எனது ஆன்மீகப் பயணம் 2023
இவ்வருடமும் அதாவது 2023 குருவை ஒருமுறை நேரில் சென்று தரிசித்து அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், இவ்வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் குடும்பத்தினருடன் சென்று ஆசீர்வாதம் பெற்று வரலாம் என்று எண்ணி இருந்தேன். பெப்ரவரி மாதத்தில் குரு சற்று உடல்நலம் குன்றி இருப்பதாக அறிந்து அவரை உடனேயே சென்று பார்க்க விரும்பினேன். இம்முறையும் திட்டமிட்டது போல குடும்பத்தினருடன் சென்று வர முடியவில்லை. தனியாகவே ஏப்ரல் மாத பௌர்ணமி பூசைகளில் கலந்து கொள்வதற்காகச் சென்று வந்தேன். இம்முறை ஆச்சிரமத்தில் ஐந்து நாட்கள் தங்கி பூசைகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது.
ஏப்ரல் 2 ஆம் திகதி குருவை நேரில்ச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. குரு சற்று மூச்செடுக்கச் சிரமப்பட்டார். நன்றாக இளைத்து இருந்தார். இருந்தும் என்னைக் கண்டது கைகளினால் சைகை மூலமாக வரவேற்றார். மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
அவருடன் அவரது அம்மா (மனைவியார்) இளைய மகன் ஜீவானந்தம் ஐயா மற்றும் மருமகள் கூட இருந்தனர். மிகவும் சோகமாகக் காணப்பட்டார்கள். எனது இதயமும் கனமாக இருந்தது.
எப்படி இருந்தாலும் எனது அடிமனம் குருவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஒன்றும் ஆகாது என்று ஒரு உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது. எனது மனம் மிகவும் தெளிவாகவும் இருந்தது.
முக்தி என்பது ஆன்மாவுக்கே தவிர, அந்த உடலுக்கு அல்ல என்பதனை குருவே பல தடவைகள் கூறி இருக்கிறார். அதாவது முக்தியடைந்த முனிவராகவோ அல்லது ஒரு சித்தராகவோ இருந்தாலும் முக்தியடைந்த ஆன்மாவைத் தாங்கிய இவ்வுலகத்துடன் தொடர்புடைய அந்த உடலானது இவ்வுலக நியதிகளுக்கு அமையவே செயற்படும். முக்தி அடைந்திருந்தாலும் அவ்வுடலுக்கு சாதாரண மக்களது வாழ்க்கை முறைபோலவே தாகமெடுக்கும், பசிக்கும் இயற்கை உபாதைகள் ஏற்படும். இதுவே நியதி. இதுவே தத்துவம். இதற்கு எந்த மகானும் விதிவிலக்கல்ல.
நாம் நன்கு அறிந்த பல மகான்கள் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1886 ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார் என்பது நாம் அறிந்த வரலாறு.
ரமண மகரிஷி திருவண்ணாமலை அடிவாரத்தில் தவம் செய்து முக்திபெற்ற மகான். இவரது கையில் சார்கோமா என்றழைக்கப்படும் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.
இதிலிருந்து முக்தி நிலையில் உள்ள ஒரு ஆன்மாவுக்கும் அது வாழும் உடலுக்கும் இடையில் உள்ள தொடர்பினை எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இப்படியாக நோய் வாய்ப்பட்ட பல ரிஷிகள், முனிவர்கள், மகான்களது வரலாறுகள் உண்டு.
இவர்கள் இவ்வுலகில் வாழும்போனதே இறைவனுடன் ஐக்கியமானவர்கள். இறை உண்மைகளை எமக்குப் புகட்டியவர்கள். இவர்கள் எமக்காகவே வாழ்ந்தவர்கள். இறைவனை அடையும் வழியினை எமக்குப் புகட்டியவர்கள். இவர்கள் தமது உடலை விட்டுப் பிரிந்தாலும் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எமக்கு எப்போதும் நல்வழி காட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் எவ்விதமான சந்தேகங்களும் நாம் கொள்ளத் தேவை இல்லை.
குருவின் ஆசியுடன் அங்கிருந்து புறப்பட்டு ஆச்சிரமத்தினை அடைந்தேன். மனோரம்மியமான காலை வேளை. ஆச்சிரமம் மிகவும் அமைதியாகவே காணப்பட்டது. அண்மையில் குருவினால் திறந்து வைக்கப்பட்ட 3000 பேர் அளவில் அமர்ந்திருக்கக்கூடிய அழகிய பிரமாண்டமான சொற்பொழிவு மண்டபம் முருகன் சந்நிதிக்கு மறுபுறமாக அமைந்திருந்தது. பிரமிப்பூட்டியது. நான் ஒவ்வொரு முறை அங்கு சென்ற போதும் ஒரு புதுக் கட்டிடம் உருவாகிக் கொண்டே இருந்தது.
75 வயது நிரம்பிய பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் என்ற வாலிபன், அந்த இளைஞன் ஆச்சிரமத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதனை என்னால் உணர முடிந்தது. இந்த வயதிலும் என்னைப் பார் நான் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். நான் கண்ட இறை உண்மைகளை நான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே உலக மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆன்மீகத்தினை அறிந்து கொள்வதற்காகப் பலர் என்னிடம் வருகிறார்கள் அவர்கள் இங்கு வரும்போது எவ்வித தங்கு தடையும் இன்றி இங்கு தங்கியிருந்து தமது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு நான் கற்றுப் பயனடைந்த ராஜ யோகப் பயிற்சியினை கற்பித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுவது புரிந்தது.
அன்று சுவாமி விவேகானந்தர் பல நாடுகளுக்கும் சென்று தனது குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் போதனைகளைப் பரப்பினார்.
இன்று எமது குரு போளிவாக்கம் என்ற ஒரு சிறிய கிராமத்திலே பிரம்ம சூத்திரக் குழு என்ற அந்த ஆச்சிரமத்தில் இருந்து கொண்டே உலகமெங்கும் ஆன்மீகப் போதனைகள் செய்து கொண்டிருக்கிறார். உலகமெங்கும் வாழும் பல இலட்சம் பக்தர்கள் தினமும் காணொளிகளாக வரும் இவரது ஆன்மீகப் போதனைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்களது மூத்த புதல்வன் சந்தோஷ் அங்கு நின்றிருந்தார். என்னை வரவேற்று எனக்கு ஒரு தங்கும் அறையும் ஒதுக்கினார். அங்கு ஏற்கனவே நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து தங்கும் அறைகள் உள்ளன. அங்கு வெளிநாடுகளில் இருந்து பலர் வருவதனால் மேலதிகமாக ஆறு தங்கும் அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அறையில் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டேன். முருகனைச் சென்று வணங்கினேன். குருவின் சமாதியைச் சென்று வணங்கினேன். சமாதியின் முன்புறமாக சிறிது நேரம் இருந்து நான் கற்ற யோகப் பயிற்சியினைச் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது குருவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சற்று இழைத்த குரலில்ப் பேசினார்.
“சாப்பிட்டியா சிவா?” என்றார்.
“சாப்பிடப் போகிறேன் ஐயா” என்று கூறினேன்.
“போய்ச் சாப்பிடு. எழுது சிவா” என்றார்.
இம்முறையும் நான் அங்கு கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபவங்களை எழுதினால் அன்று அங்கு வர முடியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
ஆம் ஐயா எழுதுகிறேன் என்று கூறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்
அப்போது சந்தோஷ் அங்கு வந்து என்னை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மத்திய உணவு கொடுத்தார். அன்று போளிவாக்கத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா பூர்த்தி நாளாகும். அன்றைய தினம் அம்மனை அலங்காரமாக உளவு வண்டியில் வைத்து ஊரில் உள்ள சந்து பொந்தெல்லாம் சென்று ஒவ்வொரு வீட்டிலும் பூசைகள் செய்து வந்தார்கள்.
நான் அங்கு நின்றபொழுது பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா வீட்டடிக்கு சுவாமி வரும் நேரமாக இருந்தது. பல வகைப்பட்ட பண்டங்கள் சமைத்து படைத்து வழிபட்டார்கள். பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்கள் அந்த அம்மன் ஆலய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பதாகக் கூறினார். முக்கியமாக அன்றைய தினத்துக்கு ஆலயத்துக்குத் தேவையான பூசைப் பொருட்களை வாங்கும் பொறுப்பை பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்களே காலம் காலமாக எவ்வித குறையும் இல்லாமல்ச் செய்து வருவதாகவும் விளக்கினார்.
இரவு உணவும் அங்கேயே எடுத்துக் கொண்டேன். சந்தோஷ் என்னை அவர்களது வண்டியில் கூட்டிவந்து ஆச்சிரமத்தில் விட்டார். பயணக் களைப்பும் இருந்தது அப்படியே தூங்கச் சென்றேன்.
அன்றைய பொழுதும் கழிந்தது.
அடுத்தநாள் ஏப்ரல் (April) 3ஆம் திகதி வழமை போல அமைதியாக, அழகாக வண்டுகள் ரீங்காரமிட பறவைகள் துயிலெழுப்ப பொழுது புலர்ந்தது.
அன்று சந்தோஷ் என்னை காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலமான திவாலங்காடு மற்றும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி ஆகிய திருத்தலங்களுக்கு அவரது வண்டியில் அழைத்துச் சென்றார். குருவின் ஆசீர்வாதமும் எமக்கு இருந்தது. எதிர்பாராத விதமாக இரு பெரிய திருத்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது மன நிறைவாக இருந்தது. அன்றைய பொழுதும் கழிந்தது.
அப்படியாக அடுத்தநாள் ஏப்ரல் (April) 4ஆம் திகதி வழமை போல அமைதியாக அழகாக புலர்ந்தது.
அன்று குரு ஆச்சிரமம் வருவதாகக் கூறி இருந்தார்கள். காலைக் கடன்களை முடித்து நீராடி வெள்ளை ஆடை தரித்து சென்று சண்முகநாயகனை வணங்கினேன். அப்படியே சென்று குருவின் சமாதியை சுற்றி வந்து சமாதி முன்றலில் சிறிது நேரம் இருந்து யோகப் பயிற்சிகள் செய்தேன். பல சீடர்கள் அங்கு வந்திருந்தார்கள்.
அப்போது நீண்டநாள்ச் சீடரான பாலு சாமி (பாலசுப்ரமணியம் ஐயா) அவர்கள் என்னிடம் வந்து சுகங்கள் விசாரித்தார். அளவளாவினார். ஆச்சிரம நிகழ்வுகளை விளக்கினார். குரு சுகவீனமுற்றிருப்பது குறித்துப் பேசினார். குருவின் சுகவீனத்தால் அவர் மிகவும் கவலை உற்று இருப்பதனை உணர்ந்தேன். “டாக்டர் என்ன சொன்னாலும் யார் என்ன சொன்னாலும் குரு கேக்கவே மாட்டார் சாமி. அதுவும் பௌர்ணமி வந்தால் அவளவுதான். தனது உடல் நிலையையும் பொருட்படுத்த மாட்டார். பேசிக்கிட்டே இருப்பார். அப்புறம் உடல் நிலை மேலும் மோசமாகிடும்” என்று கவலையோடு கூறினார்.
அங்கு பலர் வந்து கொண்டு இருந்தார்கள். வீதியைக் கடந்து புதிய மண்டபம் பக்கமாக வந்தேன். அப்போது அங்கு நோர்வே, கனடா, மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். தம்மை அறிமுகப் படுத்தினார்கள். அவர்களுடன் அளவளாவினேன். எல்லோரும் யோகப் பயிற்சிகள் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான கலந்துரையாடல் களிலேயே கவனம் செலுத்தினார்கள்.
யோக உபதேசங்கள் கொடுக்கப்படும் போது புரிவது போல இருக்கும். பின்னர் வெளியே வந்ததும் மனதில் பல கேள்விகள் தோன்றும். எனவே உபதேசம் எடுத்துக் கொண்டு வெளியே வந்து தியான மண்டபத்தில் இருந்து பயிற்சிகளை மீண்டும் செய்து பாருங்கள். அப்போது எழும் சந்தேகங்களை அங்கிருக்கும் தொண்டர்களிடம் இருந்து தீர்த்துக் கொள்ளுங்கள். என்று அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.
அப்போது நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாமல்லபுரத்தில் இருந்து சிற்பி ராஜமாணிக்கம் என்பவர் குரு பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல அமைந்த ஆறு அங்குல உயரமான கருங்கல்லில் வடித்த சிலையினை கொண்டுவந்து எனது கைகளில்க் கொடுத்தார். மிகவும் தத்துவரூபமாக பார்த்தவுடன் குருபக்தி ஏற்படக் கூடியவாறு அமைந்துள்ளது அந்தச் சிலை. அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிலை மிகவும் தத்துவ ரூபமாக அமைந்துள்ளதாக பார்த்து வியந்தார்கள்.
அவ்வேளை குரு வந்துகொண்டிருப்பதாக அழைத்தார்கள் புதிய மண்டப வாயிலுக்குச் சென்றோம். வண்டி வந்து நின்றது. குடும்ப உறுப்பினர்கள், சீடர்கள் உட்பட பலர் குருவை அழைத்து வந்தனர். குரு சற்று இழைத்து இருந்தார். நடக்கச் சற்று சிரமப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்து வந்தார்கள். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதனால் யாரையுமே அவருக்கு அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. தூரத்தில் இருந்து வணங்கினோம். புன்முறுவலுடன் எமக்குக் கை அசைத்தபடி வந்தார். அங்கிருந்த சீடர்கள் பக்தர்களைக் கண்டதும் குருவின் முகத்தில் ஒரு பிரகாசம் வெளிப்பட்டது. இந்த ஆன்மீகச் சிங்கம் எதற்காகவும் சோர்ந்து போகாது என்று கூறுவது போல இருந்தது.
அப்படியே குருவை அழைத்து வந்து புதிய மண்டபத்தில் அமைந்துள்ள அவரது தங்கும் அறையில் ஓய்வெடுக்க வைத்தார்கள்.
ஆதவனைக் கண்ட தாமரை போல என்ற பழமொழி போல எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் மனதில் ஒரு உற்சாகம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் குருவின் இளைய மகனான ஜீவானந்தம் ஐயா என்னை அழைத்து உள்ளே சென்று அப்பாவைப் பாருங்கள் சாமி என்று கூறினார்.
உள்ளே சென்றேன். குருவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் அங்கு இருந்தார்கள். கண்களால் குரு என்னை அழைத்தார். ஆசி வழங்கினார். எனது கைகளில் இருந்த குருவின் சிலையை தனது கைகளில் வாங்கி சிறிதுநேரம் வைத்திருந்து ஆசீர்வதித்தார். சிலையைக் கொடுத்தார். வாங்கிக் கொண்டேன். வேறு எதுவும் என்னுடன் பேசவில்லை. அறையில் இருந்து வெளியே வந்தேன்.
குருவின் குடும்ப உறுப்பினர்களில், சீடர்களின் முகத்தில் ஒரு சோகம் நிழலாடுவதனைக் கண்டேன்.
நான் இங்கிருந்து புறப்படும்போது குருவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பதட்டத்துடன், கவலையுடன் தான் அவசரமாகச் சென்றேன். ஆனால் அங்கு சென்று குருவைப் பார்த்ததில் இருந்து எனது மனதில் ஒரு தெளிவு பிறந்தது. குரு எம்முடன் இன்னும் சிலகாலங்கள் இருந்து ஆன்மீகப் பாதையில் எமக்கு வழிகாட்டுவார் என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது. எப்படி அந்த உள்ளுணர்வு எனக்குள் ஏற்பட்டது என்பதற்கு உரிய காரணத்தினை என்னால் கண்டறிய முடியவில்லை.
அப்படியே வந்து மதிய உணவு எடுத்து அங்கிருந்த பக்தர்கள் தொண்டர்களுடன் உரையாடினேன். ஓய்வெடுத்தேன். குருவுடன் உரையாடுவது மற்றும் உபதேசம் பெற்றுக் கொள்வது போன்ற சிறப்பம்சங்களுடன், அங்கு வழங்கப்படும் உணவும், பால்த் தேநீரும் அந்த ஆச்சிரமத்துக்கே உரிய சிறப்பம்சமாகும். உணவருந்தும் வேளைகளில் போதும், போதும் என்று கூறும்வரை உணவளிப்பார்கள். எந்த வேளையிலும் பால்த் தேநீர் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அனைத்தையும் அனுபவித்தேன்.
மாலை வேளை குருவின் மூத்த மகனான தியாகு ஐயாவுடன் கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவருடன் உரையாடும்போது எனது ஆன்மீக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல ஆன்மீகத்தில் அவர் ஒரு எல்லையைத் தொட்டுக் கொண்டிருப்பது புரிந்தது. அவ்வப்போது சில குட்டிக் கதைகளும் கூறி ஆன்மீக விளக்கமளித்தார்.
கேள்வி பதில் நிகழ்வு முடிந்து வெளியே வந்தேன். அங்கே டாக்டர் பார்த்திபன் ஐயா அவர்கள் நின்று கொண்டிருந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பேசும்போது அவரில் ஆன்மீக முதிர்ச்சி தெரிந்தது. வீட்டில் ஒரு நல்ல கணவனாகவும், தந்தையாகவும் வேலையில் ஒரு சிறந்த மருத்துவராகவும், ஆச்சிரமத்தில் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. இவர் குருவின் நீண்ட காலச் சீடர்களில் ஒருவர். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தவறாது ஆச்சிரமத்துக்கு சமூகமளித்து விடுவதாகக் கூறினார். தற்போது குருவின் உடல் நிலையைக் கவனித்துக் கொண்டிருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்.
அவரிடம் குருவின் உடல்நிலை பற்றிக் கேட்டேன்.
குருவின் சிறிய வயது வாழ்க்கை முறை மற்றும் அவர் ICF (Indian Coach Factory) யில் வெல்டர் ஆகப் பணி புரிந்ததனால் அவரது நுரையீரல்களில் புகை மற்றும் உலோகப் படிவுகள் இருப்பதாகவும் கூறினார்.
“சாமி விதியைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மருத்துவ ரீதியாக குருவின் உடல்நிலையில், சுவாசப் பைகளின் தொழில்பாட்டுக்கு என்னால் குறைந்தது மூன்று வருடங்களாவது உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று கூறினார்.
அவரது பதில் எனக்கு ஒரு பெரும் மன நிறைவை ஏற்படுத்தியது.
அவரிடம் விடைபெற்று இரவு உணவு அருந்திவிட்டு எனது அறைக்குத் திரும்பினேன். அப்படியாக அன்றைய பொழுதும் கழிந்தது.
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பௌர்ணமி அன்று பொழுது புலர்ந்து கொண்டு இருந்தது. அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. குருவைத் தரிசிப்பதற்காக, பௌர்ணமி பூசைகளில் கலந்து கொள்வதற்காக, உபதேசம் பெற்றுக் கொள்வதற்காக அங்கு பலர் வந்துகொண்டிருப்பது புரிந்தது.
காலைக் கடன்களை முடித்து வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து புறப்பட்டேன். முருகனைச் சென்று வணங்கினேன். குருவின் சமாதியைச் சென்று வணங்கினேன். சமாதியைச் சுற்றி பலர் அமர்ந்திருந்து யோகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நானும் சிறுது நேரம் அங்கு அமர்ந்திருந்து யோகப் பயிற்சியில் ஈடுபட்டேன்.
அங்கிருந்து புறப்பட்டு தியான மண்டபம் சென்றேன். அங்கு உபதேசம் எடுத்துக் கொள்வதற்காக ஆண்கள், பெண்கள் எனப் பலர் காத்திருந்தார்கள். Sivakumar BSK என்ற Youtube நடாத்தும் சிவகுமார் ஐயா அவர்கள் புதிதாக வந்திருந்தவர்களுக்கு உபதேசங்கள் மற்றும் செயல்முறை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களது யோகப் பயிற்சிகள் மற்றும் செயல்முறை பற்றிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்கள் குரு முன்னர் அமர்ந்திருந்து உபதேசம் கொடுக்கும் அறையில் இருந்து உபதேசங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னையும் அங்கு அழைத்து தன்னருகில் இருத்தி உபதேசம் கொடுக்கும் முறையினை விளக்கினார். எனக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
அன்று எமது குரு கேள்வி பதில் நிகழ்வுகளில்க் கலந்து கொள்ள முடியாதிருந்ததனால் காலையில் கேள்வி பதில் நிகழ்வுகளை புதிதாகக் கட்டியிருந்த மண்டபத்தில் இருந்து குருவின் மூத்த புதல்வனான தியாகு ஐயா அவர்கள் ஆரம்பித்து நடாத்திக் கொண்டிருந்தார்.
நான் பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்களுடன் இருந்த வேளை ஒரு சீடன் வந்து சாமி தியாகு ஐயா சற்றுக் களைப் படைந்துள்ளார் நீங்கள் சென்று கேள்வி பதில் நிகழ்வுகளைத் தொடர முடியுமா என்று அழைத்தார்.
பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா என்னிடம் அடுத்த பூசை அறையில் சென்று அவர்கள் கொடுக்கும் உபதேசங்களைக் அறிந்து கொள்ளுங்கள், என்று அறிவுறுத்தியவாறு மண்டபம் நோக்கிச் சென்றார்.
நானும் ஆமோத்தித்தவாறு மண்டபத்தினையும் ஒருமுறை பார்த்துவர விரும்பி மண்டபத்துக்குச் சென்றேன். புதிய மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பலர் வெளியேயும் நின்றிருந்தார்கள்.
எனக்கு மனதில் ஒரு கேள்விக்குறி தோன்றியது. குரு கூறியிருந்தார் முருகன் சந்நிதியில் இருந்து கேள்வி பதில் நிகழ்வுகள் நடாத்தும் போது பலர் இடவசதி இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் இந்தப் புதிய மண்டபம் கட்டினேன் என்று கூறி இருந்தார். இந்த மூவாயிரம் பேர் அளவில் அமரக் கூடிய புதிய மண்டபமும் நிரம்பி பலர் வெளியில் நிற்கிறார்களே என்ற கேள்வி உதித்தது.
குருவின் மகிமை உலகெங்கும் பரவி இருப்பதனை உணரக் கூடியதாக இருந்தது.
தியாகு ஐயாவின் இடத்தினை பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்கள் எடுத்துக் கொண்டார். கேள்வி பதில் நிகழ்வுகள் தொடர்ந்தது.
நான் அங்கிருந்து மீண்டும் தியான மண்டபம் சென்றேன். அங்கு முன்னர் சமையற் கூடமாக பாவிக்கப்பட்ட மண்டபத்தில் இருந்து சரவணன் ஐயா அவர்களும் வக்கீல் செந்தில் ஐயா அவர்களும் உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கு சென்று உபதேசம் கொடுக்கும் முறைகளையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
கடவுளிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டே நாம் உபதேசம் கொடுக்கிறோம். உபதேசம் ஆன்மாவுக்கு கொடுக்கப் படுகிறது. அதனால் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சிறிய தவறு நேர்ந்தாலும் அது பெரிய பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என்று குரு அடிக்கடி கூறுவார்.
அங்கு அந்தப் பய பக்தியை அந்தப் புனிதத் தன்மையை உணராக கூடியதாக இருந்தது.
அவர்கள் நன்றாகக் களைத்திருந்தார்கள் சற்று ஓய்வெடுக்க விரும்பினார்கள்.
நான் அங்கிருந்து மீண்டும் தியான மண்டபத்தினுள்ச் சென்றேன். அங்கு ஒரு பூஜை அறையில் பாலா ஐயா (பாலசுப்ரமணியம் ஐயா) அவர்களும் சக்திவேல் ஐயா அவர்களும் உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்.
அப்போது நேரம் மதியம் பன்னிரண்டு மணியினை அண்மித்துக் கொண்டிருந்தது.
சுவாமிகள் மண்டபத்துக்கு வர இருப்பதாகவும் எல்லோரையும் அங்கு வரும்படியும் அழைத்தார்கள். நானும் அங்கிருந்து புதிய மண்டபத்துக்குச் சென்றேன். மண்டபம் நிரம்பி இருந்தது. குருவின் தரிசனத்துக்காகக் காத்திருந்தது.
சுவாமிகளால் நடந்துவரச் சிரமமாக இருந்ததனால் சக்கர நாற்காலியில் அழைத்து வந்தனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி குருவை பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
குரு எதனையும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மைக்கை (ஒலிவாங்கிய – mike) த் தரும்படி கேட்டார். கொடுத்தார்கள்.
பேசத் தொடங்கினார்.
“என்னுடைய உடல்நிலை சரியில்லாததால என்னாலை சரியாகப் பேச முடியவில்லை.
கடவுள் என்று ஒருத்தன் இல்லை என்றால் மனிதன் என்று ஒருத்தன் இருக்க முடியாது. அதே வேளை மனிதன் என்று ஓன்று இல்லை என்றால் கடவுள் ஓன்று ஒன்றும் இருக்க முடியாது.
உலகில் உள்ள அத்தனை கோடி ஜீவ ராசிகளையும் படைத்தவன் இறைவன். உலகத்தில் எல்லா மிருகமும் குனிந்து நடக்கும். மனிதன் மட்டும் நிமிர்ந்து நடப்பான். அதனாலேயே அவனுக்கு இறைவனை அறிந்து கொள்ளும் தன்மை கிடைக்கிறது.
உலகில் எண்பத்தி நாலாயிரம் கோடி ஜீவ ராசிகள் இருந்தாலும் கடவுளை அறிந்த, கடவுளை உணர்ந்த, கடவுளை வழிபடும் ஒரே ஒரு உருவம் இந்த மனித உருவம் மட்டும் தான். உலகில் சிறந்தவன் கடவுள். அதற்கு அடுத்ததாகச் சிறந்தவன் மனிதன். அதன் பின்னர் தான் அத்தனை ஜீவராசிகளும் அடங்கும்.
மனிதனுக்குள்ளேயே கடவுள் இருக்கிறான். அதனை நீங்கள் ஆராயுங்கள். உங்களுக்குள்ளேயே அவனைக் கண்டு கொள்ளுங்கள்.
இந்த ஆன்மீகத்தை ஆராயுங்கோ. ஆன்மீகம் என்பது உண்மையானது. கடவுள் என்பது பொய்யா அல்லது மெய்யா என்பதனை அறுபது வருடங்களாக ஆராய்ந்தேன். எனது பத்து வயதில் இருந்து இந்த ஆன்மீகத்தினை ஆராய்ந்து எது மக்களுக்குத் தேவை? எது மக்களுக்குத் தேவை இல்லை? என்பதனை தனித்தனியாக ஆராய்ந்து உண்மைகளை மக்களுக்கு கூறி இருக்கிறேன். அதாவது தெய்வீகம் என்பதில் ஒரு மார்க்கம் மட்டும் தான் உண்டு. அதை விடுத்து ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு மதம், ஒவ்வொரு கடவுள், ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு கடவுள் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. மக்கள் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
உங்களுக்கெல்லாம் இன்னும் பல இறை ரகசியங்களை சொல்ல நினைக்கிறேன். எனது உடல் ஒத்துழைக்குதில்லை. அது ஒத்துழைக்கும்போது கண்டிப்பாகப் பல ரகசியங்கள் இன்னும் சொல்வேன். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்கள்.
இங்கு நான் வரவில்லை. நான் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் மறைந்தாலும் என்னுடைய ஆன்மா உங்களுடன்தான் இருக்கும். உங்களுக்குப் பாதுகாப்பாகத் தான் இருக்கும்.
நீங்கள் இங்கு அறிந்து கொண்ட உண்மைகளை மற்றவர்களுக்குப் போய்ச் சொல்லணும். அப்பத்தான் அவர்களும் இறை உண்மைகளை அறிந்து கொள்வார்கள். கடவுளுக்காக நாம் வாழவேண்டும். அதுதான் வாழ்க்கை. எமக்காக எமது சுயநலத்துக்காக கடவுளை விற்கக்கூடாது. உங்களை நம்புங்கோ. கடவுளை நம்புங்கோ. உங்களுக்கு நல்லதே நடக்கும். எந்தக் கால கட்டத்திலும் உங்களைக் கடவுள் கைவிடமாட்டான்.
இந்தச் சூழ்நிலையிலும் என்னை இன்னும் கடவுள் கைவிடவில்லை. இன்னும் எதையோ சொல்லணும் என்று வைத்திருக்கிறான். அதைச் சொல்லும் காலம் வரும். அப்போது அதைச் சொல்லுவேன்”.
அப்போது சிறிது கட்டாயப்படுத்தி குருவின் பேச்சினை நிறுத்தினார்கள். மண்டபமே ஒரு அதிர்வலையில் மிதந்து கொண்டிருந்தது.
குரு விபூதி நிரம்பிய தாம்பாளத் தட்டில் கற்பூர தீபம் ஏற்றி எல்லோருக்கும் ஆசீர்வதித்தார். எனது மனம், உடல் எங்கும் ஒரு தெய்வீகத் தன்மை பரவி இருப்பதனை உணர்ந்தேன்.
குரு தனது ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்றார். நேரமும் மதியம் ஒரு மணியினைத் தாண்டிக் கொண்டிருந்தது.
உபதேசம் எடுத்துக் கொண்டவர்கள் குரு தரிசனம் முடிந்ததும் வீடு திரும்ப ஆயத்தமானார்கள்.
உணவு மண்டபத்தில் இருந்து மதிய உணவுக்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது. உணவருந்தி விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
உணவு மண்டபம் சற்று காலியானபோது நானும் அங்கு சென்று மதிய உணவு அருந்திவிட்டு வெளியே வந்தேன். உண்ட மயக்கம் மண்டபம் வந்து தரையில்ப் படுத்து ஓய்வெடுத்தேன். இருந்தும் ஒரு சில அறிமுகமானவர்கள் வந்து என்னுடன் பேசினார்கள். மன மகிழ்வாக இருந்தது.
நேரம் மாலை ஐந்து மணியினைத் தாண்டிக் கொண்டிருந்தது. சூரியன் தாழ்வாகச் சென்று கொண்டிருந்தான். மக்கள் கூட்டம் குறைந்து. குருவின் குடும்ப உறுப்பினர்களும் ஒரு சில சீடர்களும், பக்தர்களுமே அங்கு காணப்பட்டார்கள்.
மாலை வெய்யில் பட்டால் நல்லது என்ற காரணத்தினால் குரு சக்கர நாற்காலியில் வெளியே வந்து மண்டப வாயிலில் இருந்தார்.
அப்போது ஒரு சீடன் என்னுடன் பேசும்போது “குரு அறைக்குள்ள இருக்கவே மாட்டார் சாமி. வெளியே வந்திட்டார். இனி பேசாமல் இருக்க மாட்டார். ஆனால் அவரது தற்போதைய உடல் நிலைக்கு அவர் பேசக் கூடாது. யார் பேச்சையும் அவர் கேக்க மாட்டார் சாமி. டாக்டர் எல்லாம் பேசவே வேண்டாம் எண்டு சொல்லிட்டாங்க. மண்டபத்திலை பாத்தீங்க தானே பேசிக்கிட்டே இருக்கார். என்ன பண்ணிறது என்றே தெரியல்ல சாமி” என்றார்.
அங்கு நின்றிருந்த குருவின் நீண்டநாள்ச் சீடரான பாலா சாமி (பாலமுருகன் சாமி) கூறினார் “குருவை நாம இனிமேல் ஒரு குழந்தைப் பிள்ளையைக் கவனிப்பது போலவே கவனிக்க வேண்டும் சாமி. அவர் இப்ப ஒரு குழந்தைப் பிள்ளை போலவே இருக்கார் சாமி” என்றார்.
ஒவ்வொருவரும் குருவை எந்த இடத்தில் வைத்து வணங்குகிறார்கள் என்று புரியக் கூடியதாக இருந்தது.
அப்போது குரு “மைக்கைக் கொண்டு வாப்பா” என்றார்.
“சாமி நீங்க பேசவே கூடாது” என்றார் ஒருவர்.
“நான் பேசல்ல நீ மைக்கைக் கொண்டுவா” என்றார் குரு.
ஒரு சில சீடர்கள் மைக்கை எடுத்துவர உள்ளேயும் வெளியேயுமாகச் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.
“என்னப்பா தாமதம்” என்றார் குரு.
“இதோ வந்திட்டுது சாமி” என்றார் ஒருவர்.
“ஒரு மைக்கை எடுத்துவர இவ்வளவு நேரம் ஆகுதா? அப்படியே கமராவையும் கொண்டு வரச் சொல்லு என்றார்” குரு.
பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக, வேடிக்கையாக இருந்தது.
மைக் வந்தது கமரா வந்தது குரு பேசத் தொடங்கினார்.
நிறைய பேர் கேக்கிறாங்க ஏன் பௌர்ணமி ஒரு நாள் மட்டுமே வைக்கிறீங்க என்று.
இது வியாபாரம் பண்ணுகிற கடை இல்லை. இது ஆன்மீகம் ஆன்மீகம் என்பது ஒரு சுதந்திரமானது. அது யாருக்கும் அடிமை ஆனதில்லை. உலக வாழ்க்கையில தாய்க்குப் பிள்ளை அடிமை, பிள்ளைக்குத் தாய் அடிமை. முதலாளிக்குத் தொழிலாளி அடிமை. தொழிலாளிக்கு முதலாளி அடிமை. கணவனுக்கு மனைவி அடிமை. மனைவிக்கு கணவன் அடிமை. ஆனால்த் தெய்வீகத்தில யாருக்குமே யாரும் அடிமை கிடையாது. அது சுதந்திரமானது.
அந்தச் சுதந்திரமான வழியை ஒருநாள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்திட்டம் என்றால் அதை அவர்கள் வீட்டிலேயே போய்ச் செய்யணும். அதுதான் சுதந்திரம். அப்போ இங்கு தெரிஞ்சிக்கணும் வீட்டில போய் அனுபவிக்கணும். அதுதான் ஆன்மீகம். அதுதான் சுதந்திரம். அதைவிடுத்து அவர்களை உபதேசம் கொடுத்து பல நாட்கள் ஆச்சிரமத்திலேயே வைத்திருந்து அடிமைப் படுத்துவது ஆன்மீகம் அல்ல அது அடிமைத்தனம்.
இறைவனை வழிபட இந்த உலகத்தில எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையைத் தான் சுதந்திரம் என்று கூறுகின்றோம். அதை விடுத்து ஒரு ஆச்சிரமத்தில் அந்தக் குருவுக்கு அடிமையாகவோ, அங்கிருக்கும் சீடர்களுக்கு அடிமையாகவோ இருந்தா எப்படி சுதந்திரம் கிடைக்கும். எப்படிக் கடவுளை வணங்க முடியும்.
அதனால நீங்கள் ஒருநாள் ஆச்சிரமத்துக்கு வரணும். குருவிடம் முறைப்படி பாடத்தை வாங்கணும். வீட்டை போய் கற்றுக் கொடுத்த பாடத்தை முறைப்படி பயிற்சி செய்து கரை ஏறணும். அதுதான் சுதந்திரம். அதுதான் ஆன்மீகம். அதுதான் தெய்வீகம். உனக்கு உனது மனதுக்குள்ளே தெய்வத்தைத் தவிர வேறு நினைப்பு வரக்கூடாது.
உனக்கு இரண்டே இரண்டு நினைப்புத்தான் இருக்கணும் ஒன்று குரு அருள். மற்ரது தெய்வ பக்தி.
இதனைப் போதிக்க எதுக்கு நான் மாதம் பூராகவும் இந்த ஆச்சிரமத்தைத் திறந்து வைத்திருக்கணும். இது என்ன பணம் சம்பாதிக்கும் இடமா.
“பற்றற்று பற்றற்றவனைப் பற்றிக்கொள்”. அதுதான் ஆன்மீகம்.
நீ இந்த உலகத்தில் வாழும் காலத்தில் மக்களுக்கு என்ன செய்தாய்? என்ன சொன்னாய்? என்பதுவே முக்கியம். அவன்தான் மனிதன்.
மிருகம் எடுத்து வாழும். மனிதன் கொடுத்து வாழுவான். கொடுத்து வாழனும். உனக்கு என்ன வசதி இருக்கிறதோ அடுத்தவனுக்கு, இல்லாதவனுக்கு கொடுத்து வாழ். அதுதான் வாழ்க்கை. அதுதான் தருமம். பணத்தால் உன் உயிரைக் காப்பாத்த முடியாது. உன் உயிரைக் காப்பாத்தணும் என்றால் அந்தத் தருமத்தால் மட்டும்தான் முடியும். அந்தக் கடவுளால் மட்டும் தான் முடியும். நல்லதையே நினையுங்கள். நல்லதையே செய்து வாழுங்கள்.
மக்களுக்கு நல்லதையே சொல்லுங்கள். எல்லா மக்களும் ஒன்று என்று எண்ணுங்கள். எல்லா மக்களும் ஒண்டென்று நினையுங்கள். ஏழை, பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எதுவுமே இல்லை.
பிறக்கும்போது குழந்தை, போகும் போது பிணம். இவ்வளவுதான் வாழ்க்கை.
அப்படிப்பட்ட வாழ்க்கையை சீரான முறையிலை வாழுங்கோ. யாரையும் தாழ்த்தி, யாரையும் உயர்த்தி, யாரையும் அடிமையாக்கி, யாருக்கும் அடிமையாக இருந்து வாழாதேங்கோ. அதெல்லாம் வாழ்க்கையும் இல்லை. ஆண்டவன் அப்படி எம்மை வாழ வைக்கவும் இல்லை. ஆனால் நாமே நம்மை ஏமாத்திக்கிட்டுத் திரிகிறோம். அப்படி நம்ம மனம் பழகிவிட்டது. ஆனால் அந்த மனம் தன்னை ஏமாத்துகிறது என்பதனை அறியாமலே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அதனால அந்த மனத்தைச் சரிப்படுத்துவதுதான் யோகப் பயிற்சி. அந்த மனம் சீர்ப்படுத்தப்பட்டு விட்டால் ஞானம் வரும். அப்படிப்பட்ட ஞானத்தை அடையுங்கோ. அப்போதுதான் உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும்.
இரண்டு வாரத்துக்கு முன்னால என் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடனேயே ஒரு வேலை செய்தேன். இந்த ஆச்சிரம டிரஸ்ட் எனக்குப் பிறகும் எவ்வித தடையும் இன்றி தற்போது உள்ளது போல சீராக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில சில விடயங்களை எழுதி கோட்டிலே பதிவு செய்திருக்கிறேன்.
அதாவது பௌர்ணமி தவறக்கூடாது உபதேசங்கள் வழங்க வேண்டும். எந்த நேரத்தில் யார் வந்து கேட்டாலும் இல்லை என்று கூறாது உணவு வழங்க வேண்டும் என்பதே அந்த உயிலாகும்.
ஏன் அப்படிச் செய்தேன் என்றால் என்னுடைய மறைவுக்குப் பின்னால் நான் பெரியாள், நீ பெரியாள். நான் நடாத்துவேன். நீ நடாத்து என்ற எந்த குழப்பமும் வரக்கூடாது.
ஏன் அப்படிச் செய்தேன் என்றால் இங்கு பல குரு இருந்தார்கள். அந்தக் குருவின் மறைவின் பின்னர் அவர்கள் வளர்த்த பல ஆச்சிரமங்கள் இல்லாமல் போய்விட்டது.
ஆச்சிரமம் என்பது ஒருவனுடைய அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞ்ஞானத்தை வளர்த்து விடும் இடமாகும். அதுதான் ஒரு குருவினுடைய வேலை. அதனைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இது தடுமாறிப் போயிடக் கூடாது. இங்கு நாம் கூறுவது ஞானத்தை அடையும் வழி. இது அழியாதது. அழியக் கூடாதது. அப்படித் தான் நான் வழி நடத்துகிறேன். அது எனக்குப் பின்னாலும் சீராக இயங்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படிச் செய்திருக்கிறேன்.
குருவை தொடர்ந்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள் குரு செவி சாய்க்கவில்லை தொடர்ந்தார்.
வாழ்க்கை நம் கையில இருக்கு. ஆனால் அந்த உயிர் நம்ம கையில இல்லையே. அது அவன் கையிலே அல்லவா இருக்கு. அந்த உயிர் நம்ம கையில இருந்தால் நாம அதை போக விடுவமா. அவன் நமக்கு ஒரு காலக் கெடு விதித்திருக்கிறான். அந்த வாழும் காலம் வரை நீ இதெல்லாம் செய்திட்டு வா என்று ஒரு கடமையையும் நமக்கு விதித்திருக்கிறான். நாம் செய்வது நிலையானதாக இருக்கணும். பல பேருக்குப் பயன் தருவதாக இருக்கணும். அதனாலதான் ஊருக்கென்று அந்த முருகன் கோயில் கட்டினேன். உலகத்துக்கு என்று இந்த ஆச்சிரமம் கட்டினேன். இன்று பல மக்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து இங்கு வந்து உபதேசம் பெற்றுக் கொள்கிறார்கள். பல இலட்சம் மக்கள் தினமும் எனது அறிவுரைகள் அடங்கிய வீடியோவைப் பார்க்கிறாங்க.
இதுதான் எனது வாழ்க்கை இதுதான் எனது பயணம்.
குரு முடித்துக் கொண்டார்.
அப்போது ஒருசிலர் குருவிடம் சில ஆன்மீகச் சந்தேகங்களைக் கேட்க்க முனைந்தனர்.
அப்போது பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா வந்திருந்து அவர்களது கேள்விகளுக்குப் பதில் கூறினார்.
அப்போது ஒரு பெண் சீடர் கேட்ட கேள்விக்கு குரு பின்வருமாறு பதிலளித்தார்
சில குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே எப்போதும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் நடை பெறுகிறது.
கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ கட்டுப்படுத்தி வாழனுமே தவிர அடிமைப் படுத்தி வாழக் கூடாது. அடிமைப் படுத்துவது வேறு கட்டுப் படுத்துவது வேறு.
வானத்திலே சூரியன் இல்லை என்றால் சந்திரனுக்கு வேலை கிடையாது. சந்திரன் இல்லை என்றால் சூரியன் இருந்தும் பயன் இல்லாமல்ப் போய்விடும். அதுபோல ஒரு குடும்பத்தில மனைவி இல்லை என்றால் கணவன் ஒரு வெட்டி. அதாவது எதுக்கும் லாயக்கில்லாதவன் ஆகிவிடுவான். அதேபோல கணவன் இல்லை என்றால் அந்த பெண்ணின் வாழ்க்கையே வீணாகிவிடும்.
அதனால கணவன் மனைவி இருவரும் அன்போட கட்டுப் பாட்டுடன் இருக்க கத்துக்கணுமே தவிர ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்தி வாழ நினைக்கக்கூடாது. அகங்காரத்தோட வாழ நினைக்கக்கூடாது. அன்போட வாழப் பழகிக்கணும். அந்த அன்புதான் நல்ல சந்ததியை உருவாக்கும். அதை விடுத்து நாம அகங்காரத்துடன் வாழ்ந்து வந்தால் பிள்ளைகளும் அப்படியே வளர்ந்து அவர்களது வாழ்க்கையையும் வீணாக்கி விடுவார்கள்.
கற்பு என்பது பெண், ஆண் ஆகிய இருவருக்குமே உண்டு. ஆனால் உலகத்தில் பெண்களது கற்பே பேசப்படுகிறது. அதனாலேயே சமுதாயம் பெண்களை கட்டுப்பாட்டுடன் வளர்க்கிறது.
கல்யாணம் பண்ணினாலும் கற்பு அழியத்தான் போகிறது அடுத்தவன் கெடுத்தாலும் கற்பு அழியத்தான் போகுது. ஆனால் இதுக்கும், அதுக்கும் என்ன வித்தியாசம் என்றால் கலியாணம் ஆனால் வாழ்க்கை நிலைக்கும். ஆனால் இடையில்க் கற்பு அழிந்தால் வாழ்க்கை அழிந்து போகும்.
அதனாலதான் சமுதாயம் பெண்களைக் கட்டுப்படுத்துகிறது. இது பல பேருக்குப் புரியிறதில்லை. கட்டுப்படுத்துவதை பெண்கள் தவறான முறையில் விளங்கிக் கொள்கிறார்கள். எந்த விடயத்தினையும் நாம் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கக் கூடாது. நாம் நல்லா இருக்கணும், நம்ம குடும்பம் நல்லா இருக்கணும், நம்ம சந்ததி நல்லா இருக்கணும் என்ற நோக்கத்திலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
அதனைப் புரிந்து கொள்ளுங்கள். சந்தோசமாக அன்பாக கட்டுப்பாட்டுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் மதிப்புக் கொடுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துங்கள். அப்போதுதான் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
குரு பதில் கூறி முடிந்ததும் குருவிடம் நீங்கள் அதிகம் பேசக்கூடாது சாமி என்று கூறி கேள்வி பதில் நிகழ்வை நிறுத்தினார்கள்.
அப்போது குரு கூறினார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள், என்று அங்கிருந்தவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். எல்லோருக்கும் ஒரு நிம்மதியாக இருந்தது.
ஒவ்வொருவராக வந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நானும் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
குருவும் அவ்வப்போது சில கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது பால்த் தேநீரும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணளவாக இரண்டு மணிநேரமாக நிகழ்வு தொடர்ந்தது.
அப்போது இரவு உணவு தயாராகி விட்டதாகவும் உணவு மண்டபத்திற்கு வரும்படியும் அழைத்தார்கள்.
அப்போது குரு மீண்டும் பேசினார். தான் யார் என்று நாசூக்காக இதுவரை கூறியிராத சில கருத்துக்களைக் கூறினார்.
“பலர் இறைவனைத் தேடுகிறார்கள். பல பயிற்சிகள் செய்கிறார்கள். எல்லோரும் கடவுளை வழிபடுகிறார்கள். நான் மனிதனை வழிபடுகிறேன். கடவுளைப் பற்றி எத்தனையோ புராணக் கதைகள். எத்தனையோ ஆன்மீகவாதிகள் எத்தனையோ ஞானிகள் பேசினார்கள்.
ஆனால் கடவுள் எப்படி இருக்கிறார். என்ன பண்ணுறார். யாருக்கும் தெரியாது.
கடவுளை வழிபடச் சொன்னார்களே தவிர கடவுள் எப்படி இருக்கிறார், என்று யார் சொன்னார்? யாருமே சொல்லல்லையே. அப்ப இல்லையா? இருக்குது. யாரும் அறியல்ல. ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குமே அவர்களால்ப் போக முடிந்தது. அதற்கு அப்பால் அவர்களால்ப் போக முடியல்ல. அப்புறம் திரும்பி விட்டார்கள். அந்த குறிப்பிட்ட எல்லை வரைக்கும் அவர்கள் போன வரைக்கும் அறிந்ததை, கண்டதை சொன்னார்கள். போகாததைச் சொல்ல முடியல்ல. இல்லையா?
ஆனால்ப் போய்ப் பார்க்கணும் அவனுடைய அற்புதத்தை. அவனுடைய ஆட்டத்தை. அவனுடைய ஆட்டம் நின்றால் இந்த உலக ஆட்டம் நின்றிடும். அவன் அசைவு இருக்கும் வரைதான் இந்த உலக அசைவு இருக்கும். மற்றது எல்லாம் கற்பனை தான். ஆணும் பெண்ணுமாக இருந்து அசையுது அங்கே.
இதை எல்லாம் அறியணும். அதை அறியணும் என்றால்த் தன்னை இழக்கணும்.
அப்படிப்பட்ட கடவுள் வழிபாட்டை நாம் சொல்லிக் கொடுக்கிறோம். இதுதான் எனது பயணம். எதுவரை எனது பயணம் போகுதோ, எதுவரை அவன் இங்கு என்னை விட்டு வைக்கிறானோ அதுவரை இந்த மக்களுக்காக நான் பேசுவேன். இந்த உலக மக்கள் நன்றாக வாழவேண்டும் அதுதான் எனது ஆசை”. கூறிச் சற்று நிறுத்தினார்.
அவரது கருத்துக்களை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமலிருந்து. எனது ஆன்மீக முதிர்ச்சி போதாது என்று எண்ணிக் கொண்டேன்.
இப்படிப்பட்ட குரு எமக்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம் என்று எண்ணிக் கொண்டேன்.
“பணக்காரனாக இரு அல்லது ஒரு பணக்காரனுடன் சிநேகிதமாக இரு” என்பது ஒரு முதுமொழி.
“நீ ஆன்மீகவாதியாக இரு இல்லையேல் ஒரு ஆன்மீகவாதியுடன் இணைந்திரு அது உனக்கு முக்தியைத் தேடிக் கொடுக்கும்” என்பது என் எண்ணமாக இருந்தது.
சற்று நிறுத்திவிட்டு குரு மீண்டும் தொடர்ந்தார்.
என்னைத் தேடி, ஆன்மீக விடிவுவேண்டி பலரும் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போ நான் பேசாது ஓய்வெடுக்க முடியுமா.
நான் கற்று அறிந்த இந்தக் கலையினை உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உங்களது கடமை நான் கூறியபடி நீங்கள் பயிற்சிகள் செய்து உங்களுக்குள் கடவுளைக் கண்டு கொள்ளுங்கள். அந்தக் கடவுளுடன் கலந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கும் இக்கலையினை தெரியப் படுத்துங்கள். அதுவே உங்கள் கடமையாகும். அதுவே என் விருப்பம் என்று கூறி முடித்தார்.
அங்கிருந்து உணவு மண்டபம் சென்றோம். மந்தாரை இலையில் மஞ்சள்ச் சாதம், தோசை, சட்னி என உணவு பரிமாறினார்கள். வயிறு நிரம்மியது. அப்படியே வெளியே வந்து அங்கிருந்தவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தோம். முழு வட்டச் சந்திரனும் மேலெழுந்து கொண்டிருந்தான். நிலாவொளியும், மின்னொளியும் கலந்து ஒரு பரவசமாக இருந்தது.
குரு சிறிது நேரம் வெளியே உலாவுவதற்காக சக்கர நாற்காலியில் ஒரு சீடன் அழைத்து வந்தார். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். சிறிது நேரத்தில் குருவும் தூங்கச் சென்றார். நானும் எனது அறைக்குத் திரும்பினேன். அன்றைய பொழுதும் கழிந்தது.
வழமைபோல ஏப்ரல் 5 ஆம் திகதி அவ்விடத்துக்கே உரிய அழகில் பொழுது புலர்ந்தது.
எழுந்து காலைக் கடன்களை முடித்து வெள்ளை ஆடை தரித்து வெளியேறி முருகனை சென்று தரிசித்து அப்படியே குருவின் சமாதி சென்று வணங்கி அவ்விடத்தில் இருந்து யோகப் பயிற்சி செய்தேன். அங்கிருந்து குருவின் தங்கும் அறை நோக்கி நடந்தேன். வாசலில் குருவின் இளைய மகன் நின்றிருந்தார். அப்பாவை வந்து பாருங்க சாமி என்று என்னை உள்ளே அழைத்தார். உள்ளே சென்றேன்.
உபதேசம் கொடுக்கும் முறைகளை பார்த்தாயா என்று கேட்டார். ஆம் ஐயா நன்கு அறிந்து கொண்டேன் என்று பதிலளித்தேன்.
போய்ச் சேர்ந்ததும் எனக்கு அறியத் தா என்று கூறினார்.
“எழுது சிவா என்ன” என்று கூறி கண்களால் ஆசீர்வாதம் வழங்கினார்.
குரு என்னை பல தடவை எழுது சிவா என்று கூறி இருக்கிறார்.
குரு தனது சீடரிடம் இருந்து எதிர்பார்ப்பது நாம் குருவிடம் இருந்து அறிந்த ஆன்மீக உண்மைகளை எமது பாணியில் பிறருக்கு தெரியப்படுத்துவதே.
இதன் பின்னணியில் ஒரு மிகப் பெரிய தத்துவம் ஒரு அர்த்தம் அடங்கியுள்ளது.
அதாவது ஒவ்வொருவரும் அனுபவிக்கும் துன்பத்தினைப் போல நானும் எனது நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது ஐந்து வயதில் இருந்து பல துன்பங்களை அனுபவித்தேன். என்னால் தாங்க முடியாமல் துடித்தேன். துவண்டு விடவில்லை. தற்கொலையை நாடவில்லை. காரணத்தினைத் தேடினேன். பலகாலத் தேடுதலில் ஆன்மீகம் எனக்கு விடை அளித்தது. இரண்டு குரு எனது துன்பங்களுக்கு உரிய காரணத்தினை விளக்கினார்கள். புரிய வைத்தார்கள். தாம் கற்று ஈடேறிய யோகக் கலையினை, எனக்குக் கற்றுக் கொடுத்து என்னை நான் யார் என்று அறிந்து கொள்ள வழிவகுத்துக் கொடுத்தார்கள். அவர்களது வழி காட்டலில் பலகாலத் தேடலில் என்னை நான் அறிந்து கொண்டேன். அந்த இறைவன் யார் என்று அறிந்து கொண்டேன். அவனுடன் கலந்து கொண்டேன். இருந்தும் சில கட்டளைப்படி இவ்வுலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன்.
நான் காட்டிய வழியினைப் பின்பற்றி அந்த இறைவனை அறிய, அடைய முற்படுங்கள். உங்களது துன்பங்களை போக்கிக் கொள்ளுங்கள். இதுவே பாவத்தினைப் போக்கும் வழியாகும். இதுவே துன்பங்களைப் போக்கும் வழியாகும். இதுவே பிறவிப் பிணியைத் தீர்க்கும் வழியாகும். இதனை பிறருக்கும் தெரியப் படுத்துங்கள். அவர்களும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறட்டும் என்பதுவே குருவின் அடிப்படைத் தத்துவமாகும்.
குரு தனது சீடர்களிடம் இருந்து இதனையே எதிர்பார்க்கிறார்.
அப்போது குரு வீடு திரும்ப ஆயத்தமானார். வண்டி வந்தது குரு ஏறிக் கொண்டார். குருவின் உடல் நிலையில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. கையசைத்து வழியனுப்பினோம். வண்டி புறப்பட்டது.
அப்படியே வந்து உணவு மண்டபத்துக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அந்த மண்டபம் கட்டிய மேஸ்திரி வந்திருந்து என்னுடன் உரையாடினார்.
ஐயாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்றேன்.
அவர் கூறினார் சாமிக்கு ஒன்னும் ஆகாது.
என்று கூறியவாறு தனது கைத் தொலைபேசியில் இருந்த கோபுரத்தின் வரை படத்தினைக் காட்டி அடுத்ததாக இந்தக் கோபுரம் கட்ட சாமி பிளான் பண்ணி இருக்கிறார். கட்டி முடிக்கும் வரை சாமிக்கு ஒண்ணும் ஆகாது என்றார் மிகவும் உறுதியாக. அதாவது அந்த வீதிக்கு மறு புறமாக உள்ள முருகன் கோவில் மற்றும் சமாதிக்கு நுழையும் வாசலில் ஒரு கோபுரம் கட்ட ஐயா முடிபு செய்துள்ளார். அதற்குரிய வரை படமும் தயாராகி விட்டது. விரைவில் கட்டிட வேலைகள் ஆரம்பமாகும் என்றார்.
சற்று உயரமான அழகிய கோபுரம். அழகாக பல சிற்ப வேலைப்பாடுகளுடன் வரையப்பட்டிருந்தது.
அழகிய கோபுரம் அமைய இருக்கிறது. கோபுரம் வீதிக்கு மேலாக அதாவது கோபுரத்துக்குக் கீழாக வாகனங்கள் போய்வரக் கூடியதாக அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால்ப் பணம் தான் அதிகமாகும் என்று மனதுள் எண்ணிக் கொண்டேன்.
எனது வண்டி வரும் நேரமும் நெருங்கியது. புறப்படத் தயாரானேன். வண்டி வந்தது. முருகனை, சமாதியை வணங்கிக் கொண்டு வண்டியில் ஏறினேன். வண்டி சென்னை நோக்கிப் புறப்பட்டது.
போகும் வழியில் பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்களது வீட்டிற்குச் சென்று கூறிவிட்டுப் புறப்பட்டேன்.
இம்முறை ஐந்து நாட்கள் அங்கு நின்றிருந்தேன். குருவுடன் ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பேசக் கூடியதாக இருந்தது. இருந்தும் குருவின் உடல்நிலை முன்னேற்றம் எனக்கு ஒரு மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் எனது குடும்பத்தினருடன் வந்து அவரிடம் இருந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவாறு சென்னை நோக்கிய பயணம் தொடர்ந்தது.
குரு இதுவரை காலமும் ஆன்மீகத்தின் அடிப்படைத் தத்துவங்களேயே விளக்கிக் கொண்டிருந்தார். தற்போது ஆன்மீகத்தில் ஆழமான கருத்துக்களைக் கூறுகின்றார். நாம் இதுவரை அறிந்திடாத கருத்துக்கள் அவை. எந்தக் குருவும் இதுவரை கூறாத கருத்துக்கள் அவை.
சுவாமி விவேகானந்தர் முன்முதலில் அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தபோது ஆன்மீக சந்தேகங்களைக் கேட்டபோது “நீ அம்பாளைப் பார்க்கப் போகிறாயா என்று கேட்டாராம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
எமது குரு இம்முறை தனது சீடர்களுக்கு
“எல்லோரும் கடவுளை வழிபடச் சொன்னார்களே தவிர கடவுள் எப்படி இருக்கிறார், என்று யார் சொன்னார்? யாருமே சொல்லல்லையே. அப்ப இல்லையா? இருக்குது. யாரும் அறியல்ல. ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குமே அவர்களால்ப் போக முடிந்தது. அதற்கு அப்பால் அவர்களால்ப் போக முடியல்ல.
ஆனால்ப் போய்ப் பார்க்கணும் அவனுடைய அற்புதத்தை. அவனுடைய ஆட்டத்தை. அவனுடைய ஆட்டம் நின்றால் இந்த உலக ஆட்டம் நின்றிடும். அவன் அசைவு இருக்கும் வரைதான் இந்த உலக அசைவு இருக்கும். மற்றது எல்லாம் கற்பனை தான். ஆணும் பெண்ணுமாக இருந்து அசையுது அங்கே. இதை எல்லாம் அறியணும்.”
இவரே எமது குரு
எனது ஆச்சிரம புனிதப் பயணம் முடிவுக்கு வந்தது.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —