விதிப்படியே வாழ்க்கை அமையும்

”நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின்
நதியெல்லாம் நவமணி தரினும்
காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம்
கனகமே பொழியினும் மடவாய்
ஆடலே புரியும் அம்பலவாணர்
அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல்
வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும்
விதியல்லால் வேறு ஒன்று உளதோ? “
நாடெல்லாம் செந்நெல் விளையினும் – நாட்டின் எல்லா இடங்களிலும் செந்நெல் விளைந்தாலும் (போதிய அளவு உணவு கிடைத்தாலும்).
நாட்டின் நதியெல்லாம் நவமணி தரினும் – நாட்டிலுள்ள நதிகளில் நவமணிகள் (நவ ரத்தினங்கள் – போதிய அளவு பணம் கிடைத்தாலும்) தோன்றினாலும்.
காடெல்லாம் ஆடை காய்க்கினும் – காட்டிலுள்ள மரங்களில் ஆடைகள் காய்க்கினும் (எமக்குத் தேவையான அளவு ஆடைகள் கிடைத்தாலும்),
மேகம் கனகமே பொழியினும் – மேகங்கள் பொன் மழையாக பொழிந்தாலும்,
வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும் – வீடு முழுக்க புரண்டும், அழுதாலும் பயனில்லை
அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல் – அவரவர்க்கு எது விதிக்கப்பட்டதோ அதுவே கிடைக்கும்
விதியல்லால் வேறு ஒன்று உளதோ – நமக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே வாழ்க்கை அமையும்.
செல்வந்தனாக இருந்தாலும் எம்மால் தவிர்க்க முடியாத இழப்புக்கள், நோய், துன்பங்கள், இயற்கைப் பேரழிவுகள் வரும்போது எம்மிடம் இருக்கும் செல்வம் எல்லாம் பயனற்றுப் போகும்.
மடவாய் ஆடலே புரியும் அம்பலவாணர் – சிற்றம்பலத்தில் ஆனந்த நடனமாடும் அன்பு வடிவமான இறைவனை வணங்கு. (அதாவது நாம் செய்த பாவங்களையும், எமக்குக் கிடைத்த சாபங்களையும் நாம் நாம் தான் அனுபவித்தே கழிக்க வேண்டும்). அதாவது இறைவன் ஒருவன் இருக்கிறன் எம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மேன் மேலும் பாவம் செய்யாமல், நற்காரியங்கள் செய்து நீ செய்த பாவங்களை தீர்த்துக்கொள்.
தான தர்மங்கள் செய்தால் நாம் செய்த பாவங்கள் அழியும்.
யோகம் கிட்டினால் மாத்திரமே எமக்கு கிடைத்த (பரம்பரை பரம்பரையாக தொடரும்) சாபங்கள் அழியும்.
கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
— அன்பே சிவம் —