முக்திதரும் ஏழு புனிதத் தலங்கள்
இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில் நீராடினால் எமக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
முக்திதரும் புனிதத் தலங்கள் வருமாறு:
காசி விஸ்வநாதர் கோயில் வாரணாசி
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கைக் கரையில் அமைந்த புனித நகரமாகும்.. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்றாகும். வருணா ஆறு மற்றும் அசி ஆறும் இந்நகரில் பாயும் கங்கை ஆற்றில் கலப்பதால், இந்நகருக்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. இதனை பனாரஸ் என்றும் அழைப்பர்.
வாரணாசியில் அமைந்த லிங்கம் ஜோதி சிவலிங்கம் என அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஜோதி லிங்கங்களுள் ஒன்றாகும்.
இங்கு பாயும் புனித நதியான கங்கையில் நீராடி காசி விஸ்வநாத ஜோதி லிங்கத்தினை வணங்க எமது பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ராம ஜென்மபூமி அயோத்தி (உத்தரப் பிரதேசம்)
ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள புனித ஆறான சரயுவில் நீராடி ராமரை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோயில் காஞ்சிபுரம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ளது.
இங்கு உள்ள லிங்கத்தினை “பிருத்வி லிங்கம்” என்று அழைப்பர். மேலும் இந்த லிங்கம் மண்ணால் ஆனது. அதனால் இந்த லிங்கத்துக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. இதனை சுயம்பு லிங்கம் என்றும் அழைப்பர்.
இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். மண் தத்துவத்தினை குறிக்கும் தலமாகும் இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.
இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கைலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார் எனவும் அங்குள்ள மாமரத்தின் கீழாக இருந்து ஈசனை எண்ணித் தவமிருந்தார் எனவும். அங்குள்ள கம்பையாற்றின் கரையில் எழுந்த சுயம்பு சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார் என்பதுவும் ஐதீகமாகும்.
கிருஷ்ண ஜென்மபூமி கோயில் மதுரா, உத்திரப் பிரதேசம்,
புனித மதுரா நகரம், இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில், அமைந்துள்ளது. மதுராவில் பாயும் யமுனை ஆற்றில் நீராடி கேசவ தேவ் கோயிலில் குடிகொண்டுள்ள கிருஷ்ணரை வழிபட நாம் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி கிருஷ்ண ஜென்மபூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கேசவதேவ் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நகரம், தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
துவராகாநாதர் கோவில், துவாரகை
துவராகாநாதர் கோவில், ஏழு மோட்ச நகரங்களில் ஒன்று. இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமிதுவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது துவராகாநாதர் கோவில்.
கோமதி நதியில் நீராடி துவராகையில் வீற்றிருக்கும் கிருஷ்ணரை வாங்க வணங்க பாவங்கள் நீங்க்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாகாளீசுவரர் கோயில் உஜ்ஜைன்
இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது சிப்ரா நதிக்ககரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட புனிதத் தலமாகும்.
மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.
ஹரித்துவார்
ஹரித்துவார் அல்லது அரித்துவார் என்பது இந்தியாவின் வட மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் ஒரு புனித நகரம் ஆகும். உத்தரகண்ட் மாகாண இமயமலைத் தொடரில் அமைந்திருக்கும் கங்கோத்ரி, சடோபந்த், பிண்டாரி ஆகிய பனி ஆறுகளில் இருந்து பிறப்பெடுக்கும் கங்கை நதியானது மலை வழியாக ஓடி இறங்கி வந்து தரையில் இறங்கும் இடமே ஹரித்துவார் ஆகும். அங்கிருந்தே கங்கை நதி 1000 Km இற்கும் மேலாக பயணம் செய்து காசியை அடைகிறது. புதுதில்லியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகவும், ஏழு முக்தி தரும் தலங்களில் ஒன்றாகவும் அரித்துவார் விளங்குகிறது
எனது ஹரித்துவார் பயணம்..
எனக்கும் அந்த ஏழு புனிதத் தலங்களில் ஒன்றான ஹரித்துவார் சென்று புனித கங்கையில் நீராடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனது அனுபவத்தினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் எனது உறவுக்காரர் ஒருவருடன் டெல்லியில் இருந்து வண்டியில் செல்லும் வாய்ப்புக்கு கிட்டியது.
நாம் அங்கு சென்றபோது நேரம் மாலை 7 மணியைத் தாண்டி இருந்தது. கங்கையை, அந்தப் புனித நதியை முதன் முதலில்ப் பார்த்த போது உடலெல்லாம் சிலிர்த்தது. கங்கை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நீராட, அந்த கங்கையைத் தரிசிக்க வந்தவர்களால் நிரம்பி இருந்தது. சில இடங்களில் கம்பிவேலி கட்டி இருந்தார்கள். முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் அங்கிருந்து நீராடினார்கள். நாம் சற்று உள்ளே சென்று நீராடத் தயாரானோம். அங்கு கம்பி வேலி அடைக்கப் படவில்லை. மேலிருந்து இரும்புச் சங்கிலிகள் கட்டி இருந்தார்கள். கரையில் படிக்கட்டுகள் கட்டி இருந்தார்கள்.
சங்கிலியைப் பிடித்து படிக்கட்டு வழியாக கங்கையில் கால் வைத்தேன். உடலெல்லாம் நடுங்கியது. நீருமோ நல்ல குளிர்நீர். அதுவும் கங்கையில் இறங்குகிறேன் என்ற ஒரு மனக் குதூகலம். உடலெல்லாம் ஒருமுறை சிலிர்த்தது. அப்படியே இறங்கினேன். கங்கையில் இறங்கும் போது ஐந்து தடவை தலை முக்கி எடுக்க வேண்டும் என்பது ஐதீகம். ஐந்து தரம் மூழ்கி வந்தேன். கங்கையில் நீராடினால் பாவங்கள் அழியும் என்பார்கள். அந்தக் குளிரிலும் நீண்ட நேரமாக இருந்து நீராடினேன். வெளியே வர மனமில்லாமல் வெளியே வந்தேன். ஏதோ ஒரு கனவுலகத்தில் சஞ்சரிப்பது போல இருந்தது. ஒரு புதிய சக்தி வந்ததுபோல உணர்ந்தேன்.
நான் எத்தனையோ ஆறுகள், சமுத்திரங்கள், நதிகளில், நீராடி இருக்கிறேன். ஆனால் கங்கையில் நீராடியதில் இருந்து உடலும் உள்ளமும் ஒரு இனம் புரியாத ஒரு புதிய உணர்வில் மிதந்தது. அது பல மணி நேரமாகத் தொடந்தது. அந்தக் கங்கை நதியின் தனித்துவத்தினை, அதன் புனிதத் தன்மையினை, அந்த நீரின் மூலிகைத் தன்மையினை, அதன் சிறப்பினை அனுபவித்தேன். வியந்தேன். மெய்மறந்தேன். சில அனுபவங்கள் சொன்னால்ப் புரியும் சில அனுபவங்கள் அனுபவிக்கும் போதுதான் புரியும். நான் அனுபவித்தேன்.
கங்கைப் பயணமும் நிறைவு பெற்றது. அங்கு சாடிகள் விற்பார்கள் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காக. சிறிய சாடியில் ஏந்தி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
— அன்பே சிவம் —