எல்லா உயிரினத்திலும் கடவுள் இருக்கிறார்
ஒரு ஆச்சிரமத்தில் குரு தனது சீடர்களுக்கு இறைவனைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அதாவது இறைவன் என்பவன் உனக்குள்ளே தான் இருக்கிறான். இறைவனை வெளியில்த் தேடாதே உனக்குள்த் தேடு. நீ வெளியில்க் கண்ணால்க் காண்பதெல்லாம் வெறும் காட்சிகளே. அது ஒரு மாயை. இறைவனை உனக்குள்த் தேடும் வழிமுறையே ஆன்மீகப் பயிற்சியாகும். அதாவது கடலில் இருந்து ஒரு பாத்திரத்தில் கடல் நீரை எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்தால் அந்த நீரும் கடல் நீரே. அதுபோல உனக்குள் இருக்கும் ஆன்மாவே கடவுள். அதனைப் புரிந்துகொள். அது மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா உயிரினத்திலும் ஆன்மா உள்ளது. அதாவது எல்லா உயிரினத்திலும் இறைவன் இருக்கிறான் என்பதனைப் புரிந்து கொள், என்று மிகவும் இலகுவாக விளக்கினார்.
குருவுடனான உரையாடல் முடிவடைந்ததும் சீடர்கள் எல்லோரும் குளிப்பதற்காக ஆற்றங்கரைக்குச் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களை நோக்கி ஒரு யானை சற்றுக் கோபமாக தும்பிக்கையை ஆட்டியபடி வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் அதன் பாகன் யானைக்கு மதம் பிடித்து விட்டது எல்லோரும் பாதுகாப்பாக ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று கத்திய படியே வந்து கொண்டிருந்தான்.
சீடர்கள் எல்லோரும் மரங்களுக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஒரு சீடன் மட்டும் எமது குரு கூறி இருக்கிறார், எல்லா உயிரினத்திலும் இறைவன் இருக்கிறார், எனவே என்னிலும் கடவுள் இருக்கிறார் அந்த யானையிலும் கடவுள் இருக்கிறார், எனவே என்னை அந்த யானை ஒன்றும் செய்யாது என்று கூறியபடி யானைக்கு எதிரிலேயே நின்றான். வந்த யானை அவனைத் தூக்கி நிலத்தில் அடித்து காலால் மிதித்து விட்டுச் சென்றது.
சீடர்கள் எல்லோரும் ஓடிச்சென்று குருவிடம் நடந்தவற்றைக் கூறினார்கள்.
குரு விளக்கினார், ஆம் யானையிலும் இறைவன் இருக்கிறான் அங்கு இருந்த அனைவரிலும் இறைவன் இருக்கிறான். அதில் அந்த யானைப்பாகன் கத்தினானே எல்லோரும் விலகி கவனமாக இருங்கள் என்று. அந்த யானைப் பாகனிலும் இறைவன் இருக்கிறான் என்பதனை ஏன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏன் அந்தச் சீடன் புரிந்து கொள்ளவில்லை என்று விளக்கினார் குரு.
விளக்கம்: நாம் எப்போதும் பரந்துபட்ட மனப்பான்மையுடன் தெளிந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும். குரு, பெரியோர்கள் மற்றும் எமது மூதாதையர்கள் கூறிய கருத்துக்களை மிகவும் ஆழமாகச் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேன்டும். அதனை விடுத்து மேலோட்டமாக விளங்கிக் கொண்டு முட்டாள்த்தனமான நடந்து கொள்ளக்கூடாது. அதனால் எமக்குப் பாதிப்பே ஏற்படுத்தும்.
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —