ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநாதர் இயற்றிய உலகநீதி
உலகநீதி ஒரு தமிழ் நீதி நூல். இதனை இயற்றியவர் உலகநாதர் எனும் ஒரு முருக பக்தர் ஆவார். இவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆக அறியப்படுகிறார். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் எட்டு அடிகள் அடங்கிய 13 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளது. இந்நூல் கூறும் அறிவுரைகள் எதனைச் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளன.
கடவுள் வாழ்த்து
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
விளக்கம்: உலகநீதி எனும் இப் பாடல்களை (இப்புராணத்தை) கூறுவதற்கு கலைகளின் தலைவனாய் இருக்கும் கணபதியே (யானை முகனே) துணைபுரிவாயாக.
பாடல்கள்
பாடல் 1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் (1)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (2)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் (3)
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் (4)
போகாத இடந்தனிலே போக வேண்டாம் (5)
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் (6)
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (8)
விளக்கம்:
- தினமும் கற்றுக் கொண்டிரு. அதாவது எப்போதும் சிறந்த நூல்களை நல்ல அறிவுரைகளை கற்று அறிந்து கொண்டிரு.
- எவருக்கும் தீமை பயக்கும் சொற்களை சொல்லாதே. யார் மீதும் பழி சுமத்தாதே.
- பெற்ற தாய் தந்தையரை ஒருபொழுதும் மறந்து விடாதே.
- கொலை, களவு, பொய், ஆகிய வஞ்சகச் செயல்களை செய்யும் தீயவர்களுடன் தொடர்பு வைத்திராதே.
- போகக்கூடாத அதாவது சூதாட்டம், மதுச்சாலைகள், விபச்சார விடுதி போன்ற களியாட்ட இடங்களுக்குச் செல்லாதே.
- ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை, அவதூறு கூறாதே.
குறத்தி மகளான வள்ளி மணவாளனனை, வலிமைநிறைந்த (வாகாரும்) முருகப் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 2
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் (1)
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் (2)
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் (3)
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் (4)
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் (5)
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் (6)
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (8)
விளக்கம்:
- உன் மனத்துக்குத் (மனசாட்சிக்குத்) தெரிந்து பொய் கூறாதே.
- உன்னால் முடியாது (நடக்காது) என்று தெரிந்த ஒரு செயலைச் செய்ய முயற்சிக்காதே.
- கொடிய விசமுள்ள பாம்பு மற்றும் கொடிய விலங்குகளுடன் (நஞ்சான குணமுள்ள மனிதர்களுடன்) ஒரு பொழுதும் சேர்ந்து பழகாதே.
- அன்பு, அறிவு, பணிவு, பாசம் போன்ற நல்ல பண்புகள் இல்லாத மனிதர்களுடன் பழகாதே, நட்புக்கொள்ளாதே.
- பயமில்லாது யாரின் உதவியும் இன்றி தன்னந்தனியாக பயணம் செய்யாதே.
- பிறரை ஒருபோதும் கெடுக்காதே, கெடுக்க முயற்சிக்காதே.
சோலையான மலைநாட்டின் குறவர் குல மகளான வள்ளியின் மணவாளனை, வலிமை பெற்ற முருகப் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 3
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் (1)
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் (2)
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் (3)
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் (4)
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம் (5)
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம் (6)
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (8)
விளக்கம்:
- எதனையும் சிந்திக்காது, மனம் எண்ணுவதை எல்லாம் செய்யக்கூடாது.
- எதிரியை, வஞ்சகரை ஒருபோதும் உறவினன் அல்லது நண்பன் என்று எண்ணாதே. அவர்களை நம்பாதே.
- பணம், பொருளை சிரமப்பட்டுச் சேகரித்து பின்னர் அதனை யாரும் அனுபவிக்காமல், யாருக்கும் பயன் படாதபடி ஒழித்து வைக்காதே.
- தானம், தருமம் செய்ய ஒரு பொழுதும் மறக்காதே.
- கோபம் கொண்டு அதன் மூலமாகத் துன்பத்தினைத் தேடாதே. பிறர்மீது கோபம் கொள்வதால் அது முடிவில் உனக்குத் துன்பத்தினையே ஏற்படுத்தும்.
- கோபத்தோடு இருப்பவரிடம் நெருங்காதே. அவர்களது வீடுகளுக்கும் செல்லாதே.
காட்டை விரும்பி மகிழ்ந்து வாழும் குறவர் குல மகளான வள்ளியின் மணவாளனனை, வலிமை பெற்ற முருகப் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 4
குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் (1)
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம் (2)
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் (3)
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் (4)
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் (5)
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் (6)
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (8)
விளக்கம்:
- பிறரிடம் எப்போதும் அவர்கள் செய்த சிறு குற்றங்களையே, பிளைகளையே பெரிதுபடுத்திக் கூறிக்கொண்டு திரியாதே.
- கொலையும், திருட்டும் செய்கின்ற தீயோருடன் நட்புக் கொள்ளாதே அவர்களிடம் இருந்து விலகி இரு.
- நூல்களைக் கற்ற சிறந்த அறிஞர்களை ஒரு பொழுதும் பழிக்காதே.
- கற்புடைய பெண்களுக்கு தீங்கு செய்ய எண்ணாதே.
- ஆட்சி செய்பவர்களோடு எதிர் வாதம் பேசாதே.
- கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்காதே.
வள்ளியின் மணவாளனனை, நிகரில்லாத முருகப் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 5
வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம் (1)
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம் (2)
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் (3)
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம் (4)
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் (5)
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (6)
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (8)
விளக்கம்:
- மனையாளை வீட்டில் தவிக்க விட்டு, அவளோடு கூடி (சேர்ந்து) வாழாமல் பிற பெண்களைத் தேடி அலையாதே.
- மனைவியின் மீது எப்போதும் குறை, குற்றம் சொல்லித் திரியாதே.
- தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடாதே.
- கடும்போரில் பின்வாங்கி புறமுதுகு காட்டி பின்வாங்கி ஓடாதே. (அது உன்னை மட்டுமல்ல அங்கு நின்று போரிடுபவர் களையும் பாதிக்கும்).
- கீழான தீய பழக்கமுடையவர்களுடன் சேராதே, அவர்களுடன் பழகாதே.
- எளியோர், வலிமை குறைந்தோர் மீது குறை சொல்லாதே.
பெருவாழ்வு வாழும் வள்ளியின் மணவாளனனை, நிகரில்லாத முருகப் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 6
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம் (1)
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் (2)
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் (3)
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் (4)
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் (5)
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் (6)
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன் (7)
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே (8)
விளக்கம்:
- பயனில்லா வார்த்தைகள் கூறுவாருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்களோடு கூடித் திரியாதே.
- எம்மை மதிக்காதவருடைய வீட்டுக்குப் போகாதே.
- மூத்தவர்கள் அனுபவசாலிகள், அறிவிற் பெரியோர் அறிவுரைகளை மறக்காதே, கேட்டு நட.
- முன்கோபமுடைய (எடுத்ததற் கெல்லாம் கோபப்படும்) மனிதர்களுடன் சேராதே.
- கல்வி கற்பித்த ஆசிரியருக்கு உரிய கடமையை, மதிப்பை கூலியை கொடுக்காமல் வைத்துக் கொள்ளாதே.
- திருடர்களோடு கூட்டுச் சேராதே.
வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளியின் மணவாளனை, நிகரில்லாத முருகப் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் (1)
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம் (2)
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம் (3)
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் (4)
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் (5)
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் (6)
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன் (7)
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. (8)
விளக்கம்:
- எக் காரியமாக இருந்தாலும் செய்யும் வழியை ஆராயாமல் திட்டமிடாமல் காரியங்களை செய்ய முயலாதே.
- எமது நஷ்டங்களை, பொய்க் கணக்கை ஒரு பொழுதும் பிறரிடம் கூறாதே.
- போர்க்களத்துக்கு வேடிக்கை, விடுப்புப் பார்க்கப் போகாதே.
- அரச நிலத்தை, பொதுவான இடத்தை ஒரு பொழுதும் ஆக்கிரமிக்காதே, வசிக்காதே, சொந்தம் கொண்டாடாதே
- இரு மனைவியரை ஒருபொழுது தேடிக் கொள்ளாதே.
- எளியாரை, வல்லமை குறைந்தவரை ஒருபோதும் எதிர்க்காதே, பகைக்காதே.
தினைப் புனம் (நிலம்) காக்கும் ஏழைகளின் பங்காளனாகிய குமரவேள் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 8
சேராத இடந்தனிலே சேர வேண்டாம் (1)
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் (2)
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் (3)
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் (4)
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் (5)
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் (6)
வாராருங் குறவருடை வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (8)
விளக்கம்:
- சேரத்தகாத அதாவது சூது, மதுச்சாலை, விபச்சார விடுதி போன்ற இழிவான செயல்கள் நடைபெறும் இடங்களுக்குப் போகாதே.
- ஒருவர் செய்த உதவியை ஒருபொழுதும் மறக்காதே.
- ஊரெல்லாம் திரிந்து கோள் சொல்லி கலகமூட்டுபவராக இருக்காதே.
- உறவினரை அலட்சியப்படுத்தாதே.
- புகழ், பெருமை தரும் காரியங்களைச் செய்யாது விலகாதே.
- ஒருவருடைய அடிமையைப் போல அவரின் கூடாத செயல்களுக்கு அவருடன் துணையாக செல்லாதே.
பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன் குமரவேள் பெருமானை எப்போதும் மனதில் போற்றி வணங்குவாயாக.
— *** —
பாடல் 9
மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம் (1)
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம் (2)
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் (3)
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் (4)
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம் (5)
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் (6)
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (8)
விளக்கம்:
- ஒரு நிலத்தில் நின்று அதாவது அந்த நிலத்திலேயே வாழ்ந்து கொண்டு, நிலத்தகராறில் ஒருசார்பாகத் தீர்ப்பு கூறாதே.
- மனம் சலித்து, விரக்தியடைந்து யாருடனும் சண்டையிட்டு திரியாதே.
- நம் துயரம் துன்பம் பிரச்சினைகளை எவரிடமும் அழுது தெரிவிக்காதே.
- பார்க்காத, தெரியாத அறியாத ஒன்றைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கட்டுக் கதைகளை பிறருக்குக் கூறாதே.
- பிறர் மனதைப் புண்படும் சொற்களைப் பேசாதே.
- எப்போதும் பிறரைக் கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேராதே.
நிலத்தை அளந்த திருமாலுக்கு தங்கையாகிய உமாதேவிக்கு, மைந்தன் ஆகிய, மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை மனமே வாழ்த்துவாயாக.
— *** —
பாடல் 10
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் (1)
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் (2)
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் (3)
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் (4)
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம் (5)
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் (6)
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் (7)
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே (8)
விளக்கம்:
- வீரம் பேசி சண்டைக்காக அலைபவருடன் நட்புக் கொள்ளாதே.
- ஒருவரை அழிக்கும் நோக்கில் பொய்யாக வாதாடாதே.
- தந்திரமாய்ப் பேசி, கலகம் செய்து திரியாதே.
- தெய்வத்தை ஒருபொழுதும் மறவாதே.
- இறக்கும் நிலை வந்தாலும் பொய்யை சொல்லாதே.
- இகழ்ச்சி செய்த உறவினரிடம் உதவி கேட்காதே.
குறிசொல்லி வாழும் குறவர் குடியிற் பிறந்த வள்ளியம்மையை பக்கத்தில் உடையவனாகிய முருகவேளின் பெயர்களை மனமே சொல்லித் துதிப்பாயாக.
— *** —
பாடல் 11
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.
விளக்கம்:
ஐந்து நபர்களுடைய கூலியை அவர்களது ஊதியத்தினைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்களை ஏமாற்றாதே. துணி துவைப்பவர், முடி வெட்டுவார். கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர், பிரசவம் பார்த்த மருத்துவச்சி, நோயைக் குணப்படுத்திய மருத்துவர் ஆகிய இந்த ஐந்து துறைகளிலும் எமக்கு உதவுவர்களது ஊதியத்தினைக் கொடுக்காது ஏமாற்றினால் எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ? அதாவது அப்படி ஏமாற்றுபவர்கள் மிகவும் நோய் துன்பம் வந்து துயருற்று இறப்பார்கள்.
— *** —
பாடல் 12
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் (1)
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் (2)
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் (3)
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம் (4)
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் (5)
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் (6)
மாறான குறவருடை வள்ளி பங்கன் (7)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (8)
விளக்கம்:
- ஒரு குடும்பத்தை பிரிவுபடுத்தி கெடுக்காதே.
- பிறர் கண்ணில் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்து பகட்டான செயலைச் செய்யாதே.
- பிறர்மீது பழி ஏற்படும் வகையில் அவதூறு பேசி அதே வேலையாக அவர் வாழ்வில் தலையிட்டு திரியாதே.
- தீயவர்களாகி அலைபவருடன் நட்புக் கொள்ளாதே.
- பெருமை கொள்ளவேண்டிய தெய்வங்களை இகழாதே.
- மேன்மையுடைய பெரியோர்களை வெறுக்காதே.
குறவர் குடியிற் பிறந்த வள்ளியம்மையை பக்கத்தில் உடையவனாகிய முருகவேளின் பெயர்களை மனமே சொல்லித் துதிப்பாயாக.
— *** —
பாடல் 13:
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.
விளக்கம்:
உலகநாதன் என்னும் புலவன் ஆகிய நான் பலரைப் போற்றி பல நல்வழியில் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ் மொழியால் முருகக் கடவுளைப் பாடவிரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடி வைத்த “உலகநீதி” என்னும் இந் நூலை நாள்தோறும் விரும்புடன் கற்றவரும் கேட்டவரும் வாழ்வில் நல்லெண்ணமும், மனமகிழ்ச்சியும், ஞானமும், வாழ்வும், புகழும் உடையவர்களாய் உலக முள்ளவரையும் முருகன் அருளால் வாழ்வார்களாக.
— உலகநீதி முற்றும் —