தீபாவளி October 31/ 2024
2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர், 31 ஆம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலகெங்கிலும் பரந்து வாழும் இந்துக்களால்க் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை பெரும்பாலும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் தினத்தன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து, கழுவி மெழுகி வீட்டைத் தூய்மைப் படுத்தி அலங்கரித்து, களிமண் சுட்டி விளக்குகள் ஏற்றி வீட்டு முற்றத்தில் கோலமிட்டு அழகு படுத்தவேண்டும்
வீட்டிலுள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை தரித்து நிறைகுடம் ஏற்றி .தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி லக்சுமி பூசை செய்து வணங்கி வழிபாடு செய்வர்.
சிறுவர்கள் பட்டாசு (வெடி) கொளுத்தி மகிழ்வர்.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வளரும் என்பது நம்பிக்கை.
வீடுகளில் சுவையான அதாவது இனிப்பான பலகாரங்கள் சிற்றுண்டிகள் செய்து தமது அயலவர் உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்வர். பலர் தமது சொந்தம் பந்தங்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து உணவுண்டு கழித்துக் கூடி மகிழ்வர்.
தீபாவளியின்போது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெற்றுக்கொள்வர்.
புதிதாக மணமுடித்தவர்களுக்கு அமையும் முதலாவது தீபாவளி தலைத் தீபாவளி எனப்படும். மாப்பிள்ளையையும் பெண்ணையும் கோலமிட்ட தரையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுத்து நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குவார்கள். அடுத்து அவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்று அவர்கள் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக் கொள்வது மரபாகும்.
சில இடங்களில் தீபாவளியின் போது இளம் பெண்கள் சுட்டிகளில் தீபங்கள் ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்துவிடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
தீபாவளி புராணக் கதை
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் அதுவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு புராணக் கதை
புராணக்கதை
நரகாசுரன் என்ற அசுரன், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி யும் வந்தான். அப்போது கிருஷ்ணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை வதம் செய்தார் என்பது புராணம். இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்த மண்களம். என குறிப்பிடப் பட்டுள்ளது. பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், மீட்டார் எனவும். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப் படுகின்றது என்பதும் ஒரு புராணக் கதையாகும்.
கோடி கொடுத்தும் உறவினரோடு கூடிக் குலாவி வாழ்வதுதான் இன்பம். எமது அதாவது தமிழர்களின் தாயகமாம் தமிழகத்தில் தீபாவளித் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
— அன்பே சிவம் —