சம்பிரதாயம்
காவேரி ஆற்றங்கரையில் ஒரு முனிவர் ஆச்சிரமம் அமைத்து ஆன்மீகத் தொண்டுகள் ஆற்றி வந்தார். அவர் ஆச்சிரமத்தில் பல சீடர்கள் வந்து அவரிடம் ஆன்மீகம் கற்று வந்தனர். அந்த முனிவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அது ஒரு வெள்ளைப் பூனை. அந்தப் பூனை எப்போதும் அந்த ஆச்சிரமத்தில் இருக்கும் சீடர்களிடம் சென்று விளையாடிக் கொண்டிருக்கும். அவர்களது மடியில் சென்று படுக்கும். அது சில வேளைகளில் பாடம் நடாத்தும்போது தொந்தரவாக இருக்கும். அதனால் அந்த முனிவர் பாடம் நடாத்தும் வேளைகளில் அந்தப் பூனையை அந்த ஆச்சிரம வாசலில் உள்ள ஒரு மரத்தில் கட்டி விடுவார். அப்படியாக தினமும் பாடம் நடாத்தும் வேளைகளில் பூனையை மரத்தில் கட்டி விடுவது வாடிக்கையாகி விட்டது. அங்கு பல புதிய சீடர்கள் வந்து பாடம் படிக்கும் வேளைகளில் பூனை எதற்காகக் கட்டப்படுகிறது என்ற விளக்கம் இல்லாமலே பூனை கட்டப் படுவதனைப் பார்த்து அவர்கள் பாடம் நடத்தும் வேளைகளில் ஒரு பூனை அதுவும் வெள்ளைப் பூனை கட்டப்பட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள்.
அப்படியாக அவர்கள் அங்கு பாடம் பயின்று பின்னர் தாம் குருவாகி ஆச்சிரமம் அமைத்து, வரும் சீடர்களுக்கு பாடம் நடாத்தும் வேளைகளில் ஒரு வெள்ளைப் பூனையை வாசலில் கட்டி வைப்பதனை வழக்கமாகக் கொண்டார்கள். அதுவே காலம் காலமாக தொடர்ந்தது.
அதாவது ஆன்மீகப் பாடம் நடத்தும் வேளைகளில் ஆச்சிரம வாசலில் ஒரு வெள்ளைப் பூனை கட்டப்பட வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையை சம்பிரதாயம் ஆக்கிக் கொண்டார்கள்.
இதுவே மூட நம்பிக்கை என அழைக்கப்படுகிறது. நாமும் சில வேளைகளில் காரணம் தெரியாமல் சில சம்பிரதாயப் பழக்க வழக்கங்களை ஆற்றுகிறோம்.
எமது சில சம்பிரதாயங்கள், சில பழக்க வழக்கங்கள் இப்படியாகவே உருவாகியது. காரணம் தெரியாமல் இன்றளவும் பின்பற்றப் படுகிறது.
இருந்தும் சம்பிரதாய பழக்க வழக்கங்கள், சில மூட நம்பிக்கைகள் ஒருபோதும் எவருக்கும் தீமை செய்யாது.
— அன்பே சிவம் —