நம்பிக்கை
வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது நம்மீது நாமே நம்பிக்கை வைப்பதாகும். நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும். எவ்விதமான தடைகள் வந்தாலும் நாம் நம்மீது வைத்த நம்பிக்கையையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடலாகாது. அதுமட்டுமல்ல எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால் ஒருபோதும் தோல்வியே ஏற்படாது. செய்யும் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டுமே தவிர முடிவைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. நம்முடைய வாழ்வில் நாம் அனுபவிக்கும் பெரும்பாலான ஏமாற்றத்திற்கும், தோல்விக்கும், மனவருத்தத்திற்க்கும் எமது எதிர்பார்ப்பே காரணமாகும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கூறுகிறது கீதை.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பதே நம்பிக்கையில்த் தானே. நாளை அதாவது அடுத்த கணம் நாம் உயிருடன் இருப்போமா இல்லையா என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத போதும் நாம் திட்டமிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, அது நாம் உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில்த் தானே.
நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் எக்காரியமாகினும் அதன் அடிப்படையான காரணம் “உணவு, உடை, உறைவிடம்” ஆகிய இந்த மூன்று அடிப்படைக் காரணிகளே ஆகும். எந்த ஜீவராசியாக இருந்தாலும் இவ்வுலகத்தில் அது உயிர்வாழ “உணவு, உடை, உறைவிடம்” ஆகிய மூன்றும் தேவை. ஆனால் மனித இனத்தைத் தவிர்ந்த ஏனைய விலங்குகளுக்கு உரோமம், இறகு என்ற இயற்கையான ஆடை அமைந்துவிட்டது. உணவுக்காக ஒரு விலங்கு இறுதிவரை போராடி பெற்றுக் கொள்ளும். ஒரு மான் ஓடிவிட்டால் புலி தன் முயற்சியைக் கைவிடுவதில்லை. துவண்டுபோய் ஓரமாகப் படுத்து விடுவதில்லை. அவமானத்தால் தலை குனிந்து திரிவதில்லை. தொடர்ந்து முயற்சித்து இன்னொரு விலங்கைக் கொன்று உண்டு தனது எடுத்த காரியத்தை நிறைவேற்றும். அதாவது புலிக்குத் தேவைப்பட்டது உணவு. இறுதிவரை போரடிப் பெற்றுக் கொண்டது. அந்த விலங்குக்கு வெற்றி தோல்வி என்று எதுவும் தெரியாது அதற்குத் தேவைப்பட்டது உணவு தனது முயற்சியால் தனது காரியத்தினை நிறைவேற்றிக் கொள்ளும்.
சரி இனி மனிதர்களை எடுத்துக் கொள்வோம். உதாரணமாக ஒருவனது இலக்கு ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வருவது என்று எடுத்துக் கொள்வோம். அதன் அடிப்படைக் காரணம் முதலாவதாக வந்தால் பெயரும் புகழும் கிடைக்கும். அந்தப் பெயரும் புகழும் பணம் ஈட்ட உதவும். அந்தப் பணம் அடிப்படைத் தேவையான உணவு உடை உறைவிடம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும். அவளவுதான். ஆனால் இந்த உண்மையை யாரும் உணர்ந்து கொள்வதில்லை
ஒருவனுடைய வெற்றி இன்னொருவனுக்கு சாதாரணமாக தோன்றலாம். உதாரணமாக ஒருவனுடைய இலட்சியம் அல்லது இலக்கு உலகப் பிரசித்தி பெற்ற தாஜ்மகாலைப் பார்ப்பதாக இருக்கலாம். அந்த முயற்சியில் வெற்றி பெற்று தாஜ்மகாலைச் சென்று பார்த்து வெற்றிப் பெருமிதம் கொள்ளும்போது, அந்த தாஜ்மகால் சுற்று வட்டாரத்தில் பிறந்து வளர்ந்து அங்கு கடலை விற்கும் சிறுவனுக்கு அவரது வெற்றி சர்வ சாதாரணமானதாகவே தோன்றும். இதுதான் வாழ்க்கை. சரி அவர் தனது இலக்கில் வெற்றி பெற்றுவிட்டார் அங்கே “உணவு. உடை. உறைவிடத்திற்கு” என்ன தொடர்பு இருக்கிறது என்ற ஒரு கேள்வி எழுகிறது. அவர் பயணம் செய்யும்போது செய்த செலவுகள் இன்னொருவருடைய “உணவு உடை உறைவிடத்தின்” தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதே அடிப்படையான உண்மையாகும்.
விலங்குகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகளால் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் அல்லது செத்து மடிந்துவிடும். ஆனால் மனிதர்கள் பரந்துபட்ட சிந்தனைகளால் இயற்கையில் இருந்து விலகி வாழ்ந்து தமது முழுத் தேவைகளையும் தம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல்ப் போக இன்னொரு மனிதருடன் இணைந்து வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான். உதாரணமாக வளமற்ற சூழல்நிலையில் வசிக்கும் மனிதன் தனது உணவுத் தேவைக்கு வளமான சூழ்நிலையில் வாழும் உழவனை நாட, வளமான சூழ்நிலையில் வசிக்கும் உழவன் தனது ஏனைய தேவைகளுக்கு பிறரை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.
இந்த உலகில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு காரியத்தை நிறைவேற்று வதற்காகவே கடவுளால் (இயற்கையால்) திட்டமிட்டுப் படைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் எமது கடமைகளை கண்ணியத்துடன் செய்வோம் அதன் பலன் வரும்போது வந்து சேரும். மிளகாய் செடி முளைத்து மூன்று மாதத்தில் பலன் தரும். மாங்கன்று முளைத்து மூன்று வருடத்தில் பயன் கொடுக்கும். அதுபோல எமது உழைப்புக்கேற்ற பலன் என்றோ ஒருநாள் நிச்சயம் எமக்கு கிட்டும். படைத்தவன் படியளப்பான்.
வெற்றி தோல்வி என்பது அவரவர் மனநிலையில்த் தங்கி உள்ளதே தவிர அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் உண்மையாகும்.
இந்த உலகம் உணவு உடை உறைவிடம் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதிலும் இம் மூன்றிலும் உடையும் உறைவிடமும் இந்த உடலை வெளிப்புறமாக பாதுகாக்கிறது. உணவு உட்கொண்டுதான் ஆகவேண்டும். எந்த ஞானியோ, ரிஷியோ எவரும் பசிக்கு, உணவுக்கு விதிவிலக்கல்ல.
பசியின் கொடுமையை அவ்வையார் பின்வருமாறு கூறியுள்ளார்
நல்வழி வெண்பா
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
நாழி அரிசிக்கே நாம்
விளக்கம்:வசதி படித்தவர்களிடம் கயமைக் குணம் உடையவராயினும், மிக உயர்ந்தவராக பாவனை செய்கிறோம்; சென்று இரங்கி வணங்குகிறோம். காலமறிந்து அவரிடம் யாசிக்கிறோம். உதவி கேட்க்கிறோம். உறவுகளை விட்டு கடலைக் கடந்து திரவியம் தேடச் செல்கிறோம், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிற்றினது கொடுமையால்தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.
நல்வழி வெண்பா
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
விளக்கம்: துன்பத்தை அதிகப்படுத்துகிற எனது வயிறே! ஒரு நாளுக்கு உணவை உண்ணாது இரு என்றால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது கிடைக்கும் போது, இரு நாளுக்குரிய உணவை ஏற்றுக்கொள் என்றால், ஏற்கமாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேளையும் உன்னை நிரப்புவதே பெரும் பாடாக இருக்கிறது, உன் தேவைக்காகவே பலருடன் போராடவேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது மிகுந்த வேதனையத் தருகிறது.
நம்பிக்கை தான் வாழ்க்கை. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போம்.
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —