விடா முயற்சி
ஒரு ஊரில் ஆற்றங்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது.
அதன் கிளை ஒன்று மிக நீண்டு ஆற்று நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது.
அந்த மரக்கிளையில் குருவி ஒன்று கூடு கட்டி அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது.
ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் காற்று பலமாக வீசியது. மரக்கிளை அங்கும் இங்குமாக ஆடியது. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் ஆற்றில் விழுந்தது. அதனுள் இருந்த முட்டைகள் நீருக்குள் மூழ்கியது.
குருவிகள் மனம் பதறிக் கதறின.
ஆற்று நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காணவேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழமாட்டேன் என்றது.
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே. ஒரு வழி இருக்கிறது. முட்டைகள் கரையின் ஓரமாகத்தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த ஆற்றிலுள்ள தண்ணீரை வற்ற வைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம். என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது.
ஆற்றை எப்படி வற்றவைப்பது? என்றது பெண் குருவி.
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயலவேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டுபோய் தொலைவில் ஊற்றுவோம், இப்படியே இடைவிடாமல் செய்து ஆற்று நீரை வேறு இடத்தில் ஊற்றினால் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும். என்றது ஆண்குருவி
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன், ஊக்கத்துடன் செயலில் இறங்கின.
பட படவென்று பறந்து சென்று தங்களது சிறிய அலகில் நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன.
மீண்டும் பறந்து வந்து தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் உமிழ்ந்தன.
இப்படியே இரவு பகலாக இடைவிடாமல் இரு குருவிகளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தன.
அப்போது அந்தக் ஆற்றங்கரை ஓரமாக ஒரு வழிப்போக்கன் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து வந்த களைப்பு ஆற அந்த மரத்துக்குக் கீழே இருந்து களையாறினார்.
ஆளில்லாத அந்தப் பகுதியில் குருவிகளின் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார்.
இரண்டு குருவிகள் பறந்து போவதை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் ஆற்றுக்கு மேல் பறந்தன. நீரை அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், அந்த மனிதனுக்கு வியப்பு வந்தது.
எதற்காக மீண்டும் மீண்டும் சென்று நீரைக் குடிக்கின்றன அந்த நீரை என்ன செய்கின்றன? எதற்காக இப்படிச் செய்கின்றன? என்று அக்குருவிகளின் நடவடிக்கைகளை அவதானித்தவாறு இருந்தார் அந்த மனிதன்.
எதோ ஒரு எண்ணத்தில் அந்த மனிதன் அந்த ஆற்றங்கரையை நோக்கினார். அங்கே சில குருவி முட்டைகள் நீருக்கடியில் இருப்பது தெரிந்தது. அந்த முட்டைகளுக்காகத்தான், முட்டைகளை எடுப்பதற்காகத்தான் அந்தக் குருவிகள் முயற்சி செய்கின்றன என்று ஊகித்துக் கொண்டார். நீருக்குள் சென்று அந்த முட்டைகளை எடுத்து வந்து ஆற்றங் கரையில் மரத்துக்கு கீழாக வைத்தார். அவ்வளவுதான் அந்தக் குருவிகள் பறந்து வந்து முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றன.
முட்டைகளை இழந்த அந்தக் குருவிகளின் தவிப்பும் எப்படியாவது அந்த முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் ஆற்று நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண்குருவி.
நன்றி உணர்வுடன் பெருமிதமாகப் பார்த்தது பெண்குருவி.
இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. அவற்றின் நம்பிக்கையும் மனம் தளராத விடாமுயற்சியுமே அந்த முட்டைகளை மீட்டுக் கொடுத்தன.
விளக்கம்: முயற்சி திருவினையாக்கும் என்றொரு பழமொழி உள்ளது. அதாவது எமது குறிக்கோளுடன் நம்பிக்கையும் விடா முயற்சியும் சேரும்போது அதற்குத் தக்க பலன் எப்போதும் உண்டு.
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —