சிறந்த (சமஜோசித) பொய்
கூட நாட்டை ஆண்டு வந்த அரசன் தனது குடிமக்களில் யார் நன்றாகச் சிந்திக்கிறார்கள், யார் நல்ல பொய் சொல்கிறார்கள் என்று அறிய விரும்பினான்.
ஒருநாள் தனது குடி மக்களை அழைத்து நாளை குடிமக்கள் ஒவ்வொருவராக வந்து ஒரு பொய் சொல்ல வேண்டும். நீங்கள் கூறும் பொய்யை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் (அதாவது நீங்கள் கூறும் பொய்யை என்னால் நம்ப முடியவில்லை என்றால்) உங்களுக்கு ஆயிரம் பொற் காசுகள் பரிசாக வழங்கப்படும். நீங்கள் கூறும் பொய்யை நான் ஏற்றுக் கொண்டால் (அதாவது நீங்கள் கூறும் பொய்யை என்னால் ஒத்துக்கொள்ள முடிந்தால்) பொய் சொல்பவருக்கு ஒரு சவுக்கடி வழங்கப்படும் என்றும் அறிவித்தான்.
அடுத்த நாளும் வந்தது. பொது மக்கள் வரிசையில் நின்று ஒவ்வொரு பொய்யாகச் சொன்னார்கள்.
அதில் ஒரு முதியவர் “மன்னா எனக்கு 10 வயது என்று கூறினார்.
அதற்கு மன்னன் உமது வயது பத்து என்பதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி ஒரு சவுக்கு அடியும் கொடுத்தான்.
அடுத்ததாக ஒரு கரிய நிறமுடைய ஒருவர் நான் நல்ல வெண்ணிறமாக நல்ல அழகாக இருக்கிறேன் என்று கூறினார்.
அதற்கு மன்னன் நீ கூறுவதனை நான் ஏற்றுக் கொள்கிறேன், என்று கூறி ஒரு சவுக்கு அடியும் கொடுத்தான்.
இப்படியாகப் பலர் ஒவ்வொரு பொய்யாகக் கூறி மன்னனிடம் ஒரு சவுக்கு அடியும் வாங்கிச் சென்றார்கள்.
அடுத்ததாக ஒருவன் வந்து “மன்னா போன வாரம் நீங்கள் என்னிடம் இரண்டாயிரம் பொற் காசுகள் கடனாக வாங்கினீர்கள் அதனை வாங்கிச் செல்லவே இப்போது வந்துள்ளேன்” என்று ஒரு பொய்யைச் சொன்னான்.
அப்போதுதான் மன்னனுக்கு அவன் கூறும் பொய்யை ஒத்துக் கொண்டால் இரண்டாயிரம் பொற் காசுகள் கொடுக்க வேண்டும். பொய் என்று கூறினால் ஆயிரம் பொற் காசுகள் கொடுக்க வேண்டும் என்று புரிந்தது.
அவனது சமஜோதித புத்தியை வியந்த மன்னன் அவனுக்கு ஆயிரம் பொற் காசுகள் பரிசளித்து பாராட்டினான்.
சாராம்சம்: இடத்துக்கு, நிலமைக்கு ஏற்றவாறு சிந்திக்கத் தெரிந்தவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பேசிவம் —