பாவத்தைப் போக்குவது எப்படி
பாவம் வேறு, சாபம் வேறாகும்.
பாவம் என்பது ஒருவர் ஒரு காரியத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ தவறுதலாகச் செய்யும்போது அதனால் ஏற்படும் விளைவுகளால் வரும் பாதிப்புக்களே பாவமாகும்.
உதாரணமாக ஒரு பாவமும் செய்யாத ஒரு பாம்பு புற்றில் இருந்து வெளிவரும்போது அதனைக் கண்ட நாம் பயத்தில் கம்பு எடுத்து அதனை அடிக்கப் போகிறோம். அதனால் அது பயத்தில் எம்மைக் கடிக்கிறது. அதாவது ஒன்றுமே அறியாத அப்பாம்பைக் கண்டு பயந்து நாம் அடிக்கப்போக (நாம் பாவம் செய்கிறோம்) அதன் பயத்தினால் எம்மிடம் இருந்து அது தன்னைக் காப்பாற்ற அது எம்மைக் கடிக்கிறது அது பாவம் செய்கிறது. நாம் அதை பாவம் செய்யத் தூண்டினோம். இதுவே விதியாகும் என்று பகவத்கீதை கூறுகிறது. விதி உன்னைப் பாவம் செய்யத் தூண்டும் ஆனால் நீ எதுவும் செய்யாமல் இரு அப்போதுதான் நீ பாவமோ அன்றிப் புண்ணியமோ சேர்க்காமல் இருப்பாய் என்கிறது கீதை.
நாம் அன்பாக வீட்டில் நாயோ பூனையோ வளர்ப்போம். அவை வளர்ந்து மூன்று அல்லது நாலு குட்டிகள் ஈனும். அக்குட்டிகள் பால்குடி மறக்க முன்னரே நாம் அவற்றைப் பிடித்துச் சென்று சந்தையிலோ அன்றி தெருக்களிலோ விட்டு விடுவோம். அவை தமது தாயை தனது உடன் பிறந்த குட்டிகளைப் பிரிந்து துன்பப்படும் என்பதனைப் பற்றியெல்லாம் நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை. அவை அந்தப் புதியசூழலில் அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்யும் என்றுகூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. வாய்பேச முடியாத ஜீவன்களாக இருந்தாலும் அவற்றிற்கும் பாசம், பிரிவு, துயரம் எல்லாம் இருக்கும் என்று நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. அக்குட்டிகள் மற்றும் அதனை ஈன்றெடுத்த தாய்படும் பிரிவுத் துயரமெல்லாம் நாம் செய்யும் பாவங்களே.
சாபம் எனப்படுவது ஒருவர் இன்னொரு உயிர்மீது (இன்னொரு உயிர் எனப்படுவது மனிதர்களோ அன்றி வேறு உயிரினமோ) தமது வலிமையினால் வேண்டுமென்றே தீங்கிழைக்கும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் துன்பப்பட்டுக் கண்ணீர்விட்டு மனம் வருந்தி தீங்கிழைப்பவர்களுக்கு தமது மனதில் இருந்து கொடுக்கும் வார்த்தைகளே சாபமாகும். சாபமானது சம்பந்தப் பட்டவர்கள் அதாவது பாதிக்கப் பட்டவர்கள் நேரடியாக மன்னிப்பதால்த்தான் போக்கமுடியும். இல்லையேல் அது சந்ததி சந்ததியாகத் தொடர்ந்து வரும் என்று வேதங்கள் கூறுகின்றன.
நாம் தெரிந்தோ தெரியாமலோ ஆளாகும் (பெற்றுக் கொள்ளும்) சாபத்துக்கு சில உதாரணங்களை நாம் பார்ப்போம்.
வறுமையினால் வாடுபவர்கள், போதிய உதவியின்றி இருப்பவர்கள், படிப்பறிவு குறைந்தவர்கள், உடல் வலுவிழந்த மனிதர்கள் போன்றவர்களது இயலாமையை வலுவுள்ள மனிதர்கள் தமது தேவைக் கேற்றவாறு பயன்படுத்தும் போது அவர்கள் மனம் நொந்து கண்ணீர் வடித்து துன்பப்பட்டு தம்மை ஆள்பவர்கள்மீது விடும் வார்த்தைகள் சாபங்களே.
காட்டில் சுதந்திரமாக வாழும் விலங்குகளை எமது சமயோசித புத்தியால் பிடித்து வந்து கூட்டில் அடைத்து வைத்து கயிற்றால் சங்கிலியால் கட்டிவைத்து எமது தேவைக்கு ஏற்றவாறு அவற்றைப் பயன் படுத்தும்போது அவை வருந்தி அழுவது அவை எமக்கு இடும் சாபங்களே.
நாம் வீட்டில் மாடு வளர்ப்போம் சில மாடுகள் கட்டுக்குள் அடங்காது. அவருக்கு நாம் எமது சமயோசித புத்தியால் காலையும் தலையையும் ஒரு கயிற்றால்க் கட்டி ஓட முடியாதவாறு செய்து விடுவோம். ஆனால் அம்மாட்டால் அவ்விலங்கால் நிமிர்ந்தே நிக்கமுடியாமல் தன் வாழ்நாள் முழுவதும் படும் அவஸ்தையை அதனைக் கட்டி வைப்பவர்கள் உணர்ந்து கொள்ளவதில்லை. அம்மாடு படும் தன்பன்பம் அவஸ்தை அது விடும் கண்ணீர் எமக்கு கிடைக்கும் சாபமாகும்.
இன்னொரு உதாரணமாக கோயில்களில் வேள்வி அல்லது பலி என்ற பெயரில் கோழி, ஆடு, மாடு, எருமை போன்ற நாம் வளர்த்த விலங்குகளை வரிசையில் நிறுத்தி ஒவ்வொன்றாக பலி கொடுக்கும்போது (வெட்டும்போது) அதனைப் பார்த்து பின்னால் நிற்கும் அடுத்ததாக வெட்டுப்படப்போகும் விலங்குகள் மரண பயத்தில் கத்துமே அவையெல்லாம் அம் மிருகங்களை வெட்டுபவர்களுக்கு மட்டுமல்லாமல் அதனை வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் பாவமும் சாபமுமாகும்.
காட்டிலே ஒரு புலி அல்லது சிங்கம் மானை, மாட்டை கொன்று உண்ணும். அது பாவமில்லையா என்றொரு கேள்வி உண்டாகலாம். புலி சிங்கம் போன்றன தம் பசியைப் போக்க ஏனைய விலங்குகளை கொன்று தின்னும் அது இறைவனது படைப்பு. அவ் விலங்குகள் மாமிசம் மட்டுமே உண்பவையாகப் படைக்கப் பட்டுள்ளன. அது இயற்கையின் படைப்பு. மனிதன் அப்படிப்பட்ட படைப்பல்ல. அவனது பிரதான உணவு சைவ உணவாகும். அவனது உடலமைப்பும் அவ்வாறே அமைந்துள்ளது. ஆனல் மனிதன் தன் ஆசையினால் தனது அறிவாற்றலால் தன் விருப்பங்களையும் மாற்றிக் கொண்டான். அதே போல மனிதரில் வேதம் படிக்காதவன், கொலை ஒரு பாவம் என்று அறியாதவன் விலங்குகளைக் கொலை செய்தால்கூட ஒருவேளை மன்னிப்பு இருக்கலாம் ஆனால் வேதம் படித்தவன், ஞான நூல்களை கற்று அறிந்தவன் கொலை செய்வது ,பாவம் என்று அறிந்தும் விலங்குகளை கொலை செய்பவன், மாமிசத்தை உண்பவன் பாவம் செய்தவனாகிறான். அதாவது ஒருவன் ஒரு செயல் புரியும்போது மனதுள் இது பாவம் என்றோரு எண்ணம் உதிக்குமாக இருந்தால் அது பாவமான செயலாகும்.
இப்படிப் பல உதாரணங்கள் கூற முடியும்.
பாவம் என்று தெரியாமல்ச் செய்தால் அது பாவமில்லை. பாவம் என்று தெரிந்துகொண்டே செய்தால் அது பாவம்.
ஏனைய உயிர்களைக் கொல்பவர்களையும் அவற்றின் இறைச்சியை விரும்பி உண்பவர்களுக்கும் திருவள்ளுவர்
புலான்மறுத்தல் என்ற பகுதியில் பின்வருமாறு விளக்குகிறார்
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.”
விளக்கம்: ஓருயிரையும் கொல்லாமல் புலால்(இறைச்சியை) உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
“தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்”
விளக்கம்: ஒவ்வொருவரும் மாமிசம் உண்பதனை நிறுத்தினால் அதற்காக பிற உயிர்களை கொல்லாதிருந்தால், யாருமே பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதாவது விற்பனை செய்யும் நோக்கில் உயிர்களைக் கொல்லமாட்டார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ புலால் (இறைச்சி) உண்பதற்காக உயிர்கள் கொல்லப்படுவதற்கு அந்த மாமிசத்தினை உண்பவர்கள் உடந்தையாகிறார்கள். நேரடியாக கொலை செய்யாதிருந்தாலும் அப்பாவத்திற்கு அதனை உண்பவர்கள் ஆளாகிறார்கள்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் கூறியதுபோல நம் முன்னோர்களது சொத்துக்களை (புண்ணியங்களை) நாம் அனுபவிப்பதுபோல, நாம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த பாவங்களையும் நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதுதான் விதியாகும்.
நாம் இப்பிறப்பில்ச் சேர்த்துக் கொள்ளும் பாவ புண்ணியங்களை எல்லாம் நாம் அல்லது எமது சந்ததி எப்பிறப்பிலாவது அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது தான் உண்மையாகும்.
நாம் செய்யாத ஒரு குறத்திக்காக தண்டனை அனுபவிக்கும் போது நாம் இப்பிறப்பிலோ அன்றி முற்பிறப்பிலோ செய்த குற்றத்துக்கு இப்போது தணடனை கிடைக்கிறது என்பதுதான் அர்த்தமாகும்.
பாவத்துக்கு மன்னிப்புண்டு, ஆனால் சாபத்துக்கு மன்னிப்பில்லை என்று வேதங்கள் கூறுகின்றன.
எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள் எப்போதும் தானம், தர்மம் செய்யும்படி வலியுறுத்துவார். தானம், தர்மம் செய்வதனால் நாம் மற்றும் எம் முன்னோர்கள் பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி பல பிறவிப் பிணிகளை நீக்கும் என்றும் விளக்குவார். தானங்களில் சிறந்த தானம் அன்னதானமாகும். பிறர் பசியைப் போக்குங்கள். இது நாம் மற்றும் எம் முன்னோர்கள் செய்த பாவங்களைப் போக்க வல்லது. எனவே அன்னதானம் செய்யுங்கள் என அன்னதானத்தின் சிறப்பை வலியுறுத்துவார். அதேபோல குருவும் வாழ்ந்து காட்டுகிறார். அன்னதானத்தின் சிறப்பை குருவிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.
நாம் ஒருவருக்கு பணம் பொருள் ஆடை போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கும்போது பெறுபவர்களுடைய மனம் இன்னும் தந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் எண்ணுமே தவிர. அவர்களது மனம் ஒருபோதும் போதும் என்று திருப்தியடையாது. ஆனால் அன்னதானம் கொடுக்கும் போது உண்பவர்களது வயிறு நிறைந்தவுடன் மனம் திருப்தியடைந்து போதும் என்று கூறுவார்கள். இதுவே உணவளிப்பவருக்கும் அவ்வுணவை வாங்கி உண்பவருக்கும் முழு மனத் திருப்தியைக் கொடுக்கும். இதனாலேயே தானங்களில்ச் சிறந்தது அன்னதானம் எனக் கூறப்படுகிறது.
தானம் வேறு தர்மம் வேறாகும். தர்மத்துக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது என்பார் குரு.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர்கள் மூலமாக அறிந்தோ அல்லது அவர்களது நிலைபற்றி பிறர் மூலமாக அறிந்தோ அவர்களுக்கு உதவுவது தானமாகும். அதாவது கேட்டுச் செய்யும் உதவியானது தானத்தில் சேரும்.
தர்மம் என்பது யாருமே கேட்க்காமல் அவர் நிலையறிந்து அவர்களுக்கு உதவுவது தர்மமாகும். உதவி என்று கேட்கும் முன்பே குறிப்பறிந்து அவர்கள் கேளாத நிலையில் அவர்களுக்கு வேண்டியதை மனமுவர்ந்து செய்வது தர்மமாகும். இந்த தர்மம் புண்ணியத்தைத் தரவல்லது.
அதாவது பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் அவர்களுக்கு உதவுவது தானமாகும். அவர்கள் கேட்க்காமலேயே குறிப்பறிந்து அவர் பசியாற்றுவது தர்மமாகும்.
புண்ணியம் செய்தவனை நெருங்க மரணமும் அஞ்சும் என்பதனை விளக்க மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பின்வரும் கதையினையும் கூறியிருந்தார்.
தர்மம் செய்து புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தவன் கர்ணன். அவன் போர்க்களத்திலே அம்புபட்டு மரணப் படுக்கையில் இருந்தபோதும் மரணத்தினால் அவனை நெருங்க முடியவில்லை. இதனை உணர்ந்து கொண்ட கிருஷ்ண பகவான் வயோதிக பிராமணனாய் வேடமிட்டு கர்ணனிடம் வந்து அவன் செய்திருந்த புண்ணியங்கள் அனைத்தையும் யாசித்துப் பெற்றுக் கொண்டார். கேட்டுக் கொடுத்ததால் கர்ணன் தர்மத்தால் பெற்ற புண்ணியம் அனைத்தும் தானக் கணக்கில் சேர்ந்துவிட்டது. கர்ணனை மரணமும் தழுவிக்கொண்டது. இதுவே தானத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் இருப்பது தர்மமாகும்.
தானதர்ம காரியங்கள் செய்வதற்கு காலநேரம் பார்க்கக்கூடாது. பகல், இரவு, நல்லநாள், கெட்டநாள் என்று எதுவும் இல்லை. எப்ப வேண்டுமானாலும் உன் வசதிக்கேற்றவாறு உதவு என்று வலியுறுத்துவார் எமது குரு.
அது மட்டுமல்ல “பாத்திரம் அறிந்து பிச்சைபோடு” என்றும் வலியுறுத்துவார். ஒருவனது தேவை அறிந்து அதற்கேற்றவாறு உதவி செய். அதாவது பசியோடிருப்பவனுக்கு உணவுகொடு ஆடை தேவைப்படுபவனுக்கு ஆடைகொடு. இவை எதுவும் தேவைப்படாதவனுக்கு பெயர் எடுப்பதற்காக உணவோ, உடையோ அல்லது வேறு பொருட்களோ கொடுப்பது தான தர்மம் ஆகாது என்பது பொருளாகும். என அறிவுறுத்துவார்.
ஔவையார், ஆத்திசூடி என்னும் நூலில் “அறஞ் செய்ய விரும்பு” என வலியுறுத்துகிறார். அறம் என்பது தான, தருமம் அதாவது பிறருக்கு உதவக்கூடிய நற் காரியங்கள் செய்வதற்கு விரும்பு (விருப்பம் கொள்). இவற்றைச் செய்வதற்கு ஆவல் கொள். உன்னிடம் வசதி இல்லாவிட்டாலும் அறவழியில் நிற்க விருப்பம் கொண்டிரு. பொருளுதவி செய்வது மட்டுமல்ல உடலுதவி செய்வதும் தர்மமாகும். வயோதிபர் நோயாளர்களுக்கு செய்யும் உடலுதவிகளும் அறமாகும். அறஞ் செய்ய விரும்பு என்று கூறும்பொழுது, பிறர், பிறருக்குச் செய்யும் அறத்தையும் (தான தர்மம் செய்வதை) தடுக்காதே என்றும் அர்த்தமாகும்.
இவ்விடத்தில் எங்கோ படித்த பகவான் பாபா கூறிய ஒரு போதனை என் சிந்தையில் தட்டியது.
“நூறு ரூபாய் சில்லறையை சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு அதைக் காவிச் சிரமப்படுபவர்களுக்கு அந்த நூறு ரூபாயைப் வாங்கிக் கொண்டு அதற்குப் பெறுமதியான தாள் பணத்தை என்னால் கொடுக்க முடியும்!. அதை அவர்கள் வைத்திருப்பது பாரமற்று இலகுவானதாக இருக்கும்! ஆனால் அதன் பெறுமதியில் மாற்றத்தைக் கொண்டு வரும் வல்லமை என்னிடம் இல்லை. பெறுமதி நூறாகவே இருக்கும். அது போல பல்வேறு பாவங்களைச் சில்லறை போலச் சேர்த்துக் கொண்டு சுமந்து துன்பப் படுபவர்களுக்கு தியானம் மூலம் அவற்றை ஒழுங்கு படுத்தி இலகுவாகத் தாங்கிக் கொள்ளும்படி கொடுக்க மட்டும் தான் என்னால் முடியும்! அனுபவித்துத் தீரவேண்டிய அவர்கள் செய்த பாவங்களை கூட்டியோ குறைத்தோ மாற்றியமைக்க என்னால் மட்டுமல்ல எந்தச் சாமியாராலும் முடியாது! வினைப் பயனை மாற்றியமைக்கும் வல்லமை இறைவன் என்ற ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு!” என்று கூறியிருக்கிறார்.
இப் பாவ, சாபங்களை முழுமையாக அறுக்க அதிலிருந்து விடுபட ஆன்மீக மார்க்கத்தினால்த்தான் முடியும். யோகப் பயிற்சியினால் ஞானம் கிட்டும்போது முற்பிறப்பில் நாம் மற்றும் எம் முன்னோர் செய்த வினைகள் யாவும் அறுந்து போகும். கர்ம வினைகள் நீங்கி, ஞானம் அதாவது முக்தி கிட்டும்போது பிரம்மத்தை உணரலாம். அந்த ஆதியுடன் கலக்கும்போது மீண்டும் பிறவியே இராது.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —
நன்றி ஆத்மா வணக்கம்
யோகம் செய்வதால் நல்வினை அழியுமா? ஐயா
Very Good Information thank you
Kindly correct the error இறைவவன் to இறைவன்
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்
விநாயகர் அகவல் விளக்கம் அருமையான பதிவு. வாழ்க வளமுடன். நன்றி
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்
ஐயா என்னக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்னக்கு மறைத்து விட்டது. என் வாழ்க்கை இப்புடி திடவது. ஓம் முருக போற்றி போற்றி
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்
Super
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்