இன்னும் வாழ ஆசை

0 0
Read Time:5 Minute, 3 Second

ஒரு பேரரசன் மூன்று மாநிலங்களை ஆண்டு வந்தான். அவன் மிகவும் வீரம் மிக்கவனாகவும், சாதுர்யம் உடையவனாகவும் இருந்தான். அவனுக்குப் பல மனைவிகள், பல பிள்ளைகள், பல பேரப்பிள்ளைகள் என பெரிய அரச குடும்பமாக இருந்தது. இப்படியாக அந்த அரசன் மிகவும் மகிழ்வுடன் நாட்டை ஆண்டு வந்தான். இருந்தும் அவன் இன்னும் வேறு நாடுகளை பிடிக்க வேண்டும் என்ற அவாவுடன் இருந்தான். அப்படியான நாளில் ஒருநாள் யம மகாராஜன் அவனிடம் வந்து மன்னா இன்றுடன் உனது ஆயுள் முடிவடைகிறது உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்று கூறினான்.

அதற்கு அந்தப் பேரரசனோ யம மகாராஜா நான் இன்னும் சிறிது காலம் வாழவேண்டி உள்ளது. எனது திட்டங்கள் இன்னமும் நிறைவேறவில்லை. இன்னொரு நாட்டையும் நான் கைப்பற்ற திட்டங்கள் தீட்டியுள்ளேன். அதனால் என்னை இன்னும் சிறிது காலம் வாழ விடுவாயா என்று மன்றாடினான்.

அதற்குப் பதிலளித்த யம மகாராஜனோ சரி மன்னா உனக்குப் பதிலாக உனது வம்சத்தில் ஒருவரைப் பரிந்துரை செய். அவர் ஒத்துக் கொண்டால் நான் உன்னை உனது ஆசைகள் நிறைவேறும் வரை இங்கு வாழ அனுமதிக்கிறேன் என்று கூறினானாம்.

அதற்கு மாமன்னன் எனது மூத்த மகனை அழைத்துச் செல் என்று பதிலளித்தானாம்.

உடனே எம மகாராஜன் அந்த மாமன்னனின் மூத்த மகனிடம் சென்று நடந்தவற்றைக் கூறி, நீ என்னுடன் வரத் தயாரா என்று வினவினானாம்.

உடனே அந்தச் சிற்ரரசனோ எம மகாராஜா நான் அரியணை ஏறிச் சில காலங்கள் தான் ஆகிறது. பல திட்டங்கள் வைத்துள்ளேன். எதுவுமே இன்னமும் நிறைவேறவில்லை. எனது ஆசைகளும் இன்னமும் நிறைவேறவில்லை. எனவே என்னைச் சில காலங்கள் இன்னும் வாழ விடுவாயா என்று மன்றாடினானாம்.

அதற்குப் பதிலளித்த யம மகாராஜனோ சரி மன்னா உனக்குப் பதிலாக உனது வம்சத்தில் ஒருவரைப் பரிந்துரை செய் அவர் ஒத்துக் கொண்டால் நான் உன்னை உனது ஆசைகள் நிறைவேறும்வரை இங்கு வாழ அனுமதிக்கிறேன் என்று கூறினானாம்.

அதற்கு மன்னன் எனது இளைய மகனை அழைத்துச் செல் என்று பதிலளித்தானாம்.

உடனே எம மகாராஜன் அந்த சிற்ரரசனின் இளைய மகனிடம் சென்று நடந்தவற்றைக் கூறி நீ என்னுடன் வரத் தயாரா என்று வினவினானாம்.

நடந்தவற்றைக் கேட்டு அறிந்து கொண்ட அந்த அரசனின் இளைய மகன் யம மகாராஜா நான் உன்னுடன் வரத் தயார் என்று கூறினானாம்.

மிகவும் ஆச்சரியப்பட்ட யம மகாராஜனோ அப்படியா உனக்கு இப்ப 20 வயதுதான் ஆகிறது. உனக்கு வாழ ஆசை இல்லையா என்று வினவினானாம்.

அதக்குப் பதிலளித்த அந்தச் சிற்ரரசனின் மகன் யமமகாராஜா எனது தந்தைக்கு வயது 50 எனது தாத்தாவுக்கு வயது 80. இவ்வளவு காலம் வாழ்ந்தும் அவர்களால் இன்னமும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இன்னமும் அவர்களது ஆசைகள் அடங்கவில்லை. இன்னும் வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். அவர்களால் இந்த வாழ்வில்த் திருப்பதி அடைய முடியவில்லை. எனவே நானும் அவர்களைப் போல பல காலம் வாழ்ந்தாலும் எனது ஆசைகளும் நிறைவேறாது என்றே எனக்குப் புரிகிறது.

அதாவது இங்கு வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று எனக்குப் புரிகிறது. எனவே நான் உன்னுடன் வந்து விடுகிறேன் என்று பதிலளித்தானாம்.

அதக்குப் பதிலளித்த யம மகாராஜனோ இந்த வயத்தில் நீ உணர்ந்து கொண்ட யதார்த்த உண்மைகளை இவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அவர்களால்ப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று ஆச்சரியப்பட்டானாம்.

ஆசைகள் அடங்கியபின் உயிர் பிரிந்தால் அது முக்தி – மீண்டும் பிறப்பில்லை.

ஆசைகள் அடங்காமல் உயிர் பிரிந்தால் அது மரணம். – மீண்டும் பிறப்பு உண்டு.

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %