காத்திருந்த கண்கள் (சிறுகதை)
வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம் சந்தியா. அரிச்சனைத் தட்டத்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த சந்தியாவின் சேலைத் தலைப்பில் சிறிதாக பிடித்து இழுத்தான் முகுந்தன்.
ஆக்கள் பாம்பினம் வாங்கோ வீட்டை போவம். என்றாள் சந்தியா சிறிது நாணத்துடன்.
எல்லோரும் பார்கத்தான்னே எங்கள் கல்யாணம் நடந்தது. இனி என்ன வெட்டகம் வா கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவம் என்றான் முகுந்தன்.
சரி வாங்கோ என்று சம்மதித்தாள் சந்தியா.
இருவரும் அந்த பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள வேப்ப மரத்து நிழலில் அமர்ந்து கொண்டார்கள்.
அவர்களது திருமணம் பத்து நாட்களுக்கு முன்னதாகத்தான் நடைபெற்றது. அன்று வெள்ளிக் கிழமையாதலால் மத்திய பூசை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
இருந்துகொள் சந்தியா கடலைக்கொட்டை வாங்கிக்கொண்டு வாறன் என்று போய் கடலைக்கொட்டை வாங்கிவந்து சந்தியா அருகில் அமர்ந்தான் முகுந்தன்.
இந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் இந்த வேப்பமரத்துக்குக் கீழே அதுவும் எனது சந்தியாவுடன் இருந்து கடலை சாப்பிடுவேன் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை சந்தியா என்று புன்னகைத்தவாறு கூறினான் முகுந்தன்.
ஆனால் நான் நினைத்திருந்தேன் எனக்குத் திருமணமாக இருந்தால் அது உங்களுடன்தான் இல்லை யென்றால் அப்படியே கலியாணம் முடிக்காமல் இருந்துவிடுவது என்று. அதுமட்டுமல்ல நான் உங்கள் மேல் வைத்த அன்பிலும் நீங்கள் என்மேல் வைத்த அன்பிலும் எனக்கு, நாங்கள் எப்படியும் சேருவோம் என்ற முழு நம்பிக்கை இருந்தது என்றாள் சந்தியா.
சந்தியா ஏழு, எட்டு வருசத்துக்கு முன்னர் எனது பள்ளிக்கூட நேரம் போக மிகுதி நேரமெல்லாம் இந்தக்கோயில் வீதியில்த்தானே கழிந்தது என்றான் முகுந்தன்.
எனக்குத் தெரியாதா நான் உங்களைக் காதலிக்கத் தொடங்கிய நாளில் இருந்து உங்கடை ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறன் என்றாள் சந்தியா.
அப்படியா உனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்லு பார்ப்பம் என்றான் முகுந்தன்.
உங்களுக்கு நல்ல பக்தியும் இருக்கு. கோவிலுக்கு நிறைய தொண்டு செய்வீர்கள். கோயில் சுத்தம் பண்ணுவது, சாமி காவுறது, தீவெட்டி பிடிக்கிறது எல்லாம் எனக்குத் தெரியும். அதனாலதான் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறீங்கள் என்றாள் சந்தியா.
உண்மைதான் சந்தியா எனக்கு என் வீட்டாருக்கு கடவுள் மேல நல்ல நம்பிக்கை உள்ளது. ஆனால் நான் கோவிலில் தொண்டு செய்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்பது உனக்குத் தெரியுமா? இந்தக் கோயில் பிரசாதம் தான் எங்கள் வீட்டுக்கு பொதுவாக உணவு. கோயில் பிரசாதம் இல்லாமல் வீட்டில் நாம் எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். உன்போன்ற வசதி படைத்தவர்கள் அடிக்கும் சிதறு தேங்காய்தான் எங்கள் வீட்டுச் சமையல்த் தேங்காய். அதுமட்டுமா எங்கள் வீட்டுக் குப்பி விளக்கில் படிக்க முடியாமல்த்தான் இரவு வேளைகளில் றோட்டு லைட் வெளிச்சத்தில் இருந்து படித்திருக்கிறேன். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்குமா சந்தியா.
சிறிது மௌனத்தின்பின் சந்தியா தொடர்ந்தாள்.
உங்களை நான் பார்க்கத் தொடங்கிய நாளில் இருந்து உங்கடை வாழ்க்கைமுறை எனக்கு ஓரளவு தெரியும். உங்கள் சிநேகிதர்கள் மூலமாகவும் அறிந்திருக்கிறேன். ஏன் நீங்கள் பட்டினி இருக்க நான் சாப்பிட விருப்பமில்லாமல்த் தானே ஊரிலுள்ள விரதமெல்லாம் பிடிக்கத் தொடங்கினேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்குமா? என்றாள் சந்தியா.
முகுந்தன் சிறிது திகைப்புற்றவனாக, உண்மைதான் சந்தியா நீ என்மீது வைத்துள்ள அன்பிற்கு, பாசத்துக்கு, காதலுக்கு எல்லை ஏது? அது எனக்கு அப்பவும் நன்றாகத் தெரியும் இப்பவும் நன்றாகத் தெரியும் சந்தியா, என்றவன் சிறிது கனத்த குரலில் அப்போ பக்தியோடு விரதம் பிடிக்கவில்லை எனக்காகத்தான் விரதம் பிடித்திருக்கிறாய் அப்படித்தானே என்றான்.
உங்களுக்குப் பகிடியாக இருக்கு என்ன? எனக்கு பக்தியும் இருக்கு உங்கள்மேல் அன்பும் இருக்கு பக்தியை உங்களுக்காக ஏன் எங்களுக்காகப் பாவித்தேன் அவ்வளவுதான் என்றாள் சந்தியா.
அன்றும் இன்றும் உன் துடிப்பான பேச்சுக்கு குறைவே இல்லை சந்தியா என்றான் முகுந்தன்.
சந்தியா கொஞ்சம் இருந்துகொள் இந்த கோயில் கிணத்தில கொஞ்சம் தண்ணி அள்ளிக் குடிச்சிட்டு வாறன்.
போய்க் குடிச்சிட்டு வாங்கோ நான் இருக்கிறன் என்றவள் அவனையே பார்த்த வண்ணமாக இருந்தாள். அதே நடை. உடம்பு சற்று பருத்திருந்தது. தோல் நல்ல மினுமினுப்பாக இருக்கிறது. என்ன அழகான தலைவெட்டு. அவள் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் கோயில்க் கிணத்தை நோங்கிப் போய்க்கொண்டிருந்தான்.
அவளது கற்பனையும் பின்னோக்கி நகரத் தொடங்கியது.
ஆம் அது 1985 ஆம் ஆண்டு தை மாதம். உயர்தர வகுப்புகள் அதாவது பதினோராம் வகுப்பு ஆரம்பமாகியது. அது ஒரு கலவன் பாடசாலை. அத்துடன் அவ் அயலிலுள்ள பல கிராமங்களுக்கும் பொதுவாக அங்குதான் உயர்தர வகுப்புகள் உள்ள பாடசாலை என்பதால் அயலில் உள்ள ஊர்களில் இருந்தும் பல புதிய மாணவர்கள் வந்திருந்தனர். அவ்வகுப்பில் சந்தியா உட்பட பல மாணவர்கள் முதலாம் தரத்தில் இருந்தே அப்பாடசாலையில் கற்று வருவதால் அவர்களுக்கு சிறிது தலைக்கனமும் இருந்தது. புதிய மாணவர்களை கிண்டலடிப்பதிலும் பட்டப் பெயர் வைப்பதிலும் ஈடுபட்டனர்.
அந்த உயர்தர வகுப்புக்கு முகுந்தனும் புதிதாக அயல் கிராமத்திலிருந்து வந்திருந்தான். அவனது தோற்றம் எல்லோருக்கும் மிகக் கேலியாகவே இருந்தது. நன்றாக மெலிந்த ஓல்லியான தேகம். கட்டையாக வெட்டப்பட்ட தலைமயிர். நன்றாகக் கசங்கிய உடை. ஆனால் அந்த வகுப்பிலேயே அவன்தான் மிகவும் உயரமானவனாக இருந்தான். அத்துடன் கருமையான கத்தை கத்தையாக இமைகள், ஒளிவீசும் கண்களுடன் மிகவும் வெட்க்கப்படும் சுபாவமுள்ளவனாகக் காணப்பட்டான்.
அந்த வகுப்பிலேயே மிகவும் துடிநாட்டமுள்ளவள் சந்தியா. அலைபோன்ற நீளமான கூந்தல். அழகான முகவெட்டு. கேட்டவுடன் யாரையும் மயங்க வைக்கும் குரல். எப்பொழுதும் பளிச்சென்றிருக்கும் அவளது உடுப்பு. படிப்பிலே திறமை என்று எல்லாமே அவள் மிகவும் துடுப்பானவளாக இருக்க உதவின. அதுமட்டுமல்ல அவளது பணமும்தான் காரணம். அவளது தகப்பன் ஊரிலேயே பெரிய தோட்டக்காரன். புகையிலை வியாபாரி. அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என ஐந்துபேர் கொண்ட குடும்பத்திலே அவள் நடுப்பிள்ளை. இதுவெல்லாம் போதாதா அவள் துடுப்பானவளாக இருக்க. தான் பணக்காரி என்ற தலைக்கனமும் அவளிடம் சிறிது இருந்தது.
முகுந்தன் வகுப்புக்கு முதன் முதல் வந்த அன்றே அவனுக்கு நாரை என்று பட்டம் சூட்டிவிட்டாள். ஒரு வாரத்தில் முகுந்தன் என்ற பெயர் மறைந்து நாரை என்றே எல்லோரும் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
முகுந்தன் இதையெல்லாம் சட்டை செய்பவன் போலத் தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டான். யாரவது அவனைக் கிண்டலடித்தால் வெட்கப்பட்டுத் தலை குனிந்துவிடுவான். சந்தியாவோ தனது நெருங்கிய தோளிகள் சகிதம் பெண்கள் பகுதியில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருப்பாள். அடிக்கடி பகிடிகள் கூறிக் கொண்டும் இருப்பாள். அவளுடைய கிண்டலுக்குப் பயந்தே பலர் வகுப்பிலே ஒழுங்காக இருப்பார்கள். இப்படியாக நாட்கள் கிழமைகளாகி ஒரு மாதமும் ஆகிவிட்டது.
அன்று ஞானம் வாத்தியார் இரசாயனப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரின் பாடம் என்றால் எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். நன்றாகப் படிப்பிப்பார். யாரவது ஏதாவது பகிடிகள் விட்டால் அவரும் சேர்ந்து கொள்வார். அதனால் எல்லோருக்கும் ஞானம் வாத்தியாரைப் பிடித்தது. அவரின் இரசாயனப் பாடமும் பிடித்தது.
அவர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது முகுந்தன் சற்றுக் கண்ணயர்ந்து விட்டான். அதனைச் சந்தியா கண்டுவிட்டாள். உடனே “என்ன நாரை ராத்திரி second show படம்போல” என்றாள். வகுப்பே அதிரும்படியாக எல்லோரும் சிரித்துவிட்டனர்.
திடுக்கிட்டு எழுந்த முகுந்தனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சட்டென்று திரும்பியவன் சந்தியாவை ஒரு முறைப்பு முறைத்தான்.
வழமைபோல குனிந்து கொண்டு இருந்து விடுவான் என்று எதிர்பார்த்த சந்தியாவுக்கு அவன் எல்லோர் முன்னிலையிலும் தன்னைப் பார்த்து முறைத்தது மிகவும் அவமானமாகப் போய்விட்டதாக எண்ணினாள். அவனுக்கு எப்படியும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்றும் (பழி தீர்க்கவேண்டு மென்றும்) எண்ணிக் கொண்டாள்.
இரு மாதங்களில் வகுப்பில் பரீட்சைகள் நடைபெற்றது. வகுப்பில் பௌதீகப் பாடம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் முகுந்தனே அதிக புள்ளிகள் எடுத்திருந்தான்.
சந்தியா உடட்பட அனைவருக்கும் அவன் ஒரு புதிராகவே காணப் பட்டான். அவன் பாடசாலைக்கு ஒரு பழைய துவிச்சக்கர வண்டியில்த்தான் வருவான். எப்போதும் அவனது வண்டியில் ஒரு ஓலைப்பை தொங்கும். சிலர் அதனையும் கிண்டலடிப்பார்கள். அவன் எதனையும் பொருட்படுத்துவதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுவான். யார் எது கேட்டாலும் உடனே உதவி செய்வான். பாடங்கள் புரியாவிட்டால் அவர்களுக்கு புரியும்படி விளங்கப் படுத்துவான்.
மதிய போசன இடைவேளையின் போது வழமையாக எல்லோரும் வகுப்பறையில்த் தான் இருந்து உணவருந்துவார்கள். முகுந்தன் மட்டும் வெளியே போய்விடுவான். அன்றொருநாள் அப்படித்தான் மதியபோசன இடைவேளையின்போது எல்லா மாணவர்களும் வகுப்பில் இருந்து உணவருந்திவிட்டு வெளியே சென்றுவிட்டனர். சந்தியாவும் அவளது ஒருசில தோளிகளும் வகுப்பிலிருந்தனர். சந்தியாவுக்கு ஒரு குறும்பான எண்ணம் தோன்றியது. முகுந்தனுடன் சிறிது உரசிக்கொள்ள விரும்பினாள். வகுப்பில் யாரும் இல்லாததால் முகுந்தன் அமரும் கதிரையில் சாயும் பகுதியில் தனது மை பேனாவிலிருந்த மையைத் தெளித்துவிட்டு தோழிகளுடன் வெளியே சென்றுவிட்டாள்.
மணி அடித்தது எல்லா மாணவர்களும் வகுப்பறைக்குத் திரும்பினர். சந்தியா தோழிகளுடன் சற்றுத் தாமதமாகவே வந்தாள். முகுந்தனைக் கடைக் கண்ணால் நோட்டமிட்டாள். அவன் தனது கதிரையில் நன்றாகச் சாய்ந்திருந்தவாறு எதையோ வாசித்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பாடசாலையில் ஆண்கள் நீலக் காற்சட்டையும் வெள்ளைச் shirt உம் அணியவேண்டும். பெண்கள் வெள்ளை நிறத்தில் சட்டை அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது, இதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரியாக உடை அணிவார்கள் பார்க்க அழகாக இருக்கும். மாணவர்களை தனியாக அடையாளம் கண்டு கொள்ளவும் உதவியாகவும் இருக்கும். முக்கியமாக ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரியான உடையையே அணிவார்கள் என்ற காரணங்களாக இருந்தன.
முகுந்தனின் பின்னால் இருந்த மாணவர்கள் அவனது shirt இல் மை பிரண்டிருப்பதைக் கண்டு அருகிலிருந்தவர்களுக்கும் காட்டிச் சிரித்தார்கள். மாணவப் பருவம் எல்லாமே கேலியாகத்தானே இருக்கும். என்பதற்கு அமைய எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரித்தனர். முகுந்தனுக்கு அருகில் இருந்த மாணவன் அவனது shirt இல் மை பிரண்டிருப்பதை சுட்டிக் காட்டினான். தனது shirt இல் மை பிரண்டிருப்பதைக் கண்ட முகுந்தன் மிகவும் துயருற்றவன் போலக் காணப்பட்டான். அடிக்கடி தனது shirt இல் பிரண்டிருந்த மையைப் பார்த்துக் கொண்டான்.
யாராலும் தனது செய்கையைக் கண்டுபிடிக்க முடியாமல்ப் போய்விட்டதால் சந்தியாவுக்கு தனக்குள் மிகவும் பெருமையாக இருந்தது. தனது நெருங்கிய தோழிகளுடன் தனது செய்கைக்காகப் பெருமைப்பட்டுக் கொண்டாள். பாடசாலை இறுதி மணி அடித்தது. அன்றய வகுப்புகளும் முடிவடைந்தது.
அடுத்தநாள் முகுந்தனின் shirt ஐக் கவனித்தாள். தோய்த்திருந்தது போலத் தெரிந்தது. இருந்தும் அந்த மை கறை அப்படியே பளிச் சென்றிருந்தது.
தொடர்ந்து மூன்று நாட்கள் முகுந்தனின் shirt ஐக் கவனித்தாள். அதே shirt அதே மை கறை தெரிந்து கொண்டே இருந்தது.
அன்று ஒரு மதிய இடைவேளை. எல்லோரும் உணவருந்திவிட்டு வெளியே சென்று விட்டனர். சந்தியா தனது தோளிகளுடன் வகுப்பில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தாள். வளமை போல மதிய இடைவேளைக்கு வெளியே சென்ற முகுந்தன் சற்று முன்னதாக வகுப்புக்குத் திரும்பினான். சந்தியாவையும் அவளது தோளிகளையும் பார்த்து சிறிது புன்னகைத்து விட்டு தனது ஆசனத்தில் அமர்ந்து தனது அன்றைய வீட்டுவேலைகளை செய்யத் தொடங்கினான்.
சந்தியாவுக்கு மீண்டும் அவனைச் சீண்டவேண்டும் போல இருந்தது. அவனுக்குக் கேட்க்கக் கூடியவாறு தனது தோளிகளுக்குக் கூறினாள் “என்ன நாரை shart ஐ மாத்திப் போடாமல் அதே மை பிரண்ட shirt ஓடையே திரியுது.”
உடனே அவளைத் திரும்பிப் பார்த்த முகுந்தன் மீண்டும் திரும்பி தன் தலையைக் குனிந்து கொண்டான். மீண்டும் ஏதோ எண்ணியவன் போல மெதுவாக எழுந்து சந்தியாவின் முன் வந்து நின்றான்.
தன்னுடன் சண்டையிடப் போகிறான் என்று எண்ணிய சந்தியா சற்றுத் திகைப்புடன் அவனைப் பார்த்து “என்ன?” என்றாள்.
சந்தியா என்னிடம் மாத்திப்போட வேற shirt இல்லை என்பது உங்களைப் போன்ற பணக்காரர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதுதான் என் நிலைமை. எனக்கு scholarship காசு வாறபடியால்த்தான் நானும் படிப்பை விடாமல் தொடருறன். நீங்கள் ஊதி விட்டாலே நான் விழுந்து விடுவன் உடலால் மட்டுமல்ல பணத்தாலும் தான். என்னைத் தயவு செய்து படிக்க விடுகிறீங்களா சந்தியா. நான் படிக்க வேண்டும் என்ற என் அப்பா அம்மாவின் ஆசையையும் நான் நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஏற்கனவே குடும்பக் கஷ்டங்களுக்கு, ஏழ்மைக்கு மத்தியில் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னைத் தொடர்ந்து படிக்க விடுகிறீங்களா? என்று கூறிவிட்டுத் தன் தலையைச் சற்றுக் குனிந்தவாறு தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.
சந்தியா தன் இதயத்தில் ஓங்கி அடித்தது போல உணர்ந்தாள். வாழ்க்கையில் தான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக எண்ணிக் கொண்டாள். தான் ஒரு பணக்காரியாக இருப்பதை எப்போதும் பெருமையாக எண்ணிக் கொண்டவள் முதல்த் தடவையாக தான் ஒரு பணக்காரியாக இருப்பதை எண்ணி வெட்கபட்டுக் கொண்டாள். அப்படியே சிலைபோலத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவளது தோழிகளும் மௌனமானார்கள்.
மணி அடித்து வகுப்புகள் ஆரம்பமாகியது. அன்றைய மிகுதிப் பொழுதை மௌனமாகவே கழித்தாள் சந்தியா. அன்றில் இருந்து சந்தியாவின் போக்கில் சில மாற்றங்கள் காணப்பட்டது. ஏனைய மாணவர்களைக் கிண்ணடல் அடிப்பது பகிடி விடுவது மாணவர்களிடையே பொதுவானது. ஆனால் அன்றிலிருந்து சந்தியா யாரையும் கிண்டலடிப்பதையும் நிறுத்திக் கொண்டாள். அதுமட்டுமல்ல யாரவது முகுந்தனைக் கிண்டலடிக்கும் வேளைகளிலும் வேறு ஏதாவது கூறி அனைவரது கவனத்தையும் முகுந்தனைப் பாதிக்காதவாறு திசை திருப்பி விடுவாள். அவளது மனதில் முகுந்தனுக்கு சிறிது மரியாதையை ஏற்ப்படுத்தி யிருந்தாள்.
அன்றொருநாள் ஊத்தை வாத்தியார், முருகையா வாத்தியாருக்கு சந்தியா வைத்த பட்டப் பெயர் “ஊத்தை வாத்தியார்”. கணிதப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கு பாடத்தில் சலிப்பு ஏற்படாதவாறு இடைக்கிடை ஏதாவது கதை கூறுவது ஊத்தை வாத்தியாரின் பழக்கம். அன்றும் அப்படித்தான் தான் படித்த பேராதனைப் பல்கலைக்கழகம் பற்றியும் அங்கு தான் போகும் பூங்கா பற்றியும் கூறினார். யாரவது அந்த பேராதனைப் பூங்காவிற்குப் போயிருக்கிறீர்களா? என்றும் கேட்டார்.
முகுந்தன் கையைத் தூக்கினான் எல்லோரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
என்ன பேராதனைப் பல்கலைக் கழகத்தில்ப் படித்துவிட்டுத் தான் இங்கு படிக்க வந்திருக்கிறாயா. என்று ஒரு மாணவன் கிண்டலும் அடித்தான்
இந்த வகுப்பிலேயே நீ மட்டும் தான் அங்கு போய் வந்திருக்கிறாய் எப்போது போனாய்? என்று வினவினார் ஆசிரியர்.
அப்பா கேகாலையில் கடை வைத்திருந்தார். அப்ப எங்களை ஒவ்வொரு விடுதலைக்கும் அங்கு கூட்டிக் கொண்டு போவார் என்றான் முகுந்தன்.
இப்பவும் கடை இருக்கிறதா? என்றார் முருகையா வாத்தியார்.
இல்லை 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது எமது கடையையும் எரிச்சுப் போட்டாங்கள். நாம் கடவுளருளால் உடுத்த உடுப்புக்களுடன் அகதிகளாக இங்கு தப்பி வந்துவிட்டோம் என்றான் முகுந்தன்.
இப்போது அப்பா என்ன செய்கிறார்? என்றார் ஆசிரியர்.
யாழ்ப்பாணத்தில் ஒரு துணிக் கடையில் வேலை செய்கிறார். என்றான் முகுந்தன்.
கதை கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் முகுந்தன் மேல்ப் பரிதாபப் பட்டனர்.
நல்ல காலமாக பாடசாலை மணியோசை எல்லோரது கவனத்தையும் திசை திருப்பியது.
ஊத்தை வாத்தியார் சிறிது சோகத்துடன் “உனக்கு என்ன உதவி வேண்டு மென்றாலும் என்னிடம் கேள் நான் முடிந்தளவுக்கு உதவி செய்கிறேன் என்று “மிகவும் உறுதிபடக் கூறிவிட்டு வகுப்பை முடித்தார்.
அன்றிலிருந்து சக மாணவர்கள் எல்லோரும் அவன்மீது அன்பும் ஆதரவும் காட்டத் தொடங்கினர்.
சந்தியா மனதுக்குள் அவனுக்குத், தான் எப்படியும் உதவிகள் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அவளின் வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்படத் தொடங்கியது. அவளது எண்ணமெல்லாம் முகுந்தனையே வட்டமிடத் தொடங்கியது.
அப்படியான நாட்களில்த்தான் ஒருநாள் சந்தியாவின் தாயார் வீட்டில் கதைத்தார் “நான் நேற்று வைரவரடியில் கும்பிடும்போது தோப்படியில் இருக்கும் ஒரு மனிசி பால் இருக்கு வேணுமோ? என்று கேட்டது. விரதங்களும் தொடங்கிற படியாலை நாளை காலையில் இருந்து ஒவ்வொரு போத்தில் கொண்டு வந்து தரச்சொன்னனான்.” என்று கூறினார்.
அடுத்தநாள் காலை சந்தியா பாடசாலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருந்தாள். படலையில் சைக்கில் மணி கேட்டது.
சந்தியாவின் தாயார் குசினிக்குள் இருந்து குரல் கொடுத்தார். “சந்தியா பால் கொண்டு வந்திட்டினம் போல தெரியுது. ஒருக்கால் வாங்கிக் கொண்டு வா. அதோடை நாளையில் இருந்து கொஞ்சம் வேளைக்கு வரச்சொல்லு.” என்று குரல் கொடுத்தார்.
அக்காட்டைச் சொல்லுறதுதானே என்று சிறிது எரிச்சல்ப் பட்டுக் கொண்டு போய்ப் படலைக் கதவைத் திறந்தாள். அதிர்ந்து போனாள்.
அங்கே முகுந்தன் சைக்கிளில் இருந்து இறங்கி நிற்றவாறு பால்ப் போத்தலை நீட்டிக் கொண்டிருந்தான்.
அவளது வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவளது சிந்தையெல்லாம் நிறைந்திருந்த முகுந்தன் பால்ப்போத்தலை நீட்டிக் கொண்டிருந்தான்.
“முகுந்தன் நீங்களா?” அவளை அறியாமலே கேட்டுவிட்டாள்.
அவளை சற்றும் எதிர்பார்த்திருக்காத முகுந்தன் வெட்கத்தைச் சற்று அடக்கிக் கொண்டவனாக ஓம், ஓம் என்று தலையாட்டியபடி பால்ப் போத்தலைக் கொடுத்துவிட்டு, போட்டுவாறன் என்று கூறியபடி வண்டியை மிதிக்கத் தொடங்கினான்.
சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு படலையைச் சாத்திவிட்டு உள்ளே போனாள் சந்தியா.
நாளுக்கு நாள் அவளுக்குள் முகுந்தன் பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கினான். அவளால் முகுந்தனை ஒரு கணம் கூட நினைக்காமல் இருக்க முடியாமலிருந்து.
வகுப்பிலே அவளில் பெரிய மாறுதல் காணப்பட்டது. முகுந்தனுடன் எப்பொழுதும் தொடர்பை ஏற்படுத்தவே அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். முகுந்தன் வழமை போலவே காணப்பட்டான். இருந்தும் சந்தியா தன்மீது மிகுந்த அக்கறை செலுத்துவதையும் புரிந்து கொண்டான்.
அந்த நாட்களித்தான் வகுப்பெடுக்க வந்த இரசாயன ஆசிரியர் கல்வித் திணைக்களத்தில் இருந்து வந்திருந்த ஒரு அறிக்கையினைக் கூறினார்.
வருகிற மாதம் 15 ஆம் திகதி கல்வித் திணைக்களம் பாடசாலையில் ஒரு பொருட்காட்சி நடாத்துகிறது. அதில் தெரிவு செய்யப்படுபவர்கள் மாவட்ட பொருட்காட்சிக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். எனது வகுப்பிலும் தனியாகவோ அல்லது குழுவாகவோ படிப்போடு சம்பந்தமாக உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். நாளை எனக்கு யார், யார் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விபரத்தினைத் தாருங்கள் என்றார்.
மாணவர்கள் தத்தமது சிநேகிதர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கினார்கள். சந்தியா தனது சிநேகிதிகளான குமுதினி, கலா ஆகியோருடன் கந்தாலோசித்தாள். பெயர் விபரங்கள் எழுதினாள். முகுந்தன், சந்தியா, குமுதினி, கலா நேரடியாக முகுந்தனிடம் போனாள்.
முகுந்தன் நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்கிறீர்களா? பொலித்தீன் பாவனையால் என்னென்ன தீங்குகள் வரும் என்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நீங்கள் இரசாயனத்தில் நல்ல மார்க்ஸ் வாங்குவதால் நீங்கள் எம்முடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம். நீங்கள் எம்முடன் சேருகிறீர்களா? என்றாள்.
நல்ல செயல்முறைதான். சிறந்த விழிப்புணர்வு. ஆனால் என்னையும் உங்களுடன் சேர்க்கிறீர்களா? என்றான்.
ஏன் உங்களை எம்முடன் சேர்க்கக் கூடாத? என்றாள் சந்தியா.
அதுக்கில்லை, என்று இழுத்தான் முகுந்தன்.
எம்முடன் சேர உங்களுக்கு விருப்பமில்லையா முகுந்தன்? சந்தியா வினவினாள் சற்றுத் தயக்கத்துடன்.
அப்படி இல்லை சந்தியா. இதற்கு நிறைய செலவு வருமே? என்றான் முகுந்தன்.
நீங்கள் செலவைப் பற்றியெல்லாம் ஒன்றும் யோசிக்க வேண்டாம். அந்தப் பணத்தை நான் school இல் இருந்து வாங்குவேன். என்று ஒரு பொய் சொன்னாள் சந்தியா.
இங்கை பாருங்கோ முகுந்தன், நீங்கள், நான், குமுதினி, கலா சேர்ந்து இந்த செய்முறையைச் செய்கிறோம் என்று தான் பெயர்கள் எழுதி வைத்திருந்த துண்டை அவனிடம் காட்டினாள்.
தன்னுடன் கலந்தாலோசிக்க முன்னரே தன்னையும் அந்த list இல் சேர்த்திருப்பதைக் கண்ட முகுந்தன் எதுவும் பேசாது நின்றான்.
இதை நான் வாத்தியாரிட்டைக் குடுக்கப்போறன். ஆனால் ஓன்று நீங்கள் தற்செயலாக எம்முடன் சேர மறுத்தால் நானும் இதில் கலந்து கொள்ள மாட்டன். நீங்கள் கட்டாயமாக எம்முடன் சேருவீங்கள் என்று நம்புறன், என்று சிறிது புன்னைகைத்தவாறு கூறிவிட்டு அவனது பதிலெதுவும் எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.
அவளது செயல் முகுந்தனுக்குச் சிறிது ஆச்சரியமாகவே இருந்தது. அவளது அன்புக் கட்டளையை முகுந்தநாள் ஜீரணிக்க முடியாம லிருந்தது, அவள் தன்மீது காட்டுவது பாசமா, பரிவா என்று எதுவும் புரியவில்லை அவனுக்கு. படிப்புடன் சம்பத்தப்பட்டது தானே பங்கு பற்றுவோம் என்று எண்ணிக் கொண்டான் முகுந்தன்.
பாடசாலை நேரம் தவிர்த்து மாலை வேளைகளிலும் சனி, ஞாயிறு தினங்களிலும் மாணவர்கள் தத்தமது செய்முறை மாதிரிகளை உருவாக்கத் தொடங்கினார்கள்.
சந்தியா அந்தப் பொருட்காட்சி தனக்கு முகுந்தனுடன் பழகுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாகவே எண்ணிக் கொண்டாள். கூடுதலான நேரங்களில் அவள் அவனது கடந்தகாலம் மற்றும் நிகழ்கால வாழ்க்கை முறை, அவனது குடும்ப நிலைமை போன்றவற்றினை துருவித் துருவி ஆராய்வதிலேயே ஈடுபட்டாள். சில தடவைகளில் அவள் தனது தோழிகளை கண்காட்டி வெளியே அனுப்பிவிட்டு அவனுடன் தனியாக இருந்து கதைத்துக் கொண்டிருப்பாள். பல நாட்கள் தனது வீட்டில் இருந்து சிற்றுண்டிகள் ஏன் சில வேளைகளில் உணவுகூட எல்லோருக்கும் எடுத்து வந்துவிடுவாள். முகுந்தன் அவளது அன்புக் கட்டளைகளை தட்டிக் கழிக்க முடியாது திண்டாடினான்.
தனது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்பட்ட கொடுமை, சோகம், வறுமை போன்றவற்றிக்கு சந்தியா தன்மீது காட்டும் பாசம், அனுதாபம் அவனுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஏன் அவன் அவளிடமிருந்து அதனை எதிர்பாக்கவே தொடங்கிவிட்டான்.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, அடுத்தவாரம் நடைபெற இருந்த பொருட்காட்சிக்கு முதற்கிழமை பரீட்சார்த்த செய்முறை வைத்தார்கள்.
எல்லோரும் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தத்தமது செய் முறைகளை வைத்து விளக்கங்கள் கொடுத்த வண்ணமிருந்தனர். பாடசாலை மாணவர்கள் வரிசை வரிசையாக வந்து பார்வையிட்ட வண்ணமாக இருந்தனர். அயலில் இருப்பவர்களும் சிலர் வந்து பார்வையிட்டனர்.
திடீரென முகுந்தன் தனது காலடியில் 50 ரூபா நோட்டு விழுந் திருப்பதைக் கண்டெடுத்து “யாரோ போட்டு விட்டார்கள் என்று சந்தியாவிடம் காட்டினான்.
சிறிது ஆச்சரியப்பட்டவள் போலக் காட்டிக்கொண்ட சந்தியா இங்கு பலரும் வந்து போவதால் யாரிடம் என்று கேட்ப்பது. பணத்தைக் காட்டிக் கேட்டால் அது என்னுடையதுதான் என்றும் சிலர் பொய் கூறுவார். ஆனபடியினால் யாரவது தேடினால்க் கொடுக்கலாம். அதுவரை அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தாள்.
மறுத்த முகுந்தன் வாத்தியார் வந்த பொழுது விடயத்தைக் கூறினான். அவரும் “இங்கு வெளியாக்களும் வந்து போவதால் யாரிடம் என்று கேட்ப்பது. இன்று மாலைக்குள் யாரும் வந்து தேடாவிட்டால் அதனை நீயே வைத்துக்கொள்” என்று பதிலளித்தார்.
அன்றய தினம் முடிவடைந்தது. மாலை மீண்டும் வாத்தியார் வந்தார். யாரும் பணம் தேடி வரவில்லை எனவே நீயே அந்தப் பணத்தை வைத்துக் கொள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
“நாங்கள் நாலுபேருமாக பணத்தைப் பகிர்ந்தெடுப்பமா சந்தியா” என்றான் முகுந்தன். ஆனால் சந்தியா, குமுதினி, கலா ஆகியோர் முற்றாக மறுத்து விட்டனர். நீதானே கண்டெடுத்தாய் ஆனபடியால் நீயே வைத்துக்கொள் என்றனர்.
பணத்தைத் தொலைத்தவன் கவலைப்படுவானே என்ற கவலையுடன் அம்மா பக்கத்து வீட்டில் வாங்கிய கடனைக் கொடுக்கலாமே என்று எண்ணியவாறு வீடு திரும்பினான் முகுந்தன்.
அடுத்தவாரம் பொருட்காட்சி நடைபெற்றது. முகுந்தன் ஒரு புது வெள்ளைச் shirt போட்டிருந்தான். சந்தியா மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.
இரு தினங்களில் பொருட்காட்சி முடிவடைந்தது. அவர்களது செய்முறை விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக எல்லோராலும் பாராட்டப்பட்டு மாவட்டப் போட்டிக்குத் தெரிவானதாக அறிவிக்கப்பட்டது.
சந்தியா மீண்டும் தனக்கு முகுந்தனுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டதை எண்ணிப் பெரு மகிழ்ச்சியடைந்தாள்.
ஒரு சந்தேகத்தில் முகுந்தன் சந்தியாவிடம் வினவினான். “முன்னர் தந்ததுபோல இம்மமுறையும் படசாலை எமக்குப் பணம் கொடுக்குமா சந்தியா?”
குமுதினி முந்திக் கொண்டாள் “முகுந்தன் முன்னரும் பாடசாலை பணம் கொடுக்கவில்லை. சந்தியாதான் முழுச் செலவும் செய்தாள். எவ்வளவு வற்புறுத்தியும் எம்மிடம் பணம் வாங்க மறுத்துவிட்டாள். முழுச் செலவும் அவள்தான் ஏற்றுக்கொண்டாள். அவள் பணக்காறிதானே” என்று கூறினாள்.
“எதற்குச் சந்தியா உங்களுக்கு வீண் சிரமம்” என்றான் முகுந்தன்.
என்னுடன் எவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறீர்கள் இப்படி ஒரு எண்ணம் எழலாமா முகுந்தன்?
முகுந்தனால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. ஆனால் சந்தியா தன் சிந்தையில் தனது வாழ்வில்க் குறுக்கிடத் தொடங்கி விட்டாள் என்பதை மட்டும் உணரத் தொடங்கினான்.
வகுப்பிலே சந்தியா முகுந்தனுடன் மிகவும் சாதாரணமாகவே பழகினாள். யாராலும் எதனையும் கணிக்க முடியாதவாறு அவளது நடவடிக்கை அமைந்தது.
அவர்கள் மாவட்டப் பொருட்காட்சிக்குப் போக இருப்பதால் வழமைபோல பாடசாலை விட்ட பின்னரும், சனி, ஞாயிறு தினங்களிலும் தொடர்ந்தும் சந்தித்துக்கொண்டே இருந்தனர்.
தேவை இல்லாது விட்டாலும் சந்தியா விடமாட்டாள். முகுந்தனும் எதுவும் புரியாதவனாக வழமைபோல சந்தியா உட்ப்பட எல்லோருடனும் பழகினான்.
ஒரு மாதத்தில் மாவட்டப் பாடசாலைகளுக் கிடையேயான போட்டி பட்டினத்திலுள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டி முதன் நாளில் மிகவும் குதூகலமாக ஆரம்பமாகியது.
முகுந்தன், சந்தியா, குமுதினி, கலா என நால்வரும் இருவர் இருவராக இருந்து விளக்கங்கள் கொடுத்தனர். பல பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் வந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
மதியவேளை இடைவேளையின் போது வெளியே போகப் புறப்பட்ட முகுந்தன் தனது காலடியில் 100 ரூபா நோட்டு விழுந்திருந்ததைக் கண்டெடுத்தான். ஏதோ மூளையில் தட்டியதுபோல உணர்ந்த முகுந்தன் சந்தியாவிடம் காட்டி “சந்தியா இங்கே 100 ரூபா நோட்டு விழுந்து கிடந்தது” என்று மிகவும் மெல்லிய குரலில்க் கூறினான்.
சந்தியா ஒன்றும் தெரியாதவள் போல அப்படியா இங்கும் பலரும் பல இடத்திலும் இருந்து வந்திருக்கிறார்கள். யாரிடம் கொடுப்பது? யாராவது வந்து தேடினால் கொடுக்கலாம். இல்லையென்றால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தாள்.
சிறிது நேரம் மௌனமாக இருந்த முகுந்தன் “சந்தியா எனக்கு எதுவுமே புரியவில்லை” என்றான்.
“என்னை இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா முகுந்தன்?” என்றாள் சிறிது கவலை தேய்ந்தவளாக.
“உண்மையாகத்தான் கேக்கிறன், இன்னும் என்னுடைய மனதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா முகுந்தன்?” என்று கூறிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.
உங்களை நான் புரிந்து கொள்ள என்னிடம் என்ன இருக்கிறது சந்தியா. என் குடும்பத்துக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. நானோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். நாளை உணவுக்கு என்ன செய்வது? என்ற ஏக்கத்துடனேயே எமது குடும்பம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பணக் கஷ்டத்தின் நிமித்தம் எனது அக்கா முதலாம் வருடத்துடன் தனது பல்கலைக்கழக படிப்பை நிறுத்திவிட்டா. நானோ எனது sholrship பணம் எவ்விதமான தடங்கலும் இன்றி வரவேண்டும் என்ற காரணத்தினாலேயே பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். என்னைப்போய் நீங்கள்” என்று சற்றுக் கண் கலங்கியவாறு தொடர்ந்து எதுவும் பேசமுடியாது நின்றன் முகுந்தன்.
சந்தியா சற்றும் மனம் தளராதவளாக, “ஏன் இந்த மனத் தளர்ச்சி முகுந்தன்? நான் என்ன சொல்லிவிட்டேன்? நான் உங்கள்மீது பூரணமான அன்பு வைத்திருக்கிறன். உங்கள் முன்னேற்ரத்துக்கு நான் உதவலாம் என்று முடிவெடுத்திட்டன். உங்கள் தற்போதைய குடும்ப சூழ்நிலையை மாற்ற நானும் உங்களுக்கு உதவிசெய்ய விரும்புறன். உங்கள் கல்விக்கு, உங்கள் எதிர்காலத்துக்கு, உங்கள் முன்னேற்ரத்துக்கு நான் உங்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறன். அதற்கு நான் உங்களிடமிருந்து ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறன் முகுந்தன்.” மிகவும் நிதானமாகக் கூறி முடித்தாள் சந்தியா.
“என்ன சந்தியா?” மெல்லிய குரலில் கேட்டான் முகுந்தன்.
“உங்கள் அன்பு மட்டும்தான் எனக்குத் தேவை தருவீர்களா?” என்றாள் மிகவும் தளதளத்த குரலில்.
“என்ன சந்தியா? நீங்கள் யார்? நான் யார்? என்னிடம் போய் நீங்கள்” என்று திகைத்தான் முகுந்தன்.
சந்தியா தொடர்ந்தாள். “உங்களிடம் தான் நான் கேட்கிறேன், உங்கள் அன்பைத்தான் நான் கேட்கிறேன். இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை முகுந்தன். பணம் இன்று வரும் நாளை போகும். பணம் இருக்கும் அனுபவிக்கவே முடியாமலும் இருக்கும். ஆனால் அன்பு என்றும் நிலைத்திருக்கும். உங்களிடம் இருந்து நிலையான அன்புதான் எனக்குத் தேவை. அதனைத்தான் நான் எதிர்பாக்கிறேன் முகுந்தன்.”
“சந்தியா?” என்று மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தான் முகுந்தன்.
சந்தியா தொடர்ந்தாள். “முகுந்தன் உங்களுடைய வாழ்க்கை என்ற படகும், நீரில்த்தான் மிதந்து கொண்டிருந்தது. இனக் கலவரம் என்ற எதிர்பாராத சூறாவளியால் சின்னா பின்ன மாக்கப்பட்டுக் கரைக்குத் தூக்கி எறியப்பட்டு விட்டது. அப்படகை மீண்டும் நீரில்ச் சேர்ப்பதற்கு உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. அந்த உதவிக்கு நான் வருகிறேன் என்றுதான் சொல்லுறன் முகுந்தன். படகு தண்ணீருக்குள்ப் போனவுடன் நாம் இருவரும் அதில் ஏறிக்கொள்ளலாம் என்றுதான் நான் கேக்கிறன் முகுந்தன்.”
சந்தியாவினால்த் தொடர்ந்து பேசமுடியவில்லை. கதிரையில் இருந்தவாறே தனது தலையைக் குனிந்து கொண்டாள்.
இந்த நிலையில் தனக்காக எங்கும் ஒரு இதயத்தை, வாலிபப் பருவம் ஆரம்பமானத்திலிருந்து கடன், வறுமை, பசி, பட்டினி, சோகம் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் அறிந்திடாத முகுந்தனின் இதயத்துக்கு சந்தியாவின் அன்பு மிகவும் இதமாக இருந்தது. தனக்காகவும் ஒரு இதயம் ஏங்குவது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. வறண்டுபோய் இருந்த நிலத்தில் யாரோ செடி வைத்து நீரூற்றுவது போலிருந்தது. இருண்டுபோய் இருந்த அவனது வாழ்வில் ஒரு ஒளிமின்னல் ஆரம்பிப்பதுபோல இருந்தது அவனுக்கு. ஆண்டவன் நேரிடையாக வரமாட்டான் பல ரூபங்களில்த்தான் வந்து உதவி செய்வான். அதுதான் இந்தச் சந்தியா ஏற்றுக்கொள் என்று யாரோ குரல்கொடுப்பது போலிருந்தது அவனுக்கு.
சந்தியாவின் முகத்தை முதன் முறையாக சிறிது துணிவுடன் நோக்கினான் முகுந்தன். எப்பொழுதும் துடுக்கான பார்வை. துடுக்கான பேச்சுக்கள். சிரித்த முகத்துடன் காணப்படுவாள். அன்று தன் அன்புக்காக ஏங்கி, முகம் சிவந்து, கலங்கிய கண்களுடன் நிலம் நோக்கிய பார்வையுடன் இருப்பதைக் கண்டு சிறிது கலங்கினான்.
தன்னைச் சுதாகரித்துக் கொண்ட முகுந்தன் “சந்தியா நான் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் நீங்கள் அப்படி இல்லை”
என்று முகுந்தன் முடிப்பதற்குள், “நான் எதை இழந்தாலும் உங்களை இழப்பதற்குத் தயாராக இல்லை முகுந்தன்” என்று பதிலளித்தாள் சந்தியா.
“நான் உங்களுடையவன் சந்தியா” என்று கூறி முடிப்பதற்குள் விம்மி விம்மி அழைத் தொடங்கினாள் சந்தியா.
முகுந்தன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெளியில்ச் சென்று திரும்பி வந்த குமுதினியும் கலாவும் சந்தியா அழுது கொண்டிருப்பதைப் பார்த்து சிறிது கலக்க மடைந்தவர்களாக முகுந்தனை நோக்கினர்.
முகுந்தன் மிகவும் வெட்கப்பட்டவனாக தனது முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.
அவர்களை நிமிர்ந்து பார்த்த சந்தியாவின் முகம் மீண்டும் நாணத்தால்ச் சிவந்தது.
“அதுதானே பாத்தம்” என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.
பொருட்காட்ச்சியின் மிகுதி இரு நாட்களும் சந்தியா மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டாள். முகுந்தன் உட்பட தனது தோழிகளுக்கும் அவர்கள் மறுத்தும் நிறையவே செலவளித்தாள். பொருட்காட்ச்சியும் நிறைவுற்றது.
அதன் பின்னர் வகுப்பிலும் சந்தியாவும் முகுந்தனும் மிகவும் நிதானமாகவே நடந்து கொண்டனர்.
நாட்கள் செல்லச் செல்ல அவர்களது நெருக்கம் வகுப்பில் பலருக்கும் சந்தேகத்தைக் கொடுத்தது.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்களது இறுதித் தேர்வும் அதாவது பல்கலைக்கழக தேர்வுப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்களின் நெருக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது.
முகுந்தன் எவ்வளவோ மறுத்தும் அவ்வப்போது சந்தியா அவனுக்கு பண உதவியும் செய்து கொண்டிருந்தாள்.
சந்தியா அது உனது தந்தையின் பணமல்லவா? என்று ஒருமுறை அவன் மறுத்தபோது.
உண்மைதான் முகுந்தன் ஆனால் அந்தப் பணத்தில் எனக்கும் பங்குண்டு. அதுமட்டுமல்ல எம்வீட்டுப் பெட்டகத்தில் கத்தை கத்தையாகப் பணமிருக்கு. ஒருமுறை 1000 ரூபா பெறுமதியான நோட்டுக் கட்டை எலி கடித்து அதை வங்கியிலும் மாற்ற முடியாமல்ப் போய்விட்டது. அது மட்டுமல்ல முகுந்தன் எனது ஐயா இடுப்பில்ப் பணம் செருகி வைப்பார். வேட்டி கழரும் வேளைகளில் சிலநேரம் அந்தப் பணம் நிலத்திலும் விழுந்துவிடும். ஐயாவும் அதனைத் தேடமாட்டார். அப்படி நிலத்தில் இருந்து எடுத்துச் சேர்த்த பணமே என்னிடம் நிறைய இருக்கு. யாருக்குமே உதவாமல் எங்கள் வீட்டுப் பெட்டியில் நிறையப் பணமிருக்கு முகுந்தன். அப்பணம் உங்களின் வளர்ச்சிக்கு உத்தவட்டுமே. உங்களின் வளர்ச்சியில்த்தானே என் எதிர்காலமே தங்கியிருக்கு.” என்று கூறி முடித்தாள்.
சந்தியா கூறி முடித்ததும் முகுந்தன் வாயடைத்துப் போனான்.
இறுதியாண்டுப் பரீட்சைக்கு இன்னும் ஆறு மாதங்களே இருந்தது. முகுந்தன் சந்தியா நெருக்கமும் சற்று அதிகமாகவே இருந்தது. வகுப்பிலும் எல்லோர் பார்வையிலும் அவர்கள் காதலர்களாகவே கணிக்கப்பட்டனர்.
அந்தப் பாடசாலையில் ஆசிரியராக இருக்கும் செல்லத்துரை வாத்தியாருக்கும் கதை போனது.
அன்றொருநாள் ஒரு மதியவேளை இடைவேளையின்போது முகுந்தனும் சந்தியாவும் வகுப்பிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். திடீரென வகுப்புக்கு வந்த செல்லத்துரை வாத்தியார் சந்தியாவைப் பார்த்து “இவனோடை யெல்லாம் உனக்கு என்ன கதை. உன்ரை நிலைமை என்ன அவன்ரை நிலைமை என்ன? உன்னைப் போல ஆக்களைக் கண்டால் இவங்கள் நல்லா நடிப்பாங்கள். மிகவும் கவனமாக நடந்துகொள். என்று கூறியவர் முகுந்தனைப் பார்த்து “முகுந்தன் இனிமேல்ப்பட்டு நீ சந்தியாவுடன் கதைப்பதைப் பார்த்தன் எண்டால் உன்னை இந்தப் பள்ளிக் கூடத்திலை இருந்து துரத்திப் போடுவன். உனக்கெல்லாம் ஒரு பள்ளிக்கூடம், ஒரு படிப்பு, பெரிய இடத்துத் தொடர்புகள். எல்லாத்துக்கும் இண்டைக்குத்தான் கடைசி” என்று ஏசிவிட்டுப் போனார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை சந்தியா எதிர்பார்த்தவள்தான். ஆனால் இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று வீட்டிலும் பிரச்சினைகள் தொடங்கும் என்றும் எதிர்பார்த்தாள். மிகவும் கவனமாகக் கையளவேண்டிய சிக்கலிது. சேலையில் முள் பட்டாலும் முள்ளில் சேலை பட்டாலும் சேலைக்குத்தான் சேதம். ஆம் அவள் விரும்பும் முகுந்தன்தான் பாதிக்கப்படுவான். முகுந்தனும் அவனது எதிர்காலமும் தள்ளாடாமல்ப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகவும் நிதானத்துடன் வீடு திரும்பினாள்.
வீடு திரும்பிய சந்தியாவுக்கு வீட்டுத் திண்ணையில் வழமைக்கு மாறாக அம்மா, ஐயா, அக்கா என தன்னை எதிர்பார்ப்பதுபோல நின்றிருந்தது நிலமையைத் தெளிவாகியது.
அம்மா தான் தொடங்கினா “என்னடி உனக்கு அந்தப் பால்க்காரப் பெடியனோட கதை?
“என்ரை வகுப்பில எல்லாரோடையும் கதைக்கிற மாதிரித்தான் கதைக்கிறன் அவ்வளவுதான்.” என்றாள் சந்தியா.
“என்ன நெடுக அவனோடையே கதைக்கிறியாம்” என்றார் அம்மா.
“நான் வேற ஒருத்தரோடையும் கதைக்கிரேல்லையே. சும்மா ஆரன் வந்து அண்டி விடுவினம் நீங்கள் நம்புங்கோ” என்றாள் சந்தியா.
“சரி எல்லாத்துக்கும் இண்டைக்குத்தான் கடைசி. எல்லாரோடையும் அளவாகப் பழகு” அக்கா மிகவும் கண்டிப்பாகக் கூறினார்.
“அவன் நல்லாப் படிப்பான் அதுதான் சிலநேரங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால்க் கேக்கிறனான். சரி இனி நான் அவனோடே கதைக்கவும் மாட்டன் அந்தப் பக்கம் திரும்பிப் பாக்கவும் மாட்டன். சும்மா இல்லாத ஒண்டைக் கற்பனை பண்ணாதேங்கோ.” என்றாள் சந்தியா.
அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராததால் எல்லோரும் அடங்கிவிட்டனர். தாம் தப்புக்கு கணக்குப் போட்டு விட்டதாகவும் எண்ணிக் கொண்டனர்.
அடுத்தநாள் காலை முகுந்தன் வழமைபோல பால் கொடுக்க வந்தான். சந்தியாவின் அம்மாதான் அவனை எதிர் பார்த்துக் காத்திருந்தார்.
பால்ப் போத்தலைக் கொடுப்பதற்காக முகுந்தன் cycle இல் இருந்து இறங்கினதுதான் தாமதம்,
“இண்டையோட நீ பாலும் கொண்டரப்படாது இந்தப் பக்கமும் வரப்படாது. கொம்மாட்டையும் சொல்லு. காசை கோயிக்கு வரேக்கை கொண்டுவந்து தாறன் எண்டு சொல்லு. அதோட வகுப்பில நீ சந்தியாவுக்கு கிட்டப் போகப்படாது. தேவையில்லாமல் அவளோட கதைக்கவும் வேண்டாம். அவர்களின் வாசலில் நின்ற பெரிய வேப்பமரத்தைக் காட்டி “இண்டையோட இந்த நிழலிலேயே நீ மிதிக்கப்படாது” என்று கூறி அவனை விரட்டி விட்டார்.
முகுந்தன் கண்கலங்கியவாறு தன் விதியை எண்ணி நொந்தவாறு வீடு திரும்பினான்.
அன்றுமுதல் முகுந்தனும் சந்தியா பக்கம் திரும்புவதில்லை. சந்தியாவும் முகுந்தன் பக்கம் திரும்புவதில்லை. அடிக்கடி செல்லத்துரை வாத்தியாரும் வகுப்பை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார். நாட்கள் ஓடியது. ஒரு மாதமும் ஓடிவிட்டது. அவர்களுக்குள் எவ்வித கதை பேச்சும் இல்லை. ஏன் ஒருவரை ஒருவர் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
முகுந்தன் எண்ணிக் கொண்டான் “என் நிலைமை கண்டு இவ்வளவு பரிதாபப் பட்டாள். அவளின் அறிவுக்கும், அழகுக்கும், பணத்துக்கும் ஒரு நண்பனாக இருக்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நடப்பது நடக்கட்டும். அவளுக்கு வீட்டில் எந்தப் பாதிப்பும் இல்லாதிருந்தால்ச் சரிதான்.”
இறுதி பரீட்சைக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருந்தது. அனைவரும் சந்தியா முகுந்தன் தொடர்பை மறந்தே விட்ட்னர். சிலர் நாம் பிழையாக எண்ணி விட்டோமோ என்றுகூட எண்ணினர்.
அன்றும் பாடசாலை முடிவடைந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். சந்தியாவின் தோழி குமுதினி முகுந்தனிடம் வந்து இந்தாங்கோ சந்தியாவின் கடிதம் என்று ஒரு கொப்பியைக் கொடுத்துவிட்டுப் போனாள்.
கொப்பியை வாங்கியவன் திரும்பிப் பார்த்தான் சந்தியா அவனையே பார்த்த வண்ணமாக இருந்தாள். எதுவும் புரியாதவனாக தலையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டான். போகும் வழியில் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள பலாமரத்துக்குக் கீழே இருந்து கடிதத்தைப் படிக்கத் தொடங்கினான்.
அன்பின் முகுந்தனுக்கு
என்ன இந்தச் சந்தியா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்கிறீங்களா. என் வாழ்க்கை உங்களுடன்தான். உங்களின் எதிர்காலத்தில்த் தான் என் வாழ்கை தங்கியுள்ளது. நாங்கள் தற்போது பலமற்றவர்களாக இருக்கிறோம். இப்பொழுது இவர்களுடன் மோத முடியாது. நீங்கள் பலம் பெறவேண்டும். ஆம் உங்கள் மூலதனம் கல்விதான். அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு நல்ல நிலைமைக்கு நீங்கள் வரவேண்டும் அதன் பின்னர்தான் நாம் இவர்களுடன் மோத முடியும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. அதுவரை நாம் சற்று ஒதுங்கித்தான் இருக்க வேண்டி இருக்கிறது.
முகுந்தன் நான் கூறுவதை சற்று நிதானத்துடன் புரிந்து கொள்ளுங்கள், எனது நண்பி குமுதினியின் அண்ணா இங்கிலாந்தில் இருக்கிறார். எமது நிலைமையை குமுதினி மூலமாக எடுத்துக்கூறி அவர் எமக்கு முழு உதவியும் செய்வதாகக் கூறியுள்ளார். உங்களையும் அங்கு கூப்பிட ஒழுங்குகள் செய்வதாகக் கூறியுள்ளார். நீங்கள் அங்குபோய் உழைத்த்துப் பணத்தைக் கொடுக்கலாம்.
எதற்கும் கலங்காதீர்கள். உங்களிடம் கேட்காமலே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். காரணம் இப்ப நான்வேறு நீங்கள் வேறு அல்ல முகுந்தன். இந்தச் சந்தியா எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களை அவரின் நண்பர் ஒருவர் சந்தித்து இங்கிலாந்து போகும் ஒழுங்குகளை செய்வார். துணிவோடு புறப்படுங்கள். உங்கள் வீட்டிலும் நிலைமைகளை புரிய வையுங்கள். அங்கு போய் நன்றாக உழையுங்கோ, படியுங்கோ. உங்களை உயர்த்துங்கள். உங்கள் குடும்பத்தை உயர்த்துங்கோ. மிடுக்கோடு வந்து என்னை என் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லுங்கோ. என்னைப் பெற்ற தாய் தந்தைக்கு அதுதான் கவுரவம். மகிழ்ச்சி. நாம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் அதுதான்.
அதுமட்டுமல்ல முகுந்தன் என் தாய் தகப்பன் பழமையில் ஊறியவர்கள். மிகவும் பழமை வாதிகள். இந்தச் சிறிய ஊரை முழு உலகமும் இதுதான் என்று நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களில் குற்றம் காண முடியாது. அவர்களின் வாழ்கை முறை அப்படி அமைந்துவிட்டது. தற்போது எம்மால் அவர்களை மாற்றவும் முடியாது. அவர்கள் எமக்காக இறங்கி வரவும் மாட்டார்கள். அப்படியாக அவர்களின் மூளை இந்தச் சமுதாயத்தில் சலவை செய்யப்பட்டுள்ளது. நாம் தான் அவர்களின் நிலைமைக்கு உயரவேண்டும். அப்போதுதான் அவர்களுடன் மோதமுடியும். பேசமுடியும். பேசி வெல்ல முடியும். பெரியோர்களின் நம் பெற்றோர்களின் முழுமையான ஆசீர்வாதம் இல்லாமல் நாம் சிறப்பாக வாழவும் முடியாது. அதில் அர்த்தமும் இல்லை.
உங்கள் வீட்டில் நிலைமையை தெளிவாக எடுத்து விளக்குங்கோ. நிட்ச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். இந்த நாட்டில் எமது அதுவும் மாணவர்களது எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனவே நீங்கள் துணிவோடு புறப்படுங்கள். நன்றாக உழைத்து நீங்கள் விரும்பியது போல படியுங்கள். உங்களை உங்கள் வீட்டாரின் நிலைமையை உயர்த்துங்கள். அதுவரை இந்தச் சந்தியா உங்களுக்காகக் காத்திருப்பாள். எமக்கு கடவுள் துணை இருப்பார் முகுந்தன்.
பிரிவு என்பது எப்போதும் எல்லோருக்கும், ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் துயரம்தான். தாங்க முடியாததுதான். வாழ்க்கையில் எப்போது இன்பம், துன்பம், உறவு, பிரிவு, வரவு, செலவு மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். அதுதான் வாழ்க்கை. வாழ்ந்துதான் ஆகவேண்டும். துணிவோடு வாழ்ந்துதான் பார்ப்போமே முகுந்தன். மீண்டும் ஒருமுறை எழுதுகிறேன் வீட்டில் எல்லோருக்கும் நிலமையைப் புரிய வையுங்கள். உடன்படுவார்கள். துணிவோடு தீர்மான மெடுத்துப் புறப்படுங்கள் முகுந்தன். அதுவரை இந்தச் சந்தியா உங்களுக்காகக் காத்திருப்பேன்.
உங்கள் நினைவுகளுடன் உங்களுக்காக காத்திருக்கும் உங்கள் சந்தியா.
கடிதத்தைப் படித்தவன் சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டான். வீட்டுக்குச் சென்று மெதுவாக தாயிடம் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தமையனார் எமது வீட்டு நிலைமை அறிந்து எமக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளதாகவும் தன்னை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் கூறி தன் நிலைமையையும் சிறிது விளக்கினான். அப்பாவிற்கும் கதை போனது.
முகுந்தனை அருகில் அழைத்து அப்பா கூறினார் “நீ விரும்பியோ விரும்பாமலோ பணக்காரருடன் மோதி விட்டாய். அது உனக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் பிரச்சினைதான். எமது வறுமை, எங்களால் தற்போது எதுவும் செய்ய முடியாமலுள்ளது. அம்மாவுக்கும் அண்டைக்கு சந்தியாவின் தாயார் கோயிலில் கண்டு நன்றாக ஏசிப் போட்டா. நாம் எவ்வளவு கௌரவமாக வாழ்ந்தனாங்கள் என்ன செய்வது இனக் கலவரத்தினால் நாம் எல்லாம் இழந்து அகதியானோம். அந்த இனக்கலவரம் எமது செல்வத்தை மட்டும் அழிக்கவில்லை, எமது கெளரவம், மானம், மரியாதை, மதிப்பு எல்லாத்தையும் தான் அழிச்சுப்போட்டுது. உன்னைப் பிரிய எம்மால் எப்போதும் முடியாது. ஆனால் நீ புறப்படுவதான் நல்லது. புறப்படு. ஆனால் புது உலகம், புது மனிதர்கள், புதிய பண்பாடு மாறிவிடாதே. கவனமாக இரு. சந்தியாவின் நிதானம், அன்பு, பாசம், அக்கறை எனக்கு நிறைவாக இருக்கிறது. அந்தச் சந்தியாவுக்காக உன் வாழ்க்கையைத் தொடங்கு. எந்தக் கட்டத்திலும் தடுமாறி விடாதே. சத்தியமும் வாங்கிக் கொண்டார்.
சில வாரங்களில் லண்டனில் காலூன்றினான் முகுந்தன். குமுதினியின் அண்ணா அவனுக்கு வழிகாட்டினார், உழைக்கத் தொடங்கினான். படிக்கத் தொடங்கினான். சந்தியாவின் விருப்பப்படி குமுதினி மூலமாக சந்தியாவுடன் செய்திகள் பரிமாறினான். அவன் நிலை உயரத் தொடங்கியது. அவன் குடும்ப நிலைமையும் உயரத் தொடங்கியது. அக்காமார் இருவருக்கும் திருமணமாகியது. இரண்டு வருடங்களில் அவனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல்கலைக் கழகத்தினுள் நுழைந்தான். படித்து முடித்தவுடன் சந்தியாவுடன் திருமணம் செய்வதாக முடிவெடுத்தான். இரண்டு வருடங்கள் உருண்டோடியது.
அப்போதுதான் சந்தியாவின் அக்காவுக்கு ஊரில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அடுத்து சந்தியாவுக்கு என்றனர். சந்தியா வாய் திறக்கவில்லை.
மாப்பிள்ளை பார்த்துவிட்டு அடுத்த வாரம் உன்னைப் பெண்பார்க்க வருகிறார் என்றனர்.
அப்பொழுதுதான் சந்தியா முதன் முதலாக வாய் திறந்தாள் “நான் முடித்தால் முகுந்தனைத்தான் முடிப்பேன்”
எல்லோரும் மறந்ததே போய்விட்ட அந்தப் பெயர் மீண்டும் வீட்டில் ஒலித்தது. எல்லோரும் அதிர்ந்து போனார்கள். விபரமே கேட்க்காமல் முடியாது என்றனர்.
“முகுந்தனுடன் கலியாணம் இல்லை என்றாள் எனக்கு கலியாணமே வேண்டாம். நான் இப்படியே இருந்துவிடுகிறேன். அதிலும் ஏதாவது இடையூறு வந்தால் கிருமி நாசினிதான் பதில் சொல்லும்” என்று மிகவும் உறுதிபடக் கூறினாள்.
அனைவரும் அடங்கினர்.
“முகுந்தன் எங்கே?” அம்மாவிடமிருந்து முதல் குரல் எழுந்தது.
விபரமாகக் கூறினாள். அனைவருக்கும் முகுந்தனில் மரியாதை வந்தது. முகுந்தன் வீட்டுக் காரருடன் தொடர்பை ஏற்படுத்தினர். சந்தியா முகுந்தன் திருமணம் நிட்சயமாகியது.
முகுந்தனின் பட்டப் படிப்பும் முடிவடைந்தது. ஊருக்குத் திரும்பினான். சந்தியாவின் தாயார்தான் முன்னின்று வரவேற்றார். மரியாதையின் நிமித்தம் தம்பி என்றே முகுந்தனை அழைத்தார். அனைவரின் ஆசீர்வாதத்துடன் சந்தியா முகுந்தன் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
“என்ன சந்தியா ஓடம் கவுண்டு போச்சோ” தண்ணி குடித்துவிட்டு வந்த முகுந்தன் அழைத்தான்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்ட சந்தியா சிறிது புன்னகைத்தவாறு “ஓடம் ஒன்றும் கவுளேல்லை. நான் உங்களை சந்தித்த முதன் நாளில் இருந்து என்னென்ன நடந்தது என்று எண்ணிப் பார்த்தன் அவளவுதான்.” என்றாள்.
“என்னை இவ்வளவு காலமும் காத்திருக்க விட்டிட்டான் என்றுதானே.” என்று கூறிக்கொண்டு அவளருகில் அமர்ந்தான்.
“இல்லை இவ்வளவு விரைவாக என் ஆசையை நிறைவேற்றி வைத்திட்டீங்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றாள்.
எல்லாம் நீ எனக்கு கொடுத்த ஊக்கமும், நம்பிக்கையும் செய்த உதவியும் தான் சந்தியா.
நான் ஓன்று கூறினால் நீ ஆச்சரியப்படுவாய் சந்தியா. சில வருடங்களின் முன் நான் இன்டர்நெட்டில் செய்திகள் படித்துக் கொண்டிருந்தபோது “இவர்களின் வாழ்க்கையை மாற்றுங்கள்” என்று ஒரு தலைப்பு இருந்தது. அது ஒரு குழந்தைகள் காப்பகம். சிறுவர்களின் படங்கள். இருண்டு போன தம் வாழ்க்கைக்கு ஒரு எதிர்காலம் தேடிக் காத்திருந்தனர். அவர்களது பிரச்சினைகளையும் எழுதி இருந்தனர்.
அவர்களது நிலைமைகளைப் பார்த்தபோது எனது கடந்த காலத்தை நினைவு படுத்தியது. எனக்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நான் வாழ்க்கையில் முன்னேற நீ எனக்கு உதவியது போல, நானும் என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்ய எண்ணினேன். மாதம் மாதம் உன் பெயரில் ஒரு சிறிய தொகையை அனுப்பி வருகிறேன் சந்தியா.
நீங்கள் இப்ப பெரியாள் ஆகிவிட்டீர்கள் முகுந்தன்.
உண்மைதான் சந்தியா. அடுத்தநேர உணவுக்கு என்ன செய்வது என்று எண்ணியிருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறன். நீ, உன் அன்பு, நீ என்மீது காட்டிய பரிதாபம், உன் மன வலிமை எனக்கு இந்த நிலமையைக் கொடுத்திருக்கிறது சந்தியா.
சரி நிப்பாட்டுங்கோ. துணிவு, தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால்ப் போதும் எல்லோரும் முன்னுக்கு வரலாம்.
அதுமட்டுமல்ல பிறர் உதவியும், கடவுள் அருளும் தேவை சந்தியா.
அதுசரி அம்மாவுடன் மிகவும் நன்றாகப் பழகுகிறீர்கள், முந்தி அவ உங்களை ஏசியது ஒன்றும் வருத்தமில்லையா முகுந்தன்.
அதுதானே சந்தியா நீ முன்னரே கூறிவிட்டாய். அவர்கள் பழமையில் ஊறியவர்கள் என்று. அவ இப்ப என்னுடன் நன்றாகத்தானே பழகுகிறா. அவர்களைப் பொறுத்தவரை அதுதானே அவர்களின் பாரம்பரியம். அவர்களது வாழ்க்கை முறை. அந்தப் பாரம்பரியத்தில்ப் பிறந்த நீ புதிய சமுதாயத்தில் வளர்ந்தாய். புதிய சமுதாயத்துக்கு அதாவது எனக்கு உதவினாய். பழைய பாரம்பரியத்தில் ஊறிப்போன அனைவரையும் அனுசரித்தாய். இன்று புதியதை பழமைக்குள் கச்சிதமாகப் புகுத்தியுள்ளாய். உண்மையில் பழமையும் புதியதை ஏற்றுக் கொண்டது. புதியதும் பழமையை மதித்துக்கொண்டது.
“எதை எடுத்தாலும் என்னைத்தானே உதாரணத்துக்கு எடுக்கிறீர்கள்” இடை மறித்தாள் சந்தியா.
“இல்லைச் சந்தியா. நீ ஒரு புதுமைப் பெண். ஒவ்வொரு ஆணின் வளர்ச்சியின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தத்துவத்துக்கு உதாரணம் நீ”
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று கூறுவார்கள். யாரையும் அதிகம் புகழவும் கூடாது அதிகம் தூற்றவும் கூடாது.” என்றாள் சந்தியா.
உண்மைதான் சந்தியா. நீ இப்ப என் மனைவி. நான் உன்னைப் புகழவும் தேவை இல்லை. நன்றி கூறவும் தேவை இல்லை. ஆனால் நாங்கள் ஆரம்பத்தில் சில நாட்கள்தான் நெருங்கிப் பழகினோம். பின்னர் ஏறத்தாழ ஏழு வருடங்கள் எமது திருமணம் வரை பிரிந்து தான் இருந்தோம். எமக்குள் நல்ல கடிதப் போக்கு வரத்துக்கூட இருக்கவில்லை. இணைவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும்தான் எம்மிடம் இருந்தது. இன்றுவரை எனக்குள் அடக்கி இருந்த எண்ணங்களைக் கொட்டினேன். என் இதயத்தில் நீ எங்கிருக்கிறாய் எனது அப்பா, அம்மா, சகோதரர்கள் உன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஆரம்பத்தில் எப்படியாவது உனக்குக் கூறிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நீயே என்னைக் கிளறினாய் நான் கொட்டிவிட்டேன் அவ்வளவுதான்.
“அப்பா இனி வீட்டை போவமா சந்தியா?” என்றான் முகுந்தன்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்து கதைச்சிட்டுப் போவமே முகுந்தன் என்றாள் சந்தியா.
“ஓ விளங்குது இன்னும் கொஞ்ச நேரம் இருந்து உன்னைப் புகழச் சொல்லுகிறாய், அப்படித்தானே சந்தியா. பிறைபோன்ற நெற்றி. அலைபோன்ற கூந்தல். மீனாட்டம் கண்கள். முத்துப்போல்ப் பற்கள். அழகான புன்னகை. குழி விழுந்த கன்னங்கள்” முகுந்தன் கூறிக் கொண்டே போனான்.
“காணும் நிப்பாட்டுங்கோ, வாங்கோ வீட்டை போவம்” எழுந்தாள் சந்தியா.
“நான் அந்தக் கோபுரத்திலுள்ள சிலையை வர்ணித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் இரன் முழுவதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.” என்றான் முகுந்தன்.
இல்லை போதும் என்று மறித்த சந்தியா “என்ன அகன்ற மார்பு, திரண்ட தோள்கள், எதற்கும் அஞ்சாத பார்வை” கூறத் தொடங்கினாள்.
“என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லும்போது ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும் சந்தியா, தொடர்ந்து சொல்” என்றான் முகுந்தன்.
“நான் உங்களை சொல்லேல்லை. நீங்கள் வர்ணித்த அந்தப் பெண் சிலைக்கு அருகில் இருக்கும் அந்த ஆபிம்பிளைச் சிலையைத்தான் நான் வர்ணிக்கிறன்” என்றாள் சந்தியா சிறிது புன்னகைத்தவாறு.
“அந்தச் சிலைகளின் பெயர் தெரியுமா சந்தியா” முகுந்தன் வினவினான்.
“என்ன பெயர்?”
“சந்தியா – நாரை”
“காணும் வாங்கோ வீட்டை போவம் முகுந்தன்.”
“ஓம் சந்தியா மாமி உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் வேப்பமர நிழலில் நின்று எமக்காகக் காத்திருப்பா சந்தியா”
இருவரும் சிரித்தவாறு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
—- சுபம் —