ஓட்டமாவடி பாலம் (சிறுகதை)

0 0
Read Time:77 Minute, 16 Second

கீழ்வானம் சிவந்து கொண்டிருந்தது. கதிரவன் தன் இளம் கதிர்களைப் பரப்பி அந்தக் கிராமத்தை இருளில் இருந்து விடுவித்துக் கொண்டிருந்தான். நெற் கதிர்கள் காலைத் தென்றலின் தாளத்துக்கு நடனமாடிக் கொண்டிருந்தன. தூரப் பார்வைக்கு தரையில் பச்சைக் கம்பளம் விரித்திருப்பது போலத் தோற்றமளித்தது அந்த வயல். பல்லினப் பறவைகளும் தத்தமைத்து குரல் வளத்தைக் காட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கடதாசி ஆலையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்துக்கும் கேட்க்கும்படி ஒருமுறை கூவி முடித்தது. ஆதவன் தூக்கத்தில் இருந்து விடுபடத் தொடங்கினான். காகித ஆலையின் அந்த ஆறுமணி சயரன் ஒலி கேட்ட பின்னரும் அந்த மரத்திலிருக்கும் குயில் கூவி முடிக்கும்வரை அவன் கட்டிலில் இருந்து எழுந்திருக்க மாட்டான். இன்று எங்கே அந்தக் குயிலோசை?

அவனது அறைக்கு அருகில் உள்ள அந்த வாகை மரத்தில்த் தான் அந்தக் குயில் காலையில் வந்திருந்து கூவும். அவன் அந்தக் கடதாசி ஆலையில் பொறியியலாளனாக பணிபுரியத் தொடங்கிய கடந்த மூன்று வருடங்களாக அந்த ஆலை வதிவிடத்திலுள்ள அந்த அறையில்த்தான் வசித்து வருகிறான். ஒரு நாள்க்கூட காலையில் அந்தக் குயில் கூவ மறந்ததில்லை. என்ன காற்று, வெயில், மழை எதுவாக இருந்தாலும் அந்தக் குயில் கூவ மறந்ததில்லை. இன்று மட்டும் எங்கே போய்விட்டது? ஒருவேளை அதன் ஆயுட் காலம் முடிந்துவிட்டதா. மூன்று வருடங்களுக்காக எனக்காக மீட்டிய அந்த இசை நின்று விட்டதா. உன் பணியை உன் குஞ்சுகள் ஒன்றின் மூலமாக தொடர்ந்திருக்கலாமே. இந்த ஆதவன் என்ற உன் ரசிகனை ஏன் மறந்தாய். வீட்டில் இருக்கும் வேளைகளில் அம்மாவும் இங்கு பணிபுரியத் தொடங்கிய நாளில் இருந்து நீயும் அல்லவா காலையில் என்னைத் துயில் எழுப்பி வருகிறீர்கள்.

“டொக், டொக், டொக்” அவனது வதிவிடக் கதவு மிகவும் பலமாக இடைக்கிடை “ஐயா ஐயா” என்ற அவசரக் குரலுடன் தட்டுவது கேட்டது. ஆலை இயந்திரத்தில் ஏதாவது கோளாறு என்றாலும் இவ்வளவு அவசரமாகத் தட்டமாட்டார்களே என்னவாக இருக்கும் என்று எண்ணியவாறு அவசரமாகக் கதவைத் திறந்தான் ஆதவன்.

செக்யூரிட்டி செல்வராசா மிகவும் பதட்டத்துடன் கூறினான் “ஐயா ஆலைக்குள் ஆமி வந்திட்டுது. எல்லோரையும் உடனே உள்ளுக்குள் வரட்டாம்.

கலக்கத்துடன் வெளியில் நோக்கினான் ஆதவன்.

காணும் இடமெல்லாம் ஆமிக்காரர் படுத்திருந்தனர். எங்கும் ஒரே ஆமி மயமாக இருந்தது. ஆங்காங்கே கவச வாகனங்களும் நின்று கொண்டிருந்தன.

செக்யூரிட்டி செல்வராசா அடுத்த வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்.

மிகவும் அவசரமாக உடைகளை மாற்றினான் ஆதவன். இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று எண்ணியவாறு ஆலையை நோக்கி மஞ்சள் துவிச்சக்கர வண்டியை மிதிக்கத் தொடங்கினான் ஆதவன்.

“டேய் இறங்கடா.”

அதிர்ச்சியுடன் திரும்பினான்.

பற்றைக்குப் பின்னால்ப் படுத்திருந்த ஒரு சிங்கள இராணுவத்தினன் மீண்டும் கொச்சைத் தமிழில்க் கத்தினான்.

இறங்கி நடந்து போடா.

ஆதவனின் இரத்தம் ஒருமுறை கொதித்தது. என்னை இதுவரை யாரும் போடா என்று அழைத்ததில்லை. மிகவும் ஆதங்கத்துடன் இறங்கி வண்டியை உருட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

அவனுக்கு முன்னால் ஆலை முகாமையாளர் உட்பட பலர் தத்தமது துவிச்சக்கர வண்டிகளைத் தள்ளியவாறு நடந்து கொண்டிருந்தனர். எல்லோருக்கும் இவன் இப்படித்தான் பணித்திருப்பான் போலத் தெரிகிறது. உணர்ச்சியை அடக்கியவாறு ஆலையை நோக்கி நடந்தான்.

என்ன பிரச்சினை வந்தாலும் இராணுவம் ஆலை வளாகத்துக்குள் வராது என்று அரசாங்கம் உறுதி அளித்ததாக எமது தலைமைக் காரியாலயம் கொழும்பில் இருந்து தெரிவித்ததே. இன்று எல்லாமே எதிராக அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாரிடம் கேட்பது? யாரிடம் முறையிடுவது?

ஆலைக்குள் பிரவேசித்தான் ஆதவன்.

பிரதான அலுவலகத்துக்கு முன்னால் உள்ள திடலில் எல்லோரும் அமர வைக்கப் பட்டுக்கொண்டிருந்தனர் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிரிக்கப் பட்டிருந்தனர்.

ஆதவனும் ஆண்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.இராணுவச் சீருடைகள் மக்களை சுற்றி கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள் அங்கே முஸ்லீம் மக்கள், ஆண்கள் தமது “குல்லா” மூலமும் பெண்கள் மொட்டாக்கு மூலமும் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டனர்.

“அண்ணை இவங்களைப் பார்த்தால் ஆமிக்காறங்கள் போலத் தெரியேல்லையே, காடையர்கள் போலல்லவா தெரிகிறது. அருகிலிருந்த முருகேசரிடம் மெதுவாகக் கதை கொடுத்தான் ஆதவன்.

ஓம் தம்பி இவங்களைக் clearance group என்று சொல்லுறது. பகுத்தறிவில்லாத சிங்களக் காடையர்களையும், சிறையில் இருக்கும் கொலை, கொள்ளை, போன்ற கடும் குற்றம் புரிந்தவர்களையும் மன்னிப்பு வழங்கி குறுகியகால இராணுவப் பயிற்சி வழங்கி, சகல போதைப் பொருளும் கொடுத்து clearance group என்று வைத்திருக்கிறது அரசாங்கம். ஒரு சண்டைக் களத்தில் ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு முதலில் இவங்களைத்தான் அனுப்புவாங்கள். பின்னால்த்தான் இராணுவம் வரும் இவங்கள் என்ன காடைத் தனமும் செய்யத் தயங்க மாட்டாங்கள் அதனை அரசாங்கமும் கண்டு கொள்ளாது. இண்டைக்கு என்ன நடக்கப் போகுதென்று தெரியேல்லை. என்று சற்று கவலையுடன் பதிலளித்தார் முருகேசர்.

ஆலை முகாமையாளர் ஒரு இராணுவ அதிகாரியுடன் உரையாடிக் கொண்டிருந்தது சிறிது ஆறுதலாக இருந்தது ஆதவனுக்கு.

வெயிலின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. கைக் கடிகாரத்தைப் பார்த்தான் அது காலை எட்டு மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. கூடவே அது 26 ஆம் திகதி என்பதனையும் காட்டியது. அது July மாதம் ஆகையால் வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாகவே இருந்தது.

சற்றுத் தூரத்தில் பம்பர் (விமானம்) குண்டு போடும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. இடைக்கிடை துப்பிக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தது.

தம்பி அந்தப் பாலத்தடியிலை தான் குண்டு போடுறாங்கள் போலத் தெரியுது. முருகேசர் அனுமானித்தார்.

ஆதவனுக்குச் சிறிது பசி எடுத்தது போல இருந்தது. அங்கு சில சிறுவர்கள் பசியால் தாகத்தால் வெயில் வெக்கையினால் அழுவதும் கேட்க்கக் கூடியதாக இருந்தது.  இராணுவத்தினரோ எதனையும் பொருட்படுத்தாது எல்லோரையும் பார்த்து முறைத்தபடியே இருந்தனர். இருந்தும் முஸ்லீம் மக்களுக்கு மட்டும் சிறிது சலுகை கொடுத்திருந்தனர். அவர்கள் இராணுவத்தினரிடம் தமது அடையாள அட்டையைக் காட்டிய பின்னர் வெளியில்ச் சென்று நீர், உணவு எடுத்துவர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீர் மற்றும் சிற்றுண்டி எடுத்து வந்து எல்லோருக்கும் பகிர்ந்தளித்தனர். அது அந்நேரத்தில் அங்கிருந்த எல்லா மக்களுக்கும் பெரிய உதவியாக இருந்தது. அதில் ஆதவனும் நீர் வாங்கிப் பருகிக் கொண்டான்.

தம்பி பாரன் எங்கடை மண்ணினில எங்களை அடிமைகள் போல இருத்திப் போட்டு உவையள் எவ்வள்வு ஆதிக்கம் பண்ணீனம். ஒரு நாளைக்கு இதுக்கெல்லாம் பதில் சொல்லத்தானே வேணும். முருகேசர் மிகவும் ஆதங்கப்பட்டார்.

திடீரென ஒரு இராணுவத்தினன் மக்கள் மத்த்தியில் வந்து நின்றான். அவனது உடையில் இருந்து அவன் ஒரு காப்டன் தரத்தைச் சேர்ந்தவன் என்பதனை அனுமானிக்கக் கூடியதாக இருந்தது. அவன் ஒரு சிறந்த காடையனாக இருப்பான் என்பதனையும் அவனது முகம் காட்டிக் கொடுத்தது. இரு இராணுவத்தினர் அவனது இரு மருங்கிலும் பாதுகாப்புக் கொடுத்தனர். எல்லோரும் அவனை நோக்கிய வண்ணமாகவே இருந்தனர். அவன் எல்லோரையும் நன்கு நோட்டமிட்டான். அவனது பார்வையில் இருந்து எதோ ஒரு விபரீதம் நடைபெறப் போவது போலத் தோன்றியது. சில குழந்தைகளின் அழுகுரலைத் தவிர அங்கு நிசப்தம் நிலவியது.

“சிங்களம் தெரிஞ்சவன் இருக்கா?” கொச்சைத் தமிழில் வினவினான்.

ஒரு கை சட்டென மேலெழுந்தது. அதனைத் தொடர்ந்து சில கைகள் மேலெழுந்தன. முதலில் கை தூக்கியவனிடம் சிங்களத்தில்க் கேட்டான்

உன் பெயர் என்ன?

“நிசங்கா” நிசங்கா பதிலளித்தான்.

சிங்களமா? இராணுவத்தினன் வினவினான்.

“ஆம் புத்தளம்.” நிசங்கா பதிலளித்தான்.

இங்கு என்ன செய்கிறாய்?

நிசங்கா எல்லோரையும் காட்டி “இவர்களுடன் பத்து வருடங்களாக இந்த ஆலையில் வேலை செய்கிறேன்.

காப்டன் எல்லோரையும் காட்டி “இங்கு யார் யார் பயங்கரவாதிகள் என்று காட்ட முடியுமா?” என்றான்.

“எனக்குத் தெரிய இங்கு யாரும் அப்படி இல்லை. எல்லோரும் இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களும் அவர்களது குடும்பமும் தான் இங்குள்ளனர்” நிசங்கா பதிலளித்தான்.

இங்கு பல பயங்கரவாதிகள் இருப்பது எமக்குத் தெரியும் உனக்குத் தெரியாதா?

எனக்குத் தெரிய இங்கு யாரும் அப்படி இல்லை.

நீ சிங்களவனாக இருப்பதால் உனக்கு யாரும் பிரச்சினை தருவ தில்லையா?

இன்றுவரை எல்லோரும் என்னுடன் நன்றாகத்தான் பழகுகிறார்கள். எனக்கு அப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை.

அப்படியென்றால் நீ ஒரு பயங்கரவாதியா? அவர்களுக்கு உதவி செய்கிறாயா? காப்டன் வினவினான்.

“நான் இந்த ஆலையில் ஒரு ஊழியன். என் தொழிலை, கடமையைச் செய்கிறேன்.” நிசங்கா.

“நான் கூறுவதை இவர்களுக்கு தமிழில் கூறு.” காப்டன் கட்டளை யிட்டான்.

“சரி.” என்றான் நிசங்கா.

இராணுவத்தினன் சிங்களத்தில்க் கூறத் தொடங்கினான். நிசங்கா தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தான்.

“இது எங்கள் நாடு. இது ஒரு சிங்கள, பௌத்த நாடு. எந்தப் பயங்கர வாதத்துக்கும் இங்கு இடமில்லை. எம்மை எதிர்த்தால் எவராக இருந்தாலும் அழித்துவிடுவோம்.

பேச்சை நிறுத்தியவன் தனது உதவியாளன் ஒருவனுக்குச் சைகை காட்டினான்.

உதவியாளன் கூட்டத்துக்கு மத்தியில் வந்து நின்று கண்ணில்பட்ட இளைஞர் யுவதிகளை எழுந்து நிற்கச் சொன்னான்.

ஏதோ அசம்பாவிதம் நடைபெறப் போகிறது என்பதனை ஊகித்த மக்கள் முழிகள் பிதுங்கியவாறு அந்தக் கேப்டனைப் பார்த்த வண்ணமாக இருந்தனர்.

வேலியே பயிரை மேயும்போது யாரிடம் எப்படி முறையிடுவது என்று தெரியாது எல்லோரும் கலங்கியவாறு இருந்தனர்.

ஆதவன் உட்பட அந்த ஆலையில்ப் பணிபுரியும் 46 இளைஞர்களைத் தெரிவு செய்தவன் “வாங்கடா இங்காலை” என்றான் கொச்சைத் தமிழில்.

அந்த 46 பேரும் அந்தக் கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர்.

மீண்டும் காப்டன் நிசங்காவிடம் கூறினான் “இவங்களிடம் கூறு.” சிங்களத்திக் கூறிக்கொண்டே போனான். நிசங்கா மிகவும் தழுதளத்த குரலில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தான்.

“எங்களுக்குத் தேவையானவர்களை நாங்கள் எடுத்துவிட்டோம். இனி இவர்கள் திரும்பி வரமாட்டார்கள். உங்களோட பெடியன்களோட சண்டையிட இவங்களைத்தான் முன்னுக்கு அனுப்பப் போகிறோம். உங்கடை பெடியன்கள் தான் இவங்களை சுட்டுக் கொல்லப் போறங்கள். இவங்களை இறுதியாக வழியனுப்பி வையுங்கோ.”

அவன் கூறி முடிப்பதற்குள் மக்கள் கூட்டத்தில் இருந்து மரண ஓலம் எழத்   தொடங்கியது.

ஆதவன் எண்ணிக் கொண்டான் “இன்று எனது இறுதி நாள். என்னுடைய இறுதி நாளை ஒரு படிப்பறிவில்லாத சிங்களக் காடையன் தீர்மானித்து விட்டானே. இவர்களிடமிருந்து நான் ஒருவேளை தப்பித்து விட்டால் இவர்களுக்கு எதிராக நான் துப்பாக்கி ஏந்துவது நிட்சயம்” என்று மனதுக்குள் குமுறிக் கொண்டான்.

காப்டன் நிசாங்காவுக்குக் கட்டளையிட்டான் “உன்வேலை முடிந்து விட்டது. நீ போய் இரு.”

நிசங்கா அவனுடன் விடாது வாக்கு வாதப்பட்டான். “இவர்கள் அப்பாவிகள். எல்லோரும் ஆலையில் வேலை செய்பவர்களும், அவர்களது கும்பத்தினரும். இவர்கள் எவ்வித போராட்டங்களுக்கும் செல்லாதவர்கள். இவர்களுடன் நான் பத்து வருடங்களாகப் பழகியிருக்கிறேன். இவர்களை விட்டுவிடு.”

அப்படியானால் நீயும் போய் அவர்களுடன் நில்” என்று கட்டளையிட்டான் அந்தக் காப்டன்.

அந்த 46 பேருடன் இணைத்து கொண்ட நிசங்கா கூறினான் “யாரும் பயப்படாதீர்கள். “நான் செத்த பின்னர்தான் உங்களை சாக விடுவேன்” என்று கூறிவிட்டு அந்தக் காப்டனுடன் மீண்டும் வாக்குவாதப் படத் தொடங்கினான்.

ஆதவன் கூட்டத்தினரைக் கவனித்தான். “முருகா”, “இயேசுவே” “அல்லா”. எல்லா மதத்தினரும் தமக்காகப் பிராத்தனை செய்வதனை அவதானித்தான்.

ஆதவன் அருகில் நிற்ற சிவா சொன்னார் “ஆதவன் பார்த்தாயா எல்லோரும் எமக்காக அழுகிறார்கள். அவன் மஜீத்தைப் பார் எம்மை வெறித்த பார்வை பார்த்தபடி இருக்கிறான்.”

ஆதவன் அவனை ஆலையிலும் கவனித்து இருக்கிறான். யாரையும் பார்த்து எளிதில்ச் சிரிக்க மாட்டான். எப்போதும் ஒரு வெறித்த பார்வையுடனேயே திரிவான். அரசியல் செல்வாக்கு மூலமாக ஆலையில் வேலை எடுத்தான் என்று பேசப்படுபவன்.

ஆதவன் பதிலளித்தான் “ஆம் சிவா அண்ணை. எம்மைக் கெதியில்க் கொல்லட்டும் என்று பார்க்கிறான் போலத்தான் தெரிகிறது”.

“எங்களை இண்டைக்கு என்னவோ செய்யப் போறாங்கள் போலத்தான் தெரியுது சிவா அண்ணை” ஆதவன் மெதுவாகக் கூறினான்.”

“உந்த ஓட்டமாவடிப் பாலம் கடக்க உவங்கள் எத்தனை தரம் முயற்சி செய்தவங்கள். எங்கடை பெடியன்களின்டை எதிப்பைச் சமாளிக்க முடியாமல் வந்த வழியே திரும்பி ஓடினவங்கள். இந்தமுறை எங்களை முன்னுக்கு விட்டுப்போட்டு அந்தப் பலத்தைக் கடக்கப் போறாங்கள் போலத் தெரியுது. எங்களை நாளைக்கு TV யில் சண்டையிலே சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கர வாதிகள் என்று காட்டுவாங்கள். அவங்கடை ஆட்சி அவர்கள் சொல்வதைத்தான் சிங்களச் சனம் நம்பும்.” கூறி முடித்தார் சிவா அண்ணை.

அருகில் நின்ற சார்ள்ஸ் கூறினான் “பாலத்துக்கு அங்காலை பெடியங்கள் பெரிய பங்கர் கட்டி ஆயத்தமாக நிக்கிறாங்கள். நான் அதாலை கடைக்குப் போய் வரேக்கை பார்க்கிறானான். அவங்கள் ஆமியைப் பாலத்தைக் கடக்க விடமாட்டாங்கள். நாங்கள் இண்டைக்குத் தப்பிறது கஷ்டம் தான். எங்கடை காலத்துக்குப் பாரன் இந்த telephone exchange உம் எல்லோ வேலை செய்யுதில்லை. அது இருந்தால் என்றாலும் எங்கடை மில்ஸ் மேனேஜர் தலைமைக்க காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார். எங்கடை கதை இண்டையோடே சரி”

ஆதவனும் கேள்விப் பட்டிருக்கிறான். பாலத்துக்கு அங்காலை அதாவது தமிழ்ப் பிரதேசத்தினுள் இராணுவம் போக முடியாதவாறு தமிழ்த் தீவிரவாதிகள் பாதுகாப்பு அரண் அமைத்து காவல் நிற்கிறார்கள். இராணுவம் தூரத்தில் வருவது கண்டால் இப்புறம் வந்து மிதி வெடி, கண்ணி வெடி புதைத்து விடுவார்கள். இராணுவம் வந்து பலத்த சண்டை நடைபெறும். பெரிய இழப்புக்களுடன் இராணுவம் வந்த வழியே திரும்பி ஓடி விடுவார்கள்.

இன்று தமது முன்னேற்றத்துக்கு எம்மைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது புரிந்து விட்டது. அத்துடன் போரின் நிமித்தம் மின்சாரம் இன்மையால் தொலைபேசி பரிவர்த்தனை நிலையமும் ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே generater இன் உதவியினால் இயங்கும். மிகுதி நேரங்களில் தொலைபேசி வசதியற்ரற நகரமாகவே அந்த ஊர் நிலைமை இருந்தது.

“எல்லாரும் இஞ்சாலை வாங்கடா” பலத்த குரலில் கொச்சையத் தமிழில்க் கத்தினான் ஒருவன்.

அந்த 47 பேரும் பலிக்கடாக்கள் போல அவன் பின்னால் நடக்கத் தொடங்கினர். பலத்த கூக்குரல்களுக்கு மத்தியில் எல்லோரையும் ஆலையின் வாசலுக்கு அழைத்துச் சென்றான். நிசாங்கா தொடர்ந்தும் அந்தக் காப்டனுடன் வாதாடியபடி வாயிலை நோக்கி நடந்தான்.

ஆலை வாயிலில் வைத்து இன்னொரு இராணுவ அணியிடம் அந்த 47 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

அப்பொழுது மீண்டும் ஒருமுறை அந்தக் காப்டன் நிசங்காவிடம் கூறினான். “நீ விரும்பினால்த் திரும்பிப் போ. இது உனக்கு கடைசிச் சந்தர்ப்பம்.”

நிசங்கா மீண்டும் ஆணித்தனமாக மறுத்தான். “இந்த அப்பாவிகள் அனைவரையும் விட்டுவிடு நான் திரும்பிப் போகிறேன். இல்லாவிட்டால் நானும் இவர்களுடன் வருகிறேன்.”

“அப்போ இவர்களுடன் நீயும் போய் செத்துப் போ” காப்டன் கூறிவிட்டுத் திரும்பினான்.

நிசங்கா பெரிதும் மனம் தளர்ந்தவனாக எல்லோரையும் பார்த்து மெல்லிய குரலில்க் கூறினான். “என்னால் இனி எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இருந்தாலும் கடைசிவரை முயற்சி செய்கிறேன். உங்கள் உங்கள் கடவுளை வணங்கிக் கொண்டு நடவுங்கள்.”

எல்லோர் மனதிலும் அரைகுறையாக இருந்த நம்பிக்கையும் தளர்ந்து போனது. இருந்தும் அந்த நிசங்கா மட்டும் எல்லோர் மனதிலும் நிரம்பியிருந்தான்.

ஆதவன் மனதில் எண்ணிக் கொண்டான். “அந்த மஜீத் எனது பகுதியில் வேலை செய்பவனாக இருந்தும் எம்மைப் பிடித்து வரும்போது எவ்வித சலனமும் இல்லாது முறைத்த பார்வையுடன் இருந்தானே. ஆனால் இந்த நிசங்காவுடன் நான் ஒருமுறைகூடப் பேசியதில்லை, எமக்காகக் தனது உயிரையே கொடுத்துக் கொண்டிருக்கிறானே. ஆம் இந்த நிசங்கா ஒரு சிங்கள இனத்தவனாக இருந்தும் எம்மீது காட்டும் கருணை இன, மத, மொழி பேதங்களைக் கடந்தது.

மனிதனுக்கு மனிதன் உதவி செய்கிறேன் என்ற மனிதாபிமானது உயர்வானது. உன்னதமானது. அத்தனைபேர் மனங்களிலும் நிசங்கா ஒரு உத்தமனாகக் காட்சியளித்தான். அதன் மூலம் எல்லோரும் ஒரு உண்மையைப் புரிந்து கொண்டனர் “தமிழன் என்ற மனிதனுக்குச் சிங்களவன் என்ற மனிதன் எதிரி அல்ல, குறுகிய சுயநலவாத எண்ணம் கொண்ட அரசியல் வாதிகளும், மதவாதிகளும்தான் மனிதர்களுக்கு எதிரிகள்.”

ஒரு இராணுவத்தினன் இடிந்த குரலில் கத்தினான் “எல்லாரும் என் பின்னால் வாங்கடா.”

அவன் காட்டுப் பகுதியூடாக திருகோணமலை வீதியை (அவ் வீதியில்த் தான் அந்த ஓட்டமாவடிப் பாலம் உள்ளது). நோக்கி நடந்து கொண்டிருந்தான். ஆங்காங்கே புதர் மறைவுகளிலே இராணுவத்தினர் அதி நவீன ஆயுதங்கள் சகிதமாக எம்மை முன்னே விட்டு தாம் பின்னே பாலத்தினைக் கடக்கத் தயார் நிலையிலிருந்தனர்.

சூரியனோ தன் கடமையில் இருந்து சற்றும் தளரமாட்டேன் என்பது போல மேல்நோக்கி எழுந்து கொண்டிருந்தான். வெயிலோ சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த 47 பேரும் நாதியற்றவர்களாக, மரணம் எந்த நிலையிலும் நிகழலாம், சுடப்படலாம், கண்ணிவெடி, மிதிவெடி வெடிக்கலாம் என்ற கணத்தை எதிர்பார்த்தவாறு அவன் பின்னால் நடந்து கொண்டிருந்தனர்.

எல்லோரும் பிரதான வீதியை அடைந்து விட்டனர். கூட்டிச் சென்ற ஒரு இராணுவத்தினன் ஒரு பெரிய நாவல் மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு எமக்கு கட்டளையிட்டான்

“எல்லோரும் பாலத்தைப் பார்த்தவாறு ஒருவன் கையை மற்றவன் பிடித்துக் கொண்டு line இல் நில்லுங்கடா”

அப்பகுதி பாலத்தில் இருந்து ஒரு 500 மீட்டர் தூரமாக இருக்கும். பாலம் தூரத்தில்த் தெரிந்தது.

எல்லோரும் மிக மெதுவாக இயங்கினர்.

அருகில் நின்ற ரஜிக்கு ஒரு ராணுவத்தினன் தனது துப்பிக்கிப் பிடியால் ஒரு அடி விட்டான் “கெதியாப் போங்கடா ரோட்டுக்கு” கட்டளையிட்டான்.

எல்லோரும் மிக விரைவாகச் செயற்பட்டனர். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு பாலத்தினை நோக்கியவாறு நிரையாக நின்றனர்.

இராணுவத்தினன் மீண்டும் பலத்த குரலில்க் கட்டளையிட்டான் “இங்கே நாங்கள் 5000 பேர் நிற்கிறோம்.  யாரும் ஓட முயற்சி செய்ய வேண்டாம். உடனே சுடப்படுவீர்கள். மெது மெதுவாக பாலத்தை நோக்கிக் காலடி எடுத்து வையுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டிருப்போம். யாரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நாம் நிற்கச் சொல்லிக் கூறினால் உடனே நின்றுவிட வேண்டும். மீறினால் உடனே சுடப்படுவீர்கள்”

எல்லோரும் கைகளைக் கோத்தவாறு பாலத்தை நோக்கி மெது மெதுவாக முன்னேறத் தொடங்கினர். அவர்களுள் நிசாங்காவும் ஒருவனாக இருந்தான்.

“மனிதனே நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் உன் கல்லறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது” என்று ஒரு தத்துவஞானி கூறியது இதற்காகத்தான் போலிருக்கிறது. என்று எண்ணிக் கொண்டான் ஆதவன்.

“ஆதவன் கால் வைக்கும் போது பச்சைப் புல்லுக்கு மேல காலை வை. புல்லென்றால் அவ்விடத்தில் மிதிவெடி இருக்காது. அப்படியே அங்காலையும் சொல்லு” அவனுடன் கை கோத்து நின்ற சிவா அண்ணா சொன்னார்.   

ஆதவன் அப்படியே அடுத்தவனிடம் கூறிவிட்டு மீண்டும் விரக்த்தியுடன் சிவா அண்ணாவிடம் வினவினான் “சிவா அண்ணா நாங்கள் சாகத்தானே போகிறோம் எப்படிச் செத்தால் என்ன”

“ஆதவன் நாம் இன்று சாகத்தான் போகிறோம். இருந்தும் கடைசிவரை போராடுவோம்” என்றார் சிவா அண்ணா.

மௌனமாக ஆமோத்தித்தவாறு ஆதவன் தனது காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

அந்த 47 மனிதக் கேடயங்களுக்கும் (human shield) பின்னால் அந்த 5000 பேர் அடங்கிய இலங்கை சிங்கள இராணுவம் பாலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

பாலம் மிக அருகே தெரியத் தொடங்கியது.

சிவா அண்ணா தொடர்ந்தார் “ஆதவன் காண்ணதாசன் கூறி இருக்கிறார் முன்னோர்கள் தேடிவைத்த சொத்துக்களை நீ அனுபவிப்பது போல அவர்கள் செய்த பாவங்களையும் நீதான் அனுபவிக்க வேண்டுமென்று. இந்தப் பிறவியில் நான் யாருக்கும் பெரிய பாவங்கள் எதுவும் செய்யவில்லை ஆதவன். நான் திருமண மாகாதவனாக இருந்திருந்தால்கூட நான் இவ்வளவு கலங்கி இருக்க மாட்டன். தொட்டதற் கெல்லாம் பயப்பிடும் என் மனைவி. ஒன்றுமே அறியாத என் சின்னப் பிள்ளைகள் அவர்களின் எதிர்காலம் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.” விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அந்த சிவா அண்ணாவுக்கு அதே நிலையில் இருக்கும் ஆதவனால் எப்படி என்ன ஆறுதல் கூற முடியும். மௌனமாக இருந்தான்.

ஆதவன் மறுபுத்திலக் கைகோர்த்து நின்ற நவம் கூறினார் “தம்பி எங்க ஊர் வைரவ கோயில்ல கிடாய் வெட்டி சாமிக்கு வேள்வி நடக்கும். ஒரு 25 ஆடுகளை நிரையில் விட்டுப் போட்டு ஒவ்வொன்றாக வெட்டுவதை ஊரே கூடிநிற்று வேடிக்கை பார்க்கும். முன் ஆடு வெட்டுறதை பாக்கிற வெட்டுப்படப் போகிற ஆடுகள் கத்திக் கொண்டிருக்கும். அதில் நானும் ஒருவனாக நின்று எத்தனை முறை வேடிக்கை பார்த்திருக்கிறன். அதைப் பாவம் என்றும் நினைச்சிருக்கிறன் ஆனால் அந்த இறைச்சி சாப்பிடுகிற ருசியிலை அதையெல்லாம் மறந்திடுவன். அந்த ஆடுகள் போட்ட பழிதான் தம்பி என்னை இப்படி இங்கு நிறுத்தியிருக்குது.” குரல் தளதளர்த்தவாறு கூறினார்.

அண்ணை ஒரு தவறு நடக்கும்போது அது பிழைதான் என்று தெரிந்து கொண்டும் நமக்கேன் வீண்வம்பு என்று ஒதுங்கி விடுவது அத்தவறை நாம் ஆமோதிப்பது போலத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.” என்றான் ஆதவன்.

உண்மைதான் தம்பி காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது.

ஆதவன் தொடர்ந்தான். “எந்தக் கட்டத்திலாவது தன் தவறை உணர்ந்து கொண்டால்ப் போதும் அண்ணை. இனிமேலாவது அப்படித் தவறு நடக்காமல்ப் பார்த்துக் கொள்ளலாம்.”

அனைவரும் பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். பாலத்தின் மறு புறத்தே யுத்த விமானங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது. நிலமெல்லாம் அதிர்ந்து கொண்டிருந்தது. அவ்விடம் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

அந்த ஓட்டமாவடிப் பாலம் என்பது வாழைச்சேனை, கல்குடா என்ற அந்த ஊருக்குள் ஆத்தைக் கடந்து பிரவேசிப்பதற்காக அந்த நேரத்தில் ஓட்டமாவடியில் ஆங்கிலேயர்களால்க் கட்டப்பட்டது.  புகையிரதம் வரும் வேளையில் பாலம் பொது பயணத்துக்கு தடை செய்யப்பட்டும்.  புகையிரதம் சென்ற பின்னர் மீண்டும் வாகனகள் செல்ல அனுமதிக்கப்படும்.

வழமையாக பலத்துக்கு அண்மையாக இவ்வளவு தூரம் இராணுவம் நெருங்கினால்ப் போதும் மறுபுறத்தில் இருந்து எத்தனை எதிப்புகள் கிளம்பும். எத்தனை மிதிவெடி வெடிக்கும். எத்தனை செல்கள் இருபுறமும் வெடிக்கும். எத்தனை விதமான துப்பாக்கிச் சத்தங்கள் கேட்க்கும். இன்று இன்னும் எதுவும் ஆரம்பிக்க வில்லையே? ஆனால் எந்தக் கணமும் எதுவும் நடக்கலாம் என்ற எதிப்பார்ப்புடன் அந்த 47 நடைப் பிணங்களும் நடந்து கொண்டிருந்தன.

“எல்லாரும் நில்லுங்கடா” பின்னால் நின்று ஒரு இராணுவத்தினன் கத்தினான். எல்லோரும் நகருவதை நிறுத்தனர்.

“டேய் நீ, நீ, நீ இங்காலை வாடா” ஒரு சிலரை அழைத்தான். அதில் ஆதவனும் அகப்பட்டுக் கொண்டான்.

அருகில்த் தெரிந்த ஒரு giraval ஒழுங்கையைக் காட்டி “இந்தக் கரையால் அந்த பெரிய மரம் வரைக்கும் போய் மற்றப் பக்கமாக வாங்கடா” என்று கட்டளையிட்டான்.

அந்தக் Graval பாதைக் கரையில் எதாவது மிதிவெடி அல்லது கண்ணி வெடி புதைக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்வதற்காகவே எம்மை அனுப்புகிறான் என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டனர்.

பிரிக்கப் பட்டவர்கள் கைகோத்தனர்.

“மெல்ல மெல்ல நடங்கடா” மீண்டும் கத்தினான்.

சிறி மட்டும் சிறிது தயக்கம் காட்டினான்.

பின்னால் நின்று வந்த ஒரு இராணுவத்தினன் சிறியின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான்.

அம்மா என்ற அலறலுடன் கீழே விழுந்தவன், எழும்ப முடியாமல் எழுந்து நடக்க முடியாமல் நடக்கத் தொடங்கினான்.

தற்போது ஆதவனின் ஒரு புறத்தில் சார்ள்ஸ் உம் மறுபுறத்தில் கிரியும் கை பிடித்திருந்தார்.

“பார்த்தாயா கிரி உவங்களை மொக்கங்கள் என்று தானே சொல்லுறனாங்கள். இப்ப பார்த்தாயா எவ்வளவு புத்திசாலித்தனமாக எங்களைப் பாவித்துக் கொண்டிருக் கிறாங்கள் எண்டு.” என்றான் ஆதவன்.

“ஆதவன் உது கூலிக்கு மாரடிக்கிற கூட்டம். இதற்குப் பேர் புத்திசாலித் தனமல்ல கையாலாகாத தனம். கோழைத்தனம். இராணுவத்துக்குப் பயிற்சி கொடுப்பது, தான் முன்னின்று போராட. பொதுமக்களை முன்னால் விட்டுப் பின்னால் தாம் முன்னேறுவது அசிங்கமானது. கேவலமானது.” ஆதங்கத்தை வெளிப்படுத்தினனான் கிரி.

“உண்மைதான் கிரி உவங்கள்ளை 5000 பேர் நிக்கினமாம். பாலத்துக்கு அங்காலை ஒரு 15 அல்லது 20 பெடியள் தான் நிப்பாங்கள். இவங்களாலை ஏலுமெண்டால்ப் பாலத்தைக் கடக்கட்டும் பார்ப்பம். முன்னர் இரு தடவை அந்தப் பாலத்தைக் கடக்க முயற்சி செய்து ஏலாமல்த்தானே இண்டைக்கு எங்களை பிடித்து முன்னுக்கு விட்டுப் போட்டு பின்னால ஒழிச்சு நிக்கினம்” என்றான் சார்ள்ஸ்.

கிரி தொடர்ந்தான் “வழக்கமாக இந்த இடத்துக்கு ஆமி வர முன்னரே பெடியங்கள் செல் அடிக்கத் தொடங்கி விடுவாங்கள். இண்டைக்கு இன்னும் ஒண்டையும் காணேல்லை.”

“அப்படியெண்டால் ஆமி எங்களை முன்னுக்கு விட்டுப்போட்டு பின்னலை வாறாங்கள் என்பதை பெடியள் அறிஞ்சிட்டாங்களோ? ஒருவேளை எங்களை காப்பாத்தத்தான் சத்தம்போடாமல் நிக்கிறாங்களோ?” என்றான் ஆதவன்.

சார்ள்ஸ் குறுக்கிட்டான் “அவங்கள் எண்களைப்பற்றி யோசிப்பாங்கள்தான். இருந்தாலும் இவங்களை ஊருக்குள்ளை நுழைய விடமாட்டாங்கள். எங்கள் 47 பேருக்காகவும் எமது பிரதேசத்தை விட்டுக் கொடுக்க மாட்டாங்கள். பாலத்திலை கால் வைக்க அடி தொடங்கும் பார்”

“அப்ப இண்டைக்கு நாங்கள் எப்படியோ சாகத்தான் போறம்” ஆதவனால்ப் பொறுக்க முடியவில்லை.

“ஆதவன் மரணம் என்பது யாராலும் தவிர்க்க முடியாதது. என்றோ ஒருநாள் அது நடந்துதான் தீரும். அது இயற்கை. இறக்கும் தேதி தெரியாததால்த்தான் யாரும் அதனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. எமக்குத் திகதி தெரிந்து விட்டது. நேரமும், முறையும்தான் இன்னும் தெரியவில்லை. தூக்குத் தண்டனைக் கைதிக்குக் கூட நேரமும், கொல்லப்படும் முறையும் தெரிந்திருக்கும். நாம் அதை விடப் பாவம் செய்தனாங்கள் போலத் தெரிகிறது.” கண் கலங்கியவ்வாறு கூறி முடித்தான் சார்ள்ஸ்.

எல்லோரும் நடைப் பிணங்களாகவே காணப்பட்டனர்.

அந்தப் பாதை ஓரத்தில் எரிந்துபோன நிலையில் இருந்த ஒரு உளவு இயந்திரத்தைக் காட்டி கிரி கூறினான். “போன தடவை இவங்கள் வந்து சண்டைப் பிடிக்கும் போது கெலியில் இருந்து குண்டு போட்டு எரித்தது என்று கேள்விப்பட்டனான். இப்பதான் பாக்கிறன். “

சார்ள்ஸ் கூறினான் “இது பேத்தாளை வட்டி வாத்தியாரின்ரை வண்டி கிரி. அவர் வட்டிக்குக் காசு கொடுத்து உழைக்கிறவர். எச்சில் கையால காகம் கூடத் துரத்தமாட்டார். அந்தாளுக்கு நாலு பெடியங்கள். ஒண்டும் உதவாது. அந்தாள் தானும் அனுபவிக்கேல்லை அந்தப் பெடியங்களும் ஒரே குடியும் குடித்தனமுமாக எல்லாத்தையும் அழிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்.”

“உண்மைதான் சார்ள்ஸ். குறிப்பாக எங்கடை தமிழ்ச் சமுதாயம் எங்கடை எதிர்காலத்துக்கு, எங்கடை பிள்ளைகளுக் கெண்டு அங்கை பிடுங்கி, இங்கை சுருக்கி சொத்துச் சேர்த்து தானும் அனுபவிக்காமல் கடைசியில் தன் குடுப்பத்துக்கூட உதவாமல் போன கதைகள் கனக்க இருக்கு. தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கவும் கூடாது, தேவை இல்லாமல் பெரிய வீட்டைக் கட்டவும் கூடாது. என்று சொல்வார்கள்’ என்றான் கிரி.

“டேய் திரும்பி வாங்கடா” மீண்டும் இராணுவத்தினன் கூப்பிட்டான்.

“சார்ல்ஸ் என்னாலை முடியாமல் இருக்கு. இப்பவே சுட்டுப் போட்டாங்கள் எண்டால்ப் பிரச்சினை இல்லை. ஆனால் என் எண்ண மெல்லாம் நான் இறந்தால் எனது அப்பா, அம்மா கன நாளைக்கு நிண்டு பிடிக்கமாட்டினம். என் சகோதரர்களின் நிலை அதை நினைக்கத்தான் என்னாலை தாங்க முடியாமல் இருக்கு” என்றான் ஆதவன்.

“நான் ஆண்டவர் மீது முழுப் பாரத்தையும் போட்டுவிட்டேன்.” என்றான் சார்ள்ஸ்.

மீண்டும் எல்லோரும் பாலத்தை நோக்கி நின்றவாறு கை கோத்துக் கொண்டார்கள்.

“எல்லாரும் மெல்ல மெல்ல நடங்கடா” கத்தினான் இராணுவத்தினன்.

எல்லோரும் மெது மெதுவாகக் காலடி எடுத்து வைத்தனர்.

கதிரவனும் உச்சியில் இருந்து மேற்க்குப் புறமாக சரியத் தொடங்கினான். கடிகாரம் இரண்டு மணியைக் காட்டியது.

பாலத்தை ஓரளவு நெருங்கி விட்டார்கள்.

“என்னால இனி முடியாது இன்னும் கொஞ்சம் கிட்டப் போனவுடன் நான் ஓடப்போறன், அல்லது தண்ணீக்குள்ளை பாயப்போறன்.” பொறுக்க முடியாமல்க் கூறினான் ஆதவன்.

மீண்டும் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தான் சார்ள்ஸ்.

“இங்கை பார் ஆதவன். வழக்கமாக இவ்வளவு தூரம் ஆமியை வர விடமாட்டங்கள். இண்டைக்குப் பார் இன்னும் ஒரு எதிர்ப்பும் நிகழ வில்லை.  எமக்காகத்தான் பெடியள் பொறுத்துக் கொண்டு இருக்கிறாங்கள் எண்டு நினைக்கிறன். அதோடை எம்மைப் பிடிக்கும் போது ஆமிக்கு இருந்த மனநிலையில் இப்ப கட்டாயம் மாற்றம் இருக்கும். அதோட இப்ப பின்னேரமாகுது. இண்டைக்கு இவங்கள் உந்தப் பாலத்தைக் கடக்க முயற்சி செய்யமாட்டாங்கள். ஆனபடியால் நாங்கள் இண்டைக்குச் சாகமாட்டம் எண்டு நினைக்கிறன். வீணாக ஓடி எல்லாத்தையும் கெடுத்துப் போடாதே.”

ஆம் சார்ள்ஸ் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எத்தனை குற்றவாளிகள் தாம் செய்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்தி இருக்கிறார்கள். அவ்வப்போது எழும் மனநிலையை பொறுத்து ஒருவனுடைய முடிவும் மாறிக்கொண்டே இருக்கும். ஆதவன் மீண்டும் தீர்மானித்தான் நான் நானாக என் மரணத்தை உறுதிப் படுத்திவிடக் கூடாது. அது தற்கொலைக்குச் சமமாகும். அது மட்டுமல்லாமல் என் தவறான முடிவினால் ஏனையவர்களும் பாதிக்கப் படுவார்கள் எனவே. மரணம் வரும்போது வரட்டும். அவன் கொல்லும்போது இறந்து கொள்வோம்.

சிறிது நொண்டிக் கொண்டிருந்த சார்ள்ஸ் இடம் ஆதவன் கேட்டான் “ஏன் நொண்டுகிறாய் சார்ள்ஸ்?”

“கால் விரலை எதோ முள்ளுக் குத்தி இரத்தம் வருகுது. அவசரத்தில சிலிப்பர் போடாமல் வந்திட்டன்.” என்றான் சார்ள்ஸ்

“இந்தா என் செருப்பை அந்தக் காலுக்குப் போடு.” தனது செருப்பைக் கழற்றினான் ஆதவன்.

“வேண்டாம் நீயே போட்டுக்கொள் ஆதவன். நடக்க முடியாமல் இருக்கிறது தான். ஆனால் எனக்கு அந்த வலி இப்ப தெரியேல்ல. ஆண்டவரிடம் நான் பாரத்தைக் கொடுத்திட்டன். என்னால் கட்டுப்படுத்த முடியாமல் என் சக்திக்கு மீறிச் சம்பவங்கள் நடைபெறும் போது, நான் செய்யாத குற்றத்துக்காகத் தணடனை அனுபவிக்கும் போது, நான் கவலைப்பட என்ன இருக்கிறது. என் மரணம் எந்த வினாடியும் நடக்கலாம். இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் வந்துவிட்டது. எனது மனது கல்லாகி விட்டது. இப்ப எந்த நோவோ வலியோ எனக்குத் தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும் நீயே உன் சிலிப்பரைப் போட்டுக் கொண்டு நட.” என்றான் சார்ள்ஸ்.

எல்லோரும் பாலத்தை அடைந்துவிட்டனர்.

“நில்லுங்கடா. இனி யாரும் அசையக்கூடாது.” கட்டளையிட்டான் ஒரு இராணுவத்தினன்.

“அரைக் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் எடுத்திருக்கிறது. இராணுவம் எவ்வளவு இலகுவாக முன்னேறியுள்ளது. ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் எதற்கு இராணுவப் பயிற்சியும், அதி நவீன ஆயுதங்களும். அப்பாவித் தமிழர்களைப் பிடித்து முன்னுக்கு விட்டுப் போட்டு பின்னலை வாராங்கள். இதுதான் அவர்களின் முன்னேற்றமாம்.” எண்ணிக் கொண்டான் ஆதவன்.

கிரி கூறினான் “ஆதவன் ஒன்றை எண்ணிப்பார் காலை 8 மணியில் இருந்து இப்பவரை கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள். வீட்டில், வேலைத்தளத்தில் எத்தனை தடவைகள் தண்ணீர், தேநீர் குடித்திருப்போம். எத்தனை தடவைகள் ஏதாவது உண்டிருப்போம். ஆனால் இன்று யாரும் எதனைப் பற்றியும் சிந்திக்கவில்லை. இந்தச் சுட்டெரிக்கும் வெய்யிலிலும் யாரும் வெக்கையைப் பற்றிக் கூடக் கவலைப் படவில்லை. இன்று நாம் இறப்போமா? அல்லது தப்போவோமா? என்ற ஒரே ஒரு எண்ணத்தைத் தவிர யாருக்கும் வேறு எந்தச் சிந்தனையும் கிடையாது.”

தலையாட்டி ஆமோத்திதான் ஆதவன்.

இன்னும் ஒன்றையும் எண்ணிப்பார். இந்தக் சுட்டெரிக்கும் வெய்யிலில், கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், தலைக்குத் தொப்பி இல்லை. காலுக்குச் சிலிப்பர் இல்லை, உணவில்லை, நீரில்லை. 6 மணி நேரமாக நடந்து கொண்டிருக்கிறோம். இன்னும் நடப்போம். மன வலிமையும் நம்பிக்கையும், குறிக்கோளும் தான் முக்கியமானது. நாம் முயற்சித்தால் முடியாதது என்று எதுவும் இல்லை ஆதவன். நம்பிக்கையோடு இருப்போம்.”

“எல்லாரும் திரும்பு” கத்தினான் ஒரு இராணுவத்தினன்.

எல்லோரும் பாலத்துக்கு முதுகைக் காட்டியவாறு திரும்பி நின்று கொண்டனர். அவர்கள் இருந்த நிலையை விளக்க வார்த்தைகள் இல்லை. உவமைகள் இல்லை.

இராணுவத்தினன் எவரையும் வெளிப்படையாகப் பார்க்க முடியவில்லை. மரங்கள், கற்களுக்குப் பின்னால் ஒளிந்தவாறு நிலையெடுத்து நின்றனர்.

பாலத்துக்கு அருகில் ஒரு தேக்க மரத்துக்குப் பின்னால் ஒழிந்திருந்த ஒரு இராணுவத்தினன் கட்டளையிட்டவாறு இருந்தான்.

அவன் கூறினான் “நான் இப்பொழுது பாலத்தின் அக்கரை நோக்கி மூன்று தடவைகள் சுடப்போகிறேன். அங்கிருந்து ஏதாவது பதில்ச் சத்தம் கேட்டால் நீங்கள் அத்தனை பேரும் உடனே சுடப்படுவீர்கள். சிறிது ஏளனச் சிரிப்பும் சிரித்தான். சரி எல்லாரும் பாலத்தைப் பார்த்தபடி திரும்பி நில்லுங்கடா.”

சிலர் அழுதனர். சிலர் தத்தமது கடவுள் பெயரைச் சொல்லிச் முணு முணுத்தனர்.

தனது மரணம் தன்னை மிகவும் நெருங்கி விட்டதை ஆதவன் உணர்ந்து கொண்டான். தனது பெற்றோர் சகோதரர், உற்றார் உறவினர்களை ஒருகணம் எண்ணிக் கொண்டான்.

“நான் இறக்கும் தருணம் வந்துவிட்டது, நான் கொல்லப்படப் போகிறேன். என்னைக் கொன்று இந்த ஆற்றில் எறியலாம். அல்லது வழமைபோல tyre போட்டு பெற்றோல் ஊற்ரி எரிக்கலாம். தடயங்கள் அழிக்கப் படலாம். ஒரு வேளை என் மரணம் உங்களுக்கு உறுதிப் படுத்தப்படாமல்ப் போகலாம். காணவில்லை என்ற பட்டியலில் என் பெயர் சேர்க்கப் படலாம். நீங்கள் சாத்திரங்கள் கேட்டவாறு என்னைத் தேடித் தேடி ஒவ்வொரு இராணுவ முகமாக அலைந்து திரியலாம்.

ஆனால் நான் உண்மையில் இன, மத, வெறி கொண்ட சுயநல வாதிகளான சிங்கள அரசியல் வாதிகளின் கூலிப் படைகளால் மிகவும் கோழைத்தனமாக கொல்லப்பட்டு விட்டேன். நான் நேசிக்கும் மண்ணே, இந்தப் பூமியே என் ஆயுட்காலம் முடிந்து கொண்டிருக்கிறது.” ஆதவன் மனம் குமுறிக் கொண்டிருந்தான்.

“டும்” முதலாவது சத்தம் கேட்டது

கடவுளே என்னைக் காப்பாத்து ஆதவன் வேண்டிக் கொண்டான்.

உடம்பெல்லாம் ஒருமுறை கூசியது. “ஆண்டவனே இப்படி ஒரு நிலைமை என் எதிரிக்கு கூட வரவேண்டாம்.” கடவுளை மீண்டும் தியானித்தான்.

எதிர்ப் புறத்திலிருந்து எவ்விதமான பதில்த் தாக்குதலும் வரவில்லை.

“டும்” இரண்டாவது தடவை அக்கரை நோக்கிச் சுட்டான் இராணுவத்தினன்.

“கர்த்தரே எம்மைக் காப்பாற்றும்” சார்ள்ஸ் முணுமுத்தது கேட்டது.

எவ்விதமான பதில்த் தாக்குதலும் மறுபுறத்திலிருந்து வரவில்லை.

“டும்” மூன்றாவது தடவை அக்கரை நோக்கிச் சுட்டான் இராணுவத்தினன்.

நிசங்கா புத்தரை வேண்டியது மிகவும் துல்லியமாகக் கேட்டது.

அத்தனை பேரும் சிலைபோல நின்று கொண்டிருந்தனர்.

‘இன்னும் எமக்கு நேரம் வரவில்லையா?” ஆதவன் தனக்குள் நொந்து கொண்டான்.

இனி என்ன நடக்கப் போகிறது. அத்தனை பேரது எண்ணமும் ஒரே மாதிரியாகவே இருந்தது.

“டேய் எல்லாரும் திரும்பு” கத்தினான் இராணுவத்தினான்.

எல்லோரும் திரும்பிக் கொண்டனர்.

“கையை மேலே தூக்குங்கடா.” கத்தினான் இராணுவத்தினன்.

எல்லோரும் தமது கைகளை மேலே தூக்கிக் கொண்டனர்

அருகில் இருந்த, என்றோ கைவிடப்பட்ட ஒரு மண் குடிசையைக் காட்டி “எல்லோரும் அதுக்கை போங்கடா” என்றான்.

பட்டிக்குள் மாடுகள் நுழைவது போல எல்லோரும் அக்குடிசைக்குள் நுழைந்தனர். எல்லோரும் உள்ளே செல்ல இடம் போதாமையால் சிலபேரை வாசலிலேயே இருத்தினான். அவர்களில் நிசங்காவும் ஒருவன்.

அந்தக் குடிசைக்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்தது.

“Tire போட்டு எண்ணெய் ஊத்தி உயிரோட கொளுத்தப் போறாங்கள் போல தெரியுது” என்றான் சிறி.

“அப்படித்தான் தெரியுது” எல்லோரும் ஆமோத்தித்தனர்.

கொளுத்தட்டும் எப்படிச் செத்தால் என்ன. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன மூலம் என்ன. எண்ணிக் கொண்டான் ஆதவன்.

குடிசை வாசலிலே இரு ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

அவர்கள் சிறிது வித்தியாசமான நிறத்தில் சீருடை அணிந்திருந்தனர். நெற்றியிலே சிகப்பு நிற sticker பொட்டு. எண்ணெய், தண்ணி அறிந்திராத பரட்டைத் தலைமுடி. அத் தலையிலே ஒரு கறுப்புப் பட்டி. காவி படிந்த பற்கள். ஆங்காங்கே முடி முளைத்த குட்டை படிந்த முகம். ஒரு காடையனை வர்ணிக்கும் பொழுது அப்படியல்லவா கற்பனை செய்வோம். அதே மாதிரியாக விபரிக்கக் கூடியதாக அவர்கள் தோற்றம் காணப்பட்டது.

நிசங்கா அவர்களுடன் உரையாட முயற்சித்தான்.

அவர்களோ எதனையும் சட்டை செய்வது போலத் தெரியவில்லை.

பூனை சில நேரங்களில் எலியைப் பிடித்து சிறிது காயப் படுத்தியபின் அதனுடன் விளையாடும். அதாவது உன்னுடன் சிறிது நேரம் விளையாடி விட்டுப் பின்னர் உன்னைக் கொன்று உண்கிறேன் என்பதுபோல. அப்படி இருந்தது அவர்களின் மனநிலை.

எம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறோம். இறப்பதற்குத் தயாராகி விட்டோம். நீ எப்ப வேண்டு மானாலும் எப்படி வேண்டு மானாலும் எம்மைக் கொல்லலாம். கவலைப் படுவதில் எவ்வித பயனுமில்லை என்ற மனநிலையை இருந்தனர் அவர்கள்.

அப்போது ஒரு இராணுவ ஜீப் வண்டி மெதுவாக அந்த வீதியால் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இராணுவத்தினன் இறங்கி அவ்விடத்தில்   நின்ற இராணுவத்தினருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் நாம் இருக்கும் குடிசையைக் காட்டினார்கள். அவன் எம்மை நோக்கி வந்தான். அவனுடன் இரு இராணுவத்தினர் கூடவே வந்திருந்தனர். அவன் ஒரு காப்டன் தரத்தைச் சேர்ந்தவன் போலக் காணப்பட்டான். அவன் வந்ததும் முதல் வேலையாக எமக்கு காவலுக்கு நின்ற இரு இராணுவத்தினரையும் வேறு இடத்துக்குப் போகும்படி உத்தரவிட்டான்.

அவர்களோ விலக மனமில்லாமல் விலகிச் சென்றனர். சாப்பிடத் தயாராக இருந்த நாயிடம் இரையைப் பறித்து விட்டு அதனைத் துரத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தக் காட்சி. விலகிச் சென்றனர்.

அந்த இராணுவத்தினன் ஒருமுறை எல்லோரையும் நோட்டமிட்டான். அவன் மிக இளம் வயதினன் போலக் காணப்பட்டான். ஒரு இராணுவத்தினனுக்கு இருக்க வேண்டிய அம்சம் அவனிடம் இருந்ததுபோலக் காணப்பட்டது.

முன்னால் நின்ற பாஸ்கரன் அவனைப் பார்த்து மாத்தையா என்று அழைத்தான். உடனே சிலர் மாத்தையா என்று அவனை அழைத்து சிங்களத்தில் ஏதோ கூறினர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதனைச் சரியான முறையில்ப் பயன்படுத்தி விடவேண்டும். கெளரவம் பார்க்கக் கூடாது. ஒரு முயற்சிதானே ஆதவன் எண்ணிக் கொண்டான்.

தன்னை மாத்தையா என்று அழைத்ததும் அந்த இராணுவத்தினன் மறுபுறம் திரும்பி விட்டான். எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள்.

சிறிது நேரத்தில் அவன் மீண்டும் திரும்பினான். அவன் முகத்தில் சிறிது பரிதாபம் தெரிந்தது. முன்னாள் நிற்றவர்களைப் பார்த்துக் கேட்டான் “எத்தனை மணிக்கு உங்களை பிடித்தார்கள்”

“காலை 8 மணிக்கு” நிசாங்கா பதிலளித்தான்.

எத்தனை பேரைப் பிடிச்சவங்கள்?

“47 பேர்.”

இங்கு எல்லோரும் இருக்கிறீர்களா.

“ஆம்” எல்லோரும் இருக்கிறோம்.

எல்லோரையும் எண்ணிச் பார்த்துக் கொண்டான்.

இடைக்கிடை அவன் பாலத்தை நோட்ட மிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது

எல்லோரையும் குடிசைக்கு வெளியே வந்து அங்கிருந்த ஒரு நாவல் மரத்துக்கு கீழே படுத்திருக்கச் சொன்னான். சண்டை ஆரம்பித்தால் எழுந்திருக்க வேண்டாம் என்றும் சொன்னான்.

எல்லோர் மனதிலும் தன்னம்பிக்கை ஒளி தெரியத் தொடங்கியது.

எல்லோரும் வந்து அந்த நாவல் மர நிழலில்ப் படுத்துக் கொண்டனர்.

“நான் ஒரு இந்திய இராணுவ வீரனைக் களத்திலே பார்ப்பதற்கு இந்தியாவின் எல்லைக் கல்லவா போகவேண்டியுள்ளது” என்று ஒரு தமிழ்நாட்டுக் கவிஞன் பாடி இருந்தானே. ஆனால் சிங்கள இராணுவ வீரனே நீ பிழையான இடத்துக்கல்லவா அனுப்பப் பட்டிருக்கிறாய். இல்லை இல்லை நீ சரியான இடத்துக்குத்தான் உனது அரசாங்கத்தினால் அனுப்பப் பட்டிருக்கிறாய். நீ உன் நாட்டு எல்லையில்த் தான் நின்று கொண்டிருக்கிறாய் நான்தான் உன்னைத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்.ஆதவன் அந்த இராணுவத்தினனை எண்ணிக் கொண்டான்.

“பெடியங்கள் எங்களுக்காகத் தான் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறாங்கள். இல்லாட்டி இவங்களை இவ்வளவு தூரம் வர விட்டிருக்க மாட்டாங்கள்”. நவம் முணு முணுத்தார்.

“எப்படி என்றாலும் இவங்களை அந்தப் பாலத்தைக் கடக்க விடமாட்டாங்கள்” பாஸ்கரன் முணு முணுத்தான்.

நாங்கள் செத்தாலும் பரவாயில்லை இவங்களை எமது ஊருக்குள்ளை வர விடக்கூடாது என்பதுபோல இருந்தது அவன் கருத்து.

“உண்மைதான் ஆனால் நாங்கள் தப்பிவிட வேண்டும். இல்லாட்டில் என்ர குடும்பம் நடுத் தெருவுக்கு வந்துவிடும்”, கவலையோடு கூறினார் சிவா அண்ணை.

திருமண மானவர்களுக்கும், திருமண மாகாதவர்களுக்கும் இடையில் உள்ள மன வேறுபாடுகளை அங்கு காணக்கூடியதாக இருந்தது.

அந்த இராணுவ வீரனுடன் நிசங்கா உரையாடிக் கொண்டிருந்தான். அவனின் முகத்தில் இடைக்கிடை சிரிப்பையும் காணக்கூடியதாக இருந்தது.

அதிலிருந்து ஒன்றை அவதானிக்கக் கூடிதாக இருந்தது. நிசங்கா எமக்காக வாதிடுவதால் அந்த இராணுவத்தினன் கோபமடைந்தவனாகத் தெரியவில்லை.

அதுமட்டு மல்லாது அந்த இராணுவத்தினன் எம்மைப் பாதுகாப்பதில் கவனமாக இருப்பது போலவும் தெரிகிறது. ஒரு வேளை எம்மைக் கவனமாக அழைத்து வரும்படி மேலிடம் அவனுக்கு கட்டளை இட்டிருந்தாலும், அந்தச் சூழ்நிலையில் ஓடினார்கள் சுட்டுவிட்டோம் என்று கூறினால் என்ன வழக்கா போடமுடியும். ஆனால் அவன் எம்மீது இரக்கமல்லவா காட்டுகிறான்.

ஆதவன் எண்ணிக் கொண்டான். நான் ஒருவேளை இங்கிருந்து தப்பி வந்துவிட்டால் துப்பாக்கி ஏந்துவது நிட்சயம். என எண்ணி இருந்தேனே.  இல்லை அது தவறு. துப்பாக்கிக் குண்டுகளுக்கு நல்லவன், கெட்டவன், மனித,ன், மிருகம் என்ற பாகுபாடு தெரியாது. முன்நிற்கும் அனைவரும் எதிரியே என்றுதான் பார்க்கும். எதனையும் அலசி ஆராயாது முந்துபவனுக்கு முந்துபவன் வெல்லுவான் என்ற நிலைப் பாட்டையே முன்னிறுத்தும்.

எமது விடிவுக்காய் துப்பாக்கி ஏந்தியவர்களே உங்களை நான் எதுவும் சொல்லவில்லை. இன்று இதுவரை இந்த 47 பேரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, இதுவரை எந்த அவசரமும் காட்டாது பாலத்துக்கு அப்பால் பொறுமை காத்து நிற்கும் எனதருமைத் தோழர்களே நீங்கள் துப்பாக்கிகளைக் கீழே போடத் தேவையில்லை. உங்களுக்கு எதிரியை இனம் காணும் வல்லமை இருக்கிறது. நான் உங்களை துளியளவும் பிழை கூறவில்லை. தொடருங்கள் உங்கள் பணியை.

“இருந்தும் மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும் என்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் கூறியதுபோல எதிரி களுக்குள்ளும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அதனை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். நான் துப்பாக்கி ஏந்தப் போவதில்லை.  என் சுபாவத்துக்கும் அது ஒத்துவராது. அதற்குப் பதிலாக நான் பேனாவை என் கைகளில் ஏந்தப் போகிறேன். என் பேனாவின் பலத்தை எதிரிக்குக் காட்டப் போகிறேன். எந்த இடர் வந்தாலும் என் பேனாவுக்கு ஓய்வு கொடுக்கப் போவதில்லை.” ஆதவன் குமுறிக் கொண்டிருந்தான்.

“குக்கூ, குக்கூ”

ஆதவன் கற்பனையில் இருந்து விடுபட்டுக் கொண்டான். அதே குயிலோசை. மீண்டும் தனக்கு மறுபிறவி கிடைத்தது போலிருந்தது. அவன் அருகிலுள்ள நாவல்மரக் கொப்பில் இருந்து அந்தக் குயில், இசை மீட்டியபடி இருந்தது.

ஆதவனால்த் தனது காதுகளை நம்ப முடியவில்லை. என்னைத் தேடித் திரிந்தாயா என்னருமைப் பட்சியே. நான் மரணத்தின் வாயிலிலல்லவா நின்று கொண்டிருக்கிறேன். இப்போது நான் பிழைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இன்று நான் தப்பிவிடுவேன். நீ எனக்கு நம்பிக்கையை ஊட்டிவிட்டாய். எனக்கும் உனக்கும் இடையில் இருந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது. இன்று எனக்கு ஆபத்துக்கு காத்திருக்கிறது என்று அறிந்துதான் இன்று காலையில் என்னை எழுப்பாமல் விட்டு விட்டாயா? எனக்கும் உனக்கும் இடையில் நிட்ச்யம் ஒரு பூர்வீக பந்தம் இருக்க வேண்டும். நீ முற்பிறப்பில்ப் புண்ணியம் செய்திருக்கிறாய் அதுதான் பறவையாகப் பிறந்திருக்கிறாய். நான் பாவம் செய்திருக்கிறேன். அதனால்தான் மனிதனாக அதுவும் தமிழனாகிப் பிறந்திருக்கிறேன்.

ஐந்து அறிவு படைத்த உனக்கு இந்த மனிதர்களை இனம் கண்டு கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆறு அறிவு உள்ள என்று கூறிக் கொள்ளும் இந்த மனித மிருகங்களுக்கு மட்டும் அது இல்லாமல்ப் போய் விட்டதே.

உனக்கு சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, நாடு இல்லை, எல்லை இல்லை, கபடம், சூது, வாது, வஞ்சனை எதுவும் இல்லையே. ஆனால் ஆறு அறிவு படைத்த என்னிடம் எல்லாம் உள்ளதே.

ஆண்டவா எனக்கு மீண்டும் ஒரு பிறப்புண்டானால் என்னை ஒரு பறவையாகப் படைத்துவிடு. ஒரு குயிலாகப் படைத்துவிடு.

மாணிக்க வாசகாப் பெருமான் அருளிய திருவாசகத்தில் “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்” என்ற அடியிலே சிறிது மாற்றம் வேண்டு மென்று எண்ணுகிறேன். கடவுளே மனிதரைப் பறவையாய் என்று மாற்றி எழுதிவிடு. ஆதவன் மனதுக்குள்க் குமுறிக் கொண்டிருந்தான்.

நிசங்காவும் அந்த இராணுவத்தினனுடன் மிகவும் உற்சாககமாக உரையாடுவதால் எல்லோருக்கும் மனதுள் சிறிது மகிழ்வாகவும் இருந்தது.

சிறிது நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி இரு பெரிய இராணுவ வாகனங்கள் மிக மெதுவாக வந்து நின்றன.

அந்த இராணுவ அதிகாரி நிசங்காவிடம் கூற நிசங்கா எமக்கு தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தான்.

“தயவு செய்து எம்மை மன்னித்துக் கொள்ளுங்கள். யாரோ கொடுத்த பிழையான தகவலால் உங்களைக் கைது செய்ய வேண்டி வந்துவிட்டது. இந்த இராணுவ வாகனங்களில் உங்களை மீண்டும் கடதாசி ஆலைக்கு கொண்டுபோய் விடுகிறோம். ஒவ்வொருவராக வந்து ஏறிக் கொள்ளுங்கள்.”

ஒவ்வொருவரும் மிக அவசரம் அவசரமாக வண்டியில் ஏறிக் கொண்டனர். தற்செயலாக சண்டை ஆரம்பித்து விட்டால் எல்லாம் பிழைத்து விடும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்தது.

அவர்களை ஏற்றிக் கொண்டு அந்த இராணுவ வாகனங்கள் கடதாசி ஆலை நோக்கிப் புறப்பட்டன.

“பார்த்தீர்களா சிவா அண்ணா இராணுவத்தினர் என்றால் எப்போதும் கெட்டவர்கள் என்றெல்லவா நினைத்தேன். இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கிறார்களே” என்றான் ஆதவன்.

சிவா தொடர்ந்தார். “இல்லை ஆதவன். தொழிலுக்கு என்று ஒரு குணமிருக்கும். இராணுவத்தில்ச் சேர கையெழுத்துப் போடத் தெரிந்தால்ப் போதுமானது. சுடு என்றால்ச் சுட்டுவிடும் இராணுவத்தினன் தான் இராணுவப் பணிக்குத் தேவை. போர்க்களத்திலே நான் செய்வது சரியா பிழையா என்று ஒருகணம் சிந்திப்பானாக இருந்தால் போரிலே தோக்கவேண்டி வந்துவிடும். அப்படிப்பட்ட மக்களைத்தான் இராணுவத்தில் சேர்ப்பார்கள். இராணுவத்துக்கு, அந்தப் படைகளுக்கு நல்ல தலைமையும், வழிகாட்டலும்தான் முக்கியமானது.” ஆதவனும் ஆமோத்திதான்.

ஆலையின் பிரதான வாயில் வழியாக அந்த இரு இராணுவ வாகனங்களும் ஆலைக்குள்ப் பிரவேசித்தது. ஆலை வளாகத்தினுள் நின்றவர்கள் அனைவரும் அவர்களை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர். சிலரது உறவினர்கள் உரக்க அழுத்தவாறும் இருந்தனர்.

அவர்களை வரவேற்ற அந்தக் கூட்டத்தில் அதே மஜீத்தும் அதே வெறித்த பார்வையுடன் காணப்பட்டான். 

“இவன் இனி என்ன திட்டம் தீட்டுகிறானோ தெரியவில்லை. தவறான தகவல்களால் உங்களைக் கைதுசெய்ய வேண்டி வந்துவிட்டது என்று இராணுவத்தினன் கூறினானே. இந்த மஜீத்தான் அந்தத் தகவலைக் கொடுத்திருப்பான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” ஆதவன் எண்ணிக் கொண்டான்.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என்பது போல சிலர் அழுதனர், சிலர் கண்கலங்கியவாறு நின்றனர். சிலர் ஆத்திரமுற்றிருந்ததும் தெரிந்தது.

திரும்பி வந்த அனைவரும் நிசங்காவை மனதார வாழ்த்திய வண்ணமாக இருந்தனர்.

அருகில் நின்ற நமசிவாயத்திடம் ஆதவன் கூறினான். “எப்படித் தப்பி வந்தனாங்கள் என்று என்னால் நம்பமுடியாமல் இருக்கு அண்ணை “.

நமசிவாயம் உடனே குறுக்கிட்டார் “தம்பி உதை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்துவிடு. இனியும் அதனையே நினைத்துக் கொண்டிருந்தால் எவ்வித பிரயோசனமும் இருக்காது. அது கடந்த காலம், இறந்தகாலம், முடிஞ்சுது, மறந்திடு. அது உன் வாழ்க்கையின் ஒரு பழைய அத்தியாயம். இனி புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டு.”

ஆலை முகாமையாளர் எல்லோரையும் உற்சாகமாக வரவேற்று அங்குள்ள சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று எல்லோருக்கும் தேநீர் சிற்றுண்டி உணவு என்பன பரிமாறப்பட்டன. திரும்பி வந்தவர்களை அங்குள்ளவர்கள் சூழ நின்று கதை கேட்ட வண்ணமாக இருந்தனர்.

“அமைதி அமைதி” ஆலை முகாமையாளர் முன்னால் இருந்த சிறிய மேடையில் நின்றுகொண்டிருந்தார்.

எல்லோரும் அமைதியானார்கள்.

அவர் பேசத் தொடங்கினார். “அனைவருக்கும் வணக்கம். இன்று எமது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள். யாருமே எதிர்பாராமல் மிகவும் துயரகரமான அந்தக் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. சிறு தவறு நடந்து விட்டதாகவும், யாரோ கொடுத்த பிழையான தகவலால் தாம் அப்படி நடந்துகொள்ள வேண்டி வந்துவிட்டதாகவும் இராணுவத் தலமைப் பீடம் எம்மிடம் மன்னிப்புக் கோரி இருக்கிறது. பிடித்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரும் எவ்வித இடையூறும் இன்றித் திரும்பி வந்ததற்கு நாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம். இனி அப்படியான தவறுகள் நடைபெறாது என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

அத்துடன் நாம் மூவருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

முதலாவதாக நிசங்கா. எல்லோருக்காகவும் இராணுவத்தினருடன் இறுதிவரை தனது உயிரையும் பொருட்படுத்தாது போராடியவர். அதில் வெற்றியும் கண்டுவிட்டார். எம் வாழ்நாளில் அவர் மறக்க முடியாதவர்.

அடுத்ததாக எமது மஜீத் மற்றும் அலி இருவரும். இராணுவத்தினர் இங்கு பிடித்த அனைவரையும் பாலத்தை நோக்கி நகரவைக்கும் முயற்சியில் ஈடுபடப் போகிறார்கள் என்று அனுமானித்தவுடன் பாலத்துக்கு அப்பால் இருக்கும் போராளிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அத்துடன் வாளைச்சேனையிலுள்ள அந்த தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தை இயங்க வைத்தால்த்தான் நாம் எமது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளமுடியும் என்ற நோக்கங்களுக்காக, சிலர் பயத்தில்த் தடுத்தபோதும் “நான் ஒரு ஒண்டிக் கட்டை இவர்களுடன் பலகாலம் பழகி இருக்கிறேன் நான் செத்தாலும் பரவாய் இல்லை இவர்களை என்னால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சி செய்வேன் என்று கூறிவிட்டு, அந்த ஆற்றை நீந்திக் கடந்து அப்புறத்திலுள்ள போராளிகளுக்கும் தகவல் கொடுத்து பின்னர் தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்துக்குச் சென்று நிலைமையை விளக்கி, அவர்கள் மூலம் தொலைபேசி சேவையை இயங்க வைத்து. நான் எமது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ள உதவியவர்கள். இவர்களும் நாம் எமது உயிருள்ளவரை மறக்க முடியாதவர்கள்” கூறி முடித்தார்.

“அல்லா ஒருபோதும் எம்மைக் கைவிடமாட்டார். இன்சா அல்லா” கூறிவிட்டு மீண்டும் அதே முறைத்த பார்வையுடன் காணப்பட்டான் அந்த மஜீத்.

“என்னை மான்னித்துவிடு மஜீத். உன்னைப்பற்றி எனக்குள் எவ்வளவு தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். எனது, எம் உயிர்களைக் காப்பாற்றுவதில் நீயும் அல்லவா பெரும் பங்கு வகித்திருக்கிறாய். உன் முறைத்த பார்வையின் பின்னால் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.” ஆதவன் தனக்குள் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

அனைவரும் மறுபிறவி எடுத்தவர்கள்போல எதிர்கால நம்பிக்கைகளுடன் அந்த விடுதியில் இருந்து கலையத் தொடங்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %