திருக்கேதீச்சரம் (சிவன் ஆலயம் மன்னார், இலங்கை.)
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் அமைந்துள்ள ஐந்து பெரிய புராதன சிவாலயங்களில் அதாவது ஈஸ்வரங்களில். (ஈச்சரங்களில்) இதுவும் ஒன்றாகும்.
ஐந்து ஈஸ்வரங்கள். (ஈச்சரங்கள்)
1. நகுலேச்சரம்: யாழ்ப்பாணத்திலுள்ள தலயாத்திரைக்குப் பிரசித்தமான தலமாக விலங்குக்குறது. இத் திருத்தலம் கீரிமலைச் சிவன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
2. திருக்கோணேச்சரம்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
3. முன்னீஸ்வரம்: இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது
4. தொண்டேச்சரம்: மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும்.
5. திருக்கேதீச்சரம்: மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
திருக்கேதீச்சரம் வரலாற்றுச் சுருக்கம்.
கேது வழிபட்ட தலமாதலால் திருக் கேது ச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப்பேறு பெற்றார். பின் இவ்விடத்திலேயே வாழ்ந்து அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டா உருவாகியமையால் துவட்டா எனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டா எனவும் வழங்கிவந்தது
இத்தலத்திலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.
இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய சிவ வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்ட பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் வழிபட்ட பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.
இராம இராவண யுத்தகாலத்திலும், இக்கோயில் இருந்ததென்பதை சில சான்றுகள் எடுத்துரைக்கின்றன. சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் இராமனைப் பிரமகத்தி தோஷம் தொடர்ந்ததென்றும், அதனைப்போக்க இலங்கையிலுள்ள முனீசுவரம் என்ற சிவத்தலத்தில் பொன்லிங்கமும், திருக்கோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருக்கேதீச்சரத்தில் வெள்ளிலிங்கமும், பிரதிஷ;டை செய்து வழிபட்டபின், தென்னகத்திலிருந்த (தமிழகம்) இராமேசுவரம் கோயிலில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டுத் தன் தோஷத்தைப்போக்கிக் கொண்டார் எனப் புராண வரலாற்றிலே கூறப்பட்டுள்ளது.
திருக்கேதீச்சரத் திருத்தலத்திற்கு அருகில் வங்காலை என்னும் நகரமும், மாளிகைத் திடல் என்றும் பாப்பாமோட்டை என்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள்
அமைந்திருந்தமையினால் மாளிகைத் திடலெனவும் பெயர்கள் வந்ததாக வரலாறு.
இவ்வாறான புராதனப் பெருமையும், வரலாறும் கொண்ட இவ்வாலயம் திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து பாடல்பெற்ற தலமாகவும் காணப்படுகின்றது. திருஞானசம்பந்தர் இராமேஸ்வரத்தில் இருந்தவாறே, திருக்கேதீச்சரத்தின் பெருமையை ஒரு பதிகத்தில் பாடியுள்ளார். இப்பதிகம் இரண்டாந்திருமுறையில் உள்ளது. இவர் திருகேதீச்சரம் அமைந்துள்ள மாதோட்டத்தின் எழிலை ஒவ்வொரு பாடலிலும் கூறிச்செல்கின்றார். கடிகமழ், பொழிலணி மாதோட்டம், எழில்திகழ் மாதோட்டம், இச்சையில் உழல்பவர் உயர்தரு மாதோட்டம், மறிகடல் மாதோட்டம், இறப்பிலர் மலி கடல் மாதோட்டம், மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம், மஞ்ஞை நடமிடு மாதோட்டம், முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டம், மாவும் பூகழும் கதலியும் நெருங்கு மாதோட்டம், என்றெல்லாம் ஊரின் பெருமையை, எழிலைப் புகழ்ந்து கூறிய சம்பந்தர், இங்கு எழுந்தருளியுள்ள கேதீச்சரப் பெருமானை ‘பாமாலை பாடலாயின் பாடுமின் பக்தர்கள் பரகதி பெறலாமே’ என்று முடிக்கின்றார்.
சுந்தரமூர்த்தி நாயனார். இவர் சேரமான் பெருமான் நாயனாருடன் இராமேசுவரம் வந்து தங்கியிருந்தபோது, அங்கிருந்தே திருக்கேதீச்சரப்பெருமானின் சிறப்பை ஒரு பதிகத்தில் பாடியுள்ளார். ஏழாந்திருமுறையிலே இத்திருப்பதிகம் காணப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் பத்திலும், திருக்கேதீச்சரத்தானே என்று இறைவனை ஏத்தும் பண்பு காணப்படுகின்றது.
திருநாவுக்கரசு நாயனார் நாயனாரின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத் தலத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது.
இத்தலத்தின் தலவிருட்சம் – வன்னிமரம்.
இத்தலத்தின் தீர்த்தமான பாலாவித்த தீர்த்தத்தினை பின்வரும் காணொளியில் காணலாம்.
–— அன்பே சிவம் —