கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும்
கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும்.
இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தார் என்பதும் மட்டுமே அறியப்பட்டுள்ளது. அவரது பூர்வீகம் அறிய முடியவில்லை.
பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்தர் கவசங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப் படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய “சஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று ஆரம்பிக்கும் கவசமே பெறும்பாலானோர்களால் தினமும் படிக்கப்படுகிறது.
சஷ்டி கவசம் பிறந்த கதை:
முருக பக்தனான பாலதேவராய சுவாமிகள் ஒருசமயம் கடும் வயிற்றுவலியால் துன்புற்றார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து பாலதேவராய சுவாமிகள் சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம். என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். விரத முதல் நாள் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகனை வழிபட்டு விரதத்தினை முடித்து கோயில் மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.
அந்தக் கணமே பாலதேவராய சுவாமிகள் மனதில் முருகனை நோக்கிப் பாடத் தோன்றியது.
“சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” என்று ஆரம்பிக்கும் திருச்செந்தூர் திருத் தலத்திற்கான 238 வரிகளைக் கொண்ட சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனிமலை, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை ஆகிய திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். ஆறு சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்த போது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி பூரண குணமாகி இருந்தது. கந்தசஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்ட சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கந்த சஷ்டி கவசத்தில் வரும் “சிரகிரி வேலவன்” எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.
சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க மந்திரவரிகள் கொண்டது சஷ்டி கவசம்.
தினமும் இந்த கவசத்தை ஓதி முருகனை நினைந்து வணங்கி வர தீவினை அகலும். அதிலும் சஷ்டி திதியில் ஓதி வழிபட இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது
முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இதேபோல், முருகப்பெருமானுக்கு ஆறு முகங்களும், முருகனின் ஆறுபடை வீடுகளும், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் ஆறு பேர், “சரவணபவ” என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் ஆறு எழுத்து. பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்ற தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, ஏனைய 5 ஆறுபடை வீடுகளுக்கும் பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.
சஷ்டி அன்றும், செவ்வாய்க் கிழமையிலும் கந்தர் சஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். சஷ்டிக் கவசத்தை கந்தர்சஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் வம்ச விருத்தி, காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
போரில் யுத்த வீரர்கள் தம் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒரு பொருள், கருவி, மந்திரம் என்று பொருள். தூல உடலை கருவிகள், ஆடைகள் காத்துக் கொள்வது போல, சூக்கும உடலை மந்திரங்கள் காக்கின்றன.
முருகன்
சிவபெருமானின் இளைய மகன் முருகன் ஆகும். இவர் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து சரவண பொய்கையில் உதித்தார். அதனால் இவர் சரவணன் எனவும், தாமரையின் கந்தகத்தில் இருந்து தோன்றியதால் கந்தன் எனவும், கைகளில் வேல் ஏந்தி இருப்பதால் வேலவன், எனவும் ஆறு முகங்களைக் கொண்டு இருப்பதால் ஆறுமுகன், சண்முகன் எனவும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் காத்திகேயன் எனவும், தணிக்கை மலையில் வீற்றிருப்பதால் தணிகாசலன் எனவும், என்றும் இளமைத் தோற்றத்துடன் இருப்பதால் குமரன் எனவும் பல பெயர்களில் அழைத்து வணங்கப்படுகிறார்.
சில சித்தர்களின் குறிப்பில் இருந்து
முருகக் கடவுள் மனிதனாக இருந்தவர் மகானாக மாறி கடவுளானார் என்பதும் ஒரு குறிப்பு.
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் என முருகனை குறிப்பிடுகிறார்கள் சித்தர்கள். அதாவது ஏறத்தாழ கி மு 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் (சித்தர்) ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. சில காய கற்பங்களை உண்டு என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
சரம் என்றால் மூச்சு, சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம், கடவுளையும் காணலாம் என்பது இவரது தத்துவம். சரத்தை வசப்படுத்திக் காட்டியதால் சரவணன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
அதாவது மூச்சைக் கட்டுப்படுத்த மனம் (எண்ணம்) கட்டுப்படும் (வசப்படும்). மனம் கட்டுப்பட உனக்குள் தேடல் ஆரம்பித்து அந்த இறைவனை உணர்வாய் என்பது தத்துவம். இதுவே ஆன்மீகம் என அழைக்கப்படுகிறது.
அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள் என சில சித்தர் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பு: ஆறுபடை வீடுகளுக்குரிய ஏனைய ஐந்து கந்தர் கவசங்களும் இங்கு இடம் போதாமையினால் இந்த இணையத் தளத்தில் பிறிதொரு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது
— ஓம் சரவணபவ —
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.
இந்த கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போர்க்கு அதாவது தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு முற் பிறவிகளில் செய்த வலிய வினைகள் (பாவங்கள்) தீரும். தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கவலைகள் தீரும். எந் நேரமும் மனதில் எண்ணிக் கொண்டிருப் பவர்களுக்கு செல்வம் அதாவது பொன், பொருள், கல்வி, நோயற்ற வாழ்வு போன்ற இன்பங்கள் கைகூடும். இங்கு துதிப்பது என்பது வாயால் பாடுவது நெஞ்சில் பதிப்போர் என்னும் போது தமது உள்ளத்தில் உருகி வேண்டுபவர்களுக்கு என்று பொருள். நிஷ்டையும் அதாவது தியானம் அதன்மூலம் ஞானம் முக்தியும் கைகூடும்
குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
தேவர்களது துன்பம் தீர போர் புரிந்த குமரனடி அந்த முருகனை வணங்குவோம்.
கந்தர் சஷ்டி கவசம்
சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
சஷ்டி தினத்தில் முருகனை நோன்பிருந்து வணங்க வேண்டும் சரவணப் பொய்கையில் உதித்தவனும் “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரத்தினை உடையவனும் ஆகிய முருகப் பெருமான், சிஷ்டருக்கு அதாவது சீடர்களுக்கு உதவுவதற்காக தனது கைகளில் செங்கதிர் வேலோன் செங்கதிர் நிறத்தில் வேலை ஏந்திக் கொண்டிருப்பவன்.
முருகனை வணங்க உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு. (சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பூரணை வந்து அடுத்து ஆறாம் நாள். கந்தர் சஷ்டி விரதமும் 6 நாட்கள்).
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
பாதங்கள் இரண்டிலும் பல மணிகள் கோர்க்கப்பட்ட சதங்கை இனிமையான இசை எழுப்ப. கிண்கிணி ஆட. (கிண்கிணி சதங்கை, காலணி) சதங்கையில் கட்டப்பட்டுள்ள சிறிய மணிகள் ஆட.
மையல் நடஞ்செயும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
அழகாக நமது உள்ளங்களைக் கொள்ளைக் கொள்ளும் நடனத்தை ஆடும் மயில்வாகனன் (முருகப் பெருமான்). மயிலை வாகனமாக கொண்டிருப்பதால் அவன் மயில்வாகனன். தனது கைகளில் வேல் ஏந்தி வந்து, என்னைக் காப்பதற்காக வந்து (வருவான்).
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
கைகளில் வேலை ஏந்திய எம்மைக் காக்கும் முருகனே வருக. மயிலை வாகனமாக வைத்திருக்கும் முருகப் பெருமானே வருக (வந்து என்னைக் காக்க).
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
இந்திரன் முதலாக எட்டுத்த திக்கிலும் அமைந்திருக்கும் அனைத்துத் தேவதைகளும் போற்றும் சரவணபவ எனும் மந்திரத்துக்கு அதிபதியான அழகிய முருகனே வருக. வந்து என்னைக் காக்கவும்.
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
தேவர்களின் தலைவன் இந்திரன். அவனுக்கு வாசவன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் மகளாகிய தெய்வயானையை மணம் புரிந்தவனே, வாசவன் மருகா, மருமகனே வருக. குறவர் குலமகளாகிய வள்ளிப் பிராட்டியாரையும் நேசமுடன் மணம்புரிந்த முருகனே வருக வருக.
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
ஆறு திருமுகங்களைக் கொண்ட ஐயனே வருக வருக. திருநீற்றை நெற்றியிலும் உடம்பிலும் அணிந்திருக்கும் வேலவனே தினந்தோறும் வருக.
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
சிரகிரி மலையில் அமர்ந்திருக்கும் வேலவனே சீக்கிரம் வருக. சரவணப் பொய்கையில் உதித்த சரவணபவனே விரைவில் வருக. (சிரகிரி மலையை சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி, சென்னிமலை என்றும் அழைப்பர். இங்கு குடிகொண்டிருக்கும் முருகனை சிரகிரி வேலவன் சென்னிமலை முருகன் என அழைப்பர்).
“சரவணபவ” என்பது முருகனின் ஆறெழுத்து மந்திரம். அதன் எழுத்துகளை முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றினால் வெவ்வேறு பயன்கள் கிடைக்கும். அப்படி வெவ்வேறு உருவில் அமையும் ஆறெழுத்து மந்திரங்களையே இந்த கவசத்தின் அடுத்த அடிகளில் கூறப்பட்டுள்ளது.
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
இந்த வரிகளை ஒலி எழுப்பும் மந்திரங்களாகப் பாவித்து முறைப்படி உச்சரிக்க அதன் பலன் கிடைக்கும்.
சரவணபவ = ர(ஹ)ணபவச என எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன. வ வுக்குப் பதிலாக ஹ சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே மந்திர உச்சாடனம் எனப்படும். உச்சாடனம் என்றால், உச்சரிக்கப்படும் மந்திர சக்தியால் நோய், கடன், பேய், பிசாசு, பூதம், எதிரிகள் போன்ற தீய சக்திகளை எம்மிடம் நெருங்க விடாமல் ஒரு கவசத்தினை ஏற்படுத்துவதாகும்.
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
அசுரர் முதலான தீய அரக்கர்களை அழித்து எம்மைக் காக்கும் முருகனே வருக வருக.
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
என்னைக் காத்துக் கொண்டிருக்கும் சிவனின் இளைய குமாரனாகிய முருகன் திருக்கரங்களில் பன்னிரண்டு ஆயுதங்களுடன் பாசக் கயிறு, அங்குசம் போன்ற கருவிகளைக் ஏந்தியுள்ளவனே, அழகாக பரந்து இருக்கும் பன்னிரண்டு திருக்கண்களும் அழகுடன் திகழ விரைவாக எனைக் காக்க வருக வருக.
கந்தப்பெருமான் வேலாயுதம், அம்பு, வில், கத்தி, கேடயம், வாள், கோடாரி, கதாயுதம், சங்கு, சக்கரம், வஜ்ராயுதம், தண்டம் (கம்பு) முதலானவற்றை வெவ்வேறு வடிவங்களில் காரண காரியம் கருதி அவரது கரங்களில் ஏந்தியுள்ளார்.
ஐயும் (ஐம்), கிலியும் (க்லீம்), சௌவும் (ஸெளம்) ஆகியவை “பீஜாக்ஷரங்கள்” என்று வடமொழியில் கூறப்படும். இதனை “பீஜம்+அட்சரம்” என பிரிப்பர். “பீஜம்” என்றால் “உயிர்ப்புள்ள விதை (ஒலி)”, அட்சரம் என்றால் “எழுத்து (தாளம்)”, உயிர்ப்புள்ள ஒலிகள் ஒன்று சேர்ந்தால் அது “மந்திரம்’ ஆகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது எமது முத்திக்கு வழிவகுக்கும்.
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
“ஐம்”, “க்லீம்” என்ற ஒலிகளை “சௌம்” எனும் ஒலியுடன் சேர்த்து உச்சரிக்கும் மந்திர ஒலியானானது
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
ஆன்மாவை அதாவது குண்டலினி சக்தியை தூண்டி உள்ளே உள்ளொளியாக பிரகாசிக்கச் செய்யும்.
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
எழுத்துக்களை இடம் மாற்றி “க்லீம்”, “சௌம்” என்ற வகையில் உச்சரிக்கும் மந்திரம், குண்டலினி சக்தியைக் கிளர்ந்து எழ வைத்து உள்ளொளியை கூட்டும்.
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
இவ்வாறு தோன்றும் உள்ளொளியானது எப்போதும் நிலையாக எனது அகத்தே – புருவ மத்தியில் நிலையாக எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக
தீயாக, அகத் தீயாக தனி ஒளியாய் உள்ளொளியாக எரிந்து, ஒளிர்ந்து, பிரகாசித்துக் கொண்டிருக்கும் எமது மூலாதாரத்தில் அமைந்திருக்கும் குண்டலினி சக்தியாக வீற்றிருக்கும் குகனே முருகனே தினமும் எனக்குள் ஒளிர்வாயாக.
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
ஆறு முகங்களும் அந்த தலைகளில் அணிகின்ற ஆறு கிரீடங்களும்,
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
திருநீறிடும் ஆறு நெற்றிகளும் அழகான நீண்ட புருவங்களும்,
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
பன்னிரண்டு திருக்கண்களும் பவளம் போல் சிவந்த உதடுகளுடனான திருவாய்களும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
நல்ல நெறி காட்டும் ஆறு திருநெற்றிகளிலும் நவரத்தினங்களால் ஆன சுட்டி என்னும் அணிகலனும், பன்னிரண்டு திருச்செவிகளிலும் மிளிர்கின்ற குண்டலங்களும் அணிந்திருப்பவனும்,
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
திரண்ட வலிமையான பன்னிரண்டு தோள்களுடன் கூடிய அழகிய திருமார்பில் பலவகையான அணிகலன்களையும் பதக்கங்களையும் அணிந்திருப்பவனும்,
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
நல்ல மாணிக்கங்களை உடைய நவரத்தின மாலையும், மூன்று நூல்களைத் திரித்து அணிந்த பூணூலும், முத்து மாலையும் அணிந்திருக்கும் மார்புகளும்,
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
தனியாக புகழும் படியான அழகு கொண்டு விளங்கும் திருவயிறும் (திருவுந்தியும்), அசையும் இடையில் சுடர்ஒளி வீசும் பட்டாடை அணிந்திருப்பவனும்,
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
நவரத்தினங்கள் பதித்த நல்ல கவசம் (கேடயம்) அணிந்தவனும், இரு அழகிய தொடைகளும் அதன் முழந்தாள்களும் கொண்ட திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பில் இருந்து எழும் ஒலிகள் முழங்க,
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
அந்தச் சிலம்பொலி இப்படி எல்லாம் ஒலியெழுப்ப. (கவசம் படிக்கும்போது குறிப்பிட்ட சொற்கள் வாயில் உச்சரிக்கும் போது உள்ளேயே ஒரு அதிர்வு எழுந்து குண்டலினி சக்தியைத் தூண்டி உள்ளொளியைப் பெருக்கும் என்பதே உண்மையாகும்)
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
மயில் வாகனனே விரைந்து வருக, முருகவேளே எனைக் காக்க முந்தி வருக.
என்தனை யாளும் ஏரகச் செல்வா
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
என்னை ஆளும் ஒப்புயர்வற்ற தலைவனே. நான் வேண்டும் வரங்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் தந்து அருள்பவனே,
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
லாலா லாலா லாலா என்ற ஒலியுடன் லீலா லீலா லீலா என்ற ஒலி உச்சரிக்கும் உன் அடியார்களுக்கும் மகிழ்வினை உண்டாக்கும் வினோதமான திருவிளையாடல்களைப் புரிபவனும்,
உன்திரு வடியை உறுதியென் றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
உனது திருவடிகளே நிலையான செல்வம் என்று எண்ணும் எனது தலையில் உன் திருவடிகளை வைத்து என்னைக் காத்தருள்வாய் முருகா.
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
என் உயிருக்கும் உயிரான இறைவனே என்னை காத்தருள்வாய். உனது பன்னிரு விழிகளால் உனது குழந்தையான என்னைக் காக்க வேண்டும் முருகா.
பின்வரும் வரிகளை படிக்கும் போது அங்கு குறிப்பிடப்படும் அங்கங்களை நாம் எமது அங்கங்களில் மனதைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
அடியவனின் முகத்தை (வதனம்) அழகுவேல் காக்கட்டும் முருகா.
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
திருநீறு அணிந்த என் நெற்றியை புனிதவேல் காக்கட்டும். எனது இரண்டு கண்களையும் கதிர்வேல் காக்கட்டும்.
விழி(தி)செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
எனது இரண்டு செவிகளையும் வேலவர் காக்கட்டும். என் மூக்குத் துளைகள் (நாசிகள்) இரண்டையும் நல்வேல் காக்கட்டும்.
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
பேசும் எனது வாயைப் பெருவேல் காக்கட்டும். எனது முப்பத்தி இரண்டு பற்களையும் முனைவேல் காக்கட்டும். சொற்களைச் செப்பும் (உச்சரிக்கும்) எனது நாவைச் (நாக்கை) செவ்வேல் காக்கட்டும்.
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
எனது இரு கன்னங்களையும் கதிர்வேல் காக்கட்டும். என் இளமையான (அழகான) கழுத்தை இனியவேல் காக்கட்டும். என் நடுமார்பை (நெஞ்சை) இரத்ன வடிவேல் காக்கட்டும். மார்பு முலைகளை திருவேல் காக்கட்டும்.
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
எனது இரண்டு தோள்களும் வளமுடன் (உறுதியாக) இருக்குபடி வடிவேல் காக்கட்டும். என் பிடரிகள் இரண்டையும் பெருவேல் காக்கட்டும். என் முதுகு அழகுடன் இருக்க அருள்வேல் காக்கட்டும். என் பதினாறு விலா எலும்புகளும் உறுதியாக இருக்க பருவேல் காக்கட்டும்.
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
என் வயிறு (தொந்தி) சீராக இயங்க வெற்றிவேல் காக்கட்டும். எனது சிறிய இடை அழகுடன் இருக்க செவ்வேல் காக்கட்டும். நாணாங்கயிறு (முதுகுத்தண்டை) நல்வேல் காக்கட்டும். ஆண்குறிகள் இரண்டையும் அயில்வேல் காக்கட்டும். இரண்டு பிட்டங்களையும் (பின்பகுதி) பெருவேல் காக்கட்டும்.
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டவடிவான குதத்தை வல்வேல் காக்கட்டும். தொடைகள் இரண்டும் வலிமையுடன் இருக்க பருவேல் காக்கட்டும். எனது கணைக் கால்களையும் முழந் தாள்களையும் கதிர்வேல் காக்கட்டும்.
ஐவிரல் அடிஇணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
ஐந்து விரல்களுடன் கூடிய என் இரு கால் பாதங்களையும் அருள்வேல் காக்கட்டும். எனது இரண்டு கைகளையும் கருணைவேல் காக்கட்டும். இரண்டு முன்கைகளையும் (முழங்கைகளுக்கு கீள் உள்ள பகுதி) முரண்வேல் காக்கட்டும். இரண்டு பின்கைகளையும் (முழங்கைகளுக்கு மேல் உள்ள பகுதி எழுதும் பகுதி) பின்னவளான திருமகள் இருந்து காக்கட்டும்.
நாவில் சரஸ்வதி நல்த்துணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எனது நாவில் சரஸ்வதி அமர்ந்து நல்ல நாவன்மை கிடைக்கட்டும். நாபிக்கமலம் = நாபி + கமலம். நாபி (தொப்புள் / உந்தி), கமலம் (தாமரை). தாமரை போன்ற வடிவுடைய என் தொப்புளை நல்வேல் காக்கட்டும். மூன்று பிரிவாகச் செல்லும் என் உடலிலுள்ள நாடிகளை (இடகலை, பிங்கலை, சுழுமுனை) முனைவேல் காக்கட்டும்.
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
என்னை எப்பொழுதும் எதிர்வேல் காக்கட்டும். என்னை எப்போதும் ஆண்டு கொண்டிருக்கும் அதாவது என்னை வழிநடத்தும் முருகா.
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
அடியேனின் நா அசைந்து வார்த்தைகள் வெளிவரும் நேரம் அதாவது நான் பேசும் நேரத்தில் சீக்கிரமாக வந்து கனகவேல் காக்கட்டும்.
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
தினமும் பகல் நேரங்களில் வச்சிரம் போல் வலிமை உடைய வேல் காக்கட்டும். அரையிருள் (மாலை) நேரத்திலும் அந்த வேலே காக்கட்டும்.
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
முன்னிரவு நேரமான ஏமத்திலும் நடு இரவான நடுச் சாமத்திலும் பகைவர்களை எதிர்த்து அழிக்கும் எதிர்வேல் காக்கட்டும்.
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
பயம், மயக்கம், குழப்பம், அமைதியின்மை, போன்றவற்றை ஏற்படுத்தும் தாமதகுணம் (சோம்பல்) ஏற்படாமல் அந்தச் சோம்பலை நீக்கி சதுர் வேல் என்னைக் காக்கட்டும். கனக வேல் என்னைக் காக்கட்டும். உனது திருவிழிகளால் என்னை நோக்குக நோக்குக.
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
எல்லாவிதமான தடைகளும் அடியோடு நீங்கும்படி அவற்றைத் தாக்குக தாக்குக. உன் கருணைக் கண்களால் என் பாவங்கள் அனைத்தும் பொடிப் பொடியாகப் போகும் வண்ணம் பார்க்க பார்க்க முருகா.
பில்லி சூனியம் பெரும்பகை யகல
எதிரிகள் பகைவர்களால் ஏவப்படும் பில்லி சூனியம் ஆகிய தீய சக்திகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் நீங்கட்டும்.
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும், அல்லல்களைக் கொடுத்து எந்த விதமான மந்திர தந்திரங்களுக்கும் அடங்காத முனிகளும். சிறுபிள்ளைகளை பயமுறுத்தி கொல்லும் பாழடைந்த வீடுகளில் இருக்கும் முனிகளும்.
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
தீ பந்தம்போல எரிந்து எல்லோரையும் பயமுறுத்தும் கொள்ளிவால்ப் பேய்களும், குள்ள வடிவம் கொண்டிருக்கும் குறளைப் பேய்களும், வயதுப் பெண்களைத் தொடர்ந்து சென்று பயமுறுத்து பிரம்ம ராட்சதரும், வயதிற்கு வரும் முன்னரே சிறுவயதிலேயே துர்மரணம் அடைந்த பெண்கள் ஆவியாகிய இரிசி என்னும் பேய் வடிவங்களும், குருதியை விரும்பி உண்ணும் காட்டேரிகளும், இவை போன்ற துன்பங்களைக் கொடுக்கவே இருக்கும் ஆவிகளும், பகலிலும் இருட்டிலும் எதிரே வந்து மிரட்டும் தீய ஆவிகளும் அந்தச் சக்திகளும் உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும் ஓடி ஒளிந்திடவேண்டும் முருகா.
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
உயிர்ப்பலிகளுடன் கூடிய பூசைகளை விரும்பிப் பெற்றுக் கொள்ளும் காளி முதலான தெய்வங்களும், மிகுந்த அகங்காரத்தை உடையவர்களும், மிகுதியான பலம் கொண்டிருக்கும் பேய்களும், பல்லக்கில் ஏறிவந்து அதிகாரம் செய்யும் தண்டியக்காரர்களும், சண்டாளர்களும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும் முருகா.
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
யானையின் காலடியினில் வைக்கப்பட்ட அரும்பாவைகளும்
ஒருவரை, ஒரு குடும்பத்தினை அழிக்க நினைத்து அவரைப் போல் மாவினால் பாவை போன்ற சிறு உருவங்களைச் செய்து அவற்றில் மந்திரத்தை உருவேற்றி அவற்றை யானைகள் உலாவும் இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் புதைத்து வைப்பார்கள். யானையின் காலடியில் மிதிபட்டும் புற்றுகளில் இருக்கும் கரையான்களால் உண்டு அரிக்கப்படும் அந்த பாவைகள் பிறறால்க் கண்டெடுக்கப்பட்டு மாற்று மந்திரம் செய்யப்படும் முன்னர் உருக்குலையும். அப்படி நேர்ந்தால் யாரை அழிக்க நினைத்து அப்பாவைகளைப் புதைத்து வைத்தார்களோ அவர்களும் அவர்களது குடும்பமும் அழிந்து போகும் என்பது சூனியம் வைப்பவர்களின் நம்பிக்கை. அப்படி யானையின் காலடியினில் வைக்கப்பட்ட அரும்பாவைகளும்,
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையில் புதைந்த வஞ்சனை தனையும்
பூனையின் முடி, பிள்ளைகளின் எலும்பு, நகம், தலைமுடி, நீண்ட முடியுடன் கூடிய மண்டை ஓட்டில் செய்யும் (பொம்மைகளும்) பாவைகளும், பல கலசங்களும் (சிறிய சட்டி, சுட்டி) மந்திர உருவேற்றப்பட்டு, ஒருவரின் அழிவை விரும்பி அவரது வீட்டில், வளவில் புதைத்து வைக்கப்படும். அப்படி வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வஞ்சனைச் செயலும்,
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
ஒட்டியம் என்பது ஒருவகை சூனிய மந்திரச் சாத்திரம் (நூல்). அந்த நூலில் கூறப்பட்ட முறையில் செய்யப்பட்ட மந்திர தந்திரங்கள். அந்த வகையில் செய்யப்பட்ட ஒட்டியப் பாவைகள். அந்த ஒட்டியச் செருக்கும்,
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட
ஒருவரை வீழ்த்த எண்ணிப் புதைக்கப்பட்ட சில்லரைக் காசும், பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் குருதியில் கலந்த சோறும், அந்த ஒட்டியச் சாத்திரம் கூறும் மந்திர சக்தியால், மனம் கலங்கித் தனி வழியே போகும்படி செய்யும் மந்திரமும், உன் அடிமையான என்னைக் கண்டவுடனே நடுங்கி ஒதுங்கி அழிந்து போகும்படி நீ அருள் செய்ய வேண்டும் முருகா. எதிரிகளும் வஞ்சகர்களும் மனம் திருந்தி வந்து என்னை வணங்கிட வேண்டும். எம தூதர்கள் (மரணம்) என்னைக் கண்டால் கலங்க வேண்டும் முருகா.
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
தீயவர்கள் என்னைக் கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும். பயந்து புரண்டு ஓட வேண்டும். வாய் விட்டு அலறி புத்தி கெட்டு ஓட வேண்டும் முருகா.
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
தீயவர்களையும் வஞ்சகரகளையும் இந்த காலதூதர்கள் கொண்டு வரும் படியால் அதாவது கதாயுதத்தினால் முட்ட வேண்டும் அதாவது அடிக்க வேண்டும். பாசக் கயிற்றால் அவர்கள் கதறக் கதற அவர்களின் அங்கங்கள் எல்லாம் கட்ட வேண்டும். அவர்கள் கால், கைகள் எல்லாம் முறியும்படி கட்டி உருட்ட வேண்டும்.
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
பாசக் கயிற்றால் அவர்கள் கதறக் கதற கட்ட வேண்டும். அவர்கள் விழிகள் பிதுங்கும்படி முட்ட (அடிக்க) வேண்டும். அவர்கள் செதில் செதிலாக உதிர்ந்து போகும் படி அவர்களை நீ அழிக்க வேண்டும் முருகா
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
சூரனின் (அசுரனின்) பகைவனான முருகனே. கூர்மையான உன் வேலால் அவர்களைக் குத்த வேண்டும். பகலவனின் (சூரியன்) எரிக்கும் தணல் போல நீ அவர்களைப் பற்றி எரிக்க வேண்டும். அவர்கள் வெருண்டு ஓடும்படி உன் வேல் கொண்டு தாக்க வேண்டும் முருகா.
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும்
எனது எதிரில் வரும் கொடிய விலங்குகளான புலிகளும், நரிகளும், வெறி நாய்களும், எலிகளும், கரடிகளும் என்னைக் கண்டதும் உன் அருளால் என்னைத் தாக்காமல் அவை திரும்பி ஓடிட வேண்டும்.
விஷ ஜந்துகளான தேள்களும், பாம்புகளும், பூரான்களும், தேள்களும், கடித்து எனது உடலில் விஷம் ஏறியிருந்தாலும் அவை எளிதுடன் இறங்க நீ அருளவேண்டும் முருகா.
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
வாதம், குஷ்டம் முதலிய பெரு நோய்களும் (ஒளிப்பும்), சுளுக்கு முதலான நோய்களும், ஒற்றைத் தலைவலியான ஒரு தலை நோயும், வாயு தொடர்பான வாத நோய்களும், குளிர் நோயான சயித்தியமும், கை கால்கள் இழுக்கும் வலிப்பு நோயும், பித்தத்தால் உண்டாகும் மனநோய் முதலியவையும், வயிற்று வலியான சூலை நோயும், எலும்பை உருக்கும் குன்ம நோயும், உடற்சோர்வு என்னும் சொக்கு நோயும், தோலை அரிக்கும் சிரங்கும், கை கால் குடைச்சலும், விலாப்புறங்களில் வரும் பக்கப்பிளவையும், தொடையில் படரும் தேமலும், பல் குத்து சூத்தை போன்ற நோயும், இடுப்பில் வரும் கட்டிகளும், எல்லாப் பிணிகளும் என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும் முருகா.
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
எல்லா விதமான நோய்களும், துன்பங்களும் என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி என்னை அணுகாதபடி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும் முருகா.
தீமைகளை, நோய் துன்பங்களை எல்லாம் விலக்கி அருள வேண்டும் என்று வேண்டியதன் பின், பின்வரும் பகுதியில் நன்மைகளை எல்லாம் தரும் முருகனின் கருணையை விளக்குகிறார்.
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காக
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் ஆகிய ஏழு மேல் உலகங்களும், அதலலோகம், சுதலலோகம், விதலலோகம், ரசாதலலோகம், தலாதலலோகம், மஹாதலலோகம், பாதாளலோகம் ஆகிய ஏழு கீழ் உலகங்களும், அங்கு இருக்கும் அனைத்தும் எனக்கு நன்மை செய்யும் வகையிலும், ஆண்களும், பெண்களும் அனைவரும் எனக்கு உதவி புரியும் படியும், இந்த பூமியை ஆளும் மன்னர்களும் மகிழ்ந்து என்னுடன் இன்பமாக உறவாடவும் அருள் செய்வாய். உன் திருநாமங்களால் உன்னைத் துதிக்க அருள் செய்வாய் முருகா.
உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம் ஒளி பவனே
உன்னை வணங்க உன் திருநாமங்களான (பெயர்களான)
சரவண பவனே: சரவணப் பொய்கையில் உதித்தவனே.
சை ஒளி பவனே: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றும்படி அனைத்து மலைகளிலும் ஒளிர்பவனே.
திரிபுர பவனே: தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றினால் ஆன கோட்டைகளை (முப்புரங்களை) ஆள்பவனே.
திகழ் ஒளி பவனே: எங்கும் எப்போதும் ஒளியாக விளங்குபவனே
பரிபுர பவனே: பரிபுரம் என்னும் காலணியை (சிலம்பு) அணிந்து விளங்குபவனே.
பவ ஒளி பவனே: பிறப்பு இறப்பு என்னும் பிறவிப் பிணியில் இருந்து லிருந்து என்னை விடுவிப்பவனே முருகா.
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
திருமால், திருமகள் இருவருக்கும் மருகனே. தேவர்களின் தலைநகராகிய அமராபதியை சூரனின் கொடுமையிலிருந்து, சிறையில் இருந்து காத்து, விடுவித்தவனே. கந்தனே, கதிரவனைப் போல் ஒளி வீசும் வேலவனே.
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
கார்த்திகைப் பெண்களின் (மாதத்தின்) திருமகனே. கடம்ப மாலை அணிந்தவனே. கடம்பனை, இடும்பனை ஆகிய அசுரர்களை அழித்த இனியவனே, வேல் முருகனே, திருத்தணிகை மலையில் உறைபவனே. சங்கரனின் திருமகனே. கதிர்காமத்தில் உறைகின்ற கதிர்வேல் முருகனே,
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
பழநிமலையில் வாழ்கின்ற பாலகுமாரனே. திருவாவினன் குடியில் வாழும் அழகிய வேலாயுதா. திருக்காளத்தியில் வாழும் செங்கல்வராயா. சமராபுரி எனும் திருப்போரூரில் வாழும் சண்முகனே, முருகவேளே.
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
கருமையான தலைமுடியை உடைய கலைமகள் என் நாவில் வீற்றிருப்பதால் என்னால் உன்னைத் தொடர்ந்து பாட முடிகின்றது. முருகவேளே. என்னுடன் எப்பொழுதும் அருகிலேயே இருக்கும் என் தந்தையான முருகப்பெருமானை நான் பாடினேன். அந்தப் பரவசத்தில் ஆடினேன் துதித்தேன்.
நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரஷி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
திருவாவினன்குடியில் வாழும் குழந்தைச் சுவாமியான உனது விபூதியை, அன்புடன் நான் நெற்றியில் அணிந்து கொள்ள, எனது பாவங்கள் பற்றது நீங்கி, உன் திருவடிகளைப் பெற உனது அருள் கிடைக்கும். வேலாயுதனே. அன்னம், பொருள் போன்ற பலவித செல்வங்களும் நீ கொடுத்து. அன்புடன் என்னைக் காத்து அடியேன் சிறப்புடன் வாழும்படி அருள் புரிவாயாக முருகா.
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
மயில் வாகனத்தை உடையவனே வாழ்க வாழ்க. வடிவேலை கைகளில் ஏந்தியவனே வாழ்க வாழ்க. மலையில் வாழும் மலைகளின் குருவே வாழ்க வாழ்க. மலைக் குறவர் திருமகளான வள்ளியுடன் நீடூழி வாழ்க வாழ்க. சேவற் கொடி ஏந்தியவனே வாழ்க வாழ்க. என் வறுமைகள் எல்லாம் நீங்க நீ வாழ்க வாழ்க முருகா
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
எத்தனை எத்தனையோ குறைகளையும் பிழைகளையும் அடியேன் செய்திருந்தாலும் என்னைப் பெற்றவளான குறமகளும் குருவுமான நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும் முருகா.
பெற்றவள் குறமகள் பெற்றவள் ஆமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன் என் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
பிள்ளை என்று அன்பாய் என் மேல் பிரியம், பாசம் வைத்து, மைந்தன் இவன் என்று என் மேலும் உன் அடியவர்கள் மேலும் மனம் மகிழ்ந்து அருளி, நீயே தஞ்சம் என்று வரும் உன் அடியவர்கள் தழைத்து வாழ அருள் செய்வாய் முருகா.
கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லும் முறையையும் அதனால் விளையும் பயன்களையும் இந்தக் கவசத்தினை இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் பின்வருமாறு விளக்குகிறார்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
முருகனை துதிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாலன்தேவராயன் ஆகிய நான் விரும்பி இயற்றிய இந்த நூலை, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நல்ல கருத்துடன் ஆசாரத்துடன் (பய பக்தியுடன்) உடல் உறுப்புகளின் அழுக்கு எல்லாம் தீரும்படி நன்கு நீராடி, அன்புடன் ஒரே நினைவாகக் கொண்டு படிக்க வேண்டும்.
கந்தர் சஷ்டிக் கவசம் மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்து ஆறுருக் கொண்டு
கந்தர்சஷ்டி கவசம் ஆகிய இந்த தோத்திரத்தை சிந்தை கலங்காமல் தியானிப்பவர்கள், அதிலும் ஒரு நாளுக்கு முப்பத்து ஆறு முறை உருவேற்றி ஓதி செபித்து வர,
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
கந்தர்சஷ்டி கவசம் பாடி முருகனை வணங்கி மிகவும் மகிழ்ந்து திருநீறு அணிந்து வர, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய எட்டுத் திசைகளிலும் வாழும் எல்லா மக்களும் நண்பர்கள் ஆவார்கள். அந்த எட்டுத் திசைகளையும் காக்கும் தெய்வங்களான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்கள் அருள் புரிவார்கள். எதிரிகள் எல்லோரும் வந்து வணங்குவார்கள்.
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கவசம் படித்து வர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது (நவ) கிரகங்களும் மகிழ்ந்து நன்மைகள் அளித்திடுவார்கள். மன்மதன் போல அழகு பெறுவார்கள். எந்த நாளும் ஈரெட்டு பதினாறு வயது ஆரோக்கியத்துடன் இளமையுடன் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
கந்தனின் கையில் இருக்கும் வேலைப் போல அடியவர்களைக் காக்கும் இந்த கந்தர் சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு அடியையும் பொருளுணர்ந்து படித்தால் உண்மைப் பொருள் விளங்கும்.
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
இந்த நூலை ஓதியவர்களை கண்டால் பேய்கள் பயந்து ஓடும். தீயவர்கள் பொல்லாதவர்களைப் பொடிப் பொடியாக்கும் (சிதறி .ஓட வைக்கும்)
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
நல்லவர்கள் உள்ளத்தில் நினைவில் நின்று என்றும் மகிழ்வைக் கொடுக்கும் எல்லா பகையையும், தீமையையும் அழிக்கும் முருகப்பெருமானின் திருவடிகள் அவற்றை அறிந்து எனது உள்ளத்திலும் முருகனை இருத்தினேன்.
வீர லட்சுமிக்கு விருந்துண வாக
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
அஷ்ட லக்ஷ்மிகளில் வீர லக்ஷ்மிக்கு விருந்து உணவாக சூரபத்மனைத் அழித்த திருக்கைகளால் இருபத்தி ஏழு நட்சத்திர தேவதைகளிடம் அமுது உண்டு கார்த்திகேயன் என்று பெயர் பெற்று எல்லா தேவதைகளுக்கும் பெருமை தந்த குருபரனான பழனிக்குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை வடிவில் இருக்கும் முருகனின் சிவந்த திருவடிகள் போற்றி. தீய வழிகளில் நான் செல்லாமல் என்னைத் தடுத்து உனது அடியவனாக என்னை ஆட்கொண்ட வேலவனே போற்றி
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
மிகுந்த அழகான வேலவனே போற்றி. தேவர்களின் சேனைத் தலைவனே போற்றி. குறவர்களின் திருமகளான வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் தலைவனே போற்றி. வலிமையுடைய தெய்வீகமான திருவுடலை உடையவனே போற்றி.
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
துன்பங்களைக் களையும் துன்பங்களையே ஆயுதமாக உடையவனே, இடும்பைகளை (துன்பங்களை) நீக்குபவனே. போற்றி. கடம்பப் (ஒருவகை மலர்) பூ மாலை அணிந்தவனே போற்றி. கந்தனே போற்றி. வெட்சி (ஒருவகை மலர்) பூ மாலை அணியும் தலைவனே போற்றி. மிக உயர்ந்த மலையில் கந்தகிரியில் இருக்கும் பொற்சபைக்கு (தமிழ்ச் சபைக்கு) ஒப்பில்லாத அரசனே, தலைவனே போற்றி.
மயில்நடம் இடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
நடனமிடும் மயிலில் அமர்ந்திருப்பவனே. உனது மலர் போன்ற திருவடிகள் சரணம். “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரத்திற்குத் தலைவனே சரணம் சரணம். ஆறுமுகனே சரணம் சரணம்.
கந்த சஷ்டி கவசம் முற்றிற்று.
குறிப்பு: முருகப்பெருமானின் பிற ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனிமலை, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை ஆகிய திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை பின்வரும் link மூலமாக அறிய முடியும்.
— ஓம் சரவணபவ —