ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16 2023 (தமிழ் ஆடி 31 ஆம் தேதி)
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16 2023 புதன் கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை” எனச் சிறப்புப் பெறுகின்றது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும்போது அமாவாசை (இருள்) உண்டாகும்.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை திதிகள் வருகிறது. அதாவது தமிழ் ஆடி மாதத்தில் முதல் நாள் (ஜூலை 17) ஒரு அமாவாசையும், ஆடி 31 ஆம் தேதி (ஆகஸ்ட் 16) அன்று இரண்டாவது அமாவாசையம் வருகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் ஒரே திதி இரண்டு தடவை வரும்போது இரண்டாவது திதியே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல இவ்வருடம் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்துக்களால் தமது இறந்துபோன உறவினர்களை அனுஷ்டித்து, நினைவுகூர்ந்து, விரதமிருந்து வழிபடும் புனித நாளாக ஆடி அமாவாசை அமைகிறது. பொதுவாக இறந்து போன நம் முதியோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் நாளாக இருந்தாலும், குறிப்பாக தமது இறந்துபோன தந்தையாரை எண்ணி விரதமிருந்து வழிபடும் நாளாக ஆடி அமாவாசை அமைகிறது. (ஆடி அமாவாசை இறந்துபோன தமது தந்தையாரை நினைவுகூரும் நாளாகவும், சித்திராப் பௌர்ணமி தமது இறந்துபோன தாயாரை எண்ணி விரதமிருந்து வழிபடும் நாளாகவும் இந்துக்களால்க் கொண்டாடப் படுகிறது.)
இந்துக்கள் சந்திரனை தாயாகவும் (தாய் வழி உறவினர்கள்) சூரியனை தந்தையாகவும் (தந்தை வழி உறவினர்கள்) வழிபடுவர்.
தெரிந்தோ தெரியாமலோ நம் முன்னோர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு தினமாகவும் ஆடிஅமாவாசை வழிபாடு அமைகிறது.
ஆடிஅமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை எண்ணி விரதமிருந்து, முடிந்தால் புனித நீர் நிலைகளில் நீராடி, ஆலயம் சென்று வழிபட்டு, வீட்டில் அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகள் தயாரித்து அவர்கள் படங்கள் முன் படைத்து அவர்களை நினைவு கூர்ந்து வணங்கி விரதத்தினை முடித்துக் கொள்வர்.
அயலவர்கள் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் உணவு பகிர்ந்து உண்பர்.
இதனால் நம் முன்னோர்களை எமது சந்ததியினரும் அதாவது வீட்டில் உள்ளவர்கள் அயலவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அது மட்டுமன்றி பலருக்கு உணவு அளிக்கும் வாய்ப்பும் எமக்குக் கிடைக்கிறது.
அது மட்டுமன்றி அத்தினத்தில் காகம், குருவி, மாடுகளுக்கும் உணவு கொடுத்து அதன் புண்ணியமும் எமக்குச் சேருகின்றது.
மாதங்களில் ஆடி மாதம் இந்துக்களுக்குச் சிறப்பான மாதமாகும். ஆடி மாதத்தில் ஆடிப் பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பூரம் என பல சிறப்பான விரதங்கள் இந்துக்களால் கொண்டாடப் படுகிறது.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —