பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
பட்டினத்தார் கோயில் திரு அகவல் பாடல்களில் இருந்து சில பாடல்களும் அதன் விளக்கமும்.
கோயில் திரு அகவல் – 1
நினைமின் மனனே, நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே, நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க.
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.
ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை,
நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு
முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே.
சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே. நினைமின் மனனே.
—X—
பாடல்
நினைமின் மனனே, நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே, நினைமின் மனனே,
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க.
விளக்கம் மனமே எப்போதும் சிவனை நினைவு கொள், சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? இந்த உடம்பை நினைத்து நாளைப் போக்குகிறாயே. இது பொய்த் தேர். கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போகக் கூடியது. நிரந்தரமற்ற வாழ்க்கை.
பாடல்
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
விளக்கம்
பிறந்தன_இறக்கும்; இறந்தன_பிறக்கும்
இந்த உலகில்ப் பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். அதுபோல இறந்த உயிர்கள் அனைத்தும் தாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது.
தோன்றின_மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்வுகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில்த் தோன்றும் சூரியன் மலையில் மறைவான மீண்டும் மறுநாள் தோன்றுவான். கோடையில் குளத்து நீர் வற்றி மறையும் மீண்டும் மழை வரும்போது தோன்றும். இத் தத்துவம் உலகின் எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.
பெருத்தன_சிறுக்கும், சிறுத்தன. பெருக்கும்.
சந்திரன் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற் கொண்டு தேய்ந்து சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை சிறிது சிறிதாக வளர்ந்து வளர்பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். அதுபோலப் பணக்காரன் ஏழையாவதும் மீண்டும் பணக்காரனாவதும், ஒரு சுகதேகி நோயாளியாவதும் மீண்டும் அந்த நோயாளி சுகதேகி ஆவதும் இந்த உலகின் நியதி. வளர்வதும் தேய்வதும், மீண்டும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.
உணர்ந்தன மறக்கும்; மறந்தன_உணரும்
நாம் உணர்ந்து அறிந்துகொண்டவை சிறிது காலத்தில் எமது நினைவில் இருந்து மறந்து போகும். நாம் மறந்து போய் இருந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில்மீண்டும் உணர்ந்து அறிந்து கொள்ளப்படும். எமது நினைவுக்கு வரும். ஒருவரின் இறப்பு காலப்போக்கில் மறந்து போகும் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் அவர்களை நினைவு படுத்துவோம். இதுவே உலக நியதி
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து (பிறந்து வளர்ந்து) சென்ற குழந்தையும் வயது வர புணர ஆரம்பிக்கும்.
மேலும் இன்று நட்ப்பாக தூய உறவாக ஓன்று புணர்ந்து (சேர்ந்து) வாழ்வோர் சில சந்தர்ப்பங்களில் பிரிந்து விலகி வாழ நேரலாம் மீண்டு சில சந்தப்பங்களில் அவர்கள் இணைந்து கொள்வார்கள். இது ஒரு சுழற்சி
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்.
இன்று நாம் ஆறு சுவையோடு விரும்பி உண்ட உணவு சமிபாடடைந்து மிகுதி மலமாக மாறி வெளியேறும். நாம் அழகாக உடுத்த ஆடை அதாவது உடை பாவிக்கும்போது கசங்கி அழுக்காகும். காலையில் நீராடித் தூய்மையான இந்த உடலும் மாலையில் அழுக்காகும்.
உவப்பன_வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்
ஆசையோடு விரும்பியது வெறுக்கத் தக்கதாகும். வெறுத்து ஒதுக்கியது மீண்டும் விரும்பத் தக்கதாகும்.
விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இங்கு பொருந்தும்.
பாடல்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.
விளக்கம்: எமக்கு எது பிடிக்குமோ ஒரு நாள் அது பிடிக்காமல் போகிறது. இருந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிகளில் நாம் மாறாமல் செய்ததையே திரும்பவும் செய்கிறோமே. நாம் மிகவும் விரும்பிச் செய்த செயல்கள் கூறிய வார்த்தைகள் உண்ட உணவுகள் எல்லாமே ஒருநாள் எமக்கு எதிரியாக மறுகின்றனவே.
பாடல்
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;
விளக்கம்: முன்னாளில் நீ விரும்பி உண்ட உணவு அனைத்தும் பின்னாளில் உன்னை நோயுற்றவனாக்கி உன்னைக் கொல்கிறதே. இனிப்பு நிறைய சாப்பிட்டாயே, இப்போது இனிப்பு உன்னை தின்கிறதே
முற்பகல் நீ செய்த வினைகள் அனைத்தும் உன்னை பிற்பகலில் ஆட்டுவிக்கிறதே.
எதை நீ தேடிச் சென்றாயோ, அதுவே பின்னாளில் உன்னை எதிர்பாராத விதமாக தொந்தரவு தருகிறதே. முன்னாளில் நீ தேடிச் சென்ற பெண்களே இன்று உனக்கு தொந்தரவாக இருக்கிறார்களே. நீ செல்வந்தனாக இருந்து என்னென்ன இன்பங்களை எல்லாம் அனுபவித்தாயோ அதுவே இன்று உனக்கு நோயாக மாறித் தொந்தரவு தருகின்றதே. அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் போனாயே. அன்று நீ சொர்க்கம் என்று எண்ணித் தேடிச் சென்றதெல்லாம் இன்று உன்னை நோயாளியாக்கி வாழ்க்கையையே நரகமாக்கி விட்டதே
பாடல்
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
விளக்கம்: இன்பமும் துன்பமும் இவ்வுலகிலேயே உள்ளன. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இன்பம் இருந்தால் அங்கு துன்பமும் இருக்கும் என்பதை நினைவிற் கொள். இந்த உடம்பில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதை உறுதியாக நம்பு.
பாடல்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
விளக்கம்: எமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை மையப்படுத்தி, உடல்மீது பற்று வைக்காதே என்று கூறியிருக்கிறார் பட்டினத்தார்.
உடலுக்குள் ஏற்படும் கழிவுகள் பல்வேறு பொறிகள் அதாவது துவாரங்கள் வழியாக வெளியேறுகின்றன.
அதாவது பீளை, கண்ணீர் கண்கள் வழியாகவும்,
சளியும், கரியமிலை வாயுவாக மூக்கு வழியாகவும்,
கபமும், எச்சிலும் வாய் வழியாகவும்,
சீளும், குடுமியும் காது வழியாகவும்,
சிறுநீரும், விந்துவும் குறிவழியாகவும்,
மலமும் வாயுவும் குதம் வழியாகவும்,
வியர்வை தோல் வழியாகவும் வெளியேறுகின்றன.
கழிவுகள் வராமல் எந்த இயக்கமும் நடைபெறாது. எந்தத் தொழிற்பாட்டின் போதும் எமக்குத் தேவையானவற்றை உற்பத்தி என்றும், தேவையற்றவையைக் கழிவுகள் என்றும் அழைக்கிறோம். இது இயற்கையின் நியதி. எமது உடலும் அப்படித்தான், தொழிற்சாலைகளும் அப்படித்தான். உடலும் மனமும் தூய்மையாக இருந்தால்தான் சுகமாக வாழமுடியும்.
பாடல்
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.
விளக்கம்: இக் கழிவுகள் யாவும் உடலின் உள்ளே உருவாகி உடலில் உள்ள ஒன்பது துவாரங்கள் வழியாக வெளியேறும்போது துர்நாற்ற மெடுக்கும். நன்றாக வாழ்ந்த இந்தச் சட்டகம் அதாவது இந்த உடல் இறக்கும்போது எரிக்கப்பட்டு அதாவது நெருப்பால்ச் சுடப்பட்டு சாம்பலாகும்.
நாம் எப்போதும் அந்தச் சிவனை அந்த ஈசனை வணங்கி அவன் நினைவுடனேயே வாழ்ந்து நிலையற்ற இந்த வாழ்க்கையை நிலையானது என்று எண்ணாது கண்ணில்த் தெரியும் சிற்றின்பங்களை எல்லாம் தவிர்த்து நிலையற்ற இந்த வாழ்க்கையை நம்பாது அந்த சிவபெருமானை எண்ணியவாறு இப் பிறவிப் பெருங்கடலை நீந்தி முடித்து ஈசனுடன் இணைத்து கொள்வோம்.
கு. சிவகுமாரன் ([email protected])
–— அன்பே சிவம் —