கேள்வி பதில் பகுதி 5 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

0 0
Read Time:25 Minute, 27 Second

கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால் என்ன சாபம் என்றால் என்ன ஐயா?

குரு: வரம் என்றால் நன்மை. சாபம் என்றால்த் தீமை. வரம் என்றால் பிறர் உன்னை வாழ்த்துவது. சாபம் என்றால் பிறர் உன்னைத் திட்டுவது. வரமும் வாழ்க்கைக்கு உதவும். சாபமும் வாழ்க்கைக்கு உதவும்.

குழந்தை இல்லை, மனைவி கணவனுடன் வாழ முடியவில்லை, கணவன் மனைவியுடன் வாழ முடியவில்லை, உடலில் நோய் துன்பம் இது எல்லாம் சாபம். எதோ ஒரு தலைமுறையிலை யாரிடமிருந்தோ நீ பெற்றுக்கொண்ட சாபம்.

ஒருவன் பிச்சை எடுக்கிறான் பல பிள்ளைகள் பெத்து எடுக்கிறான். அது அவன் பெற்ற வரம். ஒருவன் கோடி கோடியாகப் பணம் வைத்திருக்கிறான் ஆனால்ப் பிள்ளைகளே இல்லை அது அவனுக்குக் கிடைத்த சாபம். அதுதான் வரத்துக்கும் சாபத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.

ஒருபோதும் பிறரது குறைகளைப் பழிக்காதே. பிறறைத் துன்புறுத்தாதே. முக்கியமாக விலங்குகளைத் துன்புறுத்தாதே. அவற்றால் தமது துன்பங்கள் பிறருக்குக் கூற முடியாது. அவை படும் துன்பமும் உனக்குச் சாபமாக மாறும்.

உதாரணமாக ஒரு எருதை, கழுதையை தகுந்த உணவோ அல்லது இளைப்பாற நேரமோ ஒதுக்காமல் உனது தேவைக்குப் பயன்படுத்தினால் அது படும் துன்பம் உனக்குச் சாபமாகும். காட்டில் சுதந்திரமாக வாழும் மிருகங்களைப் பிடித்து வந்து கம்பிக் கூட்டுக்குள் அடைத்து வைத்து நீ வேலை வாங்கினால் அவை படும் துன்பம் உனக்குச் சாபமாகும். அடுத்த பிறவியில் நீ கம்பி எண்ணுவாய் (மறியலில் இருப்பாய்). ஒரு மீனைப் பிடிக்க வலை வீசுகிறாய் தூண்டில் போடுகிறாய். தூண்டில் வீசும்போது அது நீ எறியும் தூண்டிலில் இருக்கும் இரையை நம்பி வந்து விழுங்க அந்த இரை குத்தியுள்ள முள்ளு அதன் தொண்டையில்ச் சிக்கும். அது படும் பாடு உனக்குத் தெரியுமா. அது போடும் சாபம் உனக்கு தொண்டையில் புண் வந்து நீ சாப்பிட முடியாமல் அவதிப்படுவாய். அது அந்த மீன் பட்ட வேதனை. அதனால் உனக்கு வந்த சாபமாகும். காட்டில் விலங்குகளை வேட்டை ஆடுகிறாய் கல்லெறிந்தோ அல்லது ஈட்டியால்க் குத்தியோ அல்லது துப்பாக்கியால்ச் சுட்டோ அந்த விலங்கைக் கொன்று உண்ணுகிறாய். அந்த விலங்கு பல குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் ஒரு தாயாக இருக்கலாம். அல்லது ஒரு ஆணினதோ அல்லது ஒரு பெண்ணினதோ அன்பானதாக (துணையாக) இருக்கலாம். அப்போ அந்த விலங்கு உன்னால் இறந்து போக அதன் குட்டிகள் அல்லது அதன் இணை படும் பாடு அவை படும் வேதனை உனக்குச் சாபமாகும். அடுத்த பிறவியில் நீ துணையின்றி அல்லது தாய் தந்தையரின்றி அனாதையாக சொந்த பந்தம் இன்றி அநாதரவாக வாழ்வாய். எனவே எண்ணிப்பார். அதனால எந்தப் பாவமும் செய்யாதே. முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவிசெய். அதுதான் உன்னைக் காக்கும்

வீட்டில நாய் பூனை வளர்ப்பீர்கள். அது குட்டி போடாதவாறு கருத்தடை செய்வீர்கள். நாம்பன் மாட்டுக்கு நலம் அடித்து காமம் வராமல்ப் பார்த்துக்கொள்கிறீர்கள். அதெல்லாம் பாவம் தானே. இந்தப் பாவத்தையெல்லாம் நீயும் உன் சந்ததியும்தானே அனுபவித்துக் கழிக்க வேண்டும். சிந்தித்துப்பார். இப்படிப்பட்ட பாவங்களை நீயும் செய்யாதே பிறருக்கும் அறிவுரை கூறு.

காட்டில சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளியை சில பறவைகளை பிடித்து வந்து அதன் இறகுகளை வெட்டி விட்டு கூண்டில வைத்து அழகு பார்க்கிறாய். அது போடும் சாபம் தான் அடுத்த பிறப்பிலே ஊனமாகப் பிறக்கிறது. சற்றுச் சிந்தித்துப்ப் பார் நீ அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் உனக்குப் புரிய வரும்.

ஏழைகளை, பலவீனமானவர்களை, அனாதரவானவர்களை, சிறுவர்களை ஒருபோதும் உனது தேவைகளுக்காக துன்புறுத்தாதே. அது உனக்கு உடனடியாய் நன்மை போலத் தோன்றலாம். அவர்களால் உனக்கு தொழிலில் லாபம் கிடைக்கலாம். ஆனால் அவர்கள் படும் வேதனை, அவர்கள் விடும் கண்ணீர் உனக்கு கிடைக்கும் சாபமாகும். நீ அவற்றை அனுபவித்தே தீரவேண்டும் என்பதுதான் விதி.

இதைத்தான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று சொல்லுவார்கள். அதாவது நீ செய்யும் பாவங்களையும் புண்ணியங்களையும் நீ இப்பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ அனுபவிப்பாய் என்று அர்த்தமாகும்.

சாபம் தீர வேண்டுமா புண்ணியம் செய். தான தருமம் செய். அன்னதானம் செய். ஏழைகளுக்கு, பசித்த வயித்துக்கு உணவு கொடு அதுதான் சாபத்தைப் போக்கும் வழி.

வினை வித்தைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

கேள்வி: துறவறம் என்றால் என்ன சாமி?

குரு: வீட்டை விட்டு ஓடிப்போவது குடும்பத்தை விட்டு ஓடிப்போவது அல்ல துறவறம். துறவறம் என்பது ஒருவன் தனது மனதில் உள்ள ஆசைகளைத் துறப்பதுதான் துறவறம். வீட்டில் வாழ்ந்தால் என்ன காட்டில் வாழ்ந்தாலென்ன ஒருவன் தனது ஆசைகளைத் துறக்காதவரை அவன் துறவியாகமாட்டான்

கேள்வி: அறிவுக்கும் ஞானத்துக்கும் வித்தியாசம் என்ன ஐயா?

குரு: அறிவு தான் ஞானம் ஞானம் தான் அறிவு. அஞ்ஞாத்துக்கும் ஞானத்துக்கும் தான் வேறுபாடு. அதாவது தெளிவானவன் ஞானி. தெளிவற்றவன் அஞ்ஞானி. தெளிவானவன் அறிவாளி, தெளிவற்றவன் அஞ்ஞானி. அதனால்த்தான் தெளிந்தவனைச் சித்தன் என அழைக்கிறோம். அறிவு என்றால் சித்தம் என்று பெயர். சித்தன் என்றால் அறிவாளி என்று அர்த்தம். அதாவது இதுதான் கடவுள் இதுதான் கடவுளை அடையும் வழி என தெளிவாக இருப்பவன் சித்தன்.

கேள்வி: ஞானம் என்றால் என்ன அர்த்தம் ஐயா?

குரு: உண்மையான ஞானம் என்றால் “பற்றற்று பற்றற்றவனைப் பற்றிக்கொள்” அதுதான் ஞானம். அதாவது உன் மனதில் பற்று இல்லாமல்ப் போனால்த்தானே அந்தப் பற்றற்றவனைப் பிடிக்க முடியும். உன் மனதில் உள்ள பற்றுக்களை அழித்தால் அதுதான் ஞானம். பற்றுக்களை அளிக்கும் வழிதான் யோகம் அதாவது யோகப்பயிற்சி.

கேள்வி: ஐயா யாகம் பண்ணுவதால் பாவங்கள் தீருமா?

குரு: பாவங்கள் தீராது யாகம் என்பது வெளிப்படையாக தீ மூட்டி அதில் நகை துணி போட்டு எரிப்பது. அப்படியானால் நீ பாவம் செய்தியா அல்லது தீயில் போடப்படும் உனது உடை அல்லது நீ அணியும் நகை பாவம் செய்ததா? அது வெறும் மனத் திருப்திக்காகச் செய்துகொள்வது. உண்மையில் உனது யாகத் தீயை உனக்குள்க் கொழுத்து அதாவது யோகப் பயிற்சியால் உனக்குள் தீயை மூட்டி உனது குண்டலினி சக்தியை மேலெழுப்பு உனது பாவங்கள் தீரும். அதுதான் உண்மையான யாகம்

கேள்வி: ஐயா சாமியாரிடம் போனால் எமது தலைவிதியை மாற்ற முடியுமா?

குரு: எந்தச் சாமியாராலும் எவன் தலை விதியையையும் மாற்ற முடியாது. அவன் தலைவிதியே சரி இல்லாத படியாலதானே அவன் சாமியாராகிப் போய் இருக்கிறான். அப்படிப்பட்டவனால எப்படி உன் தலை விதியை மாற்ற முடியும். சற்று சிந்தித்துப்பார். அப்படி யாராவது சொன்னால் அந்தச் சாமியார் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். யாராலும் யார் தலை விதியையும் மாற்றவே முடியாது. ஆனால் ஒரு சாமியாரால ஒரு ஞானியால உன் விதியை மாற்ற யோசனை சொல்ல முடியும்.

உனக்கு ஒரு பிரச்சினை வந்தால் அது எப்படி வந்தது ஏன் வந்தது என்று ஆராய்ந்து பார்த்து அதனைத் தீர்க்கப் பார். அதுதான் உன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நல்ல வழி.

கேள்வி: வாஸ்த்து சாத்திரப்படி வீடு, கட்டிடம் கட்டுவதால் நன்மை உண்டா ஐயா?

குரு: எந்த நன்மையும் கிடையாது. அது உனது மனத் திருப்திக்காகச் கட்டப்படுவது. வீடு கட்டுபவர்கள் எல்லோரும் வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்துத்தானே வீடு கட்டுகிறார்கள். எல்லோருமே திருப்ப்தியாக வாழ்ந்துள்ளார்களா? நோய் நொடி இல்லாமல் வாழ்கிறார்களா? அப்படி எதுவும் கிடையாது. நீ நல்ல எண்ணங்களோடு தான தருமம் செய்து அடுத்தவனைத் துன்புறுத்தாமல் வாழ்ந்துகொள் அதுதான் உனக்கு நன்மையைத் தரும்.

கேள்வி: கோவில் சென்று அருச்சனை பூசைகள் செய்வதால் பலன் உண்டா ஐயா?

குரு: அது ஒரு நம்பிக்கை. உனக்கு ஒரு திருப்த்தி கிடைக்கும் அவளவுதான். கடவுள் வழிபாடு என்றால் கடவுள் முன்னாடி போய் நீ சும்மா அமைதியாக நிக்கவேணும் அது தான் கடவுள் வழிபாடு. படைத்தவனுக்குத் தெரியும் உனக்கு என்ன கொடுக்க வேணும், எப்ப கொடுக்கவேணும், எப்படிக் கொடுக்க வேணும் எண்டு. அதை விடுத்து கடவுள் முன்னாடி போய் நின்று எனக்கு அது வேணும் இது வேணும் என்றெல்லாம் கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. உதாரணமாக குழந்தை தாயிடம் போய் அது வேணும் இது வேணும் என்றெல்லாம் அடம்பிடிக்கும் ஆனால்த் தாய்க்குத் தெரியும் எதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்று. அப்படித்தான் கடவுளும். கடவுளை நீ உள்ளம் உருகி உன்னை மறந்து வழிபடனும் அதுதான் கடவுள் வழிபாடு.

கடவுள் வழிபாடு என்றால் உன் மனது எப்பவும் கடவுள் சிந்தனையுடனேயே இருக்க வேண்டும். அதாவது நீ உனது அன்றாடக் கடமைகளை ஆற்றிக்கொண்டிரு அதே நேரம் உனது சிந்தனை எப்பவும் கடவுள் மேலேயே இருக்க வேண்டும். உதாரணமாக கிராமத்தில பெண்கள் கூட்டமாகப் போய் குளத்தில, ஆத்தில இருந்து குடத்தில தண்ணி எடுத்து வருவார்கள். அவர்கள் தண்ணி எடுத்து குடத்தை தலையில் வைச்சுக் கொண்டு ஏனையவர்களுடன் பேசியபடி நடந்து வருவார்கள். அவர்கள் என்னதான் சம்பாசணை செய்தாலும், ஏற்ற இறக்கமான பாதையில் நடந்து வந்தாலும் அவர்கள் கவனம், எண்ணமெல்லாம் அந்தத் தலையிலுள்ள குடத்தின் மேலேயே இருக்கும். அதுபோல நீயும் உனது சிந்தனைகளை கடவுள் மேலே வைத்தபடி உனது கடமைகளைச் செய்துவா. அதுதான் உன்னை கடவுள் கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கும்.

கடவுள் வழிபாடு பற்றி சிவவாக்கியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சிவவாக்கியம்-130
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் கலைநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே.


பருத்திநூல் முறுக்கி விட்டு அதாவது பஞ்சினால் முறுக்கிய கயிற்றினை முறுக்கி (துணி, கயிறு, பூணூல்) வெளிப்புறமாக அணிந்துகொண்டு மந்திரங்கள் சொல்லி செய்யும் வழிபாடெல்லாம் பஞ்சுபோல காத்திலேயே பறந்து போய்விடும் அதை விடுத்து உனக்குள் இருக்கும் “இடகலை பின்காலை சுழுமுனை” ஆகிய மூன்று நாடிகளையும் முறுக்கிவிடக் கற்றுக் கொண்டால் உன் துன்பெமெல்லாம் நீங்கிவிடும். அதை உணர்ந்துகொள். வெளியில் அணியும் நூல் உன்னைக் காக்காது. ஆனால் உள்ளே இருக்கும் நூலைத் திரிக்க கற்றுக் கொண்டால் அது எப்பவும் உனக்குத் துணை புரியும். கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே ‘சிவயநம’ என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள். என்று விளக்குகிறார். அதாவது உள்ளே இருக்கும் நூலைத் திருகும் வழிமுறைதான் சித்தர்கள் அருளிய யோகப் பயிற்சி முறையாகும்.

கேள்வி: ஐயா நல்வினை செய்தாலும் பிறப்புண்டு தீவினை செய்தாலும் பிறப்புண்டு, இரண்டும் செய்யாமல் வாழ முடியாது. அப்ப என்ன செய்ய வேண்டும்.

குரு: நீ எப்பவும் நன்மையே நினை நன்மையே செய். அது உன்னை நல்வழியில் கொண்டுபோகும். அடுத்த பிறப்பும் உன்னை நல்ல பாதையிலேயே கொண்டு செல்லும். அதை விடுத்து நீ தீமை செய்தியாக இருந்தால் நீ நல்ல பாதையில்ச் சென்று கொண்டிருந்தாலும் அது உன்னைத் தப்பான பாதைக்கு எடுத்துச் செல்லும். அதனால உனக்குத் தீமையே துன்பமே ஏற்படும். எமது செயலுக்கு ஏற்றவாறுதான் எமது வாழ்க்கை அமையும். அதனால எப்பவும் நன்மை செய்யுங்கள் நீங்கள் இப்போ துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் அது ஒரு நாள் நீங்கிவிடும். தீவினை செய்யும்போது அது உடனடியாக இன்பம்போலத் தெரிந்தாலும் அது சீக்கிரம் உங்களது துன்பத்திலேயே கொண்டுபோய்ச் சேர்க்கும்.

கேள்வி: ஜோசியம் யாதகம் மீது நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். அது எல்லாம் உண்மையா.

குரு: ஜாதகம் கணித்த காலங்கள் மாறிப்போச்சுது. அதாவது அந்தக் காலத்தில் ஊர்ல அப்பப்ப ஒரு பிள்ளை பிறக்கும். அப்ப ஒரு பிள்ளை பிறக்கும்போது அந்த இடத்தில் நன்கு கற்றறிந்த ஜோசியரும் இருப்பார். குழந்தை பிறந்த உடனேயே அதன் ஜாதகத்தைக் கணித்து விடுவார். அதில் கணிப்பு சரியாக இருக்கும். ஆனால் இந்தக் காலத்தில ஒரு நேரத்தில ஒரு வைத்திய சாலலையில் பல பிள்ளைகள் பிறக்கின்றன. அதனால்ப் பல ஜோஸ்யர்கள் தேவைப்படுகிறார்கள்.  எல்லா ஜோசியரும் முறைப்படி ஜாதகம் கற்றவர்கள் என்று கூறமுடியாது. அதனால் கணிப்புகள் தப்பாகின்றன. மக்களுக்கும் ஜாதகத்தின் மீதான நம்பிக்கையும் குறைந்து விட்டது.

கேள்வி: ஐயா பேய் பிசாசு என்பதெல்லாம் உண்மையா அப்படி உள்ளதா?

குரு: பேய் பிசாசு இருக்கட்டும் இல்லாமல்ப் போகட்டும். எல்லாம் உன் மனநிலை தானப்பா தங்கியுள்ளது. நீ நம்பினால் அது இருக்கு நம்பாவிட்டால் அது இல்லை அவளவுதான்.

உதாரணமாக ஒரு போட்டி வைத்து இரவில் சுடுகாட்டுக்குத் தனியாகப் போய் அங்குள்ள ஒரு மரத்தில்க் கட்டி வைத்துள்ள ஒரு பணப்பையை எடுத்து வராகி சொன்னால் துணிந்தவன் இந்தப் பயமும் இல்லாமல்ப் போய் எடுத்து வந்து விடுவான். ஆனலப் பயந்தவனோ பணம் தேவை என்ற மனநிலையில் பயந்து பயந்து போய் கண்டதை எல்லாம் கண்டு பயந்து கடைசியில் யுரம் வந்து படுத்துவிவான். இதைத்தான் வித்தியாசம்.

ஒரு குட்டிக் கதை

ஒரு கிராமத்தில் ஒருவர் தனக்கு எதற்கும் பயம் இல்லை என்று எப்போதும் மார்தட்டிக் கொள்வார். பிறரைப் பயந்தவர்கள் எனக் கூறி கிண்டலடிப்பார், ஒருநாள் சிலர் அவரை அழைத்து நடுச் சாமத்தில் அங்குள்ள சுடுகாட்டுக்குச் சென்று அங்குள்ள ஒரு ஆலமரத்தில் ஆணி அடித்துவிட்டு வரவேண்டும். உன்னால் முடிந்தால் நாம் ஒரு தொகை பணம் உனக்குத் தருகிறோம் என்று பந்தயம் வைத்தார்கள். அவரும் ஒப்புக்கொண்டார். நடுச்சாமம் கடும்இருட்டு அத்துடன் அன்று காற்றும் மழையுமாக இருந்தது. அந்தத் துணிந்தவர் ஒரு ஆணியும் சுத்தியலும் கொண்டு மயானம் நோக்கிப் புறப்பட்டுச் சென்று அந்த ஆலமரத்தில் ஆணி அடித்தார். அடித்துவிட்டுத் திரும்பும்போது அவரது வேட்டியை யாரோ இழுத்துப் பிடிப்பதை உணர்ந்தார், அவ்வளவுதான் நன்றாகப் பயந்து விட்டார். தனது வேட்டியையும் கழற்றிவிட்டு ஓடத் தொடங்கினார்.

அப்படியே தனது வீட்டுக்கு ஓடி சென்று பயத்தால் நடுங்கியபடி படுத்துவிட்டார். அடுத்தநாள் போட்டிக்கு அழைத்தவர்கள் அந்த மயானத்துக்குச் சென்று பார்த்தபொழுது அவர் ஆணி அடிக்கும்போது அவர் கட்டியிருந்த வேட்டித் தலைப்பையும் வைத்து மரத்தில் அடித்துவிட்டார் என்று கண்டுகொண்டார்கள். அவர்கள் நடந்த சம்பவத்தை அவருக்கு விளக்கிய போதும் அவரால் அந்தப் பயத்தில் இருந்து மீளமுடியாமல்ப் போய்விட்டது. அப்போ அங்கே பேய் இருந்ததா அல்லது அவரது மனநிலை காரணமா.

இன்னொரு நடந்த சம்பவம்.

அது ஒரு மருத்துவக் கல்லூரி. புது மாணவர்கள் கல்வி கற்பதற்காக வந்திருந்தார்கள். அப்போது பழைய மாணவர்கள் புது மாணவர்களை அழைத்து அங்குள்ள பரிசோதனைச் சாலையில் உள்ள ஒவ்வொரு பிரேதத்தின் வாயிலும் ஒவ்வொருவராகச் சென்று இனிப்பு வைத்துக் கொண்டு வருமாறு கூறினார். அதற்கிணங்க ஒரு மாணவன் ஒவ்வொரு பிரேதமாக வாயில் இனிப்பு வைத்துக்கொண்டு வரும்போது ஒரு பிரேதம் எனக்கு இன்னொரு இனிப்புத்தா என்று கேட்டது. அவ்வளவுதான் அந்த மாணவன் அவியிடத்திலேயே   மயங்கி விழுந்துவிட்டான். அந்தப் பிரேதங்களுடன் பழைய மாணவர்களில் ஒருவன் படுத்திருந்தான் என்பது அந்தப் புதிய மாணவனுக்குத் தெரியாமல்ப் போய்விட்டது. அப்போ அந்த மாணவன் மயங்கி விழுந்ததற்கு அவனது பயம் தான் காரணம். அங்கு பேயோ பிசாசோ இருக்கவில்லை. ஆனால் அவன் அப்படி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். சத்தம் கேட்டதும் மயங்கிவிட்டான்.

இதைத்தான் “மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

எனவே நீ பயப்படாமல் இரு யாரையும் பயப்பிடுத்தாமல் இரு.

கேள்வி: ஆன்மீகப் பாதையில் உடல் நலத்தின் பங்கு என்ன சாமி.

குரு: ஒருவன் ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் அவனது உடல் நிலை ஒத்துழைக்க வேண்டும் அவனது குடும்பம் ஒத்துழைக்க வேண்டும். அவனது சூழ்நிலை ஒத்துழைக்க வேண்டு. அப்படியாக இருந்தால்த்தால் அவனால் ஆன்மீகப் பயிற்சிகள் செய்து முன்னுக்கு வர முடியும். ஆன்மீகப் பாதை என்பது ரொம்பவும் கடினமான பாதை. யோகப் பயிற்சியின்போது பல உடல் உபாதைகளைச் சகிக்க வேண்டிவரும்.

கேள்வி: ஐயா 18 சித்தர்கள் என்று கூறுகிறோமே அப்போ இதுவரை 18 சித்தர்கள்தான் இருந்திருக்கிறார்களா? அதன் பொருள் என்ன ஐயா?

குரு: சித்தர்கள் பதினெட்டு அல்ல ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள் 18 என்பது 18 தத்துவங்களைக் குறிக்கிறது. அதாவது மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது. அதனால் அதனைப் 18 புராணம் என் அழைக்கிறோம். ஐயப்பன் கோவிலில் 18 படிகள் வைக்கப்பட்டுள்ளது. அப்போ அந்த 18 என்பது எதனைக் குறிக்கிறது. அது 18 தத்துவங்களைக் குறிக்கிறது. அந்தப் பதினெட்டுத் தத்துவங்களும் என்னவென்றால் நான்கு வேதங்கள் (இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள்) + அத்துடன் ஆறு சக்கரங்கள் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) + எட்டுக் குணங்கள் (ஆசை, பாசம், காமம், குரோதம், லோபம் (சுயநலம்), கர்வம் (ஆணவம்), பொறாமை, வஞ்சனை) ஆகிய இந்தப் பதினெட்டுக் குணங்களும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அதுதான் 18 என்று குறிப்பிடப்படுகிறது.

கு சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %