பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

0 0
Read Time:18 Minute, 47 Second

இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி  தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும். இவரது தாய் தந்தையர் இவரது ஐந்தாவது வயதில் கருத்து வேறுபாட்டினால் தனித்தனியே பிரிந்து சென்ற பொழுது இவரது சகோதரர்களைத் தாயார் தன்னுடன் அழைத்துச் செல்ல, தந்தையார் திருவள்ளூர் மாவட்டத்திலே உள்ள நல்லாத்தூர் என்ற கிராமத்திலுள்ள தனது சகோதரியின் இல்லத்திற்கு இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்நேரத்தில் இவரது தந்தையாரும் நோய்வாய்ப்பட அன்றுமுதல் மிக இளம் பிராயத்திலேயே பல இன்னல்களை அனுபவிக்கத் தொடங்கினார். ஐந்து வயதிலேயே பாடசாலைக்குச் செல்லவேண்டிய வயதில் உழைத்துத் தன்னையும் தன் தந்தையாரையும் கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மாடு மேய்க்கும் தொழிலை ஏற்றுக் கொண்டார். அப்படியான காலகட்டத்தில் மாடுகளையும் கவனித்துக் கொண்டு, அவ்விடத்தில் உள்ள ஒரு சிறிய ஆலயத்தில் அமர்ந்திருந்து பலவாறு சிந்திப்பார். அந்த வேளைகளில்  இவரது மனதில் தன்னால் தனது தாய் தந்தையாருடன், தனது சகோதரர்களுடன் சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு, யார் காரணம்? என்ன காரணம்? கடவுள் என்று ஓன்று இருக்கா?  நான் வணங்கியும் ஏன் அந்தக் கடவுளால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை? என்ற கேள்விகள் எழத் தொடங்கியது. அதற்கான காரணத்தைத் தேடத் தொடங்கினார். அப்போதுதான் இவரது ஆன்மீகத் தேடல்கள் ஆரம்பமாகியது. இத்தேடல்கள்தான் இவரை ஞானப் பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. இப்படியாக இவர் தனது பத்தாவது வயதினை எட்டும்போது இவரது நண்பர் ஒருவர் மூலமாக இவருக்குப் பாம்பாட்டிச் சித்தருடைய பாடல்களை விளக்கங்களுடன்  அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. இப்பாடல்களால் இவரது பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது. இவரை ஞானப் பாதையில் மிகவும் தெளிவாக வலுவாக அழைத்துச் சென்றது. அவ்வப்போது பல துறவிகள், சித்தர்கள், ஞானிகளைத் தேடிச் சென்று அவர்களது ஆசிகளையும் பெற்று ஞானமார்க்கத்தில் தன் சிந்தனையை நிலைநிறுத்திக் கொண்டார். தான் அறிந்த யோகப் பயிற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். இப்படியான நாட்களில் இவரது நிலை கண்டு மனம்வருந்திய இவரது பெரியதாயாராகிய ஜானகி அம்மா இவரைத் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்று தனது அன்பான பராமரிப்பில் வைத்திருந்து இவருக்குத் தையல் தொழில் கற்றுக் கொடுத்தார். அன்று முதல் ஐயா அவர்கள் தையல் தொழில் செய்தவாறு ஞானமார்க்கத்தில் தனது முழுக் கவனத்தினையும் செலுத்தினார். அந்நாளில் வாழ்ந்த கொல்லிமலைச் சித்தரிடம் இருந்து ஞான உபதேசம் பெற்று ஞானத் தேடலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். அத்துடன் இன்னும் சில சித்தர்களிடமும் உபதேசங்கள் பெற்று பயிற்சியினை முறைப்படி பின்பற்றி ஞானத் தேடலில் முழுமை அடைந்து பிறருக்கும் ஞான உபதசம் கொடுக்கும் ஆற்றலும் பெற்றார். இக்காலகட்டத்தில் இவரது பெரியதாயாராகிய ஜானகி அம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆன்மீகப் பாதைக்கு இல்லறம் ஒரு தடையல்ல என்னும் கருத்துடன் 1974 ஆம் ஆண்டு வசந்தா என்ற அம்மையாரை மணமுடித்து இல்லற வாழ்கையினை ஆரம்பித்து இரு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்து இன்றுவரை இல்லற வாழ்கையினையும் வாழ்ந்துகொண்டு ஞானமார்க்கத்தினையும் போதித்து வருகிறார்.

இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே ஆன்மீகத்தில் நிலைத்திரு அதாவது இறைவனைத் தேடு என்பது ஐயாவினது அறிவுரையாகும்.

மணமுடித்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துகொண்டு ஞான மார்க்கத்தினைக் கடைப்பிடிப்பதென்பது, புளியம்பழம் ஆரம்பத்தில் பூவாகி, பிஞ்சாகி, காயாகி வரும்போது ஓடும் சதையும் விதையும் ஒன்றுடன் ஓன்று ஒட்டி இருக்கும். அது கனியாகும்போது ஓடும் சதையும் விதையும் தனித்தனி ஆகிவிடும், அதுபோல இல்லறத்தில் வாழ்ந்து கொண்டு ஞான மார்க்கத்தில் உன் எண்ணங்களை, இறைவனைப் பற்றிய தேடலில் நிலைத்திரு என்று அறிவுறுத்துகிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள்.

ஆரம்ப காலத்தில் ஐயா தனது இல்லத்தில் வைத்தே தனது நண்பர்களுக்கு உபதேசமும் அறிவுரையும் கொடுக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த விதமான விளம்பரங்களோ, பேட்டிகளோ அல்லது ஆடம்பரங்களோ இல்லாது உபதேசம் கொடுத்து பல சீடர்களை ஞானமார்க்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். செவிவழியாக ஐயாவின் கருத்துக்களை அறிந்தவர்களே அவரிடம் சென்று உபதேசமும் அறிவுரையும் கேட்டு வருகிறார்கள்.

இவ்வாறு ஐயாவிடம் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் ஞான உபதேசம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு ஐயாவிடம் உபதேசம் பெற்றவர்களது வேண்டுகோளுக்கு இணங்க 2009 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற அழகான, அமைதியான கிராமத்திலே “பிரம்ம சூத்திர குழு இராஜயோக பாடசாலை” என்ற பெயரில் ஆச்சிரமமும் பின்னர் 2016 ஆம் ஆண்டுமுதல் அதனுடன் சேர்ந்த சண்முகநாயகன் என்ற பெயரில் முருகன் ஆலயமும் அமைத்து, அங்கிருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சீடர்களுக்கு உபதேசம் கொடுத்து வருகிறார்.

ஐயா அவர்கள் சீடர்களுக்கு வழங்கும் அறிவுரைகளையும், அவர்களது சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு வழங்கும் பதில்களையும், இவரது சீடர்கள் அவரது அனுமதியுடன் காணொளிகளாக வெளியிட்டு வருவதனால் கடந்த ஐந்து வருடங்களாகவே பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள், ஆன்மீகத்தை நாடுபவர்களால் அறியக்கூடியதாக உள்ளது.

மதங்களை, சிலை வழிபாட்டை பின்பற்றுவது பக்தி மார்க்கமாகும். இன, மத, மொழி வேறுபாடில்லாது இறைவனைத் தேடுவது ஞான மார்க்கமாகும். இவை இந்து மதத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு மார்க்கங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது. சரியை என்பது இறைவனை எண்ணி பூப்பறித்தல், கோவிலை சுத்தம்செய்தல் போன்ற உடலால் செய்யும் தொண்டாகும். அடுத்ததாக கிரியை எனப்படுவது சரியைத் தொண்டுடன், இறைவனை நினைந்து பஜனை பாடுவது இறைவனது புகழ் பாடுவது, பரப்புவது போன்றன அமையும். “ஞானம்” அடைவதற்கான வழிமுறையே “யோகம்” ஆகும். ஐயா தம்மை நாடிவரும் சீடர்களுக்கு யோகப் பயிற்சியை உபதேசம் என்னும் பெயரில் கற்றுக் கொடுக்கிறார்.

ஐயாவின் விளக்கங்களில் இருந்து, தம்மை அலங்கரித்து ஆலயம் சென்று மதக் கடவுளை, சிலை வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் பக்தர்களாவார்கள். யார் சாமி? யார் கடவுள்?  சாமி யார்? என்று தேடிக்கொண்டிருப்பவர்கள் “சாமியார்” ஆவார்கள். குடும்பம்மேல் பற்றும் இல்லாமல் இறைவன்மேலும்  நம்பிக்கையோ, பற்றோ இல்லாமல் காவி உடையும், உருத்திராட்சமும் அணிந்து வாழ்பவர்கள் சந்நியாசி ஆவார்கள். இறைவன் இருக்கிறான் என்று முழுமையாக நம்பி அவன்மேல் பற்றுவைத்து, “யோக” மார்க்கத்தின் மூலம் இறைவனைத் தேடுபவர்கள் “யோகிகள்” என அழைக்கப்படுவர். தன்னை அறிந்து, இறைவனைக் கண்டு முக்தி அடைந்தவர்கள் “ஞானிகள்” அல்லது “சித்தர்கள்” என அழைக்கப் படுகிறார்கள். ஞானிகள் தம்மை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முத்தி அடைந்தவனுக்கு எவ்விதமான அடையாளமும் தேவையில்லை. அவர்கள் எவ்விதமான விருப்பு வெறுப்பும் இல்லாதவர்கள்.

“அன்பே சிவம்”, “ஆத்ம வணக்கம்” என்ற தத்துவங்கள் ஐயாவின் தாரகை மந்திரங்களாகும்.  “அன்பே சிவம்” என்பது ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்தால் மனம் அமைதியாகும், தூய்மையாகும் ஞானத் தேடலை இலகுவாக்கும், இறைவனை அடைய வழிவகுக்கும் என்பது பொருளாகும். “ஆத்ம வணக்கம்” என்பது எமது உடல் அழிவது. ஆன்மா இவ்வுடலை விட்டுப் பிரிந்தபின் வைத்த பெயர் மறைந்து பிணம் என்று ஆகிவிடும். ஆனால் இந்த ஆன்மா அழியாதது அதனால் நாம் ஒருவரைச் சந்திக்கும் போது “ஆத்ம வணக்கம்” என்று அழியாத அந்த ஆன்மாவுக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது.

“அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது”. அதாவது இறைவனைத் தேடி வெளியில் ஒன்றும் அலைந்து திரியாதே உன் உள்ளேயே தேடு என்பது பொருளாகும். இதற்குரிய பயிற்சியே ஐயா கற்றுக் கொடுக்கும் உபதேசங்களாகும். ஐயா கூறுகிறார் நான் உனக்கு ஒரு வழிகாட்டியே. நான் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகளை நீயே உனக்குக் குருவாக இருந்து செய்து பயன் பெற்றுக்கொள். “குரு செத்தால் மோட்சம்” என்று ஒரு பழமொழி உண்டு. நீயே உனக்குக் குரு. நீயே உனக்கு வழிகாட்டி. உன் எண்ணங்களும், நடத்தைகளும் நேர்மையானதாக இருந்து, நீயே உனக்கு சிறந்த ஆசானாக இருந்து தான தருமங்கள் செய்தால் இறப்பில் உனக்கு முத்தி கிடைக்கும் என்பது பொருளாகும்.

நீ இப்பிறப்பில் அனுபவிக்கும் இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும் இறைவனோ அல்லது வேறு யாரோ கரணம் அல்ல. நீ முற்பிறப்பில் செய்ததன் பலனையே இப்பிறப்பில் அனுபவிக்கிறாய். அதனால் மேன் மேலும் பாவங்களை செய்து பிறவிகளைக் கூட்டதே. நீ மற்றும் உன் மூதாதையர் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே தீர்த்துக்கொள். அதற்காக தான தருமங்கள் செய்துகொள். தானங்களில் சிறந்த தானம் அன்னதானமாகும். அன்னதானம் பல பிறவிப் பிணிகளைப்  போக்கவல்லது. உனக்குள் உன்னைத் தேடி நீ யார், என்று அறிந்துகொள். உன் பாவங்களைப் போக்கிக்கொள். அதுவே ஞான மார்க்கமாகும். உண்மையான குருவைக் கண்டறிந்து அவர் சொற்படி நடந்து யோகப் பயிற்சி செய்து உனக்குள் அந்த இறைவனைக் கண்டுகொள். இதுவே பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது போதனையாகும்.

தான் இப்பிறவியில் சிறுவயதில் அனுபவித்த துன்பங்களுக்குக் காரணம் தேடி யோகப்பயிற்சியின் மூலம் பெற்ற ஞானத்தை, பிறருக்கும் புகட்டி அவர்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆச்சிரமத்தில் இருந்து கற்றுக்கொடுத்து வருகிறார். உண்மையான குருவைத் தேடி அலைபவர்களுக்கு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள் ஒரு சிறந்த வழிகாட்டி என்பது எனது கருத்தாகும். அவரது சீடர்கள் ஐயாவை ஒரு சித்தராகவே மனதில் நிலைநிறுத்தி யிருக்கிறார்கள்,போற்றுகிறார்கள்.

“You Tube” மூலமாக ஐயாவின் கேள்வி பதில் அனைத்தும் பார்த்து வரும்போது என்னில் சில மாற்ரங்களை உணர்ந்தேன். ஐயாவுடன் தொடர்பு கொண்டேன். என்னுடன் நேரடியாக உரையாடி நேரில் வந்து உபதேசம் பெறும்படி அழைத்தார். 2019 அக்டோபர் மாதம் அவ்விடம் சென்று ஐயாவிடம் “உபதேசம்” பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான்கு நாட்கள் அந்த ஆச்ரமத்தில் தங்கி இருந்து ஐயாவிடம் இருந்து எனது ஆன்மீகச் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு அறிவுரைகளையும், உபதேசமும் பெற்றுக் கொண்டேன். அங்கு தங்கி இருந்த நாட்களில் ஐயா ஒரு தகப்பன் தானத்தில் இருந்து அனைத்து சீடர்களையும் கவனித்துக் கொண்டார்.

அந்த ஆச்சிரமத்தில் உபதேசம் பெற்றநாளில் இருந்து என்னில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது. என் பலநாள் ஆன்மீகத் தேடல்களுக்கு மனதுக்கு பிடித்த மாதிரியாக ஒரு குரு கிடைத்த மனநிறைவில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

தாம் ஈடேறுவதற்காக மாதந்தோறும் பல யாகங்களாக பல வருடங்கள் தொடர்ந்து பல யாகங்கள் செய்வதிலும் பார்க்க தாமே அடக்கிய ஒரு ஞானியை (சித்தரை) ஒருதடவை வணங்குவது மேலானது அது நமக்கு மிகப் பெரிய பலனைக் கொடுக்கும் என்பது  கௌதம புத்தரின் போதனையாகும்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் May 17 2023 அன்று அதிகாலை மூன்று மணியளவில் சமாதியானார். அவரது பூதஉடல் போளிவாக்கத்தில் அமைந்துள்ள அவரால் நிறுவப்பட்ட “பிரம்ம சூத்திர குழு ராஜயோக பாடசாலை” அமைந்துள்ள ஆச்சிரமத்தில் அவரால் திறந்து வைக்கப்பட்ட அவரது சமாதியில் May 17 2023 அன்று மாலை மூன்று மணியளவில் சமாதி நிலையில் வைத்து வில்வம் இலை மற்றும் திருநீற்றினால் நிரப்பி மூடப்பட்டு அச் சமாதியின் மேல் ஐம்பொன்னால் ஆன அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. சமாதி நிலையில் இருந்து எமக்கு அருள்பாலிப்பார்.

ஆச்சிரமத்துக்கு தமிழ்நாடு உட்பட பல நாடுகளிலும் இருந்து பலர் வந்திரூந்து உபதேசமும் பெற்றுக் கொண்டனர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற எண்ணத்தில் இத் தகவலைத் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு எழுதிய சீடன் சிவகுமாரன் பிரான்ஸ் இல் இருந்து ஒலிபரப்பாகும் ITR சர்வதேச தமிழ் வானொலி அதிபர் திரு செல்வா அவர்களுடனான கலந்துடையாடல்.

பின்வரும் லிங்க் (link) இல் அழுத்திக் கேட்டுக்கொள்ளலாம்

ஆச்சிரமம்: 91 81222 79790 (India) (WhatsApp)

கு. சிவகுமாரன்  ([email protected])

                                                                        — அன்பே சிவம் —

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

6 thoughts on “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

  1. I am watching Swamiji speech with interest in you tube

    The lecture and the revelations are based on practical life of human being . Deep spiritual knowledge is simplified by him and all type of people can understand

    His holy service definitely awake many people

Comments are closed.