புதிய தியான மண்டபம் – திறப்பு விழா – பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது பிரம்ம சூத்திர குழு போளிவாக்கம் ஆச்சிரமத்தில் ஒரே சமயத்தில் 3000 சீடர்களும் தொண்டர்களும் அமர்ந்து இருந்து சுவாமிகளுடன் கேள்வி பதில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக மிகவும் பிரமாண்டமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த தியான மண்டபம் 05 தை 2023 அன்று சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள முருகன் ஆலய முன்றலில் 300 பேர் அளவிலே அமர்ந்து இருக்கக்கூடிய சிறிய மண்டபத்திலேயே கேள்வி பதில் நிகழ்வுகள் நடைபெறுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள், தொண்டர்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதனாலும் போதிய இட வசதி இன்மையினாலும் சுவாமிகள் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சீடர்களை வரவழைத்து கேள்வி பதில் மூலமாக அவர்களது அறியாமையைப் போக்கி அவர்களுக்கு ஆன்மீக உபதேசங்கள் (யோகப் பயிற்சி) அளித்து வருகிறார். இடவசதி இன்மை காரணமாக அங்கு வருபவர்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு (மழை, காற்று, வெயில்) பல அசௌகரியங்களையும் எதிர் கொள்கிறார்கள்.
அங்கு வருபவர்கள் எவ்விதமான அசௌகரியங்களும் இன்றி மண்டபத்திலே அமர்ந்திருந்து சுவாமிகளுடன் உரையாடி தரிசனம் பெற்று ஆன்மீகத்தில் ஈடேறும் முகமாக இந்த அழகான சிற்ப வேலைகள், ஓவியங்களுடன் கூடிய பிரமாண்டமான புதிய மண்டபம் அமைந்துள்ளது.
மண்டபம் முன்புறமாக வீதியில் பிரதான வாயிலும் மறுபுறம் உணவுக் கூடத்துடன் இணைந்துள்ளவாறும் அமைந்துள்ளது. சுவாமிகள் தான் இருக்கும்போதே அங்கு வரும் பக்தர்கள் எவ்விதமான சிரமங்களுக்கும் ஆளாகாதவாறு இருப்பதற்காக தனது நேரடி மேற்பார்வையில் ஏழு மாதங்களில் இந்த அழகிய மண்டபத்தினைக் கட்டி முடித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மட்டுமே (இரண்டு அல்லது மூன்று நாட்கள்) ஆச்சிரமம் திறந்திருக்கும். மிகுதி நாட்களில் ஆச்சிரமம் மூடி இருக்கும். ஆனால் சண்முகநாயன் முருகன் ஆலயமும், சுவாமிகளது சமாதியும் தினமும் பகல் வேளைகளில் திறந்து இருக்கும். கோவிலில் பூசைகளும் நடைபெறும். சுவாமிகள் அங்கு தங்குவதில்லை.
ஆச்சிரமத்திலே முருகன் ஆலயமும் ஆலயத்தின் முன்றலில் 300 பேர் அளவில் அமர்ந்திருக்கக் கூடியவாறு அமைந்த சந்நிதானமும், அந்தச் சந்நிதானத்தின் மறுபுறத்தில் சுவாமிகள் எதிர்காலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கப் போகும் சுவாமிகளது சமாதியும், அதனுடன் கூடிய உபதேசம் கொடுக்கும் மண்டபமும் அமைந்துள்ளது. வீதிக்கு மறுபுறமாக 3000 பேர் அளவில் அமரக்கூடிய புதிய தியான மண்டபம் அமைகிறது. தியான மண்டபத்தின் மறு புறமாக ஒரே தடவையில் 300 பேர் அளவில் அமர்ந்து உணவருந்தக் கூடிய உணவுக் கூடமும், அதனுடன் கூடிய சமையல் அறையும், அதன் மேலாக தூர இடங்களில் இருந்து வருபவர்கள் தங்கக் கூடியவாறு நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகளும் அமைந்துள்ளது.
ஆச்சிரமம் ஒருபுறமாகக் காடும், மறுபுறமாக வயலும், இன்னொரு புறமாக பெரிய குளமுமாக மிகவும் அழகான அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
எமது ஆன்மீகத் தேடலுக்கான ஒரு முழுத் தீர்வு அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அங்கு சென்று சுவாமிகளிடம் எமது ஆன்மீகச் சந்தேகங்களைத் தீர்த்து உபதேசங்கள் பெற்று ஆன்மீகத்தினுள் பிரவேசிக்க எமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாக இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வோம்.
சீடர்களால் அமைக்கப்படும் சுவாமிகளின் கோவிலும் தியான மண்டபமும்.
மலேசியாவில் Ayer Tawar, Perak Darul எனும் இடத்திலே ஏற்கனவே அமைந்துள்ளது.
தமிழ் நாட்டிலே தருமபுரி மாவட்டத்திலே கதிர்நாயக்கன அள்ளி, ரோஜா நகர், மாடன் சிட்டி என்ற இடத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் சில மாதங்களில் ஆச்சிரமம் அமைய இருக்கிறது.
— அன்பே சிவம் —