காயத்திரி மந்திரம் (சாவித்ரி மந்திரம்)
காயத்திரி மந்திரம்
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”
மந்திரம்
மனதை திடப்படுத்துவது, காப்பது மந்திரம் ஆகும். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மாற்றுவதும் மந்திரங்களாகும். சக்தி குறித்த விஞ்ஞானத்தின் விதி என்னவென்றால் ஒரு சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், அதற்குச் சமமான வேறொரு சக்தியாக (ஆற்றலாக) மாற்ற முடியும் என்பதே விதியாகும். உதாரணமாக சூட்டடுப்பில் மின்சார சக்தியை கம்பிச் சுருளினூடாகச் செலுத்தும்போது அது வெப்ப சக்தியாக மாறி அவ்விடத்தைச் சூடாக்குகின்றது. அதேபோல மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ஒலி ஆற்றலை, மின்னாற்றலாகவும், அது பின்னர் காந்த ஆற்றலாகவும் மாறுகிறது. அது எமக்குள்ப் பல மாற்றங்களை உண்டாக்குகின்றது என்பதே அடிப்படைத் தத்துவமாகும்.
அதாவது மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது எழும் ஒலி அதிர்வுகள் நம் பிண்டத்தில் உள்ள நாடிகளிலும், சக்கரங்களிலும் ஒலிக்கும் ஒலிகளுடன் இணையும்போது நாடிகள் சக்கரங்கள் தூண்டப்பட்டு எமக்குள்ப் பல மாற்றங்களை, ஆற்றல்களை உருவாக்குகின்றது. இதுவே மந்திரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
ரிஷிகளாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் வேறு வேறு காரியங்களுக்காக மந்திரங்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் பிரபஞ்சத்தில் (விண் அல்லது ஆகாயம் அல்லது அண்டவெளி) உள்ள ஒலி அலைகளின் சப்தமே மந்திரமாகத் தரப்பட்டுள்ளது. எல்லா மந்திரங்களும் பிரபஞ்சத்தில் இருந்து கிரகிக்கப் பட்டவைகளே.
எல்லோராலும் பிரபஞ்ச அலைகளின் ஒலியைக் கேட்க முடியாது. அந்த பிரபஞ்ச ஒலிகளை வேதம் நான்கு வகையாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறது. நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலிகள் “வைகரி” எனப்படும். பற்றற்ற நிலையில் வாழும் துறவிகளுக்கு இன்னும் சில நுட்பமான ஒலிகள் கேட்கும். அதை “மத்யமா” என்று அழைப்பார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்கள் அறியும் ஒலிகளை “பச்யந்தி” என்று அழைப்பார்கள். சமாதி நிலையில் இருப்பவர்களால் “பரா” என்று சொல்லக் கூடிய ஒலிகள் அறியப்படும். இப்படிப்பட்ட ஒலிகளின் தொகுப்பே மந்திரங்களாக விரிந்தன.
குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும், உயிரையும் கவசம் போல காக்கிறது. பல ஆற்றலைக் கொடுக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படைத் தத்துவமாகும்.
ஒரு வேலையை தொடந்து சீராகச் செய்யும் இயந்திரம் எமக்குப் பலன் கொடுக்கும் அதுபோல ஒரு மந்திரம் தொடர்ந்து சீராக உச்சரிக்கப்படும் போதே அது எமக்குப் பலனளிக்கிறது. மந்திரம் எனப்படுவது பல வேறுபட்ட ஒலிகளின் உச்சரிப்பாகும். அந்த உச்சரிப்பின்போது எமது ஆன்மா (ஒளியுடன்) பல ஆற்றலைக் கிரகிக்கின்றது அதன்மூலமாக பல ஆற்றலைப் பெறுகின்றது.
இதற்கு ஒரு உதாரணமாக பெண்களின் ஆன்மா உடுக்குச் சத்தத்தினால் இலகுவில் அதிர்வுறும். அதனாலேயே கோயில்களில் உடுக்கு அடிக்கும்போது பல பெண்கள் தம்மை அறியாமல் உரு ஆடுகிறார்கள். மகுடிக்குப் பாம்பு படமெடுத்து ஆடுவதும் அப்படிப்பட்ட ஒலி அதிர்வினாலேயே. சில பாடல்களுக்கு பலர் தம்மையும் அறியாமல் தாளம் போடுவதும், துள்ளித் துள்ளி ஆடுவது அந்த பாட்டில் இருந்து வரும் ஒலி அதிர்வுகளினாலேயே.
முறையாக உச்சரிக்கப்படும் மந்திரங்களும் அப்படிப்பட்ட பல தெய்வீக ஆற்றலை எமக்குக் கொடுக்கும்.
பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் அறியப்பட்டுள்ளன. மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. மந்திரங்களை ஓதும் போது, ஒலி என்பது அதாவது முறையான உச்சரிப்பு மிகவும் முக்கியமாகும்.
மந்திரங்களை சரியாக உச்சரிக்கும் போது எமக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் எமக்கு சக்தியும், ஆற்றலும் கிட்டும். வேறு வேறு ஒலிகள் எம்மில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.
மந்திரங்கள் ஓதுவதால் நம் இயல்பான உணர்ச்சியின் அளவுகள் மேலும் அதிக அளவில் உயர்ந்திடும். அது ஒரு ஊக்கியாக செயல்பட்டு, வாழ்க்கையில் நம் இலக்குகளை அடைய உதவிடும். நோய்களை குணப்படுத்தும். தீய சக்திகளை விரட்டும். செல்வத்தைப் பெருக்கும். தெய்வீக சக்திகளை பெற உதவும், பேரின்ப நிலைக்கு நம்மை தள்ளும் சக்திகளை மந்திரங்கள் கொண்டுள்ளது.
காயத்ரி மந்திரம்
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”
சொற்களுக்கு விளக்கம்
ஓம்: முதன்மை கடவுள், ஓங்காரம்
பூர், புவ, ஸுவ (பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம்) எனும் மூன்று உலங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம்.
(பூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்), புவஹ: துன்பங்களை அழிப்பவர், ஸ்வஹ: சந்தோஷத்தின் உள்ளடக்கம்).
தத்: அப்படிப்பட்ட, அந்த
ஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் பொருந்திய, உலகைப் படைத்த, கடவுளின் (காயத்ரி அல்லது சாவித்திரியின் சுருக்கம் ஸவிதுர்)
வரேண்யம்: சிறந்த,மிகவும் உயர்ந்ததான, மேலான
பர்கோ: சக்தியை, ஒளியை
தேவஸ்ய: இறைதன்மை, ஒளிமிக்கவராக, சுடர்போன்ற
தீமஹி: உள்ளீர்த்துக் கொள்கிறோம், தியானிக்கிறோம்,
தியோ: அறிவாற்றல். புத்தியை, அறிவை
யோ: யார், எவர்
நஹ: நாம், நம்முடைய
ப்ரசோதயாத்: ஊக்குவிக்கிராரோ, தூண்டுகிறாரோ,
பின்வரும் முறையில்ப் பொருத்திப் பார்ப்போமாக இருந்தால் காயத்ரி மந்திரத்தின் பொருள் பின்வருமாறு எடுத்துக் கொள்ளப்படும்.
யோ – எவர்
ந – நம்முடைய
தத் – அப்படிப்பட்ட, அந்த
தியோ – புத்தியை
ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ
தேவஸ்ய – ஒளிமிக்கவராக, இறைத்தன்மை மிக்கவரான
ஸவிது – உலகைப் படைத்த
வரேண்யம் – மிகவும் உயர்ந்ததான, மேலான
பர்கோ – சக்தியை
தீமஹி – தியானிக்கிறோம்
அர்த்தத்தின் சுருக்கம்:
வழிபடத்தக்க ஒளிபொருந்திய சூரியனின் அந்த இறைவனின் தெய்வீகமான ஒளியின் மீது, சக்தியின்மீது நாம் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும்.
மந்திரங்களுக்கு முதன்மையானது, மூலமானது காயத்திரி மந்திரமாகும். காயத்ரி மந்திரத்தினை சாவித்ரி மந்திரம் என்றும் சரஸ்வதி மந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் அதாவது சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. இம்மந்திரமானது ஒரு வேண்டுதலாகவும் அல்லது தினசரி பிரார்த்தனையாகவும் மேற்கொள்ளப் படுகிறது.
விசுவாமித்திரர் என்ற முனிவரால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட முதன்மை மந்திரம் காயத்திரி மந்திரம் ஆகும். அவர் யோக நிலையிலிருந்து காயத்திரி தேவியை வேண்டி பிரபஞ்ச சூட்சும ஒலியாக இதனைக் கண்டறிந்து எமக்குக் கொடுத்துள்ளார்.
கி மு 2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் உருவாகிய ரிக் வேதத்தில் மூன்றாவது மண்டலத்தில் காயத்திரி மந்திரம் விளக்கப்பட்டுள்ளது. அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்ததாகவும் ஒரு கருத்து உள்ளது. காயத்திரி மந்திரம் எனப்படுவது சாவித்திரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் காயத்திரி மந்திரத்தினை சாதாரண மானிடர்கள் ஜெபிக்கும்போது அதிலிருந்து வரும் அபரிமிதமான சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் காயத்திரி மந்திரத்தில் இருந்து ஒரு எழுத்து நீக்கிய மந்திரமே சாவித்திரி மந்திரம் எனவும் ஒரு கருத்து உள்ளது.
காயத்திரிதேவி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், ஐந்து திருமுகங்களையும், பத்துத் திருக்கைகளையும் கொண்டவள். மந்திரங்களுக்குத் தாய் போன்றவள் காயத்திரி. காயத்திரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்திரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்திரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப் படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்திரிக்குத் தான் முதல் இடம். காயத்திரி ஜபம் செய்யாத எந்த வேண்டுதலும், ஆராதனையும் பயனற்றது என வேதங்கள் விளக்குகின்றன.
காயம் + திரி = காயத்திரி
காயம் = உடல், திரி = ஆன்மா, மந்திரம் = காக்கும்,
உடலையும் ஆன்மாவையும் பேணிக் காக்கும் கவசம் காயத்திரி மந்திரம் எனப்படுகிறது.
இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.
காயத்திரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. அதாவது காயத்திரி மந்திரத்தினை உச்சரிக்கும்போது 24 வகையான ஒலிகள் கிளம்பும் அல்லது கேட்கும் அல்லது உணரப்படும் என்று அர்த்தமாகும். அட்சரம் என்றால் கர்நாடக இசையில் சுரங்கள் அதாவது ஒலிகள் அல்லது தாளம் எனப் பொருள்படும்.
காயத்திரி மந்திரம் காலம் காலமாக குரு குல முறைப்படி மட்டுமே உபதேசிக்கப் பட்டு வருகிறது. ஒரு குருவிடமிருந்து முறைப்படி மந்திர உபதேசம் பெற்று மந்திரங்கள் ஜெபிக்கவேண்டும் என்பதே உகந்த முறையாகும்.
காயத்திரி மந்திரம் காயத்திரி தேவியை தியானித்துக் கொண்டு சூரியனை நோக்கிச் சொல்லப்படும் மந்திரமாகும். காலையில் சூரியன் உதிக்கும் வேளை, மதியம் சூரியன் உச்சியில் இருக்கும் வேளை, மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளைதான் காயத்திரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் காயத்திரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும். இதனால் எமக்கு அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல்களையும் புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.
காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசம் “பிரம்மோபதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது
இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும் என்று வேதங்கள் விளக்குகின்றன.
எமக்குப் பிரச்சினைகள், துன்பங்கள், ஆபத்துக்கள் வருகின்ற வேளைகளில் எந்த வேளையிலும் மனதை ஒருநிலைப்படுத்தி கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரத்தினை நம்பிக்கையோடு ஒரு தடவை ஜெபித்தாலே தீர்வு கிடைக்கும் என்பதும் உண்மையாகும்.
காயத்திரி மந்திரம் ஆண் பெண் சிறுவர் பெரியவர் என பாகுபாடில்லாது யாராலும் தியானிக்க முடியும். குரு மூலமாக உபதேசம் பெற்று உச்சரிப்பதே சிறப்பு. இங்கு தியானிப்பவரின் தூய்மை புனிதம் என்பனவே மிக மிக முக்கியமானது.
காயத்திரி மந்திரத்தினைத் தினமும் ஜெபித்து வர வாழ்க்கையில் பல மாறுதல்கள் பலன்கள் இருக்கும்.
– தடைகளை நீக்கும்
– ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்
– அறியாமையை போக்கும்
– எண்ணங்களை தூய்மைப்படுத்தும்
– திறன்களை மேம்படுத்தும்.
எனது குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள் மந்திரங்கள் எப்படி ஜெபிக்கவேண்டும் என்று பின்வருமாறு விளக்குகிறார்.
கேள்வி: ஐயா, மந்திரங்களை தொடர்ந்து சொல்லும் போது அதக்குப் பலன்கள் உண்டா?
குரு: ஒரு மந்திரத்தினை (ஒரு வார்த்தையை) ஒரு தடவை சொன்னால் அது வார்த்தை. பல தடவை தொடர்ந்து அதே நினைவோடு சொன்னால் அது மந்திரம்.
உதாரணமாக கந்தர் சஷ்டி கவசத்தில், “ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய” என்று ஒரு வரி வருகிறது. அதாவது கந்தர் சஷ்டி கவசத்தினை ஒரு நாளைக்கு முப்பத்தாறு தடவை தொடர்ந்து மனமுருகித் துதித்தால் எட்டுத் திக்கும் உனது வசமாகும் என்று அர்த்தமாகும்.
“கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்”.
விளக்கம்: திருச்செந்தூர் முருகனை நோக்கி பாலன் தேவராயன் என்பவரால் பாடப்பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தினை தினமும் காலையிலும் மாலையிலும் சிந்தை தவறாது முருகன் மீது பக்தி வைத்து பாராயணம் பண்ணவேண்டும். அதிலும் தினமும் முப்பத்தாறு தடவைகள் ஒரே சிந்தனையோடு தொடர்ந்து பாராயணம் பண்ணி விபூதி பூசி வழிபட்டால் எட்டுத் திக்கும் உன்வசமாகும். எட்டுத் திக்கிலும் உள்ள தெய்வங்கள் உனக்கு அருள்புரியும். எதிரிகள் கூட உன்னைத் தேடி வந்து வணங்குவர் என்று கூறுகிறார்
எத்தனை பேர் அப்படிப் படித்திருக்கிறார்கள். மனம் தொடர்ச்சியாகிப் போனால்த்தான் (எந்திரமாகிப் போனால்த்தான்) அது மந்திரம். மதி முக்கால் மந்திரம் கால் என்று கூறுவார்கள். நடைமுறைச் சாத்தியமானால் மந்திரம் உண்மையாகும்.
காயத்திரி மந்திரத்தின் சிறப்பினைத் திருமூலர் பின்வருமாறு விளக்குகிறார்.
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்வதற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே – திருமந்திரம்
விளக்கம்: காயத்திரியாகிய உமையம்மையாரையும், ஆராயப் பெறுகின்ற சாவித்திரியாகிய நாமகளையும் வழிபட்டுப் பயன் பெறுதற்குரிய வழிவகைகளை ஆராய்தற்கு அவற்றிற்குரிய காயத்திரி மந்திரங்களையும் தூய நெஞ்சிடத்து நினைப்பர். அதன் பொருள் அறிந்து தமது கருத்தில் வைத்து தினம்தோறும் தியானித்து வரவேண்டும். அத்துடன் இறைவன் மீது அன்புகொண்டு மாயையாகிய உலகப் பற்றுகள் மீது ஆசை கொள்ளாமல் வேதங்கள் கூறுவதுபோல வாழ்ந்து வருபவர்களே உண்மையான வேதம் ஓதுபவர்கள் (மறையோர்) ஆவார்கள். இவர்கள் சிவம் என்னும் அறிய வேண்டிய பொருளுடன் பொருந்துவார். உடல், உலகம் என்னும் காரியங்களை வென்று விளங்குவர்.
காயத்திரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரமில்லை. தாயை மிஞ்சிய தெய்வமில்லை. காசி கங்கையை விடச் சிறந்த தீர்த்தமில்லை ஏகாதசியை விச் சிறந்த விரதமில்லை என்பது வேதம்.
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —