வேலைக்காரனுக்கு கடவுள் காட்சி
ஒரு ஊரில் மிகவும் வசதி படைத்த ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பக்தி வாய்ந்தவராகவும் சிவபக்தராகவும் இருந்தார். அவர் தனது வீட்டுத் தேவைகள், சமையல் போன்றவற்றை பராமரிக்க ஒரு வேலைக்காரனை பணிக்கு அமர்த்தினார். அவ்வேலைக்காரனோ படிப்பறிவு மிகவும் குறைந்தவன். பக்தி மற்றும் கடவுள் வழிபாட்டில் எல்லாம் பெரிதும் நாட்டமில்லாதவன். ஆனால் அவன் அந்த முதலாளிக்கு மிகவும் விசுவாசமானவனாகவும் நேர்மை உள்ளவனாகவும் இருந்தான்.
அந்த சிவ பக்தரோ தினமும் தனது பூசை அறையில் சிவனுக்குப் பூசை செய்து வழிபடுவார். அவர் பூசை செய்யும் நேரங்களில் யார் வந்தாலும் தன்னைத் தொந்தரவு பண்ணது தான் பூசை முடித்து வரும் வரை தனது பூசை அறைக் கதவைத் திறக்க வேண்டாம் என்றும் அந்த வேலைக்காரனுக்கு அறிவுறுத்தியிருந்தார். அவனும் அவர் பூசை முடித்து வரும்வரை அவரை யாரும் தொந்தரவு செய்யாது கவனித்துக் கொள்வான்.
அப்படியான நாட்களில் ஒருநாள் அந்த சிவ பக்தர் தனது வேலைக்காரனிடம் தான் பூசை செய்யப் போவதாகவும் பூசை முடியும் வரை யார் வந்தாலும் தான் பூசை முடித்து வரும்வரை தன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் கூறிவிட்டு தனது பூசை அறைக் கதவைப் பூட்டிவிட்டு பூசையில் அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒருவர் அந்த வீட்டு முதலாளியைப் பார்க்கப்போவதாக வேலைக்காரனிடம் கூறினார்.
அதற்கு அந்த வேலைக்காரனோ தனது எஜமான் பூசையில் இருப்பதாகவும் அவர் பூசை முடித்து வரும்வரை காத்திருக்குமாறும் கூறினான்.
வந்திருந்தவரோ முதலாளியே தன்னை வரும்படி அழைத்தாகவும் அதனாலேயே தான் அங்கு வந்ததாகவும் கூறி உடனே அவரை அழைத்து வரும்படி வேலைக்காரனிடம் கூறினார்.
வேறு வழியின்றி அந்த வேலைக்காரன் தனது முதலாளி அமர்ந்திருந்து பூசை செய்யும் கதவைத் தட்டி அவரிடம் விடயத்தைக் கூறினான்.
அதற்கு அந்த முதலாளி தான் முன்னரே கூறியதுபோல பூசை முடித்து வரும்வரை தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டுத் தன் பூசையைத் தொடர்ந்தார்.
வேலைக்காரன் நடந்த விடயத்தை அந்த விருந்தாளியிடம் கூறினான்.
அதற்கு அந்த விருந்தாளியோ தான்னால் இன்னும் பொறுக்க முடியாது என்று கூறி மீண்டும் ஒருமுறை முதலாளியை கூட்டிவருமாறு கூறினார்.
வேலைக்காரனோ வேறு வழியின்றி மீண்டும் சென்று தனது முதலாளியின் அறைக் கதவைத் தட்டி நிலைமையை விளக்கினான்.
அதற்கு அந்த முதலாளியோ தன்னை பூசையை நிறுத்தி வியிட்டு வர முடியாதென்று மீண்டும் கூறி வேலையாளைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
வேலைக்காரனும் திரும்ப வந்து அந்த விருந்தாளியிடம் நடந்ததைக் கூற அவரோ “அவர் அழைத்ததாலேயே நான் இங்கு வந்தேன் இன்னும் என்னால் இங்கு இருக்க முடியாது என்று” கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்.
பூசை முடித்துவிட்டு முதலாளி வெளியே வந்து வந்திருந்த விருந்தாளியைப் பற்றி வேலைக்காரனிடம் வினவினார்.
அதற்கு அந்த வேலைக்காரன் அந்த விருந்தாளியின் பெயர் சிவன் என்றும் நீண்ட தலைமுடியோடு காவி உடை உடுத்து உருத்திராட்ச மாலையும் அணிந்திருந்தார் என்றும் விளக்கினான்.
அப்போதுதான் அந்த முதலாளிக்குத் தான் செய்த தவறு புரிந்தது. அவர் வேலைக்காரனிடம் “பூசை செய்யாத நீ அந்த சிவனைக் கண்டுகொண்டு விட்டாய் ஆனால் இவ்வளவு பூசைகள் செய்தும் என்னால் அந்த இறைவனைப் பார்க்க முடியாமல்ப் போய்விட்டதே என்று கூறி அழுதார். அந்த சிவனைக் காண்பதற்காகத் தானே நான் பூசைகள் செய்கிறேன். அவர் என் வீடு தேடி வந்தார் ஆனால் அவர் வருகையை என்னால் உணர முடியாமல்ப் போய்விட்டது என்று கூறி தான் செய்த தவறை எண்ணி மனம் நொந்து வருந்தினார்.
விளக்கம்
நாம் இறைவனைக் கற்பனையில்த் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுள் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —