திருமூலர் வரலாறு
திருமூலர் திருமந்திரம்
திருமந்திரம் என்ற ஞான நூலினை எமக்களித்த திருமூலர் வரலாறும் திருமந்திரம் என்ற ஞானநூலின் தோற்றமும்.
திருக்கயிலையில் திருநந்தி தேவரின் முதன்மை மாணாக்கரில் ஒருவரான “சுந்தரனார்” எனும் பெயருடைய ஒரு சிவயோகியார் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்திய மாமுனிவருக்கு அடுத்தவராக இவரே போற்றப்படுகிறார். நந்தி தேவரின் முதன் மாணாக்கரில் ஒருவராவார்.
சிவனிடமிருந்து வேத ஆகமங்களை அறிந்து அவற்றை தமது மாணாக்கர்களுக்கு நந்தி தேவர் அருளினார். கயிலையில் நந்தி தேவரிடமிருந்து இவருடன் பாடங் கற்றவர்களான சனகர், சனந்தனர், சானாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய எண்மரும் நந்தி தேவரின் முதன்மைச் சீடர்கள் ஆவார்கள்.
நந்தி தேவரையே நாம் சிவாலயங்களில் நந்தியாக வழிபடுகிறோம். நந்தி (காளை மாடு) என்பவர், சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாயத்தில் சிவனுக்கு வாயிற் காவலனாக விளங்குகிறார் என்பது புராணம். சைவ புராணங்களின்படி சிவனின் முதன் மாணாக்கராகவும் அதனால் முதற் தலைமைக் குருவாகவும் கருதப்படுகிறார் நந்தி தேவர். நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது. சிவாலயங்களில் நந்தி உருவம் பதித்த கொடி(கொடித் தம்பம்) இருக்கும்.
அகத்திய முனிவரின் மேலுள்ள பக்தியினால் அவரைக் காண்பதற்காக சுந்தரனார் கயிலையில் இருந்து தென்னாட்டிலுள்ள பொதிகைமலை நோக்கிப் புறப்பட்டார். (பொதிகை மலை அகத்தியர் மலை எனவும் அழைக்கப் படுகிறது)
திருமூலர் முன்னர் ஒருமுறை பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாத முனிவருடன் தென்னாடு சென்று அகத்திய முனிவரைத் தரிசித்தார் என சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
போகும் வழியில் பசுபதிநாத் (நேபாளம்), திருக்கேதாரம் (கேதாரிநாத்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்), திருக்காளத்தி (காளகத்தீஸ்வரர் கோயில்), திருவாலங்காடு (வடாரண்யேஸ்வரர் கோயில்) ஆகிய சிவ திருத் தலங்களைத் தரிசித்தவாறு காஞ்சி நகரை அடைந்தார். அங்கு ஏகாம்பரநாதர் கோயில் (பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது) வணங்கிக் கொண்டு அங்கிருந்து சிதம்பரம் சென்று தில்லை நடராஜனை வணங்கிக் கொண்டு (இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப் பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் என்றும் அறியப் பெறுகிறது.)
அங்கிருந்து காவிரி ஆற்றைக் கடந்து காவிரியின் தென் கரையிலுள்ள திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலை அடைந்தார். (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 36ஆவது சிவத்தலமாகும். மாசிலாமணி ஈசுவரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது)
திருவாவடுதுறையில் இருந்து புறப்படும் தருணத்தில் அங்கு காவிரி ஆற்றங்கரையில் புற்தரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் கதறி அழுவதைக் கண்டு காரணத்தை அறிய முற்பட்டார். மாடுகளை மேய்க்கும் இடையரான “மூலன்” என்பவர் இறந்துவிடவே. அவரது இறப்பை தாங்க முடியாத மாடுகள் அந்த மூலனின் உடலைச் சுற்றி நின்று துயரம் தாளாது கத்திக் கொண்டிருந்தன. மேய்ப்பவன் இறந்தமையால் மாடுகள் அடைந்த துயரத்தினைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத சுந்தரனார், அந்த மாடுகளின் துயர் துடைக்க அன்புள்ளம் கொண்டார்.
அந்த இடையனாகிய மூலன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்களின் துயரம் நீங்காது என்பதனை அறிந்து கொண்டார். அட்டமா சித்திகளையும் கற்றுத் தேர்ந்திருந்த அந்தச் சிவயோகியார், தம்முடைய திருமேனியைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்னும் வித்தையினைக் கையாண்டு தமது உயிரை இறந்து கிடந்த மூலனின் உடலுக்குள் செலுத்தி “மூலனாக” எழுந்தார்.
மூலன் எழுந்து வந்ததைக் கண்ட மாடுகளெல்லாம் துயர் நீங்கி மீண்டும் மேயத் தொடங்கின. அதனைக் கண்டு அக மகிழ்ந்தார் சுந்தரனார்.
மாடுகளின் பசி போக்கியபின், மாலையானதும் அவை தத்தமது இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டன. அவ் ஊரின் பெயர் சாத்தனூர் என்பதனையும் அறிந்து கொண்டார். மாடுகளைப் பின் தொடர்ந்து சென்று அவை தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்வதனை உறுதிப் படுத்திக் கொண்டு தான் சென்ற வழியே திரும்பலானார் சுந்தரனார்.
மாலையாகியும் தன் கணவன் வீடு திரும்ப வில்லையே என்று கவலையுற்ற மூலனின் மனைவி தன் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ, என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிச் சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். அவளைக் கண்டும் காணாதவராக அந்தச் சிவயோகியார் இருந்தார்.
தன் கணவனில்த் தோன்றிய மாற்றத்தைக் கண்டு அவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும் என்று எண்ணி அவரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அவரை நெருங்கினாள்.
அவள் மூலனின் மனைவி என்பதனை அறிந்து கொண்ட அந்தச் சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டாதவாறு தடுத்து நிறுத்தினார். அவளிடம் நடந்த உண்மையைக் கூறினார். ஆனால் அவளோ மூலனின் நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். உமது அன்புடைய மனைவியாகிய என்னை எதற்காக வெறுத்து ஒதுக்குகிறாய் என்று கூறிப் புலம்பி வாட்ட முற்றாள்.
அந்நிலையில் மீண்டும் சுந்தரனார் அவளை நோக்கி “நீ எண்ணியவாறு நான் மூலன் இல்லை, இனி உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை” எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அமைந்துள்ள பொதுமடத்தில் சென்று யோகத்தில் அமர்ந்தார்.
அவரின் கூற்றை நம்பாத அவள், தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர் சுந்தரனாரை அணுகினர்
சுந்தரனார் அவர்களிடம் நடந்த நிகழ்வுகளை விளக்கினார். இது பித்தத்தினால், அல்லது பேய் பிடித்தல் போன்றவற்றால் வந்த மயக்கமன்று என்று உணர்ந்தனர் அப்பெரியோர். அவர் மிகவும் தெளிவு பெற்ற நிலையில், வாழ்க்கையில்ப் பற்றற்றவராய் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இருக்கிறார் என அறிந்து தெளிந்து கொண்டனர். இவர் சகல பற்றுக்களையும் அறுத்து சிவன் திருவடியைப் பெற்ற சித்தன் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றும் திறந்தவராய் விளங்குகின்றார், என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், அளவிலாத் துயருற்றாள். அவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஊரார்கள் அனைவரும் திரும்பிச் சென்றதும், சாத்தனூரில் பொதுமடத்தில் இருந்து தாம் வந்த வழியே சென்று, தம் உடம்பினை மறைத்து வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி கவலையுற்றார். தியானத்தில் ஆழ்ந்தார். அதை மறைத்த செயல் இறைவனின் செயலே என சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.
இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங் கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருளை, இந்நிலவுலகில் “மூலனது” உடலில் வாழ்ந்து தமது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்க ஈசன் கருதியதால் போடப்பட்ட திருவிளையாடல் என்பதையும் அவர் தெளிந்து உணர்ந்து கொண்டார்.
சிவபெருமான் திருவடிகளை நினைந்து அங்கிருந்து திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் ஈசனை வணங்கி, அத்திருக்கோயில் வீதியில் நின்றிருந்த ஓர் அரச மரத்தடியில் யோகத்தில் அமர்ந்தார். அன்றுமுதல் அவர் “திருமூலர்” என் அழைக்கப்பட்டார்.
இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர் இவ்வுலகத்தார் பிறவிப் பிணி நீக்கி உய்யும் பொருட்டு எளிதிய 3000 பாடல்களே திருமந்திரமாகும். இவர் மூவாயிரம் வருடங்களாக சிவயோக நிலையில் அமர்ந்திருந்து ஆண்டுக்கு ஒருமுறை தவம் கலைத்து ஒருபாடல் எழுதிவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விடுவார். இவ்வாறு ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை அருளிச் செய்தார். அப்பாடல்களில் இறைவனை அடைய வழிகாட்டும் சைவ நாற்பாதங்கள் ஆகிய “சரியை, கிரியை, யோகம் ஞானம்” என்னும் நால்வகை நன் நெறிகளையும் கடைப்பிடித்து முத்தியடையும் முறைகளை மிகவும் எளிதாக இவ்வுலகத்தோர் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் விளக்கியுள்ளார்.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே
என்பது இவரது முதற் பாடலாகும்.
திருமூலர் தாம் எழுதிய மூவாயிரம் பாடல்களையம் யாரும் அறியாதவாறு அவர் தவமிருந்தஅந்த கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்துக்கு அடியில் புதைத்து வைத்துவிட்டு, அங்கிருந்து சிதம்பரம் சென்று தில்லை நடராசன் சந்நிதியில் தனது குருவாகிய நந்தியுடன் ஒன்றறக் கலந்தார்.
அதன் பின்னர் நாலாயிரம் வருடங்கள் கழித்து அதாவது கி பி 700 ஆம் ஆண்டளவில் சைவ சமயக் குரவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தேவாரங்கள் பாடிக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவன் திருவருளால் திருமூலர் எழுதிய மூவாயிரம் பாடல்களும் மறைத்து வைத்திருந்ததை அறிந்து, அவற்றை வெளியில் எடுத்தார். அப்பாடல்களின் பொருளை உணர்ந்த திருஞான சம்பந்தர் இவ் உலகத்தோர் அறிந்து உய்யும் பொருட்டு அவற்றை “திருமந்திரம்” எனப் பெயரிட்டு வெளியிட்டார்.
ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட திருமந்திரம் பத்தாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. இந்நூல் “தமிழ் மூவாயிரம்”, “திருமந்திர மாலை” எனவும் அழைக்கப்படுகிறது.
திருமூலர் அருளிய திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. தமிழில் முதன் முதலில் தோன்றிய ஞானநூல் என்பது இதன் தனிச்சிறப்பு. திருமந்திரமானது யோகநூலாகவும், தோத்திரமாகவும், சாத்திரமாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், விளங்குகிறது.
திருமூலர் ஞானம், திருமூலர் அறுநூற் றொன்று, திருமூலர் வைத்தியம், திருமூலர் பல திரட்டு, திருமூலர் வாதம், திருமூலர் வழலைச் சூத்திரம், இருபத்தொன்று போன்ற பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர் திருமூலர்.
திருமூலர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.
திருமந்திரம் என்ற நூல் ஆரம்பத்தில் தமிழ் மூவாயிரம் என்றே அழைக்கப்பட்டது. இந்த நூலிலே இறைவனை அடையும் எளிய வழிமுறைகளும், மனித வாழ்வுக்குத் தேவையான, மனித உடலுக்குத் தேவையான முழுமையான விளக்கங்களும் வாழ்வியல் தத்துவங்களும் பல படிமுறைகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமந்திரம் ஒவ்வொருவரும் தன்னை அறிதல். தனக்குள் இருக்கும் இறையாற்றலை அடைவதற்குரிய வழிமுறைகள் பலவற்றையும் விளங்கியிருக்கிறது. மனிதர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்தி ஆன்மிகத் தெளிவு ஏற்படுத்தி அவர்களது பிறவிப் பிணி நீக்க வழி கூறுகிறது.
திருமந்திரத்தில் உள்ள மூவாயிரம் பாடல்களையம் தினந் தோறும் பொருள் உணர்ந்து படித்துவர பிறவிப் பிணி நீங்கி முக்தி கிடைக்கும் என்பது அதன் மகிமையாகும்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —