்று தில்லை நடராஜனை வணங்கினார். (இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப் பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் என்றும் அறியப் பெறுகிறது.)

அங்கிருந்து புறப்பட்டுக் காவிரி (பொன்னி நதி) ஆற்றைக் கடந்து காவிரியின் தென் கரையிலுள்ள திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலை அடைந்தார். (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 36 ஆவது சிவத்தலமாகும். இத் திருத்தலம் மாசிலாமணி ஈசுவரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது). அங்கிருந்து சிவனை வணங்கிவிட்டு பொதிகை மலை நோக்கிப் புறப்பட்டார்.

இவ்வாறு புறப்பட்டுக் காவேரி ஆற்றின் தென் புறமாக அமைந்துள்ள “சாத்தனூர்” எனும் கிராமத்தினை அண்மித்தபோது, கிராமத்துக்கு வெளியே புற்தரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் கதறி அழுவதைக் கண்டு காரணத்தை அறிய முற்பட்டார். மாடுகளை மேய்க்கும் இடையரான “மூலன்” என்பவர் இறந்துவிடவே, அவரது இறப்பைத் தாங்க முடியாத மாடுகள் அந்த மூலனின் உடலைச் சுற்றி நின்று துயரம் தாளாது கத்திக் கொண்டிருந்தந்தை அறிந்துகொண்டார். மேய்ப்பவன் இறந்தமையால் மாடுகள் அடைந்த துயரத்தினைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத சுந்தரநாதர், அந்த மாடுகளின் துயர் துடைக்க அன்புள்ளம் கொண்டார்.

அந்த இடையனாகிய மூலன் உயிர் பெற்றெழுந்தாலன்றி மாடுகளின் துயரம் நீங்காது என்பதனை அறிந்து கொண்டார். அட்டமா சித்திகளையும்‌ கற்றுத்‌ தேர்ந்திருந்த அந்தச் சிவயோகியார்‌, தம்முடைய ஞான உடலைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்னும் வித்தையினைக் கையாண்டு தமது ஆன்மாவை இறந்து கிடந்த மூலனின்‌ உடலுக்குள் செலுத்தி “மூலனாக” எழுந்தார்.

மூலன் எழுந்து வந்ததைக் கண்ட மாடுகளெல்லாம் துயர் நீங்கி மீண்டும் மேயத் தொடங்கின. அதனைக் கண்டு அக மகிழ்ந்தார் சுந்தரநாதர். மாடுகளின் பசி போக்கியபின், மாலையானதும் அவை தத்தமது இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டன. மாடுகளைப் பின் தொடர்ந்து சென்று அவை தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்வதனை உறுதிப் படுத்திக் கொண்டு தான் சென்ற வழியே திரும்பலானார் சுந்தரநாதர்.

மாலையாகியும் தன் கணவன் வீடு திரும்ப வில்லையே என்று கவலையுற்ற மூலனின் மனைவி தன் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ, என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிச் சென்று, மூலனின் உடலில்ச் சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். அவளைக் கண்டும் காணாதவராக அந்தச் சிவயோகியார் இருந்தார்.

தன் கணவனில் தோன்றிய மாற்றத்தைக் கண்டு அவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும் என்று எண்ணி அவரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அவரை நெருங்கினாள்.

அவள் மூலனின் மனைவி என்பதனை அறிந்து கொண்ட அந்தச் சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டாதவாறு தடுத்து நிறுத்தினார். அவளிடம் நடந்த உண்மையைக் கூறினார். ஆனால் அவளோ மூலனின் நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். உமது அன்புடைய மனைவியாகிய என்னை எதற்காக வெறுத்து ஒதுக்குகிறாய் என்று கூறிப் புலம்பி வாட்ட முற்றாள்.

அந்நிலையில் மீண்டும் சுந்தரநாதர் அவளை நோக்கி “நீ எண்ணியவாறு நான் மூலன் இல்லை, இனி உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை” எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அமைந்துள்ள பொதுமடத்திற்குச் சென்று யோகத்தில் அமர்ந்தார்.

அவரின் கூற்றை நம்பாத அவள், தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட பெரியோர், சான்றோர் சுந்தரநாதரை அணுகினர்.

சுந்தரநாதர் அவர்களிடம் நடந்த நிகழ்வுகளை விளக்கினார். இது பித்தத்தினால், அல்லது பேய் பிடித்தல் போன்றவற்றால் வந்த மயக்கமன்று என்று உணர்ந்தனர் அப்பெரியோர். அவர் மிகவும் தெளிவு பெற்ற நிலையில், வாழ்க்கையில் பற்றற்றவராய் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இருக்கிறார் என அறிந்து தெளிந்து கொண்டனர். இவர் சகல பற்றுக்களையும் அறுத்து சிவன் திருவடியைப் பெற்ற சித்தன் போன்று எல்லாவற்றையும் அறியவல்ல முற்றும் திறந்தவராய் விளங்குகின்றார், என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், அளவிலாத் துயருற்றாள். அவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஊரார்கள் அனைவரும் திரும்பிச் சென்றதும், சாத்தனூரில் பொதுமடத்தில் இருந்து தாம் வந்த வழியே சென்று, தம் உடம்பினை மறைத்து வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி கவலையுற்றார். தியானத்தில் ஆழ்ந்தார். அதை மறைத்த செயல் இறைவனின் செயலே என சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

குறிப்பு: இவ்விடத்தில் நாம் இன்னொரு தத்துவத்தினையும் புரிந்து கொள்ள வேண்டும். திருக்கைலாசத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த ஒரு சிவ யோகியரால், இப்பூவுலகத்திற்கு வந்து மானுட உடல் எடுக்கும்போது (மூலனின் உடல்) அவர் மானிட செயல் பாடுகளுக்குள்க் கட்டுப்படுத்தப் படுகிறார் என்பது பொருளாகும். அதாவது தனது உடல் மறைக்கப் பட்டதனை சிவ யோகியாராகிய சுந்தரநாதரால் நேரடியாகப் புரிந்துகொள்ள, அறிந்துகொள்ள, கண்டுகொள்ள முடியவில்லை. இதுவே இப்புவியில் உடலெடுக்கும் ஆன்மாக்களுக்கு நடைபெறும் கட்டுப் படுத்தலாகும்.

உதாரணமாக எமது புராணக் கதைகளில் இதுபோன்ற பல கதைகள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக “முனிவர்கள், அல்லது தேவர்கள் தாம் செய்த தவறுக்காக சிவனால் சபிக்கப்பட்டு மானுடனாக, அல்லது வேறு உயிரினமாகப் பிறந்து பல சோதனைகளை, துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து முக்தி அடைந்தார்கள் போன்ற கதைகள் கூறப்பட்டுள்ளன. அதாவது சகல தத்துவங்களும் அறிந்த முனிவர்கள், தேவர்கள் தவறுகள் செய்யும்போது சபிக்கப்பட்டு இப்புவியில் பிறந்தால் அவர்களது முழு அறிவும், மானுட அல்லது அவர்கள் பிறக்கும் அந்த உயிரினத்தின் (மான், பாம்பு, மீன், மரம், கல்) தன்மைக்கு ஏற்றவாறே செயற்பட முடியும் என்பது பொருளாகும்.

இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங் கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும்பொருளை, இப்பூவுலகில் “மூலனது” உடலில் வாழ்ந்து தமது வாக்கினால்‌ தமிழிலே வகுத்துரைக்க ‌ஈசன் கருதியதால்‌ போடப்பட்ட திருவிளையாடல்‌ என்பதையும்‌ அவர்‌ தெளிந்து உணர்ந்து கொண்டார்‌.

சிவபெருமான் திருவடிகளை நினைந்து அங்கிருந்து திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் ஈசனை வணங்கி, அத்திருக்கோயில் வீதியில் நின்றிருந்த ஓர் அரச மரத்தடியில் யோகத்தில் அமர்ந்தார். அன்றுமுதல் அவர் “திருமூலர்” என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர் இவ்வுலகத்தார் பிறவிப் பிணி நீக்கி உய்யும் பொருட்டு எழுதிய 3000 பாடல்களே திருமந்திரமாகும்.

இவர் மூவாயிரம் வருடங்களாக சிவயோக நிலையில் அமர்ந்திருந்து அவ்வப்போது ஒருமுறை தவம் கலைத்து ஒருபாடல் எழுதிவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விடுவார். இவ்வாறு மூவாயிரம் பாடல்களை அருளிச் செய்தார். அப்பாடல்களில் இறைவனை அடைய வழிகாட்டும் சைவ நாற்பாதங்கள் ஆகிய “சரியை, கிரியை, யோகம் ஞானம்” என்னும் நால்வகை நன் நெறிகளையும் கடைப்பிடித்து முத்தியடையும் முறைகளை மிகவும் எளிதாக இவ்வுலகத்தோர் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் தமிழில் விளக்கியுள்ளார்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 79

விளக்கம்: சிவன் தனது திருமேனியில் சமபங்காக அமைந்துள்ள சக்தி தேவியுடன் வீற்றிருக்கும் திருவாவடுதுறை சிவத்தலத்தில் அமைந்துள்ள போதிமரமான அரசமரத்தடியில் நீண்ட காலமாக சிவநாமங்களை ஓதிக்கொண்டே தவமிருந்தேன் என்று கூறுகிறார்.

இவ்வாறு தான் திருவாவடுதுறையில் அமைந்துள்ள சிவத்தலமான கோமுகிதீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அரச மரத்துக்கு கீழாக நீண்ட காலமாக இருந்து சிவனை எண்ணித் தவமிருந்தாதாக கூறுகிறார்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 80

விளக்கம்: இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான வருடங்கள், இரவு, பகல் இல்லாத சூக்கும வெளியில் இருந்தேன். தேவர்களாலும் யோகியர்களாலும் துதிக்கப்படும் நந்திதேவனின் (சிவனின்) காலடியில் வாழ்ந்திருந்தேன் என்று கூறுகிறார்.

இப்பாடலின் மூலமாகவே திருமூலர் இப்புவியில் 3000 வருடங்கள் வாழ்ந்திருந்தார் எனக் கொள்ளப்படுகிறது.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 81

விளக்கம்: பிறவிப்பிணி அறுத்து இறைவனை அடையவேண்டும் என்று எண்ணாமல், தவங்கள் செய்யாமல் மக்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். மனிதர்கள் இப்படியாக வாழ்ந்து துன்பத்தினை அனுபவிக்காமல், பிறவிப்பிணி நீங்கி அந்த இறைவனை அடையும் வழியினை, முத்தி அடையும் வழியினை இறைவன் தானே குருவாக இருந்து எனக்குப் போதித்தான். அவற்றை இப்புவியிலுள்ள மக்களுக்கு தமிழில் நன்றாக விளக்கிக் கூறுமாறு என்னை இறைவன் இங்கு அனுப்பி வைத்தான் எனக் கூறுகிறார்.

இதிலிருந்து கி மு 5000 ஆண்டுகளிலேயே தமிழ் மொழி பேசப்பட்டது என்பதும் நூல் எழுதும் அளவுக்கு இலக்கியமாக வளர்ந்து இருந்தது என்பதனையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 73

விளக்கம்: நந்தி பெருமானை அதாவது சிவனை எண்ணியவாறு அவன் எனக்கு அருளிய ஆகமங்களை எனது சிந்தையில் நிறுத்திக் கொண்டு தினமும் அவன் அருளிய ஆகமங்களைக் கூறுகிறேன். சிவனின் திருவருளால் திருமந்திரமாகிய ஆகமத்தை அனைவருக்கும் விளக்கத் தொடங்குகிறேன்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 85

விளக்கம்: அண்ட சராசரங்கள் அனைத்துக்கும் தலைவனாகிய நந்தி பெருமான் எனக்குப் புகட்டிய ஆகமங்களின் சிறப்பால் நான் பெற்ற அளவுகடந்த இறை இன்பத்தை, இப்பூவுலகில் ஊன் உடம்பில் (மனித உடலில்) வாழ்பவர்கள் அறிந்து கொள்ளும்படியாக விளக்குகிறேன். நான் கூறும் ஆகம தத்துவங்களை, விளக்கங்களை தினமும் மீண்டும், மீண்டும் கற்று, அறிந்து, பயிற்சி செய்துவர அந்தச் சிவனின் திருவடி கிட்டும். முக்தி கிடைக்கும்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 90

விளக்கம்: உணர்வினால் அறியப்படவேண்டிய இறைவனையும், அந்த இறைவனை அறிந்து கொள்ளும் அறிவைக் கொடுக்கும் ஞானத்தினையும், இந்த உடலுக்குள் ஆன்மாவாக வீற்றிருக்கும் இறைவனையும், அந்த ஆன்மாவை, அந்த இறைவனை அறிய முடியாமல் தடுக்கும் மாயையையும், அந்த மாயையை விலக்கும் வழிமுறைகளையும், அந்த மாயையை விலக்கும்போது அறியப்படும் சக்தியையும், அந்த சக்தியுடன் இணைந்த சிவனையும் தனக்குள்ளே உணர்ந்து அந்த இறைவனை அடையும் வழிகளை இந்தத் திருமந்திர மாலையில் தெளிவாக விளக்கியுள்ளேன்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 92

விளக்கம்: நந்தி பெருமானது அருளினாலேயே மூலனின் உடலில்ப் புகுந்து வாழ்கிறேன். பின்னர் அந்த சிவனின் அருளாலேயே மூலனின் இந்த உடலில் இருந்து முக்தியும் பெற்றேன். அந்தச் சிவனின் அருளினாலேயே மெய்ஞ்ஞானத்தை (சிவனை அடையும், முக்திபெறும் வழிமுறைகளை) அறிந்து கொண்டேன். அந்தச் சிவனின் கருணையினாலேயே நான் இங்கிருந்து இவ்வுலகிற்கு இந்தச் சிவாகமங்களை கூறியுள்ளேன். (நந்திபெருமான் – சிவன்).

சுந்தரநாதர் கைலாசத்தில் நந்தி தேவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட ஆகமங்களை இப்புவியில் மானிடர்களுக்கு எடுத்துக்கூற, விளக்க சிவனால் பணிக்கப்பட்டார். மானுடர்களுக்கு எடுத்துக் கூறும் தத்துவங்கள் மானுட உடலில் இருந்தே விளக்கப்பட முடியும் என்பதனையும் புரிந்து கொண்டார். எந்த முனிவராகவோ அல்லது தேவராகவோ இருந்தாலும் மானுட உடல் எடுப்பது என்பது ஒரு தாயின் கருவில் இருந்தே உடல் எடுத்து, பிறப்பெடுத்து வரமுடியும். அதனால்த்தான் சிவனின் உந்துதலால் மூலனின் உடலில் புகுந்தார் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 77

விளக்கம்: திருமூலர் தமது சீடருள் (மாணவருள்) ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து கூறுகிறார். மாலாங்கரே, சிவவுலகில் சிவனின் பாதங்களில் வாழ்ந்த நான் அங்கிருந்து இப்பூலோகத்துக்கு, தென்தமிழ் நாட்டுக்கு சிவ அருள் என்னைக் கொண்டுவந்த காரணத்தைக் கூறுகின்றேன் கேள். அழகிய நீலவண்ணத் திருமேனிகொண்ட சிவன், அம்மையுடன் சரிசமமாக எழுந்தருளியிருந்து இந்த உலகமே உய்யும் பொருட்டு எனக்கருளிய ஆகமங்களை, இம்மானுட வர்க்கத்துக்கு எடுத்துரைக்கவே யான் இங்கு வந்தேன். இதுவே வேதமெனவும் சிவாகமம் எனவும் கொள்க.

திருமந்திரம் – பாயிரம் – குரு பாரம்பரியம்– பாடல் 69

விளக்கம்: என்னிடம் சீடர்களாக இருந்து திருமந்திர மாலையினை, ஆகம விதிமுறைகளை கற்றுக் கொண்டவர்கள் எழுவராகும். எனது வழி (குரு சீடர் பரம்பரை) வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர் (சீடர்கள்).

(மாலாங்க முனிவர், இந்திர முனிவர், சோம முனிவர், பிரமமுனிவர், உருத்திர முனிவர், காலாக்கினி முனிவர், கஞ்சமலைய முனிவர்).

இவர்கள் மூலமாக குரு சீடர் பாரம்பரிய முறைப்படி செவிவழியாக சீடர்களுக்கு ஆகமங்கள் போதிக்கப்பட்டு வந்தது.

குரு சீடர் பாரம்பரிய முறையிலுள்ள நன்மைகளும் தீமைகளும்

இது குருகுல பரம்பரை எனவும் அழைக்கப்படுகிறது. குருகுலப் பரம்பரை அமைப்பில், ஒரு குருவிடம் இருந்து அறிவு (எந்தத் துறையிலும்) செவிவழியாகவே அடுத்தடுத்த தலை முறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. முற்காலத்தில் ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தமது அறிவினை தான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் சீடர்களுக்கு மட்டுமே கற்பிக்க விரும்பினார்கள். இதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது. அதாவது சீடர்களை முதலில் தகுதி பெறவைத்து அதன் பின்னர் அவர்களுக்கு தனது அறிவினைப் புகட்டுவது. இவ்விடயத்தில் சீடர்களைத் தெரிவு செய்யும் போது, குருமார் பல விடயங்களைக் கருத்திற் கொண்டார்கள். இதில் அவர்களது சுயநலமும் அடங்கி இருந்தது.

1. சீடர்கள் தனது சொற்படி நடந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

2. சீடர்கள் தனது குலம், சமயம் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்

3. சீடர்கள் தமக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அதாவது சமைத்தல், துப்புரவு செய்தல், குருவுக்குக் கைகால்கள் பிடித்து விடுதல் இப்படியாகக் குரு கூறுவதனையெல்லாம் மறுக்காமல் செய்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

4. சீடர்கள் ஆச்சிரமத்திலேயே குரு குறிப்பிடும் காலம்வரை வெளியுலகத் தொடர்புகள் இன்றி (பெற்றோர்களைக் கூடச் சந்திக்க முடியாது) தங்கி இருக்க வேண்டும்.

இப்படியான பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே சீடர்கள் குருவிடம் இருந்து அறிவைக் கற்றுக் கொள்வார்கள். இப்படியாக குருவிடம் இருந்து அறிவைக் கற்றுக் கொண்ட சீடர்கள் பின்னர் தாம் குருவாகும்போது இம்முறைகளிலேயே தாமும் பின்தொடர்வர்.

இங்கு எழுத்துமூலமாக குருவின் பாடங்கள் பதியப் படுவதில்லை. இதனாலேயே சைவசமயத்தின், இந்துமதத்தின் பல வித்தைகள் அறிவு சார்ந்த தத்துவங்கள் அழிந்து போய்விட்டது. எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இன்று விஞ்ஞான ரீதியாக ஆராயப் பட்டுக் கொண்டிருக்கும் பல தடயங்கள் எமது முனிவர்கள், சித்தர்களால் அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டாவையாக இருந்ததனை நாம் எமது புராணக் கதைகளில் அறிந்து கொள்கிறோம். உதாரணமாக இலங்கை மன்னன் இராவணன் விமானம் பாவித்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. வானவியல் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள பல நட்சத்திரங்கள், கோள்களை இப்போதுதான் நவீன விஞ்ஞானம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இவ்விடத்தில் இன்று விஞ்ஞானத்தில் நன்கு முன்னேறியுள்ள அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், தமது ஆராச்சியுள் எவ்விதமான சாதி, இனம், மதம் கலப்பும் இன்றி இருப்பதனால்த்தான் இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளார்கள் என்பதனையும் எண்ணத் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி இற்றைக்கு 500 அல்லது 1000 வருடங்களுக்கு முந்தய ஆராய்சியாளர்கள் விட்டுச் சென்ற எழுத்து மூலமான சான்றுகளும் அவர்களது முன்னேற்றத்துக்கு ஒரு காரணமாகும்.

இப்படியாக எழுத்து மூலமாக இல்லாமல் செவிவழியாகச் சென்ற பல தகவல்கள் எமக்குக் கிடைக்காமலே போய்விட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது குரு குல பாரம்பரியத்தால் ஏற்பட்ட இழப்பு என எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பது என்பது பல தீமைகளையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக எமது ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில தத்துவங்கள் சில தீமைகளை அகற்றுவதற்காகக் கூறப்பட்டுள்ள சில சூக்குமமான வழிமுறைகளை எல்லோரும் அறிந்து கொண்டால், சில தீயவர்களால் பிறருக்கு, தமது எதிரிகளுக்கு தீங்கு விளைவிப் பதற்காகவும் பயன்படுத்தப் படலாம். இதனாலேயே குரு தனது சீடனை பக்குவப்படுத்திய பின்னரே வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார் என்பதனையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.

திருமந்திரத்தில் உள்ள பாடல்களை தினந்தோறும் பொருள் உணர்ந்து படித்துவர பிறவிப் பிணி நீங்கி முக்தி கிடைக்கும் எனப் பிவரும் பாடலில்த் திருமூலர் குறிப்பிடுகிறார்.

திருமந்திரம் – பாயிரம் – திருமந்திரத் தொகைச் சிறப்பு– பாடல் 99

விளக்கம்: மூலனாகிய நான் கூறிய இந்த மூவாயிரம் பாடல்களையும் இந்த பூவுலகம் அறிந்து கொள்ளும்படியாக அந்தச் சிவனது அருளினாலேயே எழுதியுள்ளேன். தினமும் காலை வேளைகளில் பாடல்களின் கருத்தினை அறிந்து, உணர்ந்து அதன்படி, பின்பற்றுவோர் அந்த ஞானத் தலைவனை, சிவனை அடைவர். பிறப்பு, இறப்பு இல்லா முக்தி பெறுவார்.

இப்பாடலில் திருமூலர் தான் எழுதிய பாடல்கள் 3000 ஆகும் எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால் திருமந்திரத்தில் 3046 அல்ல்து 3100 பாடல்கள் என மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளகள் கூறியுள்ளார்கள். விநாயகர் காப்பு என எழுதப்பட்ட “ஐந்து கரத்தனை யானை முகத்தனை” எனும் பாடல் திருமூலரால் எழுதப்பட்டதல்ல. மொழிபெயத்தவர்களால் இணைக்கப்பட்டது. இதுபோலவே மிகுதிப் பாடல்கள் ஆராய்ச்சியாளர்களால் இணைக்கப்பட்டது. எந்தெந்தப் பாடல் என்ற விபரம் சரியாக அறிய முடியாமலுள்ளது.

சுந்தரநாதர் தான் கற்ற ஆகமங்களை இவ்வுலகிற்கு எடுத்துக்கூற முன்னர் தானே அதனை ஒவ்வொன்றாகப் பரீட்சித்துப் பார்த்து அதன் பின்னரே இவ்வுலகிற்கு எடுத்துக் கூற விரும்பினார். இவர் தான் அறிந்துகொண்ட தத்துவங்களை 3000 பாடல்களாக இவ்வுலகிற்கு எடுத்துக் கூற 3000 வருடங்கள் எடுத்துக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறார். இதனைச் சில ஆய்வாளர்கள் ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்கள் எழுதினார் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒவ்வொரு தத்துவமும் ஆராயப்படும் போது வேறு வேறு கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதுவே உண்மையாகும். உதாரணமாக சில தத்துவங்கள் ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாதங்கள் எடுக்கும் மற்றும் சில தத்துவங்கள் 15 மாதங்கள் அல்லது 20 மாதங்கள் என எடுத்துக் கொள்ளும் என்பதுவே உண்மையான விளக்கமாகும். ஒட்டு மொத்தமாக 3000 வருடங்களில் 3000 பாடல்கள் எழுதி அருளினார் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர் இவ்வுலகத்தார் பிறவிப் பிணி நீக்கி உய்யும் பொருட்டு எழுதிய 3000 பாடல்களே திருமந்திரமாகும்.

திருமந்திரத்தின் முதல்ப் பாடல்

திருமந்திரம் – பாயிரம் – கடவுள் வாழ்த்து– பாடல் 1

விளக்கம்: இந்த அண்ட சராசரம் அனைத்துக்கும் இறைவன் (கடவுள், சிவன்) ஒருவனே.

அவனே சிவன், சத்தி என இரு தோற்றம் பெறுகிறான். அதாவது அசையாத சக்தியாகிய சிவனில் இருந்து அசையும் சக்தியாகிய பார்வதி (சக்தி) தோன்றியது. இயக்கமற்ற ‘சிவம் இயக்கத்திற்கு வரும் போது ‘சக்தி’ என அழைக்கப் படுகின்றது.

அவனே (சக்தியில் இருந்து) பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி இவ்வுலகிற்கு உயிர்களைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் புரிகிறான்.

படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலுடன் அருளல் ஆகிய நான்காவது தொழிலையும் அவனே புரிகிறான். அதாவது அருளல் என்பது சிவ சக்தியில் இருந்து தோன்றிய ஆன்மா இவ்வுலகில் பல உயிரினமாகப் பிறந்து இறுதியில் மனித உடல் எடுக்கும்போது இறைவன் இருப்பதன் உண்மையை உணரவைத்து இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களாக (படிமுறைகளாக) விளக்குகிறான்.

அதன்மூலமாக மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் ஆற்றலைக் கொடுக்கிறான். அதாவது மனசைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை யோக வழிமுறைகள் மூலமாக விளக்குகிறான்.

அன்றாட மனித இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கும் ஆறு முக்கிய சக்கரங்களாக (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு சக்கரங்கள்) சூக்கும உடலில் அமைத்து அதில் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி சக்தியாக தானே இருந்து இயக்குகிறான்.

இவ் ஆறு ஆதாரங்களுக்கு மேலாக ஏழாவது சக்கரமாகிய சகஸ்ராரம் (துரியம்) மூலமாக மனித உடலை பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறான்.

அதாவது பிரபஞ்ச சக்தியே இறைவன் (சிவன்) ஆகும். இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு துளியே குண்டலினி சக்தி ஆகும். குண்டலினி சக்தியானது உடலின் உள்ளே இருந்து உடலுக்குத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கிறது. துரியச் சக்கரம் இந்த உடலை பிரபஞ்ச சக்தியுடன் இணைத்து வைத்திருக்கிறது.

இன்னொரு தத்துவத்தினைப் பின்னர் புரிந்து கொள்ளலாம் அதாவது மூலாதாரச் சக்கரத்தில் அமைந்துள்ள குணடலினி சக்தியானது இடகலை, பிங்கலை நாடிகள் வாயிலாக ஆறு ஆதாரங்களுடன் தொடர்பில் இருக்கும். ஆனால் துரியச் சக்கரத்துடன் சுழுமுனை நாடி வழியாக இணைக்கப் பட்டிருக்கும் ஆனால் சுழுமுனை நாடி அடைக்கப் பட்டிருக்கும்.

யோகப் பயிற்சியின் போது சுழுமுனை நாடியிலுள்ள தடையை உடைத்து அதனூடாக குண்டலினி சக்தி மேலேறிச் சென்று துரியச் சக்கரத்தினை எட்டும்போது பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து கொள்ளும். இதுவே இறப்பு பிறப்பற்ற முக்தியாகும்.

திருமூலர் தனது முதல்ப் பாடலில் சிவனை ஒரு சக்தியாகவே விளக்குவதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமூலர் தாம் ஓலைச் சுவடியில் எழுதும் ஒவ்வொரு பாடலையும் கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்துக்குக் கீளே பாதுகாப்பாகப் புதைத்து வைத்துவிடுவார். இவ்வாறு இவர் எழுதிய மூவாயிரம் பாடல்களையம் அவர் தவமிருந்தஅந்தக் கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்துக்கு அடியில் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து சிதம்பரம் சென்று தில்லை நடராசன் சந்நிதியில் சிவனுடன் ஒன்றறக் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் நாலாயிரம் வருடங்கள் கழித்து அதாவது கி பி 700 ஆம் ஆண்டளவில் சைவ சமயக் குரவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தேவாரங்கள் பாடிக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவன் திருவருளால் திருமூலர் எழுதிய மூவாயிரம் பாடல்களும் மறைத்து வைத்திருந்ததை அறிந்து, அவற்றை வெளியில் எடுத்தார். அப்பாடல்களின் பொருளை உணர்ந்த திருஞான சம்பந்தர் இவ் உலகத்தோர் அறிந்து உய்யும் பொருட்டு அவற்றை “திருமந்திரம்” எனப் பெயரிட்டு வெளியிட்டார்.

ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட திருமூலர் அருளிய திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் “தமிழ் மூவாயிரம்”, “திருமந்திர மாலை” எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழில் முதன் முதலில் தோன்றிய ஞானநூல் என்பது இதன் தனிச்சிறப்பு. திருமந்திரமானது யோகநூலாகவும், தோத்திரமாகவும், சாத்திரமாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், விளங்குகிறது.

இந்த நூலிலே இறைவனை அடையும் எளிய வழிமுறைகளும், மனித வாழ்வுக்குத் தேவையான முழுமையான விளக்கங்களும் வாழ்வியல் தத்துவங்களும் பல படிமுறைகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமந்திரம் ஒவ்வொருவரும் தன்னை அறிதல். தனக்குள் இருக்கும் இறையாற்றலை அடைவதற்குரிய வழிமுறைகள் பலவற்றையும் விளங்கியிருக்கிறது. மனிதர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்தி ஆன்மிகத் தெளிவு ஏற்படுத்தி அவர்களது பிறவிப் பிணி நீக்க வழி கூறுகிறது.

இப்புவியில் வாழும் மனிதர்கள் பிறவிப் பிணியில் இருந்து விடுபட்டு இறைவனை அடையும் தத்துவத்தினை தமிழில் விளக்கவே இறைவனால் நான் இங்கு அனுப்பப்பட்டேன் எனப் பிவரும் பாடலில் விளக்குகிறார்.

திருமந்திரம் – பாயிரம் – திருமூலர் வரலாறு – பாடல் 81

விளக்கம்: இறைவனை அடையவேண்டும் என்ற எண்ணம் விருப்பம் இல்லாமல், அதற்குரிய தவங்கள், யோகப்பயிற்சிகள் செய்யாமல் வாழ்க்கையை வீணே கடத்துபவர்கள், மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படியாகப் பிறவியை வீணாக்காமல் இந்த ஆன்மாக்கள் இறைவனை அடையும் வழிகளை, அந்த இறைவனே குருநாதனாக இருந்து எனக்குப் போதித்து அவற்றை இவ்வுலகில் நன்றாக தமிழில் விளக்குமாறு என்னை இறைவன் இங்கு படைத்திருக்கிறான்.

ஆகவே, ‘படைத்தனன்‌’ என்பது “மூலன்”‌ உடம்பில்‌ “சுந்தரநாதர்” புகுந்து வாழ்ந்ததையே குறிப்பிடுகிறது.

திருமூலர் இப்பூவுலகில் வாழ்ந்த இடமான சாத்தனூர் மற்றும் கோமுகிதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆகிய இடங்கள் அக்காலத்தில் பாண்டிய நாடு அல்லது பாண்டியன் ராச்சியம் என அழைக்கப்பட்ட தென் தமிழகத்தின் பகுதியில் அமைந்திருந்தது.

பாண்டிய நாடு என்பது இன்றைய தமிழ்நாட்டின் தென்பகுதியை உள்ளடக்கிய புவியியல் பகுதியாகும். இதனுள் இன்றைய மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளையும், இலங்கையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

திருமூலர், வீரசேன மன்னனது உடலில் புகுந்த கதை

பாண்டிய நாட்டில் ராஜேந்திரபுரி என்ற ஒரு பகுதி இருந்தது. அப்பகுதியை வீரசேனன் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான். இவனது மனைவியின் பெயர் குணவதி ஆகும். இருவரும் அன்பில் சிறந்து விளங்கினர். வீரசேனன் பாண்டிநாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.

மன்னன் ஒருநாள் எதிர்பாராத விதமாக அரவம் தீண்டிய பூவை முகர்ந்ததால் உயிரிழந்தான். (அதாவது மன்னன் நகர்உலா முடித்து, காற்று வாங்கலாம் என எண்ணி நந்தவனத்திற்குள் சென்றான். அப்போது, இவனைக் கண்ட பயத்தில் ஒரு பாம்பு ரோஜா செடியின் மீது ஓடியது. ரோஜா முள் பாம்பு மீது குத்தவே, கோபம் கொண்ட பாம்பு அதில் இருந்த ரோஜாமலரில் கொத்தியது. அதன் விஷம் அந்த மலரில் ஒட்டிக்கொண்டது. அந்த மலரைப் பறித்து முகர்ந்து பார்த்ததால் அரசன் மயக்கமுற்று இறந்தான் என்பது அதன் விளக்கம்.) இதனால் அரசியும் அரண்மனையும் சோகமயமானது. நாட்டுமக்கள் எல்லோரும் கவலையுற்றனர்.

இதனைக் கேள்வியுற்ற திருமூலர் பாண்டிய நாட்டு மக்கள் சிறந்த மன்னனை இழந்து தவிப்பதை எண்ணி அவர்கட்கு உதவ எண்ணினார். மக்களது துயரை முடிவுக்கு கொண்டுவர எண்ணினார். சதுரகிரி மலையில் தாம் தவம் செய்துகொண்டிருந்த குகையில் தனது உடலைப் பாதுகாப்பாக ஒழித்து வைத்துவிட்டுச் சூட்சும உடலில் மீண்டும் கூடு விட்டு கூடு பாய்ந்து வீரசேனனின் உடலில் புகுந்து மன்னனாக உயிர்பெற்று எழுந்தார். மன்னன் உயிருடன் மீண்டதைக் கண்ட மக்களும், மகாராணியும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், மன்னனின் உடலில் வாழ்ந்து கொண்டிருந்த திருமூலர், முந்தைய வீரசேன மன்னனின் பழக்க வழக்கங்களிலிருந்து விலகி தனிமையில் முனிவராகவே வாழ்ந்தார். இது அரசியாகிய குணவதியின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே அரசி தனது சந்தேகத்தினை நேரடியாகவே இவரிடம் வினவியபோது, திருமூலர் (சுந்தரநாதர்) உண்மையை வெளிப் படுத்தினார். “நான் உன் கணவன் வீரசேனன் இல்லை. நான் மூலனின் உடலில் வாழும் சித்தன். உன் கணவனின் மரணத்தால் நீயும் நாட்டு மக்களும் துயரத்தில் இருந்ததைப் பார்த்து, சிறிதுகாலம் எல்லோருக்கும் உதவும் பொருட்டு அவனின் உடலில் உயிர் புகுந்தேன்,” என்று விளக்கினார்.

இதனை அறிந்து கொண்ட அரசி குணவதி, திருமூலரின் ஒழுக்கத்தினையும் நாட்டு மக்கள் மீது இருந்த அன்பையும் கண்டு வியந்து “தொடர்ந்தும் மன்னன் உடலிலேயே வாழ்ந்து, நாட்டை ஆளுங்கள்” எனவும் அத்துடன் தனது மாங்கலியம் நிலைத்திருக்க உதவும் படியும் அவரைக் கேட்டுக்கொண்டார். ஆனால் திருமூலரோ விரைவில் இன்னொரு மன்னரைத் தெரிவு செய்யும்படியும் தான் மீண்டும் மூலனின் உடலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மன்னன் இறந்த செய்தி அறிந்தால், தனது மாங்கல்யம் நிலைக்காது எனவும் தனது அரசி என்ற அந்தஸ்தும் இல்லாமல் போய்விடும் எனவும் அதனால் தான் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனவும் சித்தரிடம் முறையிட்டாள். ஆனால் சித்தரோ அவளுக்கு ஆறுதல் கூறி உண்மை நிலையைப் புரிய வைத்தார்.

ஆனால் தனது மாங்கலியத்தையம் அரசி என்ற அந்தஸ்தையும் இழக்க விரும்பாத அரசி குணவதி, யோகியார் வாழ்ந்த மூலனின் உடலை அழித்துவிட எண்ணினாள். சில சேவகர்களை அழைத்து மூலனது உடலைத் தேடிக்கண்டறிந்து அழித்துவிடும்படி கட்டளையிட்டாள்.

இவளது சூழ்ச்சியை அறிந்துகொண்ட சிவயோகியர் அரசி மீது அனுதாபமுற்றார். அரசியை அழைத்து அவளது விருப்பப்படி தன்னால் நீண்டகாலம் அரசனது உடலில் வாழ முடியாதென்றும் ஆனால் அவளுக்கு மாங்கல்ய யோகமும், அரசி என்ற அந்தஸ்தும் கொடுப்பதாக வாக்களித்தார். அதாவது அவளது விருப்பப்படி அவளுக்கு “நித்ய சுமங்கலிதனம் (எப்போதும் சுமங்கலியாகவே தன்னை எண்ணிக் கொள்வது மற்றும் அவ்வாறே தோற்றமளிப்பது)” என்ற வரத்தை வழங்கினார்.

இப்படியாக அவளுக்கு வாக்களித்தார்.

“உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன்னர் சிறிது காலம் காட்டுச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றும், மன்னர் திரும்பி வரும்வரை மகாராணியே நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்” என்றும் மக்களுக்குப் பிரகடனம் செய்துவிட்டு, யாரும் அறியாதவாறு இரவோடு இரவாக அரண்மனையில் இருந்து வெளியேறி சதுரகிரி மலைக்குச் சென்றார். அங்கு ஒரு பருத்த அரசமரத்தில் அமைந்திருந்த பொந்தில் அரசனது உடலை வைத்து, அரசியின் மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்பதற்காக அந்த உடல் அழியாதவாறு (சிரஞ்சீவி) காயகல்ப முறைப்படி அவ்வுடலைப் பதப்படுத்தி வைத்துவிட்டு அந்தப் பொந்தை மூடிவிட்டார். அதனால் அந்த அரசமரம் அந்த வீரசேன மன்னனானது. அங்கிருந்து தான் வாழ்ந்த மன்னன், வீரசேனனின் உடலை விட்டு நீங்கி மீண்டும் தனது குகைக்குச் சென்று மூலனின் உடலில் சென்று புகுந்து கொண்டார்.

அங்கிருந்து திருமூலர் தனது தவத்தைத் தொடர்ந்தார்.

திருமூலரிள் ஜீவசமாதிகள் 7 இடங்களில் அமைந்துள்ளதாக பல சித்தர் பாடல்கள், ஆராய்ச்சிகள் மூலமாக அறியமுடிகிறது.

திருமூலர் ஜீவசமாதி 1:- சாத்தனூர்

சிவயோகியாக பூவுலகம் வந்த சுந்தரானந்தர் தமது ஞான உடலைத் துறந்து திருமூலனாக வடிவம் கொண்ட இடம் சாத்தனூர் ஆகும். மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் சாத்தனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஐயனார் கோயிலின் பின்புறமாக திருமூலரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. தற்போழுது இவ்விடத்தில் திருமூலருக்கு கோவில் கட்டப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

திருமூலர் ஜீவசமாதி 2:- திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்

திருவாவடுதுறையில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் மூவாயிரம் ஆண்டுகள் திருமூலராகத் தவத்தில் அமர்ந்து திருமந்திரம் எழுதியதால், இத்திருத்தலத்தில் திருமூலரது சமாதி அமைந்துள்ளதாக சில குறிப்புகள் மூலமாக அறியக் கிடக்கின்றது. திருமந்திரப் பாடல்கள் எழுதி முடித்து, கோமுக்தீஸ்வர ஆலய கொடித்தம்பத்துக்கு அடியில் ஏடுகளைப் புதைத்து வைத்துவிட்டு அவ்விடத்துலேயே அவரும் சமாதியானார் எனவும், சில குறிப்புகள் அத்திருக்கோயிலின் புறத்தே இருக்கும் அரச மரத்தின் அடியில்தான் இவரது சமாதி அமைந்துள்ளதென்றும். திருவாவடுதுறையில் கோமுக்தீசுவரர் கோயிலில் இருக்கும் கோமுக்தீசுவரர் பெருமான் சந்நிதியே அவரது ஜீவசமாதி என்றும் கூறுகின்றன.

திருமூலர் ஜீவசமாதி 3:- சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம்

திருமூலரின் ஜீவசமாதி தில்லை நடராஜர் சந்நிதி எனப் போகர் எழுதிய “ஜனன சாகரம்” எனும் நூலில் 312 ஆம் பாடல் தெரிவிக்கிறது.

திருமந்திரத்தை திருவாவடுதுறையில் பாதுகாப்பு செய்தபின் சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லைக்கு வந்து இறைவனின் திருநடனக் காட்சியைக் கண்ட நிலையில் அங்கேயே திருமூலர் இறைவனுடன் ஐக்கியமானார். தில்லை நடராஜர் கோவிலில் அவரது சமாதி “ஸ்ரீ மூலன் சன்னதி” எனும் பெயரில் அமைந்துள்ளது. திருமூலர் சமாதியான அந்த இடத்தில் பாண்டிய மன்னனின் ஆணைப்படி இவரது சமாதியை மூலவராகக் கொண்டு கருவூரார் எனும் சித்தர் நடராஜர் கோயிலை அமைத்தார். என்றும் போகர் குறிப்பிடுகிறார். அதாவது சிதம்பரம் ஆதிமூலர் சன்னதியில் லிங்கவடிவம் இருக்குமிடம் தான் திருமூலரின் ஜீவசமாதி என்றும் கூறப்படுகிறது.

திருமூலர் ஜீவசமாதி 4:- சதுரகிரி அரசமரம்

இவர் வீரசேன மன்னனது உடலில் புகுந்து வாழ்ந்து, பின்னர் மன்னனின் உடலில் இருந்து வெளியேறி மீண்டும் மூலனது உடலில் புகுந்துகொண்டார். அந்த மன்னனின் உடல் துறந்த இடம் சதுரகிரி காட்டிலுள்ள ஓர் அரசமரத்தின் பொந்து எனவும் அதனால் அந்த இடமும் அவரது ஜீவசமாதியாகக் குறிப்பிடப் படுகிறது. இருந்தும் அந்த அரசமரம் அமைந்த இடம் அடையாளம் காணமுடியாத தாகையால் ஒரு குறிப்பிட்ட இடத்தை இவரது ஜீவசமாதியாக இன்றும் வணங்குகிறார்கள்.

திருமூலர் ஜீவசமாதி 5: சதுரகிரி திருமூலர் குகை

சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஒரு குகையில் திருமூலர் நெடுங்காலமாக இருந்து தவம் செய்தார். சதுரகிரியிலுள்ள திருமூலரின் இந்தத் தவக்குகையும் இவரது ஜீவசமாதியாக வணங்கப்படுகிறது. இக்குகையிலேயே தனது (மூலனது) உடலை மறைத்து வைத்துவிட்டு மன்னன் வீரசேனனின் உடலில் புகுந்து சிறிது காலம் வாழ்ந்து அந்த நாட்டு மக்களை நன்னெறிப் படுத்திவிட்டு மீண்டும் இக்குகைக்கு வந்து தனது உடலில் புகுந்து தவத்தைத் தொடர்ந்தார் என்பதுவும் ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.

திருமூலர் ஜீவசமாதி 6:  திருநாரையூர் பொல்லா பிள்ளையார் கோவில்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே திருநாரையூரில் பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இத்திருக்கோவில் உள்பிரகாரத்தில் திருமூலர் சமாதி உள்ளது. பூரண வரலாறு கிடைக்கப் பெறவில்லை.

திருமூலர் ஜீவசமாதி 7

அகத்தியர் மாமுனிவர் தனது “சௌமிய சாகரம்” எனும் நூலில் இலங்கையின் தென்முனையில் திருமூலர் பெருமான் சமாதியை கண்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

யூகத்தின்படி இலங்கையின் தென்பகுதியில் மாத்தறையில் அமைந்திருந்த திருத்தொண்டீஸ்வரம் (சிவன்) ஆலயத்தில் திருமூலர் சமாதி அமைந்திருந் திருக்கலாம் என ஊகிக்கப் படுகிறது. தொண்டீஸ்வரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம், தென்னாவரம்) என்பது இலங்கையின் தென்பகுதியில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் அமைந்திருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் ஆலயமாகும். இக்கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம் என வரலாற்றுச் சான்றுகள் பகிறுகின்றன. ஆனால் இவ் ஆலயம் தற்போது முழுமையாக தன் சிவ அடையாளத்தை இழந்து சிறிய விஷ்ணு ஆலயமாக “தெவிநுவர கோயில்” எனும் பெயரில் பௌத்த மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

திருமூலர் தனது திருமந்திரத்தில் இலகையை சிவபூமி எனவும் தென்கையிலாயம் எனவும் குறிப்பிடுகிறார்.

இத்துடன் திருமூலரது வரலாறும் திருமந்திரத்தின் சிறப்பும், முன்னுரையும் முடிவடைகிறது. பல ஆய்வுக் கட்டுரைகள், பல பதிவுகளை ஆராய்ந்தே இக் கருத்துக்களை எழுதியுள்ளேன். தங்களது கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. இப்பகுதியில் இன்னும் ஏதாவது கருத்துக்கள் இணைத்திருக்கலாம் என்று நீங்கள் கருதினால் தயவுசெய்து எனக்கு அறியத் தாருங்கள்.

இப்பகுதியில் பல கருத்துக்களை எழுதியுள்ளேன். இக்கட்டுரையை படிக்கும் 1000 பேரில் ஒருவேளை ஒருவர் திருமந்திரத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவராக இருக்கலாம் அல்லது ஆராய்ச்சி செய்ய விரும்பலாம், அப்படிப்பட்டவர்கள் பல கோணங்களிலும் சிந்திக்கட்டும் என்ற நோக்கிலேயே கருத்துக்கள் அமைந்துள்ளன.

நன்றி

கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)

அடுத்த பகுதியில் திருமந்திர பாடல்களது விளக்கங்களைப் பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
100%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “திருமூலர் திருமந்திரம் – பகுதி 1

Comments are closed.