குருவுக்கு எனது சமர்ப்பணங்கள்
என் குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுக்கு காணிக்கையாக இரண்டு நூல்கள் எழுதி சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியமைக்கு அந்த இறைவனுக்கும் எனது குருவுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள்.
நான் எழுதிய முதலாவது நூலான “எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு” என்ற படைப்பினை 2020 இல் சமர்ப்பித்திருந்தேன். அந்த நூலினை வாசித்த பலர் நீங்கள் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று வினவினார்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள் என்று பாராட்டினார்கள். அப்போது எனது குருவின் மகிமையை முழுமையாக உணரக்கூடியதாக இருந்தது.
நான் முதன் முதலில் குருவை நேரில்ச் சென்று அவரிடம் இருந்து ஆசீர்வாதமும் முதலாவது உபதேசமும் எடுக்கும் வரை நான் புத்தகம் எதுவும் எழுதியதில்லை. அங்கிருந்து கனடா வந்து எனது குருவை எண்ணினேன். நான் பல ஆன்மீக வாதிகளிடம் முதலில்ச் சென்றிருக்கிறேன். ஆனால் இவரிடம் சென்று வந்தபோது ஆன்மீக எண்ணத்தில் ஒரு முழுமையான மனநிறைவு ஏற்பட்டது. ஆன்மீகம் என்றால் என்னவென்று முழுமையாக உணர்ந்தேன். ஒரு தெளிவு என்னுள்ப் பிறந்தது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நோக்கில் ஒரு கட்டுரை வரைந்தேன். குருவுக்கு அனுப்பி வைத்தேன். குரு கூறினார் “சிவா நீ நன்றாக எழுதியுள்ளாய். இன்னும் நன்றாக விளக்கமாக எழுது” என்று ஊக்கம் கொடுத்தார். அத்துடன் “உண்மையை எழுது”, “உண்மையாக எழுது”, “நீ கண்டவற்றை கேட்டவற்றை எல்லாம் எழுது”, “நேரமெடுத்து நிதானமாக எழுது”, “பிறருக்கும் பயன் தரக்கூடியவாறு எழுது” என்று அறிவுரை கூறி, ஆசீர்வாதம் வழங்கினார்.
குருவிடம் இருந்து இப்படியான ஒரு அறிவுரையும் பாராட்டும் கிடைத்ததால் எழுத ஆரம்பித்தேன். அத்துடன் அந்த நேரம் கொரோனா தொற்றுக் காரணமாக உலகமே முடங்கி இருந்ததனால் வீட்டிலேயே தங்கி இருந்ததால் நிறையவே நேரம் கிடைத்தது. விரிவாக, விளக்கமாக எழுத ஆரம்பித்தேன். ஆன்மீகத்தில் பயிற்சிகள் செய்து முன்னேற வேண்டுமானால் ஆன்மீகம் என்றால் என்ன என்ற ஒரு தெளிவு பிறக்கவேண்டும். அப்போது தான் நாம் செய்யும் பயிற்சிகளை செம்மையாகச் செய்ய முடியும். குருவின் காணொளிகளை ஓவ்வொன்றாக கேட்டு அறிந்து அதிலிருந்த விடயங்களை குறிப்பெடுத்தேன். புரியாத விடயங்களை குருவிடம் கேட்டு அறிந்து கொண்டேன். பல ஆன்மீக நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்தும் அறிந்து குறிப்புகள் எழுதிக் கொண்டேன்.
தொடர்ந்து நான் அங்கு சென்றிருந்த போது ஆச்சிரமத்தில் எனது அனுபவங்களை முழுமையாக இரைமீட்க்கக் கூடியதாக இருந்தது. எழுதினேன்.
நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தினை இணுவிலைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு வரையுமே எனது தமிழ் ஆசான் குமாரசிங்கம் ஆசிரியரிடம் தமிழ் கற்றவன். அதுவே எனது தமிழ் கல்வி அறிவு. அதன் பின்னால் எனது தமிழ் அறிவு வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து வரும் தமிழ்ச் சினிமாக்கள், தமிழ் தொடர் நாடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் படித்து அறிந்ததே. அது மட்டுமல்ல தமிழ்நாட்டின் ஊர்கள் கிராமங்களின் பெயர்களை அறிந்து கொண்டாலே தமிழ் அறிவு மேம்பட்டுவிடும் என்பது எனது கருத்து. அவ்வளவு அழகான, ஆழமான தமிழ் (காரியப்) பெயர்கள். இதுவே எனது தமிழ்ப் புலமை அறிவு எல்லாமே.
பல ஆன்மீக விடயங்களை ஆராய்ந்து அறிந்து எழுதும்போது எனக்குள் ஒரு ஆன்மீகத் தெளிவு பிறக்க ஆரம்பித்தது.
அதாவது ஒரு அசையா சக்தி அசையும் சக்தியாக பிரிந்து (அதாவது இந்துக்கள் சிவன் உமை என அழைக்கிறார்கள்) அதிலிருந்து ஆன்மாக்கள் தோன்றி இந்த உலகத்தில் உயிரினமாக பரிணமிக்கிறது. அதாவது புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் மனித உரு எடுக்கும் போதே ஆண்டவனை அறியும், உணரும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆண்டவனை அறிய முற்படும் சந்தர்ப்பமே முதலில் பக்தியாக வெளியில் எங்கும் தேடி பின்னர் தனக்குள்ளே அறிய முற்படுவதே ஆன்மீகம் எனப்படுகிறது.
ஆன்மீகத் தேடலில் நாம் செய்யும் பயிற்சிகளே யோகப் பயிற்சி எனப்படுகிறது. எனது குரு குருவழியாக தான் கற்று ஞானமடைந்த யோகப் பயிற்சியை பல படிமுறைகளாக எமக்கு உபதேசங்களாக கற்றுக் கொடுக்கிறார். இவரது ஆச்சிரமம் இந்தியாவிலே தமிழ்நாட்டிலே போளிவாக்கம் எனும் கிராமத்திலே “பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை” எனும் பெயரில் அமைந்துள்ளது.
“கொடுக்கக் கொடுக்க குறைவது செல்வம் கொடுக்கக் கொடுக்க வளர்வது அறிவு” என்றொரு பழமொழி உண்டு. அதுபோல நான் விடயங்களை அறிந்து எழுத எழுத எனது ஆன்மீக அறியாமையும் சிறிது சிறிதாக மறைந்தது. எழுதினேன் நிறையவே எழுதி முடித்தேன். முதலில் குருவிடம் காட்டிவிட்டு,கனடாவில் இருந்து வெளிவரும் ஏதாவது பத்திரிகைகளில் வெளியிடலாம் என்று எண்ணினேன்.
குருவுக்கு அனுப்பி வைத்தேன். சிவா நீ நன்றாகவே எழுதியுள்ளாய். பத்திரிகையில் வெளிவந்தாலும் அது எல்லோரையும் போய்ச் சேராது எனவே அதனை ஒரு புத்தகமாக்கு என்று கூறினார்.
அப்போது எனக்குள் விபரிக்க முடியாத பல உணர்ச்சிகள் தேன்றியது. சினிமாவில் நான் பார்த்த மகாகவி காளிதாசன் என் நினைவில் வந்தார். மீண்டும் இருமுறை அந்தச் சினிமாவை பார்த்தேன். மிகவும் பிரமிப்பாக இருந்தது.
எமது கைகளில் எதுவும் இல்லை என்று நன்றாகவே புரிந்தது.
தமிழில் “ள” வுக்கும் “ழ” வுக்கும் எங்கே பாவிப்பது என்று சரியாகத் தெரியாத நான் ஒரு புத்தகம் எழுதுவதா என்று எனக்கே என்மீது கேலியாக இருந்தது. இங்கு நான் விஞ்ஞானத் தொழில் நுப்பத்தினையே முழுமையாகச் சார்ந்து இருந்தேன். அதுவே எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இன்றும் இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியினை சிலர் குறை கூறுகிறார்கள். கலாச்சாரச் சீரழிவுகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல குற்றச் செயல்களுக்கு இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் என்று குறை கூறுகிறார்கள்.
ஆனால் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியே பல கொலை, களவு, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களை வெளிக் கொணருகிறது. தண்டனை வாங்கிக் கொடுக்கிறது. பெண் அடிமை அடக்கு முறைகளை உடைத்து எறிந்து கொண்டிருக்கிறது. பல மக்களது அறியாமைகள் போக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
நான் ஆரம்பத்தில் குருவை ஒரு ஆன்மீகக் குருவாக மட்டுமே எண்ணி இருந்தேன். எழுத ஆரம்பித்ததில் இருந்து அவரை பல வடிவங்களில் அதாவது ஒரு தமிழ்ப் பண்டிதனாக, ஒரு தந்தையாக, ஒரு தத்துவாசிரியனாக, ஒரு சிறந்த நிர்வாகியாக, ஒரு ஆசானாக இப்படியாகப் பல கோணங்களிலும் கண்டு வியந்தேன். இவர் அடைந்த ஞானமே எல்லாவற்றிக்கும் காரணம் என்பதனையும் புரிந்து கொண்டேன். இவரில் என்னென்ன குறைகள் இருக்கும், என்னென்ன பலவீனம் இருக்கும் என்றும் அறிய முயன்றேன். என்னால் அவரிடம் உள்ள கோபத்தினைத் தவிர வேறு எந்தக் குறையையும் காணவே முடியவில்லை. காரணம் அவர் சாதாரண குரு அல்ல.
முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் மாதுளை, விளாம்பழம் போன்ற ஐந்து கனிகளை தேனில் கலந்து செய்த பஞ்சாமிர்தத்தினை சுவைக்கும் போது அவ்வப்போது கடிபடும் கனிகளுக்கு ஏற்றவாறு கிடைக்கும் சுவைபோல குருவின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது எனக்குப் பலவிதமான ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் என்னைச் செப்பனிட்டது.
இவ்வாறாக எழுதப்பட்ட “எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு” என்ற படைப்பினை சமர்ப்பித்திருந்தேன். ஆச்சிரமத்திலேயே புத்தகம் கிடைக்கும்.
நாம் அறியும், செய்யும் காரியங்கள் எம்முடனேயே நின்று விடக் கூடாது. அது பிறருக்கும் சென்று கிடைக்கவேண்டும். அது பலருக்கும் பயன் தர வேண்டும். அது மட்டுமல்ல ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் சதா ஆன்மீக எண்ணங்களுடேனே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று குரு எப்போது அறிவுறுத்துவார்.
அந்த அறிவுரை எனக்கு “சிவபதி” என்னும் இணையத் தளத்தினை நடாத்தும் எண்ணத்தினை உருவாக்கியது. எனது ஆன்மீகத் தேடலுக்கு உறுதுணையாக இருக்கின்றது. தேடிக் கொண்டிருக்கிறேன் எனது அறிவுக்கு எட்டியவாறு நான் அறிந்தவற்றினைப் பிறருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இவாறாக இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆச்சிரமம் சென்று குருவிடம் ஆசியும் உபதேசமும் பெறும் சந்தர்ப்பம் 2022 இல் எனக்குக் கிட்டியது. நான் சென்று ஆச்சிரமத்தில் தங்கிய முதன் நாள் அங்கு யாரும் வந்திருக்க வில்லை. குரு தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இன்றும் எனது மனதில் நிழலாடுகின்றது. அதாவது “வந்திட்டியா சிவா. அங்கு ஆச்சிரமத்தில் தங்கிக்கொள். அங்கு இன்று யாரும் இல்லை. உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. உனக்கு எழுத அது சிறந்த இடம்”. என்று கூறினார். மீண்டும் எழுதுவதா “சிவபதி” யில் கட்டுரை எழுதச் சொல்கிறாரா? எனக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஒரே முடிபு குரு முன்னர் அறிவுறித்தியது போல கண்டது, கேட்டது, அறிந்தது எல்லாம் எழுதலாம் என்று அக்கணமே முடிவெடுத்தேன். எழுதி “சிவபதி” என்ற இணையாத் தளத்தில் பிரசுரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். அங்கு பத்து நாட்கள் தங்கி இருந்து மீண்டும் கனடா திரும்பியதும் எழுத ஆரம்பித்து எழுதி முடித்தேன். வயதாக ஆக எல்லோருக்கும் வருவது போல ஞாபக மறதி எனக்கும் உண்டு. ஆனாலும் அந்த பத்து நாட்கள் அனுபவமும் எனது சிந்தையில் அழியாது இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனது கட்டுரையினை குருவுக்கு அனுப்பி வைத்தேன். சிவா கட்டுரை நன்றாக உள்ளது சிவபதியில் போட்டால் எல்லோரையும் சென்றடையுமோ தெரியாது அதனையும் புத்தகமாக்கு என்றார்.
“மீண்டும் ஒருமுறை பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் தரிசனம்” எனும் பெயரில் புத்தகமாகியது.
புத்தகத்திற்கு பெயர் வைப்பதிலேயோ அல்லது அட்டைப் படம் இடையில் வரும் படங்களிலோ குரு தலையிடுவதில்லை. மக்களுக்குச் சொல்லும் சேதிகள் புரியும்படி உண்மையாக உள்ளனவா என்பதிலேயே குருவின் முழுக் கவனமும் இருக்கும்.
நானும் எனது குரு யார், எனது குருவின் போதனைகள், சிந்தனைகள் எவ்வாறு படிப்பவர்களை உணர்ந்து திருந்தச் செய்யும். அவர்களது ஆன்மீக ஈடேற்றத்துக்கு எவ்வாறு உதவும் என்ற நோக்கத்துடனேயே எழுதினேன்.
குரு ஒருமுறை “சிவா புத்தகங்களை வாங்கிக்கொண்டு போய் படிக்கணும். அப்பத்தான் அது பயன் கொடுக்கும். நானும் எவ்வளவு எல்லாம் வீடியோவில் கூறுகிறேன். எல்லோருமே கேக்கிறாங்க. ஆனால் அதன்படி நடக்கிறாங்களா? நான் சொன்ன மாதிரி கேட்டு நடந்தால்த்தானே அது பிரியோசனமாகும். நானும் பாட்டுக்கு கத்திக் கொண்டிருக்கிறேன். யாரும் கண்டு கொள்ளுற மாதிரி எனக்குத் தெரியல்ல” என்றும் ஆதங்கப்பட்டார்.
ஆம் குரு கூறுவதும் உண்மைதான். ஆனாலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் குருவின் வீடியோக்களைப் பார்க்கலாம். ஆனால் நிட்சயமாக சில சீடர்கள் ஆன்மீகத்தில் முன்னேறிக் கொண்டுதான் இருப்பார்கள்.
ஆன்மீகப் பாதை, பயிற்சி என்பது ஒரு மிகப் பெரிய போராட்டம். மனதுடன் போராட்டம். சூழ்நிலையுடன் போராட்டம். சொந்த பந்தங்கள், பந்த பாசங்களுடன் போராட்டம். அத்தனையையும் தாண்டி விதியும் ஒத்துழைக்கும் போதே ஆன்மீகம் கைக்கூடும். அது பல பிறவிகளிலேயே ஞானம் அதாவது முக்தியைக் கொடுக்கும்.
நான் அண்மையில் எனது உறவுக்கார 22 வயது தம்பி ஒருவரைச் சந்த்தித்தேன். அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. அவர் ரமண மகரிஷியின் “who am I” என்ற புத்தகம் படித்ததாகக் கூறினார். குண்டலினி பற்றிக் கூறினார். தான் கைலாசம் போக விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூறினார். அவருக்கு அருகில் இருந்தவருக்கு ஒரு அறுபது வயதிருக்கும் குண்டலினி அப்படி என்றால் என்ன என்றார்.
அவர் போன பிறப்பில் ஆன்மீகத்தில் ஒரு நிலை வரை முன்னேறி இருந்ததே இப்பிறப்பில் மிக இளம் வயதிலேயே ஆன்மீக அறிவுடன் இருப்பதற்கு காரணமாகியது. இதுவே விட்ட குறை தொட்ட குறை என்பார்கள். அதாவது இப்பிறவியில் ஆன்மீகத்தில் எமது முன்னேற்றம் அடுத்த பிறவியிலும் அவ்விடத்தில் அதாவது விட்ட இடத்தில் இருந்து தொடரும் என்று பொருளாகும். அந்தத் தம்பியிடம் எனது குருவின் காணொளிகளை கேட்டு ஆன்மீக விடயங்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுத்தினேன்.
நீ அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்போதும் நீ மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ குறை கூறிகொண்டு இருக்கிறாயோ அதுவரை உன் ஆன்மீகப் பயிற்சி ஆரம்பமாகவில்லை என்று அர்த்தமாகும்.
நீ அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்பொழுது உன்னையே நீ குறைகூறிக் கொள்கிறாயோ அப்போது உன் ஆன்மீகப் பயிற்சி நடைபெறுகிறது என்று அர்த்தமாகும்.
நீ அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்பொழுது நீ மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ அல்லது உன்னையோ குறைகூறவில்லையோ அப்பொழுது உன் ஆன்மீகப் பயிற்சி நிறைவு பெறுகிறது என்று அர்த்தமாகும்.
ஞான உபதேசங்கள் பற்றி ஐயா குறிப்பிடும்பொழுது “இந்த மனசை அழித்து ஆன்மாவை உடலில் இருந்து பிரித்தெடுத்து, அப்புறம் அந்த ஆன்மாவை இறைவனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் இறைவனுடன் கலந்திருக்கும் அந்த ஆன்மாவில் இருந்து திரும்பவும் மனம் பிரிந்து வந்துதான் உபதேசங்கள், அறிவுரைகள், பாடல்கள் எல்லாம் இவ்வுலகத்திற்குக் கூறும். அப்பத்தான் நீ உண்மையான போதனைகள் செய்யமுடியும்” என்ற குருவின் வார்த்தைகளில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன. ஐயாவின் ஆணித்தனமான ஆன்மீகக் கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதனை எனக்கு முழுமையாக உணர்த்தியது.
இப்படியாக எமக்கு ஆன்மீக விளக்கங்கள் கொடுத்தவர்களாக உதாரணமாக அகத்தியர், திருமூலர், திருவள்ளுவர், ஒளவையார் இப்படியாகப் பல சித்தர்கள் முனிவர்களைக் கூறமுடியும். இவர்களது வரிசையில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகளையும் ஒருநாள் இந்த உலகம் இணைத்துக் கொள்ளும்.
ஆச்சிரமத்தில் இருந்து வெளிவரும் ஏனைய புத்தகங்களை பின்வரும் லிங்க் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
— அன்பே சிவம் —