ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்

0 0
Read Time:59 Minute, 8 Second

முதலில் ஔவையாரின் வரலாறு

ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார்.

தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது அவர்கள் ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்வ தென்றும், தாம் போகும்வழியில் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவ்வூரிலேயே விட்டுச் செல்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டனர். அப்படியாக அவர்களுக்குப் பிறந்த முதன் மகன் “திருவள்ளுவர்” எனவும் ஏழாவது பெண் குழந்தையாக ஒளவை, “பாணரகம்” என்ற ஊரில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கூறுகின்றது.

அதாவது

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

என்ற குறளே திருவள்ளுவர் எழுதிய முதற் குறளாகும். அதில் குறிப்பிட்டுள்ள “ஆதி பகவன்” என்பது “சிவன் உமை” யைக் குடிறிப்பிடுவதாகவும் அதே நேரத்தில் தனது தாய் தந்தையராகிய ஆதி பகவனைக் குறிப்பிடுவதாகவும் அறியப்படுகிறது.

திருவள்ளுவர், இரு வரிகளில் எழுதிய திருக்குறளை, இருவரியில் உள்ள குறள் என்று கூறி தமிழ்ச்சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் வரலாறு கூறுகின்றது.

திருக்குறளை “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்.” என ஔவையார் குறிப்பிடுகிறார்.

இவர் காலத்தில் வாழ்ந்த அதியமான் நெடுமான் என்ற அரசன் ஔவையின் பக்தியையும், தமிழ்ப் புலமையையும் வியந்து அவர்பால் உள்ள பற்றினால், ஒள‌வைக்கு மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனியை கொடுத்ததாகவும் அதனை உண்ட அவ்வையார் காலத்தை வென்று பலகாலம் வாழ்ந்தார் எனவும் வெவ்வேறு காலகட்டத்தில் பல பாடல்களை எமக்களித்தாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
இருந்தும் சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி வெவ்வேறு காலகட்டத்தில் ஒள‌வை எனும் பெயரில் மூன்று அல்லது நான்கு தமிழ்ப் பெண் புலவர்கள் ஒருமித்த குணாதி சயங்களோடும், புலமையோடும் வாழ்ந்துள்ளதாகவும் எமக்குப் பாடல்கள் தந்தாகவும் கூறப்படுகிறது.

அவர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலகட்டத்தில் வாழ்ந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.

ஔவையார் இளம் பிராயத்திலிருந்தே தமிழ்ப் பற்றும் தமிழில்ப் புலமைத்துவமும் உள்ளவராக விளங்கினார். விநாயகக் கடவுள் மீது அளவு கடந்த பக்தியுள்ளவராகவும் இருந்தார். தினந்தோறும் விநாயகருக்கு பூசைகள் செய்து வழிபட்ட பின்னரே அவரது அன்றாடக் கடமைகளை ஆரம்பிப்பார். இவ்வாறாக இவர் வளர்ந்து கன்னிப் பருவத்தை அடைந்தபோது இவரை வளர்த்த இவரது பெற்றோர்கள் இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். திருமணத்தை விரும்பாத ஔவையார் விநாயகரிடம் சென்று முறையிட்டு பூசைகள் செய்து, விரதமிருந்து வழிபட்போது அதனை ஏற்றுக் கொண்ட விநாயகர் அவருக்கு முதுமைக் கோலத்தினை வழங்கியதாகவும் அன்று முதல் எல்லோரும் அவரை “ஔவைப் பிராட்டி” என அழைத்ததாகவும் அறியப் படுகிறது.

அதியமான் நெடுமான் என்ற அரசனிடமிருந்து பெற்ற மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக் கனியை உண்டதனால் அந்த முதுமைக் கோலத்திலேயே நீண்ட காலம் வாழ்ந்து விநாயகரை வழிபட்டு பூசைகள் செய்து விநாயகர் மூலமாக, யோகத்தின் மூலம் முத்தியடையும் தத்துவத்தை அறிந்து அதனை எமக்கு “விநாயகர் அகவல்” என்ற ஞான நூலாகத் தந்துள்ளார். அந்த யோக முறையைப் பின்பற்றி அவ்வையாரும் முக்தி அடைந்தார்.

ஔவையாரும் ஒரு சித்தராகவே வணக்கப்படுகிறார்.

விநாயகர் அகவல் பிறந்த வரலாறு.

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனைத் தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணிச் சிவபெருமானைப் புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் “சிவயநம” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கிப் புறப்பட்டது.

இவ்வாறு ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு “நீயும் வாயேன் பாட்டி” என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப் பிராட்டி பதில் அளித்தாள். ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் ‘ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?’ என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள். ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்’ என திருவாய் மலர்ந்து அருளினார்.

ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூசையை வழமை போல சிறப்பாகச் செய்து முடித்தார். பூசையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை “விநாயகர் அகவல்” என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார். இறுதியில் விநாயகர் தன் துதிக் கையினால் ஔவையாரைத் தூக்கி கைலையில்ச் சேர்த்தார். ஔவையாரும் கயிலைக் காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் எனக் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

இங்கு தும்பிக்கை என்று குறிப்பிடப்படுவது மூலாதாரத்தையும், சிரசிலுள்ள துரியத்தினையும் இணைக்கும் சுழுமுனை நாடி ஆகும். இங்கு மூலாதாரச் சக்கரத்திலுள்ள குண்டலினி சக்தியை எவ்வாறு சுழுமுனை நாடி வழியாக துரியம் வரை கொண்டு செல்வது என விபரிக்கும் படிமுறையே யோகப் பயிற்சி முறையாகும். இங்கு குண்டலினி சக்தி துரியத்தை அடையும்போது, அதாவது எமது ஆன்மா பரம்பொருளுடன் இணையும்போது அங்கு பேரொளி தோன்றும். இம்முறையினையே ஔவையார் கண்டு இன்புற்ற கயிலைக் காட்சியாக விபரிக்கப்படுகிறது.

இதுவே ஞானம் அல்லது முக்தி எனப்படும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறையில் ஒரு ஆன்மா ஞானம் அடையும் வழிமுறையை விளக்கும் படிமுறையே யோகம் எனப்படும். யோகப் பயிற்சியின் மூலமாக ஞானம் அடையும் வழிமுறை விநாயகர் அகவலில் விளக்கப்பட்டுள்ளது.

விநாயகர் அகவல் ஒரு தோத்திர நூலாகவும், சாத்திர நூலாகவும், யோக சூத்திர நூலாகவும் அமைந்துள்ளது. நக்கீரனார் எழுதிய இனொரு விநாயகர் அகவலும் உண்டு. ஆனால் அந்நூல் பிரசித்தி பெறவில்லை. ஔவையார் எழுதிய விநாயகர் அகவலே எல்லோராலும் போற்றப்படுகிறது.

மயில் கத்துவதை அகவுதல் என அழைப்பர். அதாவது மயில் அகவும். மயிலின் அகவல் குயிலின் கூவல் போல இனிமையாக அதவது ஒரு குறிப்பிட்ட இசைபோல தொடர்பாக இருக்காது. மயிலின் அகவல் ஒரு தொடர்ச்சி இல்லாது வேறு, வேறு தொனியில் இருக்கும். அதுபோல விநாயகர் அகவலில் கூறப்பட்ட வரிகளும் அவ்வப்போது வேறு வேறு தொனியில் ஏற்ற இறக்கமாக இருப்பதனால் (விளக்கங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் முன்பின்னாக அமைந்துள்ளதனால்) “அகவல்” என அழைக்கப் படுகிறது.

விநாயகர் அகவல் 72 சிறு அடிகளைக் (வரிகளைக்) கொண்டது இந்த நூல். வெளிப்படையாகப் பார்த்தால் விநாயகர் பெருமையை எடுத் துரைப்பது போல விளங்கிக் கொண்டாலும், விநாயகரது அங்கங்களை வர்ணிப்பது போல வெளிப்படையாகத் தோன்றினாலும், முழுக்க முழுக்க விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தையும், அவரது பெருமையையும் யோக தத்துவத்துக்கு உவமையாக ஒப்பிட்டு யோகப் பயிற்சி முறையை விளங்குகிறது இந்த நூல்.

அதனாலேயே அதாவது ஞானம் (முக்தி) அடையும் தத்துவத்தை விளக்குவதால் “ஞான நூல்” என அழைக்கப் படுகிறது.

விநாயகர் என்பது ஆன்மாவை அதாவது குண்டலினி சக்தியை குறிப்பிடுவதாகவும், அந்த குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியாக மேலெழும்பும் தத்துவத்தை விநாயகம் எனவும் சில சித்தர்கள் விளக்குகிறார்கள்.

ஔவையார் அருளிய “ஆத்தி சூடி” மற்றும் “கொன்றை வேந்தன்” என்ற பாடல்கள் அப்பனின் பெயரில் (ஆத்தி சூடி கொன்றை வேந்தன் ஆகிய பெயர்கள் சிவனைக் குறிக்கும்) பிள்ளைகளுக்கும் (அதாவது பிள்ளைகளுக்காக, சிறியவர் களுக்காக) படைக்கப் பட்டவையாகும். அதேபோல விநாயகர் என்ற பிள்ளையின் (சிவனின் பிள்ளை விநாயகர்) பெயரால் படைக்கப்பட்ட “விநாயகர் அகவல்” அப்பனுக்காகப் (அதாவது பெரியோர்களுக்காகப்) படைக்கப் பட்டதாகும் என்றும் சிலர் கருத்துக் கூறுவார்.

அதாவது பெரியவர்களால் ஓரளவு ஆன்மீக அறிவு பெற்றவர்களால் மட்டுமே விநாயகர் அகவலைப் புரிந்து கொள்ள முடியும் என்று அர்த்தமாகும்.

யோக அறிவு இருப்பவர்களால் மட்டுமே விநாயர் அகவலின் பொருளை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும் என்பதனாலேயே இதனை “யோக நூல்” அல்லது “ஞான நூல்” எனவும் அழைக்கப்படுகிறது.

விநாயகர் அகவலில் முதல் 15 வரிகள் ஓரளவு விநாயகர் பெருமையை விளக்குவது போலத் தோன்றினாலும், மிகுதி வரிகள் முற்றாக யோக முறையினையே விளக்குகிறது.

இங்கு கொடுக்கப்படும் சில விளக்கங்கள், பாவிக்கப்பட்டுள்ள சில சொற்பதங்கள் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள “ராஜ யோகம்” எனும் கட்டுரையில் விளக்கமாக அறிந்து கொள்ள முடியும்.

ஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னைA
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

இனி நாம் வரிகளின் விளக்கங்களைப் பார்க்கலாம்

1. சீதக் களபச் செந்தா மரைப்பூம்
2.
பாதச் சிலம்பு பலஇசை பாட

விளக்கம்: சீதம் – குளிர்ச்சி, களபம் – நறுமணம்.
குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய செந்தாமரைப் பூப்போன்ற விநாயகப் பெருமானின் பாதங்களில் அணிந்துள்ள சிலம்புகளிருந்து மேலெழும் பலவகையான இனிமையான இசைகள் மேலெழ (சப்தங்கள் கேட்க்க)

ஆன்மீக விளக்கம்: அதாவது மூலாதாரத்திலுள்ள அக்கினியாகிய குண்டலினி சக்தியானது மேலெழுந்து 1000 தாமரை இதழ்கள் வடிவில் அமைந்திருக்கும் துரியம் (சகஸ்ரார) சக்கரதினை அடையும்போது அச் சக்தியானது குளிர்ச்சியடைந்து அமுதமாக மாறும். அப்போது நறுமணமும், பலவகையான நாதமும் கீதமும் சிந்தையில் உணரப்படும் என்பது பொருளாகும்.

3. பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
4.
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப
விளக்கம்: அரையில்(இடுப்பில்) கட்டி இருக்கும் பொன்னால் ஆகிய அரைஞாண் (அரணாக்கொடி), எனும் கயிறும் அதாவது அந்த அணிகலனும், மிகவும் மென்மையான வெண்பட்டு ஆடையும் பார்ப்பதற்கு மேன்மேலும் அழகைக் கொடுக்க

ஆன்மீக விளக்கம்: இடுப்பின் கீழ்ப்பகுதி அதாவது மூலாதார சக்கரத்திலுள்ள குண்டலினி சக்தியானது யோகத்தின்போது மூச்சுக் காற்றினால் அக்கினியாக (நெருப்புப் போல) கிளர்ந்தெழுந்து பொன்போல மிளிரும் அப்போது தன் உடல் (யோகம் செய்பவரின் உடல்) ஒரு பாரமற்ற மெல்லிய ஆடைபோல உணரப்படும் என்று பொருளாகும்.

5. பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
6.
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
விளக்கம்: பேழை அல்லது பெட்டி (அல்லது கூடை) போன்ற திருவயிறும், மிகவும் கனமான (பாரமான) தந்தங்கள் பொருந்திய நீளமான தும்பிக்கையும் (துதிக்கையும்) உள்ள வேழ முகத்தின் (யானை முகம்) புருவமத்தியில் ஒளிர்கின்ற செந்தூரப் (செந்நிற -சிகப்புநிற) பொட்டும்.

ஆன்மீக விளக்கம்: யோகத்தின்போது குண்டலினி சக்தியானது தும்பிக்கை போல என்று வர்ணிக்கப்படுகின்ற சுழுமுனை நாடிவழியாக மேலெழுந்து புருவ மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞா சக்கரத்தினை அடையும் போது அச்சக்கரம் அமைந்துள்ள புருவ மத்தியில் ஒரு செஞ்சுடர் (ஜோதி, ஒளி) தோன்றும் (உணரப்படும்) என்பது பொருளாகும்.

7. அஞ்சு கரமும் அங்குச பாசமும்

8. நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

விளக்கம்: அஞ்சு (ஐந்து) கரங்களும். விநாயகருக்கு நான்கு கைகளுடன் ஒரு துதிக்கையும் சேர்த்து ஐந்து கரங்களாகக் கொள்ளப்படும். அவைகளுள் இரு கரங்களில் இருக்கும் அங்குசம், பாசம் எனும் இரு கருவிகளும், எமது நெஞ்சில் (இதயத்தில்) எப்போதும் வீற்றிருக்கும் நீல திருமேனியை உடையவனே.

விநாயகரின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம், பயன் விளைவிக்கும் படைப்புத் தொழிலைக் குறிப்பிடுகிறது.

கொழுக்கட்டை ஏந்திய திருக்கரம், காக்கும் தொழிலைக் குறிப்பிடுகிறது.

அங்குசம் ஏந்திய திருக்கரம், அழித்தல் தொழிலைக் குறிப்பிடுகிறது.

பாசக் கயிறை ஏந்திய திருக்கரம் மறைத்தலை தொழிலைக் குறிப்பிடுகிறது.

அமுத கலசம் ஏந்திய திருக்கரம், அருளல் தொழிலைக் குறிப்பிடுகிறது.

ஆன்மீக விளக்கம்: யானைப்பாகன் அங்குசம் கொண்டு யானையை அடக்கி, கயிற்றால்க் கட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, யோகத்தின் மூலமாக வாசி (மூச்சுக் காற்று) கட்டுப்படும் போது அலைந்து திரியும் ஐம் புலன்களும் கட்டுப்பட்டு தனது வசமாகும். அதுவரை வெளிப்புறமாக நாட்டம் கொண்டிருந்த மனமானது உள்முகமாக திரும்பும். உள்முகமாக இறைவனைத் தேடும். அதன் விளைவாக உள்ளத்திலே நீல நிறமான உள்ளொளி தென்படும் என்று பொருளாகும்.

மனதால் ஒரு பொருளை எண்ணுதல் – படைப்பு (உருவாக்குதல்)

அப்பொருளை ஆராய்தல் (விருப்பம் கொள்ளல்) – காத்தல்

அப்பொருளை அடைய (அடைதல் / அனுபவித்தல்) விரும்புதல் – அழித்தல்

அப்பொருளின் மேல் மயங்கி நிற்றல் – மறைத்தல் (தன்னை மறத்தல்)

இறுதியில் அப்பொருளை அறிந்து தெளிந்து கொள்ளல் – அருளல் (முக்தி)

9. நான்ற வாயும் நாலிரு புயமும்
10.
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
விளக்கம்: நான்ற வாயும் அதாவது அகன்ற திருவாயும், நான்கு கைகளைத் தாங்குகின்ற இரு புஜங்களும் (தோள்களும்), இரு வெளிப்படையான கண்களுடன் மூன்றாவது நெற்றிக்கண்ணுடன் சேர்த்து மூன்று கண்களுடையவனும். மும்மதம் அதாவது யானைகளுக்கு சிலவேளைகளில் மதம் (கடும் உணர்ச்சிப் போக்கு) வரும். அவையாவன கன்னமதம், கபோலமதம், பீஜமதம் ஆகிய மும்மதங்களாகும். மும்மதங்களாலான அந்த யானையின் அகன்ற சுவடு (பாதங்கள்) போன்ற பாதங்கள் உள்ள கணபதி என பொருள் கொள்ளலாம்.

ஆன்மீக விளக்கம்: குண்டலினி சக்தியானது மேலெழுந்து நெற்றியிலுள்ள ஆக்ஞா சக்கரத்தினை அடையும்போது எமது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக்கண் திறக்கும் அப்போது எமக்கு நான்கு வாயிலும் அதாவது நான்கு திசையும் (நான்ற வாயும் -நான்கு வாசலும்) எட்டுத் திக்கும் (நால் இரு புயமும் – புறமும்) அதாவது வெளியுலகம் புலப்படும். அப்போது (மும்மதச் சுவடும்) ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் அழிந்து போய்விடும். அம்மலங்கள் எம்மில் இருந்ததற்கான சுவடு (சான்று) மட்டுமே தென்படும்.

11. இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
12.
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

விளக்கம்: இரண்டு திருச்செவிகளும், தலையில் (சிரத்தில்) சூடப் பட்டிருக்கும் இலங்கும் (துலங்கும், பளபளக்கும்) பொன்னாலாகிய மகுடமும் (முடியும்) உடையவனும், மூன்று நூல்களைத் திரித்து (முறுக்கி) பின்னப்பட்ட (முறுக்கேற்றிய) பூணூல் அணிந்த, அகன்ற ஒளி விளங்கும் திருமார்பும் உடையவனே.

ஆன்மீக விளக்கம்: யோகியானவன் இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் வழியாக காற்றைச் செலுத்தி மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியாக மேலே செலுத்த, மேலெழுந்து செல்லும் அந்த குண்டலினி ஒளியானது (சக்தியானது) ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று உச்சியிலுள்ள துரியம் சக்கரத்தினை அடையும்போது இரு செவிகளிலும் இனிமையான இசை கேட்கும், சிரசில் பொன்போல் மிளிரும் பேரொளி தெரியும் என்று பொருளாகும்.

(முப்புரி நூல் – இடகலை, பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கும் என்று பொருளாகும்).

13. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
14.
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
விளக்கம்: சொற்களால் வர்ணிக்க முடியாதவாறு அதற்கும் அப்பால் துரிய மெய்ஞ்ஞான – உள்ளுணர்வால் உணரக்கூடிய ஞான சொருபமாக, அற்புதம் நின்ற – அற்புதமாக வியப்பாக இருக்கின்ற,கற்பகக் களிறே, கற்பகம் (நினைத்ததெல்லாம் கொடுக்கும் கற்பக தரு) போல் அருள் பாலிக்கும் யானைமுகப் பெருமானே.

ஆன்மீக விளக்கம்: சிந்தையில் அதாவது துரியத்தில் பேரொளி தோன்றும் போது எம்மால் வர்ணிக்க முடியாதவாறு ஒரு உள்ளுணர்வு எமக்குள் ஏற்படும். நாம் தேடும் மெய்ப் பொருளின் விளக்கம் எமக்கு தெளிவாகும்.

15. முப்பழம் நுகரும் மூஷிக வாகன

விளக்கம்: மா பலா வாழைஆகிய முக்கனிகளை விரும்பி நுகரும் – உண்ணும், மூஷிகத்தை, (ஊரும் பெருச்சாளியை) தனது வாகனமாக அமர்த்தி அதன் மேல்ப் பவனிவரும் விநாயகப் பெருமானே.

ஆன்மீக விளக்கம்: யோகத்தின் மூலமாக குண்டலினி சக்தி தூண்டப்படும் போது அச் சக்தியானது, மூஞ்சூறு (மூஷிகம்) மண்ணைத் துழைத்துச் செல்வது போல சுழுமுனை நாடி வழியாக மேலெழுந்து செல்லும்போது ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை உண்ணவேண்டும் அப்போது உடல் சூடு தணியும் என்று பொருளாகும்.

16. இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
17.
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
18.
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

விளக்கம்: இப்பொழுது, இச்சமயத்தில், என்னை, அடியேனை தனது கருணையினால் தாயார்போல் என்மேல் பரிவுகட்டி, அன்பு செலுத்தி, என்முன் எழுந்தருளி நான்செய்த என் முன்னோர்கள் செய்த பாவம் எல்லாம் தீர்த்து, எனது முடிவிலாது தொடர்ந்து கொண்டிருக்கும் இப் பிறவிப்பிணி நீக்கி உனது பேரொளியுடன் என்னை இணைத்துக்கொள் இறைவா.

19. திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
20.
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

விளக்கம்: முதலான ஐந்து எழுத்துக்கள் “ந ம சி வ ய” (ந- மண், ம- நீர்,  சி-நெருப்பு,  வ காற்று,  ய-ஆகாயம்) ஆகிய ஐந்து எழுத்துக்களும் முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களைக் குறிக்கும்.

யோகப் பயிற்சியின்போது குண்டலினி சக்தியானது மேலெழுந்து புருவ மத்தியில் ஒடுங்குபோது செந்தூர ஒளி தோன்றும். அதன்போது வெவ்வேறாக உலக இன்பத்தில் மயங்கி இருந்த பஞ்ச பூதங்களுடன் தொடர்புடைய ஐம்புலன்களும் திருத்தமடைந்து உலக இன்பத்திலிருந்து விடுபட்டு, கட்டுப்பட்டு உள்முகத் தேடலில் தனது எண்ணத்தைச் செலுத்தும்

21. குருவடி வாகிக் குவலயம் தன்னில்
22.
திருவடி வைத்துத் திறமிது பொருளென

விளக்கம்: குவலயம் தன்னில் -இப் புவிதனில் எனக்கு குருவாக வந்து, எனது புருவ மத்தியில், எனது சிரசில் தனது திருவடி வைத்து, ஒளியாகத் தோன்றி இதுவே மெய்ப்பொருளென என்னை உணரவைத்து.

23. வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
24.
கோடா யுதத்தால் கொடுவினை களைந்து

விளக்கம்: அடியேன் வாட்டம் கொள்ளாதபடி இன்ப வடிவினனாக இருந்து மகிழ்வோடு அடியேனுக்குத் திருவருள் பாலித்து, அருள்செய்து தனது திருக்கரத்தில் ஏந்திய கோடு (தந்தம்) ஆயுதத்தால், அந்த மெய்ஞ்ஞானக் கருவியினால் நான் செய்த கொடு வினைகளைக் (பாவங்களைக்) களைந்துவிடு, அடியோடு அழித்துவிடு விநாயகக் கடவுளே

25. உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

26. தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டிவிளக்கம்: உவட்டா உபதேசம் புகட்டி – தெவிட்டாதபடி உபதேசத்தை (இனிது) அடியேனுக்கு உபதேசித்து. எனது அறியாமையைப் போக்கி, ஞானத் தெளிவையும் காட்டி – (பேரின்பத்திற்கு உரிய) தெளிந்த அருளறிவையும் அடியேனுக்கு தந்தருள்வாள் விநாயகனே.

27. ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
28.
இன்புறு கருணையின் இனிதெனக்(கு) அருளி

விளக்கம்: ஐந்து புலன்களையும் அடக்கும், கட்டுப்படுத்தும் (உபாயம்) தந்திரத்தை, தனது இன்புறு கருணையினால் அடியேனுக்கு புரியும்படி அருளினாய். அதாவது யோகத்தின் போது மூச்சுப் பயிற்சியினால் வாசியை (மூச்சை) கட்டுப்படுத்த ஐம்புலன்களும் எமது கட்டுக்குள் வரும் என்ற உபாயத்தை அடியேனுக்கு அருளியவனே.

29. கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

விளக்கம்: சுவைத்தல், பார்த்தல், கேட்டல் (உணர்தல்), நுகர்தல் அறிதல் ஆகிய ஐம்புலன்களும் அடங்கும்போது, ஐம்புலன்களை அறியும் ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து கருவிகளும் அடங்கும் உபாயத்தினை எனக்கு உணர்த்தி, கருவிகள் அடங்கும்போது மனமானது ஒருநிலைப்படும் (ஐம்புலன்களினால் உணரப்படும் முப்பத்தாறு தத்துவங்களும் ஒன்றன்பின் ஒன்றாய் ஒடுங்கி அதன்போது வெளி நோக்கிய சிந்தனைகளால் பீடிக்கப்பட்டிருந்த மனமானது தன்னை உணர்ந்து உள்முகத் தேடலை ஆரம்பிக்கும்.)

30. இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

விளக்கம்: ஐம்புலன்களும் ஒடுங்கி மனமானது உள்முகமாக செலுத்தப்பட்டு மனம் ஒடுங்கும்போது, அதன் பயனாக குண்டலினி சக்தியானது மேலெழுந்து துரியம் நோக்கிச் சென்று ஜோதியுடன் சங்கமிக்கும்போது நாம் செய்த நல்ல வினைகளும், தீ வினைகளும் அந்த பரம்பொருளினால் களையப்பட்டு எமது பிறவிப்பிணி நீங்கும்.

நல்லவினை செய்திருந்தாலும் அதனை அனுபவிக்க மீண்டும் பிறப்புண்டு அதே போல தீவினை செய்திருந்தாலும் அதனை அனுபவிக்க மீண்டும் பிறப்புண்டு. எனவே நல்லவினையும் தீவினையும் அழிக்கப்படும் போதே பிறவிப்பிணி எனும் மாய இருள் நீங்கும் (இருவினை – நல்வினை, தீவினை).

31. தலமொரு நான்கும் தந்தெனக்கருளி

விளக்கம்: யோகத்தின் மூலமாக ஆன்மாவானது தான் உதித்த இடமான (தலமான) அந்த மூலத்துடன் கலக்கும்போது, அந்த மூலம் பற்றிய ஞானம், கிடைத்த பின், அதை உணர்ந்த பின் இந்த உயிர் அந்த இடத்தில் (தலத்தில்) ஒடுங்கும் (ஐக்கியமாகும்). அப்போது நாற்திசையில் (வெளி உலகத் தொடர்பில்) தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்கள் யாவும் தன்னால் உணரப்படும் (அறியப்படும்) என்பது பொருளாகும். இதுவே ஞான நிலையாகும்.

32. மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

விளக்கம்: ஞானத் தெளிவு கை கூடும் பொழுது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களின் மயக்கமும் விலகிப் போய்விடுகிறது.

ஆணவ மலம். இது மூல மலம் அல்லது ”இருள்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முற்றாக மறைத்தல். இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் ஆணவம் என்கிறது சித்தாந்தம்.

கன்மம் (வினை) என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். செய்யும் வினை நல்வினை ஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் மற்றும் அவற்றின் சந்ததி அனுபவித்தே ஆகவேண்டியுள்ளது. இதனால் இப்பலன்களை அனுபவிப்பதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கின்றன.

வினைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

பழவினை: தான் மற்றும் தன் முன்னோர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள்.

நுகர்வினை: தான் இப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்கள்.

ஏறுவினை: வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப் பயன்களாகும் (பாவ புண்ணியங்கள்).

மாயை உலக இன்பத்தில் வெளிப்பக்கட்டில் மயங்குவது மாயை எனப்படும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களுமே மாயையைக் கொண்டே படைக்கப் பட்டிருக்கிறது. ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரம் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது. உயிர்கள் உலக மாயையில் (பொய்யில்) மயங்கியே பாவ புண்ணியங்கள் செய்கின்றன.

33. ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
34.
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
விளக்கம்: குருவிடமிருந்து யோகம் கற்று பயிற்சி செய்யும்போது முதுகுத் தண்டு நேராக அமைந்திருக்கக் கூடியவாறு பத்மாசனத்தில் அமர்ந்திருந்து, மூச்சை அடி வயிற்றிலிருந்து நன்றாக உள்நோக்கி இழுத்து ஒன்பது வாயில்களையும் அடக்கிக்கொண்டு மூச்சை உள் நிறுத்த வேண்டும். அதன்போது உள்ளே “அ”, “உ”, “ம்” என ஒலிக்கும். அதுவே “ஓம்” எனும் ஒப்பற்ற (ஓங்கார) ஓரெழுத்து மந்திரமாகும். 

உடலிலுள்ள ஒன்பது வாயில் – (இருகண், இருசெவி, நாசியின் இருதுளை, வாய், எருவாய், கருவாய் ஆகும்). இதுவே புலன்களை அடக்கும் உபாயம் ஆகும். இதுவே ஞானசக்தியால் பொறி புலன்களை செயலற்றனவாகச் செய்யும் உபாயமாகும்.

35. ஆறாதாரத்து அங்குச நிலையும்
36.
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

விளக்கம்: அங்குசத்தால் யானையை அடக்கும் பாகனைப்போல், யோகத்தின் போது பிராணனை இடைகலை, பிங்கலை வழியால் விரயம் செய்யாமல், ஆறு ஆதாரங்கள் வழியே செலுத்தும்போது. அப்போது இந்த ஆறு ஆதாரங்களையும் கருத்தால் (எண்ணத்தால்) கட்டிவைத்து அதாவது எமது எண்ணமானது அங்கிங்கு அலையாதபடி ஆறு ஆதாரங்களிலும் நிலைபெறச் செய்யும்போது, தன்னை மறந்து யோக நித்திரையில் மனம் அடங்கும். அப்போது பேச்சற்று, மூச்சற்று, தான் யாரென்று தெரியாத நிலை (யோக மயக்கம், பேச்சற்ற நிலை) உணரப்படும்.

அதன்போது அவன் வேறு நான் வேறு எனும் நினைவு நீங்கும்; முத்திக்கு உரிய மோனம் சித்திக்கும்.

ஆறு ஆதாரங்கள்

மூலாதார சக்கரம்: எருவாய்க்கும் கருவாய்க்கும் (குதம், குறிகளின்) இடையில் உள்ளது. இம் மூலத்தில் கணபதி இருக்கின்றார்.

சுவாதிட்டானம்: ஆண், பெண் குறிமூலத்தில் அமைந்துள்ளது.

மணிபூரகம்: உந்தியில் (அடி வயிறு) பகுதியில் அமைந்துள்ளது.

அநாகதம்: இதய பகுதியில் அமைந்துள்ளது.

விசுத்தி: கழுத்துப்பகுதி வித்தகக் கண்டம் அமைந்துள்ளது.

ஆக்ஞை: புருவநடுவில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் தலைவர் சதாசிவர்.

37. இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக்
38.
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

விளக்கம்: யோக சாதனையின்போது மூலாதாரத்தில் காற்றைக் கும்பித்து நிறுத்த, இடகலை, பிங்கலை வழியாக வந்த பிராண சக்தியானது (வாயுவானது) வெப்பமடைந்து குண்டலினி சக்தியைத் தூண்ட, அந்த குண்டலினி சக்தியானது கிளர்ந்தெழுந்து சுழுமுனை நாடி வழியாக கபாலத்தை அதாவது துரியத்தைச் சென்றடையும். அப்போது சக்தியும் சிவனும் இணைந்து பேரொளி தோன்றும் என்பது விளக்கமாகும்.

சூக்கும உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் பிங்கலை, இடைகலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் மூலமாக இணைக்கப் பட்டுள்ளன. இந்த நாடிகள் மூலாதாரச் சக்கரத்தில் இருந்து ஆரம்பித்து இடகலை நாடி இடப் புறமாகவும், பிங்கலை நாடி வலப் புறமாகவும், சுழுமுனை நாடி இரண்டு நாடிகளுக்கு நடுப்புறமாகவும் முள்ளந்தண்டு வழியாக சென்று இடகலை – பிங்கலை நாடிகள் ஆக்ஞாவிலும், மற்றும் சுழுமுனை நாடியானது துரியத்திலும் முடிவடைகிறது.

பிங்கலைக்கு உரிய எழுத்து அகரம் “அ “; இடகலைக்கு உரியது உகரம் “உ”; சுழுமுனைக்கு உரிய எழுத்து மகரம் “ம்”. ஆகும்.

கபாலத்தில் (சிரத்தில்) ஆயிரம் இதழ்க் கமலம் (துரியம்) அமைந்துள்ளது.

39. மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
40.
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
விளக்கம்: அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களினும் அமைந்துள்ள (முட்டிச் செல்லும்) சுழுமுனை நாடி (தூண்) வழியாக மூலாதாரத்தில் இருந்து பாம்புபோன்று சுருண்டிருக்கும் குண்டலனி சக்தியானது, கிளர்ந்தெழும்போது, தகதக என உடலில் அதிக உஷ்ணமும் நாவில் அசபை மந்திரம் பேசா மந்திரம் சுழல்வது போன்ற உணர்வு (ஒலிப்பதை) உணரமுடியும்.

மூலாதாரத்திலிருந்து மணிப்பூரக சக்கரம் வரை அக்கினி மண்டலம் எனவும் சுவாதிஷ்டானத்தில் இலிருந்து விசுத்திவரை சூரியமண்டலம் எனவும் ஆக்கஞா முதல் துரியம்வரை சந்திரமண்டலம் எனவும் வகுக்கப்படுகிறது.

41. குண்டலி அதனில் கூடிய அசபை
42.
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
43.
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
44.
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே

விளக்கம்: மூலாதாரச் சக்கரத்தினில் எண்ணத்தினை நிறுத்திக் கொண்டு பிராணனை நன்றாக உள்ளிழுக்கும்போது “ஸோ” என உள்ளே ஒலித்து, பின் அப்பிராணனை கும்பித்து நிறுத்தும்போது அது “ம்” அதாவது “ஹம்” என உள்ளே ஒலிக்கும். இதுவே “ஸோஹம்” அல்லது “சிவோஹம்” என உள் ஒலிக்கும் சிவ மந்திரமாகும். இதுவே “அசபை” மந்திரமாகும். இதனை “ஹம்ஸ மந்திரம்” அல்லது வாயினால் உச்சரிக்காத மந்திரமாகையால் “ஊமை மந்திரம்” எனவும் அழைப்பர்.

சாதனையின் போது அசபை மந்திரத்தின் சக்தியினால் குண்டலினி சக்தியானது வெப்பமடைந்து கிளர்ந்தெழும். அப்போது பிராணனனை உள்ளே கும்பித்து வைத்திருப்பதனால் (அங்கு உள்ளே கும்பித்து வைத்திருக்கும் காற்றின் உந்து சக்தியினால்) மூலாதாரத்தில் இருந்து எழும் நாடிகளான இடகலை, பிங்கலை நாடிகள் அடைபட்டுப் போக கொதித்தெழுந்த குண்டலினி சக்தியானது சுழுமுனை நாடி வழியாக மேலெழுந்து செல்லும். இதன்போது அசபை மந்திரமானது உள்ளிருந்து ஒலிப்பதனை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும் என்பது பொருளாகும்.

45. அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
46.
குமுத சகாயன் குணத்தையும் கூறி
விளக்கம்: அக்கினி மண்டலத்திலிருந்து சுழுமுனை வழியாக ஊர்வது போல மேலெழுந்து வந்த குண்டலினியானது துரியத்தை (குளிர்ச்சி பொருந்திய சந்திர மணடலத்தை அடையும்போது) குளிர்வடைந்து அண்ணாக்கில் அமுதம் சுரக்கும். அப்போது குளிர்ச்சியடைந்த சந்திரன் ஒளியில் தாமரை மலர்வதுபோல இறை ஞானத்தை சிதையில் உணர முடியும் என்று பொருளாகும்.

47. இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
48.
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

விளக்கம்: இடைச்சக்கரம் என்பது உடலில் சக்கரங்களின் (ஆதாரங்களின்) இடையே ஓடும் (அமைந்திருக்கும் உப சக்கரங்களாகும்) உயிர் நிலைகளாகும். இடைச் சக்கரங்களால் உடல் உறுப்புக்ககள் (ஐம்பொறிகளால்) தூண்டப் படுகின்றன. நமது உடலானது உறுப்புகள் பலவற்றால் தொடர்பான சக்கரம் போல் இயங்குகின்றது. அதனால்தான் இயங்கும் இயந்திரம் என்று உடலை உருவகப் படுத்தியுள்ளார்.

முக்தி நிலையின்போது இவை அனைத்தும் தெளிவுபடும். ஐம் பொறிகளும் தன்வசமாகும். தன்னைத் தான் உணரும் நிலை எனப் பொருள்படும். இந்த பதினாறு நிலையையும் கடந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டவர்கள் சிவ யோகியர்கள்.ஆவர்.

எமது சூக்கும உடலில் உள்ள ஆறு பிரதான ஆதாரச் சக்கரங்களுக்கு இடையே அமைந்திருக்கும் உப சக்கரங்கள் இடைச் சக்கரம் எனப்படும். இடைச்சக்கரம் உடலில் 16 இடங்களில் நிலை கொள்ளும். அதாவது கண்டம் என்னும் தொண்டை-முட்டு, நெற்றியின் இரு முனைகளிலும் உள்ள பொட்டு, ஆணின் விதைப்பை, பெண்ணின் குறி-முளை போன்றவை அந்த 16 உயிர்நிலைகள் ஆகும்.

சஹஸ்ராரம் (துரியம்) – 1; மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் –6; லலாட பிந்து – 1; அர்த்த சந்திரன் – 1: நிரோதினி – 1: நாதம் – 1: நாதாந்தம் – 1: சக்தி –1: வியாபிகா – 1: சமனா – 1: உன்மனா – 1: ஆக மொத்தம் 16. இவை இடைச்சக்கரம் என அழைக்கப்படும். 

உடல் சக்கரத்தின் உறுப்புகள் யாதெனின்: ஆதார சக்கரங்கள் 6 + சூரிய சந்திர கலை 2. இவை இடைச்சக்கரம் எனப்பெறும்.  இச் சக்கரங்கள் மூலமாக தூண்டப்படும் உடல் உறுப்புகளான மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம் பொறிகளும் உடல் உறுப்புக்கள் எனப் பொருள்படும்.

49. சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
50.
எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி
விளக்கம்: வெளிமுக தரிசனத்தில் (பக்தி) யந்திரங்களை (கடவுளை ) வணங்குபவர்கள், அதாவது யந்திரங்கள் பலவகை என்றாலும் அடிப்படையான வடிவம், மேலும் கீழுமாய் இரு முக்கோணங்கள் பிணைந்து உருவாகும் ஆறு உச்சிகள் கொண்ட வடிவமாகும் (செப்புத் தகட்டில் வரையப்படும் வடிவமாகும்). சண்முக, (ஆறுமுக) வழிபாடு (தூலம்) அதாவது யந்திர வழிபாடு எனப் பொருள்படும்

சதுர்முக சூக்கமும்: நாலிதழ் கொண்ட தாமரை வடிவில் அமைந்த, மூலாதரச் சக்கரத்தில் அமைந்த குண்டலிக் கனலை, தனது யோக (அதாவது உள்முக) தியானத்தால் மேல்நோக்கி எழுப்பும் மெய்ஞ்ஞானிக்கு, புறவடிவத் தூண்டுதல் அதாவது யந்திர (பக்தி) வழிபாடு தேவைப்படாது என்பது பொருளாகும்.

51. புரி அட்ட காயம் புலப்பட எனக்குத்
விளக்கம்: யோக முறையால் புரி போல அதாவது முறுக்காக மாயயையால் சுற்றப்பட்டிருக்கும் இந்த உடலை (அடியேனை) அந்த மாயையில் இருந்து விடுபடும் சூக்குமத்தை (வித்தையை) அடியேனுக்கு உணர்த்தி (புலனாகும்படி) அருளி.

அட்ட காயம் – பஞ்சபூதம் ஐந்தும், புத்தி, மனம், ஆங்காரமாகிய மூன்றும் சேர்ந்து எட்டு நிலை ஆகிய எட்டு மாயையினால் சுற்றப்பட்டிருக்கும் இந்த உடல்.  (அட்ட – எட்டு,  காயம் – உடல்)

52. தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

விளக்கம்: தெரி எட்டு நிலையும் உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, துரியம் ஆகிய ஏழு சக்கரங்கள் உள.

யோக பயிற்சியின்போது குண்டலினி சக்தியானது ஒவ்வொரு ஆதாரத்தினையும் கடக்கும்போது ஏற்படும் வேறு வேறு அனுபவ நிலைகளுடன் (பக்குவம்) இவ்வாறு ஏழு நிலைகளையும் அறிந்து (உணர்ந்து) இறுதியாக துரியம் கடந்த நிலையான எட்டாவது நிலையாக பரம்பொருளுடன் ஒன்றறக் கலக்கும் நிலையையும் எனக்கு உணர்த்திய விநாயகக் கடவுளே.

53. கருத்தினில் கபால வாயில் காட்டி
54.
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
விளக்கம்: கருத்தினில் – எனது உணர் வில் உள்ளத்தில், கபால வாயில் அதாவது துரியம் கடந்த பெருவெளியை விளங்கும்படி காண்பித்து, இருத்தி – என்னை அவ்வெளியில் இருக்க வைத்து பரம்பொருளுடன் ஐக்கியமாகும் இனிய முத்திநிலையை அடியேனுக்குச் அருளியவனே. (கபால வாயில் – மண்டை ஓட்டு உச்சி துளை)

55. என்னை அறிவித்து எனக்கருள் செய்து

விளக்கம்: நான் யார் என்று அடியேனுக்கு உணரவைத்து, என் பாவங்களைப் போக்கி பிறவிப் பிணியிலிருந்து நான் விடுபட அருள் செய்தவனே

56. முன்னை வினையின் முதலைக் களைந்து
விளக்கம்: நான் மற்றும் என் முன்னோர்கள் செய்த வினையின் – பிறப்புகட்குக் காரணமான பாவ புண்ணியங்களைக் அடியோடு களைந்து அருள் புரிந்தவன்

59. இருள்வெளி இரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
60.
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்திஎன் செவியில்
விளக்கம்: இருளும் ஒளியும் ஒரு இடத்திலேயே உணரப்படுவது போல அதாவது  – அந்த இரண்டையும் , கண்ணே வேறுபிரித்தறிவது போல அறியாமை, அறிவு ஆகிய இரண்டிற்கும் பிறப்பிடம் ஒன்றே என உணர்த்தி, எனக்குப் புரியவைத்து என் செவியில் -அருள்பாலிக்கும் “நமசிவய” எனும் திருநாமத்தை உபதேசித்தவனே என்னை பேரின்பக் கடலில், மூழ்கச் செய்தவனே எனப் பொருள்படும்.

61. எல்லை யில்லா ஆநந்தம் அளித்து
விளக்கம்: எனக்கு ஞானவழிகாட்டி எல்லை இல்லா – முடிவில்லாத ஆனந்தத்தை எனக்கு அருளியவனே

62. அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
விளக்கம்: அல்லல் களைந்து என் துன்பம் களைந்து. எனது பிறவித் துயரை வேரறுத்து, எனக்கு ஈசனை அடையும் அருள்வழி எனும் ஞான மார்க்கத்தைக் எனக்கு காட்டி அருளியவனே.

63. சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
64.
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
விளக்கம்: துரியம் கடந்த நிலையில் புறத்தில் என்னால் சிந்தையில் உணரக்கூடிய ஒளிபொருந்திய சதாசிவம் காட்டி – சதாசிவத்தை விளங்கச் செய்து, சதாசிவம் என்பது பேரொளி என்று அர்த்தமாகும். சிந்தையில் (சித்தத்தின் உள்ளே) – (பிண்டத்துள்) அகத்தில் சிவலிங்கம் காட்டி – சிவலிங்கத்தைத் தரிசிக்க அருளியவனே. சக்தியும் சிவனும் இணைந்த உருவமே சிவலிங்கமாகும்.

65. அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
66.
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
விளக்கம்: அணுவிற்கு அணுவாய் – அணுவிற்குள் (அதிநுட்ப) அணுவாகியும், அப்பாலுக்கு அப்பாலாய் – அண்டமெலாம் பரந்து விரிந்து கடந்து முடிவற்றவனாகி அடி முடி கண்டுணர முடியாதவனாய் பரந்து நினைப்பவனே நன்கு முதிர்ந்து முற்றி கணுக்கள் முதிர்ந்து விளைந்த, கரும்பில் அந்தச் சாற்றில் கலந்திருக்கும் இனிமையான சுவைபோல என் சிதையில் பரவசமாகியவனே.

67. வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
68.
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
விளக்கம்: சிவனடியார் வேடமும், திருநீறும் அணிந்து இவ்வுலகில்  உள்ள (போலியற்ற) உண்மையான மெய்யடியார் கூட்டத்தில் அடியேனையும் இணைத்த கடவுளே.

69. அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
70.
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து 
விளக்கம்: ஐந்து சக்கரத்தின் -“நமசிவய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை  எனக்கு உணர்த்தி, மன உணர்வில் எப்போதும் அம்மந்திரத்தினை  உச்சரிக்கும் உணர்வை அருளியவனே.

71. தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
72.
வித்தக விநாயக விரைகழல் சரணே.

விளக்கம்: ஞான அதாவது தத்துவ நிலையை முத்தி நிலையை எனக்களித்து அதன் பொருளை அடியேனுக்கு விளக்கி உணர்த்தி என்னை ஆட்கொண்ட வித்தக மேலான, விநாயக தனக்குமேல் தலைவன் இல்லாத, தனக்குமேல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முழுமுதலே அருள் மணம் நிறைந்த உனது திருவடிகளைச் சரணடைகிறேன் விநாயகப் பெருமானே.

கு. சிவகுமாரன் ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %