காலம் ஒருநாள் மாறும் (சிறுகதை)

0 0
Read Time:43 Minute, 29 Second

மனோரம்மியமான மாலைப் பொழுது பறவைகள் தத்தமது கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கிளிகள் அங்கும் இங்கும் கத்தியபடி பறந்து கொண்டிருந்தன. அவற்றின் சிறகடிக்கும் சத்தமே கேட்ப்பதற்கு மிகவும் இதமாக இருக்கும். வேப்ப மரத்திலும், பனை மரங்களிலும் இருந்து குயில்கள் கூவி இரவின் வருகையை பறைசாத்திக் கொண்டிருந்தன. வீதியால் தோட்டவேலை முடிந்து தொழிலாளிகள் சப்த்தமாக உரையாடியபடி தத்தமது குடிமனைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது சில திருக்கை மாட்டு வண்டில்கள் பலத்த சப்தத்துடன் வீதியால் போய்க் கொண்டிருந்தன. அது ஒரு தோட்டக் காணிகள் நிறைந்த ஊர். வெங்காயம் புகையிலை என்பன அவ்வூரின் பிரதான பயிர்ச்செய்கையாகும்

அது ஒரு பெரிய ஊர். சிறுவர்கள் தத்தமது வயதுக்கு ஏற்றவாறு மாங்கொட்டைத் தாளம், கிட்டி, கிளித்தட்டு என்பன விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவ்வாறுதான் சுப்பைய்யா வளவு புளியமரத்துக்கு கீழே சில சிறுவர்கள் மாங்கொட்டைத் தாளம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சரியாக ஆறு மணிக்குப் பிள்ளையார் கோயில் மணி அடிக்கும் அந்த மணி ஓசையுடன் சிறுவர்கள் விளையாட்டை முடித்து விடுவார்கள். அது அந்த ஊரின் இயற்றப்படாத சட்டமாகும்.

 சுப்பையா அந்த ஊரில் பெரிய பணக்காரன். நிறைய காணிகளுக்குச் சொந்தக்காரன். பணம் இருக்கும் இடத்தில்த்தான் செட்டும் இருக்கும். அவர் ஒரு செட்டுப் பிடித்தவர். அதற்கு ஏற்றாப்போல அவருக்கு ராகுல், நித்தி என இரண்டு ஆண்பிள்ளைகள். அவரின் மனைவி இரத்தினம். அவருக்குத் தெரியாத விரதமில்லை. தெரியாத கோயில் இல்லை. அவ்வளவு பக்தி.

சுப்பையா வீட்டுக்குப் பின் புறத்தில்த்தான் நடராசா வீடு. சுப்பையாவின் அம்மம்மாவும் நடராசாவின் அப்பப்பாவும் கூடப்பிறந்த சகோதரர்கள். நடராசா ஒரு சுருட்டுத் தொழிலாளி. நடராசாவின் வீடு ஒரு மண் குடிசைதான், அவர்களின் வளவும் அந்தளவுதான். நடராசாவின் வளவுக்கு வீதிக்குப் போகப் பாதை இல்லை. அதற்குரிய காரணம் யாருக்கும் தெரியாது. அவர் வீட்டு உறுதியிலும் வீதியைப் பற்றிய விளக்கம் சரியாக விபரிக்கப்படவில்லை. அது சுப்பையாவுக்கு மிகவும் வசதியாகி விட்டது.

சுப்பையாவின் வளவு எல்லையில்த்தான் ஒரு பாதை வைத்து நடராசா ஒழுங்கைக்குப் போய் வருவார். உண்மையில் அந்தப் பாதை அன்று தொட்டுப் பாவிக்கப்பட்ட பாதை. ஏதோ காரணத்தினால் உறுதியில் விளக்கமில்லாமல்ப் போய்விட்டது. நடராசாவின் வளவுக்கு கிணத்தடிக்குப் போகவென இன்னொரு ஒற்றையடிப் பாதையும் உண்டு. அப்பாதையால் ஒழுங்கைக்குப் போகமுடியும் ஆனால் அவ்வழியால் வாகனங்கள் வரமுடியாது.

சுப்பையாவுக்கு, நடராசாவுடன் ஒரு மனக்கசப்பும் சேர்த்து கொள்ள நடராசா பாவித்து வந்த தனது வளவு எல்லையிலிலுள்ள பாதையை மறித்து வீட்டைச் சுற்றி மதில் கட்டி விட்டார். கடனாளியான நடராசாவினால் தாம் பாவித்து வந்த பாதையை மீட்டுக் கொள்ள முடியாமல்ப் போய்விட்டது. எனவே கிணத்தடிக்குப் போகும் ஒற்றையடிப் பாதை நடராசாவின் புதிய பாதையாக மாறியது.

நடராசாவுக்கு அபிநயா, சந்தியா என இரு மகள்கள். மனைவி தங்கம்மா. நீ எவ்வளவு உழைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறாயோ அதற்கேற்றவாறு நான் வீட்டுச் செலவுகளை அமைத்துக் கொள்கிறேன் என்று வாழும் ஒரு பெண்மணி. பக்தியில் இரத்தினத்தை மிஞ்சிவிடுவார். நடராசாவுக்கு மூன்று பெண் சகோதரிகள். அவர்களைக் கரைசேர்க்க நடராசா பட்ட கடனே என்னும் செலுத்தி முடியவில்லை. சுப்பையாவிடமும் தனது வீட்டு உறுதியை அடகு வைத்து வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார். அதால சுப்பையாவுக்கு அவரின்ர காணியிலையும் ஒரு கண் இருக்குது. அதாவது நடராசாவால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல்ப் போனால் காணி தனக்குத்தான் வரும் என்ற ஒரு கள்ள எண்ணமும் அவருக்கு உண்டு.

அப்படியான திட்டத்தில் ஒன்றுதான் நடராசா பாவித்த பாதையை மறித்து மதில் கட்டியது.

அன்றும் அவ்வாறுதான் அபிநயாவும், சந்தியாவும் சுப்பையாவின் புளியடிக் காணியில் விளையாடப் போனார்கள். வழக்கமாக வரும் ராகுலும், நித்தியும் அன்று விளையாட வரவில்லை. அபிநயா அவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தாள் ராகுலும் நித்தியும் அவர்கள் வீட்டு முற்றத்தில் சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அபிநயா அவர்கள் வீட்டு வாசலில் நின்று கேட்டாள், “ராகுல் ஏன் இன்று நீங்கள் புளியடிக்கு விளையாட வரவில்லை?”

அதற்கு ராகுல் பதிலளித்தான் “நாங்கள் இனி உங்களோட விளையாட வரமாட்டம். அப்பா ஏசுவார். நீங்கள் உங்கட சிநேகிதங்களோடை   விளையாடுங்கோ.

ராகுலும், நித்தியும் பட்டினத்திலுள்ள கல்லூரியொன்றில் பத்தாம் வகுப்பும் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

அபிநயா மிகுவும் அமைதியானவள். சந்தியா மிகவும் துடிப்பானவள். ராகுல் இனி தம்மோடு வந்து விளையாட மாட்டோம் என்று கூறியது அபிநயாவினால் உடனடியாக ஜீரணிக்க முடியாமலிருந்து. தங்கையுடன் வீட்டுக்குப் போய் தாயிடம் முறையிட்டாள். அவை இனி எங்களுடன் விளையாட மாட்டினமாம். சுப்பையா மாமா சொன்னவராம். என்று சொல்லிச்சினம்.

தங்கம்மாவுக்கு நன்றாக உறைத்துவிட்டது. “சரி இனி நீங்கள் இண்டையிலை இருந்து அவையளோடை கதையாதேங்கோ. நீங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் இனி விளங்கவேணும். அதோட அவையள் பெரிய பணக்காரர். அவையின்டை காணிக்கை விளையாட விடமாட்டினம் தானே. எங்களுக்கு ஏன் இனி வீண் வம்பு. நீங்கள் பள்ளிக்கூடத்தில மத்தியானம் விளையாடுறது காணும்தானே. எங்களுக்கு என்ன பெரிய முத்தமே இருக்கு வீட்டில விளையாட. இனி நீங்களும் அங்க போகவேண்டாம்.” மனவேதனையுடன் கூறினார்.

சொல்லி முடிப்பதற்குள் சந்தியா கேட்டாள், “ஏனம்மா நீங்கள் பெரிய காணி வேண்டேல்லை.”

எனக்கென்ன தெரியும். நானும் ஒண்டும் கொண்டு வரேல்லை. உன்ரை அப்பாவும், உன்ரை மூன்று மாமி மாரும் இந்த வீட்டிலை தான் பிறந்து வளந்தவை. மாமிமார் கலியாணம் முடிச்சுப்போக உன்ரை அப்பாவுக்கு இந்த வீடு வந்தது. அப்பம்மாவுக்குக் கொஞ்சத் தேட்டக்காணி இருந்தது. அதெல்லாம் மாமி மாருக்குப் பிரிச்சுக் கொடுத்தாச்சு. உன்ரை மூன்றாவது மாமி காதலிச்சுக் கலியாணம் முச்சுக்கொண்டு அவரோட ஓடிப்போட்டா. அவையளும் சொத்துப் பத்துக்காரர். காணி ஒன்றும் கேக்கேலை. அதாலை இந்தக்காணி அப்பாவுக்கு வந்தது. இதை எழுதித் தரட்டா என்று அப்பா கேட்டவர். காணி வேண்டாம் காசு தரச் சொல்லிச்சினம். அதுதான் இதை சுப்பையா மாமாவிடம் அப்பா அடகு வைச்சு காசு வாங்கிக் கொடுத்தவர். இப்ப இது வட்டியும் முதலுமாகக் கட்ட முடியாமல் இருக்கு. இப்ப பாதையையும் மறிச்சு மதில் கட்டிப் போட்டினம். ஒருகட்டத்திலை கடனை அடைக்க முடியாமல்ப் போனால் இதை விட்டுப்போட்டு நாங்கள் வெளிக்கிடவேண்டி வரும்.

“அப்படி என்றால் நாங்கள் எங்கே போறது அம்மா?” சந்தியா மிகவும் பயத்துடன் வினவினாள்.

அப்படிக் கெதியா வராது. எதுக்கும் அந்தப் பிள்ளையார் ஒரு வளி விடுவார் தானே.

எப்படியும் இன்னும் ஒரு ஏழு அல்லது எட்டு வருஷம் பொறுத்திட்டா நான் படிச்சு முடிச்சு வேலை செய்து பார்த்துக் கொள்ளுவன் அம்மா, என்றாள் அபிநயா.

அபிநயா படிப்பிலே மிகவும் கெட்டிக்காரி. மிகவும் அமைதியானவன்.

அபிநயா கூறியதும் சந்தோசமான தாய் பயப்படாத நீ வடிவாய்ப் படி. அது போதும்.

வட்டி கட்டுறதைப் பற்றி எல்லாம் நீ பயப்படாத. அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்ளுவார். அவரை நம்பி யாரெண்டாலும் பணம் குடுப்பினம். தேவைப்படும் போது கடனும் வாங்கலாம். உங்கள் ரெண்டுபேரின் எதிர்காலம் தான் எங்களுக்கு முக்கியம். நல்லாய் படியுங்கோ. அம்மா கூறி முடித்தார்.

சரி அம்மா நாங்கள் இனி அங்க விளையாடப் போகேல்லை.

அவையளைக் கண்டாலும் இனி நீங்கள் கதைக்காதேங்கோ. அவை ஏதும் சொன்னா அப்பாவும் கவலைப்படுவார்.

“எல்லாம் இந்த அக்காவாலை தான். இனிப் புளியடிக்கும் போகேலாது விளையாடவும் ஏலாது” என்றாள் சந்தியா.

ஏன் என்னாலை எண்டு சொல்லுறாய். நான் என்ன செய்தனான்? என்று கேட்டாள் அபிநயா.

அது சரி நேற்று என்ன நடந்தது என்றார் அம்மா.

அம்மா நேற்று ராகுல் ஒரு பெரிய புளியம் பழத்தைக் கண்டிட்டு எடுக்கப் போகேக்கை அபிநயா ஓடிப்போய் அதை எடுத்துக் கொண்டு ஓடினவ. உடனே ராகுல் அக்கவைத் துரத்திக் கொண்டுபோய் கட்டிப்பிடிச்சுப் பறிச்சவர். அப்ப சுப்பையா மாமா அதாலை வந்தவர். கண்டிட்டு உடனே விளையாடியது காணும் இனி வீட்டை போங்கோ என்று சொன்னார். அதுதான் எல்லாத்துக்கும் காரணம் அம்மா. என்றாள் சந்தியா பொறுக்க முடியாமல். இனி விளையாட முடியாதே என்றாள் சலிப்புற்றவளாக.

திடுக்கிட்ட தங்கம்மா அதுதான் இப்படி ஏசினவர். நீ வளந்திட்டாய். எதுக்கும் ஒரு அளவு வேணும் என்றார்.

அம்மா புளியம்பழம் எடுத்துக் கொண்டு ஓட மற்றாள் துரத்திப் பறிக்கிறது இது சின்ன வயதில இருந்து விளையாடுறம் தானே. என்றாள் அபிநயா

அது சரி அபிநயா வயது ஏற ஏற எமது செயலிலும் மாற்றம் வரவேண்டும்.

செயற்பாடு ஒன்றாக இருந்தாலும் வயது ஏற ஏற அதன் அர்த்தங்கள் வேறு வேறு விதமாக அமையும். ஒரு குழந்தை சிரிப்பதற்கும் ஒரு பெரிய ஆணோ, பெண்ணோ சிரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு என்றார் தாய்.

அபிநயா அமைதியானாள் அவளுக்குள் பல சிந்தனைகள் எழத் தொடங்கியது. ராகுல் தன கைகாளால் தன்னைக் இறுக்க கட்டிப் பிடித்து அந்தப் பழத்தைப் பறித்ததை ஒருமுறை நினைவு கூர்ந்து கொண்டாள். அதுதானே சுப்பையா மாமா வழக்கமாக விளையாடும் மாங்கொட்டைத் தாளத்தை விட்டுப்போட்டு புளியம்பழம் எடுத்து விளையாடுறியளோ என்று கேட்டவர். எதுவாக இருந்தாலும் இண்டையோட எல்லாத்துக்கும் முற்றுப் புள்ளி வைச்சாச்சு. ஆனால் ராகுல் நல்ல பிள்ளை. என்னோட ஒருநாளும் பிழையாக எதுவும் கதைக்கிறேல்லை. பணக்காரன் என்ற திமிர் கூட இல்லாதவன். எப்படியெண்டால் என்ன இண்டையோட எல்லாம் சரி. சுப்பையா மாமா ஏசினத்துக்கு அதுதான் காரணமோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியேல்லை, என்று எண்ணியவாறு தனது படிப்பை ஆரம்பிக்க தயாரானாள் அபிநயா.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. பாடசாலைக்குப் போய்வரும் வேளையில் ராகுல் அவளைக் கண்டால் புன்னகைப்பான். அவளும் பதிலுக்குப் புன்னகைப்பாள். அத்துடன் சரி. ஒரு நாள்க்கூட இருவரும் பேசியதில்லை. பேசவும் நினைத்ததில்லை. அபிநயாவுக்கு அது தேவைப்படவும் இல்லை.

தனது இரு பெண்களும் வளர்ந்து கொண்டிருந்தது நடராசாவுக்கு உள்ளுக்குள் சிறிது கலக்கமாகவும் இருந்தது. பெண் பிள்ளைகள் வளரும்போது அவர்களை வீட்டில் ராணி மாதிரி வளர்க்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்போதுதான் அவர்கள் எதிர்காலத்திலும் கௌரவமாக வாழ்வார்கள். அவர்களை அப்படி வளர்க்க முடியவில்லையே என்ற கவலை அவருக்கு. அபிநயாவின் படிப்பில் அவருக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தாலும் தனது கடன் தொல்லை என்னென்ன பிரச்சினைகளைக் கொண்டுவந்து அவளின் படிப்பையும் குழப்பிவிடுமோ என்ற கவலையும் அவருக்குள் இருந்தது.

தீபாவளி, வருசம், பொங்கல் போன்ற நாட்களிலும் தன் பிள்ளைகளுக்குத் தன்னால் எதுவும் செய்ய முடியாமலிருக்கும் போது தன் மனைவி தங்கம்மாவிடம் கூறி வேதனைப்படுவார். வாங்கிய கடனை எப்படிச் செலுத்துவது வீட்டை எப்படி மீட்டெடுப்பது என்பதுதான் அவரின் பெரிய பிரச்சினையாக இருந்தது. சுப்பையாவிடம் வாங்கிய கடனைக் கொடுத்து வீட்டை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை நடராசாவுக்குத் துளிகூட இல்லாமலிருந்தது. 

அப்படியான நாட்களில் ஒருநாள் சுப்பையா நடராசாவைக் கூப்பிட்டு கதைத்தார். இந்தா பார் நடராசா வட்டி முதலுக்கு மேல வந்திட்டுது. என்னும் நாலு அல்லது ஐந்து வருஷத்தில் உந்த வளவின்ர பெறுமதியை விட நீ தரவேண்டிய வட்டிக் காசின்ர பெறுமதி கூடிவிடும். உன்னால் இனி மீட்க்க முடியாதெண்டால் வேறு ஒழுங்குகள் தான் செய்ய வேணும். பெரியவனும் கிளிநொச்சியில் வாத்தியார் வேலை எடுத்திட்டான். தெரியும் தானே. இனி அவனையும் ஒரு பாதையில விடவேணும். காசும் தேவைப்படும். எனக்கும் வயதுகள் போகுது. நான் இருக்கும்போதே பிரச்சினைகளைத் தீர்த்துப் போடவேணும். இனி உன்ர காணிக்கும் நல்ல பாதை இல்லை. எல்லாம் யோசிச்சு கெதியில் ஒரு முடிவைச் சொல்லு என்றார் சுப்பையா.

நடராசா எதிர் பார்த்துத்தான் இருந்தவர். இருந்தாலும் மனதில் புதிய பயம் தொற்றிக் கொண்டது. அவ்வேளைத்தான் அபிநயா உயர்தர பரீட்ச்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வர்த்தக பட்டப் படிப்புக்கு இடம் கிடைத்தது. நடராசாவின் மனதுக்குச் சந்தோசமாக இருந்தாலும் அவள் படிப்பு முடியும்வரை அவளின் படிப்புக்கும் செலவழிக்க என்ன செய்வதென்றும் கவலைப்பட்டார். மேலும் மேலும் கடன் வாங்கி என்ன செய்வதென்றும் மிகவும் மனக்கவலை அடைந்தார். கடைசியில் பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது கடனோடு இருந்து என்ன செய்வதென்றெல்லாம் தங்கம்மாவிடமும் கூறிக் கவலைப்பட்டார்.

அபிநயா எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டாள். தனது கல்வி எவ்வித தடையும் இல்லாமல்த் தொடர வேண்டுமென்பதிலும் மிகவும் கவனமாக இருந்தாள். அவள் கூறினாள் அப்பா என்ர கலியாணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனது படிப்புதான் இப்ப முக்கியம். எமக்கு இருக்கும் இவ்வளவு கடனுக்கு மத்தியில் என் கலியாணம் ஒரு பிரச்சினை இல்லை. தேவைப்பட்டால் என் கல்யாணத்தைக் கூடத் தியாகம் செய்வேன். இப்ப எனக்குத் தேவை இந்தப் பட்டப் படிப்பு மட்டும் தான். மூன்று வருடங்கள் படித்து முடித்து விட்டால் எனக்கு நல்ல வேலை கிடைக்கும். அப்ப எல்லாக் கடனையும் நான் குடுத்து முடுச்சுப் போட்டுத்தான் எனது கலியாணத்தைப் பற்றி யோசிக்கிறது. அது மட்டுமில்ல இந்தப் பாதை இல்லாத காணியையும் சுப்பைய்ய மாமாவிடம் குடுத்துப் போட்டு நாங்கள் எங்காவது வாடைக்கு வீடெடுத்துப் போகலாம். என்று மிகவும் உறுதியாகக் கூறினாள்.

நடராசாவின் மகளுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைச்சது சுப்பையா மாமா உட்பட பலருக்கு ஒரு பொறாமையையும் கொடுத்தது. தங்கடை பிள்ளைகளுக்கு கிடைக்கேல்லை இவளுக்கு கிடைத்து விட்டது என்ற பொறாமைதான்.

நடராசவைக் காண்பவர்கள் எல்லாம் புத்தி கூறுவதுபோல “என்ன நடராசா அவள் மூன்று வருஷங்கள் படிச்சுப்போட்டு என்ன செய்யப் போகிறாள். நீயும் கடனோட திரியிறாய். வீணாக் காலத்தை வீணடிக்காமல் அவளுக்கு ஒரு வேலை எடுத்துக் குடுக்கப்பார். உனக்கும் பாரம் குறையுமல்லவா” என்பதுதான் அவர்களது அறிவுரையாக இருந்தது. அதில என்ர பிள்ளைக்குக் கிடைக்காதது உன்ர பிள்ளைக்கும் கிடைக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

அந்த நாட்களில் ஒருநாள் சுப்பையா அவரைக் கூப்பிட்டு கேட்டார் “என்ன நடராசா மக்களுக்கு மேல்படிப்புக் கிடைச்சிருக்காம்?”

 ஓ அவள் தான் படிக்கப்போறன் எண்டு விடாப்பிடியா நிக்கிறாள். அவள் படிச்சு ஒரு வேலை எடுத்திட்டால் எனக்கும் பாரம் குறைஞ்சிடும். வாங்கின கடனுகளையும் குடுத்திடலாம். அதொன்றுதான் எனக்கு எப்ப இருக்கிற ஒரே ஒரு நம்பிக்கை. காசில்லாததுதான் எனக்கு என்ன செய்யிற தென்று தெரியேல்லை.

“அது சரிதான் நடராசா வேலை என்ன படிச்சு முடிச்சவுடன் கிடைக்குதோ. படிச்சுப்போட்டு உங்க கனபேர் வேலை இல்லாமல் இருக்கினம் ஏதோ யோசிச்சுச் செய். அதோட என்ர கடனைத் திருப்பிக் கொடுத்தாலும் உன்ர பாதை இல்லாத உந்தக் காணியை யார் வாங்கப் போயினம். நல்லா யோசிச்சுப் பார்” என்றார் சுப்பையா.

அவள் படிச்சு முடிக்கும் வரை இந்தக் காணியில் இருக்க விடு. என்னாலை இந்த வீட்டை மீட்க்க முடியுமென்ற நம்பிக்கை இல்லை. அவள் படிச்சு முடிச்சவுடன் ஒரு வேலை கிடைக்குதோ இல்லையோ இந்தக் காணியை உனக்குத் தந்திட்டு நாங்கள் வேற இடத்துக்குப் போறம். அதுவரை பொறுத்துக்கொள் சுப்பையா என்றார் மிகவும் மன்றாடுவதுபோல.

எனக்கென்ன உன்ர காணியில் ஆசையே. எல்லோருக்கும் உதவி என்று கடன் கொடுக்க, என்ர கையில காசு இருக்காது. அதுதான் சொன்னனான். எனது கொடுக்கல் வாங்கல்களை நான் இருக்கும்போதே தீர்த்துப்போட வேணும். சரி எதோ அவளை படிப்பிச்சு கெதியில வேலை எடுக்கப்பார். என்கிறார் சுப்பையா.

நடராசா புரிந்து கொண்டார். என்ர பிள்ளையின் படிப்புக்கு அவர் புத்தி சொல்லுறார். அவருக்கு அவளின் படிப்பில் பிரச்சினை இல்லை. என்ர காணிதான் அவருக்குப் பிரச்சினை.

வீட்டுக்குப் போன நடராசா மனைவியிடம் நடந்ததைக் கூறினார். தங்கம்மாவுக்கும் சிறிது நிம்மதியாக இருந்தது. அவள் படிச்சு ஒரு வேலை கிடைக்கட்டும். இந்த வீடு வளைவை சுப்பையாவிற்குக் குடுத்திட்டா ஒரு பெரிய கடன் தீர்ந்துவிடும். பிறகு சில்லரைக் கடன்கள் தானே அது பெரிய பிரச்சினை இல்லை. அவளும் வேலை செய்யத் தொடங்கினால் அடைச்சுப் போடலாம்.

அபிநயா தனது விதியை எண்ணி நொந்து கொண்டாள். இருந்தும் சுப்பையா மாமா தான் படிச்சு முடிக்கும்வரை கடன் பிரச்சினையை விட்டுக் கொடுத்தது மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

சுப்பையாவின் எண்ண மெல்லாம் நீங்கள் என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் உந்தக் காணியை எனக்குத் தந்துவிட்டால்ச் சரி என்பதுதான்.

அப்பா சுப்பையா மாமாவுக்கு எவ்வளவு தோட்டக்காணி இருக்கு அப்படி இருந்தும் இந்த ஒரு சின்னத் துண்டுக் காணிக்கு இவ்வளவு ஆசைப் படுகிறார் என்றாள் அபிநயா.

நடராசா தொடர்ந்தார். அபிநயா பணக்காரருக்கு எதிலும் திருப்பதி வராது. இருக்கிற காசை என்ன செய்வது என்று தெரியாமல்த் திரிவினம். என்னை மாதிரி தவிப்பவர்கள்தான் அவர்களது இலக்காக இருக்கும். அவையின்ர பாதையும் எங்கட பாதையும் ஒன்றுதான். பொதுவானது. அந்த உறுதியில வடிவாக எழுதவில்லை. அதை வைச்சு பாதையை மறிச்சு மதிலும் கட்டிப் போட்டார். அதால நாங்கள் அந்த புளியடி வளவுக் குள்ளாலை போறதாலை அந்தப் பாதையையும் கெதியில மறிச்சுப் போடுவார். அதுக்கும் மதிலைக் கட்டிவிட்டா, பிறகு நாங்கள் கிணத்தடியாலை தான் போகவேணும். கோட்டுக்குப் போக செலவழிக்க என்னட்டை என்ன காசு இருக்கே. வீட்டு உறுதியும் அவரிட்ட. உன்ர படிப்பு முடியும் வரை பொறுத்துக் கொள் பிறகு இந்த வளைவை அவரிட்டைக் குடுத்து கடனை அடைச்சுப் போட்டு, வாடகைக்கு எங்கயாவது வீடு பாப்பம்.

தங்கம்மா தொடர்ந்தார் “அடுத்த மாதம் அபினாவின் படிப்பு தொடங்குது எப்படியும் கொஞ்சக் காசு தேவைப்படும். நானும் தோட்டத்தில வேலை செய்தால்க் கொஞ்சம் வரும். சமாளிக்கலாம்.

அபிநயா பல எண்ணங்களை சுமந்தவாறு தனது படுக்கைக்குப் போனாள்.

அடுத்தானாள் வேலைக்குப் போன நடராசா சிறிது நேரத்தில்த் திரும்பி வந்தார். மனைவியை அழைத்து “தங்கம்மா காசு கூட்டித் தரச் சொல்லி கூலிக் குழப்பமாம் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு வேலை இருக்காது போலத் தெரியுது” என்றார்.

ஆனால்க் கூலிக்குழப்பம் ஒரு வாரத்துக்கு மேலாக நீண்டது. வருமானம் இல்லாது நடராசா வீட்டில் சமைக்க முடியவில்லை.

பிள்ளையின் படிப்புக்கும் பணம் வேணும் ராசய்யாவிடம் கொஞ்சம் கடன் கேட்கலாம் என்று தீர்மானித்தார்.

தங்கம்மாவிடம் சொல்லிப்போட்டு ராசையா வீட்டை போய் நிலமையைச் சொல்லிப் பணம் கடன் கேட்டார்.

ராசையா சொன்னார் உனக்கு நான் அண்டைக்கே சொன்னனான் உன்ர மகளுக்கு என்ன படிப்பெண்டு. உன்னட்டைக் காசு இல்லை. ஊரெல்லாம் கடன். இருக்கிற வீட்டுக்கும் போய்வரப் பாதை இல்லை. உன்ர மகள் படிச்சு முடிச்சு அவள் உழைச்சு உன்ர கடனைத் திருப்பிக் கொடுப்ப தென்பது என்ன லேசுப்பட்ட காரியமே. அவளை, உன்ர மனிசியோட வேலைக்கு அனுப்பு, இல்லாட்டில் எங்கயாவது ஒரு கடையில வேலைக்கு விடு எதுக்கும் யோசிச்சு செய். நெடுகக் கடனுக்கு வராதை என்று மிகவும் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

சரி அன்னை அதுக்கு ஏன் இப்படிக் கத்துகிறாய். றோட்டில போற வார எல்லாருக்கும் கேக்குது. நான் என்ன செய்யிறது அவளும் படிக்கப் போறன் எண்டு நிக்கிறாள். நானும் கடனாளி. ஊருக்குள்ள எல்லாருக்கும் என்னைத் தெரியும். பிறகு ஏன் பயப்பிடுகிறாய்.

நான் கடனாளியா இருக்கிறன். ஊருக்குள்ள எல்லோரிடமும் கடன் வாங்கி இருக்கிறன். குடிச்சு வெறிச்சு ஊருக்குள்ள திரியிறனே? சுப்பையாவும் நானும் ஒரே பரம்பரை. எதோ வழியில அவர் பணக்காரன், நான் ஒரு ஏழை.  அவரின்ட பணத்தால என்ரை பாதையை அடைச்சுப் போட்டார். என்ன செய்யிறது. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் தானே அண்ணை. என்று பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வழியால் வந்த சுப்பைய்யா அவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதை ராசையா வீட்டுப் படலையில் நின்று பார்த்தார். தனது மிதிவண்டியை திருத்துவது போல பாசாங்கு செய்தார்.

இதனை அவதானித்த நடராசா எதுவும் கூறாது தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டார்.

வீட்டுக்குத் திரும்பிய நடராசா தங்கம்மாவிடம் கொஞ்சம் தண்ணி தா என்று கூறிச் செம்பில் வாங்கிப் பருகிக் கொண்டிருக்கும் போதே அப்படியே திண்ணையில்ச் சாய்ந்தார். பேச்சு மூச்சற்றுப் போனார்.

தங்கம்மா கத்தினார்” ஐயோ ஐயோ எழும்புங்கோ”

சமைத்துக் கொண்டிருந்த அபிநயா ஓடிவந்து “அப்பா அப்பா” என்று கத்தினாள்.

அவர் வீட்டில் ஊரே கூடிவிட்டது. சத்தம் கேட்டு சுப்பையா மாமாவும் வந்தார். அதிர்ந்து போனார். வீடு நிரம்பி புளியடிக் காணிக்குள்ளும் அயலவர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். சுப்பையா மாமியும் கவலையுடன் ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தார்.

சுப்பையா ஒரு கதிரையில் யாருடனும் எதுவும் பேசாது எதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பது போலக் காணப்பட்டார். நடராசாவின் இரு சகோதரிகள் சில மணி நேரத்தில் வந்துவிட்டனர். ஒரு சகோதரி தூரத்தில் இருப்பதால் வரத் தாமதமாகியது. அதனால் அடுத்தானாள் சுடு காடு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.

சுப்பையா எதுவும் பேசவில்லை. சில மணி நேரத்தில் வீட்டுக்குப் போனார். நீண்ட நேரமாக யாருடனோ உரையாடினார். தனது மனைவியையும் அழைத்து உரையாடினார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. 

அபிநயாவுக்கு மட்டும் புரிந்துவிட்டது. தம்மை அப்படியே வீட்டை விட்டு எழுப்புவதற்கு முடிவெடுக்கிறார் என்பது. சரி வெளிக்கிடுவோம். முதலில் அப்பாவின் சடங்குகள் முடியட்டும்.

மீண்டும் திரும்பி வந்த சுப்பையா அதே கதிரையில் அமர்ந்தார். அவரது கையில் ஒரு பெரிய கடதாசிக் கட்டு இருந்தது. அவரது எடுபிடி துரை மிகவும் விரைவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.

அவரின் காதில் ஒருவன் கூறினான் “அண்ணை நாளை காலை பத்துமணிக்கு எடுக்கலாம்.” அப்படியே தலையாட்டிவிட்டு இருந்தார் சுப்பையா.

சுப்பையா வீட்டில் இருந்து கொண்டுவந்து, வந்தவர்களுக்கு தேநீர் சிற்றுண்டி என்பன பரிமாறப்பட்டது.

அபிநயாவுக்கு மட்டும் புரிந்தது அவர் ஊருக்கு நடிக்கிறார் என்பது.

எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்பாவும் போட்டார். நாளைக்கு நாமும் வீட்டை விட்டு வெளிக்கிட வேணும். அந்த சிங்கப்பூர் காணி யாரும் இல்லாமல் சும்மா இருக்கு. நாங்கள் அங்க கொஞ்ச நாளைக்கு கொட்டில் கட்டித் தங்குவம். யாரும் கேக்க மாட்டினம். என்று என்று அந்தக் கவலைக்குள்ளும் முடிவெடுத்தாள் அபிநயா.

அபிநயாவும் சந்தியாவும் கதறிக் கதறி அழுதார்கள்.

அன்று இரவு சுப்பையாவின் மனைவி அங்கேயே தங்கினார்.

அடுத்தநாள் விடிந்தது. சுப்பையாவின் கையாள் துரை காரில் ஏறிச் சென்றார். சிறிது நேரத்தில்த் திரும்பி வந்த துரை நேரடியாக சுப்பையாவிடம் சென்று காதில் ஏதோ சொல்ல சுப்பையா அவருடன் புறப்பட்டுச் சென்றார். ஏதோ செய்ய முற்படுபவர் போல மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.

இறுதிக் கிரியைகள் ஆரம்பமாக இருந்த வேளை துரை வந்து சுப்பையா மாமாவின் காதில் ஏதோ சொல்ல “இன்று காரியம் செய்ய முடியாது நாளைதான் செய்யலாம். வாசல்ல சல்லி லொறி வந்து நிக்குது. பழுதாப் போச்சுது. அதாலை இன்று சாயந்தரம் செய்யலாம். அல்லது நாளைக்கு காலையில் செய்யலாம் என்றார்.” சுப்பையா அம்மானை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை.

சுப்பையா கதிரையில் இருந்தவாறு எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் குனிந்தவாறு ஏதோ சிந்தனையுடன் அமர்ந்து கொண்டார்.

அபிநயா தனது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அழுதவாறு எழுந்துபோய் அவருக்கு முன் நின்று மெதுவாகக் கூறினாள் “சுப்பையா மாமா இந்த வளவுதானே உங்களுக்கு வேணும். அப்பாவோடயே நாங்களும் வெளிக்கிடுகிறோம். கிரியைகளை நடக்க விடுங்கோ. முடிச்சிட்டு நாங்கள் வெளிக்கிடுகிறோம்.” என்றாள்.

அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த சுப்பையா மீண்டும் தனது தலையைக் குனிந்து கொண்டார்.

மதியம் கடந்தது துரை மீண்டும் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் துரை திரும்பி வருவதைக் கண்டு கொண்ட சுப்பையா தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்தக் கார் சுப்பையா வீடு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து ராகுல் இறங்கிக் கொண்டான். தாய் தப்பனுடன் உரையாடினான். அவர்கள் வீட்டு மதிலுக்குள் நடந்தது வெளியில் யாருக்கும் தெரியாமலிருந்து.

புளியம் வளவுக்குள் துரை மிகவும் மிடுக்காக நடந்து வந்தார். அவரின் செயற்பாடு அங்கிருந்தவர்களுக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது.

அவர்களின் பாதையை மறித்துக் கட்டிய மதிலுக்கு அருகில் ஒருவர் கையில் ஒரு அலவாங்குடன் நின்று கொண்டிருந்தார். அழுதழுது சக்தியற்ற நிலையிலிருந்த அபிநயாவினால் எதனையும் ஊகிக்க முடியாமலிருந்து.

அலவாங்குடன் நின்றவனைப் பார்த்து துரை குரல் கொடுத்தார் “உடை”

சொல்லி முடிப்பதற்குள் மதிலிருந்து ஒரு கல்லு விழுந்தது. சிறிது நேரத்தில் மதில் உடைக்கப்பட்டு அவர்கள் பாவித்த அந்த பாதை திறக்கப்பட்டது.

அபிநயா எண்ணிக் கொண்டாள் எல்லாரும் வெளிக்கிடப் போயினம் என்ற எண்ணத்தில்தான் இந்த மதிலை உடைச்சவர். தான் நல்லவர் போல ஊருக்குக் காட்டுகிறார். நாங்களும் அப்படியே வெளிக்கிடுவம். பெரிய மாமி வீட்டில ஒரு கிழமை இருந்திட்டு அந்த சிங்கப்பூர் காரரின்ட வளைவை துப்பரவாக்கிப் போட்டு அங்க போய் இருப்பம்.

அந்த மதிலைக் கடந்து அந்தப் பாதையால் சுப்பையா நடந்து வந்தார். அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் அவரைத் தொடர்ந்து ராகுலும் வந்தார்கள். நேரடியாகப் போய் சுப்பையா தனது இடுப்பில்ச் செருகியிருந்த பத்திரத்தை எடுத்து நடராசாவின் காலடியில் வைத்தார். கையெடுத்துக் கும்பிட்டார். கண்கள் கலங்கி இருந்தது.

தங்கம்மா, அபினயா, சத்தியா ஆகியோருக்கு எதுவும் புரியவில்லை. ஏன் ஊராருக்குக் கூட எதுவும் புரியவில்லை.

நேராக நடராசைவின் உடலைப் பார்த்தவாறு அப்படியே அசையாமல் நின்றார் சுப்பையா. அவரின் மனைவி ரத்தினம் போய் அபிநயாவின் அருகில் அமர்ந்து கொண்டார்.

அபிநயாவைப் பார்த்தார் சுப்பையா. மெல்லிய அந்த வெள்ளை உடல் அழுதழுது முகம் சிவந்து, தகப்பனைப் பிரிந்து ஏங்கி அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல்த் திகைத்துநின்ற அந்த முகத்தைப் பார்த்தார். அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. “நடராசா நடராசா” என்று கூறியபடி சிறிது உணர்ச்சி வசப்பவராகக் காணப்பட்டார்.

நிமிர்ந்து பார்த்தார் அவரது முகம் நல்ல தெளிவாக இருந்தது. நேராக அபிநயாவிடம் போனார். சோர்ந்து போயிருந்த அபிநயாவை அவரது மனைவி இரத்தினம் தூக்கி நிறுத்தினார். பின்னல் நின்ற ராகுலின் கையைப் பிடித்த சுப்பையா அபினாவின் கைகளை பிடித்து இழுத்து ராகுலின் கைகளில் கொடுத்தார். ராகுல் அவளின் கைகளைப் பலமாகப் பற்றிக் கொண்டான்.

எதனையோ எதிர்பார்த்திருந்த அபிநயாவினால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தும் தனது தந்தையாரின் நேர்மையான வாழ்க்கைமுறை. அவரது கருணை உள்ளத்துக்கு ஒரு பலன் அவரது மரணத்தில்க் கிடைத்து விட்டதாக எண்ணிக் கொண்டாள். எதிர்பாராமல் நடந்த நிகழ்வினால் அவள் சற்று அதிர்ச்சி அடைந்தவளாகவும் காணப்பட்டாள். மிகவும் திகைப்புடன் அவளது தாய் தங்கம்மாவும் தங்கை சந்தியாவும் சுப்பையா மாமாவின் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அபிநயா சுப்பைய்யா மாமாவின் கால்களில் விழுந்து கத்தத்   தொடங்கினாள். இராசம்மாவின் கால்களிலும் விழுந்தாள். இராசம்மா அவளை கைகளில்த் தாங்கிக் கொண்டார்.

ராகுல் அவளது தோள்களை பற்றியவாறு நின்றிருந்தான்.

நடராசா என்ற அந்த நேர்மையான கடின உழைப்பாளியின் இறுதி ஊர்வலம் புறப்படத் தயாரானது.

அந்தப் பாதையை திறப்பதற்கு நடராசா தனது உயிரைக் கொடுக்க வேண்டி இருந்தது. அந்த நாடாராசாவின் வளவை எடுப்பதற்கு சுப்பையா மாமா தனது மகனைக் கொடுக்க வேண்டி இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ராகுல் அன்று அவளைக் கட்டிப் பிடுத்து அந்தப் புளியம் பழத்தைப் பறித்தது அன்றிலிருந்து அவன் அவளுடன் பழகுவதை சுப்பையா மாமா தடைசெய்தது அன்றுதான் ராகுல் முடிவெடுத்திருந்தான் காலம் வரும்போது அபிநயா தான் என்மனைவி. இன்று நிறைவேறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %