சுவாமி முக்தானந்தா சரஸ்வதி

0 0
Read Time:7 Minute, 0 Second

சுவாமி முக்தானந்தா சரஸ்வதி அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காசியிலே ஆசிரமம் அமைத்து அங்கு தங்கி இருந்து பல ஆன்மீகச் சேவைகள் ஆற்றி வருகிறார். முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் காசி ஶ்ரீ விஸ்வநாதரை தரிசிக்கச் செல்லும் வேளைகளில் அவர்களுக்கு உதவும் முகமாக, அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் செய்வதில் இருந்து அவர்களுக்கு ஏற்படும் மொழிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது மற்றும் மடங்களில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது, சுவாமி தரிசனம் செய்வதற்கு வழிகாட்டுவது உட்படப் பல தொண்டுகள் செய்து வருகிறார்.

இவரது இயற்பெயர் முருகேசன் ஆகும். இவரது பூர்வீகம் என்று பார்க்கும்போது இவரது தாயார் மதுரை மற்றும் தந்தையார் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அந்தணப்பேட்டை என்ற கிராமத்தில்ப் பிறந்தார். பின்னர் இவர் தனது பெற்றோருடன் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டைக்கு அருகில் அமைந்த முருங்கப்பட்டி என்ற கிராமத்துக்குச் சென்று தனது சிறு வயதினைக் கழித்துக் கொண்டார்.  இவர் தனது கல்வியினை குடிமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் கற்று பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தனது MA, MPhil பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

பட்டதாரிப் பட்டம் பெற்றுக்கொண்ட இவர் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள RGM மானூர்ப்பாளயம் என்ற பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். 

சிறு வயதில் இருந்தே பக்தியில், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இவர் தனது ஏழாவது வயதில் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆச்சிரமத்தில் முதலாவது ஆன்மீக அனுபவத்தினைப் (தீட்ச்சை) பெற்றுக் கொண்டார். பின்னர் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் 1989 ஆம் ஆண்டு பக்தர் குழாமுடன் காசியாத்திரை சென்றார். அப்போது இவர் காசி ஶ்ரீ விஸ்வநாதனால் மிகவும் ஈர்க்கப்பட்டு தனது ஆசிரியர் பதவியினைத் துறந்து விட்டுக் காசியிலே தங்கிவிட்டார்.

அந்நாட்களில் இவர் ரிஷிகேஷில் வாழ்ந்து வந்த வேதாச்சாரியார் ராகேஷ் ஆனந்தா மகராஜ் சுவாமிகளிடம் இருந்து முறைப்படி ஆன்மீகப் பயிற்சி (வேதங்கள், மறைகள், ஆகமங்கள், யோகப் பயிற்சி, பூஜை விதிமுறைகள்) கற்று, பிரம்மச்சாரியமும், சந்நியாசத்   தீட்சையும் பெற்றுக் கொண்டார். அப்போது இவரது குருவிடம் இருந்து “முக்தானந்தா சரஸ்வதி” என்ற சந்நியாசிப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

தீட்சை பெற்ற நாளில் இருந்து சந்நியாசி வேடம் பூண்டு குருவின் ஆசியுடன் ஒரு வருட காலம் இந்தியாவின் பல பாகங்களுக்கும் யாத்திரை சென்று மக்களுக்கு அறியாமையைப் போக்கி ஆன்மீகச் சிந்தனைகளை வளர்த்து வந்தார். அதன் பின்னர் காசி மற்றும் ஹரித்துவார் ஆகிய இடங்களில் தங்கி இருந்து தனது ஆன்மீகப் பணிகள் ஆற்றி வருகிறார்.

காசியில் வாடகைக் கட்டிடத்திலேயே இவரது ஆசிரமம் அமைந்துள்ளது. தினமும் காலை 8 மணி அளவிலும் மாலை 7 மணி அளவிலும் காசியில், கங்கைக் கரையில் நாரத் காட் Narad Ghat (Ghats in Varanasi are riverfront steps leading to the banks of the Ganges river – வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரைக்கு செல்லும் ஆற்றங்கரை படிகள் ஆகும். இந்நகரில் 84 Ghat உள்ளன. பெரும்பாலான காட்களில் குளித்தல் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன)) என்ற படித்துறையில் சாதுக்கள், சந்நியாசிகள் மற்றும் யாத்திரீகர்களுக்கு நித்திய அன்னதர்ம சேவை (தினமும் அன்னதானம்) ஆற்றி வருகிறார்.

இவரது ஆன்மீகப் பணியின் தொடர்ச்சியாக எதிர்வரும் தை 14 முதல் (Jan 14, 2025) ஹரித்துவாரில் பக்தர்கள் தங்கும் வசதியுடன் “சார்தாம்” என்ற பெயரில் ஒரு புதிய ஆசிரமம் அமைய இருக்கிறது. அத்துடன் பக்தர்கள் கங்கோத்திரி, யமுனோத்திரி, பத்திரிநாத், கேதாரிநாத் மற்றும் ரிஷிகேஷ், ஹரித்துவார், உத்தரகாசி ஆகிய புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்புபவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் உட்பட அவர்களுக்கு வேண்டிய உதவிகளும், சேவைகளும் தொடர உள்ளது.

இவருடன் நான் உரையாடியபோது கூறினார் “தமிழ் மக்கள் காசி விஸ்வநாதரை தரிசிக்க வரும்போது மொழிப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை மற்றும் தங்குமிடப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனது ஆன்மீகப் பணியாக என்னால் முடிந்தவரை அவர்களுக்கு சேவை செய்கிறேன். இலவச உணவு (அன்னதானம்), தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கிறேன். அது மட்டுமல்லாமல் அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பி வரும்வரை உண்பதற்காக இலவசமாக உணவுப் பொதிகளும் கொடுத்து விடுகிறேன்” என்று கூறியிருந்தார்.

இவர் தனது ஆன்மீகப் பணிக்காக “Kasi SSSS Trust and NGO” என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

சுவாமிகளை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %