விநாயகர் ஆவணிச் சதுர்த்தி – 06 Sep 2024

0 0
Read Time:9 Minute, 30 Second

விநாயகர் ஆவணிச் சதுர்த்தி (06 Sep 2024 வெள்ளிக்கிழமை)

தேவாரம் திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறை

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

விளக்கம்: உமையவள் பெண்யானை வடிவுகொண்டு நந்தவனத்தில் இன்பமாக இருந்த நேரம் சிவன் தானும் ஆண்யானையின் வடிவு கொண்டு உமையவளோடு இன்புற்றிருந்தபோது தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் களைய கணபதியைத் தோற்றுவித்தருளினான்.

ஆவணிச் சதுர்த்தி (ஆவணி மாதம் வளர்பிறை 4ம் நாள்)

இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப் படுகின்றது.

ஆவணி மாதத்துப் பூர்வ பக்கச் சதுர்த்தி, விநாயகப்பெருமான் அவதாரம் செய்த தினமாகையால் விநாயக விரதத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்த நாளாகும்.

ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், ஏனைய சதுர்த்தி விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை கொடுக்கும் எனச் சமயநூல்கள் அறிவுறுத்துகின்றன.

இத்தினத்தில் இந்துக்களால் முக்கியமாகத் தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு சந்தனத்தால் அல்லது மஞ்சள் மாவினால் அல்லது மண்ணால் உருட்டிச் செய்த விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் 18 Sep 2023 திங்கள் கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. (ஏனைய நாடுகளில் திகதி வேறுபடலாம்)

மாதச் சதுர்த்தி (மாதந்தோறும் வரும் வளர்பிறை 4ம் நாள்)

மாதந்தோறும் வரும் வளர்பிறைச் சதுர்த்தித் திதி அதாவது அமாவாசை வந்த அடுத்த நான்காவது நாள் விநாயகர் விரதத்திற்குச் சிறந்த நாளாகும்.

பகலில் உபவாசம் இருந்து ஆலய தரிசனம் செய்தபின், இரவில் கொழுக்கட்டை, மோதகம் முதலியன விநாயகருக்கு நிவேதித்து விநாயகர் அகவல் படித்து விரதத்தினை முடிக்கலாம். விநாயகரை அறுகம் புல்லால் அர்ச்சிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். இத்தினத்தில் விரதம் அனுட்டித்து உள்ளன்போடு வழிபடுவோர்க்கு விநாயகர் கடாட்சம் கிடைக்கும். அந்நாளில் இளம்பிறைச் சந்திரனைப் பார்த்தலாகாது என்பது ஐதீகம்.

சங்கடசதுர்த்தி. (மாதந்தோறும் வரும் தேய்பிறை 4ம் நாள்)

மாதந்தோறும் வரும் தேய்பிறைச் சதுர்த்தித் திதி அதாவது பறுவம் (பௌர்ணமி) வந்த அடுத்த நான்காவது நாள் சங்கட சதுர்த்தி தினமாகும். இத் தினத்தில் விரதமிருந்து விநாயகரை வழிபட்டுவர சங்கடங்கள் தீரும் என்பது இந்த விரதத்தின் சிறப்பாகும்.

விநாயகர் விரத நாட்களில் விநாயகர் அகவல் படித்து வணங்குவது சிறப்பு.

விநாயகர் தன் கையில் யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும், (பாசாங்குசம்) ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

அகில உலகங்களும் விநாயகருடைய பானை வயிற்றில் அடங்கி உள்ளது என்ற குறிப்பை அவருடைய வயிறு புலப்படுத்துகின்றது.

முருகன், அம்பாள் முதலிய ஏனைய கடவுள் உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயாராகிவிடுவார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

சந்தனம், சாணம், களிமண், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய ஏதாவது ஒரு பொருளில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் போதும் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

தினமும் எளிதாக கிடைக்கக்கூடிய அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப்பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இந்த விநாயகர் சதுர்த்தி விரதம்.

தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி எனப் புராணங்கள் கூறுகின்றன.

விக்கினங்களைத் தீர்ப்பவன் விநாயகன்

தனக்கு மேல்த் தலைவன் இல்லாதவன் விநாயகன்.

கணங்களுக்கு அதிபதி கணபதி

ஓம் எனும் பிரணவ ரூபன் கணபதி.

ஆனைமுகன் / கஜமுகன் / கணேசன் – யானை முகத்தை உடையவர்

திதி விளக்கம்

பௌர்ணமி அல்லது அமுகாசையில் இருந்து ஆரம்பித்து அடுத்த அமாவாசை அல்லது பௌர்ணமிவரை எண்ணப்படும் 15 நாட்களே திதி எனப்படும்.

தேய் பிறை

பௌர்ணமியில் இருந்து ஆரம்பித்து அடுத்த அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும் தேய்பிறைத் திதி எனப்படும். அதாவது சந்திரன் தேய்ந்து கொண்டு வருவதால் தேய்பிறை எனப்படும்.

வளர்பிறை

ஒரு அமாவாசையில் இருந்து ஆரம்பித்து அடுத்த பௌர்ணமி வரை வரும் பதினைந்து நாட்களும் வளர்பிறைத் திதி எனப்படும். அதாவது சந்திரன் வளர்ந்து கொண்டு வருவதால் வளர்பிறை எனப்படும்.

ஏக் – ஓன்று (பிரதமை என அழைக்கப்படும்)

துவி – இரண்டு (துவிதை – இரண்டாம் நாள்)

திரி – மூன்று (திரிதியை – மூன்றாம் நாள்)

சதுர் – நாலு (சதுர்த்தி – நான்காம் நாள்)

பாஞ்ச் – நாலு (பஞ்சமி – ஐந்தாம் நாள்)

சஷ்டி – ஆறு (சஷ்டி – ஆறாம் நாள்)

சப்த -ஆறு (சப்தமி – ஏழாம் நாள்)

அட்ட – எட்டு (அட்டமி – எட்டாவது நாள்)

நவ – ஒன்பது (நவமி – ஒன்பதாம் நாள்)

தஸ் – பத்து – (தசமி – பத்தாவது நாள்)

ஏகாதசி – பதினொன்று (ஏக் என்றால் ஓன்று தஸ் என்றால் பத்து (இரண்டையும் கூட்ட பதினொன்றாகும்)

துவாதசி – பன்னிரண்டு (தூவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து (இரண்டையும் கூட்ட பன்னிரண்டு ஆகும்)

திரியோதசி – பதின்மூன்று (திரி என்றால் மூன்று தஸ் என்றால் பத்து (இரண்டையும் கூட்ட பதின்மூன்று ஆகும்)

சதுர்த்தசி – பதின்நான்கு (சதுர் என்றால் நாலு தஸ் என்றால் பத்து (இரண்டையும் கூட்ட பதின்நான்கு ஆகும்)

விநாயகர் அகவல் Vinayagar Agaval

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %