தலைவிதியும் (ஊழ்வினை) பரிகாரமும்

0 0
Read Time:36 Minute, 48 Second

ஊழ்வினை என்றால் தலை எழுத்து அல்லது கருமா அல்லது தலைவிதி என்று அர்த்தமாகும். இதனையே வினைப்பயன் அல்லது கர்மவினை எனவும் ஆன்மீகவாதிகள் அழைப்பர். ஆங்கிலத்தில் இது ‘Fate’ எனப்படுகிறது.

நாம் அன்றாடம் செய்யும் நல்ல செயல், தீய செயல் எல்லாமே நம்மிடத்தில் பதிந்து காலம் வரும்பொழுது அதற்கேற்ற பாவ, புண்ணிய பலன்களை அனுபவிப்பது தான் ஊழ்வினை எனப்படும். கர்மாவை நாம் அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். அதை அனுபவிக்காமல் நம் பிறவி முழுமை அடையாது. ஒரு பிறவியில் அந்தப் பாவபுண்ணியங்கள் தீர்க்க முடியாமல் போய்விட்டால் மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுக்கும் நிலை ஏற்படும். இதுவே பிறவிப்பிணி என வேதம் கூறுகிறது. பிணி என்பது துன்பம் அல்லது நோய் என்று அர்த்தமாகும். அதாவது ஒரு ஆன்மா இவ்வுலகில் எடுக்கும் ஒவ்வொரு பிறவியும் அது அனுபவிக்கும் துன்பமாகும் என்று அர்த்தமாகும்.

ஊழ்வினை என்பது ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் கருமங்களால் தன் தலைவிதியை தானே தேடிக் கொள்வதாகும். ஒருவர் கருமா இன்னொருவருக்குச் சேராது. அதேபோல அவரவரே தனது கருமாவை தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கருமாவை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் ஒருவரது கருமாவத் தீர்க்க வழிவகை கூற முடியும். அதாவது ஒருவரது பசியை இன்னொருவர் உணவருந்தித் தீர்த்து வைக்க முடியாது. தனது பசியைத் தானே உணவருந்தி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல ஒருவருடைய கருமாவும் அப்படித்தான்.

ஊழ்வினை என்பது ஒரு ஆன்மாவானது அது எந்த உயிரினமாக இருந்தாலும் இந்தப் பூமியில் பிறந்து வாழும் பொழுது செய்த கருமங்களால் தேடிக்கொண்டது. அதனால் பாவ புண்ணியத்தை இந்தப் பூமியிலேயே பிறந்து அனுபவித்துத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று வேதம் கூறுகிறது.

விஞ்ஞானி நியூட்டனின் மூன்றாவது விதி “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமனும் எதிருமான எதிர்வினை உண்டு” என்று கூறுகிறது. அதாவது ஒரு பந்தை ஓங்கி சுவற்றில் அடிக்கிறீர்கள் இது ஒரு வினை. எதிர் வினையாக பந்து உங்களை நோக்கி வருகிறது. இதுவே இந்த விதியின் தத்துவமாகும். இந்தத் தத்துவம் கரும வினைக்கும் பொருந்தும். கர்மவினையில் ஒரு வினைக்கு எதிர்வினை உடன் (அதே பிறவியிலேயே) செயல்பாட்டுக்கு வரலாம். அல்லது சிறிது காலத்திற்குப் பின் வரலாம். அல்லது அடுத்த பிறவியில் கூட வரலாம். எப்படியும், நல்லதோ, கெட்டதோ ஒரு செயலின் விளைவுகளை ஊழ்வினை மூலமாக அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இறைநீதி. இதனையே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, என்றும் “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” ஆகிய பழமொழிகள் குறிப்பிடுகின்றன.

“நீ அளித்த தானமும் தர்மமும், நீ செய்த பாவமும் புண்ணியமும், நீ கொடுத்த மதிப்பும் மரியாதையும், நீ செய்த சூழ்ச்சியும் துரோகமும், ஒரு நாள் உன்னைத் தேடிவந்து நீ செய்ததை விடச் சிறப்பாகச் செய்து விட்டுப் போகும்.” என்று பகவத் கீதை கூறுகிறது.

எமது பிறப்பில் இருந்து இறப்பு வரை எம்மை வழி நடாத்துவது எமது தலைவிதியே ஆகும் என ஆகமங்களும் இதிகாசங்களும் எமக்கு எடுத்துரைக்கின்றன. அழிவில்லாத ஆன்மா தான் செய்த கரும வினைக்கு ஏற்றவாறு அதாவது தனது முற்பிறப்பில்ச் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு இப்புவியில் பிறப்பெடுக்கின்றது. அதாவது இப்புவியில்ப் பிறப்பெடுப்பது தான் செய்த பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காகவே என்பது தான் உண்மையாகும்.

நாம் நன்மை செய்திருந்தாலும் அதனைக் தீர்க்கப் பிறப்புண்டு அதுபோல நாம் தீமை செய்திருந்தாலும் அதனைத் தீர்க்கப் பிறப்புண்டு. எனவே “எதுவுமே செய்யாமல் எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிடு” என்று கூறுகிறது பகவத் கீதை. ஆனால் ஒரு உயிரினம் எதுவுமே செய்யாமல் வாழ முடியாது என்பதுதான் இப்புவியில் இயற்கை நியதி. அதாவது ஒரு உயிரினத்தால் உணவு அல்லது நீர் இன்றி வாழவே முடியாது. உணவுத் தேவைக்கான போராட்டத்திலேயே ஒவ்வொரு உயிரினமும் பாவம், புண்ணியம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதனால் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பதுதான் உண்மையாகும்.

விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது. விதியை அனுபவித்தே தீர்க்கவேண்டும் என்று சாத்திரங்களும் புராணங்களும் கூறுகின்றன. இங்கு விதி என்பது எமது விதியை நாமே தேடிக் கொள்வதாகும். அது இறைவனால் எமக்குக் கொடுக்கப்படுவதல்ல. அதாவது நாம் இன்பங்களையோ அல்லது துன்பங்களையோ அனுபவிக்கும்போது இறைவன் ஏன் இப்படி தண்டிக்கிறான் என்று மனம் நொந்து கொள்வதால் எப்பயனும் இல்லை. அதை விடுத்து நாம் தேடிக்கொண்டதை நாம் அனுபவிக்கிறோம் என்று எண்ணி அதற்கு என்ன பரிகாரம் செய்து நிவர்த்தி செய்யலாம் என்று எண்ணிக் கொள்வதே பலன் கொடுக்கும்.

வேதங்கள் ஊழ்வினையை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளன. இந்து மதம் இதனை மூவினைத் தத்துவம் என விளக்குகிறது. அவையாவன

  1. தொல்வினை (சஞ்சித கர்மா)
  2. நுகர்வினை (பிராரப்த கர்மா)
  3. வரும்வினை (ஆகாமிய கர்மா)

தொல்வினை

தொல்வினை என்பது தொன்மையான அதாவது பழைய வினை முற்பிறப்பில்ச் செய்த வினை என்று அர்த்தமாகும். ஒரு ஆன்மாவானது முற்பிறப்புகளில் தான் செய்துகொண்ட நல்வினை தீவினைகளின் பயனாக அதாவது செய்த பாவ புண்ணியங்களால் சேகரித்துக்கொண்ட வினையே தொல்வினை எனப்படும். ஆன்மாவானது தொல்வினையை அனுபவிப்பதற்காகவே அதாவது தீர்த்துக் கொள்வதற்காகவே மீண்டும் பிறப்பெடுத்து அனுபவித்துத் தீர்த்துக் கொள்ளும் என இந்து தர்மம் விளக்குகிறது.

அதாவது வினையில் நல்வினையும் இருக்கும் தீய வினையும் இருக்கும். இதற்கு ஒரு உதாரணமாக ஒரு வசதியான குடும்பத்தில் ஒரு பிள்ளை பிறக்கிறது அப்பிள்ளையின் பெற்றோர் கடின உழைப்பாளிகள். தொழிலின் நிமித்தம் வீட்டிலேயே அவர்களால்த் தங்க முடிவதில்லை எனவே அவர்கள் ஒரு ஆயாவிடம் பிள்ளையை ஒப்படைத்து இருப்பார்கள். இங்கு அப்பிள்ளைக்கு சகல வசதியும் இருக்கும் அதாவது உணவு இருக்கும் படுத்துறங்க பஞ்சணை இருக்கும் விளையாட பொருட்கள் இருக்கும். ஆனால் அப்பிள்ளை பெற்றோரின் அன்புக்காக எப்போதும் ஏங்கும். பஞ்சணையில்ப் படுத்தாலும் அதற்குத் தூக்கம் வராது. இதுவே ஊழ்வினை எனப்படும். இப்படியான நிலைமை வருவதற்கு அப்பிள்ளையின் ஆன்மா முற்பிறவியில் செய்த காரியங்களாக இருக்கலாம். முற்பிறவியில் ஆடோ, மாடோ, யானையோ, குரங்கினதோ குட்டிகளை அதன் தாய் விலங்கிடமிருந்து பிரித்து வந்து உணவூட்டி வளர்த்திருக்கலாம். அதாவது அந்தக் குட்டிக்கு உணவூட்டியதயையும் இப்பிறவியில் அனுபவிக்கிறது அதே நேரத்தில் அதன் தாயிடமிருந்து பிரித்து வந்ததையும் அக்குட்டி பட்ட துன்பத்தையும் இப்பிறவியில் அனுபவிக்கிறது. இதுவே தொல்வினை அல்லது தலைவிதி என அழைக்கப்படுகிறது.

நுகர்வினை

நுகர்வினை எனப்படுவது இப்பிறப்பில் நாம் இன்றுவரை செய்து கொண்டிருக்கும் நன்மை தீமைகளே நுகர்வினை எனப்படும். அதாவது நாம் இப்பிறவியில் இன்றுவரை நுகர்ந்து கொண்டிருக்கின்ற வினையாகும். நுகர்வினையால் எமது ஊழ்வினை குறைவடையலாம் அல்லது அதிகரிக்கலாம். அதாவது இப்பிறவியில் ஆற்றும் நற்கரியங்கள், தான தருமங்களால் பழைய வினைகள் அழிந்து கொண்டிருக்கும். அதே வேளை செய்யும் தீய கருமங்களால் தீவினையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்கிறது வேதம். இந்தக் கணக்கு வழக்கு படைத்தவனுக்கு மட்டுமே புரியும்.

வரும்வினை

இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள் மூலமாகப் அடையப்போகும் நல்வினை தீவினைகளே வரும்வினை எனப்படும்.

சில வினைகளை எம்மால்த் தவிர்க்கவே முடியாது. அதாவது நாம் ஒரு பாதையில் நடந்து செல்லும்போது எமது காலடியில் அதாவது எமது பாதம் நிலத்தில்ப் படுவதால் தவிர்க்க முடியாமல். எத்தனையோ சிறிய உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. நாம் ஒரு வீடு கட்டும்போது பல உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. அது புழுவோ பூச்சியோ உயிர் உயிர் தானே அந்தப் பாவம் எமக்குத்தானே. வீடு கட்டி முடிந்து கிரகப்பிரவேசம் செய்யப்படும்போது பூமிக்கு பூசை செய்வது அந்த பாவத்தைப் போக்குவதற்ககாகத்தான். எனவே பாவம் செய்வது என்பது தவிற்க முடியாதது.

இம்மூன்று வினைகளும் இணைந்து எமது அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படும்.

எது நல்வினை எது தீவினை என்று நாம் அறிந்து உணர்ந்து கொள்வதும், ஊழ்வினையை எப்படித் தீர்த்துக்கொள்வது என்று அறிந்து கொள்வதும் எமக்கு இப்பிறவியில்க் கிடைத்த ஒரு நல்ல விதியே. இன்று வரை நாம் எப்படி இருந்தோம் அறியாமல் என்னென்ன தவறுகள் செய்தோமோ அவற்ரிற்கெல்லாம் இனி வரும் வாழப்போகும் மிகுதி நாட்களில் நல்லதையே செய்து எமது பாவக் கணக்கை குறைத்துக் கொள்வோமாக.

புலி, சிங்கம் போன்ற விலங்குகள் மானை பிற விலங்குகளை கொன்று தின்கிறதே அது பாவமில்லையா, நாம் விலங்குகளைக் கொன்று தின்றால்ப் பாவமா என்றொரு கேள்வி எழலாம். புலி இன்னொன்றைக் கொன்று தின்பதற்க்காகவே படைக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு புலியோ அல்லது சிங்கமே இன்னொரு விலங்கைக் கொன்று தின்பது பாவக்கணக்கில் அடங்காது. ஆனால் உதாரணமாக புலி கொன்று தின்னும் மானுக்கு பால்குடி மறவாத குட்டிகள் இருந்து அக்குட்டிகள் துன்பப்படுமாக இருந்தால் அது புலிக்கு பாவமாக அமையும் என்று இந்து தர்மம் கூறுகிறது. அதே வேளை இன்னொரு உயிரைக் கொல்வது பாவம் என்று அறியாத மனிதர்கள் இன்னொரு விலங்கைக் கொன்று தின்றால் கூட மன்னிக்கப் படலாம் ஆனால் கொல்வது பாவம் என்று தெரிந்து கொண்டு கொலை செய்வது பாவமாகும்.

இவ்வாறே எமது ஊழ்வினை அல்லது கரும வினை அதாவது தலை விதி செயற்படுகிறது.

ஊழ்வினைப் பலனுக்கு ஏற்றவாறு அனைவருக்கும் (எல்லா உயிரினத்துக்கும்) பிறவி ஏற்படுகிறது. அந்த பிறவியில் தனது நிலையில் இருந்து கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை, நீதிநெறி தவறாது செய்துவர கர்மவினை அழியும். கர்மவினை தீர்ந்தால் மட்டுமே பிறவிப்பிணி நீங்கி ஒரு ஆன்மாவானது இறைவனுடன் கலக்க முடியும் அதுவே முக்தியாகும்.

ஊழ்வினையை அழித்து பிறவிப்பிணியை நீக்க வேதங்களில் பல வழிமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன

தான தருமம் செய்துவர ஊழ்வினை அழியும்

எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள் எப்போதும் தானம், தர்மம் செய்யும்படி வலியுறுத்துவார். தானம், தர்மம் செய்வதனால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி பல பிறவிப் பிணிகளை நீக்கும் என்றும் விளக்குவார். தானங்களில் சிறந்த தானம் அன்னதானமாகும். பிறர் பசியைப் போக்குங்கள். இது நாம் செய்த பாவங்களைப் போக்க வல்லது. எனவே அன்னதானம் செய்யுங்கள் என அன்னதானத்தின் சிறப்பை எப்போதும் வலியுறுத்துவார். அதேபோல குருவும் வாழ்ந்து காட்டுகிறார். அன்னதானத்தின் சிறப்பை குருவிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.

தானங்களில் அன்னதானம், கோதானம் (பசு மாடு), வஸ்திரதானம் (உடை), நில தானம், ஆத்மதானம் (குரு மூலமாகக் கிடைப்பது) எனப் பல வகை உண்டு. நாம் ஒருவருக்கு பணம், பொருள், ஆடை போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கும்போது பெறுபவர்களுடைய மனம் இன்னும் தந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் எண்ணுமே தவிர. அவர்களது மனம் ஒருபோதும் “போதும்” என்று திருப்தியடையாது. ஆனால் அன்னதானம் கொடுக்கும் போது உண்பவர்களது வயிறு நிறைந்தவுடன் மனம் திருப்தியடைந்து “போதும்” என்று கூறுவார்கள். இதுவே உணவளிப்பவருக்கும் அவ்வுணவை வாங்கி உண்பவருக்கும் முழு மனத் திருப்தியைக் கொடுக்கும். இதனாலேயே தானங்களில்ச் சிறந்தது அன்னதானம் எனக் கூறப்படுகிறது.

தானம் வேறு தர்மம் வேறாகும். தர்மத்துக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது என்பார் குரு

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர்கள் மூலமாக அறிந்தோ அல்லது அவர்களது நிலைபற்றி பிறர் மூலமாக அறிந்தோ அவர்களுக்கு உதவுவது தானமாகும். அதாவது கேட்டுச் செய்யும் உதவியானது தானத்தில் சேரும்.

உதவி என்று கேட்கும் முன்பே குறிப்பறிந்து அவர்கள் கேளாத நிலையில் அவர்களுக்கு வேண்டியதை மனமுவர்ந்து செய்வது தர்மமாகும். இந்த தர்மம் அதிக புண்ணியத்தைத் தரவல்லது.

அதாவது பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் அவர்களுக்கு உதவுவது தானமாகும். அவர்கள் கேட்க்காமலேயே குறிப்பறிந்து அவர் பசியாற்றுவது தர்மமாகும்.

தர்மம் செய்தவனை நெருங்க மரணமும் அஞ்சும் என்பதனை விளக்க மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதை ஒரு சிறந்த உதாரணமாகும்.

தர்மம் செய்து புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தவன் கர்ணன். அவன் போர்க்களத்திலே அம்புபட்டு மரணப் படுக்கையில் இருந்தபோதும், மரணத்தினால் அவனை நெருங்க முடியவில்லை. இதனை உணர்ந்து கொண்ட கிருஷ்ண பகவான் வயோதிக பிராமணனாய் வேடமிட்டு கர்ணனிடம் வந்து அவன் செய்திருந்த புண்ணியங்கள் அனைத்தையும் யாசித்துப் பெற்றுக் கொண்டார். கேட்டுக் கொடுத்ததால் கர்ணன் தர்மத்தால் பெற்ற புண்ணியம் அனைத்தும் தானக் கணக்கில் சேர்ந்துவிட்டது. கர்ணனை மரணமும் தழுவிக்கொண்டது. இதுவே தானத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும். அது மட்டுமல்லாமல் இறைவனான கிருஷ்ண பகவானுக்கு முன்னராகவே பிறவிப்பிணி தீர்த்து முத்தியடைந்தவன் கர்ணன். கர்ணன் செய்திருந்த ஊழ்வினைப் பயனாக தாய் தந்தையர் சகோதரர்கள் இருந்தும் பிறப்பிலிருந்தே அனாதையாக வாழ்ந்து தான் செய்த தான தருமத்தினால் முக்தியடைந்தான். இது தான தருமம் செய்தமையினால் கரன்னனுக்கு பிறவிப்பிணி நீங்கி கிடைத்த முத்தியாகும்.

உடல் ரீதியாகச் செய்யும் உதவிகளும் தான தருமத்தில் அடங்கும். உதாரணமாக முதியவர்கள், நோயாளிகளுக்குச் செய்யும் தொண்டுகள் மற்றும் உதவிகளும் தான தருமமாகும்.

அது மட்டுமல்ல தான தருமம் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். உணவு நீர் இன்றித் தவிக்கும் விலங்குகளுக்கு கொடுக்கும் நீர், உணவு என்பவையும் தான தருமத்தில் அடங்கும்.

தெய்வீகத் திருத்தலங்கள் சென்று வழிபட்டு வர பாவங்கள் அழியும். கங்கையில் நீராட பாவங்கள் அழியும்.

மனதை அடக்கி விரதமிருந்து திருத்தலங்கள் சென்று வணங்கி அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு மனமுவர்ந்து தான தருமம் செய்வதனால் பாவங்கள் அழியும். கோவிலுக்கு செய்யும் நன்கொடைகள், பசு தானம், நில தானம் போன்றவற்றினால் அத் திருத்தலங்கள் மூலமாக பலருக்கு தான தருமம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். அது எமது பிறவிப்பிணியைத் தீர்க்கும். திருத்தலங்களில் சென்று வழிபடும்போது அங்கு பல தரப்பட்ட மக்களையும் கண்டு அவர்கள் குறைகள் துன்பங்களைக் கேட்டு அறியும்போது எமக்கும் மனதில் நல்லது செய்ய வேண்டும். பாவம், தீய காரியங்களில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணங்கள் தோன்றும். இது எமது முத்திக்கு வழிவகுக்கும். அது மட்டுமல்ல ஆலயங்களில் நடைபெறும் சொற்பொழிவுகள் கேட்பதனால் மனம் நல்ல வழியில்ச் சிந்திக்கத் தொடங்கும்.

அதுமட்டுமல்ல கோயில்கள் அமைந்துள்ள சூழல், அந்தக் காற்று, அந்த நீர் பல நோய்களை நீக்கும் தன்மை உள்ளதாக இருக்கும். அதனால் அங்கு வரும் பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் வல்லமை அத் திருக்கோயில்களுக்கு.இருக்கும்.

அது மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் சொந்த பந்தங்கள் நண்பர்கள் என்று பலர் இருந்தாலும், எமது சில பிரச்சினைகளை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதிருக்கும். அவ்வேளையில் நாம் நம்பிக்கை வைத்து வழிபடும் கடவுளிடம் சென்று பகிர்ந்து கொள்ளும் போது எமக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கிறது. மனப்பாரம் குறைகிறது. மன அழுத்தம் குறைகிறது.

கங்ககையில் சென்று நீராடி எமக்கு விருப்பமான ஒரு உணவை அன்றுமுதல் தவிர்த்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். கங்கையில் நீராட இறங்கும்போதே எமது புற அழுக்கு மட்டுமல்லாமல் அக அழுக்கையும் அங்கேயே கழுவி விடவேண்டும். அதாவது எமது மனதிலுள்ள காமம், குரோதம், துன்புறுத்தல், சந்தேகம், பொறாமை, கொலை, களவு, புலாலுண்ணாமை போன்ற குணங்களையும் அந்த கங்கைலேயே கழுவி விடவேண்டும். விருப்பமான ஒரு உணவத் தவிர்ப்பது என்பது நாம் என்றோ ஒருநாள் உண்ணும் உணவை விட்டு விடுவதல்ல. அதாவது கத்தரிக்காயையோ அல்லது வாழைக்காயையோ தவிர்ப்பதல்ல. புலால் உண்பதை இன்று முதல் அதாவது கங்கையில் நீராடியபின் புலாலைத் தொடமாட்டேன் என்பதே உண்மையான உணவை கைவிடும் தத்துவமாகும். புலால் உண்பதைக் கைவிடும்போது ஒரு உயிர் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுகிறது என்பதே உண்மையாகும். அதுவே நாம் செய்த பாவத்தைப் போக்கும். புண்ணியத்தைத் தேடித்தரும்.

ஆன்மீகப் பயிற்சிகள் பாவத்தை அழிக்கும் முத்தியைக் கொடுக்கும்.

பக்தி என்பது வெளிப்புறமாக கடவுளை வணங்குவது. ஆன்மீகம் என்பது யோகப் பயிற்சி மூலமாக எமது ஆசைகளை அழித்து வெளிப்புறமாக அலைபாயும் மனதை உள்முகமாகத் திருப்பி அந்த ஆண்டவனைத் தேடி, அறிந்து தான் செய்த பாவங்களை அழித்து அந்த இறையுடன் ஒன்றரக் கலப்பதாகும்.

ஆன்மீகப் பாதையில் குருவின் பங்கு முக்கியமானது. ஒரு குரு மூலமாக யோகப் பயிற்சிகள் கற்று பயிற்சி செய்யவேண்டும்.

குருவானவர் தன்னை சரணடைந்த சீடர்களுக்கு ஆன்மீக சாதனைகள் கற்றுக்கொடுத்து அதன்படியே சீடர்களை நல்வழிப் படுத்தி, முதலில் வினை மேலும் சேராதவாறு பார்த்துக் கொள்வார். அப்படியே சீடர்கள் தாம் தாம் செய்யும் பயிற்சிக்கு ஏற்றவாறு ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறி தமது ஊழ்வினையை அழித்துக்கொள்வர். இறுதியில் பிறவிப்பிணி நீங்கி முக்தி அடைவர்.

ஆன்மீகத்தில் யோகப்பயிற்சியை திருமூலர் அட்டாங்க யோகம் என விளக்கியுள்ளார்.

அட்டாங்க யோகம் எனப்படுவது யோகப் பயிற்சி முறைகளை எட்டுப் படிமுறைகளாக வகுத்து விளக்கப்பட்டுள்ளது. அவையாவன இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் அதாவது எட்டுப் படிமுறைகள் ஆகும்.

இயமம்: தீயனவற்றைச் செய்யாது இருத்தல்.

நியமம்: நல்லனவற்றைச் செய்தல்.

ஆதனம் (ஆசனங்கள்): ஆசனங்கள் செய்தல்.

பிராணாயாமம்: மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துதல்.

பிரத்தியாகாரம்: மனதைக் கட்டுப்படுத்துதல்.

தாரணை: ஆதாரங்களில் (சக்கரங்களில்) மனத்தை ஒருமுகப் படுத்துதல்.

தியானம்: மனதை உள்முகமாகச் செலுத்துதல்.

சமாதி: பரம்பொருளுடன் ஒன்றாதல். சிவனுடன் (ஜோதியுடன்) ஐக்கியமாதல்.

யோகப் பயிற்சியை ஆரம்பிக்கும் ஒருவன் முதலில் இயமம், நியமம் ஆகிய படிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது அவனது பாவங்கள் அழிய ஆரம்பிக்கும். அவனுக்குப் புண்ணியம் சேர ஆரம்பிக்கும்.

“பிறப்பின் சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்”.

ஒருவன் ஆன்மீகப் பாதையில் சென்று யோகப் பயிற்சியை ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் அவன் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். இதற்கு உதாரணமாக தூசி படிந்த ஒரு அறையினை துப்புரவு செய்ய ஆரம்பிக்கும்போது முதலில் அங்கு படிந்துள்ள தூசி, குப்பை போன்றன அகற்றப் படும்போது துர்நாற்றத்தத்துடன் பல தொந்தரவுகள் உண்டாகும். ஒரு கட்டத்தில் அங்கு அமைதியம் ஆனந்தமும் நிலவ ஆரம்பிக்கும். இத் தத்துவமே ஆன்மீகம் ஆரம்பிக்கும் போதும் நிலவும். இருந்தும் அப்போது எமக்கு எழும் துன்பங்களையும், சிரமங்களையும் குருவின் வழிநடாத்தலுடன் பவ்வியமாக கடந்து பாவங்களைப் போக்கி முத்தி நிலையை அடையலாம்.

ஆன்மீக வாதிகள், ஞானிகள், சித்தர்கள், மகான்களை சென்று தரிசித்து அவர்களிடம் ஆசி பெறுவதால் ஆன்மா மிகுந்த பலத்தைப் பெறும். அது மட்டுமல்லாமல் சித்தர் சமாதிகள் ஆலயங்கள் சென்று தரிசிக்கும் போது எமது தீவினைகள் அகல வழி பிறக்கும். பிரசித்தி பெற்றஆலயங்கள் சித்தர்களால் உருவாக்கப்பட்டவையே.

பிச்சை இடுவதாலும் பாவம் தீரும் பிச்சை எடுப்பதாலும் பாவம் தீரும்

பிச்சை இடுவதாலும் பாவம் தீரும். பிச்சை எடுப்பதாலும் பாவம் தீர்ந்து நமது தலையெழுத்தை மாற்றி நமக்கு புது வாழ்வை ஏற்படுத்தித் தரும் என சித்தர்கள் அறிவுறுத்தி யுள்ளார்கள்.

பிச்சை எடுக்கும் தத்துவம்: அதாவது தான் யாரென்றே தெரியாத ஒரு ஊரில் சென்று எவ்வித விருப்பு வெறுப்புமின்றி மூன்று நாட்கள் வெறும் பிச்சை மட்டுமே எடுத்து உண்டு வாழ்ந்து விட்டால் ஒருவனது தலையெழுத்தே மாறி அவனுக்கு புது வாழ்வு ஏற்படும் என்பது சித்தர் அறிவுரை.

ஒருவர் தன் வாழ்க்கையில் பல அடுக்கடுக்காக துன்பங்கள் மற்றும் பேரிழப்புகளை சந்தித்து வாழ்க்கையே வேண்டாம் முடிந்து விட்டது இனித் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கும் தருவாயில்இந்த முறையினை முயற்சித்துப் பார்க்கலாம். என்பது என் கருத்தாகும்.

எமது இந்தப் பிறப்பே எமது ஊழ்வினையை கழிப்பதற்கேயாகும். எத் துன்பம் வந்தாலும் இறைவன் இருக்கிறான் என்ற முழு நம்பிக்கையோடு. சித்தர்கள் காட்டிய வழியினில் பயணம் செய்து எமது ஊழ்வினையை அழித்து பிறவிப்பிணி தீர்த்து முத்தியடைவோமாக.

சொர்க்கமும் நரகமும் இந்தப் பூமியில்த்தான் உள்ளது.

சொர்க்கமும், நரகமும் கடவுள் படைப்பதில்லை. அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள்தான் தன்னுடைய மனோபாவத்திற்கும், சூழ்நிலைக்கும், ஏற்றாற்போல் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

ஞானிகள் மற்றும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும் தாம் வாழும் சூழலை சொர்க்கமாக்கும் திறமை கொண்டவர்கள்.

ஒருமுறை கடவுளிடம் ஒருவன் கடவுளே நரகத்தில் உள்ளவர்கள் என்ன பாவம் செய்தனர்? ஏன் அவர்களால் சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை?” என்று கேட்டானாம். அதற்கு கடவுள் நான் எதனையும் படைப்பதில்லை. மனிதனே தனது செயல்களால் சொர்க்கத்தையும் நரகத்தையும் இதே பூமியிலேயே உருவாக்கிக் கொள்கிறான். இப்போது என்னுடன் வந்துபார் நான் அனைவருக்கும் ஒரேமாதிரியாகவே செய்கிறேன் அவர்கள் எப்படி அதனை எதிர் கொள்கிறார்கள் என்று நீயே நேரில் பார். உனக்கு நான் விளக்குவதை விட நேரில் சென்றே காட்டுகிறேன்! என்றபடி அவனை அழைத்துக்கொண்டு

 பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் ஒரு ஊருக்குச் சென்றார்.

அங்குள்ள மக்கள் கடும் பசி, பட்டினியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். கடவுள் அங்கிருந்தவர்களில் ஞானிகள் நல்லுள்ளம் கொண்டவர்களைத் தனியாகவும், முட்டாள்கள், முரட்டுத் தன்மையுள்ளவர்களைத் தனியாகவும் பிரித்து வேறு வேறு இடங்களில் இருத்திவிட்டு, அவர்களிடம்,”நான் உங்களுக்கு சுவையான உணவுகளை இப்போதே தருகிறேன். எனினும் ஒரு நிபந்தனை, அந்த உணவுகளை உங்கள் கைகளை மடக்கி நீங்கள் உண்ணக்கூடாது. மாறாக, உங்களது கையை மடக்காமல் சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் கையை மடக்கினீர்கள் என்றால் அந்த உணவு உங்கள் கையை விட்டு மறைந்து விடும்!” என்று கூறி உணவைக் கொடுத்தார்.

முட்டாள்கள், முரட்டுத்தனம் படைத்த மக்களால் உணவை உட்கொள்ள முடியவில்லை. கையை மடக்காமல் அவர்களால் உட்கொள்ளவே முடியவில்லை. இதனால் உணவுகள் அனைத்துமே கீழே சிந்தி வீணாகின.

ஆனால் ஞானிகள் மற்றும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உள்ள பகுத்திக்குச் சென்று பார்த்தபொழுது, அங்கு ஒரு பருக்கை உணவு கூட கீழே சிந்தவில்லை. அத்துடன் கடவுள் கொடுத்த அனைத்து வகை உணவுகளும் காலி ஆகி காணப்பட்டது.

கடவுள் ஞானிகளிடம், “இது எப்படி உங்களுக்கு சாத்தியமானது?” என்று ஒன்றும் தெரியாதது போலக் கேட்டார்.

உடனே ஞானிகள், ”கடவுளே நீங்கள் கையை மடக்காமல் சாப்பிடவேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்! அது எப்படி சாப்பிட முடியும்? என்று சிந்தித்தோம். உடனே எங்களுக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி எங்கள் உணவை இன்னொருவருக்கு ஊட்டினோம். அவர் பதிலுக்கு அவரது உணவை அடுத்தவருக்கு ஊட்டி விட்டார். இப்படியாக அனைவருமே உணவுகள் அனைத்தையும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டோம். இதனால் சிறிதளவு கூட உணவு கீழே சிந்தவில்லை. அத்துடன் எங்கள் வயிறும், மனமும் முழுவதும் நிறைந்தது!” என்றனர்.

அக்கணம் கடவுள் சிரித்துக் கொண்டே அந்த மனிதனைப் பார்க்க அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது.

‘நாமும் புரிந்து கொள்வோமாக.

உண்மையில் “சொர்க்கமும், நரகமும்” நாம் எவ்வாறு சூழ்நிலைகளை கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

உன்னால்த் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தாலும் அந்த விதிகளை எதிர்கொள்ளும் அளவிற்கு வழிகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனையே ஏசுபிரான் “தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், வாருங்கள் கிடைக்கும் என்றார்”.

நீ போகும் பாதையில் ஒரு கதவு மூடப்படும்போது பொறுத்திரு முயற்சி செய் இன்னொரு கதவு நிட்சயம் திறக்கும்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள்.

கு சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “தலைவிதியும் (ஊழ்வினை) பரிகாரமும்

  1. சிறப்பு நல்ல பதிவு எல்லோருக்கும் புரியும் வகையில் கூறியுள்ளிர்கள். நன்றி ஆத்ம வணக்கம்.

Comments are closed.