ஒரு மண்டலம் எத்தனை நாட்கள் (41-48)

0 0
Read Time:17 Minute, 0 Second

ஒரு மண்டலமும் அதன் சிறப்பும்

ஒரு மண்டலம் என்பது இந்துக்களால் பக்தியிலும், ஆன்மீகத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு கால அளவாகும்.

இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னராகவே தமிழர்கள் ஜாதகம் எழுதியதாக வரலாறு கூறுகிறது. விஞ்ஞானத் தேடல் ஆரம்பிக்கப்படாத அந்தக் கால கட்டத்தில் எமது மெய்ஞ்ஞானிகளால் தமது ஆன்மீக ஆற்றலால் தமது உடலில் இருந்து ஆன்மா வெளியேறி வெளியுலக சஞ்சாரம் செய்து இவ்வுலகத்தில் பிறக்கும் ஜீவ ராசிகளுக்கும் வான் வெளியில் உள்ள கிரகங்கள் நட்சத்திரங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து மனித குல மேம்பாட்டுக்காக கணிக்கப்பட்டதே ஜாதகமாகும்.

படைப்புக்களை ஆராய்பவன் விஞ்ஞானி. அப் படைப்புக்களைப் படைத்தவனையே ஆராய்பவன் மெய்ஞ்ஞானி. – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

சபரிமலை ஐயப்ப விரதம் இருப்பது 41 நாட்கள் ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது.

ஆகம முறைப்படி உள ரீதியாக ஒரு நல்ல பழக்கத்தினை ஏற்படுத்தத் தொடர்ந்து ஒரு மண்டலம் (45 நாட்கள்) பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது. அதாவது ஒரு மண்டல காலம் ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து நாம் பின்பற்றி வர அதுவே எமக்கு உடல், உள ரீதியாகப் பழக்கப்பட்டு விடும் (வழக்கமாகி விடும்) என்பது ஒரு உளவியல் கோட்பாடாகும்.

கோயில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு தொடர்ந்து 48 நாட்களுக்கு ஒரு மண்டலம் என மண்டல அபிஷேகம் விரதம் கைக் கொள்ளப்படுகிறது

சித்தவைத்திய முறைப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்களுக்கு) மருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. மனித உடல் ஒரு குறிப்பிட்ட சுழற்சி முடிக்க 48 நாட்கள் ஆகிறது. அதனாலேயே ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் ஒரு மண்டலம் காலம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. மருந்து உடலோடு நன்கு ஒத்துப் போய்ப் பலன் கொடுக்கத் தேவையான நாட்கள் ஒரு மண்டலம் காலம் ஆகும்.

இவ்வாறு ஒரு மண்டலம் வேறு வேறு நாட் கணக்காகக் கூறப்படுகிறது. ஒரு மண்டல காலம் எத்தனை நாட்கள் என்ற கேள்வி எழுகிறது.

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களிலும் ஒரு மண்டலம் என்ற கணக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

முதலில்த் திதி என்பது என்ன என்று பார்ப்போம். அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாளில் இருந்து அடுத்து வரும் அமாவாசை அல்லது பௌர்ணமி வரை உள்ள ஒவ்வொரு நாளும் தமிழ்த் திதி நாளாக எண்ணப்படுகிறது. அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாள்

  1. முதலாவது நாள்  – பிரதமை திதி
  2. இரண்டாவது நாள் – துவிதியை திதி
  3. மூன்றாவது நாள் – திருதியை திதி
  4. நான்காவது நாள் – சதுர்த்தி திதி
  5. ஐந்தாவது நாள் – பஞ்சமி திதி
  6. ஆறாவது நாள் – சஷ்டி திதி
  7. ஏழாவது நாள் – சப்தமி திதி
  8. எட்டாவது நாள் – அஷ்டமி திதி
  9. ஒன்பதாவது நாள் – நவமி திதி
  10. பத்தாவது நாள் – தசமி திதி
  11. பதினோராவது நாள் – ஏகாதசி திதி
  12. பன்னிரண்டாவது நாள் – துவாதசி திதி
  13. பதின்மூன்றாவது நாள் – திரயோதசி திதி
  14. பதின் நான்காவது நாள் – சதுர்த்தசி திதி

பதின் ஐந்தாவது நாள் மீண்டும் – அமாவாசை அல்லது பௌர்ணமி ஆகும்

தமிழ் மாதங்களில் ஒரு சில நீளமானவையாகவும், ஒரு சில குறுகியனவாகவும் இருக்கும். வைகாசி, ஆனி அல்லது ஆடி மாதங்கள் 32 நாட்கள் உடையனவாகவும், மார்கழி, தை முதலான மாதங்கள் 29 நாட்கள் உடையனவாகவும் ஏனைய மாதங்கள் 30 அல்லது 31 நாட்களாகவும் அமையும். இந்த கால அளவானது பூமியின் சுழற்சிக்கு ஏற்றாற் போல மாறுபடுகிறது. அதே போல திதிகள் கணக்கிலும் ஒரு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையில் உள்ள நாட்கள் 15 நாட்கள் என பொதுவாகக் கூறப்பட்டாலும், சில மாதங்களில் இடைவெளி 14 நாட்களாகவும் சில மாதங்களில் இடைவெளி 16 நாட்களாகவும் அமையும்.

அமாவாசை முதல் பௌர்ணமி வரை அல்லது பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலான 15 நாட்களும் ஒரு பட்சம் என அழைக்கப்படுகிறது.

இதில் அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான 15 நாட்களும் வளர்பிறை நாட்கள் அல்லது சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் எனவும்,

பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலான 15 நாட்களும் தேய்பிறை நாட்கள் அல்லது கிருஷ்ண பட்சம் அல்லது அபர பட்சம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒரு மண்டலம் என்பது, மூன்று பட்சங்கள் அடங்கியது.

அதாவது

வளர்பிறை 15 + தேய்பிறை 15 + வளர்பிறை 15 = 45 நாட்கள்

அல்லது

தேய்பிறை 15 + வளர்பிறை 15 தேய்பிறை 15 = 45 நாட்கள் எனக் கணக்கிடப் படுகிறது.

அதாவது ஒரு பட்சம் 15 நாட்கள். பிரதமை திதி முதல் சதுர்த்தசி திதி வரையிலான 14 திதிகளும் அதனை ஒட்டி வருகின்ற பௌர்ணமி அல்லது அமாவாசை நாளும் சேர்ந்த 15 நாட்களை ஒரு பட்சம் என்று அழைப்பர். த்ரைபக்ஷிகம் (திரி பட்சம்) என்பதே ஒரு மண்டலம். அதாவது, மூன்று பட்சங்கள் சேர்ந்தது ஒரு மண்டல கால அளவு ஆகும். எனவே 15 x 3 = 45 நாட்கள் கொண்டது ஒரு மண்டலம் எனக் கொள்ளப்படுகிறது

அதேபோல வான சாத்திரத்தில் ஒரு வருடத்தை எட்டு மண்டல கால அளவாக பிரித்துச் சொல்வார்கள்.

இந்தக் கணக்கின்படி ஒரு வருடத்திற்கு 8 x 45 = 360 நாட்கள்தான் வரும். ஆனால் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்பதே உண்மையாகும். அதாவது ஒரு மாத காலம் என்று சொல்லும் போது அது 30 நாட்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ் மாதங்களில் ஒரு சில நீளமானவையாகவும், ஒரு சில குறுகியனவாகவும் இருக்கும். வைகாசி, ஆனி அல்லது ஆடி மாதங்கள் 32 தேதி உடையனவாகவும், மார்கழி, தை முதலான மாதங்கள் 29 தேதிகள் உடையனவாகவும் அமைந்திருக்கும். இந்தக் கால அளவானது பூமி சூரியனைச் சுற்றும் சுழற்சிக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது.

அதனால் ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகின்ற காலத்தின் அளவும் மாதத்திற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது. ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து 48 ஆவது நாளில் மண்டலாபிஷேக நிறைவு விழா கொண்டாடப் படுகிறது.

இந்த கால அளவு கூட விழா நடைபெறுகின்ற மாதத்திற்கு ஏற்றாற்போல் மாறுபடும். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் காலம் கார்த்திகை, மார்கழி முதலியவை குறுகிய மாதங்கள் என்பதால் இந்த கால அளவில் ஒரு மண்டலம் என்பது 41 நாட்கள் என்ற கணக்கில் வரும்.

நாட்காட்டி இல்லாத நாட்களில் மண்டலம் என்பது சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக ஒரு அமாவாசை அல்லது பௌர்ணமியில் ஆரம்பித்து இரண்டாவது பௌர்ணமி அல்லது அமாவாசையில் முடிவடையும் ஒரு மண்டல காலமாக கணக்கிடப்பட்டது.

சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம் மருந்து சாப்பிடுதல் என்றால், ஒரு பௌர்ணமியில் ஆரம்பித்து அடுத்து  வரும் அமாவாசை போன பின்னர் அதற்கடுத்த அமாவாசை வரை மருந்தைச் சாப்பிடவேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் அறிவுரை ஆகும்.

அது மட்டுமன்றி எமது முன்னோர்களின் ஜாதகக் கணிப்பின்படி ஒரு மண்டல காலத்தினுள் பூமியின் ஒரு புள்ளியானது எம்முடன் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் அனைத்தையும் ஒரு முறை சுற்றி வந்துவிடுகிறது. அதாவது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியானது. (உதாரணமாக இந்தியா சென்னை போளிவாக்கம் என்ற இடமானது) வருடத்தின் எந்த நாளாக இருந்தாலும், அந்த நாள் தொடங்கி ஒரு மண்டல காலத்தினுள் (41 – 48 நாட்களுக்குள்) வானிலுள்ள 27 நட்சத்திரங்களைக் கண்டு விடுகிறது. அதாவது அவற்றின் கதிர் வீச்சினைப் பெற்றுக்கொண்டு விடுகிறது என்று அர்த்தமாகும்.

வானில் உள்ள நட்சத்திரங்களையும் வானில் தெரியும் கிரகங்களையும் எளிதில் அடையாளம் காண்பதற்காக பூமியைச் சுற்றியுள்ள வான் பகுதியை ஒவ்வொரு 30 பாகை அளவினையும் ஒரு ராசியென (360/30=12) 12 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அதாவது 12 ராசிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவ்விதமாகப் பூமியின் ஒரு புள்ளியில் உள்ள வான் பகுதியில் (ராசியில்) எந்த நட்சத்திரம் உள்ளதோ அதன் கதிர்வீச்சு அப்புள்ளிக்குக் கிடைக்கும். (ஜாதகர்களின் கூற்றுப்படி ஆதிக்கம் செலுத்தும்). எனவே ராசி என்பது ஒரு கிரகமோ அல்லது ஒரு கோளோ அல்லது ஒரு நட்சத்திரமோ அல்ல. ராசி என்பது பூமியைச் சுற்றியுள்ள வான்வெளியில் ஒரு குறிக்கப்பட்ட ஒரு பிரதேசம் (வான் வெளி) ஆகும்.

உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பூமியின் அமெரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதி விண்ணில் மீன ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளை இந்தியாவில் சென்னை விண்ணில் வேறொரு ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும். அதனாலேயே ஜாதக சாத்திரத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தில் பிறக்கும் ஒருவர் எந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்குச் சொந்தமானவர் எனக் கணிக்கப்படுகிறது.

இந்து ஜாதகக் கணிப்பின்படி ஒருவர் பிறக்கும் போது அவ்விடத்தில் அமைந்திருக்கும் கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் கதிர் வீச்சுக்கு ஆளாகி இருப்பார். அப்படிப்பட்டவர் மீது ஏனைய கிரகம் மற்றும் நட்சத்திரங்களின் கதிர் வீச்சுப் படும்போது அவரது ஆற்றல் எவ்வாறு அமையும் என்பதே எமது ஜாதகக் கணிப்பாகும்.

இவ்வாறு பூமியில் ஒரு புள்ளியில் வாழும் ஒருவர் வானில் உள்ள 12 ராசிப் பாதைகளையும் அதாவது 27 நட்சத்திரங்களையும் கடக்க ஒரு மண்டல காலம் எடுக்கும் என்பதும் ஒரு கணிப்பாகும்

வானில் ஒவ்வொரு ராசிப் பகுதியிலும் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ராசிப் பகுதியில் உள்ள முக்கியமாகக் கருதுகிற நட்சத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளர்கள். அதனாலேயே 12 ராசியில் 27 நட்சத்திரங்கள் இருப்பதாகக் பஞ்சாங்கத்தில் கணிக்கப் பட்டுள்ளது.

பூமியைச் சுற்றியுள்ள வானம் மேஷம், சிம்மம், தனுசு, ரிஷபம், கன்னி, மகரம், மிதுனம், துலாம், கும்பம், கடகம், விருச்சிகம், மீனம் எனப் 12 பகுதிகளாகப் (ராசிகளாகப்) பிரிக்கப் பட்டுள்ளது.

அப்பகுதிகளில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன. (ஆரம்பத்தில் 28 நட்சத்திரங்கள் கணிக்கப்பட்டன. தற்போது 27 நட்சத்திரங்கள் மட்டுமே கணிக்கப் படுகின்றன. அபிஜித் நட்சத்திரம் தற்போது இல்லை)

1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி. 5. மிருகசீரிஷம், 6. திருவாதிரை.7. புனர்பூசம். 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம்.13. அஸ்தம் 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம். 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, .27. ரேவதி

வானில் கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. எனினும் இந்த 27 நட்சத்திரங்களை மட்டும் மனித குலத்துடன் தொடர்புடையவை என எமது முன்னோர்கள் (மெய்ஞ்ஞானிகள்) கணித்துள்ளார்கள்.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கிரகங்கள் இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். மற்றும் 27 நட்சத்திரங்களின் மூலம் பூமியில் விழும் கதிர் வீச்சினாலேயே பூமியில் மனித குலத்தில் ஏற்றத் தாழ்வான வாழ்வு நிலை ஏற்படுவதாக எமது வான சாத்திர வியலாளர்கள் ஜாதகத்தில் கணித்துள்ளார்கள்.

அதாவது பூமியை பாதிக்கும் (கதிர்விச்சு) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மூலமாக அமையும் என்பது கணிப்பாகும்.

தமிழ்த் திகதி:  சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரயும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

ஆங்கிலத் திகதி:  இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

இஸ்லாமியத் திகதி: சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

எனவே ஒரு மண்டலம் எனப்படுவது ஆரம்பிக்கும் காலத்தினைப் பொறுத்து 41 முதல் 48 நாட்களுக்குள் அடங்கும் என்பதுவே அடிப்படைத் தத்துவமாகும்.

எல்லா நாளும் நல்ல நாளே. 41 – 48 நாட்கள் எல்லாமே ஒரு மண்டலமே. எமது நம்பிக்கையே பலன் கொடுக்கும்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %