கேள்வி பதில் பகுதி 1 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

1 0
Read Time:7 Minute, 1 Second

கேள்வி: ஐயா புத்தகங்கள் படித்து அல்லது கம்புயூட்டர் மூலமாக அல்லது வீடியோ மூலமாக அறிந்து யோகம் செய்யலாமா?

குருவின் விளக்கம்: இல்லை யோகம் அப்படிச் செய்யக்கூடாது யோகம் என்பது உயிரோடு சம்பந்தப்பட்டது. நீ எதிர்பாராத விளைவுகளை உனக்கு ஏற்படுத்திவிடும். எனவே யோகம் என்பது ஒரு உண்மையான குருவிடமிருந்து முறைப்படி கற்று. அவர் கூறுவதுபோல பின்பற்றிச் செய்யவேண்டும். இதுவே யோகம் செய்ய சிறந்த முறையாகும்.

கேள்வி: ஐயா வேதங்களை ஓதுவது இறைவனை அடைய வழி வகுக்குமா?

குருவின் விளக்கம்: வேதங்கள் மூலமாக இறைவனை அறிய முடியுமே தவிர வேதங்களை ஓதுவதால் இறைவனை அடைய முடியாது. எல்லா வேதங்களும் மனித வாழ்க்கைக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள தொடர்ப்பைத்தான் விளக்குகின்றன. இறைவனை நீ அடைய வேண்டுமாக இருந்தால் ஒரு குரு மூலமாக முறைப்படி யோகம் கற்று உனக்குள் இறைவனைத் தேடு, அப்படித்தான் நீ இறைவனை அடைய முடியும்.

கேள்வி: ஐயா வாசி யோகம் என்றால் என்ன?

குருவின் விளக்கம்: வாசி என்றால் மூச்சு. வாசி என்றால் சுவாசம். மூச்சைக் கட்டுப்படுத்தி செய்யப்படும் யோகம்தான் வாசி யோகம் என அழைக்கப்படுகிறது.

கேள்வி: ஐயா மனித உடலில் ஆன்மா எப்போது சேர்கிறது?

குருவின் விளக்கம்: ஒரு தாயின் கருவில் சிசு வளரும்போது தாயின் ஆன்மா அவ்வுடல் வளர உதவுகிறது. அக்குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்ததும் அதன் தொப்புள்கொடி அறுபடும்போது அக்குழந்தை ஆவென்று வாயைத் திறக்கும்  அப்போது ஆன்மாவானது அவ்வுடலினுள் குடிபுகுகிறது. அதுவே அக்குழந்தையின் பிறப்பாகும்.

கேள்வி: ஐயா தியானம் என்றால் என்ன?

குருவின் விளக்கம்: தியானம் என்றால் நீ தியானம் செய்ய அமர்வதுதான் உனக்குத் தெரியவேண்டும். அப்புறம் தியானம் செய்வதே உனக்குத் தெரியக்கூடாது. பேச்சற்று நினைவற்று உன்னை மறந்து இருப்பதுதான் தியானம். அதாவது நான் விழிப்போடு இருக்கிறேனா அல்லது தூங்கிவிட்டேனா என்று தெரியாத நிலை. நான் தியானம் செய்கிறேன். நான் கடவுளை வழிபடுகிறேன் என்பதே உனக்குத் தெரியக்கூடாது தன்னை மறந்த நிலையே தியானமாகும்.

கேள்வி: ஐயா மனசை எப்படிக் கட்டுப்படுத்துவது?

குருவின் விளக்கம்: மனதை மனதால்த்தான் கட்டுப்படுத்த வேண்டும்.நல்ல குருவிடம் போய் மூச்சைக் கட்டுப்படுத்தும் விதையைக் கற்றுக்கொள். யோகத்தின் மூலமாக உன் மூச்சைக் கட்டுப்படுத்த ஐம் புலன்களும் உன் வசமாகும். அப்போது மனம் கட்டுப்படும்.

கேள்வி: ஐயா மனம் என்றால் என்ன? ஆன்மா என்றால் என்ன?

குருவின் விளக்கம்: மனம் என்பது ஆசைகள் நிறைந்தது, ஐம்புலன்களின் வழியே செயல்படுவது மனம். ஆன்மா என்பது ஆசை, பாசம் அற்றது அப்பழுக்கில்லாதது ஆன்மா. மனம் செய்யும் நன்மை தீமைகளின் விளைவுகளை ஆன்மா அனுபவிக்கிறது. ஆன்மா பல பிறவிகள் எடுக்க மனம் செய்யும் பாவ புண்ணியங்களே காரணமாக அமைகிறது. மனசை அழித்தால் ஆன்மா தூய்மைபெறும். இவ்வுலக சம்சாரத்துக்கு மனமே காரணமாகும். மனதோடு வாழ்பவன் மனிதன், மனதை (ஆசா பாசங்களை) அழித்தவன் ஞானியாகும். ஞானி இறைவனோடு கலந்துகொள்கிறான்.

கேள்வி: ஐயா ராஜயோகம் என்றால் என்ன?

குருவின் விளக்கம்: ஒரு ஊரை ஆள்பவனை ராஜா (அரசன்) என்று அழைப்போம். அதுபோல இந்த உடல் உள்ளது உடலில் ஐம்புலன்களும் உள்ளன. இந்த ஐம்புலன்களையும் ஆளக்கக்கூடியது ஆன்மா. உடல், உயிர், ஆன்மா இவற்றை யார் ஒருவன் அறிகின்றானோ அவன் ஞானி. உடலை ஆளும் ஆன்மா என்பதால் அதனை அறியும் யோகக்கலையை “ராஜயோகம்” என அழைக்கிறோம். பிரம்மம் என்றால் உயிர். சூத்திரம் என்றால் ரகசியம். உயிரின் ரகசியத்தை அறியும் முறை ராஜயோகம் என்ற யோகக் கலையாகும்.

கேள்வி: ஐயா பிரணவம் என்றால் என்ன?

குருவின் விளக்கம்: பிரணவம் என்றால் எமது ஆன்மாவையே குறிக்கும். எமது உடலினுள் மூன்று விதமான சக்திகள் மூன்று இடத்தில் இயங்குகின்றது. இடுப்பில் அகாரம் என்ற சக்தி இயங்குகின்றது. அதற்கு “குண்டலினி” என்று பெயர். வயிற்றுத் தொப்புளில் மகாரம் இயங்குகின்றது. அதற்கு “உயிர் காற்று” என்று பெயர். தலையில், உச்சியில் “ஆன்மா” என்ற சக்தி இயங்குகின்றது. அதற்கு உகாரம் என்று பெயர். இந்த அகாரம் உகாரம் மகாரம் மூன்றும் ஓன்று சேர்ந்தால் முழு ஆன்மாவாகும். அதுவே பிரணவம் ( ஓம்) என்று பெயர். அதாவது அகாரம் “அ” + உகாரம் “உ” + மகாரம் “ம்” = “ஓம்”, ஒரு விதையில் இருந்து முளை வெளிவரும்போது அது ஓம் என்ற வடிவத்திலேயே இருக்கும். அதுபோல ஒரு சிசு தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது அதுவும் ஓம் என்ற வடிவத்திலேயே இருக்கும்.

கேள்வி: ஐயா பற்றுகளைத் தவிர்ப்பது எப்படி?

குருவின் விளக்கம்: புலன்கள் அடங்கினால் ஆசைகள் அடங்கும். ஆசைகள் அடங்கினால் பற்று தானாக அடங்கும். ஆதாவது ஒரு நல்ல குருவிடமிருந்து யோகம் கற்று அவர் அறிவுறுத்தியபடி பயிற்சி செய்துவர ஐம்புலன்களும் தானாக அடங்கும்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %