பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – கருங்கல் சிலை
எனக்கு நீண்ட நாட்களாக எமது குருவின் சிறிய சிலை எனது பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும் என்று ஒரு ஆவலாக இருந்தது. இம்முறை இந்தியா செல்லும் போது எப்படியாவது ஒரு சிலை செய்து எடுத்து வர வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன். அதுவும் கருங்கல்லினால் ஆன சிலையே சிறப்பு மிக்கது என்பதுவும் எனது எண்ணமாக இருந்தது.
ஏற்கனவே பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளின் மலேசிய ஆச்சிரமம் மற்றும் தருமபுரி ஆச்சிரமத்துக்கு கருங் கல்லினால் ஆன இரண்டு அடி உயரமான சிலைகள் செய்து கொடுத்த சிற்பியான ராஜமணிகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு எனது விருப்பத்தினைத் தெரிவித்தேன். அதுவும் வீடுகளில் பூஜை அறைகளில் ஒன்பது அங்குலத்துக்கு மேல் உயரமான சிலைகள் வைத்து வழிபடுவது சிரமானது. எனவே அவருடன் எனக்கு ஆறு அங்குல உயரத்தில் சுவாமிகளின் சிலை செய்து தர முடியுமா என்று வினவினேன்.
அப்போது அவர் கருங்கல்லில் நான்கு விதமான கற்கள் உள்ளன எனவும், அதாவது பூகோள ரீதியாக சில இடங்களில் இருந்து எடுக்கப்படும் கருங்கல் மிகவும் கடினமானவை. அக்கல்லில் பெரிய சிலைகள் செய்யும் போதே யதார்த்தமான உருவங்கள் எடுக்க முடியும். அடுத்ததாக சில இடங்களில் இருந்து எடுக்கப்படும் கருங்கற்கள் சிறிது மென்மையானவை. சிறிய சிலைகள் செய்ய உகந்தவை. அவை பச்சை மாவுக் கல் என அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட பச்சை மாவுக் கல்லில் (சிறிது மென்மையான கருங் கல்லில்) உங்களுக்கு சிலை செய்து தர முடியும் என விளக்கினார். அதாவது எல்லாமே கருங்கற்கள் தான். ஆனால் அவை எடுக்கப்படும் இடத்தினைப் பொறுத்து அதன் கடினத் தன்மை வேறுபடுகிறது. இருந்தும் அது சிற்பிகளால் மட்டுமே பிரித்து அறிந்து கொள்ள முடியும். எம்மால் அதன் வித்தியாசத்தினை அறிந்து கொள்ள முடியாது என்றும் விளக்கினார்.
ஏனைய சற்று மென்மையான கருங்கற்களான கடப்பாக் கல்லு மற்றும் மாவுக் கல்லு என்பனவும் சிலை செய்யப் பயன்படுத்தப் படுகின்றன. இருந்தும் சுவாமிச் சிலைகள் வடிப்பதற்கு கருங்கல் மற்றும் பச்சைக் கற்கள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.
கடப்பாக் கற்கள் மற்றும் மாவுக் கற்களிலும் சிலைகள் செய்யப் படுகின்றன. கற்களுக்கு ஏற்றவாறு விலைகளிலும் வித்தியாசம் இருக்கும் என்றும் விளக்கினார்.
அப்படியாக எனக்கு பச்சை மாவுக் கல்லில் ஆறு அங்குல உயரத்தில் சுவாமிகளது சிலை ஆறு நாட்களில் செய்து தருவதாகக் கூறி வேலைகளையும் ஆரம்பித்தார். அவர் கூறியது போல நான் அங்கு சென்றிருந்தபோது அவரே சிலையையும் எடுத்து போளிவாக்கம் ஆச்சிரமம் வந்திருந்தார்.
சிலை மிகவும் யதார்த்தமாகவும் மிகவும் ரம்மியமாகவும் அமைந்துள்ளது. சுவாமிகள் பத்மாசனத்தில் அமைந்திருப்பது போல அமைந்துள்ளது. சிலையைப் பார்க்கும் போது சுவாமிகளைப் பார்ப்பது போலவே ஒரு பக்திப் பரவசம் ஏற்படுகிறது.
அன்று அங்கு ஆச்சிரமத்தில் சுவாமிகள் இருந்ததனால் சிலையினை சுவாமிகளிடம் கொடுத்து சுவாமிகளிடம் இருந்து சிலைக்கு ஆசீர்வாதமும் பெற்றுக் கொண்டேன். தற்போது வீட்டுப் பூஜை அறையில் வைத்து வணங்கி வருகிறோம்.
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பதன் காரணம்
கருங்கல்லால் சிலைகள் மட்டுமன்றி பழங்காலக் கோவில்களும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி கட்டப் பட்டுள்ளதனைக் காணலாம்.
ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், மற்றும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்த கருங்கல் சுவாவாமிச் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினமும் முறைப்படி பூஜை செய்து வரும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை ஓர் பக்திப் பரவசம் ஏற்படுவதனை அனுபவ பூர்வமாக உணர முடியும்.
பெரும்பாலும் தெய்வ சிலைளை மாபிள் மற்றும் உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லில் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான காரணம் உண்டு.
அதாவது ஏனைய கற்கள் மற்றும் உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. பிரபஞ்ச சக்தியை (எந்த சக்தியையும்) அதிக அளவில் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை கருங் கற்களுக்கு உள்ளது.
கருங் கற்களுக்கு உயிர் உள்ளது என்று கூறுவார்கள். உடைக்கப்படாத கருங் கற்கள் வளர்ந்து கொண்டு போவதனை அவதானிக்க முடியும். கருங்கல்லில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.
நீர்: கல்லில் நீர் உள்ளது. அதனாலேயே எப்போதும் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் செடி கொடிகள் முளைப்பதனைக் காண முடியும்.
நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் (மண்) உள்ளது. அதனாலேயே கல்லில் செடி, கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி வருகிறது.
காற்று: கல்லில் வாயு (காற்று) உண்டு. அதனாலேயே கல்லின் இடுக்கில் அதாவது கல்லுக்குள்ளேயே தேரை உயிர் வாழ்கிறது.
ஆகாயம்: ஆகாயத்தைப் போல்,வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னுள் ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல் பாறைகளில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் தன்மை இருக்கிறது.
இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகளை தினமும் முறைப்படி செய்யும் போது, ஒரு சிலையின் பிரபஞ்ச சக்தி அதிகரிக்கின்றது. அச் சிலையினை நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.
குருவின் சிலை செய்து வைத்து வழிபட விரும்புபவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ள முடியும்.
இவரது Shanmuga Handcraft என்ற பெயரில் அமைந்துள்ள சிற்பக் கலைக்கூடம் மாமல்லபுரத்தில் பின்வரும் முகவரியில் அமைந்துள்ளது. இவரது கலைக் கூடத்தில் வீடு, வணிகத் தலங்கள் மற்றும் ஆலயங்களுக்குத் தேவையான சுவாமிச் சிலைகள் மட்டுமல்லாது அலங்காரச் சிலைகளும் செய்து கொடுக்கிறார்கள்.
Shanmuga Handcraft
S. ராஜமணிகண்டன்
No 48, Five Rathas Shopping Complex
Mamallapuram 603104 TamilNadu
Phone: +91-99405 15173 (whatsapp)
கு. சிவகுமாரன் ([email protected])
– அன்பே சிவம் —