பதி, பசு, பாசம்

0 0
Read Time:140 Minute, 34 Second

பதி, பசு, பாசம்

இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போது இருந்த மன நிலைக்கும் எழுதி முடிக்கும்போது இருந்த எனது மனநிலைக்கும் இடையில் மிகுந்த மாற்றம் தெரிந்தது.

விளக்கம்: பதியாகிய இறைவனின் அம்சமாகிய ஆன்மா பாசத்தில் நாட்டம் கொண்டு உலக இன்பங்களில் திளைக்கும்போது பசு என அழைக்கப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று உணர்ந்து அதிலிருந்து விடுபட்டுத் தூய்மை அடையும்போது அந்த ஆன்மா பதியாக (இறைவனாக) மாறுகிறது. அதாவது பதியும் பசுவும் (இறைவனும் – ஆன்மாவும்) ஒன்றே என்பது பொருளாகும்.

அதாவது இறைவனே எல்லாம், ஆன்மாக்களாகிய நாமும் எல்லா உயிரினங்களும் இறைவனின் அம்சமே என்று கூறுவதிலும் பார்க்க எல்லாம் இறைவனே என்ற முழுமையான மனநிலையே தோன்றுகிறது.

அதாவது நாம் வணங்கும் சிவன், நாம் விரும்பும் பந்த பாசங்கள், இந்தப் பூமி, ஐம்பூதங்கள் எல்லாம் அந்த சிவனே என்று உணரும்போது ஒரு விரக்தியான மனநிலையே தோன்றுகிறது. அதாவது எதுவுமே இல்லாமல் இல்லாத ஒன்றிற்காக நாம் எத்தனை போராட்டங்கள், எத்தனையோ உணர்ச்சிகள் ஆனால் எதுக்குமே அர்த்தமில்லை என்று உணரும்போது இறைவன் மீதே கோபம் வருகிறது. உலகம் இயங்கவேண்டும் என்பதற்காக எமக்கு பாசத்தினை (ஆணவம், கன்மம், மாயை) அவனே உருவாக்கி அதில் எம்மை உழல வைத்து (ஆன்மாக்களை முட்டாள்கள் ஆக்கி) முக்கியமாக இனப்பெருக்கம் செய்ய வைத்து இந்த உலகத்தினை இயங்க வைத்து பின்னர் எமக்கு பாசம் என்றால் என்ன என்று புரியவைத்து அதிலிருந்து விடுபடவைத்து மீண்டும் எம்மை தன்னுடன் இணைத்து முக்தி என்ற நிலையை அடைவைக்கிறான்.

அதாவது இறைவனில் இருந்து தெறித்த துளிகளே தூய்மையான, புனிதமான ஆன்மாக்கள். அவற்றுடன் பாசம் கலக்கும்போது அவை உலக இன்பங்களில் நாட்டம் கொள்கின்றன. மீண்டும் பாசத்தில் இருந்து விடுபடும்போது மீண்டும் அதே தூய, புனித ஆன்மாக்கள் ஆகி அந்த இறைவனுடன் இணைந்து கொள்கின்றன. எதற்கு இந்த நாடகம். எதற்காக இந்த பஞ்ச பூதங்கள், இந்த உலகம் இந்த உயிரினங்கள் இந்தக் கேள்விக்கு உரிய பதில் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.

இதற்கு ஒரு கதை

ஒரு தூய்மையான அப்பா அம்மாவுக்கு (பதி) பத்துப் பிள்ளைகள் (பசு). அனைவரும் தாய் தந்தையர் போலவே தூய்மையானவர்கள். அந்தப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பட்டினம் போய் ஒவ்வொரு பிள்ளைக்கும் பணம் கொடுத்து (பாசம்) தனித்தனியே பட்டினம் சுற்றிப் பார்த்துவர அனுப்பி வைத்தார்கள். தனித் தனியாகச் சென்ற ஒவ்வொரு பிள்ளையும் தனது கண்ணில் காணும் பொருட்களை வாங்கி அனுபவித்தார்கள். ஒன்று இனிப்புப் பண்டம் வாங்கி உண்டது. இன்னொன்று மது வாங்கி அருந்தியது. இன்னொன்று புகை பிடித்தது. இன்னொன்று புத்தகம் வாங்கிப் படித்தது. தாம் காணும், கிடைக்கும் பொருளுக்கு ஏற்றவாறு அதை அதை அனுபவித்தார்கள். அதன் பலனையும் அனுபவித்தார்கள். இறுதியில் அவர்களின் தாய், தந்தையர்கள் அவர்களை அணுகி அவர்கள் எதில் மூழ்கி இருக்கிறார்களோ அதன் நன்மை தீமைகளை அவர்களுக்கு விளக்கி அந்தப் பழக்கங்களில் இருந்து அவர்களை விடுபடவைத்து மீண்டும் தம்முடன் இணைத்துக் கொண்டார்கள்.

இதுவே பதி, பசு, பாசமும், இந்த உலக இயக்கமும், முக்தியும்.

ஆன்மீகத்தினை முதன் முதலில் இவ்வுலகிற்கு கூறியவர்களில் அகத்தியரும், திருமூலருமே எம்மால் அறியப்படுகிறார்கள். ஏனைய சித்தர்கள் யாவரும் இவர்களது வழிவந்தவர்களே. அதில் திருமூலரது திருமந்திரம் படிக்கும் வாய்ப்பே எனக்குக் கிட்டியது. உலக தோற்றம், உயிர்களின் பிறப்பு, இறப்பு, முக்தி, மனிதன் எப்படி வாழவேண்டும், எப்படி இறைவனை வணங்கவேண்டும், முக்திக்கு வழி ஆகிய கருத்துக்கள் மிகவும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாக 3000 பாடல்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் ஒரு சந்தேகம் எழும்போது திருமந்திரத்தில் அதன் பதில் கிடைக்கிறது. ஆன்மீகத்தில் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் திருமந்திரத்தில் கிடைக்கும் விளக்கமே எனது மனதின் இறுதி முடிவாகவும் அமைந்துவிட்டது. அதனால் இக்கட்டுரையில் ஆங்காங்கே திருமந்திரத்தின் விளக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

பதி, பசு, பாசம் (முப்பொருள்)

  • பதி (இறைவன்)
  • பசு (ஆன்மா)
  • பாசம் (பற்றுக்கள், தளைகள்)

மும்மலங்கள்

  1. ஆணவம்
  2. மாயை
  3. கன்மம் (வினை) – (நல்வினை மற்றும் தீவினை)

    மூவினைகள்

    1. தொல்வினை (பழைய வினை)
    2. நுகர்வினை (தற்போது சேர்க்கும் வினை)
    3. வரும்வினை (எதிர்காலத்தில் சேர்க்க இருக்கும் வினை)

    பதி (இறைவன்), பசு (ஆன்மா), பாசம் (தளை)

    சைவ சித்தாந்தத்தில் அடிப்படைத் தத்துவமாக பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் குறிப்பிடப்படுகிறது. இவை மெய்ப்பொருள்கள் (முப்பொருட்கள்) என அழைக்கப்படுகிறன.

    • பதி என்பது இறைவனைக் (சிவன்) குறிக்கிறது.
    • பசு என்பது ஆன்மாக்களைக் குறிக்கிறது.
    • பாசம் என்பது ஆன்மாக்கள், பசுவை (இறைவனை) அறிய முடியாமல், அடைய முடியாமல் உலக இன்பங்களில் கட்டுண்டிருக்கும் அறியாமையைக் குறிக்கிறது. அதாவது பாசம் என்பது ஆன்மாக்களை உலக இன்பங்களுடன் பிணைக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைக் குறிக்கிறது.

    ஆன்மாவானது பாசங்களிலிருந்து விடுபடும்போது (உலக இன்பங்களில் இருந்து விடுபடும்போது), பதியுடன் (இறைவனுடன், சிவனுடன்) ஒன்றரக் கலந்து கொள்ளும் என்பதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆன்மாவானது இறைவனுடன் ஐக்கியமாவதே (முழுமையாக இணைந்து கொள்வதே) பிறப்பு இறப்பற்ற முக்தி நிலை என அழைக்கப்படுகிறது.

    பதி, பசு, பாசம் ஆகிய இந்த முப்பொருள்களின் தொடர்பையும், ஆன்மா (பசு) எப்படி பாசத்தில் இருந்து விடுபட்டு பதியுடன் (இறைவனுடன்) கலந்து கொள்கிறது என்பதனையும் சைவ சித்தாந்த நூல்கள் விளக்குகின்றன.

    அதாவது உலக மாயையில் உலக இன்பங்களில் கட்டுண்டிருக்கும் ஆன்மா தன்னுடைய இயல்பை உணர்ந்து, தான் யார் என்று அறிந்து, பாசங்களிலிருந்து விடுபட்டு சிவனுடன் ஐக்கியமாகும் பேரின்ப நிலையை அடைவதற்குரிய வழிமுறையை விளக்குகின்றது சைவ சித்தாந்தம்.

    பாசம் என்பது ஆன்மாக்கள் எப்படி இறைவனை அறிய முடியாதவாறு உலக இன்பங்களில் திளைத்திருக்கிறது என்பதனை விளக்குகிறது. பாசம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று வினைகளாக பிரிக்கப்படுகிறது. இவை மும்மலங்கள் என அழைக்கப்படுகிறது.

    1. ஆணவம்: உயிரின் இயல்பை மறைக்கும் அகங்காரம்.
    2. கன்மம்: ஒருவர் தனது முந்தைய மற்றும் தற்போதைய பிறவிகளில் செய்த நன்மை, தீமைகளின் (பாவம் மற்றும் புண்ணிய செயல்களின்) பலன் ஆகும்.
    3. மாயை: மாயை என்பது உண்மையில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் மாயத்தோற்றம் அல்லது அழியும் பொருட்களை நிரந்தரமானவை என்று நம்பவைக்கும் பிரமை ஆகும்.

    இந்த மூன்று பாசங்களும் ஆன்மாவை உலக இன்பங்களில் மயங்கச் செய்து இறைவனிடம் செல்ல விடாமல் தடுக்கும் தடைகளாகும்.

    சைவ சமயம் – இந்து சமயம் (மதம்)

    சைவ சமயம்: ஆதியில் மனிதர்கள் (தமிழர்கள்) கடவுளை நம்ப ஆரம்பித்த காலத்தில், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மந்திரங்கள், ஆகம விதிமுறைகள் அற்ற பொதுப்படையான ஒரு சமயவழிபாடு ஆகும்.

    இந்துமதம் (சமயம்): இந்து மதம் என்பது வேதங்களை (மந்திரங்களை) தமது அடிப்படை நூலாக ஏற்றுக்கொண்ட, தனித்தனிக் கடவுளை முழுமுதலாகக் கொண்ட மத வழிபாடாகும். பாரம்பரிய நம்பிக்கைகள், வழிபாடுகள், ஆகமங்கள், இதிகாசங்கள், ஆகியவற்றை உள்ளடக்கிய கடவுள் வழிபாடே இந்துமதம் ஆகும்.

    பதி (இறைவன்)

    பதி அதாவது இறைவன் என்றால் என்ன? இறைவனின் தோற்றம் மற்றும் இறைவனில் இருந்து எப்படி படைப்புக்கள் உருவாகின? பதிக்கும் பசுவுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை (அதாவது இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை) என்ன? என்று திருமூலர் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.

    சித்தர்களுக்கெல்லாம் சித்தராக விளங்கிய, கைலாசத்தில் சிவனிடத்தில் இருந்து வேதங்களைக் கற்று, சிவனின் ஆணைப்படி பூவுலகம் வந்து, இப்பூவுலக மானுடர்களது ஆன்மீக ஈடேற்றத்துக்காக அத் தத்துவங்களை அருளிய திருமூலரது திருமந்திரத்தில் கூறப்பட்ட பதி, பசு ஆகியவற்றின் தோற்றத்தினை, தொடர்பினை பின்வருமாறு விளக்கியுள்ளார்.

    திருமந்திரம் – இரண்டாம் தந்திரம் – படைத்தல் – பாடல் 381

    ஆதியோடு அந்தம் இலாத பராபரம்: ஆதியும் அந்தமும் (ஆரம்பமும், முடிவும்) இல்லாத அசையாத சக்தி. அதுவே பராபரம் (பரமசிவன், பராத்பரம், பரம்பொருள், பராபரன்) என அறியப்படுகிறார். தனக்கு மேல் ஒன்று இல்லாதது பராபரம் எனப்படும். போதம் அது ஆகப் புணரும் பராபரை: அசையாத சக்தியாகிய பாரபரனில் இருந்து ஒரு அசைவு தோன்றும்போது அங்கு அசையும் சக்தியாகிய பராபரை (பராசக்தி) தோன்றுகிறது. பராசக்தியானது பராபரனுடன் இணைந்தே இருக்கும். இதுவே அர்த்தநாரீஸ்வரர் (சிவலிங்கத்தின்) தத்துவம் ஆகும்.

    (நீரானது அசையாமல் தேங்கி நிற்கும்போது அது அசையாத சக்தியாக இருக்கும். அந்த நீரானது புறத்தூண்டுதலால் அசையும்போது அங்கு அசையும் சக்தி உருவாகிறது. ஆனால் அந்த அசையும் சக்தியும் அசையாத சக்தியும் அந்த நீரே) அது போலவே பரபரனும் பராபரையும் ஒன்றாகவே சிவசக்தியாக அர்த்தநாரீஸ்வரராக இருக்கும். சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்: அசையாத சக்தியில் இருந்து அசையும் சக்தி உருவாகும்போது அங்கே முதலில் ஜோதி (தூய ஒளி) தோன்றுகிறது. அந்த ஜோதியே சிவனாக உருவகப் படுத்தப் படுகிறது. ஜோதி (சோதி, தூய ஒளி) யில் பரம், அதாவது சிவன், ஜோதி (தூய ஒளி) வடிவாகக் காட்சி அளிப்பான் என்பது பொருளாகும் ஆனால் பாரபரனே சிவனாகும். தீதில் பரை அதன் பால் திகழ்நாதமே: அடுத்ததாக அங்கு குற்றமற்ற (தெளிவான) ஒலி தோன்றுகிறது. அந்த ஒலியே (நாதம்) சக்தியாக (தேவியாக, உமையாக) உருவகப் படுத்தப் படுகிறது. நாதமே பரை (சக்தி, தேவி) என அழைக்கப்படுகிறார். அந்த பரனும் பரையும் (சிவனும் தேவியும், ஒளியும் ஒலியும்) எப்போதும் இணைந்தே இருக்கும். அதுவே அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    குறிப்பு: சிவன் கோவில்களில் சிவன் ஒருபோதும் தனியாகக் காட்சி கொடுப்பதில்லை. சிவலிங்கமாகவே அதாவது அர்த்தநாரீஸ் வரராகவே காட்சி கொடுக்கிறார். உமாதேவிக்கு என்று ஆலயங்கள் இல்லை.

    விளக்கம்: ஆதியும் அந்தமும் இல்லாத அசையாத சக்தியாக இருக்கும் பராபரத்தில் இருந்து அசையும் சக்தி உருவாகும்போது அங்கு ஒளியும் ஒலியும் தோன்றுகிறது. அதாவது இடி முழக்கத்தின்போது மின்னலும் முழக்கமும் ஒரே நேரத்தில் தோன்றினாலும், நாம் முதலில் காண்பது மின்னலே (ஒளியே), பின்னர் எமது காதுகளுக்கு முழக்கம் (ஒலி) கேட்கிறது. இதுவே அந்த தூய ஜோதி முதலிலும் தூய ஒலி அடுத்ததாகவும் கொள்ளப்பட்டு அது சிவம் சக்தியாக கருதப்படுகிறது.

    அடுத்ததாக அசையாத சக்தியாகிய பராபரனும் அசையும் சக்தியாகிய பாராசக்தியும் சக்தியாக இருப்பதனால் எம்மால் உணர முடியாமலிருக்கிறது, அதிலிருந்து தோன்றும் தூய ஒலியும் (ஜோதியும்) தூய ஒலியும் உணரப்படக்கூடியதாக இருப்பதால் அதுவே சிவன் சக்தி என வகைப்படுத்தப் படுகிறது.

    ஆன்மீகவாதிகள் தமக்குள்ளே அகக்கண்களால் தரிசிக்கும் ஜோதியே அந்த தூய ஒளியாகும். உள்ளே உணரப்படும் ஒலியே அந்தத் தூய ஒலியாகும்.

    தூய ஒளி, ஒலி: நாம் அன்றாடம் கண்களால் காணும் சூரிய ஒளி அல்லது வெண்ணிற ஒளியானது ஏழு வர்ணங்களால் ஆனது. அதாவது ஒளியானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களின் கலவையாகும். ஒளியானது மழைத்துளியுள் பட்டு சிதறும்போது இந்த ஏழு நிறங்களும் தனித் தனியாகப் பிரிந்து வானவில்லாகக் காட்சியளிக்கின்றன.

    ஆனால் தூய ஒளியானது புறக் கண்களால் பார்க்க முடியாது. அகக்கண்களால் (மூன்றாவது கண் அல்லது நெற்றிக்கு கண்) மட்டுமே காண முடியும்.

    அதுபோலவே எமது காதுகளுக்கு சில குறிப்பிட்ட ஒலி அதிர்வுகளை மட்டுமே கேட்கும் ஆற்றல் உள்ளது. தூய ஒலியை கேட்கும் ஆற்றல் உள் மனதால் மட்டுமே முடியும். அதாவது ஞானிகளுக்கு மட்டுமே தூய ஒளியையும், தூய ஒலியையும் காணும் உணரும் சக்தி (ஆற்றல்) இருக்கும்.

    அதாவது சுருக்கமாக, திருமூலர், “ஆரம்பமும் முடிவும் இல்லாத அசையாத சக்தியாகிய பராபரம் (பரம்பொருள்), தன்னுள் அசைவை தோற்றுவிக்கும். அதன்போது அசையும் சக்தியாகிய பராபரை வெளிப்படும். பராபரம் – பராபரை இரண்டும் எப்போதும் இணைந்தே இருக்கும். அப்போது அதிலிருந்து ஒளியும் (சிவன் அசையாத சக்தி) அடுத்து நாதமும் (உமை – அசையும் சக்தி) தோன்றுகிறது. அந்த ஒளி, ஒலியின் சேர்க்கையால் பிரபஞ்ச தோற்றமும் பஞ்ச பூதங்களும் தோன்றுகின்றன” என்று விளக்குகிறார். எனவே பதி என்பது அர்த்தநாரீஸ்வரர் (சிவன் – பார்வதி) என பொருள் கொள்ளப்படும்.

    அசையாத சக்தி – அசையும் சக்தி

    விஞ்ஞான விளக்கம்: ஒரு பொருளில் அல்லது அந்த அமைப்பில் சேமிக்கப்பட்டுள்ள அசையாத சக்தியானது பயன்படுத்த முடியாமல் இருக்கும். அப்பொருளில் மாற்றம் ஏற்படும்போது அந்த சக்தி பயன்படுத்தக்கூடிய அசையும் சக்தியாக மாறும்.

    அசையாத சக்தி என்பது இயக்கமில்லாமல் இருக்கும் (இயக்கத்தில் இல்லாத), ஒரு இடத்தில் தேங்கியுள்ள, ஆனால் தேவைப்படும்போது வெளிப்படும் அல்லது வேலையைச் செய்யக்கூடிய ஒரு ஆற்றல் (சக்தி) வடிவமாகும்.

    அந்தப் பொருளில் இயக்கம் ஏற்படும்போது அங்கு தேங்கியிருந்த அசையாத சக்தி, அசையும் சக்தியாக உருப்பெறுகிறது. அதிலிருந்தே ஒளி, ஒலி, வெப்பம் போன்ற சக்திகல் வெளிப்படுகிறன.

    விஞ்ஞான பூர்வமான உதாரணமாக: ஒரு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்ட நீரை அசையாத சக்தியாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது அங்கே அசையாத சக்தி சேமிக்கப் பட்டுள்ளது. பயன்படுத்த முடியாது. அந்த நீர் கீழே விழும்போது அங்கு சேமிக்கப்பட்டிருந்த அசையாத சக்தி வேலையைச் செய்யக்கூடிய அசையும் சக்தியாக தொழிற்படுகிறது. அதாவது அசையாத நீர் அசையும் போது, அசையும் சக்தி தோன்றுகிறது. நீர் கீழே விழும்பொழுது சப்தம் உருவாகிறது. அதுவும் அந்த அசையும் சக்தியின் வெளிப்பாடே. நீர் விழும் பாதையில் சக்கரங்கள் வைக்கப்பட்டு அந்த அசையும் சக்தியின் வழியாக அந்தச் சக்கரங்கள் சுழற்றப்பட்டு அங்கிருந்து மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

    எனவே அசையாத பொருளில் சேமிக்கப்பட்டிருக்கும் சக்தி அசையாத சக்தியாக இருக்கும். அப்பொருளில் அசைவு ஏற்படும்போது அங்கு அசையும் சக்தியாக உருப்பெறுகிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் அசையாத சக்தியை சேமித்து இருந்ததும், பின்னர் அந்த அசையும் சக்தியை வெளிப்படுத்துவதும் அதே நீராகும். இதுவே அசையும் சக்தியும், அசையாத சக்தியும் இணைந்து இருக்கும் என்பதன் கோட்பாடாகும். இதுவே சிவன் சக்தி இணைந்து இருப்பதன் தத்துவமாகும்.

    ஆன்மீக பூர்வமான உதாரணமாக: எமது சூக்கும உடலில் மூலாதாரத் சக்கரத்தில் குண்டலினி சக்தி அமைந்துள்ளது. இந்தக் குண்டலினி சக்தி அசையாத சக்தியாக (ஆற்றல் இல்லாததாக) பாம்பு வடிவில் மூலாதாரச் சக்கரத்தில் தேங்கி இருக்கிறது. அதாவது ஒரு அணைக்கட்டில் நீர் ஓடாது தேங்கி இருப்பதுபோல குண்டலினி சக்தியும் தேங்கிக் கிடக்கிறது. யோகப் பயிற்சியின் மூலமாக அந்தக் குண்டலினி சக்தியை கிளர்ந்தெழச் செய்யும்போது, அந்தக் குண்டலினி சக்தி அசையும்போது அதிலிருந்து அசையும் சக்தி தோன்றுகிறது. அங்கிருந்து தூய ஒளி கிளம்புகிறது. அது யோகப் பயிற்சி செய்பவர்களின் (யோகிகளின்) அகக்கண்களில் தென்படும். அந்த குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக மேலெழும்போது பல நாதங்கள் உள்ளே உணரப்படும்.

    பசு

    பசு என்பது ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மாவே குண்டலினி சக்தி ஆகும். சிவன் சக்தி (ஒளி – ஒலி) இணைவின் மூலமாக பிரபஞ்சமும் அங்கு அசையும் (உயிரினங்கள்), அசையாப் பொருட்களும் உருவாகின்றன.

    அதுபோல சிவன் சக்தியில் இருந்து தெறித்து வரும் சக்தியே குண்டலினி சக்தியாகும்.

    உதாரணமாக பூமியின் மேற்பரப்பில் இருந்து நீர் ஆவியாகி மேலே சென்று, குளிர்ந்து, ஒன்று திரளும்போது அது மேகமாக எமக்குக் காட்சி கொடுக்கிறது.இப்படியாக காற்றில் மிதந்து செல்லும் மேகக் கூட்டங்கள் ஒன்றுடன் ஓன்று மோதும்போது (உரசும்போது) ஏற்படும் பௌதீக மாற்றத்தினால் ஒளி, ஒலி (மின்னல் – இடி) உண்டாகிறது அப்போது அங்கு நீர்த்துளிகள் உருவாகி மழையாக பொழிகிறது. சில வேளைகளில் புயல் உருவாகிறது. அப்போது அங்கே அதே மேகத்தை ஒத்த சிறிய, பெரிய, மேகங்களும் உருவாகிறது.

    இங்கு இரு மேகங்களை சிவன் – பார்வதியாக எடுத்துக் கொள்ளலாம். அங்கிருந்து ஒளி – ஒலி (மின்னல் இடிமுழக்கம்) தோன்றுகிறது. மழையாக பஞ்ச பூதங்களின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தோற்றத்தினை எடுத்துக் கொள்ளலாம். அங்கு உருவாகும் சிறிய மேகங்களை எமது குண்டலினி சக்திக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பது கூற்று.

    அதுபோல அந்த பராபரன் (அசையாத சக்தி) குண்டலினி சக்தியாக ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளான். அந்தக் குண்டலினி சக்தியானது சூக்கும உடலின் மூலாதாரச் சக்கரத்தில் அசையாத சக்தியாக அமைந்துள்ளது. ஆன்மாக்கள் மனித உடல் எடுக்கும்போது மட்டுமே அந்தக் குண்டலினி சக்தியை அந்த இறைவனை அறியும் அறிவு கிடைக்கிறது. யோகப் பயிற்சிகள் மூலமாக அந்த குண்டலினி சக்தியை சூடேற்றி கிளர்ந்தெழச் செய்து சுழுமுனை நாடி வழியாக துரிய சக்கரத்திற்கு உயர்த்தி அந்த பராபரத்துடன் குண்டலி சக்தி கலக்கும் போது, பிறப்பு இறப்பு சுழற்சி முற்றுப்பெறுகிறது. இதுவே ஞானம், இதுவே முக்தியாகும்.

    இந்தத் தத்துவத்திற்குப் பின்வரும் செயற்பாட்டை நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    ஒரு சமுத்திரத்தினை நாம் சிவனுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அந்த சமுத்திரத்தில் இருந்து ஒரு பாத்திரத்தில் உப்பு நீரை எடுத்து வந்தால், அந்தப் பாத்திரத்தில் இருப்பதும் சமுத்திரத்தில் இருப்பதும் எந்தவித வேறுபாடும் இல்லாத உப்புநீர் தான். ஆனால் அந்தப் பாத்திரத்தில் உள்ள உப்பு நீருக்கும் சமுத்திரத்திற்கும் இடையில் தொடர்பு அற்று இருக்கிறது. அதாவது சமுத்திரத்தினை சிவனாகவும், பாத்திரத்தில் உள்ள அதே சமுத்திர நீரை குண்டலினி சக்தியாகவும், அந்த சமுத்திர நீரையும் பாத்திரத்தில் உள்ள நீரையும் பிரிக்கும் பாத்திரத்தினை சூக்கும உடலாகவும் (உடலாகவும்) எடுத்துக் கொள்ளலாம். அதே வேளை அந்த பாத்திரத்தில், அந்த சமுத்திர நீரை சேமித்து வைத்திருப்பவரை மனம் என எடுத்துக் கொள்ளலாம். அந்த மனமானது எப்போது தனது பாத்திரத்தில் அடைத்து வைத்திருப்பது அந்தக் சமுத்திர நீர் என்று அறிந்து அந்தச் சமுத்திரத்துடன் இந்தச் (பாத்திரத்தில் உள்ள நீர்) சமுத்திர நீரை கொண்டு சென்று கலக்கிறதோ அதுவே முக்தி நிலை என ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    இன்னொரு உதாரணமாக பூமியெங்கும் பரந்திருக்கும் காற்றினை (வாயு) ஒரு பலூனுக்குள் அடைக்கும் போது இரு காற்றுக்கும் இடையில் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. இங்கு வெளியில் உள்ள காற்றினை சிவனுக்கும் உள்ளே இருக்கும் காற்றினை குண்டலினி அல்லது ஆன்மாவுக்கும், இரண்டையும் பிரிக்கும் பலூனினை தூல உடலாக அல்லது பாசத்துக்கும் ஒத்ததாக எடுத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு தெறித்து வந்த குண்டலி சக்தியானது (ஆன்மாவானது) சிவன் போல தூய்மையானது அப்பழுக்கற்றது. அப்படியான தூய்மையான ஆன்மாவானது சூக்கும உடலினுள் அடக்கப்படும்போது தூய்மையாகவே இருக்கும். ஆனால் அது பிறவிகள் எடுக்கும்போது, அதாவது மாணிக்க வாசகர் கூறியது போல,

    போன்ற பல பிறவிகள் எடுக்கும்போது, அது எடுக்கும் பிறவிக்கு ஏற்றாற் போல அதன் வாழ்க்கை அமைந்து அந்தப் பிறவியில் அது செய்யும் நம்மை, தீமைகளை தான் செய்யும் பாவ, புண்ணியங்களாக தனது ஆழ்மனதில் பதிவு செய்து கொள்கிறது. அந்த தூல உடல் இறக்கும்போது அந்த சூக்கும உடல் ஆழ்மனப் பதிவுகளுடன் அங்கிருந்து வெளியேறி தனது அடுத்த பிறவிக்காக காத்திருந்து, இப்புவியில் இன்னொரு தூல உடலினுள் பிறந்து அந்த உடலின் தன்மைக்கு ஏற்றவாறும் தான் சேகரித்து வைத்திருந்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறும் அந்த வாழ்கை அதற்கு அமைகிறது.

    குறிப்பு: இப் பாடலில் வரும் “கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்” என்ற வரியில் “கல்லாய்” என்ற பதம் அதாவது “கல்” என்ற பதம் சரியானதா? என்று சிலருக்கு சந்தேகம் உண்டு.

    பஞ்ச பூதங்களில் நிலம் என்பது கல்லையே குறிக்கிறது. கல்லுக்கு உயிர் உண்டு. உடைபடாத கல் வளரும். அதனாலேயே கோவிலுக்கு தெய்வச் சிலை செய்வதற்கு உயிருள்ள கற்களையே (கருங்கற்களையே) தேர்ந்தெடுப்பார்கள்.

    இதற்கு ஒரு உதாரணமாக, இராமாயணத்தில் கௌசிக முனிவரின் மனைவியாகிய அகலிகை கௌசிகர் போன்று மாறுவேடத்தில் வந்த இந்திரனை தனது கணவனாக எண்ணி ஏமார்ந்து அவனுடன் சேர்ந்திருந்ததை கண்ணுற்ற கௌசிகர் அவளை “கல்லாகிப் போ” எனச் சாபமிட அவள் பூமியில் கல்லாகி இருந்தாள் எனவும், பின்னர் அவ்வளியே வந்த இராமனது கால் பாதம் பட்டு சாபம் நீங்கி மீண்டும் உயிர்த்தெழுந்தாள் எனவும் புராணத்தில் கூறப்படுகிறது.

    பாவ புண்ணியங்களை மனிதர்கள் மட்டும்தான் அனுபவிப்பார்கள் என்று எந்த விதியும் கிடையாது. இவ்வுலகில் பிறக்கும் அத்தனை உயிரினங்களும் தமது முற்பிறப்பில் செய்த பாவ, புண்ணியங்களை அனுபவிக்கும் என்பதுவே விதியாகும். அதுமட்டுமன்றி எந்த உயிரினமும் மீண்டும் எந்த உயிரினமாகவும் பிறக்கலாம் என்பதுவும் விதியே. பல மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் தாம் விடும் தவறுகளால், பெற்றுக் கொள்ளும் சாபங்களால் மரமாய், கல்லாய், பாம்பாய், பறவையாய், பல விலங்குகளாய் பிறந்து தாம் செய்த பாவங்களை அனுபவித்தார்கள் என பல புராணக் கதைகள் உண்டு.

    உதாரணமாக, ஒரு மரமாக பிறந்து சிறந்த பராமரிப்புடன் வளர்ந்து பூத்துக் காய்த்து இறக்கும் மரங்களும் உண்டு, சரியான பசளை, தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி இறக்கும் மரங்களும் உண்டு. இது அந்த மரத்தில் இணைத்த ஆன்மா தனது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திலேயே தங்கியுள்ளது. இன்னொரு உதாரணமாக ஒரு நாயை எடுத்துக் கொண்டால் சிறந்த பராமரிப்புடன் சிறந்த எஜமானுடன் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து இறந்து கல்லறை கட்டப்படும் நாய்களும் உண்டு, வீதிகளில் பராமரிப்பின்றி, உணவின்றி, நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து இறந்துபோகும் நாய்களும் உண்டு. இதனை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

    எமது முன்னோர்கள் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற பல மிருகங்களாகப் பிறந்து எம்முடன் எமக்கு வழிகாட்டியாக, எமக்கு உதவியாக வாழ்கிறார்கள் எனவும், அது மட்டுமன்றி எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது வளர்ப்புப் பிராணிகளுடன் எமது முன்னோர்களது ஆன்மாக்களும் இணைந்து எமக்கு அன்பு பரிமாறுபவர்களாக, துணையாக, வழிகாட்டியாக வாழ்கிறார்கள் எனவும், தமது விட்டகுறை, தொட்ட குறைகளை தீர்த்துக் கொள்கிறார்கள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

    இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்ன வென்றால் ஆன்மாவானது உலகிலுள்ள மரம், செடி, கொடி, உட்பட இவ்வுலகிலுள்ள அத்தனை உயிரினங்களிலும் வாசம் செய்யும். அதாவது ஒரு உயிரினம் இவ்வுலகில் வாழ, (ஒரு உடல் இப்புவியில் வாழ) ஒரு ஆன்மா தேவைப்படுகிறது.

    ஆன்மா, தான் இப்புவியில் வசிக்கும் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு அவ்வான்மாவின் நடவடிக்கைகள் அமையும்.

    இதற்கு உதாரணமாக ஒரு விமானம் ஓட்டக்கூடிய விமானியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு துவிச்சக்கர வண்டி முதல் பல வண்டிகளை ஓட்டும் ஆற்றல் உள்ளது எனவும் எடுத்துக் கொண்டால். அந்த விமானி ஒரு துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது அவரது ஆற்றல் அந்த துவிச்சக்கர வண்டிக்கு ஏற்றதாகவே அமையும். துவிச்சக்கர வண்டியில் பறக்க முடியாது. அதுபோலவே ஒரு ஆன்மா எவ்வளவு ஆற்றல் உள்ளதாக இருந்தாலும் அது எடுக்கும் உயிரினத்தின் உடலுக்கு ஏற்றவாறே அதன் திறமைகள் ஆற்றல்கள் மட்டுப்படுத்தப் படுகிறது கட்டுப்படுத்தப் படுகிறது.

    அதாவது மூலத்தில் இருந்து உதிக்கும் ஒரு ஆன்மாவின் ஆரம்ப நிலையாக புல், பூண்டு, தாவரங்களில் தனது இவ்வுலக சஞ்சாரத்தினை ஆரம்பிக்கின்றது என எடுத்துக் கொள்ளலாம்.

    இவ் உலகில் பிறக்கும் உயிரினங்கள் எல்லாம், அவ்வுயிரினங்கள் பெற்றுள்ள பொறிகளைக் (புலன்கள்) கொண்டு ஐந்து வகையாக (ஓரறிவு உயிரினம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை) வகைப்படுத்தப் பட்டுள்ளன. அதில் மனித இனம் ஒரு படி மேலாக ஆறறிவு கொண்டவர்களாக வேறுபடுத்தப் பட்டுள்ளன.

    ஐம்புலன்கள் (ஐம்பொறிகள்) மெய், வாய், கண், மூக்கு, செவி.

    இப்போது ஒவ்வொரு புலனுக்கும் (அறிவுக்கும்) உரிய சில உயிரினங்களின் உதாரணங்களைப் பார்ப்போம்.

    • ஓரறிவு (ஒரு புலன் – உடல் (மெய்). தொடு உணர்ச்சி (தொடு உணர்வு) மட்டும் உள்ள உயிரினங்கள் ஓரறிவு உயிரினங்கள் ஆகும். உதாரணம்: – புல், செடி, கொடி, மரம்.
    • ஈரறிவு (இரு புலன்கள் – மெய், வாய்) தொடு உணர்வு, சுவை உணர்வு ஆகிய இரு புலன்கள் மட்டும் கொண்ட உயிரினங்கள் ஈரறிவு உயிரினங்கள் எனப்படும். உதாரணம்: நத்தை, சங்கு.
    • மூன்றறிவு (மூன்று புலன்கள் – மெய், வாய், மூக்கு) – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு (மோப்ப உணர்ச்சி) கொண்ட உயிரினங்கள் மூவறிவு உயிரினங்கள் ஆகும். உதாரணம்: கரையான், அட்டை, எறும்பு.
    • நான்கறிவு (நான்கு புலன்கள் – மெய், வாய், மூக்கு, கண்) தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு கொண்ட உயிரினங்கள் நான்கறிவு உயிரினங்கள் ஆகும். உதாரணம்: – நண்டு, தும்பி, கொசு, சிலந்தி, வண்டுகள், தேள்.
    • ஐந்தறிவு (ஐந்து புலன்கள் – மெய், வாய், மூக்கு, கண், செவி) தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு, கேட்கும் உணர்வு ஆகிய ஐந்து உணர்வுகளையும் பெற்றுள்ள உயிரினங்கள் ஐந்தறிவு உயிரினங்கள் ஆகும். மனிதர்கள், பறவைகள், பாலூட்டிகள் யாவும் ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் ஆகும்.

    இதில் மனிதனின் ஆறாம் அறிவு என்பது சிந்தித்து செயலாற்றுதல் என பொதுப்படையாகக் கூறப்பட்டாலும் (பல விலங்குகள் தமது ஆற்றலுக்கு ஏற்றவாறு சிந்தித்து செயலாற்றுகின்றன என்பதுவும் அசைக்க முடியாத உண்மையாகும்),

    ஒரு ஆன்மாவானது ஒரு மனித உடல் எடுக்கும்போதே தான் ஒரு இறைவனின் அம்சம் என்பதை உணர்ந்து, அறிந்து அந்த இறைவனுடன் சங்கமிக்கும் என்பதுவே ஆன்மீகவாதிகளால் வரையறுக்கப்பட்ட ஆறாவது அறிவாகும். எனவே ஒரு ஆன்மாவானது மனித உடல் எடுக்கும்போதே முக்தி அடைய முடியும் என ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

    இருந்தும் சில விலங்குகளும் சிவ பூஜை செய்து சிவனை வழிபட்டு முக்தி அடைந்ததாகவும் புராண வரலாறுகள் உண்டு.

    • புலி – திருப்புலிவனம். காஞ்சிபுரம். (சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இத்தலத்தில் சிவனை வழிபட்டு முத்திபெற்றார்).
    • பசு – சங்கரன் கோவில், தென்காசி மாவட்டம்.
    • சிலந்தி மற்றும் யானை – திருவானைக்காவல், திருச்சி. இது தலத்து லிங்கம் கூரையில்லாமல் மழை, வெயிலில் நனைந்து இருந்தது. இதனை கண்டு கவலையுற்ற சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை, தூசி சிவலிங்கத்தில் மேல் விழாமல் பாதுகாத்து வணங்கி வந்தது. அதே நேரத்தில் அங்கு தினமும் ஒரு யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து நீரைத் தூவி சிவனை வழிபட்டது. யானை நீரை பாச்சும்போது சிலந்தி பின்னிய வலை கலைந்துவிடும். சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும். இதனால் கோபம் கொண்ட சிலந்தி யானையை தண்டிக்க எண்ணி அதன் துதிக்கையுள் நுழைய, யானை அதனை விரட்ட துதிக்கையை மரத்தில் அடிக்க இறுதியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்தியை மெச்சிய சிவன் யானைக்கும், சிலந்திக்கும் முக்தி கொடுத்ததாக புராண வரலாறு. இங்கு சிவனை வழிபட்ட சிலந்தியும், யானையும் முற்பிறப்பில் முனிவர்களாக வாழ்ந்து சாபம் பெற்று சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்து சிவனை வழிபட்டதாக வரலாறு.
    • எறும்பு – திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவனை வழிபட்ட தலம்.
    • – வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் – திரு ஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம்
    • பாம்பு – ஆதிசேசன் என்ற பாம்பு சிவனை வழிபட்ட தலம் – திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டம்.
    • அணில், குரங்கு, காகம் – சிவனை வழிபட்ட தலம் – குரங்கணில் மூட்டம் மாமண்டூர், காஞ்சிபுரம்.சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டு முக்தி அடைந்த தலம்.
    • மயில் – சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை – சிவபெருமானை வழிபட்ட தலம் – மயிலாடுதுறை.
    • கழுகு – திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.
    • வண்டு – பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்த தலம் – திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம். இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.
    • நண்டு – சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் – சிவனை வழிபட்ட தலம் – நண்டாங்கோவில். கும்பகோணம்.
    • யானை – துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் சிவனை பூஜித்த தலம் – திருக்கொட்டாரம், திருவாரூர் மாவட்டம்.
    • பசு – காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு சிவனை வழிபட்ட தலம் – பட்டீஸ்வரம். தஞ்சாவூர் மாவட்டம்.
    • ஆமை – திருமால் ஆமை வடிவில் சிவனை பூஜித்த தலம் – திருக்கச்சூர்.
    • கிளி – கிளியாக மாறிய சுக முனிவர் சிவனை வழிபட்ட தலம் – சேலம் சுகவனேஸ்வரர்.
    • சிட்டுக்குருவி – சிவனை பூஜித்த தலம் – சிட்டிலிங்கேஸ்வரர், வட குரங்காடுதுறை.
    • கருடன் – திருச்சுறுகுடி, திருவாரூர் மாவட்டம்.
    • கருங்குருவி – திருவலிவலம், திருவாரூர் மாவட்டம்
    • குரங்கு – திருக்குரங்காவல், மயிலாடுதுறை மாவட்டம்.
    • எலி – திருமறைக்காடு, (வேதாரண்யம்) நாகப்பட்டினம் மாவட்டம்.
    • தேனீ – நன்னிலம், திருவாரூர் மாவட்டம்
    • பன்றி – திருச்சிவபுரம், காவிரி வடகரை
    • நாரை – திருநாரையூர், கடலூர் மாவட்டம்.
    • பாம்பு – திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம் குடவாசல்.
    • முயல் – திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம்.
    • வெள்ளையானை – பெண்ணாகடம், கடலூர் மாவட்டம்.
    • கருப்பு யானை – திருக்காளகத்தி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்
    • பூனை – மேலைப்பாதி, மயிலாடுதுறை மாவட்டம்
    • தவளை – ஆத்தூர், சேலம் மாவட்டம்.
    • மீன் – தேவராயன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
    • நாகம் – தேப்பெருமாநல்லூர், கும்பகோணம்.

    இப்படியான பிறப்புக்கு காரணமாக மனிதர்களோ, தேவர்களோ, முனிவர்களோ தாம் முற்பிறப்பில் செய்த பாவத்துக்கு, பெற்ற சாபத்திற்கு ஏற்றவாறு விலங்காகப் பிறந்து சிவனை வணங்கி முக்தி பெற்றிருக்கிறார்கள் என்பது புராண வரலாறாகும்.

    இப்படியான புராணக் கதைகள் மூலமாக அவரவர் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு அடுத்த பிறவியில் எந்த உயிரினமாகவும் பிறக்கலாம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் மீண்டும் மனிதனாகவே பிறப்பான் என்று எந்தத் தத்துவமும், எந்த மதமும் கூறவில்லை. இந்து மதத்தின் கர்மவினை மற்றும் மறுபிறப்புக் கொள்கைப்படி, ஒரு மனிதனின் ஆன்மா அது செய்த பாவ, புண்ணிய வினைகளின் (கர்மங்கள்) அடிப்படையில் மனிதனாகவோ அல்லது பிற உயிரினங்களாகவோ பிறக்கலாம் என்பதுவே உண்மையாகும்.

    இயல்பாய் எம்முடன் தொடர்புகொள்ளும் மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு, மாடு, காகம், நாய், ஈ, எறும்பு, கொசு, பன்றி உட்பட அனைத்து உயிரினங்களும் எம்முடன் ஏதோ ஒரு வகையில் கர்மதொடர்பு (பழைய தொடர்பு) கொண்டவை என்பதை நாம் முழுமையாக உணரவேண்டும்.

    எனவே பிற உயிரினத்திடம் எப்போதும் அன்பு செலுத்தி, எம்மால் முடிந்த உதவிகள் செய்து, அவற்றிற்குத் தீங்குகள், தொந்தரவுகள் செய்யாது வாழ்வோமாக.

    பதிக்கும் பசுவுக்கும் இடையில் உள்ள தொடர்பு

    பதி (சிவன்) – பசு (ஆன்மா / சீவன்)

    பதிக்கும் பசுவுக்கும் (இறைவனுக்கும் ஆன்மாவுக்கும்) இடையில் உள்ள தொடர்பினை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்குகிறார்.

    திருமந்திரம் – ஏழாம் தந்திரம் -போதன் (அறிஞன்) – பாடல் 2017

    சீவன் என சிவன் என்ன வேறில்லை: ஆன்மாவும் (சீவன் / குண்டலினி) இறைவனும் வேறு வேறானவை அல்ல. சீவனார் சிவனாரை அறிகிலர்: ஆன்மா தான் சிவனின் ஒரு கூறு அதாவது தானே சிவன் என்பதனை அறியாமல் இருக்கிறது (அறியாமை). சீவனார் சிவனாரை அறிந்தபின்: ஆன்மாவானது ஞான நிலையில் தானே சிவன் என்பதனை (உண்மைப் பொருளை) உணர்ந்தபின். சீவனார் சிவனாயிட்டு இருப்பரே: அந்த ஆன்மா (சீவன்) அறியாமையில் இருந்து விடுபட்டு சிவனுடன் இரண்டறக் கலந்து கொள்ளும்.

    சீவன் சிவனுடன் கலந்து கொள்ளும் நிலையே முக்தி நிலை. அதாவது பதி என்ற இறைவனில் இருந்து துகளாக தெறித்து வந்த ஒரு சிறு பகுதியே ஆன்மாவாகும். அதுவே குண்டலினி சக்தியாகும். அந்த பதிக்கும் பசுவுக்கும் (சிவனுக்கும், குண்டலினிக்கும்) இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை.

    அதாவது சிவ சக்தி இணைவின்போது ஒளி, ஒலி தோன்றுகிறது. அப்போது அங்கிருந்து தீப்பொறி போல தெறித்து ஆன்மா (குண்டலினி) தோன்றுகிறது. ஆன்மாவானது தோன்றும்போது அதற்கு ஒரு சூக்கும உடல் கொடுக்கப்படுகிறது. அந்த சூக்கும உடலின் மூலாதாரச் சக்கரத்தில் சிவன் (குண்டலினி சக்தி, ஆன்மா) அமர்ந்திருக்கும்.

    சூக்கும உடலில் அமைந்திருக்கும் அந்த குண்டலினி சக்தியானது இப்புவியில் பிறக்கும் தூல உடலுடன் இணைந்து செயற்படும்.

    பிறப்பு: ஒரு தாயின் கருப்பையில் உருவாக்கி வளர்ந்த தூல உடல் கருப்பையில் இருந்து வெளியேறி இப்புவியில் வரும்போது, அதற்க்காகக் காத்திருக்கும் ஒரு சூக்கும உடல் அந்த தூல உடலுடன் இணைந்து கொள்கிறது. அப்போது அவ்வுடலின் முதற் சுவாசம் நடைபெறுகிறது. அதுவே பிறப்பு என அழைக்கப் படுகிறது. அந்த நேரமே அந்த முதல் மூச்சு அல்லது முதற் சுவாசமே பிறப்பு நேரமாகக் கணிக்கப்படுகிறது. (இத் தத்துவம் உலகிலுள்ள அத்தனை உயிரினத்துக்கும் பொருந்தும்).

    இறப்பு: இறப்பு ஏற்படும்போது தூல உடல் அழிந்து போக, சூக்கும உடலானது அந்த தூல உடலுடன் வாழும்போது சேகரித்த பாவ புண்ணியங்களுடன் வெளியேறி இன்னொரு தூல உடலுக்காக காத்திருக்கும்.

    முக்தி: மனித உடலில் வாழும்போது முக்தி நிலை ஏற்பட்டால், குண்டலினி சக்தியானது (ஆன்மா) தனது மூலமான சிவத்துடன் இணைந்து கொள்ள அந்தச் சூக்கும உடல் அழிந்துவிடுகிறது. இதுவே மீண்டும் பிறப்பற்ற முக்தி என அழைக்கப் படுகிறது.

    தூல சரீரம் (தூல உடல்) – சூக்கும சரீரம் (சூக்கும உடல்)

    தூல, சூக்கும சரீரத்தினை பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம். எமது சாதாரண கண்களுக்குத் தெரிவது தூல உடல். கண்களால் பார்க்க முடியாதது சூக்கும உடல் ஆகும்.

    ஒரு இனிப்புப் பண்டம் எமது கண்களுக்குத் தெரியும். அது தூல உடலுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பண்டத்தில் உள்ள இனிப்புச் சுவை சூக்குமமாக மறைந்து உள்ளது. அந்தப் பண்டம் நாவில் படும்போதே அந்த இனிப்புச் சுவை உணரப்படுகிறது. அந்த இனிப்புச் சுவையினை தூல உடலுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    தூல, சூக்கும சரீரங்களை ஆன்மீக வாதிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

    1. தூல சரீரம் (அன்னமய கோசம்): – அன்னம் அதாவது உணவினால் வளரும் உடல், சாதாரண கண்களுக்குத் தெரியும் உடல் தூல உடல் எனப்படும். ஒரு தூல உடலில் இருந்தே இன்னொரு தூல உடல் உருவாக முடியும். அதாவது ஒரு தாய் தந்தையாரில் இருந்தே இன்னொரு உடல் உருவாக முடியும்.

    2. சூக்கும சரீரம் (பிராணமய கோசம்): – சாதாரண கண்களால் பார்க்க முடியாத, ஞானக் கண்களால் (நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண்) மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய ஒளியுடல், சூக்கும சரீரம் என அழைக்கப் படுகிறது. சூக்கும சரீரத்தில் அமைந்துள்ள சக்கரங்கள் சுவாசத்தின் வழியாக நாம் எடுத்துக் கொள்ளும் பிராணனை (சக்தியை) உள்வாங்கி சூக்கும நாடிகள் வழியாக சூக்கும உடலுக்கு கடத்துகிறது. அதனாலேயே ஒரு உடலுக்குப் பிரபஞ்ச சக்தி (பிராண சக்தி) கிடைக்கிறது. இதன் காரணத்தினால் சூக்கும உடல் பிராணமய கோசம் எனவும் அழைக்கப்படுகிறது.

    பிராணன் எனப்படுவது மூச்சுக்காற்று அல்ல மூச்சுக்கு காற்றில் கலந்துள்ள பிரபஞ்ச சக்தியே ஆகும். சாதாரணமாக நாம் (ஒரு உயிரினம்) சுவாசிக்கும் போது மூச்சுக்காற்றுடன் கலந்துள்ள பிராண சக்தியும் உள்வாங்கப் படுகிறது. ஆனால் ஆன்மீகப் பயிற்சியின்போது அதிகளவான பிராண சக்தி உள்வாங்கப் படுகிறது.

    சூக்கும சரீரம் பின்வரும் செயற்படுகளின் கலவையாகும்.

    • ஆன்மா – குண்டலினி சக்தி (சிவசக்தி)
    • நாடிகள் (உதாரணம் – இடைகலை, பிங்கலை, சுழுமுனை)
    • ஆதாரச் சக்கரங்கள் (உதாரணம் – மூலாதாரம், சுவாதிஷ்டானம், துரியம்)               
    • ஆழ்மன பதிவுகள் (உதாரணம் – நினைவாற்றல், முற்பிறப்பு பதிவுகள்)

    சூக்கும உடல் (சூக்கும சரீரம், ஒளி உடல்)

    சூக்கும உடல் என்பது ஆன்மா எனப் பொதுப்படையாகக் கூறப்பட்டாலும், சூக்கும உடலில் ஆன்மா ஒரு அங்கமே. அதாவது ஆன்மா அதில் ஒரு பகுதியே தவிர சூக்கும உடல் ஆன்மா அல்ல. சூக்கும உடல் எனப்படுவது ஆன்மா, சூக்கும நாடிகள், சூக்கும சக்கரங்கள் (ஆதாரங்கள்), எண்ணங்கள், பாவங்கள், புண்ணியங்கள், பழைய ஞாபகங்கள் போன்றனவற்றைக் கொண்ட ஒரு கலவையே சூக்கும உடலாகும். அதாவது நாம் காணும் சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் (வர்ணங்கள்) கலந்து இருப்பது போல சூக்கும உடலும் பல செய்திகள் பல பகுதிகளைக் கொண்ட ஒரு கலவையே சூக்கும உடலாகும்.

    சூக்கும உடலில் ஆன்மா (குண்டலினி) இணைந்திருந்து அதனுடன் பயணம் செய்வதனை திருமூலர் பின்வருமாறு விளக்குகிறார்.

    திருமந்திரம் – எட்டாம் தந்திரம் – உடலில் பஞ்ச பேதம் – பாடல் – 2131

    விளக்கம்: போர்க் குதிரை அண்மை, சேய்மை அதாவது தூர இடத்துக்கு வேகமாக ஓடும் அருகாமையில் உள்ள இடத்துக்கு மெதுவாக நடக்கும். அப்போது நடந்தாலும் ஓடினாலும் அதன் முன்னங் கால்களின் அசைவுக்கு ஏற்றவாறு அதன் பின்னங் கால்கள் பின்தொடரும். அதுபோல சூக்கும உடலில் அமைந்துள்ள ஆன்மாவானது சூக்கும உடலுடன் பயணம் செய்யும். அதாவது ஆன்மா சூக்கும உடலைப் பற்றிக் கொண்டு அச் சூக்கும உடல் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குத் தாவித், தாவிச் செல்லும்போது அதனுடன் பயணம் செய்யும். சூக்கும சரீரம் என்பது தூல சரீரத்தின்மேல் போர்வை போலவே உள்ளதாகும். சூக்கும உடலானது தூல உடம்பு ஒன்றை நீக்கிவிட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் (மரணம் மீண்டும் பிறப்பு) மனிதர்கள் தாம் அணிந்திருக்கும் பழுதாகும் ஆடையை நீக்கிவிட்டு மற்றொன்றை அணிந்து கொள்வதற்கு ஒப்பானது.

    ஒரு குழந்தை பிறந்து வளரும்போது, அறிவு வளரும்போது அதன் மனமானது ஐம்புலன்களின் வாயிலாக உலக பற்றில் உலக மாயையில் நாட்டம் கொள்ளும். அதற்கு அந்த சூக்கும உடல் முற்பிறப்புக்களில் சேகரித்து வைத்துள்ள பதிவுகளும் (ஆழ்மனம்) ஒரு காரணமாகும். நல்ல பதிவுகள் உள்ளவர்கள் நல்ல வழிகளில் பயணிக்க முற்படுவார்கள் தீய கெட்ட பதிவுகள் உள்ளவர்கள் தீய பாதையில் பயணிக்க நாட்டம் கொள்வார்கள்.

    உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு பிறந்த இரு சிறுவர்களில் ஒருவரில் நற் பண்புகளும் மற்றயவரில் கெட்ட பண்புகளும் சிறு வயதிலேயே வெளிப்பட அவர்கள் முற் பிறப்புகளில் சேகரித்து வைத்திருக்கும் ஆழ்மனப் பதிவுகளே காரணமாகும்.

    ஆழ்மனமானது ஒன்றோடொன்று தொடர்புடைய பலநிகழ்வுகளை ஒருங்கிணைத்துச் சேகரித்து வைத்திருக்கும். உதாரணமாக நாம் ஒரு உணவைப் பார்த்தவுடன் அந்த உணவின் சுவையும், வாசனையும் அதனை சுவைக்க முன்னமே, எமது மனதில் நிலை நிறுத்தப்படும். அது போலவே ஒரு பழைய பாடலைக் கேட்டவுடன் எமது பழைய ஞாபகங்கள் அப்பாட்டைக் கேட்டுக்கொண்டு நாம் ரசித்த பழைய காட்சிகள் எல்லாமே நினைவில் நிறுத்தப்படுகிறது. இது ஆழ்மனதின் பதிவுகளே. அதேபோலவே சில ஒலிகளை கேட்கும்போது, சில வாசனைகளை நுகரும்போது பழைய சோகமான பயமான எண்ணங்கள் எமது ஆழ்மனதில் இருந்து தோன்றும். இதுவே ஆழ்மனப் பதிவுகளுக்கு உதாரணமாகும்.

    ஒருவரது ஆழ்மனப் பதிவுகளே அவரது மனதை செயற்படுத்துகிறது. மனமானது ஐம்புலன்கள் வாயிலாக வெளியுலகுடன் தொடர்பு கொள்ளும் போது அதன் பழைய ஆழ்மனப் பதிவுகள், அந்த மனதை வழி நடாத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. அந்த மனதின் போக்கில் அந்த உடல் செயல்படுகிறது. உலக இன்பங்களில் நாட்டம் கொள்கிறது. புதியதாகவும் பாவ புண்ணியங்களை சேகரித்துக் கொள்கிறது.

    மனம் உலக இன்பங்களில் திளைத்து இருப்பதனால் அந்த சூக்கும உடலில் அமைந்துள்ள அந்த குண்டலினி சக்தி தான் யாரென்று உணர முடியாதவாறு அசையாத சக்தியாகவே தேங்கிக் கிடக்கிறது.

    இதுவரை பதி என்றால் என்ன பசு என்றால் என்னவென்று சுருக்கமாகப் பாத்தோம். அடுத்ததாக பாசம் என்றால் என்ன? என்று பார்க்கலாம்.

    பாசம் (தளை / கட்டுப்பாடுகள் / பந்தம்):

    பாசம் என்பது ஆன்மாவை (பசு) இறைவனிடமிருந்து (பதி) பிரித்து வைத்திருக்கும் தன்மை என பொருள் கொள்ளப்படும். ஆன்மாவானது தான் இறைவனின் அம்சமே என எண்ணவிடாது, அறியவிடாது அந்த ஆன்மாவை உலக இன்பங்களில் மூழ்கவைத்திருக்கும் மனமே அந்த எண்ணங்களே பாசம் எனப்படும்.

    அதாவது பாசம் என்பது ஆன்மாவை உலக இன்பம் என்ற மாயையில் சிக்க வைத்து அதன்மூலமாக இந்த மாய உலகை தக்க வைத்துக் கொள்வதற்காக அந்த இறைவனாலேயே உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும். பாசம் என்ற பொறிமுறையே உயிரினங்களின் இனப் பெருக்கத்துக்கு மட்டுமல்லாமல் மண், பொன், பெண் ஆசைகள் அதன்மூலமாக சொந்தம் பந்தம் போன்ற வாழ்க்கை முறைக்கும் காரணமாக அமைகின்றது.

    சைவ சித்தாந்தக் கோட்பாட்டின்படி பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் தோன்றுவதும் இல்லை, அழிவதும் இல்லை என்று கூறுகிறது. அதாவது மூன்றுமே அநாதியானவை.

    திருமந்திரம் – எட்டாம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் – 2405

    அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி: ஆன்மா (பசு), அறிவுள்ள பொருளாக இருந்தாலும், பதியைப் போல அனாதியாக (தொன்று தொட்டு) உள்ளது. அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி: ஆன்மாவிற்கு அறிவை வழங்கும் பேரறிவாகிய இறைவனும் (பதி / சிவம்) அனாதியாகவே உள்ளார். அறிவினைக் கட்டிய பாசம் அனாதி: ஆன்மாவை (பசு) அறியாமையில் கட்டிப்போடும் பாசம் (தளை) அனாதியானது. அறிவு பதியில் பிறப்பறுந் தானே: ஆன்மாவானத்து பாசத்தில் இருந்து விடுபட்டு பதியாகிய சிவனை அடையும்போது, இறப்பு பிறப்பற்ற பிறவிப்பிணி நீங்கி முக்தி நிலையை அடையும்.

    மூலக் கருத்து: ஆன்மா (பசு) மிகத் தொன்மையானது. ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்கும் சிவமும் (பதி) ஆன்மாவைப் போன்று மிகத் தொன்மையானது. ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் தொன்மையானது. ஆன்மாவானது அறியாமை நீங்கி பாசத்தில் இருந்து விடுபடும்போது அந்த சிவனுடன் இணையும். இதுவே இறப்பு பிறப்பற்ற முக்தி நிலையாகும்.

    பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று வினைகளால் (பந்தங்களால் ஆனது)

    திருமந்திரம் – எட்டாம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் – 2406

    பசுப்பல கோடி பிரமன் முதலாய்: இந்த உலக உயிரினங்களை படைத்த பிரம்மா உட்பட பல கோடிக்கணக்கான பசுக்கள் (ஆன்மாக்கள் – பசு) உள்ளன. பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு: அந்த ஆன்மாக்களை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாசங்கள் கட்டியிருக்கின்றன. பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தலால்: அறியாமையைப் போக்கி அந்தப் பாசங்களை அறுத்தால், அதாவது பசுத்தன்மையை நீக்கினால், பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே: அந்த ஆன்மாக்கள் (பசுக்கள்) இறைவனை (தலைவன்) உறுதியாகப் பற்றிக்கொள்ளும், ஒன்றறக் கலந்துகொள்ளும். அதுவே முக்தி நிலையாகும்.

    ஆலயங்களிலே முக்கியமாக சிவாலயங்களில், சிவனுக்கும் நந்திக்கும் இடையில் பலிபீடம் வைக்கப்பட்டிருக்கும். அதன் பொருள் என்னவென்றால் சிவன் என்ற பதியை, நந்தி ஆகிய பசு அடைய முடியாமல் இடையில் பாசம் (பலிபீடம்) உள்ளது. பலிபீடத்தில் ஆசைகளை அடக்க பசு பதியை அடையும் என்பது பொருளாகும்.

    திருமந்திரம் – எட்டாம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் – 2411

    ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்: சிவலிங்கமானது அனைத்திற்கும் மேலான பதியாகிய இறைவனைக் குறிக்கிறது. ஆய பசுவும் அடலே றெனநிற்கும்: அந்த சந்நிதியில் சிவலிங்கத்தின் முன்னால் இருக்கும் நந்தியானவர் பசுவாகிய ஆன்மாவைக் குறிக்கிறது. ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்: அங்கு லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையில் வைக்கப்பட்டிருக்கும் பலிபீடம் (ஆவுடையார்) ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தும் பாசத்தைக் (தளை) குறிக்கிறது. ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே: இந்த லிங்கம் – பலிபீடம் – நந்தி என்ற தத்துவத்தினை விளங்கி கொள்பவர்கள், தாம் கட்டப்பட்டிருக்கும் பாசத்தினைக் களைந்து தெளிவடைந்து சிவனைப் பற்றிக் கொள்வார்கள்.

    குறிப்பு – சிவாலயங்களில் வெளிப் பிரகாரத்தில் (வெளிச்சுற்று) அமைந்துள்ள நந்திக்கும் மூலவர் லிங்கத்துக்கு இடையில் பலிபீடம் இருக்கும். உட்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்திக்கும் லிங்கத்துக்கும் இடையில் பலிபீடம் இருக்காது. இதன் பொருள் என்னவென்றால் ஆன்மாக்கள் இறைவனில் இருந்து தூரத்தில் இருக்கும்போது பாசத்தினால் கட்டுண்டு இருக்கும் அதனால் இறைவனை அறிந்து கொள்ளாமல் இருக்கும். பாசத்தில் இருந்து விடுபடும்போது இறைவனுக்கும் (பதி) ஆன்மாக்களுக்கும் (பசு) இடையில் பாசம் என்ற தடை இருக்காது என்று அர்த்தமாகும்.

    அதாவது, ஒரு ஆன்மா தன் வாழ்நாள் முழுவதும் இறைவனின் சிந்தனையிலேயே திளைத்திருக்க வேண்டும் என்பதனை இது உணர்த்துகிறது. ஆலயங்களில் நந்தி எப்போதும் லிங்கத்தை நோக்கியே அமர்ந்திருப்பது ஆன்மாக்கள் எப்போது இறை சிந்தனையுடனேயே இருக்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது. நந்தி எப்போதும் சிவனை நோக்கியவாறே பொறுமையுடனும், பணிவுடனும் அமர்ந்த நிலையில் இருக்கும். இதன் பொருள் என்னவென்றால் ஆன்மாக்கள் தங்கள் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி இறை சிந்தனையுடன் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த விளக்கமாகும்.

    மும்மலங்கள்:- ஆணவம், கன்மம், மாயை

    பாசம் எனப்படுவது ஆன்மாக்களின் மெய்யறிவைத் தடுத்து, உலக மாயைகளில் சிக்க வைத்து, இறைவனை அடைய விடாமல் தடுக்கிறது. ஆன்மாக்கள் தாம் யாரென்று உணரமுடியாமல், இறைவனை அறிய முடியாதவாறு உலக இன்பங்களில் நாட்டம் கொள்ள வைத்து இவ்வுலகப்பற்றில் கட்டுண்டிருக்கச் செய்யும் பாசம் ஆனது அடிப்படையாக ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இவை மும்மலங்கள் என அழைக்கப்படுகிறன.

    ஆணவம்: ‘நான்’ என்னும் அகங்காரம், அகந்தை, அறிவை மறைக்கும் இருள்.

    கன்மம் (வினை): முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த நல்வினை, தீவினைகளால் ஏற்படும் வினைப்பயன். கன்ம வினைகள் தொல்வினை (பழைய வினை), நுகர்வினை (தற்போது அனுபவிக்கும் வினை), மற்றும் வரும்வினை (எதிர்கால வினை) என மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது.

    மாயை: இல்லாத அல்லது அழியக்கூடிய உலகப் பொருட்களை மெய் என எண்ணி மயங்கும் அறியாமை. மாயத் தோற்றங்களை உண்மை என்று நம்பி உலக இன்பங்களில் நாட்டம் கொள்ளுதல். கற்பனையான வாழ்க்கைக்கு மனதை வழிநடாத்துகிறது.

    ஆணவம் (அகங்காரம்).

    ஆணவம் (அகங்காரம்) என்பது உயிரினங்களில் மனிதர்களுக்கே பொருந்தும். ஆணவம் என்பது “நான்”, “எனது” (அகங்காரம், தற்பெருமை) என்ற எண்ணத்தினால் ஏற்படும் அகங்காரம் அல்லது திமிர் ஆகும். இது ஒரு மனிதனின் அறிவை மறைத்து, ‘நானே பெரியவன்” என்ற அகங்காரத்தையும், எனக்கு எல்லாம் தெரியும் என்ற தற் பெருமையையும், உண்டாக்குகிறது. இது பொதுவாக கல்வி, செல்வம், பதவி போன்றவற்றால் ஏற்படும் செருக்கான (பிறரை மதிக்காத) மனநிலையால் ஏற்படுகிறது. ஆணவம் இருப்பவரிடம் அன்பு குறைந்து, பிறரைத் தாழ்வாகக் கருதும் மனநிலை வளரும்.

    மனிதர்கள் இறைவனை அறிய முடியாமல் தாம் யார் என்ற உண்மையை உணரமுடியாமல் மதி மயங்குவதற்கு இவ்வுலக இன்பங்களில் மூழ்கிக் கிடப்பதற்கு ஆணவமும் காரணமாகும்.

    உடலின் (தூல உடலின்) பாவம் – தாய், தந்தையாரிடம் இருந்து, முன்னைய சந்ததியினரிடம் இருந்து வருகிறது. உதாரணமாக கரியநிறம் – மாநிறம், கட்டை – நெட்டை, வாய், மூக்கு, கண் போன்ற உடல் அமைப்புக்கள், சில நோய்கள் (கூன், குருடு, செவிடு, பேடு) ஆகியவை ஆன்மாக்கள் முற்பிறப்பில் செய்த பாவ, புண்ணியத்துக்கு ஏற்றவாறு உடல் ரீதியாக கிடைக்கும் வினைப்பயன் ஆகும். தமது உடல் அமைப்புக்களாலேயே ஆணவத்துடன் (அழகு) வாழ்பவர்களும் உண்டு, தமது உடல் அமைப்புக்களாலேயே பிறரது நகைப்புக்கு ஆளாகி கூனிக் குறுகி அவமானப்பட்டு வாழ்பவர்களும் உண்டு.

    திருமந்திரம் – எட்டாம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் – 2421

    நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்: பாசத்தில் (பதி, பசு, பாசத்தில்) ‘நான்’ என்று கருதும் அகங்காரமே, நானே பெரியவன் என்ற எண்ணமே ஆணவம் ஆகும். பண்ணிய மாயையில் ஊட்டல்: நான் என்ற ஆணவத்தினால் இறைவனை மறந்து மாயையில் (உலக இன்பங்களில்) ஆன்மாவை ஈடுபடுத்துகிறார் இறைவன். பரிந்தனன் கண்ணிய சேதனன்: ஆனாலும் ஞான வடிவான இறைவன், ஆன்மாவின் மீது அன்புள்ளம் கொண்டு (அதாவது உலக இன்பங்களில் சிக்கித் தவிக்காமல்), கண்வந்த பேரருள் அண்ண லடிசேர் உபாயம தாகுமே: தன்னை நினைந்து மனமுருகி வழிபடுபவர்களது ஆணவத்தை, பாவங்களை, மாயையைப் போக்கி தனது திருவடிகளை சேர (முக்தி அடைய) அருள்பாலிக்கிறார்.

    மூலக் கருத்து: பதி பசு பாசம் ஆகிய பாசத்தில் நான், எனது என்ற எண்ணம் ஆணவம் எனப்படும். இந்த ஆணவமானது பதி, பசுவைப்போல ஆதியில் இருந்தே ஆன்மாவுடன் இணைந்திருந்து, தான் யார் என்று உணர முடியாதவாறு, ஆன்மாக்கள் இறைவனை அறிய முடியாதவாறு தடுத்து வைத்திருக்கும்.

    இருந்தும் ஆன்மாக்கள் மேல் பற்று வைத்துள்ள இறைவன், தன்னை வழிபடுபவர்களது ஆணவத்தை பாசத்தை அழித்து, தனது திருவடிகளை அடையும் முக்தியைக் கொடுக்கிறான். இறைவனின் திருவருளைச் சரணடைவதே, பற்றிக் கொள்வதே, இறை சிந்தனையில் எப்போதும் திளைத்திருப்பதே ஆணவ மனநிலையில் இருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கான வழியாகும்.

    கன்மம் (வினை, விதி)

    ஊழ்வினை என்றால் தலை எழுத்து அல்லது கருமா அல்லது தலைவிதி என்று அர்த்தமாகும். இதனையே வினைப்பயன் அல்லது கர்மவினை எனவும் ஆன்மீகவாதிகள் அழைப்பர்.

    நாம் அன்றாடம் செய்யும் நல்ல செயல், தீய செயல் எல்லாமே நம்மிடத்தில் பதிந்து, காலம் வரும்பொழுது அதற்கேற்ற பாவ, புண்ணிய பலன்களை அனுபவிப்பதுதான் ஊழ்வினை எனப்படும். கர்மாவை நாம் அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். அதை அனுபவிக்காமல் நம் பிறவி முழுமை அடையாது. ஒரு பிறவியில் அந்தப் பாவபுண்ணியங்கள் தீர்க்க முடியாமல் போய்விட்டால், மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுக்கும் நிலை ஏற்படும். இதுவே பிறவிப்பிணி என வேதம் கூறுகிறது. பிணி என்பது துன்பம் அல்லது நோய் என்று அர்த்தமாகும். அதாவது ஒரு ஆன்மா இவ்வுலகில் எடுக்கும் ஒவ்வொரு பிறவியும் அது அனுபவிக்கும் துன்பமாகும் என்று அர்த்தமாகும்.

    ஊழ்வினை என்பது ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் கருமங்களால் தன் தலைவிதியை தானே தேடிக் கொள்வதாகும். ஒருவர் கருமா இன்னொருவருக்குச் சேராது. அதேபோல அவரவரே தனது கருமாவை தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கருமாவை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் ஒருவரது கருமாவத் தீர்க்க வழிவகை கூற முடியும். அதாவது ஒருவரது பசியை இன்னொருவர் உணவருந்தித் தீர்த்து வைக்க முடியாது. தனது பசியைத் தானே உணவருந்தி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல ஒருவருடைய கருமாவும் அப்படித்தான்.

    ஊழ்வினை என்பது ஒரு ஆன்மாவானது, அது எந்த உயிரினமாக இருந்தாலும் இந்தப் பூமியில் பிறந்து வாழும் பொழுது செய்த கருமங்களால் (நன்மை, தீமைகளால்) தேடிக்கொண்டது. அதனால் பாவ புண்ணியத்தை இந்தப் பூமியிலேயே பிறந்து அனுபவித்துத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று வேதம் கூறுகிறது.

    விஞ்ஞானி நியூட்டனின் மூன்றாவது விதி “ஒவ்வொரு வினைக்கும் (விசைக்கும்) அதற்கு சமனும் எதிருமான எதிர்வினை (எதிர்விசை) உண்டு” என்று கூறுகிறது. அதாவது ஒரு பந்தை ஓங்கி சுவற்றில் அடிக்கிறீர்கள் இது ஒரு வினை. இதன் எதிர்வினையாக பந்து உங்களை நோக்கி வருகிறது. இதுவே இந்த விதியின் தத்துவமாகும்.

    இந்தத் தத்துவம் கரும வினைக்கும் பொருந்தும். கர்மவினையில் ஒரு வினைக்கு எதிர்வினை உடன் (அதே பிறவியிலேயே) செயல்பாட்டுக்கு வரலாம். அல்லது சிறிது காலத்திற்குப் பின் வரலாம். அல்லது அடுத்த பிறவியில் கூட வரலாம். எப்படியும், நல்லதோ, கெட்டதோ ஒரு செயலின் விளைவுகளை ஊழ்வினை மூலமாக அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இறைநீதி. இதனையே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, என்றும் “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” ஆகிய பழமொழிகள் குறிப்பிடுகின்றன.

    “நீ அளித்த தானமும் தர்மமும், நீ செய்த பாவமும் புண்ணியமும், நீ கொடுத்த மதிப்பும் மரியாதையும், நீ செய்த சூழ்ச்சியும் துரோகமும், ஒரு நாள் உன்னைத் தேடிவந்து நீ செய்ததை விடச் சிறப்பாகச் செய்து விட்டுப் போகும்.” என்று பகவத் கீதை கூறுகிறது.

    எமது பிறப்பில் இருந்து இறப்பு வரை எம்மை வழி நடாத்துவது எமது தலைவிதியே ஆகும் என ஆகமங்களும், இதிகாசங்களும் எமக்கு எடுத்துரைக்கின்றன. அழிவில்லாத ஆன்மா தான் செய்த கரும வினைக்கு ஏற்றவாறு அதாவது தனது முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு இப்புவியில் பிறப்பெடுக்கின்றது. அதாவது இப்புவியில் பிறப்பெடுப்பது, தான் செய்த பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காகவே என்பது தான் உண்மையாகும்.

    நாம் நன்மை செய்திருந்தாலும் அதனைக் தீர்க்கப் பிறப்புண்டு அதுபோல நாம் தீமை செய்திருந்தாலும் அதனைத் தீர்க்கப் பிறப்புண்டு. எனவே “எதுவுமே செய்யாமல் எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிடு” என்று கூறுகிறது பகவத் கீதை. ஆனால் ஒரு உயிரினம் எதுவுமே செய்யாமல் வாழ முடியாது என்பதுதான் இப்புவியில் இயற்கை நியதி. அதாவது ஒரு உயிரினத்தால் உணவு அல்லது நீர் இன்றி வாழவே முடியாது. உணவுத் தேவைக்கான போராட்டத்திலேயே ஒவ்வொரு உயிரினமும் பாவம், புண்ணியம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதனால் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பதுதான் உண்மையாகும்.

    விதி வலியது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது. விதியை அனுபவித்தே தீர்க்கவேண்டும் என்று சாத்திரங்களும் புராணங்களும் கூறுகின்றன. இங்கு விதி என்பது எமது விதியை நாமே தேடிக் கொள்வதாகும். அது இறைவனால் எமக்குக் கொடுக்கப்படுவதல்ல. அதாவது நாம் இன்பங்களையோ அல்லது துன்பங்களையோ அனுபவிக்கும்போது இறைவன் ஏன் இப்படி தண்டிக்கிறான் என்று மனம் நொந்து கொள்வதால் எப்பயனும் இல்லை. அதை விடுத்து நாம் தேடிக்கொண்டதை நாம் அனுபவிக்கிறோம் என்று எண்ணி, அதற்கு என்ன பரிகாரம் செய்து நிவர்த்தி செய்யலாம் என்று எண்ணிக் கொள்வதே பலன் கொடுக்கும்.

    வேதங்கள் ஊழ்வினையை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளன. இந்து மதம் இதனை மூவினைத் தத்துவம் என விளக்குகிறது. அவையாவன

    1. தொல்வினை (பழைய வினை, சஞ்சித கர்மா)
    2. நுகர்வினை (தற்போது சேர்க்கும் வினை, பிராரப்த கர்மா)
    3. வரும்வினை (எதிர்காலத்தில் சேர்க்க இருக்கும் வினை, ஆகாமிய கர்மா)

    தொல்வினை (கர்ம வினைகள்): தொல்வினை என்பது தொன்மையான அதாவது பழைய வினை முற்பிறப்பில் செய்த வினை என்று அர்த்தமாகும். ஒரு ஆன்மாவானது முற்பிறப்புகளில் தான் செய்துகொண்ட நல்வினை, தீவினைகளின் பயனாக அதாவது செய்த பாவ புண்ணியங்களால் சேகரித்துக் கொண்ட வினையே தொல்வினை எனப்படும். ஆன்மாவானது தொல்வினையை அனுபவிப்பதற்காகவே அதாவது தீர்த்துக் கொள்வதற்காகவே மீண்டும் பிறப்பெடுத்து அனுபவித்துத் தீர்த்துக் கொள்ளும் என இந்து தர்மம் விளக்குகிறது. இதுவே பிறவிப் பிணி என அழைக்கப்படுகிறது.

    நுகர்வினை: நுகர்வினை எனப்படுவது இப்பிறப்பில் நாம் இன்றுவரை செய்து கொண்டிருக்கும் நன்மை, தீமைகளே நுகர்வினை எனப்படும். அதாவது நாம் இப்பிறவியில் இன்றுவரை நுகர்ந்து கொண்டிருக்கின்ற வினையாகும். நுகர்வினையால் எமது ஊழ்வினை குறைவடையலாம் அல்லது அதிகரிக்கலாம். அதாவது இப்பிறவியில் ஆற்றும் நற்கரியங்கள், தான தருமங்களால் பழைய வினைகள் அழிந்து கொண்டிருக்கும். அதே வேளை செய்யும் தீய கருமங்களால் தீவினையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்கிறது வேதம். இந்தக் கணக்கு வழக்கு படைத்தவனுக்கு மட்டுமே புரியும்.

    வரும்வினை: இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள் மூலமாகப் அடையப்போகும் நல்வினை, தீவினைகளே வரும்வினை எனப்படும்.

    சில வினைகளை எம்மால் தவிர்க்கவே முடியாது. அதாவது நாம் ஒரு பாதையில் நடந்து செல்லும்போது எமது காலடியில் அதாவது எமது பாதம் நிலத்தில்ப் படுவதால் தவிர்க்க முடியாமல். எத்தனையோ சிறிய உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. நாம் ஒரு வீடு கட்டும்போது பல உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. அது புழுவோ பூச்சியோ உயிர் உயிர் தானே. அந்தப் பாவம் எமக்குத்தானே. வீடு கட்டி முடிந்து கிரகப்பிரவேசம் செய்யப்படும்போது, பூமிக்கு பூசை செய்வது அந்த பாவத்தைப் போக்குவதற்ககாகத்தான். எனவே பாவம் செய்வது என்பது தவிற்க முடியாதது.

    வினையில் நல்வினையும் இருக்கும், தீய வினையும் இருக்கும். இதற்கு ஒரு உதாரணமாக ஒரு வசதியான குடும்பத்தில் ஒரு பிள்ளை பிறக்கிறது அப்பிள்ளையின் பெற்றோர் கடின உழைப்பாளிகள். தொழிலின் நிமித்தம் வீட்டிலேயே அவர்களால் தங்க முடிவதில்லை. எனவே அவர்கள் ஒரு ஆயாவிடம் பிள்ளையை ஒப்படைத்து இருப்பார்கள். இங்கு அப்பிள்ளைக்கு சகல வசதியும் இருக்கும். அதாவது உணவு இருக்கும். படுத்துறங்க பஞ்சணை இருக்கும். விளையாட பொருட்கள் இருக்கும். ஆனால் அப்பிள்ளை பெற்றோரின் அன்புக்காக எப்போதும் ஏங்கும். பஞ்சணையில் படுத்தாலும் அதற்குத் தூக்கம் வராது. இதுவே ஊழ்வினை எனப்படும்.

    இப்படியான நிலைமை வருவதற்கு அப்பிள்ளையின் ஆன்மா முற்பிறவியில் செய்த காரியங்களாக இருக்கலாம். முற்பிறவியில் ஆடோ, மாடோ, யானையோ, குரங்கினதோ குட்டிகளை அதன் தாய் விலங்கிடமிருந்து பிரித்து வந்து உணவூட்டி வளர்த்திருக்கலாம். அதாவது அந்தக் குட்டிக்கு உணவூட்டியதனையும் இப்பிறவியில் அனுபவிக்கிறது அதே நேரத்தில் அதன் தாயிடமிருந்து பிரித்து வந்ததையும் அக்குட்டி பட்ட துன்பத்தையும் இப்பிறவியில் அனுபவிக்கிறது. இதுவே தொல்வினை அல்லது தலைவிதி என அழைக்கப்படுகிறது.

    இம்மூன்று வினைகளும் இணைந்து எமது அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    எது நல்வினை எது தீவினை என்று நாம் அறிந்து உணர்ந்து கொள்வதும், ஊழ்வினையை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று அறிந்து கொள்வதும் எமக்கு இப்பிறவியில்க் கிடைத்த ஒரு நல்ல விதியே. இன்றுவரை நாம் எப்படி இருந்தோம் அறியாமல் என்னென்ன தவறுகள் செய்தோமோ அவற்ரிற்கெல்லாம் இனி வரும், வாழப்போகும் மிகுதி நாட்களில் நல்லதையே செய்து எமது பாவக் கணக்கை குறைத்துக் கொள்வோமாக.

    புலி, சிங்கம் போன்ற விலங்குகள் மானை பிற விலங்குகளை கொன்று தின்கிறதே அது பாவமில்லையா, நாம் விலங்குகளைக் கொன்று தின்றால் பாவமா? என்றொரு கேள்வி எழலாம். புலி இன்னொன்றைக் கொன்று தின்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு புலியோ அல்லது சிங்கமே இன்னொரு விலங்கைக் கொன்று தின்பது பாவக்கணக்கில் அடங்காது. ஆனால் உதாரணமாக புலி கொன்று தின்னும் மானுக்கு பால்குடி மறவாத குட்டிகள் இருந்து, அக்குட்டிகள் துன்பப்படுமாக இருந்தால் அது புலிக்கு பாவமாக அமையும் என்று இந்து தர்மம் கூறுகிறது. அதே வேளை இன்னொரு உயிரைக் கொல்வது பாவம் என்று அறியாத மனிதர்கள் இன்னொரு விலங்கைக் கொன்று தின்றால் கூட மன்னிக்கப் படலாம். ஆனால் கொல்வது பாவம் என்று தெரிந்து கொண்டு கொலை செய்வது பாவமாகும்.

    இவ்வாறே எமது ஊழ்வினை அல்லது கருமவினை அதாவது தலை விதி செயற்படுகிறது.

    அவரவர் செய்த ஊழ்வினைப் பலனுக்கு ஏற்றவாறு அனைவருக்கும் (எல்லா உயிரினத்துக்கும்) பிறவி ஏற்படுகிறது. அந்தப் பிறவியில் தனது நிலையில் இருந்து கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை, நீதிநெறி தவறாது செய்துவர கர்மவினை அழியும். கர்மவினை தீர்ந்தால் மட்டுமே பிறவிப்பிணி நீங்கி ஒரு ஆன்மாவானது இறைவனுடன் கலக்க முடியும் அதுவே முக்தியாகும்.

    கர்மத்தினால் வரும் துன்பங்கள் யாவும் தர்மத்தினால் அழிய வாய்ப்புண்டு, ஆயினும் சில கர்மாக்களை அனுபவித்தே கழிக்க வேண்டும் – அகத்திய பெருமான்.

    அதாவது வினையில் நல்வினையும் உண்டு தீவினையும் உண்டு.

    தீவினையில் நாம் செய்த பாவங்களும் உண்டு, எமக்குக் கிடைத்த சாபங்களும் உண்டு. பாவங்களில் தெரிந்து செய்யும் பாவங்களும் உண்டு, தெரியாமல் செய்யும் பாவங்களும் உண்டு. தான தருமங்கள் செய்துவர சில பாவங்கள் படிப்படியாக அழியும். சில பாவங்கள் எம்மால் அனுபவித்துக் கழிக்கப்படும்.

    ஆனால் சாபங்கள் அப்படியல்ல. ஒருவருக்கு இன்னொருவர் ஏதோ காரணத்திற்காக மனம் நொந்து சாபமிட்டால் அந்தச் சாபமிட்டவர் நேரடியாக வந்து அந்த நபரை மன்னித்தால் ஒழிய அந்தச் சாபம், சாபம் வேண்டியவரை பரம்பரை பரம்பரையாகத் தொடரும் என்றே வேதங்கள், ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பிறப்பில் சபித்தவரும் சபிக்கப்பட்டவரும் அப்பிறப்பு முடிந்ததும் மீண்டும் சந்திக்கப் போவதில்லை. அதனால் சாப விமோசனத்திற்கு இடமில்லாமல் போகிறது.

    சாபம் எனப்படுவது ஒருவர் இன்னொரு உயிர்மீது (இன்னொரு உயிர் எனப்படுவது மனிதர்களோ அன்றி வேறு உயிரினமோ) தமது வலிமையினால் வேண்டுமென்றே தீங்கிழைக்கும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் துன்பப்பட்டுக் கண்ணீர்விட்டு மனம் வருந்தி தீங்கிழைப் பவர்களுக்கு தமது மனதில் இருந்து கொடுக்கும் வார்த்தைகளே சாபமாகும்.

    வலிமை குறைந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை அடிமைபோல நடாத்துவதும், கொடுமைப்படுத்துவது, ஏமாற்றுவது அதனால் அவர்கள் படும் துன்பங்கள், வடிக்கும் கண்ணீர் எல்லாமே அந்த அடிமைப் படுத்துபவர்களுக்குச் சாபமாகவே அமையும்.

    நாம் தெரிந்தோ தெரியாமலோ ஆளாகும் (பெற்றுக் கொள்ளும்) சாபத்துக்கு சில உதாரணங்களை நாம் பார்ப்போம்.

    வலிமை குறைந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை அடிமைபோல நடாத்துவது, கொடுமைப்படுத்துவது, ஏமாற்றுவது அதனால் அவர்கள் படும் துன்பங்கள், வடிக்கும் கண்ணீர் எல்லாமே அந்த அடிமைப் படுத்துபவர்களுக்குச் சாபமாகவே அமையும். வலிமை குறைந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வறுமையினால் வாடுபவர்கள், போதிய உதவியின்றி இருப்பவர்கள், படிப்பறிவு குறைந்தவர்கள், உடல் வலுவிழந்த மனிதர்கள் போன்றவர்களது இயலாமையை வலுவுள்ள மனிதர்கள் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் போது (அடிமைபோல நடாத்துவது, கொடுமைப் படுத்துவது, ஏமாற்றுவது) அவர்கள் மனம் நொந்து கண்ணீர் வடித்து துன்பப்பட்டு தம்மை ஆள்பவர்கள்மீது விடும் வார்த்தைகள் சாபங்களே.

    காட்டில் சுதந்திரமாக வாழும் விலங்குகளை எமது சமயோசித புத்தியால் பிடித்து வந்து கூட்டில் அடைத்து வைத்து கயிற்றால், சங்கிலியால் கட்டிவைத்து எமது தேவைக்கு ஏற்றவாறு அவற்றைப் பயன் படுத்தும் போது அவை வருந்தி அழுவது அவை எமக்கு இடும் சாபங்களே.

    நாம் வீட்டில் மாடு வளர்ப்போம், சில மாடுகள் கட்டுக்குள் அடங்காது. அவற்றிக்கு நாம் எமது சமயோசித புத்தியால் காலையும் தலையையும் ஒரு கயிற்றால் கட்டி ஓட முடியாதவாறு செய்து விடுவோம். ஆனால் அந்த மாட்டால், அவ்விலங்கால் நிமிர்ந்தே நிக்க முடியாமல் தன் வாழ்நாள் முழுவதும் படும் அவஸ்தையை அதனைக் கட்டி வைப்பவர்கள் உணர்ந்து கொள்ளவதில்லை. அம்மாடு படும் துன்பம், அவஸ்தை, அது விடும் கண்ணீர் எமக்கு கிடைக்கும் சாபமாகும்.

    இன்னொரு உதாரணமாக கோயில்களில் வேள்வி அல்லது பலி என்ற பெயரில் கோழி, ஆடு, மாடு, எருமை போன்ற நாம் வளர்த்த விலங்குகளை வரிசையில் நிறுத்தி ஒவ்வொன்றாக பலி கொடுக்கும் போது (வெட்டும் போது) அதனைப் பார்த்து பின்னால் நிற்கும் அடுத்ததாக வெட்டப் படப்போகும் விலங்குகள் மரண பயத்தில் கத்துமே அவையெல்லாம் அம் மிருகங்களை வெட்டுபவர்களுக்கு மட்டுமல்லாமல் அதனை வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் பாவமும் சாபமுமாகும்.

    சாபத்தை ஒழிக்க ஒரே வழி நாம் ஆன்மீகப் பாதையில் சென்று முத்தி நிலை அடைவது மட்டுமே ஆகும்.

    மாயை

    ஆன்மாக்களுக்கு இறைவனின் இருப்பை மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை எனப்படும்.

    அழியக்கூடிய உலகப் பொருட்களையும், உடலையும் மெய் என்று நம்ப வைத்து, அவற்றை பற்றிக்கொள்ள வைக்கும் செயல்பாடே மாயை (மாயத் தோற்றம்) எனப்படும். இது ஆன்மாவுக்குத் தேவையான இன்பத்தைக் கொடுப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தி, ஆன்மாக்கள் இறைவனை மறந்து, இறைவனை அறிய முடியாமல் உலக இன்பங்களில் நாட்டம் கொள்ள வைக்கும். ஆன்மாக்களின் துன்பங்களுக்கெல்லாம் மாயையே மூல காரணம் ஆகும்.

    மாயை என்பது இருப்பது போலத் தெரிவது (தோற்றமளிப்பது), ஆனால் உண்மையில் அது இல்லை, அல்லது அழிந்துவிட்டது அதுவே மாயை எனப்படும். அதாவது இல்லாத அல்லது அழியும் பொருட்கள் (தற்காலிகமான தோற்றம்) இருப்பதுபோல ஒரு தோற்றத்தைக் கொடுப்பது மாயத் தோற்றம் எனப்படும். அந்த மாயத் தோற்றத்தினை இருப்பது போல அல்லது ஒருபோதும் அழியாது என்று எண்ணி, ஆன்மாக்கள் அதன்மேல் பற்று (ஆசை) வைத்து அதனை அடைய வேண்டும் என்று போராடி, அதற்காக பல பாவ, புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு ஈற்றில் அதானால் எந்தப் பயனும் இல்லை என்று உணரும்போது (எண்ணும்போது) துன்பமே முடிவாக அமைகிறது.

    அதாவது இல்லாத ஒரு பொருளை இருப்பது போல கற்பனை செய்வதுவும் மாயையே. உதாரணமாக கானல்நீரை உண்மையில் நீர் இருப்பதாக எண்ணி அதனை நோக்கி பயணம் செய்வது என்பது காலத்தை வீணாக்கும் செயலே.

    அதுபோல அழியும் பொருட்களை நிரந்தரமானவை என்று எண்ணி அதன்மேல் பற்று வைத்து அதற்காக வாழ்வதுவும் மாயையே. உதாரணமாக மண், பொன், பெண் மீதான ஆசைகளால் அவற்றை அடைவதற்காகச் செய்யும் தேவையற்ற செயற்பாடுகளால் காலத்தை வீணாக்குவதும் பல பாவச் செயல்களில் ஈடுபடுவதுமே பலனாக முடியும்.

    இன்னொரு உதாரணமாக சினிமா திரைகளில் காட்டப்படும் காட்சிகளை உண்மை என நம்பி அழுவது, சிரிப்பது, பயப்படுவது எல்லாமே மாயத் தோற்றத்தினை, அது உண்மை இல்லை, அது ஒரு மாயை (பொய் அல்லது ஒரு உண்மை அற்ற நிகழ்வு) என்று தெரிந்தும், ஒரு சிறிய நேர இன்பத்துக்காக நேரத்தையும் பணத்தையும் தேவையில்லாமல் செலவு செய்ததே விளைவாக அமைகிறது.

    அந்த மாயத் தோற்றங்களும், அந்த மாயத் தோற்றங்களை எண்ண, விரும்பவைக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் அந்த இறைவனால் உருவாக்கப் பட்டவையே. மாயை இல்லாவிட்டால் உலக இயக்கம் நடைபெறாது என்பதுதான் உண்மையாகும்.

    உலக இயக்கம் நடைபெறுவதற்காக இறைவானால் உருவாக்கப் பட்டவையே மாயை எனும் செயற்பாடாகும். விதம் விதமான வாசனைகள், விதம் விதமான வண்ண மலர்கள், மரங்கள், செடிகள், கொடிகள், விதம் விதமான சுவைகள் அனைத்தும் மாயையே.

    உதாரணமாக நாவில் படும்போது மட்டுமே ஒரு உணவின் சுவை தெரியும். அந்த உணவு நாவுக்கு வரும்வரை அதன் சுவை என்னவென்றே தெரியாது. அதுபோல அந்த உணவு உடலுக்குள் போன பின்னரும் அதன் சுவை தெரியாது. ஆனால் அந்த நாவில் படும் கணத்தில் மட்டுமே அனுபவிக்கும் சிற்றின்பத்திற்காக நாம் எவ்வளவு பணம் மற்றும் நேரத்தினை செலவழிக்கிறோம். எத்தனை பறவைகள் விலங்குகள் கொலை செய்யப் படுகின்றன. அந்த சுவை என்ற மாயையாலேயே அனைத்து விலங்குகளும் பாவம் செய்கின்றன. அந்த சுவை என்ற மாயையாலேயே அந்தச் சிற்றின்பத்தினாலேயே அனைத்து நோய்களும் உருவாகின்றன.

    மாயை என்பது உண்மையில் மனமே மாயையாகும். மனம் என்பது ஆன்மாக்கள் உலக இன்பங்களிலில் மூழ்கி இருப்பதற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்பாடே. மனம் என்ற ஒரு செயற்பாடு இல்லாவிட்டால் உலக இயக்கம் நடைபெறாது. மனமே ஐம்புலன்கள் மூலமாக இவ்வுலக இன்பங்களில் நாட்டம் கொள்கிறது. மனமே ஆணவம், கன்மம், மாயை என்ற எண்ணங்களாக பரிணமிக்கிறது. இன்ப துன்பங்களுக்கு காரணமாக மனமே அமைகிறது. மனமே ஆன்மாவானது தான் யாரென்று அறிய முடியாதவாறு மறைத்து வைத்திருக்கிறது. மனம் அழிந்தால் ஆன்மா இறைவனை உணரும்.

    மனம் என்று ஒன்று எமக்குத் தேவை இல்லை என்று நாம் எப்போது எண்ணுகின்றோமோ அப்போதே மனம் அழிய ஆரம்பித்துவிடும். அதுவே முத்திக்கு வித்திடும்.

    ஆன்மீகப் பயிற்சியின்போது மெதுமெதுவாக மனமானது வெளியுலக ஆசைகளை குறைத்துக் கொள்கிறது. இறுதியில் மனம் அழிந்துபோக ஆன்மாவானது தான் இறைவனின் அம்சம் என்பதனை உணர்ந்து அந்த இறைவனுடன் இணைந்து கொள்கிறது.

    பிறக்கும்போது ஆன்மா மிகவும் தூய்மையானதாக, மனமற்றதாக இருக்கும். அதாவது பிறந்த குழந்தைக்கு எந்தவிதமான எண்ணமும் இருக்காது. குழந்தை வளர, வளர ஆன்மாவில் இருந்து உருவாகும் மனமானது ஐம்புலன்கள் வாயிலாக வெளியுலக இன்பங்களில் நாட்டம் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த நிலையில்லாத உலகினை உண்மை என எண்ணி அதனை நோக்கிப் பயணம் செய்கிறது. உலகியல் நிகழ்வுகளை இன்பம், துன்பம் என அனுபவிக்கிறது. அதனால் அங்கு அமைந்துள்ள ஆன்மாவானது தான் ஒரு இறைவனின் அம்சம் என்பதனை அறிய முடியாமல் இருக்கிறது.

    மனிதர்கள் புறக் கண்ணால் காண்பது எல்லாமே ஒரு மாயத் தோற்றமாகும். அகக் கண்களால் அதாவது மூன்றாவது கண் அல்லது நெற்றிக் கண்ணால் காணும், அறியும் காட்சிகளே நிஜமாகும். அதுவே ஜோதிவடிவான இறைவனாகும். ஆன்மீகப் பாதையில் செல்லும் ஆன்மீகவாதிகளே நெற்றிக் கண்கள் திறக்கப்பட்டு ஞானிகள் ஆகிறார்கள்.

    திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்குகிறார்

    திருமந்திரம் – எட்டாம் தந்திரம் – அறிவுதயம் – பாடல் 2367

    மாய விளக்கது நின்று மறைத்திடும்: இல்லாத அல்லது அழியக்கூடிய பொருட்கள் உண்மைபோல ஒரு மாயத் தோற்றத்தினைக் கொடுத்து (மாய விளக்கு) அந்த இறைவனின் இருப்பை ஆன்மாக்கள் அறிய முடியாதவாறு மறைத்திடும். தூய விளக்கது நின்று சுடர்விடும்: ஆன்மாக்கள் அறியாமை நீங்கி மனம் தூய்மை பெறும்போது இறைவன் இருப்பதை உணர்ந்து அகக்கண்களால் காணக்கூடிய அந்த நிலையான ஜோதியைக் (தூய விளக்கது) எப்போதும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்துகொண்டிருக்கும். காய விளக்கது நின்று கனன்றிடும்: இந்த உடம்பினுள் (காயத்திற்குள்), மூலக்கனலாக குண்டலினி சக்தி (காய விளக்கது) கிளர்ந்தெழும்போது மேலெழுந்து பிரகாசமாக சுடர்விடும். சேய விளக்கினைத் தேடுகின் றேனை: இப்படியான நிலையில் அந்த இறைவனை அந்த ஜோதியை அந்த சிவ ஒளியை (சேய விளக்கு) அகத்தினுள் தேடி அதனுடன் ஐக்கியமாக வேண்டும்.

    பாவத்தைப் போக்க பின்வரும் வழிகள் எமது வேதங்கள் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

    தானம் தருமம் செய்துவர ஊழ்வினை அழியும்

    தானம், தர்மம் செய்வதனால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி பல பிறவிப் பிணிகளை நீக்கும். தானங்களில் சிறந்த தானம் அன்னதானமாகும். பிறர் பசியைப் போக்குங்கள். இது நாம் செய்த பாவங்களைப் போக்க மிகவும் சிறந்த தானமாகும்.

    தானங்களில் அன்னதானம், கோதானம் (பசு மாடு), வஸ்திரதானம் (உடை), பூமி (நில) தானம், கல்வி தானம், ஆத்மதானம் (குரு மூலமாகக் கிடைப்பது) எனப் பலவகை உண்டு. நாம் ஒருவருக்கு பணம், பொருள், ஆடை போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கும்போது, பெறுபவர்களுடைய மனம் இன்னும் தந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் எண்ணுமே தவிர. அவர்களது மனம் ஒருபோதும் “போதும்” என்று திருப்தியடையாது. ஆனால் அன்னதானம் கொடுக்கும்போது உண்பவர்களது வயிறு நிறைந்தவுடன் மனம் திருப்தியடைந்து “போதும்” என்று கூறுவார்கள். இதுவே உணவளிப்பவருக்கும், அவ்வுணவை வாங்கி உண்பவருக்கும் முழு மனத் திருப்தியைக் கொடுக்கும். இதனாலேயே தானங்களில் சிறந்தது அன்னதானம் எனக் கூறப்படுகிறது.

    கல்வி தானமும் ஒரு சிறந்த தானமாகும். ஒருவர் பிறருக்கு தான் கற்ற அறிவை கற்றுத் தரும்போது அவர்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது அவர்கள் மூலமாக பிறருக்கும் அந்த பலன், பயன் கிடைகிறது. கல்வி அறிவே ஒரு சிறந்த சமுதாயத்தினை உருவாக்கும்.

    தானம் வேறு தர்மம் வேறாகும். தர்மத்துக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது என்றே வேதங்கள் கூறுகின்றன.

    தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர்கள் மூலமாக அறிந்தோ அல்லது அவர்களது நிலைபற்றி பிறர் மூலமாக அறிந்தோ அவர்களுக்கு உதவுவது தானமாகும். அதாவது கேட்டுச் செய்யும் உதவியானது தானத்தில் சேரும்.

    உதவி என்று கேட்கும் முன்பே குறிப்பறிந்து அவர்கள் கேளாத நிலையில் அவர்களுக்கு வேண்டியதை மனமுவர்ந்து செய்வது தர்மமாகும். இந்த தர்மம் அதிக புண்ணியத்தைத் தரவல்லது. அதாவது பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் அவர்களுக்கு உதவுவது தானமாகும். அவர்கள் கேட்காமலேயே குறிப்பறிந்து அவர் பசியாற்றுவது தர்மமாகும்.

    தர்மம் செய்தவனை நெருங்க மரணமும் அஞ்சும் என்பதனை விளக்க மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதை ஒரு சிறந்த உதாரணமாகும்.

    தர்மம் செய்து புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தவன் கர்ணன். அவன் போர்க்களத்திலே அம்புபட்டு மரணப் படுக்கையில் இருந்தபோதும், மரணத்தினால் அவனை நெருங்க முடியவில்லை. இதனை உணர்ந்து கொண்ட கிருஷ்ணபகவான் வயோதிக பிராமணனாய் வேடமிட்டு கர்ணனிடம் வந்து அவன் செய்திருந்த புண்ணியங்கள் அனைத்தையும் யாசித்துப் பெற்றுக் கொண்டார். கேட்டுக் கொடுத்ததால் கர்ணன் தர்மத்தால் பெற்ற புண்ணியம் அனைத்தும் தானக் கணக்கில் சேர்ந்துவிட்டது. கர்ணனை மரணமும் தழுவிக்கொண்டது. இதுவே தானத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.

    கர்ணன் செய்திருந்த ஊழ்வினைப் பயனாக தாய், தந்தையார், சகோதரர்கள் இருந்தும் பிறப்பிலிருந்தே அனாதையாக வாழ்ந்து தான் செய்த தான, தருமத்தினால் முக்தியடைந்தான். இது தான தருமம் செய்தமையினால் கரன்னனுக்கு பிறவிப்பிணி நீங்கி கிடைத்த முத்தியாகும்.

    உடல் ரீதியாகச் செய்யும் உதவிகளும் தான தருமத்தில் அடங்கும். உதாரணமாக முதியவர்கள், நோயாளிகளுக்குச் செய்யும் தொண்டுகள் மற்றும் உதவிகளும் தான, தருமமாகும்.

    அது மட்டுமல்ல தான தருமம் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். உணவு, நீர் இன்றித் தவிக்கும் விலங்குகளுக்கு கொடுக்கும் நீர், உணவு என்பவையும் தான தருமத்தில் அடங்கும்.

    தெய்வீகத் திருத்தலங்கள் சென்று வழிபட்டு வர பாவங்கள் அழியும். புனித நீர் நிலைகளில் (கங்கை யமுனை காவேரி) நீராட பாவங்கள் அழியும்.

    மனதை அடக்கி விரதமிருந்து திருத்தலங்கள் சென்று வணங்கி அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு மனமுவர்ந்து தான, தருமம் செய்வதனால் பாவங்கள் அழியும். கோவிலுக்கு செய்யும் நன்கொடைகள், பசு தானம், நில தானம் போன்றவற்றினால் அத் திருத்தலங்கள் மூலமாக பலருக்கு தான தருமம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். அது எமது பிறவிப் பிணியைத் தீர்க்கும். திருத்தலங்களில் சென்று வழிபடும்போது அங்கு பல தரப்பட்ட மக்களையும் கண்டு அவர்கள் குறைகள், துன்பங்களைக் கேட்டு அறியும்போது எமக்கும் மனதில் நல்லது செய்ய வேண்டும், பாவம், தீய காரியங்களில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணங்கள் தோன்றும். இது எமது முத்திக்கு வழிவகுக்கும். அது மட்டுமல்ல ஆலயங்களில் நடைபெறும் சொற்பொழிவுகள் கேட்பதனால் மனம் நல்ல வழியில்ச் சிந்திக்கத் தொடங்கும்.

    அதுமட்டுமல்ல கோயில்கள் அமைந்துள்ள சூழல், அந்தக் காற்று, அவ்விடத்து நீர் பல நோய்களை நீக்கும் தன்மை உள்ளதாக இருக்கும். அதனால் அங்கு வரும் பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் வல்லமை அத் திருக்கோயில்களுக்கு.இருக்கும்.

    கங்ககையில் சென்று நீராடி எமக்கு விருப்பமான ஒரு உணவை அன்றுமுதல் தவிர்த்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். கங்கையில் நீராட இறங்கும்போதே எமது புற அழுக்கு மட்டுமல்லாமல் அக அழுக்கையும் அங்கேயே கழுவி விடவேண்டும். அதாவது எமது மனதிலுள்ள காமம், குரோதம், துன்புறுத்தல், சந்தேகம், பொறாமை, கொலை, களவு, புலாலுண்ணாமை போன்ற குணங்களையும் அந்த கங்கைலேயே கழுவி விடவேண்டும்.

    விருப்பமான ஒரு உணவத் தவிர்ப்பது என்பது நாம் என்றோ ஒருநாள் உண்ணும் உணவை விட்டு விடுவதல்ல. அதாவது கத்தரிக்காயையோ அல்லது வாழைக்காயையோ தவிர்ப்பதல்ல. புலால் உண்பதை இன்று முதல், அதாவது கங்கையில் நீராடியபின் புலாலைத் தொடமாட்டேன் என்பதே உண்மையான உணவை கைவிடும் தத்துவமாகும். புலால் உண்பதைக் கைவிடும்போது ஒரு உயிர் கொல்லப் படுவதிலிருந்து காப்பாற்றப் படுகிறது என்பதே உண்மையாகும். அதுவே நாம் செய்த பாவத்தைப் போக்கும். புண்ணியத்தைத் தேடித்தரும்.

    ஆன்மீகப் பயிற்சிகள் பாவத்தை அழிக்கும் முத்தியைக் கொடுக்கும்.

    பக்தி என்பது வெளிப்புறமாக கடவுளை வணங்குவது. ஆன்மீகம் என்பது யோகப்பயிற்சி மூலமாக எமது ஆசைகளை அழித்து வெளிப்புறமாக அலைபாயும் மனதை உள்முகமாகத் திருப்பி அந்த ஆண்டவனைத் தேடி, அறிந்து, தான் செய்த பாவங்களை அழித்து அந்த இறையுடன் ஒன்றரக் கலப்பதாகும்.

    ஆன்மீகப் பாதையில் குருவின் பங்கு முக்கியமானது. ஒரு குரு மூலமாக யோகப் பயிற்சிகள் கற்றே பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆன்மீகம் கற்கும்போது யோகாசனம் என்ற பதம் பயன்படுத்தப் படுகிறது. இதில் யோகம் + ஆசனம் = யோகாசனம் ஆகும். ஆசனம் எனப்படுவது நமது உடலுக்குச் செய்யப்படும் பயிற்சிகள். யோகம் எனப்படுவது எமது மனதை, ஆன்மாவை நெறிப்படுத்த செய்யப்படும் பயிற்சிகள் ஆகும்.

    குருவானவர் தன்னை சரணடைந்த சீடர்களுக்கு ஆன்மீக சிந்தனைகளைக் கற்றுக்கொடுத்து அதன்படியே சீடர்களை நல்வழிப் படுத்தி, முதலில் வினை மேலும் சேராதவாறு பார்த்துக் கொள்வார். அப்படியே சீடர்கள் தாம் தாம் செய்யும் பயிற்சிக்கு ஏற்றவாறு ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறி தமது ஊழ்வினையை அழித்துக்கொள்வர். இறுதியில் பிறவிப்பிணி நீங்கி முக்தி அடைவர்.

    ஆன்மீகவாதிகள், ஞானிகள், சித்தர்கள், மகான்களை சென்று தரிசித்து அவர்களிடம் ஆசி பெறுவதால் ஆன்மா மிகுந்த பலத்தைப் பெறும். அது மட்டுமல்லாமல் சித்தர் சமாதிகள் சென்று தரிசிக்கும் போது எமது தீவினைகள் அகல வழி பிறக்கும். பிரசித்தி பெற்ற பல ஆலயங்கள் சித்தர்களால் நிர்மானிக்கப் பட்டவையே.

    எமது இந்த மனிதப் பிறப்பே எமது ஊழ்வினையை கழிப்பதற்கேயாகும். எத் துன்பம் வந்தாலும் இறைவன் இருக்கிறான் என்ற முழு நம்பிக்கையோடு. சித்தர்கள் காட்டிய வழியினில் பயணம் செய்து எமது ஊழ்வினையை அழித்து பிறவிப்பிணி தீர்த்து முத்தியடைவோமாக.

    பதி, பசு, பாசம் – திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2407

    கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்: ஆன்மாவானது பாசத்தின் (அதாவது ஆணவம், கன்மம், மாயை) வழியே பயணிக்கும்போது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று இன்பங்கள் மட்டுமே கிட்டும். வீடு என்ற இன்பம் அதாவது முக்தி கிட்டாது. நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்: இந்த பாசங்கள் நீங்கி, வீடு பேறு (ஞானம்) அடையும் வழியை தினமும் சிந்தித்துக் கொண்டிருங்கள். தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்: எவ்விதமான உலகப் பற்றுதல்களும் (ஆசை) இல்லாமல், முழுமையான சரணாகதியுடன் இறைவனை தொழுது கொண்டிருந்தால். குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே: அப்படித் தொழுது வர, வெளியே தெரியாதவாறு குடத்தினுள் வைத்த விளக்கு போன்ற ஆன்மாவானது குன்றில் வைத்த விளக்கு போல வெளி உலகை அறிந்துகொள்ளும்.

    மூலக் கருத்து: இறைவனை தொடர்ந்து தொழுது வர உலக இன்பங்களில் திளைத்திருக்கும் ஆன்மாவானது மெது மெதுவாக அறம், பொருள், இன்பம் ஆகிய உலக இன்பங்களில் இருந்து விடுபட்டு வீடு பேற்றை (முக்தியை) நோக்கிப் பயணிக்கும்.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2408

    பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை: உலகம் இயக்கம் நடைபெறுவதற்காக, ஆன்மாவானது உலக இன்பங்களில் திளைத்திருப்பதற்காக ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசங்களை படைத்தவனும், படர்ந்த சடையை உடைய நந்தியெம் பெருமானை (சிவனை), நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்: அன்போடு அவனை தினமும் நினைந்து வழிபட்டாலும், கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்: உலக இன்பங்களில் திளைத்து இருக்கும் மனதை, அதிலிருந்து விடுபடாமல் இறைவனை மனதில் எப்படி எண்ண (நினைக்க) முடியும்? வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே: ஆன்மா பாசத்தினுள் (உலகப் பற்றினுள்) கட்டுண்டு இருந்தால் எவ்வாறு இறைவனை அடைய முடியும்.

    மூலக் கருத்து: இறைவனை வணங்கினாலும், பாசங்களில் இருந்து விடுபடாவிட்டால் இறைவனை அறியவோ, அடையவோ முடியாது.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2409

    விட்ட விடம் ஏறா வாறு போல் வேறு ஆகி: உடலில் இருந்து நீக்கப்பட்ட விஷம், கடிக்கப்பட்ட உடலின் மீது மீண்டும் ஏறித் தாக்காது அதுபோல, விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான்: பாசத்தின் தன்மையை அறிந்து அதிலிருந்து விடுபட்ட அறிஞன், மீண்டும் அந்த பாசத்தில் சிக்கி அவதிப் படமாட்டான். கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்: உலக இன்பங்களில் கட்டுண்டு இருந்த நிலையை உணர்ந்து அதிலிருந்து விடுபடுகிறான். சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே: அறியாமையாகிய பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னை இறைவனுடன் இணைத்துக் கொள்ளுகிறான்.

    மூலக் கருத்து: உலக இன்பங்களை அறுத்து எறிந்தவன், மீண்டும் உலக மாயையில் சிக்காமல், இறைவனுடன் கலக்கும் நிலையை அடைவான்.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம்- பாடல் 2410

    நாடும் பதியுடன் நற்பசு பாசமும்: பதியுடன் (சிவனோடு) எப்போதும் பசு (ஆன்மா) மற்றும் பாசம் (தளைகள்) ஆகியவை எப்போதும் இணைந்தே இருக்கும், நீடுமா நித்த நிலையறி வார்இல்லை: இதனை யாரும் அறிந்து கொள்வதில்லை. நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்: பசுவாகிய ஆன்மா, பாசத்தை (ஆணவம், கன்மம், மாயை) நீக்கி, பதியாகிய சிவனை அடையும் வழியை, நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே: தன்னை நினைந்து மனமுருகி வழிபடுபவர்களுக்கு, அந்த நந்தி பெருமான் (சிவன், நந்தி தேவர்) விளக்கியுள்ளார் (கற்பித்துள்ளார்).

    மூலக் கருத்து: பதி பசு பாசம் ஆகிய மூன்றும் அநாதியானவை, ஒன்றோடொன்று தொடர்பானவை. ஆன்மா பாசத்தில் இருந்து விடுபட்டு பதியைச் சேர்வதே முக்தி. தன்னை மனமுருகி வழிபடுபவர்களுக்கு இதற்கான வழியை அந்த நந்தி தேவர் அருளியுள்ளார்.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2412

    பதிபசு பாசம் பயில்வியா நித்தம்: தினமும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் உண்மையை அறிந்து, ஆராய்ந்து நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்: அது மட்டுமன்றி நாம் கற்றுக்கொண்ட இந்த பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் தன்மைகளை பிறருக்கு அவர்கள் நன்கு சிந்திக்கக் கூடியவாறு மீண்டும் மீண்டும் போதிப்பவர்களுக்கு, அந்தப் போதனைகள் மூலமாகவே இறைவன் அவர்கட்கு ஞானப் பாதையைத் தெளிவாகக் காட்டுவான். பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்: அதனால் அந்த பசுவுடன் உள்ள பாசத் தளைகள் பதியினால் நீக்கப்படுகிறது (அதாவது ஆன்மாக்களின் (பசு) பாசம் (ஆணவம், கன்மம், மாயை) அந்த இறைவனால் (பதி) நீக்கப்படுகிறது. பதிபசு பாசம் பயில நிலாவே: பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களைப் தெளிவாகப் புரிந்துகொண்டால், அந்த பாசம் ஆன்மாக்களிடம் இருந்து பிரிந்துவிடும், அழிந்துவிடும். பசு பதியினைப் பற்றிக்கொள்ளும்.

    மூலக் கருத்து: பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் தன்மையை தினமும் பயின்று தெளிவடைவது மட்டுமல்லாமல் பிறருக்கும் அந்த முப்பொருட்களின் தன்மையை போதிப்பவர்களுக்கு, அந்த பதியே (இறைவனே) அவர்களுக்கு பதியை (அந்த இறைவனை) அடைய வழிகாட்டும். ஆன்மாக்களை பற்றியுள்ள பாசம் நீங்கினால் அவை பதி நிலை எனப்படும் இறைநிலையை பற்றிக்கொள்ளும்.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2413

    பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும்: பதி, பசு, பாசம்ஆகிய முப்பொருட்களின் இயல்பையும், உயரிய முக்தி நிலையையும், பசுபாச நீக்கமும் காட்டி: ஆன்மாக்களை பந்தப்படுத்தும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை (பாச நீக்கம்) நீக்கும் வழிகளையும் விளக்கி, மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்: பாசத்தை நீக்க பசுக்களுக்கு மெய்யறிவைக் (புத்தியைக்) கொடுத்து, அந்த ஆனந்தமாகிய அந்த மாநந்தியம் பெருமானை (சிவனை) கண்டு பேரின்பமடைய, துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே: சைவ சமயத்திலே விளக்கப் பட்டுள்ளது

    மூலக் கருத்து: ஆன்மாக்கள் பாசத்தின் பிணைப்பில் இருந்து விடுபட்டு, இறைவனைக் கண்டு அவனுடன் ஐக்கியமாகி பேரானந்தமடைய, சுத்த சைவத்திலே (சிவனை முழுமுதலாகக் கொண்ட சமயம் சைவ சமயம்) அதாவது திருமந்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம்- பாடல் 2420

    வீட்கும் பதிபசு பாசமும் மீது உற: பதியாகிய இறைவன் பசுவாகிய ஆன்மாவுக்கு பாசமாகிய உலகப் பற்றுக்களை கொடுத்து அதன்மேல் நாட்டம் கொள்ள வைக்கிறான், ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து: பாசத்தின் பிடியில் சிக்கிய ஆன்மாக்கள் உலக இன்பங்களில் மூழ்கி நன்மை, தீமைகளை செய்து அதன் மூலமாக நல்வினையையும் தீவினையையும் சேகரிக்கின்றன. ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தான் இட்டு: அந்த வினைப்பயனால் (நல்வினை, தீவினை) ஆன்மாக்கள் நரக மற்றும் சொர்க்க நிலைகளை, இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. நாட்கு உற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே: இன்ப துன்பங்களை அனுபவித்துக் கழித்து இறுதியில் ஆன்மாக்கள் (பசுக்கள்) பாசத்தின் பிடியில் இருந்து விடுபட்டு இறைவன் மேல் பாசம் (அன்பு) கொள்ளும். இது முக்திக்கு வழிவகுக்கும்.

    மூலக் கருத்து: உலக பற்றுக்களில் சிக்கிய ஆன்மாக்கள் நன்மையும், தீமையும் செய்து அதன் மூலமாக பெறும் நல்வினை, தீவினைகள் மூலமாக இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. இதன் மூலமாக பிறவிப் பிணியும் தொடருகின்றது. இப்படியாக இன்ப துன்பங்களை அனுபவித்துக் கழித்து இறுதியில் ஆன்மாக்கள் பாசம் என்னால் என்ன என்று உணர்ந்து கொள்ளுகின்றன. இறுதியில் பாசத்தின் பிடியில் இருந்து விடுபட்டு இறைவன் மேல் பாசம் கொள்ளும். இது முக்திக்கு வழிவகுக்கும்.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2422

    அழுக்கற்று மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும்: ஆன்மாக்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய பந்தங்களை நீக்கி, பற்றுக்களிலிருந்து விடுபட்டுச் சுத்தமான நிலை அடைவதற்கு இறைவனே அருள்புரிகிறான். அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்: (அறுவை – ஆடை) அழுக்கான ஆடையைத் துவைத்து அதிலுள்ள அழுக்கை அகற்றித் தூய்மை செய்வது போல. ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே: ஆன்மாக்கள் தாம் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றாற்போல இன்ப துன்பங்களை அனுபவிக்க வைத்து, அவற்றின் பாசங்களை அகற்றி, சுத்தமாக்கி, புனிதமாக்குவதே இறைவனின் கருணையாகும்.

    மூலக் கருத்து: பந்த பாசங்களில் மூழ்கி பிறவிப்பிணியில் சுழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்கள் இறைவனின் கருணையினால் பாசம் நீங்கப்பெற்று தூய்மைப் படுத்தப் படுகின்றன.

    திருமந்திரம் – 8-ஆம் தந்திரம் – பதி பசு பாசம் – பாடல் 2423

    பாசம் பயில் உயிர் தானே பர முதல்: பசுவானது (ஆன்மாக்கள்) பாசத்தில் (பற்றுக்களோடு) நாட்டம் கொண்டு இன்பங்களில் திளைத்திருந்தாலும், உண்மையில் ஆன்மாவானது சிவனின் அம்சமே, பாசம் பயில் உயிர் தானே பசு என்ப: பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் அந்த ஆன்மா உண்மையில் பதியே (இறைவனே) என்று ஞானிகள் கூறுகின்றனர். பாசம் பயிலப் பதி பரம் ஆதலால்: பாசம் என்றால் என்னவென்று உணரும் ஆன்மாக்கள் (பதி பரம் ஆகிறது) அதினின்று விடுபட்டு புனிதநிலை அடைகிறது அதாவது இறை நிலையை அடைகிறது. பாசம் பயிலப் பதி பசு ஆகுமே: பாசத்தில் நாட்டம் கொள்வதால் பதி, பசு ஆகிறது அதாவது இறைவன் ஆன்மா என அழைக்கப்படுகிறது.

    மூலக் கருத்து: பதியாகிய இறைவனின் அம்சமாகிய ஆன்மா, பாசத்தில் நாட்டம் கொண்டு உலக இன்பங்களில் திளைக்கும்போது பசு என அழைக்கப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று உணர்ந்து அதிலிருந்து விடுபட்டுத் தூய்மை அடையும்போது அந்த ஆன்மா பதியாக (இறைவனாக) மாறுகிறது.

    உலகில் உயிரினங்களின் தோற்றம்

    திருமந்திரம்- இரண்டாம் தந்திரம் – சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை) – பாடல் 385

    மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்: ஜோதி வடிவான அந்த சிவ சக்தி (ஒளியும் ஒளியும் இணைத்த நிலை அர்த்தநாரீஸ்வரர் நிலை) யில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தினுள் மானின் கண்போல வானம் தோன்றி, அதனுள் வாயு (காற்று) தோன்றி நிரப்பும். (அண்டத்தினுள் இப்பூமியின் தோற்றம் விபரிக்கப்படுகிறது), கானின்கண் நீரும் கலந்து: அதனுள் நெருப்புத் தோன்றி பின்னர் நீரும் தோன்றி, கடினமாய்த் தேனின்கண்: அதனுள் கடினமான அழகான மண் (நிலம்) தோன்றி, ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்: ஐந்து பூதங்களும் (நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) உள்ளடக்கிய இந்தப் பூமி உருவாகியது. பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே: பூப்போல அழகான இப்பூமியானது இந்தப் பிரபஞ்சத்தில் அமைந்துள்ளது.

    குறிப்பு: ஐம்பூதங்களுள் முதலில் தோன்றிய வானமே இப்பூமியின் எல்லையாகும். அதாவது நிலத்தின் மேலாக காற்று பரவியிருக்கும் உயரம் அல்லது எல்லை மட்டுமே வானம் எனப்படும். அதன் மேலாக உள்ள பகுதி பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது.

    ஆகாயம் (வெளி): பஞ்ச பூதங்களில் முதலில் தோன்றியது ஆகாயம். இது ஒலி எனும் ஒரே குணத்துடன் தோன்றியது. ஆகாயம் ஒரு உருவமற்ற, வெற்றிடமான தன்மை உடையது. அதனால் ஆகாயம் அருவுருவம் என அழைக்கப் படுகிறது. ஆகாயத்தினுள், பஞ்ச பூதங்களில் மிகுதி நான்கு பூதங்களான காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகியவை அடங்கியுள்ளன.

    காற்று (வாயு): பஞ்ச பூதங்களில் அடுத்ததாக காற்று (வாயு) எனும் பூதம் தோன்றியது. தொடு உணர்வு எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமான ஒலி எனும் குணத்துடனும் தோன்றியது. காற்றினை கண்களால் பார்க்க முடியாது, ஆனால் உணரமுடியும். அதாவது சுவாசிக்கும்போது, காற்றினால் பொருட்கள் அசையும்போது காற்றின் இருப்பை உணர முடியும். அதனால் காற்று ஒரு அருவுருவமானது, சூக்குமமானது என அறியப்படுகிறது.

    நெருப்பு (தீ, அக்னி தேயு): பஞ்ச பூதங்களில் ஆகாயம், காற்று ஆகிய பூதங்களுக்கு அடுத்ததாக நெருப்பு (’தீ’) எனும் பூதம் தோன்றியது. ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான சூடு (வெப்பம்) ஆகிய மூன்று குணங்களைக் கொண்டுள்ளது. தீயினை கண்களால் பார்க்க முடியுமாதலால் உருவம் உள்ளது என அறியப்படுகிறது.

    நீர் (அப்பு): பஞ்ச பூதங்களில் ஆகாயம், காற்று, தீக்கு அடுத்ததாக திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம், ’சுவை’ எனும் குணத்துடன் தோன்றியது. எனவே ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் வெப்பம் ஆகிய மூன்று குணங்களுடன் தன் குணமான சுவை எனும் குணத்துடன் நீரானது நான்கு குணங்களைக் கொண்டதாக அமைகிறது. நீர் உருவமுள்ளது என அறியப்படுகிறது.

    நிலம் (பிருதிவி): பஞ்ச பூதங்களில் அடுத்ததாக ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, வெப்பம், சுவை ஆகிய நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டதாக நிலம் அறியப்படுகிறது.

    திருமந்திரம் கூறும் உயிரினத் தோற்றம்:

    இரண்டாம் தந்திரம் – படைத்தல் (சிருஷ்டி, சர்வ சிருஷ்டி) – பாடல் 409

    அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்: 84 லட்சம் உயிரினங்கள் இந்தப் பூமியில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன, மெய்ப்பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்: அனைத்து உயிரினங்களிலும் இறைவன் கலந்து இருக்கிறான், பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு: உண்மையை அறியாது இறைவனை உணராது பாசத்தின் பிடியில் இருக்கும் மனிதர்களுடன் (உயிரினங்களில் மனிதர்களால் மட்டுமே இறைவனை உணர முடியும்), இப்பரிசே இருள் மூடி நின்றானே: இறைவன் அவர்களுக்கு வெளிப்படாமல், இருள் சூழ்ந்தது போல மறைந்து இருப்பான்.

    8,400,000 வகையான உயிரினங்கள் இப்பூமியில் தோன்றுகின்றன. நான்கு வகையாக பூமில் பிறப்பெடுக்கின்றன.

    1. சுவேதசம்: வேர்வை/ஈரப்பதத்தில் தோன்றுவன (நுண்ணுயிரிகள்).
    2. உற்பிச்சம்: மண்ணைப் பிளந்து கொண்டு தோன்றுவன (முளைப்பவை தாவரங்கள்).
    3. அண்டசம்: முட்டையிலிருந்து தோன்றுவன (பறவைகள், ஊர்வன).
    4. சராயுசம்: கருப்பையிலிருந்து தோன்றுவன (மனிதர்கள், பாலூட்டிகள்).

    திருமூலர் கூறிய முக்திக்குரிய மந்திரம் – முக்திக்கு வித்து

    திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் – அற்புதக் கூத்து – பாடல் 2770

    நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி: நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள பகுதி. உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்: அந்த இடத்தை தொடர்ந்து ஆழ்ந்து உற்று நோக்கும்போது, ஒரு ஒளி தோன்றும். ஒளியை காணும் தந்திரம் இதுவாகும். இந்தத் தந்திரம் ஒரு சிறந்த மந்திரம் என கூறப்படுகிறது. மந்திரம் என்பது ஆத்மீக பாதையில் ஒரு சித்தியை அடைவதற்காக உச்சரிக்கப்படும் சில ஒலிகளின் தொகுப்பே மந்திரம் எனப்படும். பற்றுக்குப் பற்றாற் பரமன் இருந்திடம்: நிலையற்ற உலகப் பற்றுக்களில் சிக்காமல், பரம்பொருளைப் பற்றுவதற்கு உரிய இடம் அதுவே (புருவ மத்தியே). சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே: அந்தப் புருவ மத்தியே உண்மையான ‘சிற்றம்பலம்’ (சிவன்) என்று உணர்ந்து, நான் அந்தப் பரமனுடன் ஐக்கியமானேன்.

    Happy
    Happy
    0 %
    Sad
    Sad
    0 %
    Excited
    Excited
    0 %
    Sleepy
    Sleepy
    0 %
    Angry
    Angry
    0 %
    Surprise
    Surprise
    0 %

    Average Rating

    5 Star
    0%
    4 Star
    0%
    3 Star
    0%
    2 Star
    0%
    1 Star
    0%

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *