கிடாய் வெட்டி விருந்து

இரு ஆட்டுக்குட்டிகள் துள்ளித் துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த ஆட்டுக்குட்டிகளுடன் அந்த வீட்டு ராசையாவின் பேத்தி குமுதாவும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள்
அந்த ஊரில் ராசையா ஒரு தோட்டக்காரன் ராசையாவின் வீடு ஒரு பெரிய காணிக்குள் அமைந்திருந்தது. அவரிடம் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை எல்லாம் இருந்தது. ராசையாவுக்கு நாலு பிள்ளைகள் மூத்தது ஆண் பின் இரண்டு பெண் பிள்ளைகள் நான்காவது ஆண் பிள்ளை. எல்லோருமே திருமணம் முடித்து விட்டார்கள். இவரின் கடைசி மகனின் மூத்த பிள்ளை தான் குமுதா. குமுதாவுக்கு நாலு வயது. அங்கிருக்கும் ஆட்டுக்குட்டி, மாட்டுக் கன்றுகளுடன் விளையாடுவதுதான் அவளுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு.
குழந்தைப் பருவம் என்பது மனிதர் உட்பட எல்லா விலங்குகளின் குட்டிகளின் குணமும் பொதுவாக ஒரே மாதிரியாகவே இருக்கும். எமது குழந்தைப் பிள்ளையாக இருந்தால் என்ன, ஆட்டுக்குட்டி, மாட்டுக்கன்று நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டி எல்லாவறிற்கும் ஒரே மாதிரியான மூளைச் செயற்பாடுதானே ஆண்டவன் படைத்திருக்கிறான். பிறக்கும் போது மனிதனோ, குட்டிகளோ, குஞ்சுகளோ எல்லாமே ஒரேமாதியான எண்ண ஓட்டத்துடனேயே பிறக்கும். பின்னர் அவை வளர வளர அவற்றின் சிந்தனையும் செயற்பாடும் அந்த அந்த உயிரினத்துக்கு ஏற்றவாறு பரிணாமமடைகிறது (வளர்ச்சியடைகிறது).
உதாரணமாக ஒரு நாய்க் குட்டியின் எண்ணமும் ஒரு குழந்தைப் பிள்ளையின் எண்ணமும் ஒரே மாதிரியாகவே இருப்பதனைக் காணலாம். அதாவது நன்றாக விளையாடும், அடித்தால் அழும், அழைத்தால் ஓடி வரும், எதனையும் மனதில் வைத்திருக்கத் தெரியாது. அவற்றின் மனதில் சூது, வஞ்சகம் பொறாமை என்று எதுவுமே இருக்காது. இப்படியாக அவை வளரும் போது மூளை வளர்ச்சியடையும் போது மனிதனின் மூளை வளர்ச்சியடைந்து பல எண்ணங்களை அந்த மனதில் தோற்றுவிக்கும். ஆனால் ஒரு நாயின் மூளை வளர்ச்சியை அவதானிக்கும் போது ஒரு குழந்தைப் பிள்ளையின் ஒரு ஐந்து அல்லது ஆறு வயதுப் பருவ மூளை வளர்ச்சியுடன் (எண்ணங்களுடன்) மட்டுமே ஒத்துப்போவது போலத் தென்படும். அதாவது அதற்கு மேலாக பெரிய நாயாக வளர்ந்தாலும் அதன் மூளை வளர்ச்சி இருப்பதில்லை. அதாவது ஒரு மனித குழந்தையின் 5 அல்லது 6 வயது பருவத்துடன் ஒரு நாயின் மூளை வழற்சி கட்டுப்படுத்தப் படுகிறது. அதனாலேயே நாய் ஒரு நன்றி உள்ள மிருகமாக எப்போதும் இருக்கிறது.
இப்படியாக ஆட்டுக்குட்டிகளுடன் குமுதா விளையாடிக் கொண்டிருந்த போது குமுதாவின் தாய் குமுதாவை அழைத்து “இந்த குமுதா இந்த ஈரலைச் சாப்பிட்டுவிட்டுப் போய் நின்று விளையாடு” என்று கூறிக்கொண்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்த ஈரல் துண்டுகளை குமுதாவுக்கு ஊட்டிவிட்டா.
அப்போது “இந்தத் துண்டைச் சாப்பிட்டா கால் நீளமாக வளரும், இந்தத் துண்டைச் சாப்பிட்டா கை நீளமாக வளரும், இந்தத் துண்டைச் சாப்பிட்டா நீ கெதியா வளருவாய்” என்று கூறிக்கொண்டே அந்த ஈரல் துண்டுகளை ஊட்டிவிட்டுச் சென்றா. குமுதாவும் அந்தக் குட்டிகளுடன் விளையாடியவாறு அந்த ஈரலை உண்டு முடித்தாள். அப்படியே குமுதா தாயுடன் சென்று விட ஆட்டுக் குட்டிகளும் தமது தாயிடம் பால் குடிக்க ஓடின.
அந்த ஆட்டுக்குட்டிகள் பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதம் தான் இருக்கும். அவை பால்குடி மறக்கத் தொடங்கி விட்டன. அதில் ஒன்று மறி, ஒன்று கிடாய்.
அப்போ அந்த மறிக்குட்டி தாயிடம் “அம்மா இண்டைக்கு குமுதா எங்களுடன் விளையாடேக்குள்ளை அவவின்ற அம்மா அவவுக்கு ஈரல் கொண்டுவந்து தீத்தினவ. அப்ப சொன்னவ இந்த ஈரலைச் சாப்பிட்டா உன்ர கை, கால் எல்லாம் நீளமாக வளரும், நீயும் கெதியா வளருவாய் என்று சொல்லிச் சொல்லித்தான் தீத்தினவ. நீ ஏன் அம்மா எங்களுக்கு அப்படி எதுவும் தாரேல்லை? நாங்கள் புல்லு மட்டும் தானே அம்மா சாப்பிடுறம்.”
அப்போ அதன் தாய் ஆடு பதிலளித்தது “உனக்கு அது என்ன ஈரல் எண்டு தெரியுமோ? உதிலை கட்டி நின்ற உன்ர அண்ணன்ர ஈரல் தான் அது”
குட்டி கேட்டது “என்னம்மா சொல்லுறாய்?”
ஆடு “நேற்றுக் காலமை ராசையா வந்து உதிலை கட்டி நின்ற உன்ர அண்ணனை அவிழ்த்து இழுத்துக் கொண்டு போனவர் கண்டனி தானே?”
குட்டி “ஓம் அம்மா அவரோட இன்னும் இரண்டுபேர் வந்து என்னவோ கதைச்சுக்கொண்டு போனவை”
ஆடு “அவை என்ன கதைத்தவை என்றால், ராசையா சொன்னவர் இதுக்கு நான் நல்லா எள்ளும், புண்ணாக்கும் கொடுத்து வளர்த்தனான். இதன் இறைச்சி நல்ல சுவையாக இருக்கும். ஆளும் நல்ல வளர்ச்சி, வாற எல்லாருக்கும் வடிவாய் சாப்பிடக் காணும் எண்டுதான் சொன்னவர்.”
“அப்போ அண்ணனைக் கொண்டுபோய் என்னம்மா செய்தவர்?” குட்டி கேட்டது.
ஆடு “அண்ணனைக் கொண்டுபோய் வெட்டி வந்தவைக்கு விருந்து வைத்தவர். அவன்ர ஈரல் தான் இன்றைக்கு குமுதாவுக்குத் தாய் கொடுத்தவ.”
குட்டி “என்னம்மா சொல்லுறாய்? அப்ப அண்ணனைக் கொண்டுபோய் வெட்டிக் கொலை செய்து போட்டினமோ?”
ஆடு “எங்களுக்குத்தான் அது கொலையாகத் தெரியும் அவையள் அதனை ஒரு சுப காரியமாக எடுத்துக் கொள்வார்கள்.”
குட்டி “அம்மா அடிக்கடி அந்த ராசையாவும் அவரின்ர மனிசியும் வந்து அண்ணனை தடவுவினம், சாப்பாடு கொடுப்பினம், அவையள் இப்படி செய்வினமோ? எப்படி அம்மா அவைக்கு இப்படி மனம் வந்தது?”
ஆடு “உவையள் எங்களை வளர்க்கிறது தங்களது தேவைக்காக. கிடாய் ஆடு என்றால் ஓரளவு வளர்ந்ததும் வெட்டிச் சாப்பிடுவினம். மறி ஆடு என்றால் குட்டி போடட்டும் என்று வளர்ப்பினம், பாலும் கறப்பினம். அதால கொஞ்ச நாளைக்கு வளர்த்து இனிப் பயனில்லை என்று எண்ணும்போது வெட்டிச் சாப்பிடுவினம்.”
“ஏனம்மா அண்ணனை வெட்டினவை?” குட்டி ஆடு கேட்டது.
ஆடு “அது அந்தக் குமுதாக்கு போனமாதம் ஒரு தம்பி பிறந்தது தெரியுமெல்லோ. இவையள் ஆம்பிளைப் பிள்ளை பிறந்தா நல்லா சந்தோசப்படுவினம். தங்களின் உறவுகளை எல்லாம் அழைத்து விருந்து வைத்துக் கொண்டாடுவினம். அந்தப் பிள்ளை பிறந்து நேற்று 31 ஆம் நாள் கொண்டாடினவை. அதுதான் நேற்றுப் பார்த்தனித்தானே அவேன்ர சொந்தக்காரர் கனபேர் வந்தவை. அவைக்கு விருந்து வைக்கத்தான் அண்ணனை வெட்டினவை.”
குட்டி “அவைக்கு ஆம்பிளைப் பிள்ளை பிறந்ததைக் கொண்டாட எங்கட ஆம்பிளைப் பிள்ளையை வெட்டுறதா அம்மா?”
ஆடு “அப்படித்தான் கொண்டாடுவினம். அதைத்தான் “கிடாய் வெட்டி விருந்து” என்று சொல்லுறவை”
“எப்படி அம்மா வெட்டுவினம்?” குட்டி கேட்டது.
ஆடு “நேற்றுக் காலமை உவர் ராசையா வந்து அண்ணனை அவிழ்த்து இழுத்துக் கொண்டுபோய் அந்தா தெரியிற வேப்ப மரத்துக்கு கீழ கட்டினவர். பிறகு ராசையா, அண்ணன்ர பின்னங்கால் இரண்டையும் பிடித்துக் கொண்டு நிற்க, ஒருவர் தன்ர ஒரு கையால அண்ணனின் வாயைப் பொத்தியபடி தலையை மேற்பக்கமாகப் பிடிச்சுக் கொண்டு மற்றக் கையால கழுத்தில ஒரு வெட்டு வெட்டினார். அப்ப உன்ர அண்ணன் குளறுகிற சத்தம் கேட்டது. அதோட சரி. பிறகு சத்தம் ஒன்றும் கேக்கேல்லை. அப்ப இன்னும் ஒருத்தர் பெரிய சட்டியிலை அந்தக் கழுத்தில இருந்து வந்த ரத்தத்தை ஏந்திப் பிடித்தவர். அவ்வளவுதான். பிறகு அப்பிடியே கழுத்தில கயிறு போட்டு அந்த வேப்பம் கொம்பில கட்டித் தூக்கிப்போட்டு தோலை உரிச்சவை. பிறகு அப்படியே தலை, கால், குடல், ஈரல் என்று வெட்டி வெட்டி எடுத்துக் கொண்டு உள்ளே போனவை. அவன்ர தோலைத்தான் அந்த வேப்ப மரத்துக்குப் பக்கத்தில இருக்கிற வேலியில காயப் போட்டிருக்கினம். போய்ப்பார் தெரியும்” என்றது ஆடு.
குட்டி “அந்தத் தோலை என்ன செய்வினம் அம்மா”.
ஆடு “தோல் வாங்க ஆள் வரும். அவரிட்ட விப்பினம். அந்தத் தோலிலைதான் பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள் எல்லாம் செய்வினம். அந்த கைப்பைகளைக் கழுத்தில் கொழுவிக் கொண்டு கோவிலுக்கும் போவினம்.”
குட்டி “அப்ப இண்டைக்கு குமுதாவுக்குக் கொடுத்த ஈரல் அண்ணனோட ஈரலா அம்மா?”
ஆடு “ஓ அது அவன்ர ஈரல்தான். தலை, துடை இறைச்சி, குடல்க்கறி, ரத்த வறுவல் என்று விதம் விதமாக சமைத்துச் சாப்பிடுவினம். ஈரல்ல சத்து இருக்கு என்று பிள்ளைகளுக்கு கொடுப்பினம்.”
குட்டி “அப்ப என்னையும் ஒருநாளைக்கு வெட்டுவினமோ அம்மா?”
ஆடு “உந்த மனிதர் ஆடு வளர்க்கிறது வெட்டிச் சாப்பிடத் தானே. உன்னை இப்போதைக்கு வெட்டமாட்டினம். நீ பொம்பிளை தானே. உன்னோட பிறந்த மற்றக் குட்டி கிடாய் தானே, அவனைத்தான் இன்னுமொரு வருடத்துக்குள்ளை வெட்டிச் சாப்பிடுவினம்.”
குட்டி “அப்ப உன்னையும் வெட்டுவினமோ அம்மா?”
ஆடு “என்னையும் இனி வெட்டுவினம். இப்ப எனக்கு வயித்தில குட்டி இருக்குது. அதுகள் பிறந்த பின்னர் தான் வெட்டுவினம். எனக்கும் வயது போகுது தானே. என்னாலை இனி உவைக்கு பிரயோசனம் இல்லை என்று தெரிந்ததும், நானும் அவைக்கு விருந்துதான்.”
குட்டி “நீ எங்கே அம்மா பிறந்தனி? உன்ர அம்மா இருக்கிறாவோ அல்லது வெட்டிப் போட்டினமோ?”
ஆடு “நான் இங்க பிறக்கேல்லை. நாங்கள் கனபேர் இருந்தனாங்கள். அங்க எங்களைக் கட்டி வைக்கிறேல்ல. எல்லோரும் கூட்டமாகத்தான் இருப்பம். அதால நான் பால்குடி மறந்த பின்பு என்ர அம்மாவை மறந்துபோச்சு. அப்படி இருக்கேக்கை தான் உவர் ராசையா வந்து அவையளிடம் இருந்து என்னை வாங்கிக்கொண்டு வந்தவர். நான் விளையாடிக் கொண்டு இருக்கும்போது என்னைப் பிடிச்சு கழுத்தில கயிறு போட்டுக் கட்டிச்சினம், நான் பயந்து போனன். கத்தினனான். அப்படியே கொண்டு வந்து வண்டியில ஏத்தினவர். நான் என்ர ஆடுகளைப் பாத்துக் கத்தினனான். அவையளும் சிலபேர் என்னைப் பார்த்துக் கத்திச்சினம். அவ்வளவுதான் இந்த வீட்டை கொண்டு வந்திட்டார். கொஞ்சநாள் அவையளோட ஞாபகமாகத்தான் இருந்தது. அப்படியே மறந்து போச்சு. இப்ப அவை எங்க இருக்கினம் யார் யார் இருக்கினம் என்று எதுவும் எனக்குத் தெரியாது”
குட்டி “நீ இங்க வந்த பிறகு எத்தனை தடவை குட்டி போட்டனி அம்மா?”
ஆடு “முதலிலை ஒரு கிடாய்க் குட்டி பிறந்தது. அது பெரிய குட்டி. அது வளர்ந்து கொம்போட பாக்கேக்குள்ள நல்ல வடிவா இருந்தது. அப்பத்தான் உந்த ராசையாவின் மூத்த மகளுக்கு என்னவோ வருத்தம் வந்தது. அப்ப ஒரு சாத்திரி வந்து குறி சொல்லிப்போட்டு “ஒரு கிடாயை அந்தக் காளி கோவிலுக்கு நேர்ந்து வெட்டி காளிக்கு படையல் செய், வருத்தம் சுகமாகும்” என்று சொன்னவர். அதால அந்தக் கிடாயை ராசையா அந்தக் காளி கோயிலுக்கு நேர்ந்து விட்டுப்போட்டு, ஒருநாள் அந்தக் கிடாய்க்கு மாலை, தங்கச் சங்கிலி எல்லாம் போட்டு ஊருக்குள்ளாலை இழுத்துக் கொண்டுபோய் அந்தக் காளி கோவில்லை வெட்டிப் படைச்சு நேர்த்திக்கடனை தீர்த்தவர்”.
குட்டி “அதோட அவவின்ர வருத்தம் சுகம் வந்திட்டுதா அம்மா”
ஆடு “அப்படித் தெரியேல்லை. அந்த மகள் இப்பவும் நடக்கமாட்டுது, இருமிக் கொண்டுதான் இருக்கிறா”
குட்டி “ஏனம்மா மனிதர்கள் வருத்தம் வந்தவுடன் ஆடு வெட்டுறம் என்று நேருறவை?”
ஆடு “அது என்னன்டா ஆட்டிறைச்சி அவைக்கு விருப்பமான சாப்பாடு. அதாலைதான் ஆடு அல்லது கோழி வெட்டிப் படைக்கிறேன் என்று நேருறவை. அவேன்ர பிரச்சினைகள் நோய் துன்பம் தீருதோ இல்லையோ, அவை நேர்ந்து வெட்டுறதை மட்டும் நிறுத்த மாட்டினம்.
அது மட்டுமே ஒரு மனிசன் செத்தா சொந்தம், பந்தம், சிநேகிதம் எல்லாம் கூடி நின்று தங்களின் துயர் போக்குவினம். ஆனா எங்களை வெட்டுறதை கனபேர் கூடி நின்று வேடிக்கை பாம்பினம். அது மட்டுமே அவேன்ர செத்தவீடு, கலியாண வீடு, சுப காரியங்கள் எல்லாத்துக்கும் எங்களைத்தான் வெட்டி விருந்து வைப்பினம். சாப்பாட்டுக் கடையள்ளையும் எங்கள் இறைச்சியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு நல்ல கிராக்கியாம். இதுதான் எங்கடை பிறப்பு.”
குட்டி “நேற்று வெட்டின அண்ணனுக்குப் பிறகு வேற குட்டிகள் உனக்குப் பிறகேல்லையே அம்மா?”
ஆடு “அவனோட ஒரு மறிக்குட்டியும் பிறந்தது. அது பால்குடி மறக்க முன்னமே ஆரோ வந்து வாங்கிக்கொண்டு போட்டினம்.”
குட்டி “அப்ப உனக்கு கவலை இல்லையோ அம்மா?”
ஆடு “கவலைதான், நான் என்ன செய்ய முடியும், வந்தினம் கட்டி இழுத்துக் கொண்டு போட்டினம். நானும் கத்தினனான், குட்டியும் கத்திச்சுது அவ்வளவுதான், அதைக் கொண்டு போட்டினம். அப்படியே மறந்து போச்சுது. எங்களுக்கு பிரிவு, துன்பம், கவலை எதுவும் இல்லை எண்டுதான் உந்த மனிதர்கள் எல்லோரும் எண்ணிக் கொண்டு இருக்கினம். எங்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை எண்டுதான் மனிதர்கள் நினைக்கிறார்கள். நாம் படும் பயம், கவலை, பிரிவுத்துயர் மனிதர்களுக்கு எங்கே புரியப்போகுது.”
அப்போது அங்கே குமுதா வர “அம்மா அந்தா குமுதா வந்திட்டா நாங்கள் போய் அந்தக் குமுதாவோட விளையாடிப் போட்டு வாறம்” என்று கூறியபடி குட்டிகள் ஓடிப்போய் குமுதாவுடன் விளையாடத் தொடங்கின.
குறிப்பு: விலங்குகள் நிகழ் காலத்தில் மட்டுமே வாழ்பவை. அதனாலேயே இப்படியான வாழ்வுமுறை சாத்தியமாகிறது. அதாவது எல்லா உயிரினத்துக்கும் அவற்றின் தன்மைக்கு ஏற்ற ஞாபங்கள் இருக்கும். ஆனால் அவற்றை எப்போதும் மீட்டெடுக்கும் தன்மை அவற்றிற்கு இருக்காது. அதுமட்டுமன்றி மானம், ரோசம், வெட்கம் போன்ற உணர்ச்சிகளை பாவிக்கும் திறன் விலங்குகளுக்கு இருக்காது. அதனாலேயே நாம் அவற்றைத் துன்புறுத்திவிட்டு உணவு கொடுத்தாலும் வாங்கி உண்ணுகின்றன. எம்முடன் விளையாடுகின்றன.
சிறிது நேரம் விளையாடியபின் ஆட்டுக்குட்டிகள் தாயிடம் ஓடி வந்தன.
அப்போ தாய் ஆடு குட்டிகளை பார்த்து “வாங்கோ நாங்கள் போய் அந்த ஆலமரத்துக்குக் கீழே ஒரு சாமியார் இருக்கிறார் அவர் நல்லா கடவுளை நம்புறவர். அவரிடம் போய் இந்தக் கடவுள் ஏன் ஆடுகளைப் படைத்தார் என்று கேட்டுப் பார்ப்பம்” என்று கூறி தனது குட்டிக்களையும் அழைத்துக் கொண்டு அந்தச் சாமியாரிடம் சென்றது.
சாமியார் அந்த ஆலமரத்துக்குக் கீழே தனியாக இருந்தார்.
ஆடு சாமியாரைக் கூப்பிட்டது “சாமியாரே நாங்கள் ஆடுகள் வந்திருக்கிறோம். எம்மிடம் சில கேள்விகள் உண்டு நீங்கள் பதில் கூறுவீர்களா?”
ஆட்டை வியப்போடு பார்த்த சாமியார் “கேள் ஆடு உன் கேள்விகள் என்ன? எனக்குத் தெரிந்தால் பதில் சொல்கிறேன்” என்றார்.
ஆடு “சாமி, கடவுள் ஏன் ஆடுகளைப் படைத்தான்? மனிதர்கள் வெட்டி உண்பதற்காகவா?”
சாமியார் “அப்படியல்ல, கடவுள் ஏன் படைத்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிட்சயமாக மனிதர் கொன்று உண்பதற்காக ஆடுகள் படைக்கப்படவில்லை. ஆண்டவனின் ஒவ்வொரு படைப்பிலும் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கும். மனிதர்கள் எல்லோரும் மாமிசம் உண்பதில்லை. ஆண்டவன் மனிதர்களுக்கு வேதங்கள், ஆகமங்கள் மூலமாக “பிற உயிர்களைக் கொல்லாதே, பிற உயிரினங்களைத் துன்புறுத்தாதே, பாவம் செய்யாதே” என்று பல வழிகளிலும் அறிவுறுத்தியிருக்கிறான். ஆனால் மனிதர்கள் எல்லோரும் அதனைப் பின்பற்றுவதில்லை.
அது சரி நீ எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?”
ஆடு “சாமியாரே நேற்று என்னுடைய மகனை, என்னை வளர்க்கிற வீட்டுக்காரர் வெட்டி அவரது சொந்தங்களுக்கு விருந்து வைத்தவர் அதுதான் எனக்குச் சரியான கவலையாக இருக்கு. என்னையும் என்ர குட்டிகளையும் எப்ப வெட்டி விருந்து வைப்பார்களோ என்று நினைக்கவும் பயமாக இருக்கு சாமியாரே. ஏன் இப்படி நடந்தது சாமியாரே?”
சாமியார் “அதைத்தான் விதி என்று கூறுவது. நாம் செய்த பாவ புண்ணியங்களை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.”
ஆடு “விதி, பாவம் என்றால் என்ன சாமியாரே?”
சாமியார் “நாம் முற்பிறப்பிலும் இப் பிறப்பிலும் பிறருக்குச் செய்யும் துன்பங்கள், துரோகங்களை பாவம் என்று அழைப்போம். அவற்றை நாம் அனுபவிப்பது விதி எனப்படும்.”
ஆடு “முற்பிறப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்பிறப்பில் நான் எந்தப் பாவமும் செய்யவில்லை சாமியாரே.”
சாமியார் “முற்பிறப்பில் நாம் என்னவாகப் பிறந்தோம், என்ன பாவ புண்ணியங்கள் செய்தோம் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் இப்பிறப்பில் நீ எந்தப் பாவமும் செய்யவில்லை என்று கூறுகிறாயே அது எப்படி உண்மை?”
ஆடு “சாமியாரே நான் பிறந்ததில் இருந்து புல்லும், இலை குழைகளும் தான் உண்ணுறன். அப்ப எப்படி இந்தப் பிறப்பிலே பாவம் செய்திருக்க முடியும்? நான் எந்தக் கொலையும் செய்யவில்லை, யாருக்குமே எந்தத் தீங்கும் செய்யவில்லைச் சாமியாரே.”
சாமியார் “தவறு. நீ புல், இலை, தளை, குழை எல்லாம் உண்பதாகக் கூறினாயே, அந்தப் புல்லில், இலை, குழையில் எத்தனை பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் எல்லாம் இருக்கும். அதனையும் சேர்த்துத்தான் நீ உண்ணுகிறாய். அது கொலை தானே. அப்ப நீயும் பாவம் செய்கிறாய் புரிகிறதா?”
ஆடு “என்ன சாமி சொல்லுகிறீர்கள்?”
சாமியார் “ஆம், அதுதான் உண்மை. உணவாக நீ உண்ணும் இலை, தளை, குழைகளில் எத்தனையோ பூச்சிகள், புழுக்கள், வண்டுகள் எல்லாம் இருக்கும். நீ அறியாமலேயே அவற்றை கொன்று உண்ணுகிறாய் (உண்டு கொல்கிறாய்). அது நீ தெரியாமலேயே செய்யும் பாவத்தில் அடங்கும். இருந்தும் அது கொலை தானே?”
ஆடு “ஓ புரியுது சாமி. நான் நினைச்சன் நான் தாவரங்களைத் தானே சாப்பிடுகிறனான் என்று. ஆனால் இப்பதான் புரியுது நானும் சின்ன உயிர்களைக் கொலை செய்கிறேன் என்று.”
சாமியார் “நீ மட்டும் இல்லை ஆடு, நானும்தான். நான் சைவ உணவு மட்டுமே உண்பவன். நான் உண்ணும் காய்கள் தானியங்களை உற்பத்தி செய்யும்போது எத்தனை உயிர்கள் கொல்லப் படுகின்றன. அவற்றைக் கொல்ல நானும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன் புரிகிறதா?”
ஆடு “புரிகிறது சாமியாரே”
சாமியார் “ஆடு, அங்கே பார், அதில விஞ்ஞான ஆசிரியர் நிக்கிறார். அவரிடம் போய் உன் கேள்வியைக் கேட்டுப்பார்” என்றார் சாமியார்.
உடனே ஆடு தன் குட்டிகளையும் கூட்டிக்கொண்டு அந்த விஞ்ஞான ஆசிரியரிடம் சென்றது.
ஆடு “ஐயா ஆசிரியரே வணக்கம். என்னிடம் ஒரு கேள்வி உண்டு பதிலளிப்பீர்களா?”
ஆசிரியர் சிறிது ஆச்சரியத்துடன் “என்ன ஆடு உன் கேள்வி என்ன?” என்றார்.
ஆடு “ஐயா, ஏன் ஆடுகள் படைக்கப்பட்டன? எங்களை படைத்ததன் நோக்கம் என்ன? மனிதர்களுக்கு உணவாவதற்காகவா? மனிதர்கள் கொண்டாட்டம் என்றால் எம்மை அல்லவா வெட்டி விருந்து வைக்கிறார்கள்?”
ஆசிரியர் “நல்ல கேள்வி ஆடு. இதனைத்தான் உணவுச் சங்கிலி என்று கூறுவது. அதாவது இந்த உலகத்தில் உள்ள உயிரினங்களின் அளவைக் கட்டுப் படுத்துவதற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட இயற்கையாக அமைந்த ஒரு செயற்பாடு. அதாவது ஆடு, மாடு, மான் போன்ற மிருகங்கள் இல்லாவிட்டால் தாவரங்களின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாதவாறு பெருகி அந்தத் தாவரங்களும் அழிந்துபோகும். அதனால் அந்தத் தாவரங்களை உண்டு அவற்றின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த ஆடு, மாடு, மான், போன்ற தாவர உண்ணிகள் படைக்கப்பட்டன. அந்த ஆடு, மாடு, மான் போன்ற தாவர உண்ணிகளின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த நரி, புலி, சிங்கம் போன்ற விலங்கு உண்ணிகள் படைக்கப்பட்டன. அதுபோல புழு, பூச்சிகளின் அளவைக் கட்டுப்படுத்த சிறிய பறவைகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள் படைக்கப்பட்டன. சிறிய பறவைகளைக் கட்டுப்படுத்த பெரிய பறவைகள் படைக்கப்பட்டன. அதுமட்டுமன்றி தாவரங்கள் பரவ விதைகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல பறவைகள் உதவுகின்றன. நீரை வளப்படுத்த மீன்கள் படைக்கப்பட்டன. அதில் சிறிய மீனைக் கட்டுப்படுத்த பெரிய மீன்கள். இப்படியாக ஒன்றின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த இன்னொரு உயிரினம் இயற்கையாகவே படைக்கப் பட்டுள்ளது. இதுவே உணவுச் சங்கிலி என அழைக்கப்படுகிறது. இப்ப புரிஞ்சுதா ஆடு?”
ஆடு “தங்கள் விளக்கம் புரிகிறது ஐயா. இந்த உணவுச் சங்கிலியில் மனிதன் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளான் ஐயா?”
ஆசிரியர் “மனிதன் பகுத்தறிவோடு படைக்கப்பட்டவன் அவனை எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்க முடியும். அது சரி உனக்கு ஏன் இந்தக் கேள்வி ஆடு?”
ஆடு “ஐயா மனிதன் எங்களை வளர்ப்பதே எம்மை வெட்டிச் சமைக்கத் தானே ஐயா?”
ஆசிரியர் “உன்னுடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஆடு. நானும் தப்புச் செய்கிறேன் அவ்வளவுதான் நான் கூற முடியும். ஆடு உதால போய் அந்தத் தம்பிரான் கோவிலில் ஒரு சித்தர் இருக்கிறார் அவரிடம் உன் கேள்விகளைக் கேட்டுப்பார்” என்றார்.
ஆடு “சரி ஐயா சித்தரிடம் கேட்டுப்பார்க்கிறேன். என்னை எப்ப வெட்டப் போகினமோ? என்ர குட்டிகளை எப்ப வெட்டப் போகினமோ? என்ற பயத்திலும் கவலையிலும்தான் ஐயா நான் இந்தக் கேள்விகளைக் கேட்டனான்.”
ஆசிரியர் உடனே பதிலளித்தார். “ஆடு உன் வேதனை எனக்குப் புரிகிறது. இப்பதான் நான் உணருகிறன். ஆனா நான் ஒன்று சொல்லுறன், இண்டையில் இருந்து நான் எந்த மாமிச உணவும் உண்ணமாட்டேன். இது சத்தியம் ஆடு. அது மட்டுமல்ல என்னுடைய மாணவர்களுக்கும், என்னுடைய சொந்த பந்தங்களுக்கும் எந்த உயிரினத்தையும் கொன்று உண்ணாதே என்று அறிவுத்தப் போகிறேன். இதுவே எனது வாழ்நாள் பணியாகச் செய்யப் போகிறேன். என்னை ஒரு மனிதனாக்கியதற்கு நன்றி ஆடு. சித்தரிடம் போ” என்றார் ஆசிரியர்.
ஆடு “அது போதும் ஐயா நான் சித்தரிடம் போகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தம்பிரான் கோவிலை நோக்கிச் சென்றது. போகும் வழியில் சந்தியில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. ஆடு அந்தக் கடை வாசலில் போய் நின்றது.
கடைக்காரன் “ஆட்டைப் பார்த்து “என்ன ஆடு வெட்டவா?” என்றான் கிண்டலாக
ஆடு “இண்டைக்கு எத்தனை ஆடு வெட்டினனி?”
கடைக்காரன் “இண்டைக்கு எனக்கு நல்ல வியாபாரம். உந்த வாத்தியாரின்ர மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடினவர். இரண்டு ஆடு முழுசா வாங்கினவர். எனக்கு நல்ல வருமானம். கெதியா கடையைப் பூட்டிப் போட்டு பிள்ளையளுக்கு உடுப்பு இனிப்புப் பண்டம் எல்லாம் வாங்கிக்கொண்டு போகப்போறன். மனிசிக்கும் மல்லிகைப் பூ வாங்கவேணும்.”
ஆடு “உதெல்லாம் உனக்கு ஒரு பிழைப்பு. எங்களை துடிக்கத் துடிக்க, கதறக் கதற வெட்டிப் பங்கு போட்டு வித்து உன்ர பிள்ளையளை வளர்க்கிறாய் அப்படித்தானே? நான் என்னை எப்ப வெட்டப் போறாங்களோ? என்ர குட்டியளை எப்ப வெட்டப் போறாங்களோ? என்ற பயத்தில கவலையில திரியிறன். நீ என்னடாவென்றால் எங்களை கொலை செய்து உன்ர பிள்ளைகளை வளர்க்கிறாய் அப்படித்தானே?” என்றது.
கடைக்காரன் “ஆடு எனக்கு உன்ர கவலை புடியுது. நான் கூறியதற்கு மன்னிப்பு கேக்கிறன். ஆனால் இது என்னுடைய பரம்பரைத் தொழில். இதை விட்டா எனக்கு வேறு தொழில் தெரியாது. நான் பெரிதா பள்ளிக்கூடம் சென்று எதுவும் படிக்கவில்லை. எனது தந்தையார் எனக்குக் கற்பித்த தொழில். அதை நான் மிகவும் தர்மத்துடன்தான் செய்து வருகிறன்.”
ஆடு “ஆட்டைக் கொலை செய்கிறாய் அதில் என்ன தர்மம் இருக்கிறது?”
கடைக்காரன் “ஆட்டைக் கொலை செய்தாலும், ஒரு ஆட்டை வெட்டும் போது மற்றைய ஆடுகளுக்கோ அல்லது யாருக்குமே தெரியாது. தனியான இடத்தில் மறைத்து வைத்தே வெட்டுவேன். அதனால் பிற ஆடுகளுக்கு மரணபயம் வராது. அது மட்டுமல்ல வெட்டும் ஆட்டுக்கும் தலையில் ஒரு துணி போர்த்து கட்டிவிட்டே வெட்டுவேன். அதனால் வெட்டப்படும் ஆட்டுக்கும் தான் வெட்டப்படப் போவது தெரியாது. அடுத்து ஒரு வெட்டு, தலை விழும் அதனால் அந்த ஆட்டுக்கும் மரண பயம் இருக்காது.”
ஆடு “என்ன நீ செய்யும் கொலைக்கு நியாயம் கற்பிக்க வாறியா?”
கடைக்காரன் சிறிது கவலைப் பட்டவாறு “ஆடு என்னால் இந்தத் தொழிலை விடமுடியாது. எனது மனைவி பிள்ளைகளைக் காப்பாற்ற இந்தத் தொழில் மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனால் நான் ஒன்று செய்கிறேன் ஆடு, என்னுடைய பிள்ளைகளுக்கு இந்தத் தொழிலை நான் கற்பிக்க மாட்டேன். அவர்களைப் படிக்க வைத்து படிப்புக்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்கட்டும். இந்தத் தொழிலுக்கு மட்டும் வராமல் பார்த்துக் கொள்கிறேன். அதுதான் என்னால் முடியும் ஆடு” என்றார்.
ஆடு “சரி கடைக்காரரே. இன்றைய இலாபத்தில் பிள்ளைகளுக்கு உடுப்பு எடுத்துக் கொண்டுபோய் கொடு. அவர்கள் மகிழ்வார்கள் நான் போகிறேன்” என்று கூறிக் கொண்டு தனது குட்டிகளையும் அழைத்துக் கொண்டு சித்தரைக் காண தம்பிரான் கோவில் நோக்கிப் புறப்பட்டது.
அப்போது அவ்வழியே ஒரு பகுத்தறிவாளன் வந்து கொண்டிருந்தார் ஆடு அவரை நெருங்கி “ஐயா பகுத்தறிவாளரே” என்றது
பகுத்தறிவாளர் “என்ன ஆடு, குட்டிகளோட எங்கே போகிறாய்? என்றார்
ஆடு “ஐயா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்றது.
பகுத்தறிவாளர் “நான் இப்போது ஒரு மேடையில் பேசுவதற்காகப் போய்க் கொண்டு இருக்கிறேன். என்ன கேள்வி? கேள்.” என்றார்.
ஆடு “ஐயா பகுத்தறிவாளரே ஊருக்கெல்லாம் நிறையவே பகுத்தறிவை விதைக்கிறீர்கள். ஐயா கடவுள் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆட்டை யார் படைத்தார்? ஆடு ஏன் படைக்கப்பட்டது? ஆட்டை வெட்டி விருந்து வைப்பதற்காகத் தானே படைக்கப்பட்டது? இதனைப் பற்றி நீங்கள் ஒருபோதும் பேசவில்லையே? நீங்களும் விருந்துகளில் ஆட்டுக்கறி உண்கிறீர்கள் தானே?
பகுத்தறிவாளர் சற்று திகைத்தார் “என்னிடம் இதுவரை யாரும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை ஆடு. கடவுள் என்று ஒன்றும் இல்லை. உயிரினங்கள் எல்லாம் இயற்கையாகவே படைக்கப் படுகின்றன. இயற்கையாகவே ஒன்றுக் கொன்று எதிரியாகவும் படைக்கப் படுகின்றது. அதாவது எலிக்கு பூனை எதிரி, அது எலியின் பெருக்கத்தைத் தடுக்க. பூனைக்கு நாய் எதிரி, அது பூனையின் பெருக்கத்தைத் தடுக்க. ஆட்டுக்கு, மாட்டுக்கு, மானுக்கு சிங்கம் மற்றும் புலி எதிரி. அது ஆடு, மாடு, மானின் பெருக்கத்தை கட்டுப்படுத்த.”
ஆடு குறுக்கிட்டது “ஆடு, மாட்டுக்கு புலி, சிங்கம் எதிரி என்றால் ஆடும், மாடும் ஏன் வீட்டு மிருகம் என்று அழைக்கப் படுகின்றன. சாதுவான மிருகங்கள் என்று கூறிக்கொண்டு ஆடு, மாட்டை காட்டிலுள்ள புலியும், சிங்கமுமா வந்து கொன்று உண்ணுகின்றன? மனிதர்கள் தானே கொன்று உண்ணுகிறார்கள்?
பகுத்தறிவாளன் “ஆடு அது இயற்கையாக அமைந்த உணவுச் சங்கிலி என்று கூறுவார்கள்.”
ஆடு “ஐயா அப்படி ஒரு உணவுச் சங்கிலி தேவையே இல்லை. மனிதனால் எல்லா விலங்குகளையும் அழிக்க முடிகிறது. மனிதன் நிலத்திலுள்ள புழு, பூச்சிகளை அழிக்கிறான். நீரிலுள்ள மீன்களை அழிக்கிறான், பறக்கும் பறவைகளை அழிக்கிறான், காடுகளை அழிக்கிறான். மனிதன் என்று ஒன்று மட்டுமே இருந்தால் போதுமானது. வேறு எந்த உயிரினமும் தேவையில்லை. மனிதனால் எல்லாமே முடியும் உந்த உணவுச் சங்கிலியே தேவை இல்லை ஐயா.”
பகுத்தறிவாளன் “புரிகிறது ஆடு. உன் பிரச்சினை என்ன?”
ஆடு “ஐயா என்ர வீட்டுக்காரன் நேற்று என்ற மகனை வெட்டி விருந்து வைத்து தனது பேரன் பிறந்ததை மகிழ்ச்சியாகக் கொண்டாடினவர். இப்ப எனக்குப் பயமாக இருக்கு, எப்ப என்னையும் என்ர குட்டிகளையும் வெட்டி விருந்து வைக்கப் போகினமோ என்று நினைக்கவே பயமாக இருக்கு. அன்பாக வளர்க்கிற மாதிரி வளர்த்துப் போட்டு வெட்டிச் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கச் சரியான கவலையாகவும் இருக்கு.
கடவுள் இருக்கிறார், பிழை செய்தால் தண்டிப்பார் என்ற பயத்தில பாவம் செய்யப் பயப்பிடுவினம். ஆனால் நீங்களோ கடவுள் என்று எதுவும் இல்லை, அது மூட நம்பிக்கை என்று சொல்லித் திரிகிறீர்கள். உயிர்களைக் கொல்லாதே என்று எக்காலத்திலாவது பேசியிருக்கிறீர்களா?”
பகுத்தறிவாளன் சிறிது நேரம் மௌனமானார் பின்னர் “ஆடு நான் கூறுவது கடவுள் என்ற பெயரில் மனிதர்கள் பல முட்டாள் தனமான காரியங்கள் செய்கிறார்கள். அதனைத்தான் நான் அவர்களுக்குப் புரிய வைக்கப் பாடுபடுகிறேன். மற்றப்படி நான் உயிர்களைக் கொல் என்று ஒருபோதும் சொல்வதில்லை.“
ஆடு “ஐயா நீங்கள் கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு ஆடு, மாடு, கோழி என்று எல்லா மாமிசமும் உண்கிறீர்கள்தானே? நீங்கள் எல்லாம் ஒரு மனிதன். ஊருக்கு உபதேசம் செய்கிறீர்கள். சில வீடுகளில் ஆடு, மாட்டைப் பாருங்கோ கழுத்தையும் காலையும் சேர்த்துக் கட்டிப்போட்டு நடக்கவே முடியாமல் அவை படும்பாடு உங்களுக்குப் புரியவில்லையா? தெருவில பாருங்கோ சின்னக் கூட்டுக்குள்ளை எத்தனை கோழிகளை வைத்துப் பூட்டிப் போட்டு விற்பனைக்கு வைத்திருக்கினம். இவற்றை எப்பவாவது தட்டிக் கேட்டிருக்கிறீர்களா? எங்களது கவலை, பயம், வேதனை உங்களுக்கு எங்கே புரிகிறது.”
பகுத்தறிவாளன் “இன்றுதான் எனக்குப் புரிகிறது ஆடு. இன்றில் இருந்து எனது கொள்கைகளில் மாற்றம் வந்து விட்டது ஆடு. நான் இனி மேடைகளில் பிற உயிர்களைத் துன் புறுத்துவதை அந்த உயிரினம் படும் வேதனைகளை மக்களுக்குப் புரிய வைக்கப் போகிறேன். எல்லோருக்கும் முன்மாதிரியாக நான் இனி மாமிசம் உண்ணமாட்டேன். பிற உயிர்களைக் கொன்று மாமிசம் புசிப்பதில்லை. என்று நான் உனக்குச் சத்தியம் பண்ணுகிறேன் ஆடு” என்று கூறி முடித்தார்.
ஆடு அப்படியே தம்பிரான் கோவில் நோக்கிப் புறப்பட்டது.
தம்பிரான் கோவில் ஊர் எல்லையில் இருந்ததது. அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாது அயலூர் மக்களும் அந்தத் தம்பிரான் கோவில் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். யாருக்காவது வருத்தம், துன்பம் வந்தால் தம்பிரானுக்கு ஆடு, கோழி நேர்ந்து விடுவார்கள். பின்னர் பிரச்சினைகள் துன்பங்கள் தீருதோ, இல்லையோ நேர்ந்த ஆட்டையோ, கோழியையோ கொண்டு சென்று தம்பிரானிடம் விட்டுப் போட்டு பொங்கல் செய்து படைத்து வழிபடுவார்கள்.
அந்தக் கோவில் பூசாரி அங்கு வரும் ஆடுகளையும், கோழிகளையும் மாதத்தில் ஒவ்வொரு அமாவாசைக்கும் வெட்டி பொங்கல் செய்து தம்பிரானுக்குப் படைத்து அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் செய்வார்கள்.
அங்கு இருக்கும் சித்தர் அங்கு வரும்வரை இதுவே அக்கோவில் வழக்கமாக இருந்தது.
ஆனால் அந்தச் சித்தர் அங்கு வந்ததில் இருந்து “நேர்ந்து விட்ட ஆடு கோழிகளை வெட்டி உண்டால் ஊருக்குக் கூடாது” என்று கூறியதால் ஆடு, கோழி வெட்டுவதை நிறுத்தி விட்டார்கள். அதனால் நேர்ந்து விடப்படும் ஆடு கோழிகளால் தம்பிரான் கோவில் வளவு நிரம்பி இருந்தது. நேர்ந்து விட்ட ஆடு, கோழி என்பதால் யாரும் அவற்றை வாங்குவதும் இல்லை. அதனால் அவ்வப்போது நாய், நரி என்று ஏதாவது வந்து பிடித்துக் கொண்டு போகும். மற்றப்படி ஆடு கோழியால் தம்பிரான் கோவில் வளவு பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
ஆடு குட்டிகளுடன் தம்பிரான் கோவிலை அடைந்தது. கோவில் படிக்கட்டில் கோவில் பூசாரி படுத்திருந்தார். ஆட்டைக் கண்டவுடன் “என்ன ஆடு குட்டிகளுடன் வாராய் என்ன நேத்திக்கடனா?” என்றார் பூசாரி.
ஆடு “என்ன பூசாரி உனக்கென்ன வெறியா? நான் சித்தரைக் காண வந்தனான்” என்றது.
பூசாரி “உந்தச் சித்தனாலை தான் என்ர பிழைப்பே கெட்டுப் போச்சுது. நேர்ந்து விட்ட ஆடு, கோழி ஒண்டும் வெட்டேலாமல் பண்ணிப் போட்டார். இறைச்சி இல்லாமல் என்ர வாயெல்லாம் செத்துப் போச்சு. சித்தனாம் பெரிய சித்தன்” என்றார் மிகவும் கோவமாக.
ஆடு “என்னைக் குட்டிகளை எப்ப வெட்டி விருந்து வைக்கப் போகினமோ தெரியேல்லை என்ற பயத்தில நான் திரியிறன் உனக்கு ஆட்டுக்கறி தேவையாக இருக்கு என்ன?” என்றது.
பூசாரி “ஆண்டவன் உன்னை (ஆட்டை) படைச்சது மனிதர்கள் வெட்டிச் சாப்பிடத்தானே, அதைத்தவிர உன்னால என்ன பயன்?” என்றார் ஏளனமாக.
ஆடு “உங்கடை பயன்பாட்டுக்குத்தான் உலகிலுள்ள எல்லா உயிரினமும் படைக்கப்பட்டிருக்கு அப்படித்தானே பூசாரி? நீ ஆடாய் பிறந்திருந்தால் அப்பத்தான் உனக்குத் தெரிந்திருக்கும் எனது பயமும், பிரச்சினையும்.”
பூசாரி “சும்மா கத்தாதே ஆடு. அந்தா அந்த மரத்துக்கு கீழ இருக்கிறார் சித்தர் போய்ப்பார் உனக்கு மோட்சம் கிடைக்கும்” என்றார் சற்று எரிச்சலுடன்.
ஆடு “அப்படி ஊருக்கு ஒரு சித்தர் வந்தால்த்தான் எங்களைப் போன்ற ஆடு, கோழியளுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்” என்றது.
பூசாரி “ஊரிலை உங்களை வெட்டாட்டி நீங்கள் ஆறு மாசத்துக்கு ஒருதரம் ஓன்று அல்லது இரண்டு குட்டியள் எண்டு போட்டு ஊரெல்லாம் ஆடாலை நிரம்பிப் போகும். கடைசியில மனிசர் இருக்க இடமில்லாமல் திரிய வேண்டியதுதான்”
ஆடு குட்டிகளையும் கூட்டிக்கொண்டு சித்தரிடம் சென்றது. அங்கு நின்ற ஒரு வேப்ப மரத்துக்குக் கீழே சித்தர் கண்களை மூடியவாறு மரத்தில் சாய்ந்தவாறு இருந்தார்.
ஆடு அருகில் சென்று “சித்தரே” என்றது.
சித்தர் மெதுவாகக் கண்களைத் திறந்து ஆட்டைப் பார்த்து “என்ன ஆடு?” என்றார்.
ஆடு “சித்தரே எனக்குள் ஒரு பயம், கவலை அதுதான் உங்களைக் காண வந்தேன்” என்றது.
சித்தர் “இந்த உலகத்தில் யாருக்கு ஆடு கவலை பயம் இல்லை. சரி உன்னுடைய பிரச்சினை என்னவென்று கூறு “என்றார்.
ஆடு “நீங்கள் சித்தரா?”
சித்தர் “நான் சித்தன் என்று உனக்கு யார் சொன்னது?”
ஆடு “ஊருக்குள்ள எல்லோரும் கதைக்கினம்.”
சித்தர் “அவையிடமே போய்க் கேள் ஆடு. நான் சித்தனோ என்று.”
ஆடு “சித்தர் என்றால் யார்?”
சித்தர் “சித்தம் தெளிந்தவன் சித்தன். அதாவது சிவனைக் கண்டவன் சித்தன். சிவனுடன் இரண்டறக் கலந்தவன் சித்தன். பிறவிப் பிணி அறுத்தவன் சித்தன். அதாவது இறைநிலை அடைந்தவர்கள் சித்தர்கள் என அழைக்கப் படுகிறார்கள். அவர்கள் வாழ்வில் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், ஆசை பாசம் எதுவும் அற்றவர்கள். சரி உன் பிரச்சினை என்ன ஆடு?”
ஆடு “சித்தரே கடவுள் ஆட்டை ஏன் படைத்தான்? என்னையும் என்ர குட்டிகளையும் எப்ப வெட்டி விருந்து வைக்கப் போயினமோ? என்று நினைக்க ஒரே பயமாகவும் கவலையாகவும் இருக்கு.”
சித்தர் “பிறந்தனவெல்லாம் இறக்கும், இறந்தனவெல்லாம் பிறக்கும். அது உலக நியதி. அதுதான் தத்துவம். பிறந்த உயிர் என்றோ ஒருநாள் இறக்கத்தானே போகிறது, அதற்கு ஏன் பயப்படுகிறாய்?”
ஆடு “அதில்லை சித்தரே. கழுத்தில கத்தியாலை வெட்டி மனிதர்கள் எம்மைக் கொல்கிறார்கள். நேற்று என்ர மகனை வெட்டி விருந்து வைத்தவை. அவனை வெட்டும்போது நான் நேரிலை பார்த்தனான்.”
சித்தர் “அற்ப மனிதர்கள் தங்களுக்குச் சிறிது வருத்தம் வந்துவிட்டால் தமது உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால் ஏனைய உயிர்களைக் கொன்று உண்கிறார்கள். அதுவும் ஆண்டவன் விளையாட்டே. ஆடு கொஞ்சம் தள்ளி நில்.”
ஆடு “ஏன் சித்தரே?”
சித்தர் “உன்னுடைய கால்களால் ஒரு வண்டை மிதித்து நிற்கிறாய். வண்டு கால் உடைந்து செட்டை உடைந்து அரை உயிரோடு துடிக்கிறது. அதனால்த்தான்.”
ஆடு சற்று தள்ளி நின்றவாறு “தெரியாமல் நடந்து விட்டது சித்தரே, வேணுமென்று நான் வண்டை மிதிக்கவில்லை.”
சித்தர் “அது எனக்கும் தெரியும். ஆனால் இனி அதனால் அசையவே முடியாது அப்படியே கிடந்து சாக வேண்டியதுதான்.”
ஆடு “அப்ப கால்களால் உளக்கி அதனைச் சாகடிக்கவா சித்தரே?”
சித்தர் “இப்ப நீ செய்தது தெரியாமல் செய்த பாவம். இனி நீ அதனை சாக்காட்ட நினைப்பது தெரிந்து செய்யும் கொலை. கொலை செய்யப் போகிறாயா?”
ஆடு “இல்லைச் சாமி, நான் கொலை செய்ய மாட்டேன்.”
சித்தர் “சரி அதை அப்படியே விட்டுவிடு. படைத்தவன் பாத்துக் கொள்வான்.
அதுமட்டுமே, உன் காலுக்குள் மிதிபட்டு எத்தனை எறும்புகள், வண்டுகள், புழுக்கள் எல்லாம் மிதிபட்டுச் சாகும். அவை எல்லாம் நாம் தெரியாமல் செய்யும் பாவங்கள்.”
ஆடு “எறும்பு மிகவும் சிறியதுதானே சாமி.”
சாமியார் “ஆன்மாவுக்கு உருவமோ, அளவோ கிடையாது. எறும்போ, ஆடோ, யானையோ எல்லாமே உயிரினங்கள் தான். உருவங்கள் வேறு வேறு. அளவும் வேறு வேறு. ஆனால் அதில் பயணம் செய்யும் ஆன்மா ஒரே மாதிரியானது தான்.
பெரிய மிருகங்களிடம் இல்லாத ஒற்றுமை, கடின உழைப்பு, முகர்ந்து அறியும் தன்மை, தமக்குத் தேவையான உணவைச் சேகரித்து வைக்கும் அறிவு அந்தச் சிறிய எறும்பிடம் உண்டு அது உனக்குத் தெரியாதா?”
ஆடு “புரியுது சாமி.”
சாமியார் “உயிரினங்களின் படைப்பு, அவற்றின் தனித்தனித் திறமைகள், தனித் தன்மை எல்லாமே அந்த இறைவன் பார்த்துப் பார்த்துப் படைத்தது.
பிறந்தன எல்லாம் இறக்கும் என்பது எல்லா உயிரினத்துக்கும் பொதுவானது. அதுபோல கால்களில் மிதிபடும் எறும்பு சாகும். பறவை கொத்தி உண்ணும்போது எறும்பு சாகும். அல்லது வயது வந்து சாகும்.
எனவே இறப்பு என்பது எல்லா உயிரினத்துக்கும் பொதுவானது. அது எப்படி நிகழும், எப்போ நிகழும், என்பதுதான் எவருக்கும் புரியாத புதிர். அதனைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படத் தேவை இல்லை. நாம் யாரையும் துன்புறுத்தாமல், கொலை செய்யாமல் உதவி செய்து வாழ்வோமாக.
சரி உன் பிரச்சினையைக் கூறு.”
ஆடு “என்ர கழுத்தை வெட்டிக் கொலை செய்து விருந்து உண்பார்களோ என்று நினைக்கப் பயமாக இருக்கிறது சித்தரே.”
சித்தர் “உலகத்தில் பிறந்த எல்லா ஆடுகளும் வெட்டப்படும் என்று கூறமுடியாது. அப்படி எண்ணாதே, பயப்படாதே.
எல்லா ஆடுகளும் வெட்டப்பட்டுத்தான் சாகின்றன என்று எண்ணுகிறாய் அப்படி இல்லை. நோய் வந்து இறக்கின்றன. மழை, புயல், வெள்ளம் வந்தும் இறக்கின்றன. வயது முதிர்ந்து இறக்கின்றன. எப்படியும் மரணம் நிகழலாம். எனவே எல்லா ஆடுகளும் வெட்டிக் கொலை செய்யப்படுகின்றன என்று எண்ணாதே.
ஆடுகள் மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் மரணம் எப்படியும் நிகழலாம். மனிதர்களை எடுத்துப்பார், நோயால் இறக்கிறார்கள், வயது வந்து இறக்கிறார்கள், விபத்துக்களால் இறக்கிறார்கள், மனிதர்களே மனிதர்களைத் தாக்கி இறக்கிறார்கள். எனவே மரணம் எந்த வடிவிலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம்.
ஆடு “புரியுது சித்தரே. இருந்தும் பயமாக இருக்கிறது.”
சித்தர் “நீ கொலை செய்யப்பட மாட்டாய். இது உறுதி. நீ வெட்டிக் கொலை செய்யப்படுவாய் என்ற மரண பயம் இனி உனக்கு வேண்டாம். ஆனால் மரணம் நிகழும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பயப்படாமல் போ.” என்றார் சித்தர்.
ஆடு “அப்படியா? நன்றி சித்தரே. என்னுடைய குட்டிகளையும் வெட்ட மாட்டார்களே?”
சித்தர் “நீ கேட்டாய் உனக்கு இனி மரண பயம் வேண்டாம். குட்டிகள் வந்து கேட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.”
ஆடு மிகவும் நம்பிக்கையுடன் குட்டிகள் பக்கம் திரும்பியது. குட்டிகள் நேர்ந்து விடப்பட்ட ஆட்டுப் பட்டிக்குள் சென்று அங்குள்ள ஆடுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. குட்டிகளைத் தேடிக்கொண்டு ஆடும் அந்தப் பட்டிக்குள் நுழைந்து விட்டது. அங்கு சென்ற ஆட்டுக்கு ஒரே ஆச்சரியம். தான் முதலில் போட்ட பெண்குட்டி, யாரோ தூக்கிச் சென்ற அந்தப் பெண் குட்டி வளர்ந்த ஆடாக அங்கே நின்றது. அந்தக் குட்டியும் தனது தாயைக் கண்ட பூரிப்பில் கத்தியது.
“அம்மா நீயும் இங்கு வந்துவிட்டாயா?” என்றது குட்டி.
ஆட்டுக்குப் புரிந்துவிட்டது. தனது குட்டியை யாரோ தம்பிரானுக்கு நேர்ந்துவிட்டு அங்கே கொண்டு வந்து விட்டு விட்டார்கள். இனி குட்டிக்கு மரண பயம் இல்லை என்பது.
அந்த மகள் ஆடு தாயிடம் கூறியது “அம்மா இனி நீ வெளியில் போகாதே இங்கேயே இரு. எங்களை யாரும் வெட்ட மாட்டார்கள்.”
அந்த நேரம் பார்த்து ராசையா தனது ஆட்டையும் குட்டிகளையும் தேடிக்கொண்டு அங்கு வந்து பூசாரியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
பூசாரி கூறினார் “ராசையா உன்ர ஆட்டையும் குட்டிகளையும் உந்தச் சித்தன் கூப்பிட்டு நேர்ந்து அந்தப் பட்டிக்குள்ளை விட்டுப் போட்டான். இனி அதுகள் இந்தத் தம்பிரானுக்குத் தான் சொந்தம். உந்தச் சித்தன் இங்கு இருக்கும்வரை யாருக்கும் ஆட்டிறைச்சி இல்லை.”
ராசையாவும் சித்தரைத் திட்டியவாறு ஆடுகளை விட்டுப் போட்டு வந்த வழியே திரும்பினார்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆடு தனது மனத்துக்குள் சொல்லிக் கொண்டது “சித்தன் வாக்கு சிவவாக்கு, இனி எனக்கும் குட்டிகளுக்கும் எம்மை வெட்டி விருந்து வைப்பினம் என்ற மரணபயம் இல்லை”
கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
— சுபம் —
உண்மையில் இது ஒரு கிடா விருந்து தான் அற்புதமான கதை அவரவர் கோணத்தில் இருந்து பார்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல எல்லோராலும் முடியக்கூடியதும் அல்ல பரந்த எண்ணம் கொண்ட ஒரு சிறந்த மனிதராலே ஆகக் கூடும் அதை சிறப்பாக செய்த சிவகுமாரன் ஐயா அவர்களுக்கு ஆத்ம வணக்கங்கள் நன்றி
நன்றிகள் ஐயா