தைப்பொங்கல் 15-01-2023
தைப்பொங்கல் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் நெல் அறுவடைப் பண்டிகை ஆகும்.
ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் முதல் மாதமான தைமாதத்தில் வருகின்ற முதலாம் நாள் தைப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இவ்வருடம் தைப்பொங்கல் 15-01-2023 அன்று கொண்டாடப் படுகிறது
உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், தமது உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த உயிர்களுக்கும் (ஆடு, மாடு, எருமை, கழுதை) கூறும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விளைந்த பயிர்களை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் மஞ்சள் தோரணங்கள் கட்டி, வீட்டு முற்றத்தில் மாக்கோலம் போட்டு புத்தடுப்பில் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உற்றார் உறவினருடன் உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
தைப் பொங்கல் தினத்தன்று மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். பொதுவாக சிறுவர் சிறுமியருக்கு புத்தாடைகள், நகைகள் வாங்கி அணிந்து மகிழுவார்.
பொதுவாக இது ஒரு உழவர் திருநாள் என்று அழைக்கப் பட்டாலும் உலகெங்கிலும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
தைப்பொங்கலிற்கு அடுத்த தினம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. இதனை பட்டிப் பொங்கல் எனவும் அழைப்பர். வயல்களில் கடினமாக உழைத்த மாடுகளிற்கு நன்றி செலுத்துவதற்காகவே இத்தினம் கொண்டாடப் படுகின்றது. அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, பொங்கல் செய்து உணவு படைத்து வழிபடுவர்.
தைத் திருநாளன்று நடைபெறும் விளையாட்டுகளில் முக்கியமானது ஐல்லிக்கட்டு ஆகும். காளை மாடுகளைக் கொண்டு விளையாடப்படும் இவ்விளையாட்டு தமிழர்களின் மரபுவழி வீரவிளையாட்டுகளில் ஒன்றாகும்.
இது ஒரு உழவர் பண்டிகை என்று அழைக்கப்பட்டாலும் பண்டிகையின்போது பலதரப்பட்ட மக்களும் வியாபாரத்தின் மூலமாகவும் பயன்பெறுகிறார்கள்.என்பதும் உண்மையாகும்
“உழவர் சேற்றிலே கால் வைக்காவிட்டால் நாம் சோற்றிலே கை வைக்க முடியாது” என்பது பழமொழி.
நாம் எமக்கு உணவளிக்கும் உள்ளவர்களையும், எமக்கு உறுதுணையாக இருக்கும் விலங்குகளையும் போற்றுவோம், வாழ்த்துவோம், வணங்குவோம்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —