கெட்டுப்போகும் – ஒளவையார் அறிவுரைகள்
தமிழ் மூதாட்டி ஒளவையார் அவர்கள் அருளியதாக அறியப்படுகிறது.
நமது வாழ்க்கையில் சில விடயங்களில் நாம் கவனம் செலுத்தாத போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கூறுவதாக “ஒரு வரியில்” அமைந்துள்ள அறிவுரைகள்.
(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
விளக்கம்
01. பாராத பயிரும் கெடும்.
விளக்கம்: கவனிப்பில்லாத பயிர்கள் நன்கு வளர்ச்சியடையாது. எதிர்பார்த்த பயனைக் கொடுக்காது
02. பாசத்தினால் பிள்ளை கெடும்.
விளக்கம்: பிள்ளைகள் தவறு செய்யும்போது அளவு கடந்த பாசத்தினால் கண்டிக்கப் படாமல் (தண்டிக்கப் படாமல்) வளர்த்தால் எதிர்காலத்தில் எது சரி எது பிழை என்று தெரியாது தான் தோன்றித்தனமான அதாவது ஒரு ஒழுங்கற்ற வாழ்க்கையை பிள்ளைகள் வாழ நேரிடலாம்
03. கேளாத கடனும் கெடும்.
விளக்கம்: நாம் யாருக்காவது பணம் அல்லது ஏதாவது பொருட்கள் கடனாகக் கொடுத்திருந்தால், மறவாது அவர்களிடம் இருந்து எமது பொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். கடன் கொடுத்துக் கொடுத்துத் திரும்பி வராமல் ஆண்டியானவர்களும் பலர் உண்டு.
04. கேட்கும்போது உறவு கெடும்.
விளக்கம்: நாம் யாருக்காவது பணம் அல்லது ஏதாவது பொருட்கள் கடனாகக் கொடுத்திருந்தால் அவர்களது தேவை முடிந்த பின்னர் அல்லது எமக்கு அப்பொருள் தேவைப்படும் போது அவர்களிடம் கொடுத்ததை திரும்பிக் கேட்க்கும்போது மனக் கசப்பு உண்டாகலாம். உறவிலும் விரிசல் ஏற்படும்.
05. தேடாத செல்வம் கெடும்.
விளக்கம்: எமக்கு உடல், உள வலிமை இருக்கும் போது நன்கு உழைத்து பணம், பொருள், செல்வம் சம்பாதிக்க வேண்டும். இல்லையேல் இருக்கும் செல்வமும் அழிந்து வறுமையே மிஞ்சும்.
06. தெகிட்டினால் விருந்து கெடும்.
தெவிட்டு (திகட்டுதல்): உணவில் வெறுப்பு
விளக்கம்: விருந்தின் போது எமக்கு விருப்பமற்ற (வெறுப்பான) உணவு வகைகள் பரிமாறப் பட்டால் எமக்கு அளிக்கப்பட விருந்தில் எமக்கு திருப்தி ஏற்படாது. அதனாலேயே விருந்து படைக்கும் போது பலவகையான உணவுகள் தயாரித்து பரிமாறப் படுகின்றது. யார் யாருக்கு எந்த உணவு பிடிக்குமோ அவர்கள் அதனை விரும்பி உண்டு மகிழ்வர்.
07. ஓதாத கல்வி கெடும்.
விளக்கம்: தினமும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதாவது எப்போதும் சிறந்த நூல்களை, நல்ல அறிவுரைகளை கற்று அறிந்து கொண்டிருருக்க வேண்டும். அப்போது தான் அறிவு வளரும். இல்லையேல் இருக்கும் அறிவும் மங்கிவிடும்.
08. ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
விளக்கம்: எமது சமுதாய, சமய, சம்பிரதாய பழக்க வழக்கங்களை நாம் கடைப் பிடிக்காது சீரற்ற வாழ்வு முறையைக் கடைப் பிடிக்கும் போது எமது நற்பெயரும் கெட்டு, எமது உடலும் வலுவிழந்து நாம் வாழும் சூழலில் உள்ள மக்களாலும் நாம் புறக்கணிக்கப் படுவோம்.
09. சேராத உறவும் கெடும்.
விளக்கம்: அவ்வப்போது எமது உற்றார் உறவினர் நண்பர்களுடன் கூடிக் குலாவி கலந்து கொள்ளும் போதுதான் உறவு தொடரும் வலுப்பெறும். இல்லையேல் உறவு வலுவிழந்து போகும்.
10. சிற்றின்பன் பெயரும் கெடும்.
விளக்கம்: மது, மாது, களவு, பிறரைத் துன்புறுத்தல் போனற சிற்றின்பங்களில் ஈடுபடுபவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். அவர்களுடன் நட்பும் கொள்ள மாட்டார்கள்.
11. நாடாத நட்பும் கெடும்.
விளக்கம்: அவ்வப்போது எமது நண்பர்களை நாடிச் சென்று கூடிக் குலாவி கலந்து கொள்ளும் போதுதான் நட்பு தொடரும், வலுப் பெறும். இல்லையேல் நட்பும் வலுவிழந்து போகும்.
12. நயமில்லா சொல்லும் கெடும்.
விளக்கம்: அன்பான, பண்பான வார்த்தைகளைப் பாவிக்காது கடினமான வார்த்தைகளைப் பாவிக்கும்போது யாரும் மதிக்க மாட்டார்கள். உறவிலும் விரிசல் உண்டாகும்.
13. கண்டிக்காத பிள்ளை கெடும்.
விளக்கம்: பிள்ளைகளுக்கு எது சரி எது பிழை என்ற பாகுபாடு தெரியாது. அவர்கள் தப்புச் செய்யும்போது அத் தவறினைச் சுட்டிக் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழியில் பயணிக்க வைக்க வேண்டும்.
பிள்ளைகள் தவறு செய்யும்போது கண்டிக்கப்படாமல் (தண்டிக்கப்படாமல்) வளர்த்ததால் எதிர்காலத்தில் எது சரி எது பிழை என்று தெரியாது தான் தோன்றித்தனமான அதாவது ஒரு ஒழுங்கற்ற வாழ்க்கையை பிள்ளைகள் வாழ நேரிடலாம்
14. கடன்பட்டால் வாழ்வு கெடும்.
விளக்கம்: எமது சோம்பேறித் தனத்தினால் நாம் உழைக்காமல் எமது தேவைகளுக்குப் பிறரிடம் உதவி கேட்டு, கடன்பட்டு வாழும் போது ஒரு கட்டத்தில் எம்மால் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்த முடியாமல் அவர்களுடனான உறவும் கெட்டு எமது பெயரும் கெட்டுப் போகும். சில வேளைகளில் எம்மிடம் இருப்பதையும் இழக்க வேண்டி வரலாம்.
15. பிரிவால் இன்பம் கெடும்.
விளக்கம்: சில மனக் கசப்புகளால் உற்றார் உறவினர் நபர்களுடன் சண்டையிட்டுப் பிரிந்து வாழும்போது தனிமை, பிரிவு எமக்கு சோகத்தினையே ஏற்படுத்தும். அது மட்டுமன்றி பணியின் நிமித்தம் அல்லது வேறு காரணங்களுக்காக நாம் தூர தேசம் சென்றாலும் அவர்களது பிரிவு எமக்கு சோகத்தினையே கொடுக்கும்.
16. பணத்தால் அமைதி கெடும்.
விளக்கம்: தேவைக்கு அதிகமான பணம், திடீரென அதிஷ்டத்தினால் கிடைக்கும் பணம் மற்றும் தகுதி இல்லாதவர்கள் கையில் கிடைக்கும் பணத்தினால் அவர்களது தான் தோன்றித் தனமான செயற்படுகளினால் அவர்களது அமைதியும் கெடும் அவர்களுடன் வாழ்பவர்களின் அமைதியும் கெட்டுப் போகும்.
17. சினமிகுந்தால் அறமும் கெடும்.
அறம்: தர்மம், கடமை, புண்ணியம், நல்வினை
சினம்: கோபம்
விளக்கம்: நாம் ஏதாவது காரணத்துக்காக எப்போதும் சினந்து கொண்டிருந்தால், செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் தவற விட்டு விடுவோம். அல்லது சரியாக முறைப்படி காரியங்களைச் செய்யத் தவறி தவறு இளைத்து விடுவோம். நாம் செய்த அறமும் அதாவது நற்காரியங்களும் பயனற்றுப் போகும்.
18. சிந்திக்காத செயலும் கெடும்.
விளக்கம்: நன்கு சிந்தித்து, ஆராய்ந்து, திட்டமிடாமல் செயற்படுத்தும் காரியம் எதிர் பார்த்த முடிவினைக் கொடுக்காமல் போகும்.
19. சோம்பினால் வளர்ச்சி கெடும்.
விளக்கம்: எந்த முயற்சியும் செய்யாமல் சோம்பேறித் தனமாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. வளர்ச்சி குன்றிப் போகும்.
20. சுயமில்லா வேலை கெடும்.
விளக்கம்: தானாக முயற்சிக்காத, தன் சொந்த முயற்சி இல்லாத அதாவது பிறரையே நம்பிச் செய்யும் தொழில் நீடிக்காது. வளர்ச்சி இருக்காது.
21. மோகித்தால் முறைமை கெடும்.
மோகித்தல்: காமத்தால் மயங்குதல்.
விளக்கம்: காமம் புத்தியைக் கெடுக்கும். அது வயது முறைகளையோ அன்றி உறவு முறைகளையோ சிந்திக்க விடாது கேடுகளை விளைவிக்கும்.
22. முறையற்ற உறவும் கெடும்.
விளக்கம்: அவரவர் உறவு முறைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தினைக் கொடுக்காது எல்லோருடனும் ஒரே மாதிரியாகப் பழகும்போது, அப் பழக்க வழக்கம் நாளடைவில் உறவு முறைகளில் விரிசல்களைக் கொடுக்கும். உதாரணமாக சிநேகிதர்கள், மாமன், மச்சான், சகோதர்கள் என்ற ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம், தனித்துவம், மரியாதை என்பன உண்டு. அந்த அந்த மரியாதையை அவரவருக்குக் கொடுக்க வேண்டும்.
23. அச்சத்தால் வீரம் கெடும்.
விளக்கம்: பயத்தினால் காரியம் கெட்டுப் போகும். பயந்தால் துணிவு போய்விடும். பயந்தால் தோல்வியே மிஞ்சும்.
24. அறியாமையால் முடிவு கெடும்.
விளக்கம்: செய்யும் காரியத்தில் முழுமையான அறிவு, விளக்கம், தெளிவு இல்லாமல் இருந்தால் அந்தக் காரியத்தின் முடிபு நாம் எதிர்பார்த்தது போல அமையாது.
25. உழுவாத நிலமும் கெடும்.
விளக்கம்: ஒரு நிலத்தினை உழும்போது தான் அது பண்படும். பயிர்ச் செய்கைக்கு உகந்ததாகும். உழுதல் என்பது மண்ணை கிளறுதல். மேலுள்ள மண்ணைக் கீழாகவும், கீழாக உள்ள மண்ணை மேலாகவும் புரட்டிப் போடுதல். அப்போதுதான் அவ்விடத்தில் அடியில் உள்ள பசளை மேலாக வரும் அது மட்டுமல்லாமல் இறுக்கமான நிலம் ஐதாகி நன்கு வேர் ஓட உதவும். இல்லையேல் அம்மண் எதற்கும் உதவாமல் போய்விடும்.
26. உழைக்காத உடலும் கெடும்.
விளக்கம்: ஓடி, ஆடி, அசைந்து வேலை செய்யாமல் ஓரிடத்திலேயே அமர்ந்து இருந்தால், அந்த உடல் நோய் வாய்ப் பட்டுவிடும். ஆடி, அசைந்து வேலை செய்யும்போது தான் உடல் வலுப் பெறும்.
27. இறைக்காத கிணறும் கெடும்.
விளக்கம்: இறைக்கும் போதுதான் கிணறு வற்றி புதிய நீர் ஊறும். இல்லாவிட்டால் அக்கிணற்றில் உள்ள நீரில் பாசி பிடிக்கும். புழு போன்ற சிறிய கிருமிகளும் பெருகி அது பாவனைக்கு உதவாத நீராக இருக்கும்.
28. இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
விளக்கம்: மரங்களை அழிக்கும்போது காற்று தூய்மைப் படுத்தப்பட மாட்டாது. நன்நீரில் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகளை சேர்க்கும்போது நீர் அசுத்தமாகும். அதிக இயந்திரங்கள், அதிக வாகனங்களின் பாவனையினால் நிலம், நீர், காற்று என்பன மாசடையும். இரைச்சல் மிகுதியால் சாதாரண வாழ்வு பாதிக்கப்படும். இரசாயன உரங்கள் மூலம் விளையும் பயிர்களினால் பல புதிய நோய்களும் தோன்றும். அந்த நாட்டு மக்கள் பல இன்னல்களையும் அனுபவிப்பர். இங்கு நாடு என்பது நாட்டு மக்களைக் குறிக்கும்.
29. இல்லாளில்லா வம்சம் கெடும்.
இல்லாள்: மனைவி
விளக்கம்: திருமணமாகாமல் அதாவது மனைவி (ஒரு பெண் துணை) இல்லாமல் ஒரு ஆண் பிரம்மச்சாரியாக இருந்தால் அவனது வம்சம் விருத்தி அடையாது. அதாவது உரிய நேரத்தில் முறைப்படி ஒரு பெண்ணை மணமுடித்து பிள்ளைகள் பெற்று வாழவேண்டும்.
30. இரக்கமில்லா மனிதம் கெடும்.
விளக்கம்: பிறர்மீது, பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டாமல் வஞ்சித்துத் திரிபவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் ஆவார்கள்.
31. தோகையினால் துறவு கெடும்.
விளக்கம்:
32. துணையில்லா வாழ்வு கெடும்.
விளக்கம்: சொந்தம், பந்தம், நண்பர்கள் என்று யாருடனும் தொடர்பில்லாது வாழும்போது பல இன்னல்களைச் சந்திக்க நேரும். ஓவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இன்னொருவர் துணை எப்போதும் தேவைப்படுகிறது.
33. ஓய்வில்லா முதுமை கெடும்.
விளக்கம்: முதுமையில் உடல் வலுவிழந்திருக்கும். முதுமைக் காலத்தில் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுக்கா விட்டால் நோயாளியாக்கிவிடும்.
34. ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
விளக்கம்: பெண்களுக்கு ஒழுக்கமே முக்கியமானதாகும். ஏதோ காரணங்களினால் ஒழுக்கக் கேடாக வாழும் பெண்களின் வாழ்க்கை மகிழ்வில்லாது, கவலையும், நோயும் நிறைந்ததாக இருக்கும். ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழும் பெண்களை யாரும் மதிக்கவும் மாட்டார்கள்.
35. அளவில்லா ஆசை கெடும்.
விளக்கம்: ஆசை என்பது தனது தகுதிக்கு மேலாக ஒன்றை அடைய விரும்புவது. எமது தகுதிக்கு மேலாக ஒன்றை அடைய விரும்பும் போது பல களவு, பொய் என்பன செய்ய வேண்டி வரும். இறுதியில் நாம் ஆசைப் பட்டதனையும் அடைய முடியாமல்ப் போய்விடும்.
36. அச்சப்படும் கோழை கெடும்.
கோழை என்பது உடலால் பலவீனமானவர்கள் என்று அர்த்தமாகும்.
விளக்கம்: கோழைகள் பயந்து வாழும்போது எக்காரியமும் செய்ய முடியாது போகும். உடலால் பலவீனமானவர்கள் உள்ளத்தால் துணிந்து காரியத்தில் இறங்குங்கள் உங்களால் சாதிக்க முடியும்.
37. இலக்கில்லா பயணம் கெடும்.
இங்கு பயணம் என்பது ஒரு முயற்சி என்று அர்த்தமாகும்.
விளக்கம்: நாம் எக்காரியத்திலும் இறங்கு முன்னர் நாம் செய்யப் போகும் காரியத்தின் பயன் என்ன? அதனால் யாருக்கு என்ன பயன்? என்று அறிந்து, ஆராய்ந்து இறங்க வேண்டும். இல்லையேல் நேரமும் காலமுமே வீணாகும்.
38. இச்சையினால் உள்ளம் கெடும்.
விளக்கம்: இச்சை என்பது அதீத காமம் என்று அர்த்தமாகும். அதீத காமம் உடலையும் உள்ளத்தினையும் பலவீனமாக்கும்.
39. உண்மையில்லா காதல் கெடும்.
விளக்கம்: காதல் என்பது அன்பு என்று கூறப்பட்டாலும் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் இன்னொரு ஆண் அல்லது பெண்மீது உடலால் உள்ளத்தினால் அன்பு வைத்தல் அல்லது விருப்பம் கொள்ளுதல் என்று அர்த்தமாகும். காம இச்சையினால் அல்லது எதோ ஒரு தேவைக்காக ஒருவரை காதலிப்பது போல, அன்பு வைப்பது போல நடித்துத் தன் காரியத்தினைச் சாதிக்க எண்ணுவது பிரிவினையையே, சாதகமற்ற முடிவினையையே ஏற்படுத்தும்.
40. உணர்வில்லாத இனமும் கெடும்.
விளக்கம்: தாம் பிறந்து வாழும் சமூகத்தின் கலை, கலாச்சாரப், பண்பாடுகளை மதிக்காது, தான்தோன்றித் தனமாக வாழும் மனிதர்களைச் சார்ந்த இனமும் காலப் போக்கில் இல்லாமல்ப் போய்விடும். ஒரு குறிப்பிட்ட கலை, காலாச்சாரப், பண்பாடுகளைக் கொண்ட ஒரு கூட்டத்தினையே இனம் என அழைக்கப் படுகிறது.
41. செல்வம் போனால் சிறப்பு கெடும்.
விளக்கம்: செல்வம் பலவகைப்படும் (பதினாறு) என எம் முன்னோர் வகைப் படுத்தியுள்ளனர். அவையாவன முறையே தாய், மனை (வீடு) மனைவி, மக்கள் (பிள்ளைகள்), நெல் (பயிர்), நீர், நிலம், கால்நடை (ஆடு மாடு கோழி போன்ற மனிதருக்கு உதவும் மிருகங்கள்), கல்வி, கேள்வி (பிறர் கூறும் கருத்தினை உள்வாங்குதல்), அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் (நோயற்ற வாழ்வு) ஆகும். இதனையே “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்” என்பது பழமொழி. இதில் நாம் எதனை இழந்தாலும் அது எமக்குப் பாதிப்பே.
குறிப்பு: செல்வத்தில் சிறந்த செல்வம் தாய் ஆகும். மேற் குறிப்பிட்ட செல்வத்தில் தாயைத் தவிர எதனை இழந்தாலும் அதனை மீளப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் தாய் மட்டும் மீளப் பெறவே முடியாத செல்வமாகும்.
42. சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
பிறழ்தல்: மாறுதல் அல்லது தவறுதல்
விளக்கம்: நாம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் தவறிய போது அல்லது உண்மைக்குப் புறம்பானதைக் கூறும் போது அல்லது பொய்ச்சாட்சி கூறும்போது எமது நற் பெயருக்குக் களங்கம் உண்டாகும்.
43. தூண்டாத திரியும் கெடும்.
விளக்கம்: ஒரு விளக்கின் திரி அதாவது எரியும் துணி எரிந்து சாம்பலாகும் போது கீழிருக்கும் துணியை இழுத்து விட்டால்த் தான் அந்தத் தீபம் தொடர்ந்து எரியும். இல்லையேல் அது மங்கி அணைந்து போகும். வாழ்விலும் நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். உழைத்து புதிதாக செல்வத்தினைத் தேடிக்கொண்டு இருக்க வேண்டும். அப்போதே வாழ்வு சிறக்கும்.
44. தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
விளக்கம்: பொதுவிடத்தில் ஒருபோதும் பிறரை தூற்றி அதாவது அவதூறாகப் பேசக்கூடாது. அப்படியாக எப்போதும் பிறரை பழிசொல்பவர்களது பேச்சுக்கு யாரும் மரியாதை கொடுக்க மாட்டார்கள்.
45. காய்க்காத மரமும் கெடும்.
விளக்கம்: பருவத்தே பூத்துக் காய்க்க வேண்டிய மரங்கள் பூக்காமல், காய்க்காமல் இருந்தால் பயனற்றுப் போய் அதனை பயனற்றவை என்று கூறி வெட்டித் தறித்து விடுவார்கள். இது மனிதர்கள் மற்றும் ஏனைய உயிரினங்களுக்கும் பொருந்தும்.
46. காடழிந்தால் மழையும் கெடும்.
விளக்கம்: மரங்கள் நிலத்து அடியில் உள்ள நீரை வேர் மூலமாக உள்ளிழுத்து இலைகள் மூலமாக வெளியேற்றுவதனால் அந்த நீர் மேலே சென்று முகிலாகி மீண்டும் மழையாக எல்லா இடத்திலும் பெய்யும். நாம் எமது தேவைகளுக்காக காட்டினை, மரங்களை அழிக்கும்போது மழை பெய்யும் சந்தர்ப்பமும் குறைக்கப்படுகிறது. பூமி வறட்சியாகும்.
47. குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
பிறழ்ந்தால்: தவறினால், பிழைத்தால்
விளக்கம்: வேட்டை ஆடும்போது அம்பு அல்லது துப்பாக்கியின் குறி தவறினால் நோக்கம் பிழைத்துவிடும். அதுபோல நாம் எண்ணும் காரியத்தின் மீது சரியான குறி அல்லது இலக்கு வைக்காவிட்டால் முடிபு நாம் எண்ணியது போல அமையாது.
48. குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
விளக்கம்: நாம் எதற்கு எடுத்தாலும் பிறரில் பிழை கண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் யாரும் எம்முடன் உறவு கொள்ள அஞ்சுவர். நாம் சுற்றத்தாருடன் பகைக்க வேண்டி வரும். நாம் தனிமைப் படுத்தப் படுவோம்.
49. வசிக்காத வீடும் கெடும்.
விளக்கம்: ஒரு வீட்டில் யாரும் வசிக்காத (வாழாத) போது நாம் விரும்பாத பூச்சிகள், விலங்குகள், பாம்புகள் அங்கு குடி புகும். வீடு தூசி பிடித்து, கறையான் பிடித்து பாழடைந்து போகும்.
50. வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
விளக்கம்: நாம் செல்வத்தினை இழக்கும்போது, அல்லது செல்வத்தினைத் தேடாதபோது பசி பட்டினி உட்பட மானம் மரியாதையையும் இழந்து விடுவோம். யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள்.
செல்வம் பலவகைப்படும் (பதினாறு) என எம் முன்னோர் வகைப் படுத்தியுள்ளனர். அவையாவன முறையே தாய், மனை (வீடு) மனைவி, மக்கள் (பிள்ளைகள்), நெல் (பயிர்), நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி (பிறர் கூறும் கருத்தினை உள்வாங்குதல்), அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் (நோயற்ற வாழ்வு) ஆகும்.
51. குளிக்காத மேனி கெடும்.
விளக்கம்: குளிப்பு என்பது உடலை நீரால்க் கழுவுதல் என்று அர்த்தமாகும். குளிக்கும்போது உடலில் உள்ள அழுக்குகள் அகலும். உடற் துர்நாற்றம் அகலும். உடல் சூடு தணிந்து சீராக இயங்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க குளிப்பு அவசியமாகும்.
52. குளிர்ந்து போனால் உணவு கெடும்.
விளக்கம்: சூடான உணவே உடலில் இலகுவில் சமிபாடடையும். குளிர்ந்த உணவு உண்ணும் போது சமிபாட்டுச் சிக்கல்கள் தோன்றும்.
53. பொய்யான அழகும் கெடும்.
விளக்கம்: பிறரைக் கவர்வதற்காக போடும் வேடங்கள் கலையும் போது, பிறரால் அவமானப் படுத்தப்பட்டு, இருக்கும் மதிப்பையும் இழந்து விடுவோம். அது மட்டுமல்லாது போலியாக அழகை மெருகூட்ட பூசும் பூச்சுக்களால் தோல் வருத்தங்கள் ஏற்பட்டு இருக்கும் அழகும் குன்றிவிடும்.
54. பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
விளக்கம்: பொய் கூறித் திரிபவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். அவர்களது பேச்சை யாரும் ஏற்க மாட்டார்கள்.
55. துடிப்பில்லா இளமை கெடும்.
விளக்கம்: ஆணோ பெண்ணோ இளம் வயதில் மிகவும் துடி நாட்டம் உள்ளவர்களாக நன்கு ஓடி, ஆடி விளாயாடி கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களது உடலும், உள்ளமும், அறிவும் வலுப்பெறும். இல்லையேல் அவர்கள் தமது இளமைப் பருவத்தினை இழந்தவர்கள் ஆவார்கள்.
56. துவண்டிட்டால் வெற்றி கெடும்.
துவளுதல்: வாடுதல், வருந்துதல், பயப்படுதல் சோம்பலாக இருத்தல்.
விளக்கம்: துவண்டு போனால் நாம் காரியங்களில் வெற்றி பெற முடியாது. எமது இலக்கினை அடைய முடியாது.
57. தூங்காத இரவு கெடும்.
விளக்கம்: தூக்கமே உடலுக்கும், உள்ளத்துக்கும் தென்பினை, உற்சாகத்தினை, ஆரோக்கியத்தினைத் தரும். ஏதோ காரணத்தினால் எமது தூக்கம் கெட்டுப் போனால் நம் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் இழந்து நோயையும், தோல்விகளையும், கவலைகளையுமே கொடுக்கும். தூங்காத இரவு நாம் இழந்து போன இரவாகவே அமையும்.
58. தூங்கினால் பகலும் கெடும்.
விளக்கம்: பகலில் நாம் ஓடி ஆடி வேலை செய்து கல்வி கற்று வாழ வேண்டும். அப்போதே நாம் சகல செல்வமும் பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். அதனை விடுத்து சோம்பேறித் தனமாக பகலில் தூங்கிக் கழித்தால் அந்தப் பகல் வேளைகள் நாம் இழந்த பகல்களாகவே அமையும்.
59. கவனமில்லா செயலும் கெடும்.
விளக்கம்: நாம் செய்யும் காரியத்தில் கவனம் இல்லாமல் இருந்தால் அந்தக் காரியம் நாம் எதிர்பார்த்த வெற்றியைத் தராது. அந்தக் காரியம் அந்தச் செயல் கெட்டுப் போகும்.
60. கருத்தில்லா எழுத்தும் கெடும்.
விளக்கம்: எமது எழுத்துக்களில் எந்தக் கருத்தும் இல்லாமல் இருந்தால் அந்த எழுத்துக்கு பிறரிடம் இருந்து எவ்விதமான மரியாதையும் கிடைக்காது. அது பயன் அற்ற அறிவுரையாகவே (எழுத்தாகவே) அமையும்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —