ஸ்ரீ வரலட்சுமி விரதம் 05-08-2022
வரலட்சுமி நோன்பு (விரதம்) 05/08/2022
இவ்வருடம் ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை (05/Aug /2022) வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய இரண்டு வெள்ளிக்கிழமைகளில் பௌர்ணமிக்கு அருகில், அதாவது பௌர்ணமி தினத்துக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது.
ஸ்ரீமகாலட்சுமி உதித்த நன்னாளை, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து வணங்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவேதான் அன்னை மகாலட்சுமியை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள்.
வரலட்சுமி நோன்பை கடைப்பிடிப்பவர்கள் லட்சுமி கடாட்சம் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி கடாட்சத்தினால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
பொதுவாக வீடுகளில் லட்சுமி படம் வைத்து தினமும் தூபம் காட்டி, நெய்விளக்கேற்றி, தீபாராதனை செய்து வழிபட வேண்டும். பூசை அறையில் சிறிய மண்குடத்தில் உப்பு நிரப்பி வைத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாங்கல்ய வரம் மற்றும் சகல செல்வங்களையும் வரலட்சுமி வழங்குகிறாள்.
முக்கியமாக திருமணமான பெண்கள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
நமது இல்லத்தையும் மனத்தையும் தூய்மையாக்கிக் கொள்வது சிறப்பு. தூய்மையான ஆடை உடுத்தி பயபக்தியோடு பூசை செய்வது சிறப்பு.
கன்னிப்பெண்கள் விரதமிருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானமும், ஆரோக்கியமும் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும் என்பது ஐதீகம்.
சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும்.
வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை போற்றி வழிபடுவோம். அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்.
— அன்பே சிவம் —