நவராத்திரி விரதம் (03/10/2024 to 12/10/2024)

0 0
Read Time:17 Minute, 48 Second

நவராத்திரி விரதம் 2024 அக்டோபர் 03ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைகிறது.

இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 9 நாட்களும், அம்பாளை தரிசிப்பதற்கு உகந்த நவராத்திரி நாட்களாகும். இருந்தும் வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றன. அவையாவன மாசி மாதத்தில் வரும் “சியாமளா நவராத்திரி”, பங்குனி மாதத்தில் வரும் “வசந்த நவராத்திரி”, ஆடி மாதத்தில் வரும் “ஆஷாட நவராத்திரி”, புரட்டாசி மாதத்தில் வரும் “சாரதா நவராத்திரி” ஆகியவையாகும்.

புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது.

நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும். ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

நவராத்திரி என்பது அம்பிகையின் வழிபாட்டுக்குரிய ஒன்பது இரவுகளாகும். சிவனுக்கு சிவராத்திரி ஒரு இரவு போல அம்பிகைக்கு நவராத்திரி அதாவது ஒன்பது இரவுகள் விதம் அனுட்டிக்கப்படுகிறது.

அம்பாள் அவதாரமென்பது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என துர்க்கை இலட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்த அவதாரமே அம்பிகை அவதாரமாகும். நவராத்திரி பூசையானது வீரம், செல்வம், ஞானம் (கல்வி) மூன்று சக்திகளையும் அடக்கி நிற்கும் பூசையாகும்.

செயல் என்ற கிரியா சக்தியும், இச்சா என்ற அன்புமயமான பக்தியும், ஞானமாகிய கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்கும் என்பதை விளக்குவதே இந்த விரதத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

நவராத்திரி ஒன்பது நாட்களையும் மூன்று மூன்று நாட்களாகப் பிரித்து வீரம், செல்வம், கல்விக்குரிய தெய்வங்களான துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை வணங்கி அனுடிக்கப்படுகிறது.

எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்தே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும்.

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான வீரக்கடவுள் துர்க்கையின் வழிபாடாகும் இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்கின்றான். இம் மூன்று நாளும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் நாட்களாகும்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான செல்வக் கடவுளாகிய இலக்குமியின் வழிபாடாகும். இலட்சுமி, அட்டலட்சுமியாக சகல அட்ட ஐஸ்வரியங்களையும் அளிக்கிறாள் இம் மூன்று நாளும் இலக்குமி தேவியை வழிபாடு செய்யும் நாட்களாகும்.

இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான ஞானக் கடவுள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும் நாட்களாகும். இவளே கலைமகள், கலைவாணி எனவும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதி ஞான (கல்வி) அருள் வழங்குகின்றாள்

ஆயுத பூசை

கடைசி ஒன்பதாம் நாள் நவமி ஆகும். இது “மகாநவமி” என அழைக்கப்படுகிறது. அன்று வீடுகளில் ஆயுத பூசை நாளாக மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தாம் தாம் செய்யும் தொழில்களுக்குரிய ஆயுதங்களை, மாணவர்கள் தமது பாடப் புத்தகங்களை தேவி முன் பூசையில் வைத்து, அவல், பொரி, கடலை, சுண்டல் செய்து படைத்து சகலகலாவல்லி மாலை படித்து வணங்கி அம்பாளின் ஆசியைப் பெறுவதாகும்.

விஜயதசமி

சரஸ்வதி பூசையின் இறுதி நாளான பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். பொதுவாக விஜயதசமி கோயில்களிலேயே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்வு நடைபெறும்.

ஏடு தொடங்குதல் என்பது பாடசாலைக்குச் செல்லத் தயாராகும் பிள்ளைகளுக்கு முதன் முதலாக ஆசிரியர்கள், கல்வி மான்களால் அவர்களது விரல்களால் மண்ணில் தமிழ் எழுத்துக்கள் எழுதிக் காட்டி கல்வியை ஆரம்பித்து வைக்கும் நாளாகும்.

ஓன்பது நாளும் விரதம் நோற்றவர்கள்,விரதத்தினை முடிக்கும் தினம் விஜயதசமி ஆகும். நவராத்திரி விஜயதசமியில் முடிவடைகிறது. விஜயதசமியை “தசரா” எனவும் அழைப்பர்.

மானம்பூ திருவிழா

நவராத்திரியின் இறுதிநாளன்று மானம்பூ திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கபட்ட குதிரை வாகனத்தில் அம்பாள் மானம்பூ வேட்டைக்கு புறப்பட்டுச் சென்று வாழை வெட்டு நடைபெறும். மாமரத்தில் செய்யப்பட அம்பு (மா+ அம்பு) = மானம்பூ எனப்படும். வன்னி மரத்தில் ஒழிந்த மகிஷாசுரனை அம்பிகையானவள் மானம்பூவினால்க் குத்திக் கொன்றதாக புராணம் கூறுகிறது

கன்னி வாழை வெட்டல் (மானம்பூ)

ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய கன்னி வாழை அதாவது குலை போடாத வாழை வெட்டுவது வழமை.

புராணக் கதை

மகிஷாசுரனுடன் அம்பிகை போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவனை வழிபட்டு அவனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரன் வன்னி மரத்தில் ஒழிந்தான் எனவும். தேவி நவமியில் வன்னி மரத்தை வெட்டி அசுரனைச் அழித்ததாகவும், மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுதபூசை செய்து கொண்டாடிய படியால், விஜயதசமி என வழங்கலாயிற்று என்றும் ஒரு புராணக் கதை உண்டு. இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி அழைக்கப்படுகிறது. அசுரனை அழித்த நேரம் மாலை வேளை, இதனை ஞாபகப்படுத்தும் முகமாக மாலை வேளையில் மம்மல் பொழுதில் வாழை வெட்டுவது வழக்கம்.

புராணக் கதை

பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்களுடைய ஆயுதங்கள் எல்லாவற்றையும், ஒர் வன்னிமரத்தின் கீழ் புதைத்து வைத்துவிட்டு சென்றதாகவும். பின் வனவாசம் முடிந்து வந்து, அந்த ஆயுதங்களை அர்ச்சுணன் (விஜயன்) எடுத்து யுத்தம் புரிந்த நாள்தான் விஜயதசமி எனவும் ஒரு புராணக் கதை உண்டு.
நவராத்திரி விரதத்தின்போது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து, நவதானியம் வளர்த்து நவமி வரை தினமும் மாலை வேளையில் பூசை செய்து வழிபடல் வேண்டும்.

நவராத்திரி கொலு

நவராத்திரி பூசையின்போது வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்து வணங்கப்படுகிறது.

களிமண்ணினால் கிருஷ்ணராகவும், ராமராகவும், முருகனாகவும், சிவனாகவும், அம்பாளாகவும் பல நவாத்திரி பொம்மைகள் செய்து பூசை அறையில் வைத்து அலங்கரிக்கப் படுகிறது. ஒரே களிமண்ணினால் வேறு வேறு உருவங்கள் உருவாக்குவது போல, சிவன் என்ற ஒரே சக்தி மானிட ஈடேற்றத்துக்காக பல வடிவங்கள் எடுக்கும் அதாவது முருகனாக, அம்பாளாக, விநாயகராக தோற்றமெடுத்து உலகைக் காக்கும் என்று பொருளாகும். இதனையே நவராத்திரிக் கொலு உணர்த்துகிறது.

  • விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் விரதமிருந்து இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
  • ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று உணவுண்ணாமல் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
  • விஜயதசமி அன்று காலையில் உணவுப்பதார்தங்கள் தயார் செய்து தேவிக்குப் படைத்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் படித்து விரதத்தினைப் பூர்த்தி செய்யலாம்.
  • இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் நன்று என்பது ஐதீகம்.

நவராத்திரியில் தேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

துர்க்கை அவதாரம்,

தேவர்களுக்கும், பூவுலகமக்களுக்கும் துன்பங்களைக் கொடுத்துவந்த அசுரர்களின் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாத நிலையில், எல்லோரும் இறைவனிடம் சென்று, அசுரர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டிநின்றார்கள். இதன் காரணமாக, அசுரர்களின் தலைவனும், பல கொடுமைகளைக் கொடுப்பவனுமாகிய மகிடாசூரனை அழிப்பதற்கு, துர்க்கை அம்மனாக அவதாரமெடுத்து மகிஷாசூரனைச் சங்காரம் செய்த சத்தியே துர்க்கை அம்பாள் அவதாரமாகும்.

இலக்குமி

இவர் செல்வத்தை வழங்கும் பெண் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் வணங்கப்படுகிறாள்.

சரசுவதி

படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் வணங்குகிறார்கள்.

இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீரானது, இந்துக்களின் பார்வையில், படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.

சகலகலாவல்லி மாலை

குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டி தமிழில் பாடிய பாமாலை ஆகும். அழகிய தமிழ் மொழியில் பாடப்பட்ட சகலகலாவல்லி மாலை “வெண்டாமரை” எனும் பாடலில் தொடங்கி “மண்கண்ட வெண்குடை”. எனும் இறுதிப் பாடலில் முடிகிறது. இதில் பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. நவராத்திரி காலங்களில் ஒன்பது நாளும் சகலகலாவல்லி மாலை சைவ மக்களால் பாடப்பட்டு வருகின்றது.

பாடல் வரிகள்

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

–— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %