சமாதி நிலை – குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா
குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா ஆங்கிலத் திகதி 17 மே 2023, தமிழ்த் திகதி வைகாசி மாதம் மூன்றாம் திகதி அன்று பிரதோசமும், மாத சிவராத்திரியும் கூடிய பிரம்ம முகூர்த்தத்தில், தேய்பிறைத் துவாதசி திதியில் அதிகாலை மூன்று மணியளவில் சமாதிநிலை அடைந்தார். சிவனை வழிபடுவதற்குரிய சிறந்த விரதங்களுள் பிரதோச விரதமும் ஒன்றாகும். பிரதோச வழிபாடு என்பது பாவங்களை தொலைத்து மோட்சத்தை அடைய வழிவகுக்கும்
அன்று மாலை மூன்று மணி முதல் குருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆச்சிரமத்தில் அமைந்துள்ள சமாதியில் குருவின் உடல் சமாதி நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது முருகன் சந்நிதியில் அமைந்துள்ள அந்தச் சமாதியானது குருவினால் 13 – 10 – 2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அந்தச் சமாதியில் நாலு அடி நீள, அகலமும் ஐந்து அடி ஆழமும் கொண்ட காங்கிரீட் இனால் ஆன குழியில் அடியில் உப்பு வைத்து, அதன் மேலாக மஞ்சள்த் தூள் பரப்பி, அதன் மேல் பச்சைக் கற்பூரம் வைத்து, அதன் மேலாக சமாதி நிலையில் குருவின் உடல் வைக்கப்பட்டு, முறையே திருநீறு, அதன் மேலாக வில்வம் இலை, மற்றும் துளசி இலை என்பன குருவின் உடல் மறையும் வரை மாறிமாறி வைத்து அதன் மேலாக பச்சைக் கற்பூரம் வைத்து, குருவின் தலை உச்சிக்கு மேலாக பாதரச லிங்கம் வைத்து அதன் மேலாக காங்கிரீட் இனால் ஆன தட்டு வைத்து மூடப்பட்டுள்ளது. அதன் மேலாக குரு பத்மாசனத்தில் அமர்ந்துள்ளது போல அமைந்துள்ள ஐம்பொன்னினால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது.
அன்று முதல் ஒரு மண்டல காலத்துக்கு அதாவது 48 நாட்களுக்கு குருவுக்கு தினமும் மண்டல பூசை நடைபெற்று வருகிறது. தினம் ஒரு சீடராக பல சீடர்கள் மண்டல பூசை செய்து குருவை வணங்கி, குரு அருள் பெற்று வருகிறார்கள்.
மண்டல பூசையின் இறுதிநாள் அன்று விசேட பூசைகள் நடை பெற்று மண்டல பூசை நிறைவு பெறுகிறது. மண்டல பூசையின் இறுதி நாள் பௌர்ணமியாக அமைந்துள்ளது என்பது மேலும் ஒரு சிறப்பான அம்சமாகும்.
அதன் பின்னர் ஒவ்வெரு வருடமும் மே மாதம் 17 ஆம் திகதிகளில் சமாதிக்குச் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
தினமும் பல பக்தர்கள், சீடர்கள் அங்கு வந்து சமாதி பூசையில் கலந்து கொண்டு சமாதி தரிசனம் செய்து வருகிறார்கள்.
மண்டல பூசைகள் நடைபெற்று முடிந்த பின்னர், விரும்பும் சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு வருடத்தில் ஒருநாள் ஒரு சமாதி பூசை செய்து வரும் வாய்ப்புக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதாவது ஒவ்வொரு நாளுக்கு ஒருவராக வருடம் முழுவதுமாக அதாவது 365 நாட்களும் 365 சீடர்களுக்கு சமாதி பூசை செய்யும் வாய்ப்புக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
பலர் வேண்டுகோள் விடுத்தால் நிர்வாகத்தினர் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனது கருத்தாகும்.
குரு
பௌர்ணமி தினங்களில், உபதேசம் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரத்திலேயே அவர் எமக்கு குருவாகத் தென்படுவார். மிகுதி வேளைகளில் அவர் எமக்கு ஒரு தாயாகத், தந்தையாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த பண்பாளனாக, சிறந்த வழிகாட்டியாகவே வாழ்ந்திருக்கிறார். ஆச்சிரமத்தில் அவரை நேரிச் சென்று சந்தித்தவர்களுக்கு அது நன்கு புரியும்.
விருந்தினரை வரவேற்பதில் அவருக்கு நிகர் அவரே. அவரைக் காண ஆச்சிரமம் செல்பவர்கள் யாராக இருந்தாலும் பால்த்தேநீர், மற்றும் உணவு அருந்தாமல் அங்கிருந்து புறப்பட முடியாது. அது குருவின் அன்புக் கட்டளையாகவே இருக்கும்.
தன்னைத் தேடி அங்கு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் எவ்விதமான அசௌகரியங்களை எதிர்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்.
நீங்கள் இங்கு வரும்போது அசௌகரியங்களை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் பணத்தினை நீங்கள் இங்கு வரும்போது அனுபவிக்கட்டும் என்று தியான மண்டபம், தங்கும் அறைகள், உணவு மண்டபம், புதிய தியான மண்டபம் எனப் பல கட்டிடங்களைக் கட்டிவைத்த ஒரு ஆசான் எமது குரு.
அது மட்டுமல்லாமல் வறுமையில் மற்றும் நோய், துன்பங்களுடன் அங்கு வரும் தனது பல சீடர்களுக்கு பொருளாதார வசதிகள் செய்து கொண்டிருந்த வள்ளல் எமது குரு.
தனது உடல் நிலையைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் தன்னைக் காண வருபவர்களது ஆன்மீகச் சந்தேகங்களைத் தீர்ப்பதிலேயே கருத்தாக இருப்பார். என்னைத் தேடி எவ்வளவு தூரங்களில் இருந்து வருகிறார்கள். அவர்களது சந்தேகங்களைத் தீர்க்காமல், அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டாமல் நான் எனது அறைக்குச் சென்று ஓய்வெடுக்க முடியுமா என்று பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.
பலரது வாழ்க்கையை தனது சொற்பொழிவினாலேயே மாற்றிய மகான் அவர்.
நான் பல நேரங்களில் என் சொந்தப் பிரச்சனைகளை குருவிடம் கூறி ஆறுதல் பெறலாம் என்று அவரை அழைத்த வேளைகளில் “நீ ஒரு ஆன்மீகவாதியா? இதற்கெல்லாம் போய்க் கவலைப்படுகிறாயே, நான் கொடுத்த பாடங்களை முறைப்படி செய்துவா உனக்கு எல்லாம் புரிய வரும்” என்று அநத ராஜ யோகப் பயிற்சியின் முக்கியத்துவத்தினை எப்போதும் உணர்த்தியவர் எமது குரு.
ராஜ யோகப் பயிற்சி
குரு எப்போதும் குறிப்பிடுவார் புத்தகப் படிப்பு உனது அறிவைக் கூட்டும். ஆனால் நான் உனக்கு கற்பிக்கும் யோகப் பாடங்களே உன்னை ஞானப் பாதையில் முன்னேற வைக்கும் என்று ராஜ யோகப் பயிற்சியின் முக்கியத்துவத்தினை எப்போதும் வலியுறுத்துவார்.
யோகப் பயிற்சிகள் செய்து வரும்போது அவ்வப்போது எழும் சந்தேகங்களை, ஏற்படும் சில அனுபவங்களை குருவிடம் தெரியப்படுத்தும் போது பல விளக்கங்கள் கொடுப்பார். தொடர்ந்து பயிற்சிகளை செய்துவா இன்னும் பல அனுபவங்கள் உனக்குக் கிடைக்கும் என்று பயிற்சியின் முக்கியத்துவத்தினையே எப்போதும் அறிவுறுத்துவார்.
குரு அறிவுறுத்திய குருவினது சமாதியின் மகத்துவம்
இவ்விடத்தில் குருவின் சமாதி பற்றி ஒரு சீடர் கேட்ட கேள்விக்கு குரு அளித்த பதிலை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
கேள்வி: ஐயா என்னுடைய ஒரு ஆசையும் வேண்டுகோளும். ஐயா வள்ளலாருடைய சமாதியில் ஒரு தீபம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும். அந்தத் தீபம் வள்ளலார் தன் கைகளால் ஏற்றிவைத்த தீபம். அது இன்றுவரை எரிந்து கொண்டே இருக்கிறது. அந்தத் தீபத்தினை வள்ளலாராகவே நினைந்து எல்லோரும் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல இந்த ஆச்சிரமத்தில் உங்களுடைய சமாதியில் உங்கள் கையால் ஒரு தீபம் ஏற்றி வைக்க முடியுமா ஐயா. அது காலம் காலமாக அணையாமல் எரிந்து கொண்டிருந்து எல்லோருக்கும் அருள் பாலிக்கட்டும். அதுதான் என்னுடைய ஆசை ஐயா.
அதற்கு குரு பதிலளித்தார். “வெளியில் ஒன்றும் தீபம் எரிய வேண்டாம். எனக்குள்ள ஒரு தீபம் எப்பவோ இருந்து எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அது எப்பவுமே எரிந்து கொண்டுதான் இருக்கும். அதை வெளியில் கொளுத்தித்தான் தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியம் கிடையாது. அங்கு சமாதி இருக்கிறது அல்லவா. அங்கிருந்து அது எப்போதும் எரிந்து கொண்டுதான் இருக்கும். நீ வரும்போது அந்த சமாதியை எட்டிப் பார்த்து கும்பிட்டு விட்டுப் போ. உனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்” என்று மிகவும் நாசுக்காகப் பதிலளித்தார்.
இது எப்படிப்பட்ட மிகவும் உன்னதமான பதில். தான் யாரென்றும் தன் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னர் எவ்வாறு இவ்வுலக மக்களுக்கு அருள் பாலிக்கப் போகிறார் என்பதனையும் எவ்வளவு நாசூக்காகக் கூறி இருக்கிறார்.
“பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே போற்றி”
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —
குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தா அய்யா அவர்கள் சமாதி நிலை அடைந்த நிகழ்வுகள் பாகம்-01