குண்டலினி என்றால் என்ன?

0 0
Read Time:31 Minute, 23 Second

யோகப் பயிற்சியின்போது ஆதாரங்கள், நாடிகள் மற்றும் குண்டலினி பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த விளக்கங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது எம்மை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்த முடியாமலிருக்கும். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளிடமிருந்து நான் அறிந்துகொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் உடலில் உள்ள ஆதாரங்கள் அதாவது சக்கரங்கள் பற்றிய சிறு விளக்கத்தினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு ஆணும் பெண்ணும் இணைவதனால், ஆண்மூலம் உயிரும் பெண்மூலம் கருவும் இணைந்து உடல் உருவாகிறது. இது “தூல” அல்லது “சூல” உடல் என அழைக்கப்படுகிறது. தாயின் வயிற்றில் அக்கரு வளர்ந்து முதிர்ந்து வெளியே வரும்போது அவ்வுடலுடன் ஆன்மா என்றழைக்கப்படும் சூக்கும உடல் இணைந்து கொள்கிறது. ஆன்மா உடலினுள் புகுந்து கொள்கிறது எனவும் எடுத்துக் கொள்ளலாம். அப்போது அச் சிசுவின் முதற் சுவாசம் நடைபெறுகிறது. இதுவே பிறப்பு என அழைக்கப்படுகிறது.

தூல உடலில் உள்ள கை, கால், இதயம் போன்ற அங்கங்கள் போல சூக்கும உடலிலும் பல உடற்கூறுகள் அதாவது நாடி சக்கரம் ஆன்மா என சித்தர்களால் வகைப் படுத்தப்பட்டுள்ளது.

இச் சூக்கும உடலில் ஏழு ஆதாரங்ககள் அதாவது ஏழு சக்கரங்கள் அமைந்திருக்கும். அவையாவன “மூலாதாரம்”, “சுவாதிஷ்டானம்”, “மணிப்பூரகம்”, “அனாகதம்”, “விசுத்தி”, “ஆக்ஞை” மற்றும் “துரியம்” ஆகும். அச்சக்கரங்கள் எழுபத்தி ஈராயிரம் (72000) நாடிகள் மூலமாக இத் தூல உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும்.

இங்கு நாடி என்பது தூல உடலின் நரம்பிற்கு ஒப்பானது. ஆன்மாவாகிய சூக்கும உடல் அழியாதது. தூல உடலில் இருந்து சூக்கும உடல் (ஆன்மாவானது) பிரிந்து செல்வதே மரணமாகும். தூல உடலுடன் சூக்கும உடல் இணைந்திருக்கும் போது ஏதோ காரணங்களால் அவை தொடர்பற்ற நிலை ஏற்படுமாயின் அதுவே மயக்கமாகும்.

முதலாவது சக்கரம்.  (ந – மண்)

மூலாதாரம்: முதுகெலும்பின் அடிப்பாகத்தில் மல (ஆசன) வாய்க்கும் கரு (குறி) வாய்க்கும் மத்தியில் அமைந்துள்ளது. இச் சக்கரமே உடல் சக்தியின் இருப்பிடமாகும். இங்குதான் “குண்டலினி” சக்தி அமைந்துள்ளது. அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. நான்கு இதழ் தாமரை என்பது இச்சக்கரத்தில் இருந்து நான்கு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். இந்தச் சக்கரத்திற்கான மந்திரம் “லம்” எனப்படுவதாகும். உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூலகாரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்கள், முள்ளந்தண்டு ஆகியவற்ரின் இயக்கத்தினை மூலாதாரச் சக்கரமே கட்டுப்படுத்துகிறது. இதன் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். மூலாதாரச் சக்கரமே மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டுசக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத் தத்துவத்துடன் ஒப்பிடப்படுகிறது.

இரண்டாவது சக்கரம்  (ம – நீர்)

சுவாதிஷ்டானம்: இது மூலாதாரத்துக்கு இரண்டு அங்குலம் அளவுக்கு மேலாக ஆண், பெண் குறிப்பகுதிக்கு சற்று மேலாக தொப்புளுக்குக் கீழே ஆறு இதழ் தாமரை வடிவில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. ஆறு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து ஆறு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். இச் சக்கரத்திற்கான மந்திரம் “வம்” எனப்படுவதாகும். பாலியல்சக்தி இதில்த்தான் மையம் கொண்டிருக்கிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் உள்ளவனாக இருப்பான். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நீர்த்தத்துவத்துடன் ஒப்பிடப்படுகிறது.

மூன்றாவது சக்கரம்.  (சி நெருப்பு)

மணிபூரகம்: நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளிற்குக் கீழ் உள்ள பகுதியாகும். பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. பத்து இதழ் தாமரை என்பது இச்சக்கரத்தில் இருந்து பத்து நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். “ரம்” என்பது இதன் மந்திர ஒலியாகும். இச் சக்கரத்தில் இருந்து உடல் இயக்கத்திற்குத் தேவையான பிராணசக்தி கிடைக்கிறது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். இச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நான்காவது சக்கரம். (வ – வாயு)

அனாகதம்: இதற்கு “இருதயச் சக்கரம்” என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில் இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ்  தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் அமைந்துள்ளது. பன்னிரண்டு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து பன்னிரண்டு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். “யம்” என்பது இச் சக்கரத்தின் மந்திரமாகும். அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். இச் சக்கரம் காற்றுத் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

ஐந்தாவது சக்கரம்.  (ய – ஆகாயம்)

விசுத்தி: இதற்கு “குரல்வளைச் சக்கரம்” என்றொரு பெயரும் உண்டு. இது கழுத்தில் குரல்வளைப் பகுதியில் அமைந்துள்ளது. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரை அமைப்பில் நீல நிறத்தில் அமைந்துள்ளது. பதினாறு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து பதினாறு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். உணர்ச்சி, சிந்தனை ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. தைராய்டு சுரப்பி, குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும்.

ஆறாவது சக்கரம்.

ஆக்ஞை: இதை “நெற்றிக்கண் சக்கரம்” என்றும் அழைக்கப்படுகிறது. புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக (மூன்றாவது கண்) கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை வடிவில் அமைந்திருக்கிறது. இரண்டு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து இரண்டு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். “ஓம்” என்பது இச் சக்கரத்தின் மந்திரமாகும். ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இச்சக்கரமாகும்.

ஏழாவது  சக்கரம்.

துரியம்: இதற்கு “சகஸ்ராரம்” மற்றும் “தாமரைச் சக்கரம்” என்ற பெயர்களும் உண்டு. இச் சக்கரமானது உச்சந்தலைப் பகுதியில் (மூளையின் மேல்ப் பகுதியில்) ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. ஆயிரம் இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து ஆயிரம் நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். ஆன்மாவிற்கும் பிரபஞ்சத்துக்கும், தொடர்பினை ஏற்படுத்தி ஞானம் அடைய இச்சக்கரமே வழிவகுக்கும்.

மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை உள்ள ஆறு சக்கரங்களும் உடலுக்கு உள்ளே இருப்பவை.எனவே இவற்றை ஆதார தலம் அல்லது ஆதார சக்கரங்கள் என்று அழைக்கப்படும். ஏழாவது சக்கரமான “துரியம்” அல்லது “சகஸ்ராரம்” என்றழைக்கப்படும் சக்கரம் உச்சியில் உடலுக்கு வெளியே இருக்கிறது. எனவே இதை நிராதார தலம் என்று சொல்லப்படும் இந்த தலமே எம்மையும் இப் பிரபஞ்சத்தையும் இணைக்கின்றது.

அடுத்ததாக நாடிகள் என்றால் என்ன அவற்றில் முக்கியமான நாடிகள் எவை என அறிந்துகொள்ளலாம்.

சித்தர்களின் கூற்றுப்படி மனித உடலில் எழுபத்தி ஆறாயிரம் நாடிகள் உள்ளன. இங்கு நாடி என்பது தூல உடலின் நரம்பிற்கு ஒப்பானது. ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாகப் பார்க்க முடியாது இவை சூட்சுமமானவை. சித்தர்கள் போன்ற ஞானிகளால் மட்டுமே இவை அறியப்பட்டுள்ளன. நாடிகள் சூக்கும உடலின் ஏழு சக்கரங்கள் அதாவது ஆதாரங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த எழுபத்தி ஆறாயிரம் நாடிகள் மூலமாக எமது தூல உடலும் சூக்கும உடலும் இணைக்கப் பட்டுள்ளது. பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் இந்த சூக்கும உடலானது பிரபஞ்ச சக்தியை உள்ளிழுத்து சக்கரங்களில் தேக்கி வைத்து இந்த எழுபத்தி ஆறாயிரம் நாடிகள் வழியாக இந்த உடலை இயக்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் விளக்குகின்றார்கள்.

இந்த நாடிகள் “மூலாதாரம்”, “சுவாதிஷ்டானம்”, “மணிப்பூரகம்”, “அனாகதம்”, “விசுத்தி”, “ஆக்ஞை” மற்றும் “துரியம்” ஆகிய ஏழு ஆதாரங்களிலும் இணைந்து பிரிந்து செல்கின்றன. இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் குண்டலினி சக்தியுடன் நேரடியாகத் தொடர்புடைய பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியப்படுத்தி இருக்கிறார்கள்.  அவையாவன இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி மற்றும் குரு என்பதாகும்.

இந்த பத்து நாடிகளில் குண்டலினி சக்தியை துரியம் வரை கொண்டு செல்லும் “சுழுமுனை நாடி” மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் புனிதமான நாடியுமாகும்.

இந்த நாடிகள் வழியாக தூல உடலுக்குக் கடத்தப்பபடும் சக்தியானது “பிராணசக்தி” அல்லது “பிராணன்” என அழைக்கப்படுகிறது.

பிராணசக்தி” அல்லது “பிராணன்”:

இதுவே “வாசி” அல்லது சுவாசம் என அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஆக்ஸிஜன் வாயு எனக் கருதக்கூடாது. வாயுவின் தன்மையை ஒத்த பிரபஞ்ச சக்தியே பிராணசக்தி என அழைக்கப்படுகிறது. நாம் உட்சுவாசிக்கும் மூச்சுக் காற்றுடன் பிராணசக்தியும் உட்புகுகிறது. பிராண சக்தியானது சுவாசக் காற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக சக்கரங்களை அடைந்து, சக்கரங்கள் (ஏழு ஆதாரங்கள்) மூலமாக பிராணசக்தி உள்வாங்கப்பபட்டு சேமிக்கப்படுகிறது. இது “நாத சங்கமம்” என அழைக்கப்படுகிறது. பின்னர் எழுபத்தி ஆறாயிரம் நாடிகளின் வழியாக தச வாயுக்களுடன் இணைந்து தூலஉடல் முழுவதும் பரவுகிறது. இது “பிராண சங்கமம்” என அழைக்கப் படுகிறது. இந்த பிராண ஓட்டம், வெவ்வேறு நாடிகளில் மாறி மாறி ஓடும். அந்த ஓட்டத்தின்படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன செயற்படுகின்றன என்பது சித்தர்களது விளக்கமாகும்.

இந்த பத்து நாடிகளில் பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும் (நாக்கின் அசைவுக்கு உதவுகிறது), காந்தாரி என்பது இடது கண்ணிலும் (இடது கண்ணின் அசைவுக்கு உதவுகிறது), புருடன் என்பது வலது கண்ணிலும் (வலது கண்ணின் அசைவுக்கு உதவுகிறது), அத்தி என்பது வலது காதிலும் (ஒலியை உணர உதவுகிறது), அலம்புடை என்பது இடது காதிலும் (ஒலியை உணர உதவுகிறது), சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும் (ஆண் பெண் பாலியல் உறுப்புக்கு உதவுகிறது) , குரு என்பது ஆசனவாயிலிலும் (மலம் கழிக்க உதவுகிறது) இணைக்கும் நாடிகளாகும்.

இடகலை (இடைகலை)

மூலாதாரத் சக்கரத்தில் இருந்து எழும் (ஆரம்பிக்கும்) மூன்று முக்கிய நாடிகளில் ஒன்றான இடகலை நாடியானது உடலின் முள்ளந்தண்டு வழியாக “சுவாதிஷ்டானம்”, “மணிப்பூரகம்”, “அனாகதம்”, “விசுத்தி” “ஆக்ஞை” ஆகிய சக்கரங்களில் இணைந்தவாறு மூக்கின் இடது நாசித் துவாரத்தில் முடிவடைகிறது. இந்த நாடி வழியே நடைபெறும் சுவாசம் அதாவது பிராண சக்தி ஓட்டமானது இடகலைச் சுவாசம் என அழைக்கப்படுகிறது. இதற்கு “சந்திரகலை” என்றொரு பெயரும் உண்டு. இடகலை சுவாசம் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

பிங்கலை

மூலாதாரத் சக்கரத்தில் இருந்து எழும் (ஆரம்பிக்கும்) மூன்று முக்கிய நாடிகளில் ஒன்றான பிங்கலை நாடியானது உடலின் முள்ளந்தண்டு வழியாக சுவாதிஷ்டானம்”, “மணிப்பூரகம்”, “அனாகதம்”, “விசுத்தி”, “ஆக்ஞை”: ஆகிய சக்கரங்களில் இணைந்தவாறு மூக்கின் வலது நாசித் துவாரத்தில் முடிவடைகிறது. இந்த நாடி வழியே நடைபெறும் சுவாசம் அதாவது பிராண சக்தி ஓட்டமானது பிங்கலைச் சுவாசம் என அழைக்கப்படுகிறது. இதற்கு “சூரியகலை” என்றொரு பெயரும் உண்டு. பிங்கலைச் சுவாசம் உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.

சுழுமுனை

சுழுமுனை நாடியை நடுநாடி அல்லது மையநாடி என்றும் அழைப்பர். மூலாதாரச் சக்கரத்தில் இருந்து எழும் (ஆரம்பிக்கும்) மூன்று முக்கிய நாடிகளில் ஒன்றான சுழுமுனை நாடியானது தாமரை தண்டின் நூல் போல இடகலை, பிங்கலை நாடிகளுக்கு நடுவாக உடலின் முள்ளந் தண்டின் நடுப்பகுதி ஊடாக “மூலாதாரம்”, “சுவாதிஷ்டானம்”, “மணிப்பூரகம்”, “அனாகதம்”, “விசுத்தி”, “ஆக்ஞை”, ஆகிய ஆறு சக்கரங்களின் ஊடாக ஊடுருவிச் சென்று ஏழாவது சக்கரமான துரியம் அல்லது சகஸ்ரார சக்கரத்தில் முடிவடைகிறது.

தியான நிலையில் மட்டுமே, இடகலை பிங்கலை வழியாக நடைபெறும் சுவாசம் நிறுத்தப்பட்டு சுழுமுனைச் சுவாசம் நடைபெறும். சுழுமுனைச் சுவாசத்தின்போது மூலாதாரச் சக்கரத்தில் நிலைபெற்றிருக்கும் குண்டலினி சக்தியானது சுழுமுனை நாடி வழியாக மேலெழுந்து ஒவ்வொரு ஆதாரங்களையும் கடந்து சென்று துரியத்தினை அடையும். இதுவே ஞானம் அல்லது முக்தி நிலை எனப்படும்.

குண்டலினி சக்தி:

சித்தர்களும், ஞானிகளும் பல வடிவில் குண்டலினியை உருவகப் படுத்தியுள்ளனர். நம் மூலாதார சக்கரத்தில் குண்டம் போன்ற வடிவில் இருக்கும் உயிர்ச் சக்தியே குண்டலினி ஆகும் (யாகத்தில் தீ வளர்க்கும் பேழை குண்டம் என அழைக்கப்படும் – ஓம குண்டம்) என சில சித்தர்களும். அசைவற்ற நிலையில் சுருண்டு படுத்திருக்கும் பாம்புபோல இருக்கும் சக்திஎன சில சித்தர்களும் விளக்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் மூலாதாரச் சக்கரத்தில் அசைவற்ற நிலையில் இருக்கும் பேரண்ட சக்தியே “குண்டலினி” ஆகும். அக் குண்டலினி சக்தியை யோகப் பயிற்சியின் மூலமாக அபானன் என்ற வாயுவை வெப்பமடையச் செய்து அவ் வெப்பக்காற்ரின் மூலமாக, குண்டலினி சக்தியை வெகுண்டெழச் செய்து சுழுமுனை நாடி வழியாக மேலெழச் செய்து ஆறு ஆதாரச் சக்கரங்களையும் கடந்து இறுதியாக உச்சியிலுள்ள துரியம் வரை செலுத்தும் பயிற்சியே யோகப் பயிற்சியாகும்.

குண்டலினி சக்தியானது உலக உயிரினங்களில் மனிதகுலத்துக்கு மட்டுமே அமைந்த சிறப்பம்சமாகும். இறைவனைத் தேடி இறுதியில் அவனுடன் கலந்து கொள்வதற்காக அமையப்பெற்ற சூக்கும சக்தியே குண்டலினி சக்தியாகும்.

627-குண்டலினிசக்தி.  திருமந்திரம்.

“மூலத்து மேலது முச்சதுரத்தது

கால் அத்திசையில் கலக்கின்ற சந்தியில்

மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற

கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.” திருமந்திரம்.

விளக்கம்: நான்கு இதழ் தாமரை வடிவாகிய மூலாதார சக்கரத்தில், முச்சந்தியிலுள்ள (இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நாடிகளும் ஆரம்பிக்குமிடம்) குண்டலினி சக்தியை சூடான வாயுவினால் தம்பிடித்து அழுத்தி சுழுமுனை நாடியில் மேற்புறமாக செலுத்த பிறைபோன்ற புருவநடுவில் (நெற்றியில்) பல வடிவங்கள், வண்ணங்கள், ஜோதி தோன்றும்.

யோகப்பயிற்சி என்பது மனத்தினைப் பண்படுத்தி அதனை உள்முகமாக ஒடுக்கி மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை வெப்பக் காற்றினால் கிளந்தெழச்செய்து சுழுமுனை நாடி வழியாக ஆறு ஆதாரங்களையும் கடந்து தலை உச்சியிலுள்ள துரியம் நோக்கிச் செலுத்துவதற்குரிய பயிற்சியாகும்.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என அழைப்பர். பொதுவாக யோகப் பயிற்சி என்பது உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயணப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. யோக சாதனத்தின்போது சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் மற்றும் கிண்கிணி, வீணை, தந்திரி, வண்டு போன்ற இனிய ஓசைகளை சாதகர்கள் கேட்பார்கள். இவை சப்த நாதம் எனவும் அழைக்கப்படும்.

குண்டலினி சக்தியானது ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும். குண்டலினி மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயணப்படும் போது அக்கினிகுண்டலினி எனவும், அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயணப்படும் போது சூரிய குண்டலினி எனவும் அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி எனவும் அழைக்கப்படுகிறது. இறுதியில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என அழைக்கப்படும்.

மூலாதாரத்தில் அக்கினி ரூபத்தில் இருக்கும் குண்டலினி சக்தியானது மேலெழுந்து செல்லும்போது அதன் வெப்பம் தணிந்து இறுதியில் சந்திர குண்டலினியாக துரியத்தை அடையும்போது குளிர்ச்சியடைந்து அண்ணாக்கில் அமுதமாகச் சுரக்கிறது. சித்தர்கள் இவ் அமுதத்தினைப் பருகியே நீண்ட காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள்.

மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியானது ஒவ்வொரு ஆதாரங்களையும் கடக்கும் போது பல சித்திகள் கிடைக்கும். தான் யார் என்று அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். முற்பிறப்பு இரகசியங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இறுதியில் ஜோதியை அந்த ஆதியை எமக்குள்ளேயே தரிசிக்கக்கூடியதக இருக்கும். இதுவே முக்தி அல்லது ஞான நிலையாகும். ஞான நிலையில் இருந்து இறுதியில் அந்த பரம்பொருளுடன் அந்த ஜோதியுடன் ஐக்கியமாவதே சமாதி நிலையாகும். இது மீண்டும் பிறப்பற்ற நிலையாகும்.

யோகப் பயிற்சியின்போது கிடைக்கும் சித்திகளும் ஈற்றில் அடையும் முக்தியையும் விபரிக்கும் ஒரு உருவாகக் கதையான தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த புராணக் கதையின் ஆன்மீகக் கருத்தினையும் இங்கு விளங்கிக் கொள்வோம்.

ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. அமிர்தம் பருகி ஈசன் அருள் பெற்று தாம் சாக வரம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் பிடித்துக் கொண்டு பாற்க் கடலைக் கடையத் தொடங்கினர்.

கடலைக் கடையும் போது மந்தார மலை நீருக்குள் மூழ்கிவிடாது இருக்க திருமால் மலையைத் தாங்கும் பொருட்டு கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்தார்.

பாற்கடலை கடைந்த சமயத்தில் அவ்விடத்தில் உஷ்ணம் அதிகமாகி அங்கிருந்து விஷம் வெளிப்பட்டது. அப்போது சிவபெருமானை அணுகிய தேவர்கள் அந்த விஷத்திடம் இருந்து அனைவரையும் காக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள, ஈசன் அந்த விஷத்தை உட்கொண்டார். அந்த விஷம் சிவனின் வயிற்றிற்குள் சென்றால் உலகத்தவர் யாவருக்கும் தீங்கில் முடியும் எனக் கருதிய உமையவள், சிவபெருமானின் கழுத்தினைப் பிடிக்க விஷம் சிவனின் கழுத்தில் தங்கி கழுத்து நீலநிறமாய் மாறியது. இதன் காரணமாய் ஈசன் திருநீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.

அங்கு வெப்பம் தணிந்ததனால் பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தபோது அங்கிருந்து திருமகள் தோன்றி விஷ்ணுபகவானைச் சேர்ந்தாள். மேலும் ஐராவதம் எனும் வெள்ளை யானை தோன்றியது, அந்த யானையை இந்திரன் தனக்கு வாகனமாக எடுத்துக் கொண்டான். மேலும் கேட்டதைக் கொடுக்கும் காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. பிரம்மதேவர் அப்பசுவினை முனிவர்களுக்கு அளித்தார். மேலும் பாற்கடலில் இருந்து வெள்ளை வண்ணத்தில் உச்சைஸ்ரவம் எனும் பெயர்கொண்ட குதிரை ஒன்று வெளிப்பட்டது. மேலும் கௌஸ்துபம் என்ற மணி வெளிப்பட்டது. அம்மணியை விஷ்ணுபகவான் தன் மார்பினில் அணிந்து கொண்டார். மேலும் பாரிஜாதம் என்ற மலர் வெளிப்பட்டது. அதை தேவர்கள் இந்திரலோகம் எடுத்துச் சென்றனர். பின்னே மிகவும் ஒளி பொருந்திய சந்திரன் வெளிப்பட்டது. சந்திரனை சிவபெருமான் தன் சடைமுடியில் சூடிக் கொண்டார். பாஞ்சஜன்யம் எனும் சங்கும், சார்ங்கம் என்ற வில்லும் பாற்கடலில் இருந்து வெளியே வந்தது. இவை இரண்டையும் விஷ்ணுபகவான் தன் பிரதான ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார். பாற்கடலில் இருந்து ஜேஸ்டா எனப்படும் அலக்ஷ்மி தோன்றினாள்.மேலும் பாற்கடலில் இருந்து அப்சரஸ்கள், வாருணிக்கள் மற்றும் கற்பகவிருக்ஷம் ஆகியன தோன்றியது.

இறுதியாக தன்வந்திரி பகவான் கையில் கலசத்தில் அமிர்தத்தை ஏந்தியபடி தோன்றினார். அப்போது அமிர்தத்தை அசுரர்களும் கேட்க, ஸ்ரீவிஷ்ணு, மோஹினி அவதாரம் கொண்டு அசுரர்களை தன் அழகில் மயக்கி அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் அளித்தார். ஆனால் சுவர்பாணு என்ற அசுரனும் அமிர்தத்தை உண்டுவிட அதைக் கண்ட ஸ்ரீவிஷ்ணு தன் சக்ராயுதம் கொண்டு சுவர்பாணுவின் தலையைக் கொய்தார். ஆனால் அமிர்தத்தின் பலனாக ஸ்வர்பாணுவின் உயிர் பிரியவில்லை. அந்தத் தலை ராகு என்ற நிழல் கிரகமாகவும், உடல் கேது என்ற நிழல் கிரகமாகவும் மாறியது. பின்னர் மந்தார மலையை தேவர்கள் அதன் இருப்பிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைத்தனர். அமிர்தம் திருமாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைக களின் ஆன்மீக விளக்கம்

  • பாற்கடல் – குண்டலினி சக்தி
  • மேரு மலை – சுழுமுனை நாடி
  • வாசுகி பாம்பு – மூச்சுக்காற்று
  • தேவர் (ராகு) – இடகலை நாடி
  • அசுரர் (கேது) – பிங்கலை நாடி
  • ஆமை – ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை
  • ஆலகாலவிஷம் – கபம்
  • அமுதம் – குண்டலினி சக்தி துரியத்தினை அடையும்போது அமுதம் சுரக்கும்)
  • காமதேனு, கற்பக விருட்சம் – நினைத்தது கைகூடும் ஆற்றல்
  • திருமகள் – செல்வம், நிறைவு
  • சந்திரன் – ஜோதி தரிசனம்
  • அமுத கலசத்துடன் தன்வந்திரி – முத்தி

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் அவர்கள் போளிவாக்த்தில் “பிரம்ம சூத்திரக் குழு” எனும் பெயரில் அமைந்துள்ள ஆச்சிரமத்தில் இருந்து எமக்கு யோகப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கிறார். யோகம் பயின்று பயன்பெறுவோம்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %