பக்தியும் ஆன்மீகமும்
பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது கேள்வி பதில் மற்றும் விளக்கங்களில் இருந்து நான் அறிந்து உணர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பக்தி மார்க்கம் என்பது இறைவன்மேல் அன்புவைத்து எம் எண்ணங்களை வெளிமுகமாகச் செலுத்தி அவரவர் சார்ந்துள்ள மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ரவாறு சிலை வழிபாட்டை மத வழிபாட்டை, மத கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுவது. இதுவே பக்தி வழிபாடு என அழைக்கப்படும். சித்தர்கள் பார்வையில் இது புறவழிபாடு என அழைக்கப்படுகிறது. அதாவது ஐம்புலன்களின் துணையோடு நாம் வெளிப்புறமாக இறைவனைத் தேடும் முயற்சியாகும். இது அவரவர் சார்ந்துள்ள கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு மதவழிபாடாகும். இம் மத வழிபாட்டை மேற் கொள்பவர்கள் பக்தர்கள் என அழைக்கப்படுவார்கள்.
ஆன்மீகம் என்பது மனதை, எண்ணங்களை உட்புறமாகச் செலுத்தி தான் யார்?என்று தேடி அதனைக் கண்டுணர்ந்து (முற்பிறப்பு ரகசியங்களை, தாம் செய்த பாவங்களை, பிறப்புக்கு முன் உள்ளதை அறிந்து) அவற்றை இறை அருள் கொண்டு களைந்து இறுதியில் அந்தப் பரம்பொருளுடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்வதாகும். இவர்கள் “ஆன்மீகவாதிகள்” அல்லது யோக மார்கத்தைக் கடைப்பிடிப்பதனால் “யோகிகள்” எனவும் அழைக்கப் படுகிறார்கள். சித்தர்கள் இதனை அகவழிபாடு என அழைக்கிறார்கள். இது இறைவனை தன்னுள் தேடும் வழிமுறையாகும்.
தன்னை அறிந்து கொண்டவர்கள் சித்தம் தெளிந்தவர்கள் ஞானம் அல்லது முக்தி நிலை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அனைத்தும் இறைவனால் அழிக்கப்படும். இவர்களுக்கு மீண்டும் பிறப்பில்லை, இதனால் இவர்களுக்கு மரணமும் இல்லை. இதுவே “ஞானம் பெறுதல்” அல்லது “முக்தி அடைதல்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஞானம் பெறுவதட்குரிய வழிமுறையே யோகம், தியானம் ஆகும். இதுவே ஆன்மீக மார்க்கமாகும். ஆன்மீகத் தேடல் என்பது இனம், மத, மொழிகளைத் தாண்டியது.
“மதத்தை தேடுபவனுக்கு கடவுள் தெரியாது
கடவுளைத் தேடுபவனுக்கு மதம் தெரியாது“
யோகம், யோகமார்க்கம் என்றால் என்ன? பக்தி என்றால் என்ன? நாம் ஏன் யோகம் பயிலவேண்டும்? கோவில்களை சென்று வழிபட்டால் போதாதா? என்ற கேள்விகள் எல்லோரிடமும் உண்டு.
பக்தி என்பது புற வழிபாடாகும். புறக் கணங்களால் இறைவனைத் தேடுவது. பக்தி என்பது வெளிப்புறமாக அவரவர் வாழும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இறைவனை பின்பற்றும் மத வழிபாடாகும். அவரவர் சார்ந்திருக்கும் மதத்திற்கு உரிய தெய்வங்களை வணங்குவது மதங்களை, சிலை வழிபாட்டை பின்பற்றுவது பக்தி மார்க்கமாகும் அம்மதத்தின் கோட்பாடுகளை பின்பற்றுவது ஆகும். ஒவ்வொரு மதமும் அவரவர் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகளையும் தவிர்க்க வேண்டிய தீய வழிகளையும் எடுத்துரைக்கின்றன. மனிதன் மனிதனாக வாழ மதங்கள் போதிக்கின்றன.
ஒவ்வொரு மதமும் பஞ்சமா பாதக செயல்களான கொலை களவு பொய் வஞ்சனை ஏமாற்றுதல் அபகரித்தல் போதைப்பொருள் பாவித்தல் ஏனைய உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களைத் தவிர்த்து நல்வழியில் மனிதன் முன்னேற கற்றுக் கொடுக்கின்றது.
இன, மத, மொழி வேறுபாடில்லாது இறைவனைத் தன்னுள்ளே உள்முகமாக தேடுவது ஞான மார்க்கமாகும்.
இவை இந்து மதத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு மார்க்கங்களாக வகுக்கப் பட்டிருக்கிறது.
சரியை என்பது எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதும், ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பதும், எல்லாமே ஈசன் என்று உணர்ந்து கருணையோடு இறைவனை எண்ணி பூப்பறித்தல், கோவிலை சுத்தம் செய்தல், போன்ற திருக்கோயில்களில் செய்யும் தொண்டுகள், சிவனடியார்களை உபசரித்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற உடலால் செய்யும் தொண்டுகளாகும் சரியை வழியில் தொண்டு செய்து முத்தி அடைந்த மகாஞானி திருநாவுக்கரச நாயனார் ஆவார்.
அடுத்ததாக கிரியை எனப்படுவது சரியைத் தொண்டுடன், இறைவனை நினைந்து பஜனை பாடுவது இறைவனது புகழ் பாடுவது, பரப்புவது போன்றன அமையும். திருஞானசம்பந்த நாயனார் கிரியை வழியில் இறைவனை வழிபட்டு முத்தியடைந்த மகாஞானி எனப் போற்றப்படுகிறார்
சரியையும் கிரியையும் பக்தி மார்க்கத்தில் சேர்க்கப்படுகிறது. ஒருவன் மனிதனாக வாழ பக்தி மார்க்கம் வழி சொல்கிறது. பக்தியின் மூலம் வெளிப் புறமாகத் தேடி இறைவனைக் கண்டு கொள்ள முடியாதபோது அந்த இறைவனே ஒரு பாலமாக அமைந்து அவனை உள்முக தேடலுக்கு வித்திடுகிறார். என்பதே உண்மையாகும்
யோகம் அல்லது யோகப் பயிற்சி எனப்படுவது ஐம்புலன்கள் மூலமாக வெளிமுகமான தேடல்களில் இருந்து உலக இன்பங்களில் இருந்து விடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி உள்முகமாகச் செலுத்தி இறைவனத் தேடும் பயிற்சி முறையாகும்.
ஆழ்ந்த தவத்தால் சிவனோடு கலந்து மேற்கொள்ளும் தவ வாழ்வே யோக மார்க்கம் எனப்படும். திருமூலர் திருமந்திரத்தில்க் குறிப்பிட்டுள்ள இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு நிலைகளில் படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஈசனை அடையும் முறையே யோகம் எனப்படும்.
யோகப் பறிற்சியின் மூலமாக இறுதியில் கிட்டுவது ஞானம் எனப்படும்.
இதுவே இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்களாகும். இங்கு சரியை கிரியை ஆகிய மார்க்கங்கள் பக்தி மார்க்கத் தினையும் யோகம் ஞானம் ஆகியவை ஆன்மீக மார்க்கத்தினையும் போதிக்கின்றது.
அகத்திய மாமுனிவர், திருமூலர், அவ்வையார்,,வள்ளலார், ரமண மகரிஷி போன்ற ஞானிகள் எமக்கு ஞான மார்கத்தைப் போத்தித்து தாமும் கடைப்பிடித்து முத்தி அடைந்தவர்கள் ஆவார்கள்.
பக்தி மார்கத்திற்கும் (புறவழிபாடு) ஆன்மீக மார்க்கத்துக்கும் (அக வழிபாடு) உள்ள வேறுபாட்டினை திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை
“தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே”. – திருமந்திரம்.
விளக்கம்: கோயில் சென்று வணங்கி அக்கோயிலின் தீர்த்தக் குளத்தில் நீராடினால் தமது பாவங்கள் நீங்கும் என்று எண்ணுவது ஒருபோதும் நடைபெறாது. (அதாவது பக்தி மார்க்கம் அதாவது புறவழிபாடு) அதை விடுத்து இறைவனை மூச்சினை அடக்கி (பிராணாயாமம் – யோகப்பயிற்சி) தன்னுள்ளே தேடினால் அந்த குளிர்ச்சி பொருந்திய இறைவன் அகத்தினிலே தென்படுவான். தனது சிந்தையில் தீர்த்தம் உணர்ந்து – (மூலாதாரத்தினில் அக்கினியாக இருக்கும் குண்டனி சக்தியானது சாதனையின்போது சிரசை அடையும்போது அது குளிர்ச்சி அடைந்து அமுதம் சுரக்கும்) அண்ணாக்கினில் அமுதம் அருந்தும் போது சிந்தையில் எப்போதும் இறைவன் வீற்றிருப்பதாய் உணரமுடியும்.
தமது கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தம்மை அலங்கரித்து ஆலயம் சென்று மதக் கடவுளை, சிலை வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் பக்தர்களாவார்கள். யார் சாமி? யார் கடவுள்? கடவுள் எங்கே இருக்கிறார்? என்று தேடிக் கொண்டிருப்பவர்கள் “சாமியார்?” ஆவார்கள். குடும்பம்மேல் பற்றும் இல்லாமல் இறைவன் மேலும் முழு நம்பிக்கையோ, பற்றோ இல்லாமல் காவி உடையும், உருத்திராட்சமும் சில மத சின்னங்களும் அணிந்து வாழ்பவர்கள் சந்நியாசி ஆவார்கள்.
ஆன்மீகம் என்பது தன்னுள் மறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே தேடிக் கண்டுகொள்ளும் அகவழிபாடாகும். இதுவே ஞான மார்க்கமாகும். இதுவே ஆன்மீக மார்க்கம் எனவும் அழைக்கப்படும். ஆன்மீக மார்க்கத்தினை மேற்கொள்பவர்கள் “ஆன்மீகவாதிகள்” என அழைக்கப்படுவர். தன்னை அறிந்து, தன் முன் பிறவிகளை அறிந்து, தனக்குள் இறைவனைக் கண்டறிந்து அவன்மூலம் தான் செய்த பாவங்களைப் போக்கி அந்த இறைவனுடன் சங்கமமாவதே “ஞானம்” அல்லது “முக்தி” எனப்படும். ஞானம் அடைவதற்குரிய வழிமுறையே “யோகம்” அதாவது யோகப் பயிற்சியாகும்.
தன்னை அறிந்து, தனக்குள் இறைவனைக் கண்டு அந்த ஜோதியை தன் சித்தத்தில் தரிசித்து அந்த ஜோதியுடன் இரண்டறக் கலந்து கொண்டவர்கள் முக்தி அடைந்தவர்கள் “முனிவர்கள்” ஆவார்கள். இவர்களையே சித்தம் தெளிந்ததால் “சித்தர்கள்” எனவும், ஞானம் எய்தியதால் “ஞானிகள்” எனவும் அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் தம்மை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முற்றும் திறந்தவனிடம் எவ்விதமான அடையாளமும் இருக்காது. அவர்கள் உலகப் பற்ரிலிருந்து விடுபட்டவர்கள். எவ்விதமான விருப்பு வெறுப்பும் இல்லாதவர்கள். உலகமக்களை துன்பங்களில் இருந்து விடுவிக்க முயல்பவர்கள்.
நாம் ஏன் யோகம் பயிலவேண்டும்? அதனால் என்ன பயன்? கோயில்கள் சென்று இறைவனை வழிபட்டால் போதாதா? என்ற பல கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. நாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்துக் கொண்டே இருப்போம். பாவம் செய்தாலும் அவற்றை அனுபவிக்க மறுபிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் அவற்றை அனுபவிக்க மறுபிறவி உண்டு. என்பதே விதியாகும். இப்படியாகப் பல பிறவிகள் எடுத்து நாம் செய்யும் பாவ புண்ணியங்களைப் போக்கி இறுதியில் அந்தப் பரம்பொருளுடன் ஐக்கியமாவதே மானுடப் பிறப்பின் ரகசியமாகும். யோகப் பறிற்சியானது தன்னுள்ளே தேடித் தன்னை அறிந்து தான் செய்த பாவங்களை அறிந்து அவற்றைப் போக்கி பிறவிப்பிணி அறுத்து அந்தப் பரம்பொருளுடன் ஐக்கியமாகும் வழிமுறைகளைப் போதிக்கின்றது.
நாம் ஒரு ஊருக்குப் போவதற்கு பல வழிகள் இருக்கும். அதிலே மிக விரைவாக இலக்கை அடைவதற்குரிய மார்கத்தைக் கண்டறிந்து சென்றடைவதுபோல, ஞான மார்கமானது பல பிறவிகளைத் தவிர்த்து தன்னுள்ளே தேடி எங்கிருந்து வந்தோமோ மீண்டும் அந்தப் பரம்பொருளுடன் ஐக்கியமாகும் வழிமுறையாகும்.
யோகம் அதாவது யோகக்கலை எனப்படுவது சித்தர்களும் யோகிகளும் தவமிருந்து சிவனிடமிருந்து அறிந்து கொண்ட யோகப் பயிற்சி இரகசியங்களாகும். இக்கலையானது குருகுல முறைப்படி காலம் காலமாக, வழிமுறை வழிமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. யோகக் கலையை, அதன் நுட்பங்களை, அதனைப் பின்பற்ற வேண்டிய முறைகளை அகத்திய முனிவர், திருமூலர், பதஞ்சலி முனிவர், அவ்வையார் சிவவாக்கியர் போன்ற பல மகான்கள் உரைத்திருக்கிறார்கள்.
நாம் கடவுள்மீது மிகுந்த பக்தி உள்ளவர்களாக இருந்து நம்பிக்கை வைத்து பல திருத் தலங்கள் சென்று வணங்கி வந்த போதும் எங்கு சென்று தேடியும் கடவுள் என்ற சக்தியை அந்த ஜோதியை எம்மால் தரிசிக்க முடியாதபோது, நாம் தேடும் கடவுள் எமக்குப் புலப்படாத போது எமது சிந்தையில் இத்தனையும் தாண்டிய ஒரு சக்தி உண்டு என்ற ஒரு உள்ளுணர்வு தோன்றும். அதுவே ஆன்மீகச் சிந்தனை எமது உள்ளத்தில் விதைக்கப் பட்டுள்ளதற்கான ஆரம்ப நிலையாகும். அந்த உண்மையான உள்ளகத் தேடலே எமக்கு ஒரு குருவை அடையாளப்படுத்தி எம்மை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்லும். இதுவே நாம் பக்தி மார்க்கத்தில் இருந்து ஆன்மீக மார்க்கத்துக்குள் பிரதேசித்து விட்டோம் என்பதனை எமக்கு உணர்த்தும்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —
ஆத்ம வணக்கம்.
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்
VERY NICE
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்