உடல் உயிர் ஆன்மா

0 0
Read Time:44 Minute, 45 Second

நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளது கேள்வி பதில்களையும் மேலும் பல தேடல்களில் இருந்தும் நான் அறிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் உடல் என்றால் என்ன என்பதனை பார்க்கலாம். உடல் என்பது பல சிறிய கலங்களால் ஆன ஓர் அமைப்பு.

அதாவது பல அணுக்களால் ஆனது உலோகம். அதாவது ஒரு உலோகத்தின் மிகச்சிறிய துகள் அணு என்று அழைக்கப்படும். இன்னும் விரிவாக்கப் பார்க்கப் போனால் ஒரு உலோகத்தை மேலும் மேலும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு போகும்போது இறுதியில் மிஞ்சிவது அணு எனக் கொள்ளலாம்.

எனவே உலோகங்கள் அணுக்களால் (அணு) ஆனவை போல உடல்கள் கலங்களால் (கலம்) உயிரணுக்களால் ஆனவை.

அணுவை எப்படி எமது வெறும் கண்ணால்ப் பார்க்க முடியாதோ அவ்வாறே கலன்களையும் வெறும் கண்ணால்ப் பார்க்க முடியாது.

சகல உயிரினங்களும் ஓன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலன்களால் ஆனவை.

சில உயிரினங்கள் தனிக்கலத்தாலான (unicellular) உயிரினங்கள் ஆகும். அதாவது ஒரே ஒரு உயிரணுவினால் உருவாக்கப்பட்டவை. உதாரணம் பக்றீரியா.

மற்றயவை பல்கல (multi-cellular) உயிரினங்கள். அதாவது பல உயிரணுக்களினால் ஆனவை.

ஒரு அணுவானது இலத்திரன் புரோத்திரன் நியூத்திரன் என்ற கட்டமைப்பினால் ஆனதுபோல ஒரு கலத்தினுள்ளும் சிறிய கட்டமைப்புக்கள் உண்டு. அதில் முக்கியமானது DNA எனப்படும். இந்த DNA என்று சொல்லப்படும் கட்டமைப்பே ஒரு உயிரினத்தின் அதாவது ஒரு உடலின் (தாவரமோ, விலங்கோ) வடிவத்தை (உதாரணமாக உயரம், நிறம்) அதன் குணாதிசயத்தை (குயில் கூவும், புலி பாயும்) தனது அடுத்த சந்ததிக்குக் கடத்துகின்றது. ஒவ்வொரு உயிரினத்தினதும் தனித்துவத்தை தமது பரம்பரைக்கு கடத்துவது இந்த DNA ஆகும்.

ஒரு உயிருள்ள கலத்தின் மூலமாகத்தான் இன்னொரு உயிருள்ள கலத்தை உருவாக்க முடியும். உதாரணமாக ஒருகல உயிரினமான ஒரு பக்ரீரியாவில் இருந்து பிரிந்துதான் இன்னொரு பக்றீரியா உருவாகும்.

ஒரு அங்கமானது பல கலங்களால் ஆனது. பல அங்கங்கள் சேர்ந்தது ஒரு உடலாகும்.

ஒரு உடல் அல்லது அங்கம் உயிருடன் இருப்பதற்கு சில அடிப்படை சூழ்நிலைகள், தகைமைகள் தேவைப்படுகின்றன.

அதில் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

1. மரம், செடி, கொடிகளின் விதைகள் உயிருடன் பாதுகாக்கப்படுகின்றன. விதை மரத்தின் ஒரு அங்கமாகும்.

2. மனித குருதி (இரத்தம்) குளிர்நிலையில் உயிருடன் பாதுகாக்கப் படுகின்றது. (குருதி உடலின் ஒரு அங்கமாகக் கொள்ளலாம்.)

3. தானமாகப் பெறப்படும் மனித அங்கங்கள் (கண்கள், இதயம்) உயிருடன் சேகரிக்கப்பட்டு தேவைப் படுபவர்களுக்குப் பாவிக்கப்படுகின்றது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், ஒரு அங்கமானது (உடலின் பாகம்) உயிருடன் இருப்பதற்கு சில அடிப்படை சூழ்நிலைகள் தகைமைகள் தேவைப்படுகின்றன. உயிருடன் இருக்கும் அங்கம் மீண்டும் தேவைப்படும்போது பாவிக்கப்படலாம். இதனை வேறு விதமாகக் கூறுவதானால் உயிர் இருக்கும் ஒரு அங்கம் (உடலின் பாகம்) அழியாது பாதுகாக்கப்பட்டு மீண்டும் தேவைப்படும்போது உபயோகிக்க முடியும்.

ஒரு மரத்தினை எடுப்போமானால் வேரில் இருந்து நுனி வரை உயிருள்ள அங்கங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரற்றுப் போகும் அங்கங்கள் (கலங்கள்) காய்ந்து சருகாக, காய்ந்த பட்டைகளாக உதிர்ந்து உக்கிப் போகும்

மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் உயிருள்ள விதையானது மீண்டும் ஒரு புதிய உயிருள்ள உடலை (மரத்தை) உருவாக்கும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால் ஒரு இலை உருவாகி வளர்வதென்பது, உயிருள்ள குருத்திலுள்ள ஒருகலம் இன்னொரு கலத்தை உருவாக்கும். அதானால் குருத்து பெருத்து இலையாகும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்தக் கலம் இறந்துபோகும்.

உதாரணமாக ஒரு மரம் நூறு ஆண்டுகள் வாழும் ஆனால் அதிலுள்ள கலங்கள் புதிய கலங்களை உருவாக்கிய பின்னர் முதிர்ந்து இறந்து விடுகின்றன, ஒரு கலத்தின் வாழ்க்கைக் காலம் ஒரு வாரமாகக்கூட இருக்கலாம்.

உதாரணமாக மனிதரில் குருதிக் கலங்கள் புதிய குருதியை (இரத்தத்தை) உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அவை இறந்து போகும். அதுபோல தோலில் உள்ள சில கலன்கள் இறந்து தலை முடியாகவும், நகமாகவும் வளர்கின்றன. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் ஒரு உயிரில் இருந்துதான் இன்னொரு உயிர் பரிணமிக்க முடியும். அதாவது உடல் உயிரோடு இருக்க உயிர் தேவை.

எனவே எமது உயிர் எமது மூதாதையரின் இருந்து வந்ததாகும். எனவே எமது குணாதிசயங்களும் எமது பரம்பரையை ஒத்ததாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே “DNA Test” மூலமாக ஒருவருடைய பரம்பரை கண்டுபிடிக்கப் படுகிறது

இந்த முறையை விளங்கிக்கொள்ள இன்னொரு உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு இடத்தில் எரியும் நெருப்பில் இருந்து அதனைக் கொளுத்தி எடுத்து இன்னொரு இடத்தில் அல்லது பல இடத்தில் எரிய வைக்கலாம். அவ்வாறே உயிரும் ஒன்றிலிருந்து ஒன்றாக தொடர முடியும்.

அவ்வாறே ஒரு உயிர்உடல் இன்னொரு உயிர்உடலை உருவாக்குகிறது.

அதாவது ஒரு ஆணின் உயிருள்ள விந்துவும் ஒரு பெண்ணின் உயிருள்ள முட்டையும் இணைந்து அதன் DNA யின் தன்மைக்கு ஏற்றவாறு ஒரு உயிர்உடலை உருவாக்குகிறது.

இவ்விடத்தில் உயிருடலின் தன்மையினை சிறிது ஆராந்து கொண்டு ஆன்மாவைப் பற்றி ஆராயலாம்.

ஒரு மனித உயிருடல் பற்றிப் பார்க்கும்போது ஒரு தாயின் கருப்பையில் வளரும் ஒரு கருவானது ஆன்மா இல்லாத ஒரு உயிருடலாகும். அக்கருவானது கை கால்களை அசைக்கும். தாயில் இருந்து தொப்புள் கொடிமூலமாக கிடைக்கும் உணவை உள்வாங்கும். அதன் உள் அங்கங்களின் செயற் பாட்டினால் சமிபாடடையும். அதன் இதய துடிப்பு காரணமாக இரத்த ஓட்டம் நடைபெறும். ஆன்மா இல்லாத போதும் ஒரு உயிருடலில் இச் செயல்முறைகள் நடைபெறும்.

இன்னொரு உதாரணமாக ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விதையினை ஒரு தாயின் கருவில் வளரும் கருவுக்கு ஒப்பிட முடியும். ஒரு விதையினை ஒரு மரத்தின் அங்கமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஒரு மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உயிருள்ள தடி அல்லது ஒரு கம்பு ஒரு மரத்தின் அங்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு உடலில் உணவு செரிமானம், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல், இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் இதயம் மூலமாக அனுப்பப்படல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல், ஆகிய செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் செய்து கொண்டு இருக்கின்றது.

இது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே ஒரு உயிருடனானது (தாவரங்களோ அன்றி விலங்குகளோ) அதனதன் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படும்.

இவ்விடத்தில் இன்னொரு உதாரணமாக மயக்க (coma stage) நிலையிலுள்ள ஒரு உடலையும் இங்கு எடுத்துக்கொள்ள முடியும். மயக்க நிலை எனப்படுவது ஏதோ காரணத்தினால் ஆன்மாவின் தொடர்பை உடல் இழந்துவிடும்போது மயக்க நிலை எனப்படும். ஆனால் ஆன்மாவின் தொடர்பு இல்லாத நிலையிலும் மயக்க நிலையில் உயிருடனுள்ள உடலில் நடைபெறும் சுவாசம், இரத்த ஓட்டம் சமிபாடு போன்ற. உடலின் உள் தொழில்ப்பாடுகள் நடைபெறும்.

அதாவது உயிர் எனப்படுவது இந்த உடலை அசைத்திடும், இயக்கிடும் ஒரு சக்தி என எடுத்துக் கொள்ளலாம். இது மரம், செடி, கொடி, பூச்சி, விலங்கினம், பறப்பவை, நீரில் நீந்துபவை, நீரில், மண்ணில் ஊரும் பிராணிகள் என அனைத்து உயிரினங்களும் இயங்க தேவையான ஒரு சக்தி. அதாவது தேகத்தை (உடலை) இயக்கும் மின்சாரம் போன்றது உயிர்.

ஒரு அணுவை எப்படி மனிதனால் ஒரு ஆய்வுகூடத்தில் உருவாக்க முடியாதோ, (உதாரணமாக தங்கம் (gold), இரும்பு போன்ற அணுக்களை ஆய்வு கூடத்தில் உருவாக்க முடியாது, நிலத்திலிருந்துதான் எடுக்க முடியும்). அப்படியாக ஒரு உயிரையும் மனிதனால் ஆய்வு கூடத்தில் உருவாக்க முடியவில்லை.

இப்போது உடல் என்றால் என்ன, உயிர் என்றால் என்ன, இந்த உடலுக்கும் உயிருக்கும் இடையில் உள்ள சம்பந்தம் (தொடர்பு) என்ன என்று ஓரளவு விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

அடுத்தாக இந்த ஆன்மா என்றால் என்ன அது எப்போது இந்த உயிருடலுடன் இணைந்து கொள்கிறது என்பதுபற்றி ஆராயலாம்.

ஆன்மா எப்படி பிறப்பெடுக்கிறது என்று ஆராயும்போது. சிவம் என்ற நிலையான சக்தி இவ்வுலக சஞ்சாரம் அதாவது இவ்வுலக தொழில்பாட்டை நிலைநாட்டுவதற்காக சக்தி என்னும் அசையும் சக்தியுடன் இணையும்போது ஆன்மா உருவாகிறது. இதுவே இந்து மதத்தில் சிவன் பார்வதியில் இருந்து ஆன்மா தோன்றுவதாகவும், கிறிஸ்தவ மதத்தில் ஆதாம் ஏவாளில் இருந்து ஆன்மாவானது தோன்றியதாகவும் கூறுகின்றன. இவ்வாறு வேறு வேறு மதங்களில் வேறு வேறு பெயர்களில் சித்தரிக்கப் பட்டிருந்தாலும் எல்லா மதங்களும் ஆன்மா ஒரு மூலத்தில் இருந்து உருவாகிறது என்பதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு உயிரினத்துக்கு (உடலுக்கு) பரிணாம வளர்ச்சி இருப்பது போல ஒரு ஆன்மாவுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு. சிவனில் இருந்து உருவாகும் ஆன்மாவானது பல படிமுறைகளை பல உடல்களைக் கடந்தே இந்த மனித உடலை அடைகிறது எனக் கூறுகின்றன வேதங்கள்.

ஆன்மாவைப் பற்றி (பரிணாம வளர்ச்சி) மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில்க் குறிப்பிடும்போது

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”

என்று குறிப்பிடுகிறார். இவ்வரிகளின் கருத்தினை ஆராயும்போது

புல் ஆகி – புல்லாகியும், பூடு ஆய் – பூண்டாகியும் (சிறு தாவரங்கள்), புழு ஆய் – புழுவாகியும் (புழுவகை / மீன்கள்), மரம் ஆகி – மரமாகியும், பல்விருகமாகி – பல மிருகங்களாகியும், பறவை ஆய் – பறவையாகியும், பாம்பு ஆகி – பாம்பாகியும், கல் ஆய் – கல்லாகியும், இங்கு கல்லாய் என்று குறிப்பிடும்போது அது கல் (கருங்கல்) அல்லது பாறையைக் குறிக்கிறது. கல்லில் சக்தியுண்டு. இரு கற்களை உரசும்போது நெருப்பு உண்டாகும். கல் பஞ்ச பூதங்களால் ஆனது. இயற்கையாக இருக்கும் கல் வளரும். அதிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட கல் வளராது. அது மட்டுமல்ல கல்லிலும் ஆண் பெண் என்று சில குணாதிசயங்களை வைத்துப் வகைப்படுத்துவார்கள் ஆச்சாரியார்கள்.

மனிதர் ஆய் – மனிதராகியும், பேய் ஆய் – பேயாகியும், கணங்கள் ஆய் – பூத கணங்களாகியும், வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும், முனிவர் ஆய் – முனிவராகியும், தேவர் ஆய் – தேவராகியும், செல்லாநின்ற –  இந்த, தாவர சங்கமத்துள் – கிளைவிட்டு தாவரம் வளர்வதுபோல பல உடல்கள் பல பிறவிகள் எடுத்து  எல்லாப் பிறப்பும் பிறந்து – எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, இளைத்தேன் – யான் சோர்வுற்றேன், எம்பெருமான் – எம்பெருமானே, இன்று – இப்பொழுது, மெய்யே – உண்மையாகவே, உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு, வீடு உற்றேன் – பிறவிப்பிணி தீர்த்து முத்தியடைந்தேன்.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்ன வென்றால் ஆன்மாவானது உலகிலுள்ள மரம், செடி கொடி, உட்பட இவ்வுலகிலுள்ள அத்தனை உயிரினங்களிலும் வாசம் செய்யும். அதாவது ஒரு உயிரினம் இவ்வுலகுடன் இணைந்து கொள்ள ஒரு உடல் இப்புவியில் வாழ ஆன்மா தேவைப்படுகிறது.

ஆன்மா, வசிக்கும் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு அவ்வுடலின் நடவடிக்கைகள் அமையும்.

அதாவது மூலத்தில் இருந்து உதிக்கும் ஒரு ஆன்மாவின் ஆரம்ப நிலையாக புல், பூண்டு, தாவரங்களில் தனது இவ்வுலக சஞ்சாரத்தினை ஆரம்பிக்கின்றது என எடுத்துக் கொள்ளலாம்.

உயிரினங்கள், அவ்வுயிரினங்கள் பெற்றுள்ள பொறிகளைக் (புலன்கள்) கொண்டு ஐந்து வகையாக ((ஓரறிவு உயிரினம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை) வகைப்படுத்தப் பட்டுள்ளன. அதில் மனித இனம் ஒரு படி மேலாக ஆறறிவு கொண்டவர்களாக வேறுபடுத்தப் பட்டுள்ளார்கள்.

ஐம்புலன்கள் (ஐம்பொறிகள்) மெய், வாய், கண், மூக்கு, செவி.

இப்போது ஒவ்வொரு புலனுக்கும் (அறிவுக்கும்) உரிய சில உதாரங்களைப் பார்ப்போம்.

ஓரறிவு (ஒரு புலன் – உடல் (மெய்). தொடு உணர்ச்சி (தொடு உணர்வு) மட்டும் உள்ள உயிரினங்கள் ஓரறிவு உயிரினங்கள் ஆகும். உதாரணம் – புல், செடி, கொடி, மரம்.

ஈரறிவு (இரு புலன்கள் – மெய், வாய்) தொடு உணர்வு, சுவை உணர்வு –ஆகிய இரு புலன்கள் மட்டும் கொண்ட உயிரினங்கள் ஈரறிவு உயிரினங்கள் எனப்படும். உதாரணம் நத்தை, சங்கு.

மூன்றறிவு (மூன்று புலன்கள் – மெய், வாய், மூக்கு) – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு (மோப்ப உணர்ச்சி) கொண்ட உயிரினங்கள் மூவறிவு உயிரினங்கள் ஆகும். உதாரணம் கரையான், அட்டை, எறும்பு.

நான்கறிவு (நான்கு புலன்கள் – மெய், வாய், மூக்கு, கண்) தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு கொண்ட உயிரினங்கள் நான்கறிவு உயிரினங்கள் ஆகும். உதாரணம் – நண்டு, தும்பி, கொசு, சிலந்தி, வண்டுகள், தேள்

ஐந்தறிவு (ஐந்து புலன்கள் – மெய், வாய், மூக்கு, கண், செவி) தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு, கேட்கும் உணர்வு ஆகிய எல்லா ஐந்து உணர்வு களையும் பெற்றுள்ள உயிரினங்கள் ஐந்தறிவு உயிரினங்கள் ஆகும். மனிதர்கள், பறவைகள், பாலூட்டிகள் யாவும் ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் ஆகும்

ஆறறிவு – மனிதன் – ஐந்தறிவு கொண்ட உயிரினத்தில் இருந்து ஏதோ ஒன்று இவனுக்கு சிறப்பாக இருக்கின்றது. முதலில் ஆன்மாவைப் பற்றி சிறிது விளங்கிக் கொண்டு பின்னர் மனிதனின் ஆறாம் அறிவு பற்றி ஆராயலாம்.

ஆன்மா இந்த உயிருடலில் எப்போது இணைந்து கொள்கிறது, உயிருடலில் ஆன்மா வாழும்போது அதன் செயற்பாடு என்ன, எப்போது இந்த ஆன்மாவானது உயிருடலில் இருந்து பிரிந்து செல்கிறது, ஆன்மா எங்கே செல்கிறது என்ற கேள்விகள் எல்லோரிடமும் உண்டு.

மனித உடலினுள் ஆன்மா எப்போது புகுந்து கொள்கிறது என்று பார்ப்போமானால் ஒரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து ஒரு முழு வளர்ச்சியடைந்த சிசு வெளியேறி முதற் சுவாசம் நடைபெறும்போது அதன் உடலினுள் ஆன்மாவானது குடிபுகுந்து கொள்கிறது. அப்போது குழந்தை அழுதவாறு தனது இவ்வுலக சம்சாரத்தினை ஆரம்பிக்கின்றது. அதுவே அக்குழந்தையின் பிறப்பாக நேரம் குறிக்கப்படுகிறது.

ஒரு விதையின் கோதை உடைத்து வெளிவரும் தாவர முளை அல்லது ஒரு முட்டையின் கோதை உடைத்து வெளிவரும் மீன் அல்லது பறவையின் குஞ்சுகளுக்கும் இவ்வுதாரணம் பொருந்தும்.

ஐம் புலன்கள் கொண்டு அறியும் திறன் ஆன்மாவினால் கையாளப்படுகிறது. இப்போது ஒரு உயிருக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புலப்படுகின்றது. உதாரணமாக கண் என்ற அங்கம் உயிரோடு இருக்க உயிர் உதவுகிறது. இந்த கண் என்ற அங்கத்தினைக் கொண்டு பார்த்து அறிந்துகொள்ளும் பக்குவம் ஆன்மாவினால் கையாளப்படுகிறது.

ஆன்மா உயிரினங்களில் உடலினை இயக்கியும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றது. மேலும் ஆன்மாவின் இயக்கம் உயிரினங்களுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது.

அதாவது ஒரு ஆன்மாவானது தான் குடிபுகும் உயிரினத்தின் அவ்வுடலின் தன்மைக்கும் அதன் ஆற்றலுக்கும் ஏற்றவாறே செயற்பட வேண்டியுள்ளது என்பதுதான் உண்மையாகும்.

அதாவது ஓரறிவு உயிரினங்களில் ஆன்மா செயல்படும் முறை வேறு, ஈரறிவு உயிரினங்களில் ஆன்மா செயல்படும் முறை வேறு. காரணம் அந்த உயிரினங்கள் வெவ்வேறு தன்மையை உடையவை. ஈரறிவு உயிரினம் கூடுதலாக சுவை உணர்வினை தரும் வாயினைப் பெற்று இருக்கின்றது, எனவே அவ்வுயிரினத்தின் ஆன்மா அந்த புலனையும் இயக்கும் தன்மைப் பெற்றதாக இருக்கின்றது. இந்த வேறுபாடு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொருந்தும்.

எனவே ஒரே ஆன்மா, வேறு வேறு உயிரினங்களில் வாழும்போது, தான் வாழும் உயிரினத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த ஆன்மாவின் செயல்பாடுகள் மாறுபடுகின்றது (கட்டுப்படுத்தப் படுகிறது).

உதாரணமாக கடலில் வாழும் உயிரினங்களின் உடல், நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்திருக்கின்றது. உயிர் அந்த உடலினை இயக்குகின்றது. நீரில் இருக்கும் வரை அதன் உடலினை உயிரானது அழியாது பாதுகாக்கின்றது. அவ்வுடலினுள் வாழும் ஆன்மாவானது அவ்வுடல் வாழ்வதற்குரிய திறனைக் கொடுக்கிறது. அதாவது கண்கள் மூலமாக இரையைக் கண்டறிந்து, அதனைத் தேடிச் சென்று எடுத்துக் கொள்ளும் ஆற்றலை ஆன்மா கொடுக்கிறது. எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆற்றலை ஆன்மா கொடுக்கிறது.

ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் அந்த உடலை இயக்க முடியாதிருக்கும். காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை. இந்நிலையில் ஆன்மாவானது, அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்தி மீண்டும் நீரினுள் செல்ல முயற்சிக்கும். ஆனால் மீண்டும் நீரினுள் செல்ல முடியாது போகும்போது அவ்வுடலின் உறுப்புக்கள் ஓவ்வொன்றாக இறந்து (உயிரற்றுப்போய்) செயலற்றுப்போக அவ்வுடலிலிருந்து ஆன்மா வெளியேறும். இதுவே மரணம் என அழைக்கப்படும்.

இதிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்னவென்றால், ஒரு உடலின் உள்இயக்கம் அதாவது இதயத் துடிப்பு, சமிபாடு, சிறுநீரக செயற்பாடு போன்ற உள்ளக செயற்பாடுகள் அவ்வுயிரினத்தின் அறிவுக் கெட்டாதவாறு உயிருள்ள அங்கங்களால் செயற்படுத்தப்படுகிறது. ஒருவருக்கு சிறுநீரகங்கள் செயலற்றுப் போவதென்பது அவ்வங்கம் (சிறுநீரகம்) எதோ காரணத்தினால் உயிரற்று இறந்து விடுகிறது என்று அர்த்தமாகும். ஆனால் அவ்வுடலில் ஆன்மா இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது உயிருக்கும் ஆன்மாவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

இன்னொரு உதாரணத்தினைப் பார்ப்போம். ஒருவர் சுவாசிக்கிறார். அது இயற்கையாக நடைபெறும். தூக்கம், மயக்கநிலை எல்லாவற்றிலும் சுவாசம் நடைபெறும். இது உயிருள்ள சுவாசப்பையில் நடைபெறும். ஆன்மா அதனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் யோகம் செய்யும்போது அதாவது மூச்சுப் பயிற்சி செய்யும்போது பல வழிகளில் அந்த மூச்சைக் கட்டுப்படுத்துகிறோம். இப்போது சுவாசம் ஆன்மாவினால்க் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதற்கு, நாம் அன்றாடம் உபயோகிக்கும் வாகனத்தினை உதாரணமாக எடுத்துப் பார்ப்போமாக இருந்தால், வாகனம் உடல் என்றும் அவ்வாகனம் இயங்க தேவையான சக்தி எரிபொருளினால்க் கொடுக்கப்படுகிறது. அவ்வாகனத்தை ஒரு மனிதன் இயக்குகிறான். இங்கு வாகனம் உடலுக்கும் அதக்குச் சக்தி கொடுக்கும் எரிபொருள் உயிர் எனவும் அவ்வாகனத்தை ஒரு இலக்கு நோக்கி ஓட்டுபவர் (இயக்குபவர்) ஆன்மா என்றும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

புல்லில் இருந்து மனிதன் வரையுள்ள அத்தனை உயிரினத்திலும் ஆன்மா வாழ்கிறது. அதாவது ஒரு உடல் உயிருடன் இருக்கும்வரை ஆன்மாவானது அவ்வுடலில் வாசம் செய்கிறது. ஒரு உயிருடல் செயற்படும் தன்மை அற்றுப் போகும் போது, ஆன்மாவானது தனது அறிவுத்திறனைப் பயன்படுத்தி அவ்வுயிருடலைத் தக்க வைத்துக் கொள்ளப் (பாதுகாக்கப்) போராடும். முடியாதபோது அவ்வுடலில் வாசம் செய்யும் ஆன்மா வெளியேறுகிறது என்பதே உண்மையான கோட்பாடாகும். இதுவே மரணம் என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு ஒரு உதாரணமாக ஒரு மான் காட்டில் தூங்குகின்றது என்று எடுத்துக் கொள்வோம். தூக்கத்தின்போது அதன் ஐம்புலன்களும் செயலற்ற (அறிவற்ற) நிலையில் இருக்கும். அப்போது அவ்வுடலில் வாசம்செய்யும் ஆன்மாவானது உடலுடன் தொடர்பற்ற நிலையில் இருக்கும். அப்போது ஒரு புலி வந்தால் அப்படியே அம்மானைக் கொன்று உண்ணும். இந்நிகழ்வு அவ்வுடலில் இருந்த ஆன்மாவின் அறிவுக்கு எட்டாமல் நடை பெறுவதால் அவ் ஆன்மாவினால் அவ்வுடலைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. ஆனால் அம்மான் சுயநினைவில் இருந்தால் அங்கு வாசம்செய்யும் ஆன்மாவானது அம்மானின் ஐம்புலன்களைப் பாவித்து தனக்கு நடைபெற இருக்கும் ஆபத்திலிருந்து தனதுடலைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிசெய்யும்.

ஆன்மா என்பது, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு அவ்வுடல் கொண்டுள்ள புலன்களைப் பயன்படுத்தி, அப்புலன்களின் மூலமாக அவ்வவ் உயிரினத்தின் தகைமைக்கு ஏற்றவாறு சூழலை, சூழ்நிலையை அறிந்து உணர்ந்து கொள்ளும். அதன்மூலமாக உலக நாட்டத்தில் ஈடுபடும். இதுவே பகுத்தறிவு எனப்படுகிறது.

உதாரணமாக ஒரு மீன் பசி வரும்போது கல்லையும் உண்ணும். ஒரு நாய்க்கு கல்லாலான எலும்பும் ஒரு உண்மையான எலும்பும் வைக்கும்போது அது தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி கல்லிலாலானான எலும்பை உண்ணாது. எனவே பகுத்தறிவு என்பது உலகிலுள்ள அத்தனை ஜீஎவராசிக்கும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு உண்டு.

எனவே பகுத்தறிவு என்பது எல்லா உயிரினத்துக்கும் அதனதன் தன்மைக்கு ஏற்றவாறு அமையும். பகுத்தறிவு என்பது மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான கூற்றல்ல

விலங்குகளின் பகுத்தறிவுக்கு இன்னொரு உதாரணமாக, ஒரு கன்றுக்குட்டி அழும் குரல் கேட்டு தூரத்தில் நின்று புல் மேயும் அதன் தாய்ப்பசு ஓடிவந்து பால் கொடுக்கும். பல மாடுகள் மந்தையாக நின்று மேய்ந்துகொண்டு நின்றாலும் அந்தக்கன்றின் தாய் மட்டும் தன் குட்டியின் குரலை பகுத்தறிந்து ஓடிவந்து அக்குட்டிக்குப் பால் கொடுக்கும். இப்படியாக பகுத்தறிவுக்குப் பல உதாரணங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்விடத்தில் பகுத்தறிவுக்கு இன்னொரு உதாரணமாக நாம் வீட்டில் வளர்க்கும் ஒரு பூனை அல்லது ஒரு நாயின் பகுத்தறிவை ஒரு மனிதனின் பகுத்தறிவுடன் பின்வருமாறு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதாவது ஒரு பிறந்த மனித குழந்தையும் ஒரு நாயின் குழந்தையும் (குட்டி) அறிவில் ஒரேமாதிரியாகவே செயல்படும். அதாவது பசி வந்தால் கத்தும். தாய் உணவு (பால்) கொடுக்கும். இரு குழந்தைகளும் வளர்ந்து மூன்று அல்லது நான்கு வயதுப் பருவத்தினை எட்டும்வரை இரு குழந்தைகளது செயற்பாடும் ஒரே மாதிரியாகவே தென்படும். உண்ணும், உறங்கும், ஓடி, ஆடி விளையாடும். சாதி இன மத பேதம் இல்லாமல் எல்லோருடனும் பழகும். கள்ளம், கபடம், சூது, வாது இல்லாமல் எல்லோருடனும் பழகும். தன்னை அணைத்தவர்களுன் விசுவாசமாக இருக்கும். ஆனால் நாய்க்குட்டி வளர்ந்தாலும் அதன் அறிவு வளர்ச்சி அத்துடன் மட்டுப் படுத்தப்படுகிறது. அதாவது ஒரு நாயின் அறிவு வளர்ச்சினை மூன்று அல்லது நாலு வயதுக் குழந்தையின் அறிவு வளர்ச்சியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இதனால்த்தான் நாயினை நன்றியுள்ள மிருகம் என அழைக்கிறோம்

ஆனால் குழந்தை வளருகிறது. அதன் அறிவு வளர்ச்சியும் வளருகிறது. பல கோணங்களில் சிந்திக்கின்றது அதன் சிந்தனைகளை ஐம்புலன்கள் வாயிலாகவே வெளிப் படுத்துகின்றது. ஏனைய விலங்குகளில் இருந்து மனிதனின் பகுத்தறிவு பல படிகளில் முன்னேறி இருந்தாலும் மனிதனின் இக்குணாதிசயம் ஐந்தறிவு விலங்கு களுக்குள்ளேயே அடங்குகின்றது.

மனிதன் ஏனைய உயிரினங்களை விட மேலானவன். பாவ புண்ணியம் அறிந்தவன். மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்கள். இந்நிலையிலேதான் ஆறாவது அறிவு என்றால் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

ஆறாம் அறிவு என்பது, அதாவது அந்த அறிவிற்கான ஆற்றல் குண்டலினி சக்தியின் மூலமாகக் கிடைக்கிறது. இந்த “குண்டலினி” என்ற சக்திரூபமான குண்டலினி சக்தி மனிதர்களால் மட்டுமே அறிந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அந்த “குண்டலினி” மூலமாக பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்று நாம் ஆராயும்போது, ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும். அதாவது இறைவனை உணர உதவும் கருவியே குண்டலினி ஆகும். குண்டலினி என்பது இறைவனை உணரும் கருவி மட்டுமல்ல யோகத்தின் மூலமாக இறைவனை உணர்ந்து, அறிந்து, நாம் முற்பிறவிகளில் செய்த பாவமெல்லாம் களைந்து, பிறவிப்பிணி போக்கி அந்த ஜோதியுடன் (ஆதியுடன், மூலத்துடன், சிவனுடன்) கலக்கவும் (ஐக்கியமாகவும் முத்தியடையவும்) மனிதருக்கு அமைந்த ஆறாவது அறிவாகும்.

அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான “குண்டலினி” சக்தியினால் மட்டுமே இறைவனை அறிந்து கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக்கொள்ள முடியும். இறைவனை அறிந்துகொள்ளும் மனிதர்களே ஆறறிவு பெற்ற மனிதர்கள் ஆவார்கள் என்பது சித்தர்களின் உபதேசமாகும்.

தாம் கொண்டுள்ள ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவதில்லை என்றே தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதாவது மனிதர்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய குண்டலினி இருக்கின்றது. இருந்தும் எல்லா மனிதர்களது ஆன்மாக்களும் குண்டலினி அறிவுமூலமாக இறைவனை அறிந்து கொள்ள முயற்சிக்காமல், சாதாரணமான விலங்குகள் போல ஐம்புலன்களின் வழியே உலக இன்பத்தில் செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். அதனால் இறைவனை அறிந்து கொள்ள இயலாத மனிதர்களை ஐந்தறிவு படைத்த விலங்குகளுடனேயே ஒப்பிடவேண்டும் என் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

தமது ஆறாவது அறிவின் மூலமாக இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களே மனிதர்கள் என் அழைக்கப் படுவார்கள் என்பது தொல்காப்பியரின் கூற்று.

அதாவது இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் (உயிரினமும்) புல் பூண்டில் இருந்து ஆரம்பித்து தாம் தாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு பல பிறவிகள் எடுத்து இறுதியில் மனிதப்பிறவி எடுத்து தனது ஆறாம் அறிவின் மூலமாக இறைவனை அறிந்து தனது பிறவிப்பிணி தீர்த்து முத்தியடையும் என்பது ஆன்மீகக் கருத்தாகும்.

இவ்விடத்தில் மனிதனுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடாக மனிதனது உடலமைப்பையும் முள்ளந்தண்டையும் கருத்திற் கொள்ளவேண்டும் விலங்குகளுக்கு அவற்றின் உடலும் முள்ளந்தண்டும் தரைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ளது. மனிதனின் முள்ளந்தண்டு நேராக மேல்நோக்கி அமைந்துள்ளது. மனித உடலில் முள்ளந்தண்டு வழியாக கீழ்நோக்கிப் பார்ந்தால் இடுப்புப் பகுதிக்கு கீழாக ஒரு குழி விழுந்திருப்பதனை அவதானிக்க முடியும். இதுவும் மனிதனுக்கு குண்டலினி என்ற சக்தி அமைந்துள்ளதற்கான அடையாளமாகும். குண்டலினியானது மனித முள்ளந்தண்டின் அடிப்பாகத்தில் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இரு தொடைகளுக்கு நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நெருப்புக்கோளம் போன்ற ஒரு சக்தியாகும்.

சிவன் சக்தியில் இருந்து தோன்றிய ஆன்மாவானது எப்படிப்பட்ட தூய்மை நிறைந்த அப்பழுக்கற்ற ஆன்மாவாக இருந்ததோ அது எப்போதும் எப்பிறப்பு எடுக்கும்போதும் அப்படியே தூய்மையாகவே இருக்கிறது. ஆனால் ஆன்மாவானது ஒவ்வொரு உடலினுள் வசிக்கும்போதும் அவ்வுயிரினத்தின் பொறிகளுக்கு (புலன்களுக்கு) ஏற்றவாறு அது செயற்படும்போது அதாவது அவ்வான்மா அவ்வுடலில் இருந்து அவற்றின்புலன்களுக்கு ஏற்றவாறு செய்யும் நன்மை தீமைக்கு ஏற்றவாறு பாவ புண்ணியம் என்ற காரியங்கள் அவ்வான்மாவுடன் இணைந்து கொள்கிறது. ஆன்மாவுடன் அப்பாவ புண்ணியங்களும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு எடுத்துச் சென்று அனுபவிக்கப்படுகிறது.

ஆன்மாவின் ஒரு அங்கமே அதாவது ஒரு பகுதியே மனமாகும். அதாவது மனித உடலை உடலை (கண்ணுக்குத் தெரியும் உடலை) தூல உடல் அல்லது சூல உடல் எனவும், ஆன்மாவை சூக்கும உடல் எனவும் அழைப்பர் ஞானிகள். சூல உடலில் எப்படி அங்கங்கள் பொறிகள் இயங்குகின்றனவோ, அதேபோல சூக்கும உடலிலும் பல பொறிமுறைகள் உண்டு. அதாவது குண்டலினி சக்தி, ஏழு ஆதாரங்கள் உட்பட மனமும் ஒரு பொறிமுறையாகச் செயற்படுகிறது.

இந்த மனமே ஐம்புலன்களை கையாள்கிறது. மனமானது மூளையைப் பயன்படுத்தி புத்தி (அறிவு) என்ற செய்கையின் மூலமாக உடலைக் கட்டுப் படுத்துகிறது.

உயிர் உடலுக்குள் இருந்து உடலை இயக்குகிறது. ஆன்மா உடலுடன் இணைந்தவாறு இருந்து கொண்டு மனதின் வழியாக உடலை இயக்குகிறது.

ஒரு மனிதனது (ஒரு உயிரினத்தின்) அந்தப் பிறவியில் அனுபவிக்கும் ஏக்கங்கள், ஏமாற்றங்கள், நிறைவேறாத ஆசைகள், முடிவுறாத திட்டங்கள், அல்லது மகிழ்ச்சி உணர்வுகள் அல்லது குற்ற உணர்வு அவன் செய்யும் நன்மை, தீமை, பாவ புண்ணியங்கள் போன்றவை உடல் இறக்கும்போது உடலோடு மண்ணாகியோ, எரியூட்டப்பட்டோ மறைவதில்லை. அவை ஆன்மாவுடன் அடுத்த பிறவிக்குப் பயணிக்கின்றன.

இந்த உணர்வுகளைத் தேக்கியபடி ஆன்மாவானது இன்னொரு உடலுக்காகக் காத்திருக்கும். ஒரு புதிய உடல் கிடைத்ததும் அதனுடன் இணைந்து (பிறப்பெடுத்து) தான் தன்னுடன் சேகரித்து வந்த உணர்வுகளை (பாவ புண்ணியங்கள் ) அவ்வுடலில் வாழ்ந்து அனுபவிக்கிறது. அதன் மூலமாக ஏற்படும் நன்மை தீமைகளை அந்த ஆன்மா அனுபவிக்கிறது.

மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது. ஆனாலும் அது சிந்திக்கும் தன்மையது.

மனம் ஆன்மாவுக்கு கட்டுப்பட்டு நடந்து உடலை வழிநடத்தினால் உடலும் ஆத்மாவும் வலுப்பெறுகின்றன.

மனமானது ஐம்புலன்களின் மூலமாக உலக இன்பத்தில் மூழ்கி உடலின் கட்டுப்பாட்டில் செயற்படுமாக இருந்தால் ஆன்மா வலுவிழக்கிறது.

மனதின் மூலமாக உடல் நிறைவேற்றும் இன்ப துன்பங்களை (பாவ புண்ணியங்களை) ஆன்மா அனுபவிக்கிறது.

ஒரு ஆன்மா தான் சேகரிக்கும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு அப் பாவ புண்ணியத்தை நிறைவேற்றி அழிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தாவாறே இருக்கும்.

மனமானது ஆன்மாவின் கட்டுப்பாட்டில் வரும்போதுதான் ஆன்மாவானது தான் தன் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களைக் களைந்து பிறவிப்பிணி தீர்த்து தனது ஆறாவது அறிவின் மூலமாக ஆதி மூலத்தை அறிந்து அதனுடன் கலக்க, ஐக்கியமாக முடியும். இதுவே முத்தி எனப்படும்.

ஒரு ஆன்மாவானது மனத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்குரிய பயிற்சியே யோகப் (ராஜ யோகப்) பயிற்சியாகும். இதனையே திருமூலர் திருமந்திரத்தில் அட்டாங்க யோகமாக உபதேசித்துள்ளார்.

தனித்தனியான உலக இன்பத்தில் மயங்கி அலைந்து திரியும் புலன்களை ஓன்று சேர்ப்பது யோகம். அவை ஓன்று சேர்ந்தால் ஞானம். – பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்-

மானிட உடலைப்பற்றி திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்குகிறார்.

“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே.”
– திருமந்திரம்.

விளக்கம்: இந்த உடம்பை அழுக்குடைய பிண்டம் என இழிவாக எண்ணி இருந்தேன். பரம்பொருளாகிய அந்த உத்தமன் உறைவது இந்த உடலுக்குள்ளேதான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன், அதனால் இறைவன் உறையும் ஆலயத்தை நாம் எப்படிக் காக்க வேண்டும் என்று நினைப்போமோ அவ்வாறு இந்த உடலையும் பேண வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %