My Spiritual Experiences with Yogi Nithiyanandam Swami (ஆங்கிலப் புத்தகம்)
https://www.amazon.com/dp/B0CKSNZ386
எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளை முதன் முதல் 2019 இல் நேரில் சென்று ஆசீர்வாதம் பெற்று அவரிடமிருந்து உபதேசங்களும் பெற்றுக் கொண்டேன்.
இவரிடம் செல்லும்வரை ஆன்மீகம் என்பது என்னவென்று புரியாத புதிராகவே இருந்தது. அதாவது திக்குத் தெரியாத காட்டில் எங்கு போவது எவ்வழியால் போவது என்று திகைப்பது போல, ஆன்மீகம் என்றால் என்ன என்ற புரியாத புதிருடனேயே வாழ்ந்தேன்.
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளிடம் சென்ற போதே எனது ஆன்மீக சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. ஆன்மீகத் தேடலுக்கான வழி பிறந்தது.
“பக்தி என்பது வெளிப்புறமாக உன் ஐம்புலன்கள் மூலமாக இறைவனைத் தேடுவது, ஆன்மீகம் என்பது உனது ஆசைகளை அடக்கி ஐம்புலன்களை அடக்கி உனக்குள் இறைவனைத் தேடுவதே” என்ற குருவின் விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.
“விஞ்ஞானம் என்பது படைப்புக்களைத் தேடுவது ஆன்மீகம் என்பது அதனைப் படைத்தவனையே தேடுவது” என்று மிகவும் அழகாகப் புரிய வைத்தார்.
அதாவது உதாரணமாக, பக்தியில் குரு என்பவர் உனக்கு டிவி யில் காட்சிகளைக் காட்டுபவர் போன்றவர். ஆனால் ஆன்மீகத்தில் குரு என்பவர் நீ டிவி யில் கண்ட காட்சிகளை தானே நேரில்ச் சென்று கண்டுகளித்து அந்த உண்மையான நிகழ்வுகளை நீயும் கண்டு களிக்க வழிகாட்டுபவர்.
நான் இவரை நேரிச் சென்று ஆசீர்வாதம் பெறும்வரை இவரை ஒரு ஆன்மீகம் கற்பிக்கும் குருவாகவே எண்ணி இருந்தேன். ஆச்சிரமத்தில் மூன்று நாட்கள் நின்று இவரது உபதேசங்கள் வாழ்க்கை முறைகளை அறிந்து கொண்டபோது இவர் எனது வாழ்க்கைக்கும் குருவானார். இப்படி ஒரு மனிதனை, ஒரு ஆன்மீக வழிகாட்டியை, ஒரு அறிவாளியை, ஒரு ஞானியை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.
அங்கு சென்று வந்ததிலிருந்து எனக்குள் எனது குருவைப் பற்றி, அவரது போதனைகளைப் பற்றி, அவரது வாழ்வு முறைபற்றி ஆராய வேண்டும், அவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், அவற்றை பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று ஒரு உந்துதல் என்னுள் எழுந்தது. என்னை எழுதத் தூண்டியது. இந்தப் புத்தகம் உருவாகியது.
இது எனது குருவின் புகழ் பாடும் நூலல்ல. எனது ஆன்மீகச் சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சியே இந்தப் புத்தகமாகும்.
ஆன்மீகத்தில் முழுமையான தெளிவும் விளக்கமும் இருந்தால்த்தான் அதில் பற்றுடன் ஈடுபட்டு முழுமையாக முன்னேற முடியும்.
எமது அறியாமையைப் போக்கி எமது துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கும் நாம் பிறவிப் பிணியில் இருந்து விடுபடவும் உதவும் “ராஜ யோக” கலையை குருவிடம் இருந்து அறிந்து கொள்ளவும் அதனைப் பிறருக்கும் அறியவைக்கவும் நான் எடுத்துக் கொண்ட முயற்சியாகும்.
குரு வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே எனது அறியாமையை குருமூலமாகவே தெளிந்து கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகவே இதனை எடுத்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு புத்தகம் எழுதும் முயற்சி செய்யவுள்ளேன் என்று குருவிடம் கூறியபொழுது “உண்மையை எழுத்து”, “உண்மையாக எழுத்து”, “நீ கண்டவற்றை கேட்டவற்றை எல்லாம் எழுது”, “நேரமெடுத்து நிதானமாக எழுது”, “பிறருக்கும் பயன் தரக்கூடியவாறு எழுது” என்று அறிவுரை கூறி ஆசீர்வாதம் வழங்கினார்.
எழுதத் தொடங்கிய நாளில் இருந்துதினமும் குருவுடன் உரையாடும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது.
குரு என்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொள்வார். ஒரு பூச் செடியில் பல பூக்கள் பூத்திருக்கும். ஆனால் நாம் சிலவற்றினை மட்டுமே பறித்துக் கொள்கிறோம். அதுபோல குருவின் உரையாடல்களில் இருந்து சிலவற்றினை மட்டுமே எடுத்து தொகுத்து இங்கு எழுதியுள்ளேன்.
நறுமணம் வீசும் பல வண்ண மலர்களை நாரில் கோர்த்து பூமாலையாக்குவது போல, குருவின் வாழ்க்கை முறைகளையும் ஆன்மீகப் போதனைகளையும் பூக்கள் போல சேகரித்து குரு என்னும் நார் கொண்டு பூமாலை யாக்கியுள்ளேன். கோர்க்கும் போதுதான் தெரிந்தது குருவே எனக்கு நுட்பமாகக் கோர்க்கும் முறையினையும் சொல்லிக் கொடுத்தாரென்பது.
விதி என்னை மழைக்குக்கூட பாடசாலைப் பக்கம் ஒதுங்க விடவில்லை என்று கூறும் குரு, இக்கட்டுரை எழுதும்போது எனக்குக் கொடுத்த ஆக்கமும், ஊக்கமும், அறிவுரைகளும் எனக்கு அவரை ஒரு தலை சிறந்த கல்விமானாக, பண்பாளனாக உணர்த்தியது.
எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளை மூன்று முறை நேரில் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒவ்வொரு முறையும் அவரது ஆச்சிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்து அவருடன் அருகில் இருந்து அவரது ஆன்மீக விளக்கங்கள் ஆன்மீக அறிவுரைகளையும் ஆச்சிரம நடை முறைகளையும் அறியும் சந்தர்ப்பம் கிட்டியது.
அங்கு நின்ற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் என்னால் நிறையவே வாழ்க்கைக்குத் தேவையான பாடங் களையும், ஆன்மீகத்துக்குத் தேவையான பாடங்களையும் கற்கக் கூடியதாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் ஆன்மீகம் தேடி அங்கு வந்து கொண்டிருக்கும் பல மனிதர்களைக் கண்டுகொள்ளும், அவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பமும் எனக்குக் கிட்டியது. அவர்களில் நோயாளர்கள், அங்கவீன மானவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்து துன்பப் படுபவர்கள், பருவத்தில் திருமணம் ஆகாதவர்கள், பிள்ளைப் பாக்கியம் இல்லாதவர்கள், பராமரிப்பற்ற முதியோர் உட்பட எந்தக் குறையும் இல்லாமல் ஞானம் தேடி வந்தவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களையும் காணக் கூடியதாக இருந்தது.
நன்றாக வாழ்ந்து ஒருநாளில் ஆண்டியானவர்கள். நன்றாக குடும்பமாக வாழ்ந்து விபத்தில், இயற்கை அழிவினால் ஒருநாளில் குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்து அனாதை ஆனவர்கள், அங்கங்களை இழந்தவர்கள் எனப் பலருடைய கதைகளையும் கேட்டு அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
அனைவருமே தமது துன்பத்துக்கு ஒரு தீர்வு! ஒரு விடிவு! தேடிக் கொண்டிக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.
அனைவருக்கும் குருவின் அறிவுரை “நீ முற்பிறப்பில்ச் செய்த பாவங்களையே இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். தொடர்ந்து பாவங்கள் செய்யாதிரு. தான, தருமங்கள் செய்து நீ செய்த பாவங்களை அழித்துக் கொள். ஞான மார்க்கத்தில் சென்று பிறவிப்பிணியைத் தீர்த்து முக்தி அடைந்து கொள்” என்ற ஆணித்தனமான அறிவுரையே.
தன்னம்பிக்கை குறையும் போது தெய்வ நம்பிக்கை வலுப்பெறும். தெய்வ நம்பிக்கையும் கை கொடுக்காத போது எழும் ஏக்கத்துக்கு உரிய தீர்வே ஆன்மீகமாகும்.
அந்த ஆச்சிரமம் ஒரு திறந்தவெளிக் கல்விக்கூடம். ஆன்மீகம் தேடும் யார் வேண்டுமானாலும் அங்கு வந்து குருவிடம் இலவசமாக ஆசீர்வாதமும் பெற்று தமது அறியாமையையும் போக்கிச் செல்லலாம். அங்கு உணவு கூட இலவசமாகவே வழங்கப்படுகிறது. சாதி, இனம், மதம், ஆண், பெண், பணக்காரன், ஏழை போன்ற எந்த விதமான கெடுபிடிகளோ அன்றிக் கட்டுப்பாடுகளோ அங்கு இல்லை.
அங்கு உள்ள கட்டுப்பாடுகள் ஒழுக்கம், புனிதம், தூய்மை, உண்மை, குருபக்தி ஆகியவையே.
மகான்கள், சித்தர்களை நாம் நேரில்ச் சென்று வணங்கி, ஆசி பெறும்போது எம்மையும் அறியாமலேயே எமக்குள் மாற்றங்கள் நிகழும் என்பதுவே எனது கருத்து.
நாம் எப்படி ஒரு சிறந்த குருவைக் கண்டு கொள்வது என்ற ஒரு கேள்வி, ஒரு எண்ணம், ஒரு நிலைப்பாடு ஆன்மீகம் தேடுபவர்கள் சிந்தையில் எப்போதும் உண்டு.
அது அவர் அவர் மனநிலையில், அவர் அவர் எண்ணத்தில், அவர் அவர் அறிவில்த் தங்கியுள்ளது என்பது எனது கருத்தாகும்.
நாம் ஒரு குருவிடம் இருந்து எதனை எதிர் பார்க்கிறோமோ அது அவரிடம் இருந்து எமக்குக் கிடைக்கும் போது அவர் எமக்குக் குருவாகிறார்.
சிலர் தாம் அனுபவிக்கும் நோய், துன்பம், வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தம்மால்த் தீர்க்க வழிதெரியாத போது, அதனை ஒரு சாமியார், அல்லது ஒரு ஆன்மீகவாதியால் தீர்க்க முடியுமா என்று எண்ணியவாறு ஒருவரிடம் செல்லும் போது, அவர் செய்யும் யாகங்கள், பூசைகள் அல்லது அவர் கொடுக்கும் தாயத்துக்கள் போன்றவற்றால் ஒருவேளை அவர்களது பிரச்சினைகள் தீரும்போது அவர் அவர்களுக்கு குருவாகிறார்.
அதாவது ஒருவருக்குப் பிரச்சினைகள் வரும்போது அவரால்த் தீர்க்க முடியாத போது அவர் ஒரு சாமியாரையோ அல்லது ஒரு மந்திரவாதியையோ அல்லது ஒரு ஆன்மீகவாதியையோ தேடி நம்பிச் செல்கிறார்கள். அப்போது ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் பிரச்சினைகள் நிறைவேறியதாக நம்பும் போது அவர் அவர்களுக்குக் குருவாகிறார். ஆனால் நீண்ட காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் நம்பிய அந்த குருவிடம் இருந்து நிறைவேறாத போது தாம் ஏமாந்து விட்டதாக எண்ணுகிறார்கள். அவர்கள் குருவை மாற்றுகிறார்கள்.
எமது இப் பிறப்புக்கும் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் காரணம் நாம் முற்பிறப்பில்ச் செய்த பாவ புண்ணியங்களே என்பதனை யாரும் உணர்ந்து கொள்வதில்லை. யாரோ ஒரு குரு மூலமாக நாம் அனுபவிக்கும் துன்பங்களை எமது நோய்களைத் தீர்த்து விடலாம் என்று எண்ணுகின்றோம். இந்த மனிதர்களின் மனநிலையை, அவர்களது பலவீனத்தினை சிலர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சில காலத்தில் உண்மை தெரியவர நாம் அடுத்த குருவை நாடிச் செல்கிறோம்.
ஆன்மீகத் தேடலில் குரு என்பவர் ஒரு வழிகாட்டியே. அவர் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ப்பதற்குரிய வழியைக் கூறுவார். அவர் நோயைத் தீர்க்க மாட்டார். நோயைத் தீர்ப்பதற்குரிய வழியைக் காட்டுவார். அவர் கடவுளைக் காட்டுவதில்லை. கடவுளை அறியும் வழியைக் காட்டுவார். அவர் முக்தி கொடுப்பதில்லை. முக்தி அடையும் வழியைக் காட்டுவார்.
அதாவது புத்தகங்களை படிப்பதால் அறிவு கூடும் ஆனால் ஞானத்தை அடைய முடியாது. யோகப் பயிற்சிகளை நாம் ஒரு குரு மூலமாக முறைப்படி கற்று பயிற்சிகளை செய்து வரும்போனதே எமக்கு ஞானம் கிட்டும் என்பதே எப்போதும் எமது குருவின் அறிவுரையாகும்.
குதிரைக்குத் தண்ணீரைக் காட்டலாம் ஆனால் குதிரைதான் குடித்து தனது தாகத்தினைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல எமது குரு எமக்குக் கொடுக்கும் உபதேசங்களை நாம் முறைப்படி பின்பற்றும் போதுதான் எமக்கு அது பயன்தரும்.
“எமக்குத் தெரியாதனவெல்லாம் இல்லை என்று அர்த்தமல்ல”.
குரு தனது சொற்பொழிவுகளை தமிழ் மொழியிலேயே வழங்குவார். அதானால் அவரது கருத்துக்கள் தமிழ் தெரியாதவர்களினால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது. அதனால் தமிழில் எழுதிய எனது புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக்கொண்டார். குருவின் வேண்டுதலுக்கு இணங்கவே மொழிபெயர்க்கும் வேலைகளை ஆரம்பித்தேன். மொழிபெயர்க்கும் வேலைகள் நடைபெறும் போது குரு சமாதி நிலை அடைந்துவிட்டார்.
அதிலும் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியமான நிகழ்வையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் எழுதிய முதலாவது தமிழ் புத்தகத்தில் குறிப்பிட்ட “எமது குருவின் சமாதி திறப்புவிழா நிகழ்வுகளின்” பகுதியை மொழிபெயர்த்து எழுதி முடித்து பேனாவை மூடும்போது, அந்த நிமிடமே எமது குரு சமாதி நிலை அடைந்தார் என்ற செய்தி எனது காதுகளுக்கு எட்டியது. கவலையும் ஆச்சரியமும் கலந்த உணர்வாக எனக்கு இருந்தது. இன்றும் என்னால் மறக்க முடியாமலுள்ளது.
Chapter 1: “முதன்முறை குரு தரிசனம் 2019”: நான் முதன் முறை 2019 இல் சென்று வந்து எனது முதல் பயண அனுபவங்களை எழுதியுள்ளேன்.
Chapter 2: “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகளின் வாழ்கை வரலாறு”
இரண்டாம் பகுதியில் குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை என்னால் முடிந்தவரை குருவுடனும் மற்றும் பலருடன் உரையாடி அறிந்து கொண்ட வரலாற்றினை எழுதியுள்ளேன். எழுதும் போது பலதடவைகள் அவரது சிறுவயது வாழ்க்கை முறைகளை அறியும்போது கண் கலங்கியிருக்கிறேன்.
குரு அவர்கள் தனது பத்தொன்பதாவது வயதில் முதலாவது குருவிடமிருந்து “ராஜ யோக உபதேசம்” பெற்றுக் கொண்டார் என்று கூறியிருந்தாலும் அவரது சிறுவயது வாழ்க்கை முறைகளையும் சிறு வயதில் இருந்து அவரிடமிருந்த அபரிமிதமான திறமைகளையும் நான் அறியும் போது அவருக்கு ஞானம் ஏற்கனவே கிடைத்து விட்டதாகவே எண்ணுகின்றேன். ஞானம் கிடைப்பதற்கும் ஒரு விதி வேண்டும் என்பது என் கருத்தாகும்.
Chapter 3: இங்கே “மீண்டும் ஒருமுறை குரு தரிசனம் 2022”: மீண்டும் 2022 இல் சென்றிருந்த போது ஆச்சிரமத்தில் நான் நின்றிருந்த ஒன்பது நாட்களிலும் நான் அங்கு கண்ட, கேட்ட, சம்பவங்களையும் ஆச்சிரமத்தின் அன்றாட நடைமுறைகளையும் தொகுத்து எழுதியுள்ளேன்.
நான் அறிந்து கொண்ட ஆச்சிரம நிகழ்வுகள், குருவின் சிந்தனைகள் பகிரப்படும் போது அது பலருக்கும் பல வழிகளிலும் பயனளிக்க வேண்டும், அவர்களது ஆன்மீகச் சிந்தனைகளைத் தூண்ட வேண்டும். குருவின் ஆன்மீகச் சிந்தனைகள், கருத்துக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.
Chapter 4: இங்கே “மீண்டும் ஒருமுறை குரு தரிசனம் 2023”: எனது மூன்றாவது பயண அனுபவங்களை எழுதியுள்ளேன். குரு உடல்நலம் குன்றி இருப்பதாக அறிந்து கவலை கொண்டு அவரைத் தரிசிப்பதற்காக இம்முறை சென்றிருந்தேன். நான் குருவை இறுதியாகத் தரிசித்ததும் இம்முறையே.
“குரு சமாதி நிலை”, குரு சமாதி நிலை அடைந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளை இங்கு தொகுத்து எழுதியுள்ளேன்.
Chapter 6: இப்பகுதியில் குருவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளையும் அவர் அளித்த பதில்களையும் அத்துடன் குரு கூறிய சில ஆன்மீக விளக்கங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
Chapter 7: ஏழாவது பகுதியில் குருவின் சில சீடர்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொருவருடனும் கலந்துரையாடும் போது எனக்கு அவர்களது அனுபவங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.
இக் கட்டுரையினை எழுத தமது அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட எனது குருவிற்கும், குருவின் மகன்களான அன்பின் பிரம்மஸ்ரீ தியாகு ஐயா மற்றும் பிரம்மஸ்ரீ ஜீவா ஐயா அவர்களுக்கும், பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்களுக்கும், ஏனைய சீடர்களுக்கும் எனது தாழ்மையான நன்றிகள்.
“யோகி நித்தியானந்தம் சுவாமியுடன் எனது ஆன்மீக அனுபவங்கள்” என்ற பெயரில் கோர்த்த இந்தப் பூமாலையை குருவின் காலடிகளில் சமர்ப்பிக்கின்றேன்.
அன்பே சிவம்
கு சிவகுமாரன்