கார்த்திகைத் தீபம் கார்த்திகை விளக்கீடு (14-12-2024)

0 0
Read Time:5 Minute, 31 Second

2024 இல் கார்த்திகை விளக்கீடு ஆங்கில டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இதனை சர்வாலய தீபம் எனவும் அழைப்பர்

திருக்கார்த்திகை தினத்தன்று மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களில் சுட்டிகளில் தீபமேற்றியும் வீட்டு முற்றத்திலும் வளவிலும் தீப்பந்தம் எரித்தும் கொண்டாடப் படுகிறது. ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழைமரம் நட்டு தென்னோலை, பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து அதனை  “சொக்கப்பனை” என அழைப்பர். மாலை வேளையில் அந்த சொக்கப்பனைக்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

கார்த்திகை விளக்கீட்டிலன்று மாவிளக்கு செய்து அதில் தீபம் ஏற்றியும் வழிபடுவர்.

புராணக் கதை

ஒரு முறை படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று போட்டி போட்டு வாதிட்டனர். அப்போது சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றி அடியையும் முடியையும் தேடிக் கண்டுபிடிப்பவரே பெரியவர் என்று  அசரீரியாகக் கூறினார். இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும் என்பது புராணம்.

கார்த்திகை விழாவைக் குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

குமராலய தீபம்: கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாளில் .முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.

விஷ்ணுவாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாளில். விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது 

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி தினத்தில் இந்து ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது 

திருவண்ணாமலை மகாதீபம்

திருவண்ணாமலை மகாதீபம் என்பது கார்த்திகை விளக்கீடு அன்று திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றும் விழாவாகும்

கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் திருவண்ணாமலை ஆலயத்தில் மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து அர்த்தநாரீசுவரர் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறார். அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், திருவண்ணா மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

சிவன் அக்கினிப் பிழம்பாக, காட்சி கொடுத்தார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் நீளமான துணியும் பயன்படுத்தப்படுவதாக ஆலயக் குறிப்பு குறிப்பிடுகின்றது.

கு சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %