பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) (5-12-2025 to 25-12-2025)

0 0
Read Time:7 Minute, 31 Second

பிள்ளையார் பெருங்கதை 5-12-2025 வெள்ளிக் கிழமை ஆரம்பம். 25-12-2025 வியாழக்கிழமை பூர்த்தி.

இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதமானது பிள்ளையார் பெருங்கதை விரதம், விநாயக சஷ்டி விரதம், பிள்ளையார் கதை விரதம், பிள்ளையார் நோன்பு எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இது விநாயக விரதங்களில் மிகச் சிறப்பான விரதமாகும். இந்நாள் விநாயகப் பெருமான் கயமுகாசுரனைச் சம்சாரம் செய்த நாளுமாகும். அதனால்தான் விநாயகர் ஆலயங்களில் பிள்ளையார் கதை விரத முடிவில் அன்று கயமுகாசுர சம்சாரம் (சூரன் போர்) நடைபெறும்.

எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்ததே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும். விநாயகருக்கு பூசை செய்யச் சிறந்தது அருகம்புல்லாகும்.

அருகம்புல்லின் மகிமை

யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய விரும்பித் தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை நீர் பட்டவுடன் உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் சகிப்புத் தன்மையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விளக்கியிருக்கிறார்கள். நல்ல சக்தியை தேக்கிவைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல் என்பதுவும் ஒரு கருத்து.

இந்த இருபத்தொரு நாட்களும் மாலையில் விநாயகருக்குப் பூசை செய்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்து வணங்கவேண்டும். முதல் இருபது நாட்களிலும் ஒருவேளை உண்டு, பிள்ளையார் கதை படித்து விரதம் இருத்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட் காலையில் உபவாசம் இருந்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரபு.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இருபத்தோராவது திதியான இறுதி நாளன்று அந்நூலை கோயில்களில் குருக்களைக் கொண்டும் அல்லது வீடுகளில் தாமாகவேனும் ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

பிள்ளையார் கதை வரலாறு

கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த மகாவிஷ்ணு, சிவபெருமானுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லும்நிலை ஏற்பட்டது. இதனால் பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். மகாவிஷ்ணுவை குருட்டு மலைப்பாம்பாக போகும்படி சாபம் இட்டார்.

விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், சுயமுகாசுரனின் வதம் நடைபெறும் வரை பொறுமையாக காத்து இருக்கும்படி கூறினார். அதன்படி விஷ்ணுவும் மலைப்பாம்பாக மாறி ஆலமர பொந்தினுள் இருந்து விநாயகரை வேண்டி தவம் இருந்தார்.

சில நாட்களில் சுயமுகாகரனை வதம் செய்து விநாயகர், அவனுக்கு முக்தி அளித்தார். அதன் பின்னர் விநாயகர் தன் இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆலமரப் பொந்தில் மலைப்பாம்பாக இருந்த மகாவிஷ்ணுவை கண்டார்.

விநாயகரின் பார்வை பட்டதுமே விஷ்ணு தன் சுய உருவைப் பெற்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, ‘விநாயகரே எனக்கு காட்சி அளித்து மகிழ்ச்சி கொடுத்த மார்கழி சஷ்டி தினத்தன்று, உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் துன்பம், துயரங்களில் இருந்து விடுதலை பெற்று நினைத்ததை பெற அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி விநாயகரும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்று யார் யார் 21 நாட்கள் விரதமிருந்து தன்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பதாக அருள்புரிந்தார் என்பது புராணம்.

விநாயகர் சஷ்டி விரதம் இருப்பவர்கள் சாபம், தோஷங்கள் நீங்கப்பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெற்று நலமோடு வாழ்வார்கள்.

இவ் விரத நாட்களில் வீடுகளில், விநாயகர் ஆலயங்களிலும், சைவ ஆலயங்களிலும் பிள்ளையார் கதை, விநாயக புராணம், விநாயக கவசம் என்பவற்றைப் பாராயணம் செய்து வழிபடல் வேண்டும்.

விநாயகர் அகவல் விளக்கம்

கு. சிவகுமாரன்  (kgunaretnam@hotmail.com)

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %