காத்திருந்த காலங்கள்
ஆம் அன்று அருவின் இல்லம் மிகவும் அமளியாக இருந்தது. அரு என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருணின் திருமணத்துக்கு இன்னும் இரு வாரங்கள் தான் இருக்கிறது. நாளை அருண் இலங்கைக்குப் பயணமாகிறான். இன்று அருணின் நண்பர்கள் ஒன்றுகூடி அவனின் “batchelers break” கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனின் தனிமை வாழ்க்கை இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையப் போகிறது. பத்து வருடகால கனடா வாழ்க்கையில் தனிமை பழகிவிட்டது. அவனுக்கென்று ஒரு சில உறவுகள் இங்கு இருந்தாலும் நண்பர்கள் தான் அவனுக்கு எல்லாமே.
அந்த வீடே பலவகைக் குடிவகைகள், உணவுகள் உரையாடல்கள் என அமளி துமளிப் பட்டுக்கொண்டிருந்தது. அருண் சற்று பதட்டத்துடனேயே காணப்பட்டான். பத்து வருடமாக மிதிக்கதை மண்ணை மிதிக்கப் போகிறான். அவனது அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவினர்களை பார்க்கப் போகிறான். அது மட்டுமல்லாமல் முன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன் தனது வாழ்க்கையைத் தொடரப் போகிறான். ஜன்னலினூடாக வெளியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் பைன் மரங்களை பார்த்தவாறு தனது எதிர்கால வாழ்க்கையைக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தான்.
அன்று அவனுடன் பணிபுரியும் ஒரு சக வெளிநாட்டுத் தொழிலாளி கூறியதும் அவன் மனதில் வந்துபோனது. “முன்பின் தெரியாத பெண்ணை எப்படித் திருமணம் செய்யப் போகிறாய்? எப்படிச் சேர்ந்து வாழப் போகிறாய்? இருவருக்கும் மனம் ஒத்து வராவிட்டால் என்ன செய்யப் போகிறாய்?” நியாயமான கேள்விதானே. நான் அவனுக்குப் பதிலேதும் கூறவில்லை. எனது அப்பா, அம்மா, எனது உறவினர்கள் ஏன் எனது கிராமத்திலுள்ள முக்கால் வாசிப்பேர் பேசித்தானே திருமணம் செய்திருக்கிறார்கள். யாருடைய மண வாழ்க்கை பிழைத்தது. ஆனால் என் மாமாவின் இல்லற வாழ்க்கை மட்டும் சிக்கலாகி விட்டது. இருவரும் எப்போதும் சண்டைப் பிடிப்பார்கள். அந்நேரங்களில் நான் நினைப்பதுண்டு பேசிக் செய்யும் திருமணமாக இருந்தாலும் ஆணையும் பெண்ணையும் சிறிது காலம் பழக்கவிட்டு அதன் பின்னரே திருமணம் செய்யவேண்டுமென்று.
எனது பெற்றோரின் தெரிவு எப்படியும் எனக்கு ஒத்துப் போகும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போது உண்டு. பெண்ணும் ஊரில் இருப்பதால் அவளைப்பற்றி விசாரித்து அறிந்து கொள்ளவும் இலகுவாக இருக்கும். இருந்தும் அப்பெண்ணின் நிலைமை என்னைப்பற்றி எப்படி அறிந்து கொள்ள முடியும். நான் கனடாவில் இருப்பதால் என் பெற்றோர் கூறுவதை மட்டும் தான் நம்பவேண்டும். எப்படி இருந்தாலும் நான் அவளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பேன். நல்ல கணவனாக இருப்பேன்.
“என்ன அருண் வருங்கால மனைவியைப் பற்றி கற்பனை பண்ணுகிறாய் போல தெரிகிறது?” அருணின் கற்பனை அவனது நண்பனால் கலைக்கப்படுகிறது.
அடுத்த நாள் மாலை அவனது நண்பர்கள் கை அசைத்து விடை கொடுக்க விமான நிலயத்தினுள் புகுகிறான். அங்கிருந்து லண்டன் சென்று அங்கிருந்து கொழும்பு செல்ல இருக்கிறான். ஆறு மணிநேர பயணத்தில் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தினை அடைந்து அங்கு மூன்று மணி நேர காத்திருத்தலின் பின்னர் கொழும்பு செல்வதற்காக ஏர் லங்கா விமானத்தில் ஏறி அழகான பணிப் பெண்களின் இனிய வரவேற்புடன் தனது இருக்கையில் சென்று அமர்கிறான். அவன் விரும்பியது போல ஜன்னல் அருகில் அவனுக்கு இருக்கை கிடைத்திருந்தது. விமானத்தில் பயணிகள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பயணப் பொதிகளை வைப்பதும் தமது இருக்கைகளை சரிசெய்வதுமாக எல்லோரது கவனமும் இருந்தது. தனது இருக்கையில் தன்னை சாதுவாதுப் படுத்திக் கொண்ட அருண் சன்னலின் ஊடக விமானத் தளத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
“அம்மா இதா எங்கட சீட்?”
மழலைத் தமிழ் கேட்ட அருண் திரும்பினான்.
அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை நாலு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க குறும்புப் பார்வையுள்ள சிறுவனுடன் நந்தினி நின்று கொண்டிருந்தாள். பத்து வருடங்களின் பின்னரும் அவனால் அவளை இனம் காணக்கூடியதக இருந்தது. அவளில் ஓரளவு மாற்றங்கள் தெரிந்ததுதான். இருந்தாலும் மேல்நாட்டு நாகரீகத்துக்கு அவள் பெரிதும் அடிமையாகவில்லைப் போலத் தெரிந்தது.
அவனும் நந்தினியும் பத்து வருடங்களின் பின்னர் நேருக்கு நேர் நோக்கிக் கொண்டார்கள். அவளும் அருணை அடையாளம் கண்டு கொண்டாள் போலத்தான் தெரிந்தது. சிறிது அதிர்ச்சிக்குள்ளானவள் போலக் காணப்பட்டாள்.
அருண் அவசரப்பட்டான் “நீங்கள் நந்தினி தானே?”
“ஓம் நீங்கள் அருண்?” சற்று தயங்கியவாறு பதிலளித்தாள்.
அவளின் பின்னால் நின்றவர்கள் தமக்கு வழிவிடுமாறு கேட்ட போதுதான் இருவரும் தம்மைச் சுதாகரித்துக் கொண்டார்கள். நந்தினி மிகவும் பதட்டத்துடனேயே காணப்பட்டாள். அருண் எழுந்து அவளது கைப் பொதிகளை வைப்பதற்கு உதவிசெய்தான்.
குறும்புக்கரச் சிறுவன் முந்திக் கொண்டான் “அங்கிள் நான் ஜன்னல் கரையில் உட்காரலாமா?”
தனது தாய்க்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பதனை ஊகித்துவிட்டான் போலிருக்கிறது.
ஆம் நீங்கள் இருக்கலாம்.
அருணின் பதிலைக்கூட அவன் எதிர்பார்த்தது போலத் தெரியவில்லை. உட்காந்தே விட்டான்.
அருண் விரும்பி எடுத்துக் கொண்ட அந்த இருக்கை சிறிது கணத்தில் எவ்வித தடையும் இன்றி கையளிக்கப்பட்டது. அருண் தனது விருப்பங்களை மிகவும் திட்டமிட்டே செய்வான். அதற்க்குக் காரணம் அவனது தந்தையின் வழிநடத்தலும் அவன் பயின்ற கல்லூரியின் பயிற்சியுமாகும். பலர் திட்டமிட்டுப் பல காரியங்கள் செய்வார்கள் இறுதியில் அவர்கள் விரும்பியதுபோல நடந்தேறியதுதான் எத்தனை. அவன் ஆட்டுகிறான் நாம் ஆடுகிறோம் என்பதனைப் பலர் புரிந்து கொள்வதில்லை.
குட்டி நந்தினி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். சன்னலினூடாக வெளியே வேடிக்கை பார்ப்பதில் கவனமாக இருந்தான். அவனின் அருகில் நந்தினி அடுத்தாற் போல் மூன்றுபேர் அமரும் ஆசனத்தில் நந்தினிக்கு அருகில் அருண் அமர்ந்தான்.
அருணால் எதனையும் நம்ப முடியவில்லை. அவன் கனவில் கூட எதிர்பாராத நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவன் அவளைக் காதலிக்கும் நாட்களில் அவளுடன் கதைப்பதற்கு எவ்வளவு ஏங்கியிருப்பான். கடைசிவரை அவளுடன் ஒரு வாத்தைகூடப் பேசமுடியாமல்ப் போய்விட்டதே. பத்து வருடங்களின் பின்னர் ஆண்டவன் அவனையும் அவளையும் அருகருகில் அமர்த்தி வேடிக்கை பார்க்கிறான்.
அருண் எண்ணிக் கொண்டான் நான் இவளைக் காதலித்து பின்னர் பிரியவேண்டி வந்து, மறக்க முயன்று ஓரளவு முற்றிலுமாக மறந்துபோய் இருந்தேனே. இருந்தும் தெளிவான நீரில் அவ்வப்போது வந்துபோகும் அலைபோல அவள் எண்ணங்கள் என்னை வாட்டிக் கொண்டுதான் இருந்தது. அவள் எப்படி எங்கு யாருடன் வாழ்கிறாள் என்ற கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்கப் போகிறது. மனதில் ஒரு மிதமான மகிழ்வு உருவாகியிருந்தது.
அவன் அன்று நம்பிய அந்த அரசடிப் பிள்ளையார் இன்றுதான் அவனுக்கு அருள் செய்கிறார் போலும். காலம் கடந்து விட்டது இருந்தும் அவர்களுடைய சந்தேகங்களை பழைய எண்ணங்களை பரிமாறிக் கொள்ள, தீர்த்துக்கொள்ள ஆண்டவனால் இன்று ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இப்பொழுது இந்தச் சந்திப்பு தேவைதானா ஆண்டவனே என்றும் ஒரு எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.
அருணின் பதற்றம் குறைய சிறிது நேரம் எடுத்தது.
விமானம் ஓடு பாதையில் ஓடி மேலெழுந்து பறக்கத் தொடங்கியது.
நந்தினி மிகவும் அமைதியாக இருந்தாள். சிறிது குனிந்து கீழ் நோக்கிய வாறும் இருந்தாள்.
அவளும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டாள் போலத் தெரிந்தது.
நீங்கள் லண்டனிலா இருக்கிறீங்கள் நந்தினி? அருண் ஆரம்பித்தான்.
ஆம் ஐந்து வருடங்களாகிறது நான் லண்டன் வந்து. என் கணவர் பாபு. இவன் என் மகன். பெயர் கிசோத் middle name அருண். அரு என்றுதான் வீட்டில் அழைப்போம். பதில் கூறிவிட்டு மீண்டும் மௌனமானாள்.
அருண் தன்னை சுதாகரித்துக் கொள்ள சிறிது நேரம் எடுத்தது.
என்னை நீ எவ்வளவு ஆழமாகக் காதலித் திருக்கிறாய். காலத்தின் சதியால் நாம் சேரமுடியாமல் பிரிந்துவிட்டோம். இன்று நாம் வேறு வேறு மனநிலையில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் அன்று விரும்பி பிரிந்தவர்களுமல்ல இன்று திட்டமிட்டுச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களும் அல்ல. வாழ்க்கையில் பல கேவிகளுக்கு எமக்குப் பதில் தெரியாமலே இருக்கிறது. கடவுளே அன்று எம்மை நீ சேர்த்து வைத்திருந் திருக்கலாம் அல்லது இன்று எம்மைச் சந்திக்க விடாமல் பார்த்திருக்கலாம். அருண் சிந்தனையில் மிதந்து கொண்டிருந்தான்.
இவள் என் பிரிவை எப்படித் தங்கியிருப்பாள்? என் பெயரை அல்லவா தன் மகனுக்கு வைத்திருக்கிறாள். இந்தப் பெண்களே இப்படித்தான் தமது காதலை வெளியே காட்ட மாட்டார்கள். மனதுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பார்கள். எமது கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் சமூகக் கட்டுப்பாடுகள் எமக்குப் பல நன்மைகளையும் செய்திருக்கிறது பல தீமைகளையும் செய்திருக்கிறது.
அருண் இருபது வருடங்கள் எமது ஊரில் அந்தக் கலாச்சாரத்தில் புடம் போட்டு எடுக்கப்பட்டவன், அதனால் இந்த கனேடிய மேல்நாட்டு பழக்க வழக்கங்கள் அவனை அடிமை கொள்ளவில்லை. எமது சில இளம் சமுதாயம் பல வழிகளிலும் சீரழிந்து கொண்டிருப்பதனையும் பார்த்திருக்கிறான். பல தடவைகளை அதன் காரணத்தினையும் அலசிப் பார்த்திருக்கிறான்.
உள்நாட்டுக்குப் போரினால் உலகம் அறியாய் பருவத்திலே உயிரைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் இன்று ஊரில் இருந்து பெற்றோரினால் தனியாக அனுப்பி வைக்கப் பட்டவர்கள் தான் மேலை நாடுகளிலே கூடுதலாக தமது வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிநடத்தல் இல்லை. முறையான கட்டுப்பாடுகள் இல்லை. தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறை மூலம் தம்மை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்கள் குற்றமும் அல்ல அவர்களது பெற்றோரின் குற்றமும் அல்ல. நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தமே காரணமாகும்.
நமது நாட்டடின், ஊரின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சமூகக் கட்டுப்பாடுகள் அதில் அருண் ஊறி இருந்ததால்த்தான் இந்தக் கனடாவிலே அவனை ஒரு நல்ல மனிதனாக வாழ்க்கையைத் தொடர வைத்திருக்கிறது. ஆம் அந்தச் சமூகம் அவனுக்கு நன்மை செய்திருக்கிறது.
அதே சமூகம்தான் அன்று அவனுக்கும் நந்தினிக்கும் இடையில் காதலை வெளிக்காட்ட முடியாமல் தடுத்திருக்கிறது. அதனால் அவள் இன்னொருவனின் மனைவியாகிவிட்டாள். அவன் இன்னொரு பெண்ணை மணமுடிக்க பயணித்துக் கொண்டிருக்கிறான். வித்தியாசமான சூழ்நிலையில் இருவேறு மனநிலையில் அந்தப் பழைய காதலர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமூகம் அவர்களுக்கு தீமை செய்திருக்கிறது. இது மிகவும் துயரகரமானது. மிகவும் துர் அதிஷ்டகரமானது. இருந்தும் தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு ஆண்டவனால் அளிக்கப்பட ஒரு சந்தர்ப்பமாகவே அவன் கருதினான்.
இருவரும் மௌனத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
நந்தினி அருண் பக்கம் திரும்பினாள் “எப்படி இருக்கிறீங்கள் அருண்?” மீண்டும் தனது தலையைக் குனிந்து கொண்டாள்.
இந்த வாத்தையை பத்து வருடங்களின் முன்னர் துணிவாக என்னிடம் கேட்டிருந்தால் எமக்குள் இந்தப் பிரிவு வந்திருக்காதே. இன்று மட்டும் இவளுக்கு எப்படி இந்தத் துணிவு வந்தது? இந்தத் தனிமையா? அல்லது இந்த வெளிநாட்டு வாழ்க்கையால் கிடைத்த தன்னம்பிக்கையா? இன்னும் எமது ஊரில் எமது பெண்கள் ஆடவருடன் பேசுவதக்கு மிகவும் தயங்குகிறார்கள். வெட்கப்படுகிறார்கள். பொதுவாக பேசவே மாட்டார்கள். ஆனால் அதே பெண்கள் வெளிநாடுகளில் எல்லோருடனும் மிகவும் சகஜமாகப் பழகுகிறார்கள். இது வெளிநாட்டுக் கலாச்சாரம் எமக்குத் தந்த சில சீர் திருத்தங்களும் தன்னம்பிக்கைகளும். என்று அருண் தன்னுள் எண்ணிக் கொண்டான்.
“இருக்கிறேன் நந்தினி” பதில் கூறிவிட்டு மீண்டும் மௌனமானான், அந்தப் பழைய நினைவுகள் அவன் சிந்தையை வட்டமிட ஆரம்பித்தது.
அது 1982 மாதம் தை யாகத்தான் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் புது வகுப்புகள் பொதுவாக தை மாதத்தில்த் தான் ஆரம்பிக்கும். அவன் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு GCE A/L ஆரம்பிக்கிறான். பாடசாலையை விட வெளியிலும் படிக்க வேண்டும் என்பதற்காக பரமநாதன் ஆசிரியரிடம் கணிதம் “டியூசன்” படிக்கப் போகத் தொடங்கினான்.
புது வகுப்புகள் தொடங்கும் போது புத்தகம் கொப்பிகளுக்கு அழகாக மாட்டுத்தாள் கடதாசியினால் உறை போடுவதிலும், முன்புற அட்டையில் தமது பெயர்களை எழுதுவதிலும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். சேகரித்து வைத்த பட siigger களைக்கூட வெளிப்புறத்தில் ஒட்டி அழகு பார்ப்பர். அருணும் அதற்கு விதிவிலக்கல்ல. பாடசாலை, டியூஷன் கொப்பிகள் என்று தனித் தனியாகப் பிரித்து உறை போடுவதிலும், அடடையில் பெயர் பொறிப்பதிலும் தனது கவனத்தினைச் செலுத்தினான்.
அவனது பாடசாலை ஆண்கள் மட்டுமே பயிலும் பாடசாலையாகும். அதனால் பாடசாலையில் பெண்களுடன் பழகும் சந்தர்ப்பம் அவனுக்கு இருக்கவில்லை. டியூஷன் இல் ஆண்களும் பெண்களும் பயில்வார்கள். ஆனால் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனியா அமர்ந்திருந்து கல்வி கற்பதற்கு ஏற்றவாறு அந்த ஊருக்கே உரிய ஏன் அந்தச் சமுதாயத்துக்கே உரிய வளமைப்படி பராமநாதன் ஆசிரியரும் வகுப்பைப் பிரித்திருந்தார்.
அவன் பயிலும் கல்லூரி பட்டினத்தில் இருந்தது. தினமும் அவன் பஸ் வண்டியில்த்தான் போய் வருவான். அதிலும் பாடசாலை மாணவர்களுக்காக காலையிலும் மாலையிலும் பஸ் விடுவார்கள். அங்கும் ஆண்களுக்குத் தனியாக பெண்களுக்குத் தனியாக என்றே பஸ் விட்டார்கள். அங்கும் ஆண், பெண் மாணவர்கள் கலந்து பழகும் சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அங்கும் அந்தச் சமுதாயம் இளம் சமூகத்தினர் கலந்து பழகும் சந்தர்ப்பங்களை தவிர்த்தே வைத்திருந்தது. அவர்களது எண்ணங்கள் உணர்வுகளைக் கட்டுப் படுத்துகிறது.
உண்மையில் எமது நாடுகளில் பெண்கள் பாதுகாக்கப் படவேண்டியவர்கள். குடும்ப வாழ்க்கைக்கு பெண்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. வாழ்க்கை என்ற நீரோடையில் குடும்பம் என்ற படகு சீராக முன்னேறிச் செல்வதற்கு குடும்பத் தலைவி என்ற துடுப்பு மிகவும் முக்கியமானது. அதுதான் போலும் அன்று தொட்டு எமது சமுதாயம், பெண்கள் தவறான பாதையில் சென்று விடாமல்த் தடுப்பதற்காக, பாதுகாப்பதற்காக பல சமுதாயக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. எனது ஊரில் விவாகரத்து என்பது எனது அறிவுக்கு எட்டியவரையில் இல்லை என்றே கூறலாம்.
சிறிது குழப்படியாக இருக்கும் ஆண்களுக்குச் சொல்வார்கள் “இவனுக்கு ஒரு கால்க்கட்டுப் போட்டு விட்டால்த் திருந்தி விடுவான்” என்று. ஒரு பெண்ணால் எப்படிப் பட்டவனானாலும் திருத்தப்படுவான் என்று அந்தச் சமுதாயம் நம்புகிறது. அந்தச் சமுதாயத்துக்குள் அருணும் அடக்கம்.
அந்த நாட்களில்த்தான் அருண் வாலிபப் பருவத்தை அடைகிறான். இளம் எண்ணங்கள் உணர்ச்சிகள் துளிர்விட ஆரம்பிக்கிறது. அந்த காலகட்டத்தில்த்தான் அவனுக்குப் பெண்களுடன் கலந்திருந்தது கல்வி பயிலும் சந்தர்ப்பம் அந்த tuition வகுப்பில்க் கிடைக்கிறது.
அதற்காக ஆண்களும் பெண்களும் சகஜமாக கலந்திருந்து கதைத்துப் பழகலாம் என்று அர்த்தமல்ல. அந்த ஊர் அதற்கெல்லாம் பெரிதாக இடம் கொடுக்காது. அப்படி யாராவது கலந்து பழகுவதை பெற்றோர் அறிந்தால் தம் பிள்ளைகளை மிகவும் கண்டிப்பார்கள். ஏன் tuition இக்குப் போவதைக் கூட நிறுத்தத் தயங்கமாட்டார்கள்.
அருண் மிகவும் அழகானவன். துடுப்பு மிக்க ஒரு வாலிபனாக இருந்தான். நன்றாகப் படிப்பான். இயற்கையை நன்றாக ரசிப்பான். அவன் வீட்டு முற்றத்தில்த்தான் எத்தனை விதம் விதமான பூமரங்கள்.அத்தனையும் அவனது ரசிப்புக்கள்.
அவன் இயற்கையை ரசித்தான். அதுபோல அவனுடன் tuition படிக்கும் நந்தினியையும் ரசிக்கத் தொடங்கினான். அவள் அழகு, அவளது குரல் அருணைக் கவர்ந்தது. ஆரம்பத்தில் அது வெறும் ரசிப்பாகவே இருந்தது. நாட்க்கள் செல்லச் செல்ல அவனுள் அவள் ஒரு உந்துதலைக் கொடுக்கத் தொடங்கினாள். அந்த நந்தினி மிகவும் அழகானவள். அடக்கமானவள். படிப்பிலும் மிகவும் ஆர்வமுள்ளவள். அத்தனைக்கும் மேலால் அவளது இனிமையான குரல் அருணை மிகவும் வாட்டியது. அவன் பார்வைகள் அவள்மேல் கூடுதலாகப் பதியத் தொடங்கியது.
அவனது பார்வையின் அர்த்தங்களை அவளும் புரிந்து கொள்ளத் தொடங்கினாள். அவன் அவளை பார்வையால் காதலிக்கத் தொடங்கினான். அவ்வப்போது அவர்கள் கண்கள் யாருமறியாதவாறு சந்தித்துக் கொண்டன. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.
மாணவர்கள் காதலிக்கத் தொடங்கினால் ஒழுங்காக வகுப்புகளுக்கு வருவார்கள். மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் உடை அணிந்து கொள்வார்கள். நன்றாகத் தலை வாரி விட்டுக் கொள்வார்கள். படிக்கிறார்களோ இல்லையோ நன்றாகப் படிப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அருண் படிப்பிலும் நன்றாகக் கவனம் செலுத்தினான்.
அருணுக்கும் நந்தினி மேலுள்ள காதல் நாளுக்கு நாள் தீவிரமடையத் தொடங்கியது. அந்த நாட்களில் எமது ஊரில் காதல் என்பது ஆணும் பெண்ணும் திருட்டுத் தனமாகப் பார்த்துக் கொள்வதனையே காதலாக எடுத்துக் கொள்வார்கள். சிலர் புத்தக உறைக்குள் கடித்தம் எழுதிவைத்து நேரடியாக அல்லது நண்பர்கள் மூலமாக பரிமாறிக் கொள்வார்கள். மேலும் ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் திருட்டுத்தனமாக சிலர் சந்தித்தும் கொள்வார்கள். அதுவே அந்த நாட்களில் காதலில் செல்லக்கூடிய தூரமாக இருக்கும். ஒருவருக் கொருவர் நேரடியாக சந்தித்துக் கொள்வதென்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். காதலிப்பதற்கு முக்கியமாக சிநேகிதர்கள் தேவை என்ற கட்டாயமும் இருந்தது. அப்படியான சூழ்நிலையில் அருணுக்கு நந்தினிமேல் காதல் அரும்பத் தொடங்கியது.
அருணுக்கு அவள் தன்னை காதலிக்கிறாள் என்ற நம்பிக்கையும் இருந்தது. அவள் பார்வைகள் மற்றும் அவன் இல்லாத வேளைகளில் அவனை கண்களால்த் தேடுவது போன்றவற்றில் இருந்து அவளும் தன்னை விரும்புகிறாள் என்பதில் அருண் நம்பிக்கை வைத்தான். ஆனால் சில வேளைகளில் அவனைக் கண்டு கொள்ளாதவள் போலவும் இருந்திருக்கிறாள் அவ்வேளைகளில் அவன் குழம்பியும் இருக்கிறான்.
அந்தக் கிராமம் மிகவும் பெரியது. கிழக்கு, மேற்கு என்று பிரதான வீதியால் பிரிக்கப்பட்டு இருந்தது. அருண் மேற்குப் பகுதியில் வசிப்பவன், அவளோ கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவள். அவளைப் பற்றிய விபரம் எடுப்பது அருணுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. அவளைக் காதலிப்பதாக இருந்தால் அவள் வசிக்கும் பகுதியிலுள்ள ஒருவரின் சிநேகிதமும் அருணுக்குத் தேவைப்பட்டது. அவனுடன் tuition இல் படிக்கும் மோகன் அவள் வீட்டுக்கு அருகாமையில் வசிப்பவன். அருண் மோகனுடன் கூடுதலாகப் பழகத் தொடங்கினான். விரைவில் மோகனும் அருணும் நல்ல நண்பர்களானார்கள். சேர்ந்து படிக்கும் சாட்டில் அருண் மோகன் வீட்டுக்குப் போகத் தொடங்கினான். நந்தினியின் வீட்டைக் கடந்துதான் மோகன் வீட்டுக்குப் போகவேண்டும். அதனால் நந்தியின் வீட்டைக் கண்டு கொண்டான். அவள் வீட்டிலுள்ள அங்கத்தவர்களைக் கண்டுகொண்டான். அவளது தகப்பனார் ஒரு கண்டிப்பான ஆசியர் என்பதனையும் மோகன் மூலமாக அறிந்துகொண்டான்.
“காதல் என்பது தேன் கூடு அதைக் கட்டுவ தென்றால்ப் பெரும் பாடு” உண்மைதான். பல தேனீக்கள் திட்டமிட்டு பல நாள் உழைத்து பல சிரமங்களுக்கு மத்தியில் கூடுகட்டி தமது எதிர்காலத்துக்காகச் சேர்த்து வைக்கும் தேனை நாம் எமக்காகச் சேர்த்து வைத்தது போல ஒரு நாளில் நெருப்புக் காட்டி, புகைபோட்டு தேனீக்களை எரித்துக், கலைத்து அத்தேனை எடுத்து எமது தேவைகளுக்கு உபயோகிப்பது மட்டுமல்லாது கடவுளுக்கும் அல்லவா பூசைக்குப் பாவிக்கிறோம். இது மாபெரும் தவறில்லையா. இதுவும் ஒருவகையான பயங்கரவாதம் தானே?
அருண் தனது காதல் என்ற தேன் கூட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டான். மோகனிடம் தனது நந்தினி மேலுள்ள காதலை சிறிது சிறிதாக வெளிப்படுத்தினான். மோகன் அவனது காதலுக்கு உரமூட்டினான். காதலிக்கும் பொழுது யார் யார் அவர்களுடைய காதலை ஆதரிக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான நண்பர்கள் போலத் தெரிவார்கள். மோகனுக்கு நந்தினியின் சிநேகிதி ராஜி பழக்கமாக இருந்ததால் அவள் மூலமாக நந்தினியைத் தொடர்பு கொள்ள முடியுமென மோகன் அருணுக்கு நம்பிக்கை தெரிவித்தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருண் மோகன் வீட்டுக்குப் போகத் தொடங்கினான். நந்தினியின் வீடு பெரிய புளியடிச் சந்திக் கடைக்கு அருகில் இருந்தது. அந்தப் புளியடிக் கடையில் எந்தநேரமும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும். பலதும் பத்தும் பேசி அவ்வழியால் போவோர் வருவோருடனும் சிலவேளைகளில் வம்பிழுக்கும். அந்த வட்டாரமே அவர்களது கண்காணிப்பில் இருக்கும்.
பொதுவாக எமது ஊர்களில் சந்திகள், வாசிகசாலைகள், கோவில் வீதிகளில் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் நின்று பலதும் பத்தும் பேசி தமக்குள் வம்பிழுத்தபடியே இருப்பார்கள். அது அவ்விடத்துக்கு நல்ல காவலாகவும் இருக்கும் சில நேரங்கள் உபத்திரவமாகவும் இருக்கும். அந்தப் புளியடிச் சந்திக் கடையடிக் கூட்டமும் அருணுக்கு நந்தினியின் வீட்டை நோட்டமிட மிகவும் இடைஞ்சலாக இருந்தது.
நந்தினி வீட்டுக்கு முன்னால் நிறைய பூமரங்கள் இருந்தன. ஒரு பெரிய பலாமரமும் இருந்தது. ஒழுங்கைக் கரைக்கு கிடுகுவேலி அடைத்து இருந்தார்கள். அவளது அப்பா, அம்மா, தம்பி, அக்காவை எல்லாம் அருண் அவ்வீட்டில்ப் பார்த்திருக்கிறான். ஆனால் அவளைத்தான் அவள் வீட்டில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதற்கு அந்தப் புளியடி பெடியளும் இடைஞ்சலாக இருந்தார்கள்.
பாடசாலை tuition தவிர அவள் வேறெங்கும் செல்லவதில்லை போலத்தான் தெரிந்தது.
அப்படித்தான் ஒருநாள் அருண் மோகன் வீட்டுக்குப் போகும்போது ராஜி அவனைப் பாத்துவிட்டாள். அருனைப் பார்த்து சிறிது புன்னகைத்தாள்.
ஒருவேளை நந்தினி என்னைப்பற்றி இவளுடன் கதைத்திருப்பாளோ? நான் இவ்வழியாக மோகன் வீட்டுக்குப் போய்வருவது நந்தினிக்காகத்தான் என்று இவளுக்குப் புரிந்துவிட்டதோ? அல்லது ஒரே வகுப்பில் படிக்கிறோம் என்ற புன்னகையா? அருணுக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது. நடந்ததை மோகனிடம் கூறினான்.
மோகன் நம்பிக்கை தெரிவித்தான். ராஜி சிரிப்பதால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். ராஜியும் நந்தினியும் ஒன்றாகவே tuition இக்கு வருவார்கள். வகுப்பிலும் அருகருகேயே இருப்பார்கள். மோகனின் வீட்டுக்கு அயலிலேயே ராஜியின் வீடும் இருந்தது. மோகன் வீட்டுக்கு அவனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருப்பதற்காக அடிக்கடி வந்து போவாள். அதனால் மோகனுக்கு ராஜியுடன் நல்ல நட்பும் இருந்தது. எனவே மோகன் நம்பிக்கை தெரிவித்தான் பயப்படாதே ராஜி முலமாக உனது காதலை நந்திக்குத் தெரிவிக்கிறேன். விரைவில் ராஜியிடம் இதைப்பற்றிக் கதைக்கிறேன் என்று ஆறுதல் கூறினான்.
காலம் உருண்டோடிக்கொண்டிருந்தது. இன்னும் ஆறு மாதங்கள் தான் அவர்களது இறுதிப் பரீட்சைக்கு இருந்தது. அதற்குள் நந்தினியிடம் காதலை வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லையேல் அதன்பின்னர் tuition உம் இருக்காது. நந்தினியையும் பார்க்க முடியாது. காதலையும் வெளிப்படுத்த முடியாது. அருண் சற்று கவலை யுற்றவனாகவே இருந்தான்.
மோகன் மிகவும் நிதானமானவன். நாட்டுப்பற்று மிக்கவன். எமக்குச் சுய உரிமை கிடைக்க வேண்டும் என்பதிலெல்லாம் மிகவும் ஆர்வமுடையவன் ஆனால் அருணோ காதல் என்ற மதுவுக்கு அடிமையாகிவிட்டான். படிப்பைக் கூட இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டான். மோகன் அவனுக்கு படிப்பில் கவனம் செலுத்து மிகுதியெல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்று அறிவுரை கூறுவான்.
அன்றொருநாள் tuition வகுப்பில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அருண் எப்பொழுதும் வகுப்புகளுக்கு நேரத்துக்கு வந்துவிடுவான். அன்றும் அப்படித்தான் நேரத்துக்கு வந்துவிட்டான், வகுப்புகள் ஆரம்பிக்குமுன் மாணவர்கள் சேர்ந்து நின்று பகிடி விடுவது மற்றவர்களைக் கிண்டலடிப்பது வழக்கமாக இருந்தது. வகுப்பு ஆரம்பமாகும் நேரமும் வந்துவிட்டது பொதுவாக எல்லா மாணவர்களும் வந்து விட்டார்கள் ராஜியும் வந்துவிட்டாள். நந்தினி மட்டும் இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் நந்தினி வரவில்லை என்று எண்ணியவாறு அருண் அவள் வரும் பாதையைக் கண்களால் தேடினான். இன்று அவள் வரமாட்டாளா? என்ன நடந்திருக்குமோ? இனிமேல் வராமலே விட்டுவிடுவாளா? என்ற எண்ணங்களுடன் அருண் மிகவும் சோர்வுற்றவனாகக் காணப்பட்டான்.
அப்பொழுது அவனுடன் பயிலும் மாணவன் ரவி பலத்த குரலில் “என்ன அருண் நந்தினி வரவில்லை என்று கவலைப்படுகிறாய் போல தெரிகிறது “என்று கேட்டான்.
முழு மாணவர்களும் கொல் என்று சிரித்துவிட்டாள். அதில் ராஜிதான் நன்றாக குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அருண் நன்றாகக் குழம்பிவிட்டான். எனக்கே என் காதல் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை. இவனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது. எல்லோரும் சிரிப்பதால் எல்லோரும் அப்படி ஊகித்து வைத்திருக்கிறார்களா? இவன் ரவி படிப்பிலோ ரொம்பவும் மட்டம். இவ்விடயத்தில் மட்டும் ரொம்ப சுட்டியாக இருக்கிறானே. படிப்பிலே கெட்டிக்காரன் முட்டாள் என்று எதுவும் கிடையாது.எதில் யார் அதிக கவனம் செலுத்துகிறார்களோ அதில் அவர்கள் முன்னுக்கு வருவார்கள் என்பதற்கு ரவி ஒரு உதாரணம்.
எனக்கே தெளிவில்லாத எனது காதல், இப்போது ரவி மட்டுமல்ல முழு வகுப்புமே பேசும்படியாக ஆகிவிட்டது. அருணால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து சிரித்துச் சமாளித்துவிட்டான்.
கணித ஆசிரியரும் வந்துவிட்டார். நந்தினி இல்லாமலே வகுப்பு ஆரம்பமாகியது. ராஜி பலமுறை அருணை நோட்டமிட்டதை அருண் அவதானித்தான். சக மாணவி ஒருத்திக்கு ராஜி அருணுக்கு கேட்க்கக் கூடியவாறு “நந்தினி இன்று அவளின் அம்மாவுடன் கோயிலுக்குப் பொங்கல் நேத்திக் கடனுக்காகப் போய்விட்டாள் நாளை வகுப்புக்கு வருவாள் ” என்று கூறினாள்.
அவள் அருனுக்காகக் கூறியதுபோல இருந்தது அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
மோகன் அருணிடம் கூறினான் “நம்பிக்கையோடு இரு, நந்தினி உன்னைக் காதலிக்கிறாள். அதனாலதான் ராஜி உனக்குக் கேட்க்கக் கூடியவாறு அப்படிக் கூறினாள். உன் காதல் நிறைவேறும். மிகவும் நிதானமாக இரு.” என்றான்.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது இறுதிப் பரீட்ச்சை நெருங்கிக் கொண்டிருந்தது. மோகனும் அருண், நந்தினி காதல் பற்றி ராஜியுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான். அருணும் ராஜியுடன் பேசுமாறு மோகனிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.
மோகன் மீண்டும் மீண்டும் அருணுக்குப் புத்திமதி கூறினான். விரைவில் நான் ராஜியுடன், நந்தினிமேல் உள்ள உன் காதலை பற்றித் தெரிவிக்கிறேன். ஆனால் நீ இப்போது பரீட்ச்சை நெருங்குகிறது அதனால் படிப்பிலே உன் கவனத்தைச் செலுத்து என்று அறிவுறுத்தியவாறே இருந்தான்.
அருணுக்கு மோகன்மேல் உள்ள நட்பை நினைக்க மிகவும் பெருமையாக இருந்தது. இவன் என் படிப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறான். என் காதலுக்கும் உதவுகிறான், ஆனால் அருணால் மோகனது நாட்டின்மேல் உள்ள அக்கறையை, தீவிரவாத எண்ணத்தைத்தான் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.
அவ்வப்போது மோகன் அருணுடனும் தமிழர் தயாகம் பற்றி எல்லாம் பேசி இருக்கிறான். ஆனால் அருணுக்கு அதிலெல்லாம் பெரிதாக அக்கறை இருக்கவில்லை. அவனது காதலும் அவனை வேறு எந்தத் திசையிலும் கவனம் செலுத்த விடாதவாறு பார்த்துக் கொண்டது.
காதலித்தல் என்பது துன்பம் கலந்த இன்பமான மனநிலையில் வைத்திருக்கும். அது ஒரு காதல் போதை என்றே கொள்ளப்படும். அருணும் அந்தப் போதைக்கு அடிமையாகி இருந்தான். அதன் சுவையை அனுபவித்துக் கொண்டிருந்தான். அருணும் நந்தினியும் தம் மனதுக்குள்ளே காதலித்துக் கொண்டிருந்தார்கள்.
காதலையும் பெருங்காயத்தையும் அடைத்துவைக்க முடியாது என்பதுபோல அவர்களது காதலும் அவ்வப்போது வகுப்பில் எல்லோராலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல இவர்கள் போன்ற சில காதலர்களும் அங்கு உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
சக மாணவனான ரவி ஒருநாள் அருணுக்கு அறிவுரை கூறினான்.
“அருண் உங்கள் இருவரது பெயர்களையும் ஒரு துண்டில் எழுதி அதனை ஒரு துணியில் கட்டி அந்த அரசடிப் பிள்ளையார் மரத்தில் கட்டிவிட்டு உன் காதல் உடனே நிறைவேறும்” என்று கூறினான்.
அந்த ஊரில் ஓரமாக ஒரு பெரிய அரச மரத்துக்கு கீழே ஒரு பிள்ளையார் சிலை வைத்து சின்ன கோயில் இருந்தது. ஏதாவது பிரச்சினை இருப்பவர்கள் தமது பிரச்சனைகளை ஒரு துண்டில் எழுதி அந்த மரத்தில்க் கட்டிவிட்டால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஊர் மக்களது நம்பிக்கை.
அருண் சிந்தித்தான் தனது காதல் நிறைவேற எல்லா விதமான முயற்சிகளும் செய்யப்படல் வேண்டும். “ஆராட்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் தமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் (ஒவ்வொரு செயல் முறையையும்) தவறவிடாது எழுதி வைத்துக் கொள்ளவார்கள். இது பயன்படாது என்று தவிர்த்து விடப்படும் சில செயல்முறைகள் ஆராட்சியின் முடிவில் முக்கியத்துவம் பெற்றுவிடுவதும் உண்டு.” அருண் எங்கோ படித்திருக்கிறான். அதனால் ரவி சொன்ன முறையையும் அவன் தட்டிக் கழிக்க விரும்பவில்லை.
அருண் மோகனிடம் தெரிவித்தான்.
மோகன் பதிலளித்தான் “அதுவெல்லாம் மூட நம்பிக்கை. நீ உன்னை நம்பு. துணிந்து காரியத்தில் இறங்கு. பலன் கிடைக்கும்.” என்று புத்திமதி கூறினான்.
அருண் தனது காதல் நிறைவேற கடவுளின் ஒத்தாசையும் வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தான். மோகனுக்குத் தெரியாமல் தனது வேண்டுதலை நிறைவேற்ற எண்ணினான். அடுத்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றுவது என்றும் முடிவெடுத்தான். அதற்குப் பல காரணங்கள் இருந்தது. அடுத்த வெள்ளிக்கிழமையுடன் அவனது பள்ளிக்கூட வாழ்க்கை முடிவடைகிறது. இறுதி பரீட்ச்சைக்குப் படிப்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை விடுகிறார்கள். Tuition மட்டும் இன்னும் இரு வாரங்களுக்கு இருக்கும். அத்துடன் மோகனும் அந்த வெள்ளிக்கிழமையே ராஜியுடன் கதைத்து நந்தினிக்கு அருணின் காதலைத் தெரிவித்து அவள் பதிலை பெற்றுத் தருவதாக கூறி இருந்தான்.
அந்தக் கிழமை அருணின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எண்ணினான். அதனால்த்தான் அவன் அந்த வெள்ளிக் கிழமையைத் தேர்ந்தெடுத்தான்.
அந்தக்காலத்துக் காதல் எவ்வளவு இனிமையானது, தூய்மையானது, ஏக்கம் நிறைந்தது, மெதுவானது கவர்ச்சி இல்லாதது. இதற்கு எமது சமுதாய கட்டுப்பாடுகளும் பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாக அமைந்தது.
அந்த வெள்ளிக் கிழமையை தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக எண்ணினான். அது அவனது பாடசாலை வாழ்வு, மாணவ வாழ்வு முடியும் நாள். அது மிகவும் சகிக்கமுடியாத பிரிவுத்துயர். மிகவும் துன்பகரமான நாளாக இருக்கும். அன்று மாலை அவனது காதலுக்கு முடிவுதெரியும் நாள். நந்தினியும் தன்னைக் காதலிப்பதாகக் கூறுவாள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தான். எனவே அந்த வெள்ளிக்கிழமை அவனது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் என்ற நம்பிக்கையும் வைத்திருந்தான்.
அவன் எதிர்பாத்திருந்த அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது. காலையில் மிகவும் பரபரப்பாக இருந்தான். கல்லூரிக்குச் சென்றான். நேரம் விரைவாக ஓடியது. கல்லூரி வாழ்க்கை முடிவடைந்து மாணவர்கள் மிகவும் சோகமே உருவாக விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சோகத்திலும் அருண், நந்தினி கூறப்போகும் முடிவினையே எண்ணிக் கொண்டிருந்தான். எதிர்காலக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தான். மிகவும் துன்பம் கலந்த இன்பத்துடன் வீடு திரும்பினான்.
Tuition க்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சிறிது முன்னதாகவே புறப்பட்டான். போகும் வழியில் அரசடி பிள்ளையார் மரத்தில் நேர்த்தி துண்டு கட்டிவிட்டுச் செல்வதாக எண்ணியிருந்தான். மரத்தில் கட்டும் நேரத்தில் யாரவது பார்த்தார்கள் என்றால் வீட்டுக்குத் தெரிந்துவிடும் என்ற பயமும் இருந்தது. இருந்தும் யாரவது பார்த்துவிட்டால் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று நேர்ந்து கட்டியதாக எண்ணிக் கொள்வார்கள் என்றும் மனதை திடப்படுத்திக் கொண்டான்.
கடவுளுக்குப் பயப்படாத, ஊரில வேலை இல்லாமல் சுற்றித் திரியும் பெடியங்கள் ஒருவேளை பிரித்துப் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவனுக்கு இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்ற ஒரு முரட்டுத் துணிவும் அவனுள் வந்து போனது.
அரசமரத்தடியில் ஒருசில வயோதிபர்கள் இருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். மிகவும் நம்பிக்கையோடு பிள்ளையாரை மூன்றுதரம் வலம் வந்தான். தனது கோரிக்கை அடங்கிய அந்த முடிச்சை நம்பிக்கையோடு அரசமரத்தின் கிளையில் கட்டினான். யாரும் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதனையும் அவதானித்தான். மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.
மீண்டும் தனது துவிச்சக்கர வண்டியில் ஏறி tuition வகுப்பை நோக்கி மிதிக்கத் தொடங்கினான். சற்று தூரத்தில் போகும்போதே மோகன் தனக்காகக் காத்திருப்பதை அவதானித்தான். மனது சிறிது படபடக்கத் தொடங்கியது.
அருணைக் கண்டதும் மோகன் கேட்ட முதல்க் கேள்வி “அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு முடிச்சுக் கட்டிவிட்டு வருகிறாயா?” என்பதுதான்.
இவனுக்கு எப்படித் தெரியவந்தது என்று மிகவும் ஆச்சரியத்தில் மூழ்கினான் அருண்.
கிராமங்களிலே ஒருவருடைய நடைமுறையை வைத்து அவர்களது போக்கை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். பட்டினத்தில் இதனை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. பட்டினத்தில் பல தவறுகள் நடைபெறுவதற்கு சமூகக் கண்காணிப்பு இல்லாமல் இருப்பதே காரணமாகும்.
அருண் ஒத்துக்கொண்டான்.
அருணின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட மோகன் கூறினான் “நந்தினியும் உன்னைக் காதலிப்பதாக ராஜி கூறினாள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.”
அருணுக்கு ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. பல நாள் ஏக்கம் தீர்ந்துவிட்டது. இனி அவனுக்கு இந்த உலகத்தில் எந்தத் தடையும் இல்லாதது போல மகிழ்ச்சியில் நீந்தினான். அந்த அந்திமாலைப் பொழுது, அந்த இயற்கையின் அழகு, அந்த பறவைகளின் ஒலி எல்லாமே தமது காதலை வாழ்த்துவதாக எண்ணிக் கொண்டான்.
மோகன் தொடர்ந்தான் “இனி பரீட்சையில் உனது கவனத்தைச் செலுத்து. பரீட்சை முடிய சந்திக்கலாம். பட்டினம் போய்ச் சந்திக்கலாம். நந்தினியும் அப்படித்தான் கூறியிருக்கிறாள் என்று கூறி முடித்தான்.
கிராமங்களிலே ஆணும் பெண்ணும் வெளியிடங்களில் சந்தித்துக் கதைக்க முடியாது. அப்படி கதைப்பதை யாரவது கண்டாலும் அதுவே காதலுக்கு முற்றுப் புள்ளியாகிவிடும். ஒவ்வொருவரும் மற்றவரை அவதானிப்பார்கள். முக்கியமாக இளம் ஆண் பெண்கள் சந்தித்துக் கதைப்பதை, பழகுவதை எதிப்பார்கள். ஏட்டிலே எழுதப்படாத சட்டம் ஒழுங்கு கிராமங்களில் பராமரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்.
மோகன் அருணிடம் கூறினான் “அருண் நந்தினிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடு நான் ராஜிமூலமாக கொடுத்து பதில் வாங்கித் தருகிறேன். இப்போதைக்கு அது போதும். எமக்கு படிப்புத்தான் முக்கியம். பல்கலைக்கழகம் போக முடியாவிட்டால் பின்னர் நாம் இங்கு வேலை இல்லாமல்த் தான் அலைய வேண்டும் எனவே படிப்பில் கவனத்தைச் செலுத்து. அதுதான் இப்போதைக்கு எமக்கு முக்கியம்”
அன்று வகுப்புகள் ஆரம்பமாகியது நந்தினி முகத்திலும் மாறுதல் தெரிந்தது. ஆனால் அருண்பக்கம் அவள் திரும்பவே இல்லை. வழக்கமாக ஓரிரு தடவையாவது பார்த்துவிடுவாள். அன்று அருனைப் பார்ப்பதை முழுவதுமாகத் தவிர்த்துக் கொண்டாள். எதற்கும் வெட்கப்படுபவள் போலக் காணப்பட்டாள்.
அருண் அன்று அவளை சற்று அதிகமாகவே ரசித்துக் கொண்டிருந்தான். “பெண்களே இப்படித்தான் உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். அது பெண்களுக்கு ஆண்டவன் கொடுத்த கொடை. பெண்களின் அழகே அவர்களின் அடக்கத்தில்த்தானே தங்கியிருக்கிறது. இன்று நந்தினி எவ்வளவு அழகாக இருக்கிறாள்.”
அன்றய வகுப்பும் முடிவடைந்தது.
வீட்டுக்கு வந்த அருண் அன்று மிகவும் மகிழ்வுடனேயே காணப்பட்டான். அவன் திரும்புமிடமெல்லாம் நந்தினி நின்று கொண்டிருப்பது போலவே தெரிந்தது. மாலையானது. படிப்பில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினான். அன்றய பாடங்களை முடித்துவிட்டு நந்தினிக்கும் கடிதம் எழுதினான். அதனை tuition கொப்பி உறையினுள் மடித்து வைத்துக்கொண்டான். அடுத்தநாள் காலையில் மோகன் வீட்டுக்குச் சென்று மோகனிடம் கடிதத்தினைக் கொடுத்தான்.
இரண்டு நாட்களில் நந்தினியிடமிருந்து பதில் கிடைத்தது.
என் உயிரிலும் உயிரான அருணுக்கு உங்கள் நந்தினி எழுதும் முதல் மடல். நீ என்னை விரும்புகிறாயா என்று பல தடவைகள் எழுதி இருக்கிறீர்கள். அதில் என்ன சந்தேகம் நான் உங்களைக் காதலிக்கிறேன். நான் உங்களை மனமார விரும்பிகிறேன். நீங்கள் என் இதயத்தில் குடிபுகுந்து விட்டீர்கள். ஏன் என் அப்பா அம்மா என் சகோதரக்களை எல்லாம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டீர்கள். இப்போது என் எண்ணம் செயல் எல்லாம் நீங்கள் தான் நிரம்பி இருக்கிறீர்கள். என்னால் விபரிக்க முடியாத இன்பத்தை என் சிந்தையில் விதைத்து விட்டீர்கள். என் உயிரிலே கலந்து விட்டீர்கள் அருண். என் அருணைக் காண என் மனம் எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. என் தங்கை கூறினாள் பரீட்சை நெருங்குவதால் என் அக்கா நன்றாகக் குழம்பிப்போய் இருப்பது போலத் தெரிகிறது என்று. ஆம் நான் நன்றாகக் குழம்பிப் போய்த்தான் இருக்கிறேன். என்னைப் பரீட்சை குழப்பவில்லை. என்னை நீங்கள் தான் குழப்பி விட்டீர்கள் அருண். அது எனக்கு மட்டும்தான் தெரியும் அருண். காதல் ஒரு கொடிய நோய் என்று கூறுவார்கள் ஆம் அந்த நோயால் நான் பீடிக்கப்பட்டு விட்டேன் அருண். அதன் தாக்கத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என் அப்பா அம்மா தம்பி தங்கைதான் என் உலகம் என்று எண்ணியிருந்தேன். இன்று நீங்கள்தான் எல்லாமே என்று மாற்றிவிட்டீர்கள்.
அருண் எமது பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் நன்றாகச் சித்தியடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எமது பலநாள் உழைப்பு வீணாகிவிடக் கூடாது. உங்கள் வீட்டிலும் உங்கள் கல்விமீது பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். நீங்கள் பல்கலைக்கழகம் போவீர்கள் என்று எமது வகுப்பிலும் எல்லோரும் எதிர்பாக்கிறார்கள். எமது பரீட்சை முடிய நாம் சந்திப்பது பற்றி யோசிக்கலாம். எனது தோழி ராஜியும் உங்கள் நண்பன் மோகனும் இருக்கும் வரை நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எமது காதல் நிறைவேற எமக்கு உறுதுணையாக இருந்த ராஜியும், மோகனும் நாம் உயிருள்ளவரை மறக்க முடியாதவர்கள்.
நாம் சந்தித்து இணைந்து கொள்ள பாலம் அமைத்துக் கொடுத்த எமது கணித ஆசிரியரும் எமது வாழ்வில் மறக்க முடியாதவர். முடிந்தால் மாலை வேளைகளில் மோகன் வீட்டுக்குப் போய் வாங்கோ. தொடர்ந்தது படிக்கும் வேளைகளில் ஓய்வும் தேவையல்லவா, நானும் உங்களை பாக்க முடியுமல்லவா.
இப்படிக்கு உங்கள் நந்தினி.
அருண் கடித்தத்தைப் பலமுறை படித்தான். அவர்களது காதலை வாழ்த்துவது போல் இலங்கை வானொலியில் “எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா” என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பரீட்சை முடியட்டும் நந்தினியை ஒரு முறையாவது நேரில் சந்தித்துக் கதைக்க வேண்டும் என்ற கற்பனையில் மூழ்கிக் கொண்டிருந்தான் அருண்.
பரீட்சையும் ஆரம்பமாகியது. ஒருவாறாக இறுதி நாளும் வந்தது. பலரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பரீட்சை அது. எமது பிரதேசத்திலே பல்கலைக்கழகம் போக முடியாவிட்டால் தமிழ் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும். வீட்டுக்கும் பாரமாகி விடுவார்கள். அரசாங்கமும் தரப்படுத்தல் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருந்தது.
மேலை நாடுகளிலே கல்வித் திட்டங்கள் மாணவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தந்தத் துறைகளில் அவர்களை வளர்த்து அவர்களை நாட்டுக்கு, சமுதாயத்துக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்று கல்வித் திட்டங்கள் உருவாக்கி மாணவர்களை வளர்த்து எடுப்பார்கள்.
எமது நாட்டிலோ மாணவர்களுக்கு என்னென்ன தெரியாதோ அதனையே பரீட்சைக்குக் கேள்வியாக்குவார்கள். குறிப்பாக தமிழ் மாணவர்களை எவ்வாறு பல்கலைக்கழகம் போகவிடாது தடுக்கலாம் என்பதிலும் திட்டமிட்டுப் புதுப் புதுச் சட்டங்கள் கொண்டு வருவார்கள்.
இந்த நடைமுறைகளால் விரக்தியடைந்த எமது தமிழ் மாணவர்கள் தீவிரவாதிகளாக மாறவும் துப்பாக்கி ஏந்தவும் காரணமாக அமைந்தது. மேலை நாடுகளிலே மூளைசாலிகளை, கல்விமான்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமது நாட்டின் வளர்ச்சியில் அவர்களையும் பாவித்து வளர்ச்சியடைந்த நாடுகளாக உலகத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டிலோ, இருக்கும் மூளையையும் பாவிக்கவிடாது தடைபோட்டு ஒருசிலர் தமது சொந்த அரசியல் நோக்கத்தோடு நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பரீட்சைகள் முடிவடைந்தது. தனது அயராத உழைப்பில் அருணுக்கு நம்பிக்கை இருந்தது. சிறந்த புள்ளிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தான். பரீட்சை முடிவடைந்தது ஏதோ அடாத மழை பெய்து ஓய்ந்தது போலிருந்து. பரீட்சை முடிந்து மாணவர்களுன் கலந்துரையாடி விட்டு வீடு வந்து சேர மாலை ஆகிவிட்டது. அன்று இரவே நந்தினிக்கு கடிதம் எழுதி நாளை காலையில் மோகன் மூலமாக நந்தினிக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
இலங்கை வானொலியில் இரவு ஒன்பது மணி இரவுச் செய்திகள் ஆரம்பமாகியது. ஊரிலே பொதுவாக இரவுச் செய்திகள் ஆரம்பமாகும்போது எல்லோரும் படுக்கைக்குத் தயாராகிவிவார்கள். அவன் வீட்டிலும் அப்படித்தான் சகோதரர்கள், அம்மா, அப்பா என ஒவ்வொருவராக படுக்கைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
அருண் வழமைபோல தனது மேசையில் இருந்தவாறு புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஊர் உறங்கத் தொடங்கியது. ஆங்காங்கே சில தெருநாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. பக்கத்து வீட்டு மாமரத்திலிருந்து ஒரு ஆந்தை அலறிக் கொண்டிருந்தது. ஆந்தையின் அலறலுடன் மூன்றாம் வீட்டு அன்னம் ஆச்சியின் கொட்டாவியும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. அருண் நந்தினிக்கு கடிதம் எழுதத் தொடங்கினான்.
தன் வீட்டு விபரம் உட்பட அனைத்தும் எழுதிக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டு வானொலியில் இரவின் மடியில் இறுத்திப்பாட்டு “பாலிருக்கும் பழமிருக்கும்” பாடிக் கொண்டிருந்தது. நந்தினியும் அவனும் ஒரே ஊர்க்காரராக இருந்தும் அது பெரிய கிராமமாக இருந்ததால் ஒருவர் குடும்பத்தை அடுத்தவருக்குத் தெரியாமல் இருந்தது. சங்கக் கடையிலே கூப்பன் காட்டுக்கு விண்ணப்பிப்பவன் போல தனது குடும்ப விபரமெல்லாம் விடாது எழுத்திக் கொண்டிருந்தான். ஒழுங்கையில் சில நாய்களின் ஊளைச் சத்தமும் இடைக்கிடை கேட்டது. சாமக் கோழியும் கூவத் தொடங்கியது. அது நள்ளிரவாகி விட்டது அருண் ஊகித்துக் கொண்டான்.
“டும்” என்று ஒரு சத்தம் கேட்டது. ஊரே அதிர்ந்தது போலிருந்தது. வீட்டுக் கூரை இடிந்து விழுந்தது போலிருந்தது. தூங்கியவர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். அருண் அவசர அவசரமாக புத்தக உறையினுள் எழுதிய கடிதத்தினைத் திணித்துவிட்டான். எல்லோரும் அது கண்ணி வெடியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டார்கள். தொடர்ந்து துப்பாக்கி வெடிச் சத்தமும் கேட்கத் தொடங்கியது. சின்னமாமா கூப்பிட்டுக் கொண்டே கதவைத் தட்டினார். அது கண்ணி வெடிதான் உறுதியாகக் கூறினார்.
அந்த நேரத்திலே எமது தீவிரவாத தமிழ் இளைஞர்களுக்கும் இலங்கை சிங்கள ஏகாதிபத்திய இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் நடைபெறும். அவ்வப்போது கண்ணிவெடித் தாக்குதலும் நிகழ்த்துவார்கள். இலங்கை அரசின் அடக்குமுறையினை, தரப்படுத்தலை பொறுக்கமுடியாத தமிழ் மாணவர்களே தீவிரவாதிகளாக மாறிக் கொண்டிருந்த காலகட்டமது.
அப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றால் இராணுவத்தினர் அவ்விடத்தை சுற்றி வளைத்துத் தேடுதல் நடாத்துவார்கள். குறிப்பாக இளைஞர்களைக் கைது செய்வார்கள்.
சின்னமாமா கூறினார் “காலையில் கட்டாயம் ஊரைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்துவார்கள். அருண் உடனே பக்கத்து ஊரிலுள்ள சித்தப்பா வீட்டுக்குப் போ நானும் உன்னுடன் உதவிக்கு வருகிறேன்” என்றார்.
இரவோடு இரவாக அருண் இடமாற்றப்பட்டான். ஒருவாரத்தில் அவனது கிராமத்தில் இராணுவக் கெடுபிடிகள் குறையத் தொடங்கியது. மீண்டும் தனது வீட்டுக்கு வந்தான். அவனது ஊர் எல்லையில் ஒரு மினி இராணுவ முகாம் அமைத்து விட்டார்கள். ஒழுங்கையில் இளைஞர்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. ஊரே வெளித்து விட்டதுபோல மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. அருணின் எண்ணமெல்லாம் எப்படியாவது மோகனைச் சந்திக்கவேண்டும் நந்தினிக்குக் கடிதம் கொடுக் கவேண்டும் என்பதாகவே இருந்தது. காதலிக்கும் போது பார்க்காமல், சந்திக்காமல் இருப்பதென்பது ஒரு யுகம் கழிவது போலல்லவா இருக்கிறது.
“நாளை நீ கொழும்புக்குப் போக ஏற்பாடுகள் செய்கிறேன். நீ இப்ப ஊரில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல” அப்பா கூறினார்.
அருணுக்கு உலகமே இருண்டது போலிருந்தது. ஆனாலும் அப்பா சொல்வது சரிதான். அவன் வீட்டில் இருந்தால் அவனுக்கும் நல்லதல்ல, அவன் வீட்டாருக்கும் நல்லதல்ல.
மோகனைச் சந்தித்து நந்திக்குத் தெரிவித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் சில பொய்கள் சொல்லிவிட்டு மோகன் வீட்டுக்குப் புறப்பட்டான்.
வெளியில் கண்டபடி தியதே உடனே வந்துவிடு என்றனர் வீட்டில்.
வீதிகள் வழமைக்கு மாறாகக் காட்ச்சியளித்தது. சந்தியில் நின்று வம்பளக்கும் இளைஞர் கூட்டம் எதனையும் காண முடியவில்லை. எவ்வளவு கலகலப்பாக இருந்த ஊர் இப்படி ஆகிவிட்டதே என்று ஆதங்கப்பட்டான். புளியடிக் கடையிலும் பெடியங்கள் யாரும் இல்லை. நந்தினி வீட்டுக் கதவும் பூட்டிக் கிடந்தது. முற்றத்தில் ஒரு துவிச்சக்கர வண்டி மட்டும் நின்றது.
அடுத்ததாக ராஜி வீடு, சில சிறுவர்கள் மட்டும் முற்றத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். நன்றாகத் திரும்பிப் பார்த்தான். அங்கே ராஜியும், நந்தினியும் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். நந்தினியும் அருணைக் கண்டுவிட்டாள். அருணின் வரவுக்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போலக் காணப்பட்டாள். பலநாள் பட்டினி கிடந்தவன் வயிறார உண்டது போல இருந்தது அருணுக்கு. புன்னகைத்தான் அவளும் பதிலுக்குப் புன்னகைத்தது தெரிந்தது. வானத்தில்ப் பறப்பதுபோல இருந்தது அவனுக்கு. தன் வருகைக்காக அவள் ஏங்கியிருக்கிறாள் என்பது புரிந்தது அருணுக்கு.
நந்தினி எனக்காகக் காத்திருக்கும் வரை, மோகன் ராஜி என்ற எமது உயிரிலும் மேலான நண்பர்கள் இருக்கும் வரை, நான் ஊரில் இருந்தாலென்ன கொழும்பில் இருந்தாலென்ன எமக்குள்ப் பிரிவே வராது என்று எண்ணியவாறு மிகுந்த நம்பிக்கையுடன் துவிச்சக்கர வண்டியை மோகன் வீடு நோக்கி மித்தித்துக் கொண்டிருந்தான்.
மோகன் வீட்டை அடைந்தான் அங்கும் வழமைக்கு மாறாக வீட்டுப் படலை மூடிக்கிடந்தது. மெதுவாகத் திறந்து உள்ளே போனான். மோகனின் தந்தை வீட்டுத் திண்ணையில்ப் படுத்திருந்தார். அருணைக் கண்டதும் மிகவும் சஞ்சலப்பட்டவர் போலக் காணப்பட்டார்.
“ஐயா மோகன் இல்லையா?” கேட்டுக் கொண்டே வடியை நிறுத்தினான்.
“அவன் கொழும்புக்குப் போய்விட்டான்.” மிகவும் கனத்த குரலில் பதிலளித்தார். அதற்கும் மேல் எதுவும் கூற விரும்பாதவர் போலக் காணப்பட்டார்.
மோகனது தாயார் உள்ளிருந்து ஓடிவந்து அவனது கைகளைப் பிடித்தவாறு அழத் தொடங்கினார். மோகனின் சகோதரி உள்ளிருந்து விம்மி அழும் சத்தம் கேட்டது.
“தம்பி உனக்குக்கூட அவன் சொல்லவில்லையா?” மோகனின் தாயார் மிகவும் உடைந்த குரலில் கேட்டார்.
அருணுக்கு ஒன்றும் புரியவில்லை. மோகன் கொழும்புக்குத்தானே போனான் அதற்கு ஏன் இப்படி அழுகிறார்கள். பிரிவுத்துயர் போலும் என்று எண்ணிக் கொண்டான்.
அருணால் எதனையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
“நானும் நாளை கொழும்புக்குப் போகிறேன். அங்கே அவனை நான் சந்திப்பேன். கொழும்புதானே பிரச்சனை குறைய திரும்பி வரலாம்தானே. அதுக்கு ஏன் இப்படிக் கவலைப்படுகிறீர்கள்” அருண் ஆறுதல் கூறினான்.
“தம்பி மோகன் இப்படிச் செய்வான் என்று நாம் கனவில்க்கூட எண்ணவில்லை” என்று அழுத்தவாறே தாயார் கூறினார்.
தாயார் தொடர்ந்தார். “தம்பி மோகன் கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்துக்கு போய்விட்டான். உன்னுடன் இதைப்பற்றிக் கதைக்கவில்லையா?” என்று மிகவும் தாழ்ந்த குரலில்க் கேட்டார்.
அருணுக்கு இப்பொழுது புரிந்துவிட்டது. மோகன் இயக்கத்துக்குப் போய்விட்டான்.
அக்காலகட்டத்தில் பல போராளிக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தது அதில் எந்த இயக்கத்துக்கு மோகன் போனான் என்றும் தெரியவில்லை. அருணுடன் மோகன் இதைப்பற்றி ஒருமுறைகூடக் கதைத்ததில்லை. கண்ணிவெடித் தாக்குதல் அதனைத் தொடர்ந்த இராணுவக் கெடுபிடிகளால் ஏற்பட்ட திடீர் முடிவாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான். அருண் மிகவும் சோர்ந்துவிட்டான். தனது நண்பன் இனி இல்லை. அதுமட்டுமல்ல தனது காதலுக்கும் பெரிய பின்னடைவு ஏற்பட்டு விட்டதே என்றும் எண்ணினான்.
உன் காதலுக்கு நான் இருக்கிறேன் பயப்படாதே என்று அடிக்கடி கூறுவானே. இன்று இப்படிச் செய்துவிட்டானே.
அதுமட்டுமல்ல மோகன் இயக்கத்துக்குப் போய்விட்டதை இராணுவம் அறிந்தால் அவனது சிநேகிதன் என்று என்னையும் விசாரிப்பார்கள், சிலவேளை கைதும் செய்வார்கள் என்றும் பயந்தான்.
மோகனது தாயார் தொடர்ந்தார் “தம்பி இந்தக்கதை வெளியில் தெரியக் கூடாது என்பதற்ககாகத்தான் எல்லோருக்கும் அவன் கொழும்போக்குப் போய்விட்டான் என்று சொல்லுறம். ஆமிக்குத் தெரிந்தால் வீட்டை வந்து அவன்ரை சகோதரி தம்பியெல்லாரையும் பிடிச்சுக்கொண்டு போய் விடுவாங்கள். உனக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்று அறியத்தான் உண்மையைக் கூறினான், தயவுசெய்து நீயும் ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதே” அழுத்தவாறே கூறி முடித்தார்.
அம்மா நான் யாருக்கும் இதைப்பற்றிச் சொல்லமாட்டேன். நாளை நான் கொழும்புக்குப் போகிறேன். கண் கலங்கியவாறு அருண் விடைபெற்றுக் கொண்டான். அவர்கள் வீட்டில் அழுதுகொண்டிருந்தது அருணின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அருணும் மனதுக்குள் அழுது கொண்டிருந்தான்.
அரசியல்வாதிகளே உங்கள் குறுகிய எண்ணம் கொண்ட சுயநலத்துக்காக இனம், மதம், மொழி என்ற ஆயுதங்களைக் கையிலெடுத்துக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே, இதனால் எத்தனை மனங்கள், எததனை எண்ணங்கள், அன்பு, பாசம், உறவு, பலரின் எதிர்காலக் கற்பனைகள், திட்டங்கள் எல்லாமே சிதறடிக்கப் படுகின்றனவே. இதற்கு நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எண்ணியவாறு துவிச்சக்கர வண்டியை மிதிக்கத் தொடங்கினான்.
மீண்டும் ராஜி வீட்டைக் கடந்து கொண்டிருந்தான். நந்தினி அவனுக்காகவே காத்திருப்பவள் போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அவளிடமிருந்து ஒரு புன்னகை. முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. மோகன் மூலமாக அருணிடமிருந்து தனக்குச் சேதி வரும் என்று எதிர்பாத்திருப்பது போலத் தோன்றியது.
நாளை நான் கொழும்புக்குப் போகிறேன் வாயசைத்துச் சைகை காட்டினான். அவளோ எல்லாம் மோகன் மூலமாக அறிந்து கொள்கிறேன் என்பதுபோல புன்னகைத்தவாறு அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறகொடிந்த பறவைபோலானான் அருண். அவனது கண்ணில் இருந்து அவளது உருவம் மறைந்தது. சிந்தைக்குள் அவள் புன்னகை தெரிந்து கொண்டே இருந்தது. இனி எப்படி, எப்போது நந்தினியைப் பாக்கப் போகிறேன். இனி எப்படி, எப்போது நந்தினியின் தொடர்பு கிடைக்கும். புரியாத புதிராகவே இருந்தது அருணுக்கு.
வீட்டை அடைந்தான், வீட்டில் எல்லோரும் சோகமாக இருந்தார்கள். விடிந்தால் அவன் கொழும்புக்குப் பயணமாகிறான். வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் அவனைப் பார்த்து அழுவதுபோல இருந்தது அருணுக்கு.
“அம்மா நான் கொழும்புக்குப் போகேல்லை” தாயிடம் முறையிட்டான் அருண்.
“எங்களுக்கு என்ன உன்னைத் தனியாக அனுப்ப என்ன சந்தோசமாகவா இருக்கு? என்ன செய்வது நாட்டு நிலைமைகளால் உன்னை அனுப்ப வேண்டி இருக்கு. பயப்பிடாதே அங்கு மாமா இருக்கிறார்தானே. அவர் எல்லாம் பார்த்துக் கொள்வார். உனக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தால் தனியாத்தான் இருந்து படிக்கப்போகிறாய்.” அம்மா ஆறுதல் கூறினார்.
விடிந்தது. பலத்த சோகத்தின் மத்தியில் அருண் பஸ் ஏறினான். அப்பாவும் அவனுடன் கூடவருவது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. கொழும்பில் இறங்கினான், மாமா மிகவும் உற்சாகமாக வரவேற்றார். வானொலிச் செய்திகள் மூலமாக நாட்டில் ஆங்காங்கே பிரச்சினைகள் கூடிக் கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. அருணின் சிந்தனை எல்லாம் நந்தினி பற்றியே ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்தநாள் வெளியில் சென்று வந்த மாமாவும், அப்பாவும் அவனிடம் கூறிய செய்தி அவனுக்கு இடி விழுந்தது போலிருந்தது.
மாமா தான் ஆரம்பித்தார். “எனது நண்பனொருவன் கனடாவில் இருந்து வந்திருக்கிறான். அவன் உன்னை தன்னுடன் கனடாவுக்கு கூட்டிச் செல்வதாகக் கூறினான். பணம்கூட நீ அங்கு போய்ச் சேர்ந்தவுடன் கொடுக்கலாம். அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கிருப்பது பாதுகாப்பகத் தெரியவில்லை. நீ ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அங்குபோய் உன் விருப்பம் போலப் படி பின்னர் உழைக்கலாம். ஓரிரு நாட்களில் வெளிக்கிட வேண்டிவரும்” என்று கூறி முடித்தார்.
அருண் பலமாக மறுத்தான். அவனுக்கும் அவர்களுக்கு மிடையில் பலத்த வாக்குவாதம் நடந்தது. இறுதியில் அருண் சம்மதித்தான்.
அருண் புரிந்து கொண்டான். ஒரு வாரத்துக்குள் அவன் புறப்பட முன்னர் அவனால் நந்தினிக்கு எந்தத் தகவலும் அனுப்ப முடியாது. அடுத்ததாக அவன் தனது குடும்பத்தை விட்டுப் பிரியப்போகிறான். அவன் படிப்பு முறியப் போகிறது. நடப்பது நடக்கட்டும் என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டான். எல்லாம் அவன் செயல் என்று கடவுள் மேல் பழி போட்டான்.
ஓரிரு நாட்களில் அவன் கனடா புறப்படும் நேரமும் வந்தது. அப்பொழுது தொலைபேசி வசதிகள் இல்லாததால் ஊருக்குக் கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுத்துவிட்டு புறப்படத் தயாரானான். அப்பா மிகவும் கலங்கி இருப்பதை உணர்ந்தான். பெற்று வளர்த்த செல்ல மகனை நாட்டு நிலைமைகளால்ப் பிரியவேண்டி இருக்கிறதே என்று கலங்குவது போல இருந்தது.
ஏனோ தெரியவில்லை அவனுக்கு அவன் ஊர்ச் சந்தையில்த் திரியும் நாய்கள்தான் ஞாபகத்துக்கு வந்தன. வீடுகளில் நாய்கள் குட்டி போட்டால் கடுவன் குட்டிகளை யாருக்காவது கொடுத்துவிட்டு மீதிக் குட்டிகளை பிடித்து வந்து சந்தைக்குள் விட்டு விடுவார்கள். அருண்கூட சில தடவைகள் அப்படித்தான் விட்டிருக்கிறான். பாவம் இல்லையா என்று அம்மாவிடம் கேட்டதற்கு “வீட்டில் வைத்திருந்து என்ன செய்வது. அங்க விட்டால் யாரவது பிடிச்சுக்கொண்டும் போவினம். நாய்தானே என்ன பாவம்” என்று பதில் வந்தது. புதுக் சூழலில் அந்தக் குட்டிகள் எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்கும், தன் தாயின், உடன்பிறந்த குட்டிகளின் பிரிவால் எவ்வளவு வாடி இருக்கும். அப்படிப்பட்ட நிலைமை அல்லவா அருணுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
அப்பா, மாமாவிடம் விடைபெற்றுக் கொண்டான். பிரயாண முகவருடன் வந்ததால் எவ்வித சிரமமும் இன்றி விமானத்தினுள் ஏறிக்கொண்டான்.
விமானம் பறக்கத் தொடங்கியது. அப்பா, அம்மா, சகோதரர்கள், உறவினர்கள் முகங்கள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நந்தினியின் அந்த இறுதியாகத் தெரிந்த புன்னகை முகம் மட்டும் அவனைக் கொல்வது போலிருந்தது. கதறி அழவேண்டும் போலிருந்தது. எதற்காக அழுவது என்றுமட்டும்தான் அருணுக்குப் புரியாமல் இருந்தது. சிறிது கலங்கத் தொடங்கினான்.
அதனை அவதானித்த கண்ணன் அந்த பிரயாண முகவர் கூறினார்.
“தம்பி ஏன் கலங்குகிறாய். தற்காலிக பிரிவை எண்ணியா? எதிர்காலத்தை எண்ணியா? கனடா ஒரு சிறந்த நாடு. அவரவர் எண்ணங்களுக்கு, உரிமைகளுக்கு, திறமைகளுக்கு மதிப்புக் கொடுக்கும். சாதி, இன, மத பேதம் அற்ற நாடு. நீ வளர நினைத்தால் உன் வளர்ச்சிக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்யும். சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் கொடுக்கும். எமது நாட்டில்க் கிடைக்காத சுதந்திரம், பாதுகாப்பு அங்கே கிடைக்கும்.
ஆனால் நீதான் உன்னைத் தயார் பண்ணிக்கொள்ள வேண்டும். உனது எதிர்காலத்தை நீதான் திட்டமிடவேண்டும். குறிப்பாக உன் வாழ்கையை நீதான் நெறிப்படுத்த வேண்டும். இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல. தற்காலிகரமானது. உன் எதிர்காலத்தை, பாதையை நீயே தெரிவு செய். உன் வாழ்க்கை இனிமேல்த்தான் ஆரம்பமாகப் போகிறது. உன் எதிர்கால வாழ்க்கையில்த்தான் உன் குடும்பத்தினரின் எதிர்காலம் தங்கியுள்ளது. உசாராக இரு. உற்சாகமாக இரு. கலங்காதே.
வாழ்க்கை என்பது பல திருப்பங்களைக் கொண்ட ஒரு நதி. திருப்பங்களைக் கண்டு கலங்காதே. அந்த நதிபோல அழகாக ஓடிக் கொண்டிரு. அந்த நதியின் கரையினிலே எதனை மரங்கள், செடி, கொடிகள் முளைக்கும், பூக்கும், காய், கனி கொடுக்கும். எத்தனை உயிர்கள் பயன்பெறும். அந்த நதியாக நீ இரு.” கீதா உபதேசம் போலிருந்தது அருணுக்கு.
கண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தான். முகத்தில் மலர்ச்சி காணப்பட்டது.
கண்ணனின் உதவியுடன் கனேடிய மண்ணிலே நம்பிக்கையுடன், புதுக் கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தான்.
“சேர் காபி or ரீ” இனிய குரலில் அருணின் கற்பனையைக் கலைத்தாள் பணிப்பெண்.
தேநீர் வாங்கிக் கொண்டான் அருண். நந்தினி எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். குட்டி அருண் தூங்கத் தொடங்கி விட்டான்.
“என்னை மறந்து விட்டீர்களா நந்தினி” அருண் கேட்டான்.
“உந்தக் கேள்வியை நானல்லவா கேட்டிருக்க வேண்டும்” நந்தினியிடமிருந்து பதில் வந்தது.
“நந்தினி” என்றவாறு சிறிது நேர அமைதிக்குப் பின் அருண் தொடர்ந்தான். “உன்னை விட்டுப் பிரிந்து நான் பட்ட வேதனை துடித்த துடிப்பு உனக்குத் தெரியுமா?” அடக்க முடியாமல் அருண் கூறிவிட்டான்.
தான் கனடா வரவேண்டிவந்த கதையினை விலாவாரியாகக் கூறினான். நந்தினி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அருண் தொடர்ந்தான் உனக்கும் எனக்கும் இடையில் இருந்த ஒரே ஒரு பாலம் மோகன் மட்டும்தான். மோகன் இயக்கத்துக்குப் போய்விட்டான். நானோ கனடா வந்து விட்டேன். இருந்தும் விஞ்ஞானிகள் விண்ணிலே என்றோ ஒருநாள் எதோ ஒரு உயிரினத்திடம் இருந்து சமிக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒலி அலைகளை வான்வெளியில்ப் பரப்பிக் கொண்டிருப்பதுபோல என்றோ ஒருநாள் மோகனிடமிருந்து பதில் வராதா? என்ற ஒரு கேள்விக்குறியுடன் அவ்வப்போது அவன் வீட்டுக்கு கடிதங்கள் போட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
சில வருடங்களின் முன்னர் அவனிடமிருந்து எனக்கு ஒரு பதில் வந்தது. தான் இயக்கத்துக்குப் போன பின்னர் தனது பெற்றோர் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்குப் போய் விட்டார்களாம். தானும் இயக்கத்தில் இருந்து ஓய்வு பெற்று வன்னியில் இருப்பதாகவும். நீயும் உன் குடும்பமும் பல வருடங்களின் முன்னர் கொழும்புக்குப் போய்விட்டதாகவும். அண்மையில் உனக்கும் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றதாகவும். அது உனக்கும் எனக்கு மாகத்தான் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் எழுதி இருந்தான். அதன் பின்னர் அவனிடமிருந்து எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை.
நீ திருமணமானது அறிந்து மிகவும் துடித்தேன். மிகவும் கவலைப்பட்டேன். கனடாவில் நான் அனுபவித்த என் வீட்டாரின் பிரிவுத்துயர், தனிமை, துயரம் நான் கேள்விப்பட்ட எம்மவராது துயரக் கதைகள் என்னைச் சமாதானப் படுத்தியது.
பல வருடங்களாக நீ எனக்காகக் காத்திருந்து எடுத்த முடிவு சரியென்றே எனக்குத் தெரிந்தது. உன்னை மறக்க முயற்சித்தேன். மறக்கத் தொடங்கினேன். இருந்தும் உன் நினைவலைகள் அவ்வப்போது வந்து என்னை வாட்டிக் கொண்டுதான் இருந்தது. உன்னை என்னால் மறக்க முடியவில்லை. உன்னை என் கடந்தகாலச் சிநேகிதியாகவே எண்ணத் தொடங்கினேன். உன் திருமணச் செய்தி அறிந்த நாளில் இருந்து நீ என் இதயத்திலே என் சகோதரியாகவே வாழ்ந்து வருகிறாய். எமது நாட்டின் போர்க்களம் எமக்குள் இப்படி ஒரு உறவுமுறையை ஏற்படுத்தி விட்டது.
நந்தினி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அருண் மௌனமானான்.
அழுது முடியட்டும் அவளின் பாரம் குறையட்டும் என்று விட்டுவிட்டான்.
“நந்தினி ரீ குடி” சிறிது நேர இடைவெளியில் அழைத்தான் அருண்.
விமானப் பணிப் பெண்ணை அழைத்து தேநீர் வரவழைத்துக் கொடுத்தான்.
இம்முறை மறுக்காமல் அழுகையை நிறுத்தி தேநீரை வாங்கிப் பருகினாள்.
“உங்களுக்குத் தெரியுமா அருண்?” நந்தினி தொடங்கினாள். அவளது குரல் மிகவும் தெளிவாக இருந்தது. நீங்கள் அன்று ராஜி வீட்டடியில் என்னைக் கடந்து சென்றபோது எனக்கு எவ்வளவு இன்பமாக இருந்தது. எத்தனை கற்பனைகளுடன் மோகனிடமிருந்து உங்களது செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சில நாட்களின் பின்னர்தான் மோகன் வீட்டில் இல்லை என்ற செய்தி அறிந்தேன். இருந்தும் நான் உங்களிடமிருந்து செய்தியை தினந்தோறும் எதிர்பாத்துக் காத்திருந்தேன். உங்களை எதிர்பார்த்து என் வீட்டுத் திண்ணையிலே ராஜி வீட்டு முற்றத்திலே எத்தனை நாட்கள் காத்திருந்தேன் தெரியுமா. நாட்கள் உருண்டோடியது. பரீச்சை முடிவுகளும் வந்தது.
மோகன் வீட்டாரும் பயத்தில் வேறு இடத்துக்குச் சென்று விட்டனர். எனக்கும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது. பிரச்சினைகளாலும் எனது படிப்புக்காகவும் அப்பா மாற்றலாகி குடும்பத்துடன் கொழும்புக்கு வந்துவிட்டோம். ஊர்த் தொடர்புகள் நன்றாகக் குறைந்தது. ராஜியுடன் மட்டும் தொடர்பு இருந்தது. அவ்வப்போது கடிதம் போடுவாள். நான்கு வருடங்களில் என் படிப்பும் முடிந்தது. உங்கள் செய்தியை எதிர்பார்க்காத நாளில்லை. மிகுந்த நம்பிக்கையோடேயே இருந்தேன், எனது நம்பிக்கை தளர்ந்து கொண்டு இருந்தது. வீட்டில் எனது திருமணப் பேச்சைத் தொடங்கினார்கள். அவசரம் இல்லை என்று தட்டிக் கழித்துக் கொண்டு இருந்தேன்.
ஒருநாள் அம்மா என்னிடம் கேட்டா “நீ யாரையாவது விரும்புகிறாயா? அப்படியென்றால்ச் சொல் செய்துவைக்கிறேன்” என்றா.
ஆம் என்று எப்படிச் சொல்வது? யாரை என்று சொல்வது? உங்களது எந்தப் படத்தைக் காட்ட? நீங்கள் எங்கு எப்படி இருக்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியாது. மௌனமானேன்.
அப்போதுதான் எங்களது உறவினரது திருமணமொன்றில் “பாபு” என்னைக் கண்டார். என்னைப் பிடித்துள்ளதாகவும் திருமணமுடிக்க விரும்புவதாகவும் அவரின் பெற்றோர் மூலமாக தொடர்பு கொண்டார். வளமை போல மறுத்தேன். எல்லோரும் அறிவுரை கூறினார்கள். நான் திருமணம் முடித்தால்த்தான் என் தங்கைக்குத் திருமண ஏற்படுகள் செய்ய முடியும் என்று அறிவுறுத்தினார்கள். நான் இருக்க அவளுக்குப் பேசினால் குடும்பத்துக்கு இழுக்கு என்றனர். எமது குடும்பத்தின் எதிர்காலமே என்னில்த்தான் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். அதன் பின்னரும் என்னால்த் தட்டிக் கழிக்க முடியவில்லை.
ராஜியும் என்னைத் திருமணம் செய்யும்படி அறிவுரை கூறினாள். சம்மதித்தேன். ஒரு வாரத்தில் திருமணம் என்றனர்.
பாபுவுக்கு நண்பியானேன். கழுத்தில் மாங்கல்யம் ஏறியது. மனைவியானேன். அவரின் பண்பு, நடத்தை என்னை அவரைக் காதலிக்க வைத்தது. வாழ்கைத் துணைவியானேன். நீங்கள் எனது பழைய நண்பரானீர்கள். எமது இனிய உறவின் உதயம் ஆண் குழந்தை. “கிசோத்” என்றார். இல்லை “அருண்” என்றேன். விட்டுக் கொடுத்தார். முதற் பெயர் “கிசோத்” நடுப்பெயர் “அருண்” என்றார்.
வீட்டில் அருண் என்றோம். அருணுக்கு நான் தாயானேன்.
பாபுவுக்கு நான் எனது பழைய காதலைப்பற்றி எதுவும் கூறவில்லை. அதில் ஏதும் அர்த்தம் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. எனது அருணை, அந்தப் பழைய காதலை யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் விரும்பவில்லை. என் மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டேன்.
“எங்கள் நால்வரைத் தவிர எங்கள் காதல் யாருக்குமே தெரியாமல்ப் போய்விட்டது.” சிறிது கண் கலங்கினாள்.
“கடவுளுக்குள் கூடத் தெரியாமலிருக்குமா நந்தினி?” அருண் குறுக்கிட்டான்.
“தெரிந்திருந்தால்” எதோ சொல்லவந்தவள் நிறுத்திக் கொண்டாள்.
அருண் தொடர்ந்தான். “அப்படிக் கூறாதே நந்தினி. அவன்தான் இன்று எம்மைச் சேர்த்து வைத்திருக்கிறான். காதலர்களாக இல்லை. நல்ல நண்பர்களாக. என் பார்வையில் சிறந்த சகோதரர்களாக. எமது இதயத்தில் இருந்த உள்ளக் குமுறல்கள் பகிரப்பட்டு விட்டது. சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு விட்டது. இனி நமக்குள் எந்தப் பிரிவும் இல்லை. எமது தூய காதல் இன்று முழுமைபெற்று விட்டது. எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா? கள்ளம் கபடம் இல்லாத அன்பு காலம் கடந்தும் வெல்லும் நந்தினி.”
நந்தினியின் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது.
அருண் தொடர்ந்தான் “நந்தினி உன் திருமண செய்தி கேட்டு இனி நான் திருமணம் முடிப்பதில்லை என்று இருந்தேன். வீட்டில் எல்லோரும் வற்புறுத்தினார்கள். உனக்காக இல்லாவிட்டாலும் எமக்காகச் செய் என்றார்கள். நீ அங்கு ஒரு வெள்ளைக் காரியை வைத்திருக்கிறாயாம் அதுதான் கலியாணத்துக்கு சம்மதிக்கிறாய் இல்லை என்று ஊரிலும் சிலர் கதைக்கிறார்களாம். அப்படி எதாவது உண்மை இருந்தால் பிறகு எங்களை பார்க்க மாட்டாய் என்றனர்.
எனது சோகத்தை அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. சம்மதித்தேன்.
பக்கத்துக்கு ஊரில் பொம்பிளையாம், வீட்டில் எல்லோருக்கும் பிடித்துவிட்டது என்றனர். படம் அனுப்பி எனது சம்மதத்தைக் கேட்டனர். நான் நேரடியாகப் பார்த்து எனக்காகத் தேடிய துணை, எனது தெரிவு சேரமுடியாமல்ப் போய்விட்டது. மீண்டும் ஒரு தெரிவா? ஆம் என்றேன். உங்கள் முடிவுதான் என் முடிவும் என்றேன். புறப்பட்டு வா என்றனர். போய்க் கொண்டு இருக்கிறேன். இன்னும் இரு வாரங்களில் எனக்குத் திருமணம்.
“படம் பார்க்கப் போகிறாயா?” அருண் எழுந்து தனது சூட்கேஸைத் திறந்து ஒரு கடித உறையை எடுத்து நந்தினியிடம் நீட்டினான்.
நந்தினி கேட்டாள். “ஒட்டி இருக்கிறது. திறந்து பார்க்கலாமா?”
“நந்தினி நான் திறந்து பார்த்தால்த்தானே ஒட்டி வைப்பதற்கு.” அருண் அமைதியாகப் பதில் சொன்னான்.
அப்போ நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லையா?
“இல்லை விரும்பவில்லை. தேவையில்லை. வரப்போகும் மனைவிக்கு ஒரு சிறந்த கணவனாக இருந்தால்ப் போதும் என்பது என் எண்ணம்.”
சிறிது நேர மௌனத்துக்குப் பின் நந்தினி கேட்டாள் “மேலே இருக்கும் எனது bag ஐ எடுத்துத் தாறீங்களா.”
அருண் எடுத்துக் கொடுத்தான்.
உள்ளே இருந்த தனது டைரியில் இருந்து ஒரு படம் எடுத்துக் கொடுத்தாள்.
அருண் வாங்கிப் பார்த்தவுடன் மிகவும் திகைப்புற்றான். “என் படம் எப்படி உன்னிடம் வந்தது நந்தினி?”
நந்தினியிடமிருந்து ஒரு புன்னகை தோன்றி மறைந்தது. பத்து வருடங்களின் முன்னர் அவளிடமிருந்து கடைசியாகப் பார்த்த புன்னகையை ஞாபகப்படுத்தியது அருணுக்கு.
“என் படத்தை எதற்காக நீ வைத்திருக்கிறாய் நந்தினி?” அருண் வியப்போடு மீண்டும் வினவினான்.
“படத்தைத் திருப்பிப் பாருங்கள் அருண்” புன்னகைத்தவாறு பதிலளித்தாள்.
படத்தைத் திருப்பிப் பார்த்தான் அருண்.
பாபு இவர்தான் நாம் சின்னத் தங்கச்சிக்குப் பேசியுள்ள மாப்பிள்ளை. பெயர் அருண். வீட்டில் எல்லோருக்கும் நன்றாகப் பிடித்துள்ளது. அவை வீட்டிலும் பிடித்துவிட்டது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறோம். சம்மதம் சொன்னால் நாள் வைக்கலாம். – அம்மா
அருண் நந்தினியைப் பார்த்தான்.
நந்தினி தொடர்ந்தாள் “ராகினி என் கணவரின் இரண்டாவது தங்கச்சி. கலியாணம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போதுதான் என் கணவரின் அம்மா இப்படத்தை அனுப்பி எமது சம்மத்தைக் கேட்டா.
கணவர் படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்து இவரை ஊரில்ப் பார்த்திருக்கிறாயா? பெயர் அருண். அழகாக இருக்கிறார். ராகினிக்கு நல்ல பொருத்தம் என்று நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார்.
படம் பார்த்தேன். நன்றாக நிலை குலைந்தேன். நீங்கள் என்னைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. பல வருடங்களாக நான் தேடி மறந்தே போய்விட்ட அந்த முகம் மீண்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தபடி இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் ஒருமுறை இரைமீட்டியது. அருண் என்னுடன் சக மாணவனாக இருந்தான். என் காதலன் ஆனான். பின் என் மகனானான். மீண்டும் ஒரு உறவுமுறையா? வாழ்க்கையில் எத்தனை எத்தனை பரிமாற்றங்களோ? வாழ்க்கையை நினைக்க வினோதமாக, ஆச்சரியமாக இருந்தது. உங்கள் விருப்பம்தான் என்விருப்பம் என்றேன் கணவரிடம்.
“அப்படியா நான் எதிர்பாராத திருப்பமாக இருக்கிறதே நந்தினி. நான் மீண்டும் உனது குடும்பத்தினுள் வருவதால் உன் வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று நீ எண்ணுகிறாயா நந்தினி.”
“அப்படி ஒரு எண்ணமே எனக்குள் ஏற்பட்டதில்லை அருண். எமது எண்ணங்கள் சிந்தனைகள் உயர்வாக தூய்மையாக இருக்கும்வரை அப்படியான எண்ணங்களுக்கே இடமில்லை அருண். அப்படியாக எதுவும் சிந்திக்க வேண்டாம்.”
அப்படியானால் என் வாழ்க்கையின் துணையை முடிபு செய்வதில் உனக்கும் பங்கு இருந்திருக்கிறது. விசித்திரமான உலகமிது நந்தினி.
“இதுதான் ராகினியின் படம்” அருணிடம் படத்தை நீட்டினாள் நந்தினி.
அருண் தனது வருங்கால மனைவியின் படத்தை பழைய காதலியிடமிருந்து வாங்கிப் பார்த்தான்.
அவனது கண்கள் குளமாகிப் போயிருந்ததை அவதானித்தாள் நந்தினி.
“என்ன அருண் எதற்காகக் கண் கலங்குகிறீர்கள்? நீங்கள் என்ன குழந்தையா அருண்?”
சில நேரங்களில் காரணம் இல்லாமல் கவலை வரும். அழுகை வரும். சிரிப்பு வரும். அப்படி காரணம் கூறமுடியாத உணர்ச்சியினால்த்தான் என் கண்கள் கலங்குகின்றன நந்தினி. கவலைப்படாதே இந்த அருக்குட்டிக்கு நல்ல மாமாவாக இருப்பேன் நந்தினி.
உங்கள் கலியாணத்துக்கு மோகன் ராஜி தம்பதிகளும் வருவார்கள் அருண்.
அப்படியா நந்தினி.
ஆம் நாம் எதிர்பார்த்திருந்தோம் பிரிந்துவிட்டோம். எங்களால் அவர்கள் சிநேகிதம் வலுப்பெற்றது. நாட்டு நிலைமைகள் சரிவந்ததால் மோகன் வன்னியில் இருந்து ஊருக்குத் திரும்பி வந்தார். ராஜியும் தன்னைத் திருமணம் முடிக்கும்படி கேட்டாள். ஆம் என்றார் மோகன் இணைந்துவிட்டனர்.
“அங்கிள் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு நாங்கள் இறங்க?” தூக்கத்தை முடித்துக் கொண்ட அருக்குட்டி அருணைப் பார்த்துக் கேட்டான்.
“இன்னும் ஒரு மணிநேரம் தான் இருக்கிறது கண்ணா நாம் இறங்க. அருண் சிரித்துக்கொண்டே பதிலளித்தான்.
அவர்களைத் தாங்கிய விமானம் தாழ்வாகப் பறக்கத் தொடங்கியது தனது இலக்கு நோக்கி.
—- சுபம் —